
சாதனா மித்ரனை பார்த்து விட்டு, அவனது குழப்பத்துக்கு முடிவு சொல்ல நினைத்தாள்.
“அண்ணி.. நீங்களுமா?” என்று மித்ரன் புரியாமல் கேட்க, சாதனா தலையாட்டினாள்.
“நான் இத உன்னை பிடிக்காமலோ இல்ல சம்பூர்ணாவ பிடிக்காமலோ சொல்லல மித்ரா.. ஆனா தனியா போறது தான் நல்லது. பொம்பளைங்களுக்கு ஒரு சக்தி இருக்கு மித்ரா. பின்னாடி வர போறத ஓரளவு முன்னாடியே கணிச்சுடுவோம். அதுவும் குடும்ப விசயத்துல நிறைய யோசிப்போம். இப்ப தனியா போறதால உனக்கு பெருசா பிரச்சனை இல்ல. ஆனா ஒன்னா இருக்கதால எத்தனை பிரச்சனை வரும் தெரியுமா?”
“அப்படி என்ன தான் வந்துடும்?”
“வரும்.. நிறைய வரும்.. உன் அம்மாவ எடுத்துக்க.. உன் சித்தியெல்லாம் உங்கம்மாவ மதிக்கவே மாட்டாங்க. ஏன்? அவங்க எல்லாரும் படிச்சவங்க.. முக்கியமா நல்லா வாய் பேசுறவங்க. நான் இப்ப வந்து கேட்டு தெரிஞ்சுக்கிட்டேன். நீ கூடவே இருந்து பார்த்துருப்பல? எவ்வளவு பிரச்சனை? எவ்வளவு கஷடம்? பிரிஞ்சு வந்தப்புறம் கூட அத்த அதெல்லாம் மறந்தது இல்ல. அது மாதிரி ஒரு கசப்புல நானும் உன் பொண்டாட்டியும் வாழ முடியாது பாரு”
“அவ உங்கள மதிக்காம போக மாட்டா அண்ணி”
“நானும் அப்படி சொல்லல.. அவ நல்ல பொண்ணு தான். ஆனா என்னால ஏத்துக்க முடியாது.. உன் அண்ணன் யாரு? அவளோட கம்பெனில வேலை பார்க்குறவரு.. நீ வேற.. நீ புருஷன்னா உன்னால அவளுக்கு சமமா இருக்க முடியும். ஆனா இவரால முடியுமா? ஆஃபிஸ்ல அவளுக்கு கொடுக்குற மரியாதைய வீட்டுல அப்படியே மறந்து தம்பி பொண்டாட்டி தானனு சகஜமா பழகிட முடியுமா? இல்ல இங்க பழகுற நினைப்புல ஆஃபிஸ்ல அவ கிட்ட பேசிட முடியுமா? சொல்லு பார்க்கலாம்”
“அதுக்காக தான?”
“ஆமா.. இவரால ஒரு நாளும் வீட்டுக்குள்ள இது மாதிரி இருக்க முடியாது. இவர் அப்படி அவளுக்கு பணிஞ்சு போனா என்னால தாங்க முடியுமா? நானும் மருமகள்.. அவளும் மருமகள் தான? அவளுக்கு நீங்க பணியுறது பிடிக்கலனு இவர வேலைய விட்டு வேற வேலை தேடச் சொல்லுவேன். இல்ல அதுக்கும் மேல போய் என் முன்னாடி அவ கிட்ட நீங்க பேசவே பேசாதீங்க அவளுக்கு நீங்க மரியாதை கொடுக்குறதே பிடிக்கலனு சண்டை கூட போடுவேன். வாழ்க்கை நரகமாகிடும் மித்ரா.. அந்த சண்டை அவரோட நிக்காம உங்க பக்கமும் திரும்பும். தொட்டதுக்கெல்லாம் குறை தெரியும். அவளையும் வெறுத்து அவள கட்டுனதால உன்னையும் வெறுத்து.. தேவையா சொல்லு? தனியா இருந்தா அத்த சொல்லுற மாதிரி நல்ல விசயத்துக்கு நாலு மணி நேரம் கூடி பேசிட்டு அவங்க அவங்க வீட்டுக்கு போயிடலாம். இது மாதிரி தொல்லை வராமலும் பார்த்துக்கலாம்”
நீண்ட விளக்கம் கொடுத்த பிறகு மித்ரனுக்கு என்ன சொல்வதென்று புரியவில்லை. ஆனால் சம்பூர்ணாவின் மீது மட்டும் கோபமாக வந்தது. .அவன் வாழ்வில் புயல் போல் வந்து அனைத்தையும் கலைத்து போடுகிறாளே.
“என்னவோ போங்க எனக்கு பிடிக்கல” என்று முகத்தை சுருக்கினான்.
“கல்யாணம் முடியட்டும்.. வேற வீடு பார்த்துட்டு இருக்கேன்.. நீயும் புரிஞ்சுக்குவ” என்றான் புவனன்.
“அதுக்குள்ளயுமாடா? நல்ல வருவடா” என்று அண்ணனை முறைத்து வைத்தான்.
“சரி சரி.. இத விடுங்க.. நாளைக்கு எல்லாருக்கும் டிரஸ் எடுக்க போகனும்.. அபர்ணாவும் அந்தம்மாவும் வருவாங்க. என்ன வாங்கலாம்? எத்தனை வாங்கனு யோசிங்க” என்று நர்மதா வேறு பேச்சுக்கு தாவினார்.
மித்ரன் வெறுப்போடு அமர்ந்திருந்தான். கோபம் எல்லாமே சம்பூர்ணா பக்கம் தான் திருப்பியது. இதைத்தான் காலையில் கேட்டாளா? அவள் சொல்லியிருந்தால் உண்மையில் கொலை தான் செய்திருப்பான்.
இரவு சம்பூர்ணாவை அழைக்க, முடியும் நேரத்தில் ஏற்றாள்.
“என்ன?”
“இத தான் காலையில சொல்ல வந்தியா?”
“எத?”
“அதான் தனிக்குடித்தனம் போறது”
“ஓ.. சொல்லிட்டாங்களா?” என்று கேட்டு வைக்க, மித்ரன் பல்லைக் கடித்தான்.
“எல்லாம் உன் வேலை தானா?”
“டேய் என்ன? அவங்க பாட்டி கிட்ட சொன்னாங்க. பாட்டி என் கிட்ட சொன்னாங்க. நான் ஒன்னும் உன் கூட தனியா போய் வாழ்ந்து கிழிக்க போறது இல்ல.. அதுக்கு அவசியமும் இல்ல” என்று நல்லவள் போல் பேசினாள்.
அவளுக்கு இது தான் வேண்டும். இதை நினைத்து தான் அன்று மினிஸ்டர் பேச்சை எடுத்தாள். அவர்கள் வீட்டில் அவளால் பொருந்த முடியாது என்பதை தெளிவாக விளக்கி விட்டாள். அடுத்த முடிவு தனிக்குடித்தனமாகத்தான் இருக்கும். இப்போது இந்த முடிவுக்கு வரவில்லை என்றாலும் திருமணத்திற்கு பிறகு கண்டிப்பாக இந்த முடிவை எடுக்க வைத்து விடுவது தான் அவளது திட்டம். ஆனால் அவளுக்கு வேலை வைக்காமல் சீக்கிரமே முடிவு செய்து விட்டனர்.
“தெரியும்டி.. நீ தான் எதாவது பண்ணிருப்ப.. நடிக்காத” என்று மித்ரன் எகிற, “சும்மா கத்தாத.. எனக்கு நியூஸ் தான் சொன்னாங்க. நானும் சரி வீடு பார்க்கலாம்னு சொன்னேன்.. ஏன்னா நீ எங்க வீட்டுல வந்து இருக்கிற அளவு பரந்த மனம் படைச்ச வள்ளல் கிடையாது.” என்று நக்கலடித்தாள்.
“நான் ஏன்டி உன் வீட்டுக்கு வரனும்?”
“அப்ப நான் மட்டும் வரலாமோ?”
“நானா இந்த கல்யாணத்துக்கு அடம் பிடிச்சேன்? நீ தான பண்ணுற?”
“ஆமா ஆமா.. அதுல பெருமையெல்லாம் கிடையாது. இப்ப வீட்டு பிரச்சனைக்கு வா. வீடு பத்தி உனக்கு எதாவது ஐடியா இருக்கானு கேட்க தான் நினைச்சேன். இல்ல நானே பார்க்கவா?”
“எல்லாமே உன் முடிவு தான் இல்ல?”
“ஆமா.. என் முடிவா தான் இருக்கும். இருக்கனும். குடும்பப் பொண்ணு இல்லனு பேசுற.. என் கேரக்டர் சரியில்லங்குற.. ஆளே தப்பானவங்குற.. அதுக்கெல்லாம் திருப்பி செய்ய வேணாம்? செய்யுறேன்..”
“சரி தான் போடி.. கல்யாணம் முடிஞ்சா உன் வாழ்க்கையும் என் கையில தான்”
“அப்படிங்களா? நான் இன்னைக்கு செந்திலுக்கு நம்ம கல்யாண பத்திரிக்கைய அனுப்பி வச்சுருக்கேன் தெரியுமா?”
மித்ரனுக்கு இதயம் நின்று துடித்தது.
“என்னடி பண்ணி வச்சுருக்க?”
“அவன் கல்யாணத்துக்கு எனக்கு பத்திரிக்கை அனுப்புனான். நான் திருப்பி பண்ண கூடாதா? அதுவும் யோகமித்ரன் உன் ஃப்ரண்ட் தான்னு சேர்த்து எழுதி வச்சுருக்கேன். பெருமையா இருக்கும்ல அவனுக்கு? அவன கட்டிக்க மாட்டேன்னு சொன்னவள அவனோட ஃப்ரண்ட் ஆசையா கல்யாணம் பண்ணுறான்னு சந்தோசப்பட்டுருப்பான். உனக்கு வாழ்த்து கூட அனுப்புவான்னு நினைக்கிறேன்.. சரி எனக்கு வேலை இருக்கு.. வைக்கிறேன்” என்று விட்டு உடனே வைத்து விட்டாள்.
மித்ரன் அதிர்ச்சியில் உறைந்து போனான். செந்தில்.. அவனுக்கு அனுப்பி விட்டாளா?
“அவ எல்லாம் குடும்பத்துக்கு செட்டாக மாட்டா.”
“இப்பவாவது சனியன் ஒழிஞ்சதுனு தலை முழுகிட்டு வீட்டுல பார்க்குற பொண்ண கல்யாணம் பண்ணு”
“இவள போயா கல்யாணம் பண்ணுவாங்க? வீடு நாசமா போயிடும்”
“பிடிச்ச பேய் போயிடுச்சே. இனி திருந்திடுவான்.”
கடவுளே.. சொன்ன அத்தனை வார்த்தையும் சம்பந்தமில்லாமல் நினைவுக்கு வந்து கடுப்பாக்கியது. அன்று அவர்கள் பிரிந்த போது அவ்வளவு பேசினான். அவ்வளவு சந்தோசப்பட்டான். இப்போது அனைத்தும் நடிப்பாக தெரிந்திருக்கும்.
தலையில் அடித்துக் கொண்டான்.
“எல்லாம் என் விதி..” என்றவன் கைபேசியை பார்த்தான். செந்திலின் எண் இருந்தது.
அவனது திருமணத்திற்கு பிறகு அதிகம் பேசுவது இல்லை. ஒரு முறை எங்கேயோ வேலையில் சேர்ந்திருப்பதாக சொன்னான். அதன் பிறகு பேசவில்லை.
இப்போது உண்மையை சொன்னால் நம்புவானா? சந்தேகம் தான்.
•••
அடுத்த நாள் ஹரீஷ் பத்தரிக்கையோடு வந்தான். நன்றாக பேசினான். குடும்பத்தில் எல்லோரையும் முறையாக அழைத்தான்.
“உன் கல்யாணத்துக்கு என்னால வர முடியாது மச்சி..” என்று வருத்தப்பட்டான்.
பிறகு சிரித்த முகத்துடனே கிளம்பி விட்டான். சம்பூர்ணாவை பற்றி எதுவும் கேட்கவும் இல்லை. காட்டிக் கொள்ளவும் இல்லை.
எல்லோரும் அதன் பிறகு திருமணத்திற்கு உடைகள் வாங்க கிளம்பினர்.
வேண்டா வெறுப்பாக சலிப்போடு கடையை சுத்தி வந்தான் மித்ரன். நாலைந்து டீ சர்ட்டுகள் மட்டும் பிடித்திருக்க அதை வாங்கிக் கொண்டான்.
பெண்கள் அனைவரும் வேலையை முடிக்க, சம்பூர்ணா முகூர்த்த புடவை எடுக்கும் நேரம் வந்து சேர்ந்தாள். உண்மையை சொன்னால் அவள் வரட்டும் என்று தான் காத்திருந்தனர்.
இருந்த சேலையில் ஒன்றை எடுத்துக் கொண்டவள் முகத்தில், உணர்ச்சியே இல்லை. மித்ரன் அவளை கிண்டலாக பார்த்தான்.
“என்ன கல்யாணம் பிடிக்கலயா? இப்ப கூட நீ நிறுத்தலாம் தெரியுமா?” என்று மித்ரன் அவளருகே வந்து பேச, “நீ இப்படி பேசுறதால தான் உன்னை விடவே கூடாதுனு தோணுது தெரியுமா?” என்று சிரித்து வைத்தாள்.
அவளை முறைக்க முடியாமல் முறைத்தவன், “அப்போ எல்லாத்துக்கும் ரெடியா இருக்க?” என்று கேட்டான்.
“ஏன் நீ ரெடியா இல்லையா?”
“ஏன் இல்ல? பல நாள் ஆசை.. பொண்டாட்டினு ஒருத்தி வந்து முதல் இரவு கொண்டாடனும்னு.. சீக்கிரம் நடந்துடும்ல? நான் ரெடிபா” என்றவனை பார்த்து அதிர்ந்தவள் உடனே முறைத்து, “அலையாத” என்றாள்.
“அலைய தான் செய்வேன்.. ஆமா.. கோபத்துல பண்ணுற கல்யாணம்ங்குறதால இந்த தனி தனி ரூம் தரையில படுங்குற கான்சப்ட் எதுவும் வச்சுருக்கியா? ஏன்னா நீ வச்சுருந்தாலும் நான் அத மதிக்க மாட்டேன்..” என்று தோளை குலுக்கினான்.
சம்பூர்ணா பதில் சொல்ல முடியாமல் பார்த்து வைத்தாள்.
“எம்புட்டு இறங்கிட்ட நீ?”
“ஹலோ பொண்டாட்டி கிட்ட இறங்காம? அடுத்தவ கிட்ட தான் பேசக்கூடாது. நீ தான் வழுக்கட்டாயமா என்னை கல்யாணம் பண்ணுறியே.. அப்ப நான் பேசத்தான் செய்வேன்.. ஆமா.. இந்த தனிக்குடித்தனம் கூட நல்ல ஐடியா தான்.. ரொமான்ஸ்க்கு தடையே இருக்காது”
“போதும்.. பச்சையா தெரியுது.. நடிக்காத.. என்னை பார்த்தாலே கொலை வெறி வர்ர நீ ரொமான்ஸ் பண்ணுவியா? இத கேட்டு நான் பயந்துடுவேன்னு நினைப்பா?”
“நீ பயப்பட வேணாம் சம்ம்ம்பூர்ணா.. ரொம்ப பெரிய பேரா இருக்கே.. இன்னையில இருந்து நீ எனக்கு சம்மு.. சம்முக்கு பயமா இருக்கா என்ன?”
சில நொடிகள் அவனை இமைக்காமல் பார்த்தவள், “செந்தில் என்னை என்னனு கூப்பிடுவான் தெரியுமா?” என்று கேட்டு கொடூரமாக புன்னகைத்தான்.
மித்ரனின் புன்னகை அப்படியே அழிந்து போக, பார்க்கவே திருப்தியாக இருந்தது அவளுக்கு.
அவள் அடுத்து பேசவில்லை. அவள் சொல்ல வேண்டும் என்று அவனும் எதிர்பார்க்கவில்லை. அதற்குள் புவனன் அழைக்க வேகமாக திரும்பிச் சென்று விட்டான்.
கடந்தகால காயங்களை நக்கி நக்கி குணப்படுத்துவது மிருக இயல்பு. மனிதர்கள் மருத்துவம் அல்லவா பார்க்க வேண்டும்?
வாசம் வீசும்.

