Loading

அலுவலகம் நுழைந்த யோகமித்ரன் முன்னால், “ஹாய்டா” என்று ஹரீஷ் வந்து நின்றான்.

“செந்தில் ஊருக்கு போயிட்டான்”

“ம்ம். மெஸேஜ் பண்ணி இருந்தான். சரி இத அப்புறமா பேசுவோம். போய் வேலையைப்பாரு” என்று ஹரீஷ் அகன்று விட, யோகமித்ரன் தன்னுடைய இருப்பிடத்துக்கு சென்றான்.

வேலை முடிந்து மதிய உணவு இடைவேளை வர விரல்களை சொடக்கெடுத்துக் கொண்டு மித்ரன் நிமிர, “சார்..” என்று ஒருவன் வந்து கதவை தட்டினான்.

“கம் இன்” என்றதும் உள்ளே வந்து, “உங்கள மேனேஜர் உடனே வரச்சொன்னாரு” என்றான்.

“என்னையா? ஏன்?”

“தெரியல. எதோ பேசனும் போல”

“சரி போ” என்றவன் உணவு டப்பாவை தூக்கிக் கொண்டு மேனேஜர் அறைக்குள் நுழைந்தான்.

அந்த மனிதர் பேச ஆரம்பித்தால், மற்றவர்களுக்கு வேலை இருக்கும் என்பதை மறந்து பேசுவார். நேரத்தை அவர் வீணடித்து விட்டு வேலையை முடிக்கவில்லை என்று மற்றவர்களை தான் திட்டுவார். இப்போது உணவு நேரம். அது முடியும் வரை அமர வைத்து பேசி விட்டு, அவர் சாவகாசமாக சாப்பிட அமர்வார். ஆனால் இவன் அவசரமாக அள்ளி வாயில் போட வேண்டும்.

கதவை தட்டி விட்டு உள்ளே சென்றவன், “சொல்லுங்க சார்” என்றான்.

“உட்காருங்க மித்ரன்”

“இருக்கட்டும் சார். ரொம்ப பசிக்குது. சீக்கிரமா சொல்லிட்டா சாப்பிடப் போவேன்” என்று வேண்டுமென்றே தூக்கி வந்த டப்பாவை காட்ட, அந்த மனுசனுக்கு கடுப்பாகி விட்டது.

“வேலை பத்தி பேசனும் மித்ரன்”

“அத வேலை நேரத்துல பேசலாம் சார். நான் சாப்பிடப்போகவா?”

“போங்க” என்றார் வேறு வழியில்லாமல்.

உடனே வெளியே வந்து விட்டான்.

“நீ மட்டும் தான் மச்சி அந்த மனுசன் கிட்ட மாட்டாம தப்பிச்சு வந்துடுற” என்று ஹரீஷ் அவன் தோளில் கைபோட்டு சிரிக்க, மித்ரனும் சிரித்தபடி சென்றான்.

•••

“வெல்.. பணம் உங்கள நம்பி கொடுத்தது. அது பார்டி கைக்கு போய் சேரல. லாக்கர்ல இருக்கும் போதே தொலைச்சுட்டீங்க. எனி எக்ஸ்ப்ளனேஷன்?”

சம்பூர்ணா கேட்க, முன்னால் நின்றிருந்தவர்களிடம் பதில் இல்லை.

“நீங்க ரெண்டு பேரும் வெளிய இருங்க.” என்று இருவரை வெளியே அனுப்பி விட்டு, ஒருவனை மட்டும் அமர வைத்தாள்.

அவனிடம் என்ன நடந்தது என்று விசாரித்து முடித்து விட்டு, அடுத்தவனை அழைத்து பேசினாள். அவனிடமும் விவரத்தை வாங்கிக் கொண்டு, கடைசியாக புவனனை அழைத்தாள். மற்ற இருவரும் பேசியதை அச்சு மாறாமல் புவனன் பேசினான். ஆனால் கடைசியாக ஒரு இடத்தில் அவனது பேச்சு மற்றவர்களிடம் எதிர் பட்டு நின்றது.

எல்லாம் விசாரித்த பிறகு, “மத்த ரெண்டு பேர் மேல சந்தேகம் இருக்கா?” என்று கேட்க, புவனன் மறுப்பாக தலையசைத்தான்.

“இல்லயா?”

“இல்ல மேடம்.”

சம்பூர்ணா அவனை ஆழமாக பார்த்தாலும், அது தெரியாமல் தலையசைத்துக் கொண்டாள். இதே கேள்வியை மற்ற இருவரிடமும் கேட்ட போது, “தெரியாது மேடம்” என்று பதில் சொல்லி இருந்தனர்.

புவனன் மட்டும் மற்ற இருவரையும் நம்புகின்றான்.

“அவங்க மேல சந்தேகம் வரலனா வேற யாரு மேலயாவது சந்தேகம் இருக்கா?”

“இப்போதைக்கு இல்ல மேடம்”

“வெல். மத்த ரெண்டு பேரையும் வர சொல்லுங்க” என்று கூறவும் ஒருவன் அழைத்து வந்தான்.

“உங்க மூணு பேர் கிட்டயும் பணம் இல்லனு சொல்லிட்டீங்க. பட் கம்பெனில உங்க பொறுப்புல இருந்த பணம் தான் காணாம போயிருக்கு. உங்கள இப்போ சும்மா விடுறேன். ஆனா பணம் ஒரு வாரத்துல வரனும். இல்லனா அதுக்கான ரீசன் வரனும். ரெண்டும் வரலனா போலீஸ் கம்ப்ளைண்ட் கொடுக்குறத தவிர வேற வழி இல்ல. இந்த ஒரு வாரமும் உங்கள கண்காணிக்க ஆளுங்க இருப்பாங்க. அது கம்பெனி பாதுகாப்புக்காக. அண்ட் பணம் தொலைஞ்ச விசயம் உங்க மூணு பேர தவிர வேற யாருக்கும் தெரியக்கூடாது. போகலாம்.”

மூவரும் தலையாட்டி விட்டு வெளியே வந்து விட்டனர். ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து விட்டு பிரிந்து சென்று விட்டனர்.

•••

வேலை முடிந்து கிளம்பிக் கொண்டிருந்தான் யோகமித்ரன்.

“மித்ரா..” என்று உள்ளே வந்தாள் சுபத்ரா.

“என்ன?”

“காபி சாப் போகலாம் வர்ரியா? எல்லாரும்…”

“வேலை இருக்கு”

“முதல்ல பேசி முடிக்க விடு மித்ரா. எல்லாருமே போறோம்”

“ஓகே. பை” என்று கூறி விட்டு அவன் வெளியேற, கடுப்பாகி விட்டாள் சுபத்ரா.

“எங்க கூட வந்தா குறைஞ்சா போயிடுவ?” என்று கேட்டபடி கூடவே நடக்க, “எஸ்” என்றான்.

“ஓவரா பண்ணாத மித்ரா. ஒரு நாள் வரலாம்ல?”

“தட்ஸ் மீ. ஓவராத்தான் பண்ணுவேன்” என்று கூறி விட்டு, கதவை திறந்து வெளியேறி விட்டான்.

சுபத்ரா அவன் முதுகை முறைத்துக் கொண்டு நிற்க, “என்ன? இன்னைக்கும் வர மாட்டேன்னு சொல்லிட்டானா?” என்று கேட்டபடி வந்தாள் அவளது தோழி கௌசல்யா.

“கடுப்பேத்தாத” என்று சுபத்ரா எரிந்து விழுந்தாள்.

“அவன பத்தி தான் தெரியும்ல? அப்புறம் ஏன் என் கிட்ட எரிஞ்சு விழுற?”

“ப்ச்ச்”

“ஹ்ம்ம்.. நீயும் அவன எப்படியாச்சும் கரெக்ட் பண்ணிடலாம்னு பார்க்குற. மித்ரன் பிடி கொடுக்க மாட்டேங்குறானே.”

“ஏன்டி வயித்தெரிச்சல கொட்டுற?”

“அவனுக்கு ரிச்சான ஆளுங்கனாலே பிடிக்காது. ஒதுங்கி ஒதுங்கி போவான். அப்பறம் எப்படி உன் கிட்ட பேசுவான்?”

சுபத்ரா பதில் சொல்லாமல் நடக்க, “ஒரு வேளை அவனுக்கு மிடில் க்ளாஸ் பொண்ண தான் பிடிச்சுருக்கோ என்னவோ?” என்று கூறி வைத்தாள் கௌசல்யா.

“என்ன சொன்ன?” என்று கௌசல்யா முறைக்க, “முறைக்காதமா. நான் என்னை சொல்லல” என்று கையை விரித்தாள்.

அதை பார்த்து விட்டு முறைப்பை கை விட்டு நடந்தாள்.

“உனக்கு ஏன் இந்த மித்ரன பிடிக்குது? மிடில் க்ளாஸ் லைஃப் எல்லாம் உன்னால வாழ முடியாது சுபா. எங்கள மாதிரி வீட்டுல, மாசம் மாசம் வர்ர சம்பளம் தான் முழு பட்ஜெட்டே. நீ வீட்டுல டைம் பாஸாகலனு வேலைக்கு வர்ர. மித்ரன் கூட உன்னால அவன் சம்பளத்த வச்சு மட்டுமே குப்ப கொட்ட முடியாது.”

“இப்ப பணம் யாருக்கு வேணும்? மித்ரன் ரொம்ப நல்லவன். எந்த பொண்ணு கிட்டயும் வழியுறது இல்ல. எந்த கெட்டப்பழக்கமும் இல்ல. பர்ஃபெக்ட் ஹஸ்பண்ட் மெடீரியல் அவன். அவன எப்படி விடுறது?”

“நிஜம்மாவே பணம் மேட்டரே இல்லையா?”

“எங்கப்பாவோட எல்லாம் எனக்கு தான? அத வச்சு நாங்க வாழ்ந்துட்டு போறோம்”

“அதுல வாழ அவன் ஒத்துக்குவானானு பாரு. சும்மா கற்பனையில கதாநாயகி வேசம் போடாத” என்று கூறி விட்டு கௌசல்யா கிளம்பினாள்.

“ஏய்.. காபி?”

“அவன கூப்பிடறதுக்காக சொன்னதுனு எனக்கு தெரியும். இந்த கடையில குடிக்கிறத விட எங்கம்மா நல்லா போடுவாங்க. போய் குடிக்கிறேன். பை”

கையாட்டி விட்டு பேருந்து நிலையம் நோக்கி நடக்க ஆரம்பித்து விட்டாள்.

•••

மித்ரன் வீடு வந்து சேர, வாசலில் கோலம் போட்டுக் கொண்டிருந்தாள் சாதனா.

“ஹாய் அண்ணி..” என்றபடி பைக்கை ஓரமாக நிறுத்தப்போக, “நில்லு நில்லு மித்ரா.. மளிகை கடையில சாமான் போட்டு வச்சுட்டாங்களாம். அப்படியே வாங்கிட்டு வந்துடேன். கடைக்கார பையன் வந்து போட லேட் ஆகும்” என்றாள்.

“ஓகே அண்ணி. இத மட்டும் உள்ள வச்சுடுங்க” என்று பையை கொடுத்து விட்டு திரும்பிச் சென்று அவர்கள் மளிகை பொருட்கள் வாங்கும் கடையை அடைந்தான்.

“எவ்வளவு ணா?” என்று கேட்டு பர்ஸை எடுக்க, “பணத்த உங்க வீட்டுல கொடுத்துட்டாங்கபா.” என்றவர் பில்லை கொடுத்து விட்டு பொருளை தூக்கி வரச்சொன்னார்.

“இந்த மிட்டாய் நாலு கொடுங்க” என்று வாங்கி பணத்தை கொடுத்து விட்டு, அவர்கள் கொடுத்ததை பைக்கில் வைத்து ஏறி அமர்ந்தான்.

ஒரு பெண் அவனையே பார்த்தபடி கடையில் வந்து நின்றாள். அந்த கடை முதலாளியின் மகள்.

“என்னமா?” என்று முதலாளி கேட்க, “அந்த மிட்டாய் வேணும்பா” என்று கூறி மித்ரன் வாங்கியிருந்த மிட்டாயில் நான்கை எடுத்துக் கொண்டாள்.

அவளது பார்வை மொத்தமும் மித்ரன் மீது இருக்க, மித்ரன் அவளை திரும்பிப் பார்த்தால் தானே? பைக்கில் பெட்டி, பையை சரியாக வைத்து விட்டு கிளம்பி விட்டான். அவன் போகும் வரை அவளது பார்வை அவனை தொடர்ந்தது.

முதலாளிக்கும் மகள் மனம் தெரிந்ததால், ஜாதகத்தை நேற்று கையில் எடுத்திருந்தார். அதனால் மகளது பார்வையை கண்டும் காணாமல் விட்டு விட்டு, “இது போதுமாமா? உங்கம்மா கருப்பட்டி கேட்டா. அத தர்ரேன் கொண்டு போய் கொடு” என்று பேசி மகளை திருப்பினார்.

மனதில் ஒரு பெருமூச்சை விட்டு விட்டு, தந்தை கொடுத்ததை வாங்கிக் கொண்டு கிளம்பி விட்டாள்.

மித்ரன் வீடு வந்து சேர, சாதனா வாசலில் நின்றிருந்தாள்.

“கொண்டா..” என்று பையை தூக்கிக் கொண்டு அவள் செல்ல, பைக்கை நிறுத்தி விட்டு பெட்டியை எடுத்துக் கொண்டு மித்ரன் உள்ளே வந்தான்.

“என்னமா.. ஒரே சோகமா இருக்கீங்க?” என்று அமைதியாய் அமர்ந்திருந்த அன்னையை பார்த்து வினவினான்.

“அத்தைக்கு ஒரே கவலை மித்ரா”

“எத பத்தி?”

“உன் கல்யாணத்த பத்தி தான்”

“அதுக்கு என்ன வந்துச்சு?”

“ஜோசியர் இன்னும் கல்யாண நேரம் கூடி வரலனு சொல்லிட்டாரு”

“அப்ப நேரம் வரட்டும் பார்க்கலாம்”

“அத்தைக்கு உடனே உனக்கு கல்யாணம் பண்ணனும்னு ஆசை”

“ஏன் பொண்ணு ரெடியா இருக்கா?”

“ஆமா”

மித்ரன் ஆச்சரியமாக இருவரையும் பார்க்க, “ஆமா மித்ரா..பொண்ணு உனக்கு தெரிஞ்சது தான்” என்றாள் சாதனா.

“எனக்குத் தெரியுமா? நம்ம சொந்தமா?”

“இல்ல”

“பின்ன?”

“இப்ப மளிகை கடைக்கு போயிட்டு வந்தியே.. அவரு பொண்ணு தான்”

“அவருக்கு பொண்ணெல்லாம் இருக்கா?” என்று கேட்டு வைத்ததில், சாதனாவும் நர்மதாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

“உனக்கு அந்த பொண்ண தெரியாதா?”

இரண்டு கையையும் விரித்து உதட்டை பிதுக்கி விட்டு அறைக்குள் சென்று விட்டான்.

“கிழிஞ்சது போங்க. இவனுக்கு பொண்ணிருக்குனே தெரியல. அந்த புள்ள இவனையே பார்த்து உருகிட்டு இருக்கு”

“விடு. அதான் நேரம் அமையல. ஆறு மாசம் போகட்டும்னு சொல்லிட்டாங்களே. பார்க்கலாம்” என்று விட்டு விட்டார் நர்மதா.

சாதனாவும் தலையாட்டி விட்டு வேலையை பார்க்கச் சென்று விட்டாள்.

காலமும் நேரமும் யாருக்காகவும் காத்திருப்பது இல்லை. ஆனால் இரண்டும் மனிதர்களை காக்க வைத்து வேடிக்கை பார்ப்பது ஏனோ?

வாசம் வீசும்.

Click on a star to rate it!

Rating 4.9 / 5. Vote count: 9

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
6
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

2 Comments

  1. அடேங்கப்பா மித்ரன் பெரிய செலிபிரிட்டி போலயே … எல்லா பக்கமும் பொண்ணுங்க சைட் அடிக்கிறாங்க … ஆனா யார் கிட்ட மித்ரன் மாட்டணும்னு விதி இருக்கோ …

    1. Author

      ஒரு நல்ல பையன் கிடைச்சா சைட் அடிக்கனும்ல?