
மித்ரனை அனைவரும் குறுகுறுவென பார்த்துக் கொண்டிருக்க, வேலையில் அமர்ந்ததிலிருந்து அவனுக்கு குழப்பமாக இருந்தது.
“என் மூஞ்சில எதாவது இருக்கா?” என்று அருகே இருந்தவனிடம் கேட்க, “ஹான்.. இல்லையே” என்றான்.
“அப்புறம் ஏன் எல்லாரும் என்னை ஃபோகஸ் பண்ணுறானுங்க?”
“நேத்து நீ மேடம் கிட்ட பேசுனல? அதுனாலயா இருக்கும்”
அப்போது தான் அவனுக்கும் அது நினைவு வந்தது.
“இது ஒரு மேட்டரா?” என்று மித்ரன் கேட்க, அவன் பதில் சொல்லாமல் திரும்பிக் கொண்டான்.
இதே நிலைமை அடுத்த நாளும் நீடிக்க, அன்று மீண்டும் சம்பூர்ணா வந்து சேர்ந்தாள்.
இந்த முறை அவனை பார்த்து புருவம் உயர்த்தி சிரித்து விட்டுத்தான் சென்றாள்.
‘இம்சை வந்துட்டா’ என்று திட்டிக் கொண்டான்.
அவள் வந்ததிலிருந்து எல்லோரும் அவனை குறுகுறுவென பார்த்துக் கொண்டிருக்க, கடுப்பாகி விட்டான்.
‘அவ என்ன மகாராணியா? அவ கிட்ட பேசுனதுக்கு இவ்வளவு பில்டப்பா இருக்கு.. இவ என்ன லட்சணத்துல கம்பெனி நடத்துறாளோ’ என்று கோபமாக அமர்ந்திருக்க, சம்பூர்ணாவே அழைத்தாள்.
கைபேசியை முறைத்து விட்டு எடுத்தான்.
“என்ன?”
“ரூமுக்கு வா.. பேசனும்”
“முடியாது இங்கயே சொல்லு..”
“எதுக்கு இப்படி பொங்குற? வீட்டுல சொல்லிட்டாங்களா?”
“எத பத்தி?”
“எத பத்தியா?”
“நீ எத கேட்குற?”
“ஓ.. அப்போ இல்லையா.. சரி அங்க பேசுனதுமே நாம பேசலாம்.. பை” என்று வைத்து விட்டாள்.
மித்ரன் கைபேசியை புரியாமல் பார்த்தான்.
‘எத சொல்லுறா? அம்மா எதுவும் சொல்லலயே?’ என்று யோசித்தவனுக்கு, நேற்று புவனன் எதோ சொல்ல வந்து பிறகு விட்டு விட்டது போல் நினைவு வந்தது.
‘எதாவது பிரச்சனையா? ஒரு வேளை இந்த கல்யாணத்த நிறுத்த போறாங்களா?’ என்று நினைத்தவன், வேகமாக எழுந்து விட்டான்.
அவனுக்கு இப்போது விசயம் தெரிந்தே ஆக வேண்டும்.
மித்ரன் வேகமாக செல்வது பலரின் கண்ணில் விழுந்தது. அவனுக்கு அதைப்பற்றிக் கவலையில்லை.
கதவை பெயருக்கு தட்டி விட்டு அவன் உள்ளே செல்ல, சம்பூர்ணா நிமிர்ந்து பார்த்தாள்.
“என்ன விசயம்?” என்று கேட்டுக்கொண்டு நின்றான்.
“அதான் சொன்னனே.. வீட்டுல முதல்ல பேசு..”
“நீயே சொல்லு”
“நானே சொன்னா… நீ என்னை கொன்னுடுவ” என்று நக்கலாக சிரித்தாள்.
“என்னடி பண்ணி வச்ச?” என்று அதிர்ந்து அருகே சென்றான்.
“நானா?” என்று அவள் போலியாய் அதிர, மித்ரனுக்கு அவளது கழுத்தை நெரிக்கும் வேகம் வந்தது.
“நீ எவ்வளவு பெரிய ரவுடினு எனக்கு தெரியும். ஒழுங்கா என்னனு சொல்லிடு”
“நோ மித்ரு…”
“அப்படி கூப்பிடாத” என்று எரிந்து விழ, “அப்ப மாமானு கூப்பிடவா? இல்ல அத்தான்.. வேற என்ன சொல்லுவாங்கனு தெரியலயே?” என்று கையை விரித்தாள்.
“நீ எதையும் சொல்ல வேணாம்.. ஒழுங்கா விசயத்த சொல்லு”
“ப்ச்ச்.. நீயும் உன் பிடிவாதமும்”
“உன்னை விட கம்மி தான்”
சம்பூர்ணா இதற்கு சிரித்தாள்.
“நீ வீட்டுல இத பேசிக்க மேன்.. அதான் நல்லது. இப்ப இன்னொன்னு இருக்கு.. பத்தரிக்கையில ஆஃபிஸ் ஸ்டாஃப்ஸ்க்கு கொடுக்க ஒரு செட் அடிச்சுருக்காங்க. இந்த ஆஃபிஸ்ல சிலருக்கு தான் கொடுப்போம். மெயின் பிரான்ச்.. உன் அண்ணன் இருக்க ஆஃபிஸ்ல தான் பலருக்கு கொடுக்கனும். இங்க பொதுவா விசயத்தை சொல்லிடுவோம்னு நினைச்சேன். நீ என்னை ப்ளான் பண்ணி வச்சுருக்க?”
“இந்த கல்யாணத்த நிறுத்த ப்ளான் பண்ணுறேன்”
“அது நடக்காது.. நீ எனக்கு தான்” என்று கண்ணடித்தான்.
“இந்த மாதிரி பசங்க தான்டி பேசுவாங்க.. அய்யோ” என்று தலையில் அடித்துக் கொண்டான்.
“ஏன் உனக்கு பேச ஆசையா இருக்கா? பேசேன்.. பார்ப்போம்”
“நான் அப்படி பேசுனா…” என்று நிறுத்தி யோசித்தான்.
திடீரென ஒரு வழி கிடைத்தது போல் அவன் கண்கள் பளிச்சிட்டது.
அவளை காதலிக்கும் ஆண்களை தானே அவள் துரத்தி அடித்தாள். மித்ரன் வெறுப்பதால் அவனை விடாமல் துரத்துகிறாளா?
“நீ பேச மாட்ட” என்று நக்கலாக சிரித்தவள், “சரி பத்தரிக்கை விசயத்துக்கு வா.. என்ன பண்ண போற?” என்று கேட்டு வைத்தாள்.
மித்ரனுக்கு அதைப்பற்றி இனி கவலை இல்லை. அவளை இனி எப்படி ஓட ஓட துரத்துவது என்று முடிவு செய்து விட்டான்.
“நாளைக்கு பத்தரிக்கைய நாம ரெண்டு பேரும் சேர்ந்து எல்லா ஸ்டாஃபுக்கும் கொடுப்போம்”
“நானுமா? எனக்கு வேலை இருக்கு. இங்க வர மாட்டேன்”
“அப்ப இன்னைக்கே எடுத்துட்டு வரச்சொல்லு”
சம்பூர்ணா அவனை குழப்பத்தோடு பார்க்க, ‘இருடி.. இனிமே நீ யோசிக்கவே முடியாத அளவுக்கு செய்யுறேன்’ என்று நினைத்துக் கொண்டான்.
“ஆர் யூ….?”
“சொல்லுறேன்ல? எடுத்துட்டு வரச் சொல்லு.. எல்லாருக்கும் தனித்தனியா வைக்க முடியாது.. ஒரு தட்டு பழம் பத்தரிக்கை வச்சு எல்லாரையும் நிக்க வச்சுட்டு மேனேஜர் கையில கொடுத்துடலாம். முடிஞ்சது.”
திட்டம் போடுபவனை விசித்திரமாக பார்த்தாள். திருமணமே வேண்டாம் என்றவன் இதற்கு ஆர்வமாக திட்டமிடுகிறானே? புரியவில்லை என்றாலும் தோளை குலுக்கி விட்டு அசிஸ்டன்ட்டை அழைத்து விசயத்தை சொன்னாள்.
“வர லேட்டாகும்.. நீ போய் வேலைய பாரு” என்றதும் தலையை ஆட்டி விட்டு நல்ல பிள்ளையாக சென்று விட்டான்.
அவளை இனி எப்படி கையாள்வது என்று முடிவு செய்து கொண்டான். அந்த யோசனையில் அரையும் குறையுமாக வேலை செய்து கொண்டிருக்க, பத்தரிக்கை வந்து விட்டது.
அவன் சொன்னதை எல்லாம் சேர்த்தே அசிஸ்டன்ட் வாங்கி வந்திருந்தான்.
சம்பூர்ணா அவனை அழைக்கும் முன்பே எழுந்து சென்றான். கதவை திறந்ததும் சம்பூர்ணா அந்த பத்தரிக்கையை உற்று பார்த்துக் கொண்டிருந்தது கண்ணில் விழுந்தது.
“என்ன பார்க்குற?”
நிமிர்ந்து பார்த்தவள் முகத்தில் எரிச்சல்.
“ஒன்னுமில்ல”
உடனே பறித்து அதை பார்த்து விட்டு திருப்தியாக தலையாட்டினான்.
“நல்லா தான் இருக்கு.. இத செட் பண்ணு” என்றதும் அசிஸ்டன்ட் வேலையை முடித்தான்.
இருவரும் வெளியே வந்து அனைவரையும் ஒன்றாக அழைத்து நிற்க வைத்து விசயத்தை உடைத்தனர்.
சம்பூர்ணாவே சொல்ல எல்லோருமே அதிர்ந்து பார்த்தனர். இப்படி ஒரு திருப்பத்தை யாரும் எதிர்பார்க்கவில்லை.
தட்டோடு பத்தரிக்கையை மேனேஜர் வாங்கிக் கொள்ள, அனைவரும் கை தட்டி வைத்தனர்.
அதோடு வேலை முடிந்தது என்று சம்பூர்ணா சென்று விட, மற்றவர்களும் அவரவர் இருக்கையில் அமர்ந்தனர்.
அதை வரை குறுகுறுவென பார்த்த அனைவரும் இப்போது மித்ரனை பார்க்காமல் வேலையை கவனிக்க, அவனுக்கும் நிம்மதியாக இருந்தது.
சம்பூர்ணாவை எப்படி துரத்துவது என்ற யோசனையுடனே வீடு வந்து சேர, வீட்டில் பாட்டி குண்டை தூக்கி போட்டார்.
காபியை குடித்துக் கொண்டு சாவகாசமாக அமர்ந்திருந்தவனிடம் திருமண பேச்சை ஆரம்பித்து, நேராக தனிக்குடித்தன விசயத்துக்கு வந்தார்.
“தனிக்குடித்தனமா? ஏன்? இந்த வீட்டுல நான் இருக்க கூடாதா?” என்று மித்ரன் பொங்க, புவனன் அவன் முதுகில் தட்டினான்.
“முதல்ல விசயத்தை கேளுடா…” என்று பாட்டி அதட்ட, “கல்யாணம் ஆனா தனியா போகனுமா? என்ன காமெடி பண்ணுறீங்களா?” என்று கேட்டு முறைத்தான்.
“இங்க பாரு.. சம்பூர்ணா பெரிய இடத்து பொண்ணு.. அவள பார்க்க நாலு பேரு வருவாங்க போவாங்க.. இந்த வீட்டுல அதெல்லாம் முடியுமா?” என்று நர்மதா கேட்க, மித்ரனுக்கு எதுவோ அவமானமாகி விட்டது.
“இந்த வீட்டுக்கு என்ன குறைச்சல்?” என்று அவமானத்தை விழுங்கிக் கொண்டு கேட்க, “ஒரு குறைச்சலும் இல்ல. ஆனா பெரிய ஆளுங்கள கூட்டிட்டு வந்து உட்கார வைக்கவும் முடியாது” என்று நர்மதா தீர்மானமாக சொன்னார்.
“அப்ப யாரும் வரக்கூடானு அவ கிட்ட சொல்லுங்க.”
“அவ வேலை அது..”
“அது அவ கவலை”
“டேய்.. சும்மா குறுக்க குறுக்க பேசாத” என்று புவனன் அதட்டினான்.
“என்னடா நீ? என்னை மட்டும் துரத்தி விட பார்க்குறாங்க.. உனக்கு கோபம் வரல?”
“நீ மட்டும் போகல.. நானும் தான் போறேன்”
“அப்போ அம்மா?” என்று அதிர்ந்து கேட்க, “நாங்க அம்மா பாட்டி ஒரு வீட்டுல.. நீ சம்பூர்ணா ஒரு வீட்டுல” என்றான்.
“டேய் ரெண்டும் ஒன்னு தான்.. என்னை மட்டும் தான் துரத்துறீங்க”
“புரியாம பேசாதடா..”
“நீ வாய மூடு.. ஏம்மா இப்படி பண்ணுறீங்க?”
“நடப்புக்கு இதான் சரி வரும்”
“எதுவும் சரி வராது.. நான் அப்படி போகவும் மாட்டேன்”
“பாட்டி.. நீங்களே சமாளிங்க” என்று புவனன் சலித்தான்.
“இங்க பாரு.. வாய மூடிட்டு நான் சொல்லுறத கேளு.. சம்பூர்ணா நல்ல பொண்ணு.. ஆனா அவளுக்கு நிறைய வேலையிருக்கு. அவளால சாதனா மாதிரி வந்து வாழ முடியாது..”
“அப்ப இந்த கல்யாணமே வேணாங்குறேன்”
“வாய்ல போட்டனா.. பேசாதடா” என்று நர்மதா அதட்டினார்.
மித்ரன் கடுப்பாகி வாயை மூடிக் கொண்டான்.
“இந்த வீட்டுக்கு சம்பூர்ணா வர்ரதுல நமக்கு பிரச்சனை இல்ல. ஆனா வந்தா அவளுக்கு பல பிரச்சனை வரும்.. முக்கியமா சாதனாவுக்கும் சம்பூர்ணாவுக்கும் போட்டி வரும்”
மித்ரன் அமைதியாக அமர்ந்திருந்த சம்பூர்ணாவை பார்த்தான். என்ன சொல்வதென்று தெரியவில்லை.
“அவளோட சாதனா போட்டி போட ஆரம்பிச்சுட்டா கொஞ்ச நாள்ல வாழ்க்கை நரகமாகிடும். நான் என் மூணு பசங்களையும் பிரிஞ்ச மாதிரி உங்கம்மாவும் உங்கள பிரியனும்”
“நாங்க அப்படிலாம் விட மாட்டோம்”
“நீ விடுவனும் நான் சொல்லல.. இப்ப இருக்க நிலைமைக்கு நீங்க ரெண்டு பேருமே தனிக்குடித்தனம் போங்க.. உங்க ரெண்டு பேரு வீட்டுலயும் நாங்க ரெண்டு பேரும் மாமியாரா வந்து அதிகாரம் பண்ணிட்டு ஊர்ல இருக்க எங்க வீட்டுக்கு போயிடுறோம். அவ்வளவு தான்”
“ஊருக்கு ஏன் போகனும்?”
“இங்க இருக்க இடைஞ்சல விட எங்க ஊரு நல்ல ஊரு தான்.. அங்க போய் நானும் உங்கம்மாவும் உங்க தொல்லையில்லாம நிம்மதியா இருக்கோம். நீங்க இங்க உங்க குடும்பத்த பாருங்க”
“ம்மா.. என்னமா?” என்று தாயை பார்த்தான்.
“அது தான்டா முடிவு.. கூட்டுக்குடும்பமா வாழ்ந்தே ஆகனும்னு அவசியம் இல்லை. நான் வாழ்க்கை பட்டு வந்த குடும்பம் கூட்டுக்குடும்பம் தான். நான் மூத்த மருமகளா வந்தப்போ நல்லா தான் இருந்துச்சு. அடுத்தடுத்து வந்து ஆளாளுக்கு நாட்டாமை பண்ணி வாழ்க்கை நரகமாகிடுச்சுடா.. உங்களுக்கு அந்த கஷ்டம் வேணாம். விசேஷம் நல்லது கெட்டதுனா ஒன்னு கூடிப்போம். மத்த நேரம் நம்ம வேலைய நாம பார்ப்போம்னு இருந்தா கடைசி வரை மனக்கசப்பு இல்லாம வாழலாம் பாரு”
மித்ரன் தலையை தேய்க்க, சாதனா “நான் பேசுறேன் அத்த” என்று முன் வந்தாள்.
நிரந்தர பிரிவை விட தற்காலிக பிரிவு சிறந்த முடிவு தான்.
வாசம் வீசும்.

