Loading

மித்ரன் அன்று ஒரு நிறுவனத்தின் நேர்காணலுக்குச் சென்று விட்டு சந்தோசமாக வீடு திரும்பினான்.

“என்னடா நல்லா போச்சா?” என்று புவனன் கேட்க, “ஆமா.. வேலை கண்ஃபார்ம்னு நினைச்சுக்கோ” என்றவன் சந்தோசமாக அறைக்குள் சென்று உடை மாற்றிக் கொண்டு வந்தான்.

“இந்த வேலைய எப்ப மித்ரா விடுவ?” என்று சாதனா கேட்டாள்.

“அடுத்த வேலை கிடைச்சதுமே தூக்கி போட்டுருவேன் அண்ணி. தினமும் அந்தாளு மூஞ்சிய பார்க்கவே முடியல.. சலிப்பா இருக்கு”

“நானும் வீட்டுல இருக்கதுக்கு எதாவது வேலைக்கு போகலாம்னு நினைக்கிறேன்.. ஏன்ங்க.. நான் வேலைக்கு போகவா?”

“போயிட்டு வா.. எனக்கொன்னும் இல்ல”

“அத்த நான் வேலைக்கு போகவா?”

“என்ன திடீர்னு வேலைக்கு போகனுங்குற?” என்று கேட்டுக் கொண்டே நர்மதா வந்து அமர்ந்தார்.

“உங்க பையன் எனக்கும் சேர்த்து சம்பாதிச்சு போட மாட்டாராம்.. எனக்கு நானே சம்பாதிச்சுக்கனுமாம்”

புவனன் அதிர்ந்து போய் நிமிர, மித்ரன் சிரிப்பை அடக்கிக் கொண்டு வேடிக்கை பார்த்தான்.

“ஏய் நான் எப்ப சொன்னேன்?”

“இப்ப தான சொன்னீங்க?”

“எப்போ?”

“நான் வேலைக்கு போனா உங்களுக்கொன்னுமில்லனு.. நல்ல புருஷன்னா என்ன சொல்லிருக்கனும்? உனக்கெதுக்கு சிரமம்? வீட்டுல இருமா.. உனக்கும் சேர்த்து நான் சம்பாதிக்கிறேன்னு சொல்லிருக்கனும்.. அப்படித்தான மித்ரா?”

“பாயிண்ட் அண்ணி…” என்று அவன் ஒத்து ஊதினான்.

“ஆண்டவா.. நீ சப்போர்ட்டுக்கு வராதடா.. தெரியாத்தனமா வாயத்திறந்துட்டேன்.. என்னை விட்டுருமா..”

“நீங்க என்னை வேலைக்கு போகச் சொல்லிட்டீங்க.. செல்லாது.. அத்தை நான் வேலைக்கு போறேன்” என்று கோபமாக நர்மதாவிடம் சொன்னாள்.

“எந்த வேலைக்குமா போவ?” என்று நர்மதா சிரிப்போடு கேட்க, “கலெக்டர் வேலை எதாவது காலியா இல்லாமலா போகும்?” என்று சாதனா நக்கலாக கேட்க, மித்ரனுக்கு சிரிப்பு தான் வந்தது.

“அதே தான் அண்ணி. அப்படி கலெக்டர் வேலை இல்லனா நேரா எலக்ஸன்ல நின்னு மினிஸ்டர் பதவியில உட்கார்ந்துடுங்க அண்ணி.. ஜாலியா இருக்கும்”

“ஏன்டா டேய்..” என்று புவனன் சிரிக்க, “ஏன் எனக்கு மினிஸ்டர் ஆக தகுதியில்லையா?” என்று சாதனா எகிறினாள்.

“அம்மா தாயே.. நீ இங்கிலாந்துக்கே ராணி ஆனாலும் சரி.. என்னை குடையாத.. காலையில வாயிருக்காம உன் கிட்ட சண்டை போட்டதுக்கு எனக்கு நல்லா வேணும்” என்று புவனன் சரணடைந்தான்.

“ஓ.. இதான் மேட்டரா.. அண்ணி சீக்கிரமா மன்னிக்காதீங்க.. நாம மினிஸ்டர் ஆகுறோம்.. இவன உங்களுக்கு கார் கதவ திறந்து விட வைக்கிறோம்..” என்று மித்ரன் போர் கொடியை தூக்கிப் பிடிக்க, சாதனாவும் ஒத்து ஊத ஆளுக்கொன்றாக பேசி வீடு கலகலப்பாக இருந்தது.

தூங்கி அப்போது தான் எழுந்த பாட்டிக்கு இதைக்கேட்டு சந்தோசமாக இருந்தது.

இதே போல் மித்ரனுக்கும் திருமணம் நடந்து, ஒரு மருமகள் வந்து விட்டால் நலம் என்று தோன்றியது.

அதே நேரம் சம்பூர்ணாவின் நினைவு வந்தது. சாதனாவை போல் சம்பூர்ணா இல்லை. அவள் ஆளுமையானவள். ஆனால் அவளிடம் பணிவு இருந்தது. சம்பூர்ணா இப்படி இறுகிப்போயிருக்கும் காரணம் என்னவென்று சுதாராணி நேற்றுத்தான் சொன்னார்.

கேட்டதிலிருந்து சம்பூர்ணாவின் மீது பரிதாபம் பொங்கியது. அவள் பிரச்சனையில் இருக்கும் போது, மித்ரனிடம் எதோ சண்டை போட்டிருக்கிறாள் போலும்.

இவ்வளவு வருடங்கள் கழித்தும் அதையே பிடித்துக் கொண்டு தொங்க வேண்டுமா?

சம்பூர்ணா போட்ட சபதத்தை பற்றி இன்னும் நர்மதாவிடம் சொல்லவில்லை. சுதாராணியிடம் சொன்ன போது ஆச்சரியப்பட்டார்.

“அவ அவ்வளவு சீக்கிரம் இப்படி வாய விடுறவ கிடையாது. ரெண்டு தடவ மித்ரன கல்யாணம் பண்ணிக்கிறேன்னு வாய விட்டுருக்கா. கண்டிப்பா செய்யாம விட மாட்டா..” என்ற போது, சுதாராணிக்கும் இது நல்லதா? கெட்டதா? என்று புரியவில்லை.

“ஆனா உன் பேத்தி தான் என் வீட்டுக்கு வருவானு என் மனசு சொல்லுது.. அது நான் கண்ணு மூடுறதுக்குள்ள நடந்தா நல்லா இருக்கும்”

“இப்படி பேசாதனு சொல்லுறேன்ல?”

“காடு வாங்குது.. வீடு போங்குது சுதா.. இதுக்கு மேல வாழ்ந்து என்ன சாதிக்க போறேன்? பேரன் கல்யாணத்த பார்த்துட்டு நிம்மதியா கண்ண மூடுனா போதும்.. அவ்வளவு தான்”

“நடக்கும் நடக்கும்.. சீக்கிரமே கல்யாணம் நடக்கும். நடத்துவோம்.. நான் பூர்ணா கிட்ட பேசுறேன்” என்று வாக்களித்தார்.

அவளிடம் பொறுமையாக பேச வேண்டும் என்று சுதாராணி காத்திருந்தார்.

ஆனால் பேசும் நேரம் தான் சீக்கிரம் வரவே இல்லை. சம்பூர்ணா வேலைகளை கவனித்துக் கொண்டு வீட்டுக்கு தாமதமாக வர ஆரம்பித்தாள்.

“எதுக்குடி இப்படி ஓடி ஓடி வேலை செய்யுற?” என்று அபர்ணா அதட்ட, “வீட்டுல இருந்தா தான் நீங்க மிரட்ட ஆரம்பிச்சுடுறீங்களே.. அதான் ஓடுறேன்” என்று விட்டாள்.

இங்கே மித்ரனின் பாடு திண்டாட்டமானது. வேலையை விடப்போவதாக சொன்னதிலிருந்து மேனேஜர் தொட்டதெற்கெல்லாம் அவன் மீது பழி சொன்னார். மூன்று மாதம் வரை காத்திருக்க தயாராக இல்லை. உடனே அவனை துரத்தி விட நினைத்தார்.

சம்பூர்ணாவின் ஒப்பந்தம் வேறு கையை விட்டுப்போனது. காரணம் என்னவென்று மேனேஜருக்குத் தெரியவில்லை. எம்டி அதை சொல்லவும் இல்லை. ஆனால் சம்பூர்ணாவுக்கும் மித்ரனுக்கும் எதோ தொடர்பு இருப்பது மட்டும் உண்மை.

ஒரு மாதம் வரை பொறுத்துப் பார்த்த மித்ரன், இதற்கு மேல் முடியாது என்று மொத்தமாக வேலையை விட்டு விட்டு கிளம்பி விட்டான்.

அன்று மாலை வீட்டில் அமர்ந்திருந்தவன் முகத்தில் எரிச்சல் மட்டுமே இருந்தது.

“என்ன மித்ரா? கோபமா இருக்க?” என்று சாதனா கேட்க, “இது வரை போன எல்லா கம்பெனிலயும் என்னை செலக்ட் பண்ணதா சொல்லிட்டு, கடைசியில வேற ஆள செலக்ட் பண்ணிடுறாங்க. கடுப்பா இருக்கு அண்ணி” என்று சலித்தான்.

“பொறுமையா இரு.. நல்ல வேலையே கிடைக்கும்” என்ற நர்மதா இரவு சமையலுக்கான வேலையில் இருந்தார்.

“நல்ல கம்பெனில சீக்கிரம் வேலை கிடைக்காது. அங்க ஆளுங்க ரிசைன் பண்ணி போனா தான ஆள் சேர்ப்பாங்க? இல்லனா வேற ஊருக்கு போகனும்னு சொல்லுறாங்க.. ஒரே குழப்பத்துல இருக்கேன்”

“வேற ஊர்லாம் வேணாம் மித்ரா.. இப்போதைக்கு இங்கயே பாரு.. கல்யாணம் பண்ணிட்டு பொண்டாட்டியோட போனா கூட சரி”

“நீங்க வேற ஏன்மா?”

“இல்லடா.. நேத்து ஒரு பொண்ண பத்தி சொன்னாங்க. விசாரிச்சு உனக்கு பேசி முடிக்கலாம்னு பார்க்குறேன்”

மித்ரனுக்கு சம்பூர்ணாவின் பேச்சு தலைக்குள் வந்து போனது.

“என்னவோ.. நான் கொஞ்ச நேரம் தூங்குறேன்.. தலை வலிக்குது” என்று விட்டு எழுந்து அறைக்குள் சென்றான்.

படுத்து கைபேசியில் சமூக வலைதளங்களை பார்த்துக் கொண்டிருக்க, சம்பூர்ணாவிடமிருந்து அழைப்பு வந்தது.

“இப்ப தான் நினைச்சேன்.. பேய் மாதிரி வந்துட்டா” என்று முணுமுணுத்துக் கொண்டு அழைப்பை ஏற்றான்.

“என்ன?” என்று எடுத்த எடுப்பிலேயே எகிறினான்.

“நாளைக்கு நான் உன்னை பார்க்கனும்”

“நான் உன் வீட்டு நாயா? நீ பார்க்கனும்னதும் ஓடி வந்து நிக்க? அதெல்லாம் வர முடியாது..”

“நீ வர்ர.. நீ வரலனா நான் வருவேன். உன் வீட்டுக்கே வந்து கல்யாண விசயத்த பேசுவேன்.”

“பேசுனா பேசிக்க போடி”

“அதோட காலேஜ் விசயத்தையும் பேசுவேன்”

“அது உனக்கு தான் அசிங்கம்.. எனக்கில்ல”

“நான் ப்ளேட்ட திருப்பி போடுவேன்.. காலேஜ்ல நான் உன்னை ஒன் சைடா லவ் பண்ணேன்னு சொல்லி கண்ணீர் விடுவேன்”

“நீ? என்னை? அசிங்கமா இல்ல கேட்கும் போதே?”

“இருக்கு தான்..”

“அப்ப மூடிட்டு உன் வேலைய பாரு”

“நான் பார்க்குறது இருக்கட்டும்.. உனக்கு வேலை கிடைச்சதா?”

ஒரு நொடி அதிர்ந்தவன் பிறகு பல்லைக்கடித்தான்.

“நீ தானா அது?”

“உன்னை பெரிய முட்டாள்னு நினைச்சேன். ஆனா உடனே புரிஞ்சுக்கிட்ட.. ஆச்சரியம் தான்”

“என் வேலையில நீ ஏன்டி தலையிடுற?”

“என்னோட வருங்கால கணவன் வேலையில நான் தான தலையிடனும்?”

“எதாச்சும் சொல்லிடுவேன். போயிடு.. நீ நினைக்கிற எதுவுமே நடக்காது”

“நடக்கனும்.. நடக்கும்.. நீயா என்னை தேடி நாளைக்கு ஆஃபிஸ் வரனும். இல்லனு வை.. உன் அண்ணன தேடி போலீஸ் ஸ்டேஷன் போக வேண்டி வரும்”

“ஏய்.. அவன எதாவது பண்ண.. அவ்வளவு தான் சொல்லிட்டேன்” என்று கொந்தளித்தான்.

“பண்ணாம இருக்கனும்னா நீ வா..”

மித்ரனுக்கு உடல் மொத்தமும் கோபத்தில் எரிய ஆரம்பித்தது.

“அவன் உன் மேல அவ்வளவு மரியாதை வச்சுருக்கான்”

“ஓஹோ… பட் எனக்கு அந்த மரியாதை வேணாம்.. நீ தான் வேணும்.. நாளைக்கு பார்ப்போம்” என்று அழைப்பை துண்டித்து விட்டாள்.

மித்ரனுக்கு வந்த கோபத்திற்கு கைபேசியை தூக்கிப் போட்டு உடைக்க தோன்றியது. பிறகு அருகே போட்டு விட்டு படுத்து விட்டான்.

கோபத்தில் தலை வலி உட்சத்தை தொட்டது.

“ச்சை.. தெரியாம இவள பார்த்து தொலைச்சுட்டேன்.. என் உசுர வாங்குறா” என்று தலையில் அடித்துக் கொண்டான்.

இரவு புவனனை பார்த்த போது எச்சரிக்கலாமா? என்று நினைத்தான். ஆனால் சம்பூர்ணாவின் மிரட்டலுக்காக புவனனை கலவரப்படுத்தவும் தோன்றவில்லை.

அப்படியே அவள் புவனன் மீது எதாவது பொய் வழக்கு போட்டாலும், அவனை காப்பாற்றிக் கொள்ள முடியும் என்று நினைத்தான்.

ஏகப்பட்ட குழப்பத்தோடு இரவை கடந்தவன், தாமதமாக உறங்கி தாமதமாக எழுந்தான்.

சாதனாவும் பாட்டியும் எதோ ஒரு படத்தை பார்த்துக் கொண்டிருக்க, நர்மதா சமைத்து முடித்த களைப்பில் மீண்டும் உறங்கச் சென்று விட்டார்.

மித்ரன் இருந்த காபியை எடுத்துக் குடித்து விட்டு அறைக்குள் செல்ல, “மித்ரா சாப்பிடல?” என்று பாட்டி கேட்டார்.

“இல்ல பாட்டி.. பசிக்கல” என்றவன் கைபேசியை எடுத்துப் பார்க்க, அதே நேரம் சம்பூர்ணாவிடமிருந்து செய்தி வந்தது.

“உன் அண்ணன் எங்க இருக்கான் தெரியுமா?” என்று கேட்டு வைத்திருந்தாள்.

மித்ரனின் இதயம் நின்று துடித்தது. அவசரமாக புவனனின் எண்ணை தேடி அழைத்தான். ஒருமுறை முழுதாக அழைப்பு சென்று நின்றது. மித்ரனுக்கு நொடிக்கு நொடி பதட்டம் கூடியது.

“எடுத்து தொலைடா” என்று மீண்டும் அழைத்தான்.

இந்த முறை புவனன் அழைப்பை ஏற்றான்.

“புவா எங்க இருக்க?”

“போலீஸ் ஸ்டேஷன்ல இருக்கேன்டா..”

“ஏய் என்ன ஆச்சு?”

“அப்புறம் பேசுறேன்” என்று புவனன் அழைப்பை துண்டித்து விட, மித்ரனுக்கு அதிர்ச்சியில் வியர்த்து விட்டது.

உடனே பைக் சாவியை எடுத்துக் கொண்டு வெளியே வந்தான். சாதனாவையும் பாட்டியை ஒரு நொடி பார்த்தவன், “நான் ஃப்ரண்ட்ட பார்க்க போயிட்டு வந்துடுறேன். வந்து சாப்பிடுறேன்” என்று சாதாரணமாக சொல்லிக் கொண்டே வெளியேறி விட்டான்.

“சீக்கிரமா வா.. வெயில்ல ரொம்ப சுத்தாத” என்ற குரலுக்கு தலையை மட்டுமே ஆட்டி விட்டு பைக்கை எடுத்துக் கொண்டு கிளம்பி விட்டான்.

பிடிவாதத்தின் குணமே பிடித்தவர்களிடம் பிடித்தமாகவும் பிடிக்காதவிர்களிடம் தொல்லையாகவும் தெரிவது தான்.

வாசம் வீசும்.

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 19

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
10
+1
0
+1
3

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்