Loading

சம்பூர்ணா மித்ரனை நெருக்கத்தை இவ்வளவு சீக்கிரம் எதிர்பார்க்காததால் தான் தடுமாறினாள். ஆனால் உடனே சுதாரித்து அவனை சலிப்பாக பார்த்தாள்.

“இப்படியே நிக்க தான் இவ்வளவு வேகமா வந்தியா?” என்று கேட்டு வைத்தாள்.

மித்ரன் அவளை விடாமல் அமைதியாக இருக்க, “ஓ.. அதான் விசயமா? என்னை விட்டு பிரிஞ்சுருக்க முடியல? அப்போ நம்ம கல்யாண தேதிய பக்கத்துலயே வைக்க சொல்லிடுவோமா?” என்று சிரிப்போடு கேட்டாள்.

உடனே மித்ரன் கடுப்பாகி அவளை விட்டு விலகினான். அதற்கும் சம்பூர்ணா சிரித்து வைத்தாள்.

“சரி சரி.. வந்தது வந்துட்ட.. அப்படியே இனிமே இங்கயே வேலை பாரு” என்று உடனே பேச்சை மாற்றிக் கொண்டு, நேராக சென்று தன் நாற்காலியில் அமர்ந்தாள். அவனருகே இனியும் நிற்க முடியாது.

“முடியாதுனா மட்டும் விட்டுருவியா?”

“மாட்டேன்”

மித்ரன் தலையை தேய்த்துக் கொண்டு ஒரு நாற்காலியை இழுத்து அமர்ந்து கொண்டான். சலிப்பாகவும் கோபமாகவும் இருந்தது. அதை எப்படிக் காட்டுவது என்று தான் புரியவில்லை.

“இப்ப என்ன வேலை வச்சுருக்க எனக்கு?” என்று அடுத்த விசயத்துக்கு தாவினான்.

“என்னோட பிஏ வா இருக்கியா?”

சம்பூர்ணா சிரித்துக் கொண்டே கேட்க, “நக்கலா?” என்று முறைத்தான்.

“வேணாமா? ப்ச்ச்.. சரி வேற யோசிப்போம்.. முதல்ல வேலை பார்த்தல.. அதோட டீடைல்ஸ் சொல்லு” என்று கேட்க, வேண்டாவெறுப்பாக சொல்லி வைத்தாள்.

“உனக்கு இங்க வேலை கொடுக்குறது ரொம்ப ஈசி போலயே..” என்றவள் தொலைபேசியை எடுத்தாள்.

யாரையோ அழைத்து விட்டு வைத்தாள்.

“ஹெச் ஆர்… வருவாங்க.. உன் ரெசியூம்.. இப்ப வச்சுருக்கியா?”

“பைக்ல இருக்கு”

உடனே அசிஸ்டன்டை அழைத்து அதை எடுத்து வரச் சொன்னாள்.

“ஹெச் ஆர் கிட்ட நீயே பேசிக்க.” என்று முடிக்கும் முன்பே, ஹெச் ஆராக இருக்கும் ஒருவன் வந்து சேர்ந்தான்.

“கம் இன்” என்றதும் உள்ளே நுழைந்தவன் மரியாதையாக நின்றான்.

“இவங்க யோக மித்ரன்.. நம்ம கம்பெனியில ஜாயின் பண்ணுவாங்க. அவங்க ரெஸூயும் பார்த்துட்டு மத்தத பேசிக்கோங்க” என்றவள் குரல் சற்று முன்பு மித்ரனிடம் பேசியது போல் இல்லை. கம்பீரமாக அதிகார தோரணையுடன் வந்தது.

“ஓகே மேடம்” என்று பவ்யமாக அவன் பதில் சொல்ல, அசிஸ்டண்ட்டும் வந்து சேர்ந்தான்.

வந்தவனின் பார்வை இருவரையும் குறுகுறுவென பார்த்தாலும் எதுவும் பேசாமல் நின்றான்.

மித்ரன் யோசனையை கை விட்டு தன்னுடைய ஃபைலை வாங்கி ஹெச் ஆரிடம் கொடுத்தான்.

“இதுக்கு மேல உங்க பொறுப்பு. வேலைய கண்ஃபார்ம் பண்ணிட்டு சொல்லுங்க.. அண்ட்.. இவரு என்னோட வருங்கால ஹஸ்பண்ட்.. இன்னும் மேரேஜ் டேட் ஃபைனல் பண்ணுல. அதுவரை யாருக்கும் சொல்ல வேணாம்” என்று முடித்தாள்.

அசிஸ்டென்ட் சற்று முன்பு நடந்ததை பார்த்திருந்தானே. அவன் யாரிடமும் உளறி வைத்தால்? அவளது மரியாதையோடு மித்ரனின் மரியாதையும் கெட்டுப்போகும்.

இப்போது சொன்ன செய்தியில் அனைவருமே அதிர்ந்தனர். மற்றவர்கள் மித்ரனை மரியாதையாக பார்க்க, மித்ரனுக்கு இவள் ஏன் இப்போதே சொல்லி வைத்தாள் என்று புரியவில்லை.

“போயிட்டு வாங்க” என்று மித்ரனை பார்த்து சொல்ல, மித்ரன் எழுந்தான். மற்றவர்களும் உடனே திரும்பி நடந்தனர்.

கதவருகே சென்ற மித்ரன் திரும்பிப் பார்க்க, சம்பூர்ணா சிரித்துக் கொண்டே கையாட்டி வைத்தாள். முதல் முறையாக கோபமே இல்லாமல் அவளை முறைத்து விட்டு மித்ரன் வெளியேறினான்.

•••

வீட்டுக்கு வந்ததும் எப்படி விசயத்தை சொல்வது என்று மித்ரன் யோசித்துக் கொண்டிருக்க, “என்னடா? வேலை கிடைக்கலயா? இப்படி உட்கார்ந்துருக்க?” என்று நர்மதா கேட்டார்.

“கிடைச்சுடுச்சுமா”

“அட வாழ்த்துக்கள் தம்பி” என்று சாதனா வாழ்த்து கூறினாள்.

“தாங்க்யூ அண்ணி.. ஆனா..”

“ஏன் வேலை புடிக்கலயா? டல்லா இருக்க?”

“அப்படிலாம் இல்ல.. நல்ல வேலை தான். நான் வேலை செய்ய போற கம்பெனி தான் பிரச்சனை”

“எந்த கம்பெனி?”

“சம்பூர்ணாவோடது”

சாதனாவும் நர்மதாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

“அவரு வேலை செய்யுற இடத்துலயா?” என்று சாதனா கேட்க, மறுப்பாக தலையசைத்தான்.

“இல்ல.. அவளுக்கு நிறைய கம்பெனி நிறைய பிஸ்னஸ் இருக்கு. அதுல ஒன்னுல புவனன் இருக்கான். நானே வேற இடத்துல இருக்கேன்”

“ஓ…” என்ற சாதனா, இப்போது முழுதாக தனிக்குடித்தனம் போயே தீர வேண்டும் என்று முடிவு செய்து விட்டாள். வீட்டில் அனைவரும் அவளுக்கு கீழ் இருந்தால் அவளது தன்மானம் அடிபடும். அது வரை அவள் பொறுத்திருக்க போவதில்லை.

“நிறைய கம்பெனியா?” என்று நர்மதா கேட்டார்.

“ஆமாமா.. புவனன் படிச்சது வேற.. நான் படிச்சது வேற.. அவ கிட்ட வேற வேற பிஸ்னஸ் இருக்கு. நான் படிச்சதுக்கான வேலைய தான் இப்ப வாங்கிட்டு வந்துருக்கேன்”

‘இத மட்டுமா வாங்குன? ஒரு கிஸ்ஸும் சேர்த்து வாங்கிட்டு வந்துருக்க’ என்று அவன் மனம் புலம்பியது.

“இத தான் அன்னைக்கு சம்பூர்ணா சொல்லுச்சு.. நம்ம கம்பெனிலயே பாருனு.. இப்ப உனக்கு பிடிச்ச வேலை அங்கயே கிடைச்சுடுச்சுல?” என்று கேட்டுக் கொண்டே பாட்டி வந்தார்.

“ம்ம்” என்று தலையாட்டினான்.

‘எங்க கிடைச்சது? வழுக்கட்டாயமா உள்ள தள்ளிட்டா.. பாதகி’ என்று நொந்து கொண்டான்.

“அப்புறம் என்ன? இனிமே ரெண்டு பேருமா சேர்ந்து வேலை பாருங்க”

“அப்படி பார்க்க முடியாது பாட்டி” என்று மித்ரன் அவசரமாக சொல்ல, நர்மதா புரியாமல் பார்த்தாள்.

“ஏன்டா?”

“அது உங்களுக்கு சொன்னா புரியாது.. அவளோட உயரமே வேற.. நான் படிச்சதுக்கு வேலை செய்யுறேன்.. அவ புதுசு புதுசா வேலைய உருவாக்குறவ. என்னை மாதிரி தினமும் இருநூறு பேருக்காச்சும் வேலை கொடுக்குற இடத்துல இருக்கா. நாங்க சேர்ந்து எல்லாம் வேலை செய்ய முடியாது.”

நர்மதாவுக்கு மீண்டும் ஒரு முறை வயிறு கலங்கியது. பெரிய பதவியில் இருப்பவள் மகனை நன்றாக பார்த்துக் கொள்வாளா? இந்த சம்பந்தம் சரி வருமா?

சாதனாவோ முழுதாக முடிவுக்கு வந்து விட்டாள். திருமணம் முடியும் முன்பே இதை பேசி விட வேண்டியது தான். இல்லாவிட்டால் பின்னால் நிறைய வருத்தங்களுக்கு உள்ளாக வேண்டும். அதற்காக சம்பூர்ணாவை பிடிக்காது என்று எதுவும் இல்லை.

“அப்படியா?”

“ஆமா பாட்டி.. அவரும் சொன்னாரு.. சம்பூர்ணா ரொம்ப பெரிய இடத்துல இருக்க பொண்ணு.. ஆனா அத காட்டிக்காம பேசும் போது சாதாரண ஆளுனு நமக்கே தோணிடும்னு சொன்னாரு. நம்ம கிட்ட அந்த பொண்ணு நல்லா பேசுது. முக்கியமா மித்ரன லவ் பண்ணுது. அது வரை திருப்தி தான்”

‘லவ் பண்ணி கிழிச்சா’ என்று கடுப்பானது மித்ரனுக்கு.

“அதுவும் சரி தான்.. எவ்வளவு உயரத்துல இருந்தாலும் மனுசங்கள மதிச்சு பழகுறது தான் நல்ல குணம். அவ கிட்ட அது இருக்குல.. போதும்” என்று பாட்டி சொல்ல, நர்மதாவுக்கு ஓரளவு மனம் தெளிந்தது.

சம்பூர்ணா தான் என்ற கர்வத்தை இது வரை காட்டவில்லை. மித்ரனை பிடித்து அவளது உயரத்தை விட்டு இறங்கி வந்து அவளாகவே திருமணத்தை பற்றி பேசியிருக்கிறாள். பிரச்சனையிருக்காது தான்.

அன்று கூட நேரடியாக வீட்டுக்கு வந்து பேசி விட்டு சென்றாள். அப்போதும் அவளிடம் பணிவு தான் இருந்தது.

உண்மை தெரியாமல் ஆளுக்கொரு பக்கம் சமாதானம் ஆனார்கள்.

மித்ரன் வேலை உறுதியாகி விட அடுத்த நாளிலிருந்து வேலைக்கு கிளம்பினான்.

“கொழுந்தனாரே..”

“என்ன அண்ணி?”

“வேலைக்கு போற சந்தோசமா? இல்ல வேற யாரையும் டெய்லி பார்க்க போற சந்தோசமா?” என்று கிண்டலடித்தாள் சாதனா.

“அவள தினமும் பார்க்க முடியாது அண்ணி.”

“ஓ.. அதுல வருத்தமா? இருக்கட்டும் இருக்கட்டும்”

“இதுக்கெல்லாம் வருத்தப்படாதடா.. கல்யாணத்துக்கு அப்புறம் வீட்டுலயும் பார்த்து ஆஃபிஸ்லயும் அதே மூஞ்சிய பார்த்த போரடிச்சுடும்” என்று புவனன் வாயை விட்டான்.

“ஓ.. அப்ப என்னை எல்லா நேரமும் பார்த்தா உங்களுக்கு போரடிக்குது.. அப்படித்தான?” என்று சாதனா இடுப்பில் கை வைத்து முறைக்க, “ஜஸ்ட் ஜோக்” என்று புவனன் பல்லைக் காட்டினான்.

“ஜோக்கெல்லாம் வேணாம்.. உண்மையே அது தான். உங்களையும் ரொம்ப நேரம் பார்த்தா எனக்கும் போர் தான் அடிக்கும். சீக்கிரமா ஆஃபிஸ் கிளம்புற வழிய பாருங்க” என்று சாதனா நக்கலாக சொல்ல, மித்ரன் சத்தமாக சிரித்து விட்டான்.

“இதுக்கு பேரு தான் ஆப்ப தேடிப்போய் உட்காருறதுடா அண்ணா.. தேவையா உனக்கு?”

“உனக்கும் கல்யாணம் ஆகும்ல.. அப்ப பார்க்குறேன் இப்படி சிரிக்கிறியானு?” என்று புவனன் நக்கலாக சொல்ல, மறைய துடித்த சிரிப்பை இழுத்துப் பிடித்த மித்ரன், “நான்லாம் அறிவாளி.. இப்படி தானே போய் வாய கொடுத்து மாட்டிக்க மாட்டேன்” என்றான்.

“இந்த பேச்செல்லாம் இப்ப தான் பேச முடியும். கல்யாணம் முடியட்டும் பார்க்க தான போறேன்” என்று விட்டு, பைக் சாவியை எடுத்துக் கொண்டு புவனன் கிளம்பி விட்டான்.

மித்ரனும் கிளம்பிச் சென்றான். பாதை முழுவதும் புவனன் சொன்னதே மனதில் ஓடியது. அவர்கள் வீட்டில் இது போன்ற செல்ல சண்டைகளை போடும் அளவு சம்பூர்ணா இறங்கி வருவாளா?

அவள் என்ன அவனை விரும்பியா திருமணம் செய்கிறாள்? அவனது வாழ்வை கட்டுக்குள் வைக்க நினைக்கிறாள். அதுவும் போதாதென்று அவளை அவன் மனைவியாக அவனது நண்பர்களுக்கு அறிமுகம் செய்ய வேண்டுமாம்.

கடவுளே! இதை எப்படி மறந்தான்? அவளை விஷாலின் முன்பு தன் மனைவி என்று காட்ட முடியுமா? இல்லை செந்தில் பார்த்தால்? ஹரீஷிடம் எப்படிச் சொல்வது?

அவனது கல்லூரி நண்பர்கள் சிலருக்கு இருவருக்கும் இடையே இருக்கும் சண்டை நன்றாக தெரியும். அவர்கள் முன்பு அவமானப்பட்டு நிற்பதா?

ஆனால் அது தானே சம்பூர்ணாவுக்கு வேண்டும்? அவள் குடும்பப் பெண் அல்ல என்று சொன்னவன் வாயால், தன்னுடைய மனைவி என்று சொல்ல வேண்டும்.

திருமணத்தை நிறுத்தி விடலாமா? நிறுத்த அவள் விட மாட்டாள். பேச்சு மாற மாட்டேன் என்று அவனும் சத்தியம் செய்து விட்டான். அதற்காக அவளோடு ஒன்றாக வாழ்ந்தே தீர வேண்டுமா? அவனால் பழைய கதையை எல்லாம் மறக்க முடியுமா? முடியாதே.

அவள் விஷாலுக்கு செய்த துரோகத்தை அவன் இன்னமும் மறக்கவில்லையே. மறக்கும் படியான காரியமா அது?

விஷால் எவ்வளவு சந்தோசமாக சொன்னான் சம்பூர்ணாவை காதலிப்பதாக. அந்த சந்தோசத்தை எல்லாம் அழித்து இரத்தம் கொட்ட வைத்து விட்டாளே. ராட்சசி. அவளை எப்படி தன் வாழ்வில் காலம் முழுவதும் இணைத்துக் கொள்ள முடியும்?

விதைக்கும் போது கவனத்தை சிதற விட்டு விட்டு அறுவடை செய்யும் போது வருந்துவது தான் மனித இயல்பு!

வாசம் வீசும்.

Click on a star to rate it!

Rating 4.8 / 5. Vote count: 14

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
13
+1
0
+1
1

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்