Loading

 

திருமண வேலைகள் ஆரம்பமானது. மண்டபத்தை பிடித்து, பத்தரிக்கை அடித்து, உணவுக்கு மெனுவை தேர்வை செய்து என அனைத்து வேலைகளும் வேகமாக நடந்தது. அனைத்தும் புவனன் உடன் இருக்க மித்ரன் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. அவனிடம் யாரும் வேலையும் சொல்லவில்லை. சம்பூர்ணாவிற்கு தாலி வாங்க வேண்டும் என்று அன்று அனைவரும் கிளம்ப, மித்ரன் மட்டும் வேலை இருக்கிறது என்று அலுவலகத்திற்கு சென்று விட்டான்.

என்ன நடந்தாலும் இந்த திருமணம் நிற்காது போலவே? சம்பூர்ணா நிறுத்தவும் விட மாட்டாள். அவனும் கொடுத்த வாக்கை மீற முடியாது‌. இனியும் முடிந்ததை மாற்ற முடியாமல் வருந்துவதை விட, அடுத்து என்ன என்று யோசிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டான்.

அலுவலகத்தில் இருந்த போது, அவர்களது குடும்ப வழக்கப்படியான தாலியை வாங்கி அதை படமெடுத்து மித்ரனுக்கு அனுப்பி வைத்தாள் சாதனா.

“வாங்கிட்டோம் மித்ரா..” என்ற செய்தியோடு வந்திருந்தது. அந்த படத்தை உணர்வற்று பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தான்.

இதை அவள் கழுத்தில் போட வேண்டுமா? கஷ்டம் தான்.

“என்ன புரோ? சாப்பிடல?” என்று அந்த அழுவலகத்தில் புதிதாக பழகியவன் கேட்க, மித்ரன் கைபேசியை வைத்து விட்டு உணவை அளந்தான்.

இது வரை அவன் யாரிடமும் திருமண விசயத்தை சொல்லவில்லை. சொல்லி சந்தோசப்படும் விசயமாக இந்த திருமணமும் இல்லை. ஹரீஷிடம் சொல்லி விட்டான். அடுத்து?

செந்திலுக்கோ விஷாலுக்கோ தெரிந்தால்? ஹரீஷை போலத்தான் அவர்களும் நினைப்பார்கள். அவன் அவள் மீது கொண்ட ஆசையால் தான் அவர்களை பிரித்து விட்டான் என்று.

“ப்ச்ச்.. யாரு என்ன நினைச்சா என்ன? என் வாழ்க்கைய எனக்கு வாழத் தெரியாதா? அடுத்தவங்களுக்காக வாழ என்னால முடியாது. எனக்கு என் குடும்பம் தான் முக்கியம்” என்று ஒரு பெண் காரமாக பேசியது கேட்டு அதிர்ந்து நிமிர்ந்தான்.

சற்று தள்ளி இருந்த மேசையில் அமர்ந்திருந்தவள் தான் பேசிக் கொண்டிருந்தாள்.

“அதுக்காக இப்படி அவசரப்படனுமா?” என்று அவளது தோழி கேட்க, “இப்ப செய்யலனா அப்புறம் எப்பவும் செய்ய முடியாது. எனக்கு என் புள்ளைங்க என் அம்மா அப்பா தான் முக்கியம். நான் டிவர்ஸ் வாங்க தான் போறேன்.” என்று பேசியது கேட்டு திரும்பிக் கொண்டான் மித்ரன்.

ஒவ்வொருவர் வாழ்விலும் ஒவ்வொரு பிரச்சனை. யாருக்காகவும் வாழ முடியாது என்ற அதே வாயால் அடுத்த நொடி குடும்பத்துக்காக செய்வேன் என்கிறாள். இரண்டுக்கும் இருக்கும் முரண்பாட்டை பலர் உணர்வதே இல்லை. மித்ரனும் கூட குடும்பத்தை தானே நினைத்தான்.

அவனுக்கும் குடும்பம் தான் முக்கியம். சம்பூர்ணா எப்பேர்பட்ட காரியங்களை செய்யக்கூடியவள் என்பதை கண் முன்னால் பார்த்திருக்கிறான். விஷால் அதற்கு சாட்சி. அதோடு அவனை மிரட்ட புவனனை வைத்து விளையாடினாள்.

அவளிடம் சண்டையிட்டு குடும்பத்தினரை இழக்க முடியாது. ஆனால் கையில் அவள் கிடைத்தால் அவளை உண்டு இல்லை என ஆக்கி விட மட்டும் தயாராக இருந்தான். திருமணம் தானே? நடக்கட்டும். ஒரே வீட்டில் இருந்தால் அவளுக்கும் அவன் யாரென தெரிந்து விடும். அவளும் அதன் பிறகு என்ன செய்து விடுவாள் என்று பார்க்கலாம்.

உணவு வேளை முடிந்து உள்ளே செல்லும் போது சம்பூர்ணாவை பார்த்தான்.

அப்போது தான் உள்ளே வந்திருப்பாள் போலும். மேனேஜரிடம் எதையோ தீவிரமாக பேசிக் கொண்டே கடந்து சென்று விட்டாள்.

“நம்ம பாஸ் நல்ல அழகுல?” என்று பேசிக் கொண்டிருந்தவன் தோளில் இடிக்க, திடுக்கிட்டு திரும்பிப் பார்த்தான்.

“இங்க சேர்ந்தப்போ இவங்களுக்கு கல்யாணம் கூட ஆகலனு கேள்வி பட்டு ரொம்ப சாக் ஆனேன் தெரியுமா?” என்றதும் மித்ரனுக்கு கடுப்பானது.

‘அதுக்கு தான் இப்ப நான் சிக்கிட்டேனே’

“இங்க இருக்க பலருக்கு அவங்க மேல க்ரஸ்.. ஆனா சொல்ல தான் தைரியம் இல்ல” என்று உதட்டை பிதுக்கினான்.

“இவ மேலயா? அது சரி” என்று மனதில் நினைத்ததாக எண்ணி வாய்விட்டு சொல்லி விட்டான்.

“என்ன புரோ? அழகா தான இருக்காங்க? அதுவும் இல்லாம போல்டா செம்ம ஸ்மார்ட்டா முடிவு பண்ணுவாங்க. முக்கியமா அவங்க பேசுனா கேட்டுட்டே இருக்கலாம். எனக்கு ரொம்ப பிடிக்கும்”

“பிடிக்குமா?”

“மத்தவங்க மாதிரி க்ரஸ் எல்லாம் கிடையாது. ஜஸ்ட் பிடிக்கும். அவ்வளவு தான்”

“அதோட நிறுத்திக்க.. அதான் நல்லது”

“ஏன்?” என்றவன் சந்தேகமாக பார்க்க, “அவளோட வருங்கால புருஷன் நானு.. என் முன்னாடி வழியாத” என்றான்.

“இத தான் எல்லாருமே சொல்லுறானுங்க. எவனுக்கும் போய் பேசக்கூட தைரியம் இல்ல. பொண்ணுனா இப்படி இருக்கனும்.. எவனையும் பக்கத்துல கூட விடாத அளவு ஸ்ட்ராங்கா.. நீங்களும் ட்ரை பண்ணுங்க.. பார்ப்போம் யாருக்கு அடிக்குது லக்குனு..”

“டேய் நான் உண்மைய சொல்லுறேன்டா”

“போங்க புரோ காமெடி பண்ணிக்கிட்டு” என்று விட்டு அவன் நடக்க, “அடப்பாவி! அப்ப நம்பல?” என்றான்.

“நம்பனுமா? நான் என்ன கேனையன்னா தலையில எழுதி ஒட்டிருக்கேன்?”

“இப்ப நேரா அவ ரூம்க்கு போறேன் பார்க்கிறியா?”

“போயிட்டு மேடம் குட் ஆஃபட்ர் நூன்னு சொல்லிட்டு வர போறீங்க அதான? இந்த மாதிரி ஃபிலிம்ம எல்லாரும் ஓட்டியாச்சு. புதுசா யோசிங்க”

“நீ என்ன ரொம்ப இன்சல்ட் பண்ணிட்ட.. இதுக்காகவே நான் நிரூபிக்கிறேன். இரு வர்ரேன்” என்றவன் தன் உணவு டப்பாவை அவன் கையில் திணித்து விட்டு நடக்க, “அய்யோ புரோ.. போய் அடி வாங்கிடாதீங்க” என்றதும் சட்டென நின்றான்.

“அடியா?” என்று திரும்பி கேட்க, “ஆமா.. ஒருத்தன் எசக்கு பிசக்கா பேசப்போய் மேடம் ஒரே அப்பு விட்டாங்களாம். அன்னைக்கே வேலைய விட்டு ஓடிட்டான்னு எல்லாரும் சொல்லிட்டு இருந்தாங்க. நீங்க போய் வாங்கிடாதீங்க” என்று அக்கறை காட்டினான்.

“அவ என்ன அடிக்கிறதா? நோ சான்ஸ்.. இப்ப நடக்குற வேடிக்கைய மட்டும் பாரு” என்றவன் உடனே திரும்பி பார்க்க, சம்பூர்ணா அறையை விட்டு வெளியே வந்து மேனேஜரிடம் எதோ ஃபைலை கொடுத்தாள்.

மித்ரன் நேராக அவளிடம் சென்று நிற்க, மேனேஜரை அனுப்பி விட்டு அவனை கேள்வியாக பார்த்தாள்.

“என்ன?”

“ஒன்னுமில்ல”

“வாட்? வேலை இல்லையா உனக்கு?”

“இருக்கு”

“அப்ப போய் பாரு”

“அத விட இப்ப ஒரு முக்கியமான கேள்வி கேட்கனும்”

“என்னது?”

“இந்த ஆஃபிஸ்ல வச்சு ஒருத்தன அடிச்சியாமே? நீ என்ன ரவுடியா? எல்லாத்தையும் அடிக்கிறது தான் உன் பொழப்பா?”

சம்பூர்ணா அவனை கிண்டலாக பார்த்து வைத்தாள்.

“அதையும் தான் சைட் பிஸ்னஸா பண்ணிட்டு இருக்கேன். உனக்கு தெரியாதா?”

“அப்ப அடிச்சுருக்க?”

“ஞாபகம் இல்ல.. ஒரு வேளை அடிச்சுருப்பேன். பட் அத ஏன் இப்ப கேட்குற?”

“உன் கிட்ட ஒன்ன காட்டலாம்னு வந்தேன். உன்னை தேடிப்போனா அடிப்பனு சொல்லுறாங்க.. ரவுடியாவே மாறிட்டியா?”

“இஸ் இட்? பெருமையா இல்ல?” என்று கேட்டு அவனது முறைப்பை வாங்கிக் கொண்டாள்.

“சரி என்ன காட்ட வந்த?”

“காட்ட முடியாது ப்பே” என்று திரும்பியவனை வேகமாக பிடித்து நிறுத்தினாள்.

“மரியாதையா காட்டிட்டு போ”

“மரியாதை உனக்கு?”

“ப்ச்ச்..” என்று சுற்றிலும் பார்த்தாள்.

அங்காங்கே சிலர் அவர்களை கவனிக்க, உடனே மித்ரனின் கையைப்பிடித்து இழுத்துக் கொண்டு அறைக்குள் சென்றாள்.

அவள் இழுத்த இழுப்புக்கு சென்றாலும் “கைய விடுடி” என்று பல்லைக் கடித்தான்.

அறைக்குள் நுழைந்ததும், “இப்ப காட்டப்போறியா இல்லையா?” என்று முறைத்தாள்.

“கைய விடு.. அப்ப தான காட்ட முடியும்?’ என்றதும் விட்டு விட்டாள்.

தன் கைபேசியை எடுத்தவன் தாலி படத்தை காட்டினான்.

“இன்னைக்கு தாலி வாங்க போயிருக்காங்க” என்று காட்ட உடனே வாங்கி பார்த்தாள்.

“இத தான் நீ என் கழுத்துல போடனுமா?”

“ஆமா.. தங்கத்துல தான் போடுவோம்”

“அப்ப கலட்டி வைக்க ஈசியா இருக்கும்..” என்றாள். அவளுக்கு அவள் பிரச்சனை.

இதைக்கேட்டு மித்ரனுக்கு கடுப்பாக, வெடுக்கென கைபேசியை பிடிங்கியவன், “உனக்கு தான் கல்யாணமே பிடிக்காதுல? அப்புறம் ஏன்டி இந்த கல்யாணத்துல இப்படி குறியா இருந்து என்னை இம்சை பண்ணுற?” என்று எரிந்து விழுந்தான்.

“பிடிக்காது தான்.. ஆனா நான் ஒரு குடும்பப் பொண்ணா இருக்கனும்னு ஆசைப்பட்டது நீ தான? அதான் உன் குடும்பத்துக்கே வந்து இருந்து பார்க்கலாம்னு முடிவு பண்ணிட்டேன். எப்படி?” என்று கண்ணடித்தாள்.

“உன்னை..” என்று அவன் கழுத்தை நெரிக்கப்போக அவள் தலைசாய்த்து, “ம்ம்.. கொல்லு பார்ப்போம்” என்று நக்கலாக சொன்னாள்.

“செய்ய மாட்டேன்னு நினைப்பா?”

“செய்யுனு தான் நானும் சொல்லுறேன்” என்று அவள் சிரிக்க, கதவு தட்டும் சத்தம் கேட்டது.

திரும்பிப் பார்த்தவள், “நாம அப்புறம் பேசலாம்.. நானும் உன் கிட்ட ஒன்னு காட்டனும்.. ஆனா அத அப்புறமா காட்டுறேன்.. இப்ப கிளம்பு” என்றாள்.

அவளை சலிப்பாக பார்த்து விட்டு திரும்பியவன், திடீரென திரும்பி அவள் கன்னத்தை பிடித்து நன்றாக கிள்ளி வைத்தான்.

“ஏய்..” என்று அதிர்ந்தவள் அவன் கையை தட்டி விட்டு கன்னத்தை தேய்க்க, “சம்பூர்ணா இல்ல நீ சொர்ணாக்கா.. ரவுடி.. போடி” என்று விட்டு வேகமாக கதவை திறந்தான்.

வெளியே நின்றிருந்த மேனேஜர் அவனை புரியாமல் பார்க்க, ஒன்றும் சொல்லாமல் கடந்து சென்று விட்டான்.

சம்பூர்ணா கன்னத்தை தேய்த்துக் கொண்டு, ‘சொர்ணாக்கா? இருடா உனக்கு இதுக்கு இருக்கு’ என்று பல்லைக் கடித்து விட்டு சென்று நாற்காலியில் அமர்ந்தாள்.

“மேடம்” என்று மேனேஜர் கூப்பிட, “உள்ள வாங்க” என்று விட்டு வேலையை கவனித்தாள்.

மித்ரன் கோபமாக சென்று தனது நாற்காலியில் அமர, அங்கிருந்தவர்களில் பாதிக்கும் மேல் அவனை குறுகுறுவென பார்த்தனர். சம்பூர்ணா அவன் கையைப்பிடித்து அழைத்துச் சென்றது அதற்குள் பலருக்கு தெரிந்து விட்டது.

“புரோ?” என்று முதலில் பேசியவன் அழைக்க, மித்ரன் திரும்பிப் பார்த்தான்.

“என்ன நடந்துச்சு? அடி வாங்குனீங்களா?”

மித்ரனுக்கு உடனே சிரிப்பு வந்தது.

“இல்ல.. அடிக்கலாம் மாட்டா”

“அப்புறம்?”

“நான் தான் அவ…” என்றவனுக்கு செய்த செயல் இப்போது தான் விளங்கியது.

கிள்ளி வைத்திருக்கிறான். அடக்கடவுளே! என்னவானது அவனுக்கு. அன்று முத்தமிட்டான். இன்று கிள்ளி விட்டான். பைத்தியம் முற்றி விட்டதா?

“நீங்க நிஜம்மாவே உட் பீ யா?”

மித்ரன் தலையாட்டி விட்டு வேலையை பார்க்க திரும்பிக் கொண்டான்.

இன்னும் என்னவெல்லாம் நடக்கப்போகிறதோ?

மித்ரன் வேலையை முடித்து விட்டு கிளம்பி விட, மற்ற அனைவரும் அவனையும் சம்பூர்ணாவையும் பற்றி புரணி பேச ஆரம்பித்து விட்டனர்.

கடலில் இறங்கும் முன்பே யோசிக்க வேண்டும். இறங்கிய பின்பு நீந்த மறந்து யோசித்துக் கொண்டே இருந்தால் மூழ்கத்தான் வேண்டும்.

வாசம் வீசும்.

Click on a star to rate it!

Rating 4.9 / 5. Vote count: 18

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
12
+1
1
+1
2

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்