
மித்ரன் வீட்டுக்கு திரும்பி வந்து நேராக அறைக்குள் போகப் பார்க்க, “மித்ரா..” என்று பாட்டி நிறுத்தினார்.
நர்மதாவும் சாதனாவும் கூட அங்கே தான் அமர்ந்திருந்தனர். அவனுக்கு இப்போது யாரிடமும் பேசப்பிடிக்கவில்லை. ஆனாலும் நின்றான்.
“இங்க வா” என்றதும் பெருமூச்சோடு சென்றான்.
“இப்ப தான் சுதா கால் பண்ணா.. என்ன விசயம்?”
“என் கிட்ட கேட்டா?”
“உன்னை தான் கேட்கனும். கல்யாண ஏற்பாடு பண்ணவாம். என்ன நடக்குது?” என்று நர்மதா கேட்க, மித்ரன் தலையை தேய்த்தான்.
அதற்குள் விசயத்தை உடைத்து விட்டாளா?
“என்ன திடீர்னு கல்யாண பேச்சு?” என்று சாதனாவும் புரியாமல் கேட்டாள்.
சம்பூர்ணாவிடம் அவன் ஏமாந்த விசயத்தை சொல்ல ஈகோ விடவில்லை. எவ்வளவு சுலபமாக ஏமாற்றி விட்டாள்?
“மீட் பண்ணோம் பாட்டி.. கல்யாணம் பண்ணிக்கலாம்னு கேட்டா.. சரினு சொல்லிட்டேன்” என்று சமாளித்தான்.
“அவ்வளவு தானா?” என்று கேட்ட சாதனாவிற்கு நம்ப முடியவில்லை.
“ஆமா.. அவ்வளவு தான்” என்றவன் முகத்தில் இருந்த எரிச்சலை மூவருமே கவனித்தனர்.
நர்மதா மகனை பிடித்து இழுத்து அருகே அமர வைத்தார்.
“இது என்னடா புது குழப்பம்? முதல்ல பார்த்தப்போ ரெண்டு பேரும் வேணாம்னு தான சொன்னீங்க? இப்ப திடீர்னு மாத்தி பேசுறீங்க? என்ன நடந்துச்சு?”
மித்ரன் அவசரமாக ஒரு காரணம் தேடினான். எதோ ஒன்று. பிரச்சனையிலிருந்து தப்பிக்க வேண்டும். அலை பாய்ந்த மனம் சட்டென சம்பூர்ணா சொன்ன காரணத்தை பிடித்துக் கொண்டது.
“ம்மா.. பழைய விசயம் உங்களுக்கு சொன்னா புரியாது”
“முதல்ல சொல்லு.. புரியாதானு அப்புறம் யோசிக்கலாம்”
“ஆமா.. திடீர்னு குண்ட தூக்கி போட்டா எப்படி? காரணம் சொல்லு” என்று சாதனாவும் கேட்டாள்.
“காலேஜ்ல நடந்தது…” என்று இழுத்தவன், யார் முகத்தையும் பார்க்காமல் தரையை பார்த்தான்.
“என்ன நடந்துச்சு?”
“காலேஜ்ல.. அவ என்னை ஒன் சைடா லவ் பண்ணா.. நான் முடியாதுனு சொல்லிட்டேன். அந்த கோபத்துல அப்பப்போ சண்டை போட்டுக்குவோம். கல்யாண பேச்சு வந்தப்போ எனக்கு பிடிக்கல. ஆனா அவ மறக்கல போல.. இப்ப கேட்டதும்…” என்று நிறுத்தியவன் பெருமூச்சு விட்டு, “சரினு சொல்லிட்டேன்” என்று முடித்தான்.
இப்போதும் தரையை தான் பார்த்திருந்தான். முகத்தை பார்த்து பொய் சொல்ல வரவில்லை. பொய் சொல்ல வைத்தவளை நினைத்து கோபம் தான் வந்தது.
ஆனால் இந்த பொய்யை நம்புவார்களா? அடுத்த கவலை வந்து சேர்ந்தது.
“லவ்வா?” என்று சாதனா ஆச்சரியமாக கேட்க, நர்மதாவுக்கும் புரியவில்லை.
“நிஜம்மாவே லவ் பண்ணாளா அந்த பொண்ணு?” என்று மீண்டும் சாதனா கேட்க, தலையை மட்டும் ஆட்டி வைத்தான்.
கூடவே ஒரு பயம் வந்தது. சம்பூர்ணாவை கேட்டு அவள் மறுத்து விட்டால்? முதலில் அவளிடம் இந்த கதையை சொல்லி வைக்க வேண்டும். ஆனால் அதை அவள் ஏற்று அவனோடு பொய் சொல்வாளா? அவனை அசிங்கப்படுத்தவாவது உண்மையை சொல்லி விடுவாளே.
“ஓ.. இப்ப புரியுது..” என்று சாதனா கை தட்டி குதூகலித்தாள்.
“என்ன புரியுது உனக்கு?” என்று முத்தரசி முறைக்க, “உங்களுக்கு புரியலயா? அன்னைக்கு வீட்டுக்கு வந்தப்போ சம்பூர்ணா கிட்ட நீங்க தான கேட்டீங்க.. உனக்கு மித்ரன பிடிக்குமானு? கல்யாணமே வேணாம்னு அடம் பிடிச்சாலும் அந்த பொண்ணு வாயில இவன பிடிக்கலனு வரவே இல்ல.. நானும் யோசிச்சேன்.. பிடிக்கலனா பிடிக்கலனு சொல்லிருக்கலாம். அதென்ன அந்த பொண்ணு பிடிச்சுருக்கு.. கல்யாணம் மட்டும் வேணாம்ங்குதுனு ஒரே குழப்பத்துல இருந்தேன். இப்ப புரிஞ்சுடுச்சு.. மித்ரன் வேணாம்னு சொன்னதால மனச மறைச்சுட்டு அந்த சம்பூர்ணாவும் வேணாம்னு சொல்லிருக்கா.. அதான?” என்று சாதனா பெரிய விசயத்தை கண்டு பிடித்தது போல் பேசிக் கொண்டிருந்தாள்.
மித்ரனுக்கு மெல்ல மூச்சு சீரானது.
‘இவங்களாவே ஒரு முடிவுக்கு வந்தா சரி.. என்னை விட்டுருங்க’ என்று நொந்து கொண்டான்.
“அப்படியா மித்ரா?” என்று முத்தரசி கேட்க, மீண்டும் தலையை ஆட்டி வைத்தான்.
“இது என்ன கேள்வி? அப்படித்தான்.. அன்னைக்கு வேணாம்னு சொல்லிட்டு போன பொண்ணு, திடீர்னு வந்து கல்யாணமும் பண்ணிக்கிறேன்னு சொல்லுறா. அப்பவும் டவுட் தான். என்ன தான் நடக்குதுனு.. ஆனா அப்ப இருந்தே சம்பூர்ணாவுக்கு உன்னை கல்யாணம் பண்ணுறதுல எந்த பிரச்சனையும் இல்ல. காரணம் இப்ப புரிஞ்சுடுச்சு.” என்று சாதனா பேசிக் கொண்டே போக, நர்மதா யோசனையோடு பார்த்தார்.
“இப்ப முடிவா என்ன தான் சொல்ல வர்ர? கல்யாண வேலைய ஆரம்பிக்கவா?” என்று நர்மதா மகனை பார்த்து கேட்க, அதற்கும் தலையாட்டினான்.
“ஆரம்பிங்கமா.. எனக்கு பிரச்சனை இல்ல”
“ஐ.. சூப்பர்.. நான் அவருக்கு சொல்லுறேன்” என்று துள்ளிக் கொண்டு ஓடினாள் சாதனா.
“நானும் வர்ரேன்” என்று முணுமுணுத்து விட்டு மித்ரனும் அறைக்குள் சென்று விட்டான்.
நர்மதா மாமியாரை பார்க்க, “எதுக்கு இப்படி மூஞ்சிய வச்சுருக்க? கல்யாண விசயம் பேசுறோம்.. கலகலனு இரு..” என்று அதட்டினார்.
“நல்ல விசயம் தான்.. சரி நீங்க அவங்க கிட்ட பேசுங்க.. ஃபோன போடுங்க.. என்னனு விவரமா கேட்போம்”
அப்போதே திருமண பேச்சு ஆரம்பித்தது. ஆளுக்கொன்றை பேசி விட்டு, கடைசியில் சம்பூர்ணா யோகமித்ரனை ஒன்றாக அமர வைத்து முடிவு செய்து விடலாம் என்ற நிலைக்கு வந்து சேர்ந்தனர்.
சம்பூர்ணா வீட்டுக்கு வந்ததும் விசயத்தை சொல்ல, “ம்ம்.. நாளைக்கு பேசலாம்.. அவங்கள இங்க வர சொல்லுங்க” என்றாள்.
“இந்த கல்யாணம் பிடிச்சு தான் பண்ணுறியா?” என்று அபர்ணா கேட்க, “யார பிடிச்சு?” என்று கேட்டு வைத்தாள்.
அபர்ணா முறைக்க, “பையன பிடிச்சு தான்.. பின்ன ஐயர பிடிச்சா பண்ணுவாங்க?” என்று சுதாராணி கேட்டு வைத்தார்.
“ஐயரு மட்டுமா? மண்டபத்தையும் தான் பிடிக்கனும்.. சமையலுக்கு கூட ஆள் பிடிக்கனும்..” என்று அவள் நக்கலடித்தாள்.
“கொழுப்பு.. வாய திறந்தா கொழுப்பாவே பேசுறது” என்று அபர்ணா தலையில் தட்டினார்.
சம்பூர்ணா தோளை குலுக்கி விட்டு, “நாளைக்கு பேசிக்கலாம்..செம்ம டயர்டு” என்று விட்டு எழுந்து சென்று விட்டாள்.
அடுத்த நாள் காலையே மித்ரனோடு குடும்பமாக கிளம்பி வந்து சம்பூர்ணாவின் வீட்டில் அமர்ந்தனர்.
வரவேற்பு விசாரிப்பு அனைத்தும் முடியவே பத்து நிமிடங்கள் கடந்தது. அனைத்தையும் பொறுமையாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள் சம்பூர்ணா.
எதுவுமே பிடிக்காமல் கடனே என்று சம்பூர்ணாவை முறைத்துக் கொண்டு அமர்ந்திருந்தான் மித்ரன். அதை கவனித்தும் கண்டு கொள்ளாமல் இருந்தாள்.
பேச்சு மெல்ல திருமண மண்டபம் பத்தரிக்கை வரை நீண்டது.
இருவரும் ஏற்கனவே தெரிந்தவர்கள் என்பதா,ல் நேரடியாக திருமணத்தை முடித்து விடலாம் என்றார் பாட்டி.
சுதாராணிக்கு பேத்தி மீண்டும் மனம் மாறி விடக்கூடாது என்ற கவலை. ஆனால் நர்மதா முறைப்படி நடத்த வேண்டும் என்று தீர்மானமாக சொன்னார்.
முத்தரசியின் உடல்நிலை பற்றி சாதனா சொன்னதும், “பாட்டிக்கு ரொம்ப அலைச்சல் வேணாம்மா.. கல்யாண வேலைய ஒரேடியா பார்த்துட்டா நல்லது” என்று புவனனும் சொல்லி வைத்தான்.
நர்மதா அதை ஏற்றுக் கொள்ள, இரு குடும்பத்தின் பழக்கவழக்கங்களை பேசினர்.
ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பேச்சு நீண்டு கொண்டிருக்க, சம்பூர்ணா அனைத்தையும் கவனமாக கேட்டுக் கொண்டிருந்தாள். மித்ரன் பிடிக்காதது போல் காட்டிக் கொண்டாலும் அவனுமே கவனித்தான்.
அவர்கள் பேசுவதை எல்லாம் பேசி முடித்து விட்டு சம்பூர்ணாவை பார்த்தனர்.
“உனக்கு எதுவும் சொல்லனுமாமா?”
“இல்ல பாட்டி.. என் சைட்ல ஆஃபிஸ்ல இருந்து ஆளுங்க வருவாங்க. அவ்வளவு தான்.. மித்ரனுக்கு ஃப்ரண்ட்ஸ் இருக்காங்க.. அவன கேளுங்களேன்”
அமைதியாக அவனை கோர்த்து விட்டாள்.
மித்ரன் பல்லைக்கடித்து கோபத்தை அடக்கினான். முடிந்தால் அவனது நண்பர்களை திருமணத்திற்கு அழைத்துப் பார் என்ற சவால். அவள் மிதப்பமாக பார்க்க மித்ரன் பார்வையை திருப்பி, “சில ஃப்ரண்ட்ஸ் வருவாங்க. பெருசா யாரும் வர மாட்டாங்க” என்று சமாளித்தான்.
“அப்ப அதுக்கு ஏத்த மாதிரியே சாப்பாட்டுக்கு சொல்லிப்போம்” என்று பேச்சை தொடர, சம்பூர்ணா மித்ரனை பார்த்தாள்.
மித்ரனின் பார்வையும் அவள் மீது விழ, நக்கலாக ஒரு முறை சிரித்தாள். அந்த சிரிப்பின் அர்த்தத்தை அவன் புரிந்து கொள்ளும் முன்பே, முகத்தை சாதாரணமாக மாற்றிக் கொண்டாள்.
“அடுத்த வாரம் மினிஸ்டர் வீட்டு ஃபங்சன் இருக்கு.. என் கூட வர்ரியா மித்ரு?” என்று கேட்டு வைத்தாள்.
“மித்ரு!” என்று சாதனா ஆச்சரியத்தோடு தன் கணவனை பார்த்து முணுமுணுத்தாள்.
புவனன் தானும் கவனித்ததாக தலையை மட்டும் ஆட்டி வைத்தான்.
எல்லோரின் பார்வையும் மித்ரன் பக்கம் திரும்பி விட, அவனால் நிம்மதியாக சம்பூர்ணாவை முறைக்கக் கூட முடியவில்லை.
நர்மதாவுக்கு இது பிடிக்கவில்லை. திருமணத்திற்கு முன்பே இருவரும் ஒன்றாக செல்வதா? நடக்காது. மகன் மறுத்து விட வேண்டும் என்று எதிர்பார்த்தார். அவனும் அதைத்தான் செய்தான்.
“இல்ல.. முடியாது.. எனக்கு ஒரு இன்டர்வியூ இருக்கு” என்று அவசரமாக வாய்க்கு வந்த காரணத்தை சொன்னான்.
“ஓ..” என்று நல்ல பிள்ளையாக தலையாட்டியவள் உடனே, “நீ ஏன் வெளிய வேலை தேடுற மித்ரு? பேசாம நம்ம கம்பெனிக்கே வந்துடேன்” என்று முதல் வெடியை வீசினாள்.
அது நேராக சென்று மித்ரனின் தலையிலேயே வெடித்தது. அவன் அதிர்ந்து பார்க்க, மற்றவர்களும் இதை எதிர்பார்க்கவில்லை.
“புவனனும் நம்ம கம்பெனில தான் இருக்காங்க.. நீயும் இருக்கலாம்.. என்ன சொல்லுற?”
அவள் புருவம் உயர்த்த, மித்ரனுக்கு கத்த வேண்டும் போல் இருந்தது. ஆனால் முடியாதே. மொத்த குடும்பமும் அவனை தானே பார்க்கிறது?
“இல்ல.. இருக்கட்டும்..” என்று அவன் சமாதானம் சொல்ல காரணம் தேட, சம்பூர்ணா இடைமறித்தாள்.
“ஒரு வேளை பொண்டாட்டி முதலாளியா இருக்கும் போது வேலை செய்ய கூடாதுனு எதாவது கொள்கையா?” என்று அடுத்த வெடியை வீசினாள்.
மித்ரன் பல்லைக்கடித்து முறைத்து வைத்தான்.
“அப்படினு நான் சொன்னனா?” என்று கேட்டு வைக்க, “அப்படி எதுவும் இல்லல? அப்புறம் என்ன?” என்று கேட்டு வைத்தாள்.
“இப்பதைக்கு எனக்கு வெளிய வேலை பார்க்க தான் பிடிச்சுருக்கு” என்று அழுத்திச் சொன்னான்.
“ஓ… சரி உன் இஷ்டம்” என்று விட்டாள்.
நர்மதாவும் சாதனாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். இவ்வளவு நேரம் தோன்றாத விசயம் இப்போது தோன்றியது. சம்பூர்ணா பணக்கார வீட்டுப் பெண். அவள் வாழும் முறை வேறு. அவளால் வந்து அவர்களது குடும்பத்தோடு வாழ முடியுமா?
“இன்டர்வியூ போயிட்டு வந்து சொல்லு.. நான் வெயிட் பண்ணுறேன்.. அண்ட் மினிஸ்டர் நேர்ல வந்து பத்தரிக்கை வச்சாரு.. போகாம இருக்கவும் முடியாது” என்றவள் எதோ யோசிப்பது போல் பாவனை செய்து விட்டு, “அத்த.. உங்களுக்கு எதுவும் பிரச்சனை இல்லையே?” என்று கேட்டாள்.
நர்மதா முதலில் விழித்து விட்டு, “இல்லையேமா.. ஏன் இப்படி கேட்குற?” என்று கேட்டார்.
“என்னை பார்க்க இந்த மாதிரி யாராவது வீட்டுக்கு வந்துட்டே இருப்பாங்க.. சிலர ஆஃபிஸ்ல வச்சு பார்க்குறது மரியாதை கிடையாது. மினிஸ்டர், தாசில்தார்னு நிறைய ஹையர் அஃபீஸியல் பர்சன்ஸ் வருவாங்க. வீட்டுல தான் வச்சு பேசனும்.. கல்யாணத்துக்கு அப்புறமும் நான் வேலைய பார்க்கனும்.. இவங்க எல்லாரும் பிஸ்னஸுக்கு வேண்டியவங்க. அதான் ஒரு பிரச்சனையும் இல்லையேனு கேட்டேன்”
சுற்றி வளைத்து விசயத்துக்கு வந்து விட்டாள். வெளிப்படையாக இல்லாவிட்டாலும் நர்மதாவின் முகத்தில் ஒரு அதிர்ச்சி தெரிந்தது.
அவர்கள் இருப்பது இதைப்போன்ற பெரிய வீடு கிடையாது. வாடகைக்கு இருக்கும் சிறிய வீடு தான். அந்த வீட்டில் இது போன்ற ஆட்களை வரவேற்க வேண்டுமா?
சாதனாவும் கூட பேச்சற்று கணவனை பார்த்தாள். இது போன்ற ஆட்களோடு பழகுபவள் எப்படி அவளோடு ஒரே வீட்டில் வந்து இருப்பாள்?
“அதுனால என்னமா? பார்த்துக்கலாம்.. இப்பவே ஏன் எல்லாத்தையும் பேசி கிட்டு?” என்று சுதாராணி இடையே புகுந்து பேச, சொல்ல வேண்டியதை சொல்லி விட்டதால் சம்பூர்ணா நல்ல பிள்ளை போல் தலையாட்டி வைத்தாள்.
மித்ரனுக்கு அங்கு அமர்ந்திருக்கவே பிடிக்கவில்லை. எழுந்து ஓடிவிடலாம் போல் இருந்தது. முத்தரசியும் சுதாராணியும் மேலும் விவரங்களை பேச, அபர்ணா அவர்களோடு கலந்து கொள்ள, இதில் பாதிக்காதது புவனன் மட்டும் தான்.
இரு வேறு உலகில் பிறந்து ஒரே கூரையில் வாழ வேண்டும் என்பது தானே திருமண பந்தத்தின் முக்கியமான படி!
வாசம் வீசும்.

