
சம்பூர்ணா அலுவலகம் வந்து சேர்ந்து அறைக்கதவை அடைத்து விட்டு, நாற்காலியில் விழுந்தாள். சில நிமிடங்கள் மித்ரன் பேசியதை தனக்குள் ஓட்டிப்பார்த்தாள். அவளால் ஜீரணிக்கவே முடியவில்லை.
எவ்வளவு தான் இருவரும் சண்டை போட்டுக் கொண்டாலும், மித்ரன் அவன் மீது வெறுப்பை உமிழ்ந்தாலும், அதை அவள் பெரியதாக எடுத்துக் கொண்டது இல்லை. அவனை அவள் பெரிதாக நினைத்ததும் இல்லை.
இன்று அவன் அவனது பாட்டியிடம் சொன்ன வார்த்தைகள்? அவள் செத்தால் ஆண்கள் காட்கப்படுவார்களாமா? முதலில் அவனை அவன் காப்பாற்றிக் கொள்கிறானா? பார்க்கலாம்.
கோபத்தில் எடுத்த முடிவாக இருந்தாலும், இப்போது அதில் திடமாக நின்றாள். அவளை குடும்பப் பெண் இல்லை என்று சொன்ன போது கூட தாங்கிக் கொண்டாள். ஆனால் அவன் இதுவரை பேசியது எல்லாம் ஒன்று அவளிடம் பேசுவான். இல்லை என்றால் அவளோடு பழகும் ஆண்களிடம் பேசுவான். முதல் முறையாக அவனது குடும்பத்தினரிடம் பேசிக் கேட்டு கடுப்பாகி விட்டாள்.
அன்று திருமணம் வேண்டாம் என்று சொன்ன போது, சம்பூர்ணாவே அனைத்தையும் சொல்லி விட நினைத்தாள். அவன் தானே வேண்டாம் என்றான்? அதனால் தானே அமைதியானாள். இன்று அவளை இவ்வளவு அசிங்கப்படுத்த அவனுக்கு என்ன உரிமை வந்தது?
கைபேசியை எடுத்து ஒரு எண்ணை தேடினாள். பிரைவேட் டிடெக்டிவ். மித்ரனின் முழு விவரமும் வேண்டும் என்று கேட்டு விட்டு வைத்தாள்.
‘மித்ரு.. என்னோட பொறுமைய சோதிச்சுட்டல? உன் மேல தப்பில்லனு உன்னை விட்டுருக்க கூடாது’ என்று நினைத்தவள், மனதில் பழி வெறி பற்றி எரிந்தது.
கல்லூரி நாட்களை நினைத்தவளுக்கு தொண்டை கசந்தது. யாருமே வேண்டாம் என்று தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருந்தவளை பிடித்து இழுத்து, முழுதாய் உடைத்த பெருமை எல்லாம் விஷாலுக்கும் மித்ரனுக்கும் மட்டுமே சேரும்.
விஷால்.. எவ்வளவு நல்லவனாக நடித்தான்? அவளை எவ்வளவு தூரம் நம்ப வைத்தான்? அவளும் தான் நம்பித் தொலைத்தாளே.
தேர்வு முடிந்து அவன் காதலை சொன்ன போது வானில் பறந்தாளே. அந்த இறகுகளின் ஆயுட்காலம் வெறும் ஒரு வாரம் தான் என்று தெரியவில்லையே. அவ்வளவு ஆனந்தமாக பறந்தவளுக்கு தரையை நினைவு படுத்த விஷால் தயாராக இருந்தான்.
வாழ்வின் பெரிய அடியை சந்தித்து, யார் முகத்தையும் பார்க்க பிடிக்காமல் பெயரில்லா ஒரு கல்லூரியில் சேர்ந்து படிக்க நினைத்தவளை, சுதாராணியும் அபர்ணாவும் அனுப்ப மறுத்தனர். ஆனால் அவளது தாத்தா சம்மதித்தார்.
அவளது படிப்பு கெடக்கூடாது என்பதற்காக கல்லூரியை மாற்றி அனுப்பி வைத்தார். அவளுக்கென வீடு ஒன்றை பிடித்து, கவனிக்க ஆட்களையும் நியமித்தார்.
படிப்பை முடித்துக் கொண்டு வந்து தொழிலை கவனிக்க வேண்டும் என்பது தவிர, அவள் மனதில் அப்போது ஒன்றுமே இல்லை. அந்த எண்ணத்தோடு வாழ்ந்தவளுக்கு போலியாய் ஒரு உலகத்தை காட்டியது விஷால் தான்.
“விஷு.. மித்ரு..” என்று துள்ளிக் கொண்டு அவர்களிடம் ஓடிய போது, அவள் வாழ்வில் சந்தோசம் மீண்டும் கிடைத்து விட்டதாக நினைத்தாளே.
அவர்களும் அவளை அப்படித்தான் உணர வைத்தார்கள். பொய் மானை நம்பி பின்னால் ஓடுவது அறியாமல் ஓடிக் கொண்டிருந்தாள்.
அந்த மான் ஓநாயாக உருவெடுத்து அவளை அழிக்க வரும் வரை கூட, அவளால் வித்தியாசத்தை கண்டு பிடிக்க முடியவில்லை.
மித்ரனோடு அவள் எவ்வளவு நன்றாக பழகினாலும், விஷால் அவள் மனதில் தனி இடம் பிடித்தான்.
அவனாக காதலை சொன்ன போது மனம் திறந்து ஏற்றுக் கொண்டாள். தேர்வும் முடிந்து போனதால் தினம் தினம் வெளியே சந்தித்தனர். ஊர் சுற்றினர். கதைகள் பேசினர். காதலித்தனரா? அவளுக்கு இப்போது வரை அதற்கு பதில் கிடைக்கவில்லை.
அந்த ஒரு வார விடுமுறையும் முடிந்தது. இன்னும் ஒரு நாளில் கல்லூரி திறக்க இருந்தது. அடுத்த செமஸ்டருக்காக தயாராக இருக்கும் போது, விஷால் அவளது வீட்டை காட்டச் சொல்லி கேட்டான்.
அவளும் சம்மதித்தாள். அவன் வரும் போது வேலைக்காரர்கள் இருக்க வேண்டாம் என்றான். காதலர்கள் பேசிக் கொள்ளும் போது ஒட்டுக் கேட்பார்கள் என்றான். எங்காவது வெளியே அனுப்பி விடு.. தனிமையே இனிமை என்றான்.
நம்பினாள். அனைத்தையும் நம்பினாள். ஒரு நொடி கூட அவன் மீது சந்தேகமே வரவில்லை. அவன் சொன்னதை எல்லாம் செய்யத்தயாரானாள். வேலைக்கு இருந்தவர்களை வேலை சொல்லி வெளியே துரத்தி விட்டாள்.
விஷாலை வீட்டுக்கு அழைத்து வந்தாள். அனைத்தையும் சுற்றிக் காட்டினாள். அவன் பேசிய அனைத்துக்கும் மயங்கினாள். அடுத்து நடந்தது தான் அவளுக்கு பிடிக்கவில்லை.
அவன் முத்தமிட வந்த போது விலகினாள். பெண்ணின் பாதுகாப்பு உணர்வு அவ்வளவு சீக்கிரம் அதை ஏற்க விடவில்லை. எவ்வளவு தூரம் ஹார்மோன்கள் வேலை செய்தாலும், சில நேரங்களில் அறிவு ஆபத்தை உணர்ந்து காப்பாற்ற வந்து விடும்.
அன்றும் அவளை அறிவு காப்பாற்றியதா? அல்லது அபர்ணாவின் அறிவுரை காப்பாற்றியதா? தெரியாது. ஆனால் மறுத்தாள். அவளது மறுப்பு விஷாலை கோபப்படுத்தியது. முதலில் பேசிப் பார்த்தான். அவள் மசியவில்லை என்றதும் கோபித்துக் கொண்டான்.
சம்பூர்ணா யாரையும் சமாதானம் செய்து பழக்கமில்லாதவள். வீட்டில் செல்ல பெண்ணாக வளர்ந்தவள். அவனை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் பதிலுக்கு கோபம் கொண்டாள். அது விஷாலுக்குள் ஒளிந்து கிடந்த மிருகத்தை தூண்டி விட்டது.
அவள் தானாக கொடுக்க நினைத்ததை பலமாக பறிக்க நினைத்தான். அவள் அதிர்ந்து பார்த்த போது கொடூரமாக சிரித்தான்.
“உன்னை லவ் பண்ணுறது கல்யாணம் பண்ணுறதுக்குனு நினைச்சியா? ஒரு கிஸ் கேட்டா கூட கல்யாணத்துக்கு அப்புறம்ங்குற? உன்னை யாரு கல்யாணம் பண்ணுவா? உன் கூட சுத்துனதே இதுக்கு தான். நீயெல்லாம் குடும்பத்துக்கு தகுதி இல்லாதவ. பணமும் அழகும் இருந்தா, உன் பேக்ரவுண்ட்ட மறந்து உன்னை லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்குவாங்கனு நினைப்பா? உன் அப்பா விசயம் தெரிஞ்சப்புறம், உன் பணத்துக்காக வேணா எவனாச்சும் வருவான். லவ் ? அதெல்லாம்…” என்றவனின் வாயில் ஓங்கி ஒரு குத்து விட்டிருந்தாள்.
வலியை அவளால் எலும்பில் உணர முடிந்தது. அதே வலியை விஷாலும் அவன் முகத்தில் உணர்ந்தான்.
“உன்னை எவ்வளவு நல்லவன்னு நினைச்சேன்.. வெளிய போடா” என்று கண்ணீரோடு கத்தினாள்.
விஷாலுக்கு வெறி பிடித்து விட்டது. தனியாக மாட்டிக் கொண்டவளை அவன் இச்சைக்கு இலக்காக்க நினைக்க, அவள் கத்தி துடித்தாள்.
அதிக நேரம் சம்பூர்ணாவை தனியே விடக்கூடாது என்று தாத்தா சொல்லியிருந்ததால், வேகமாக திரும்பி வந்த வேலைக்காரன் சத்தம் கேட்டு தன்னிடமிருந்த சாவியை கொண்டு கதவை திறந்து உள்ளே சென்றான்.
நடந்து கொண்டிருந்த கோரமான காட்சியை கண்டு வந்த கோபத்தில் விஷாலை இழுத்து அடித்து உதைத்து, பல்லை உடைத்தான். விஷாலால் எதிர்த்து போராட முடியவில்லை. சம்பூர்ணா துடித்து அழுது கொண்டு ஓரமாக அமர்ந்து விட்டாள்.
உதை வாங்க முடியாமல் விஷால் வேலைக்காரனை தள்ளி விட்டு வெளியே ஓடி விட்டான்.
சம்பூர்ணாவின் அத்தனை சந்தோசமும் அன்றோடு அழிந்து போனது. தாத்தாவுக்கு விசயம் தெரிய, அவர் மனைவியிடமும் மருமகளிடமும் சொல்லவில்லை.
ஏற்கனவே சம்பூர்ணாவின் தந்தை செய்த காரியத்திலிருந்து அப்போது தான் தேறிக் கொண்டிருந்தனர். பேத்திக்கு நடந்தது தெரிந்தால் தாங்க மாட்டார்கள் என்று மறைத்து விட்டார்.
சம்பூர்ணாவை தேற்றி பாதுகாப்புக்கு மேலும் இரண்டு ஆட்களை போட்டு வைத்தார். ஒரு வாரம் வரை கல்லூரிக்கு செல்லாமல் வீட்டில் அடைந்து கிடந்தவள், மருத்துவரின் அறிவுரையை கேட்டு மீண்டும் கல்லூரிக்குச் சென்றாள்.
அங்கு விஷால் வேறு விதமாக கதையை பரப்பி விட்டிருந்தான். சம்பூர்ணா அவனை காதலிப்பது போல் நடித்தாளாம். அவனை வீட்டுக்கு வர வைத்து வேலைக்காரர்களை கொண்டு அடிக்க விட்டாளாம்.
“நான் எவ்வளவு பெரிய பணக்காரி.. எனக்கு நீ சமமா? என் கிட்ட லவ் சொன்னா ஏத்துக்குவேன்னு நினைப்பா?” என்று கேட்டு சிரித்தாளாம்.
அவனை குற்றுயிராக்கி தெருவில் போட்டு விட்டார்கள். உயிர் தப்பியதே பெரிய விசயம் என்று அவன் கண்ணீர் விட்டு சொன்ன கதையை, மித்ரன் முதல் அனைவருமே நம்பி விட்டனர்.
சம்பூர்ணா விடம் இதை சொல்லி மித்ரன் நியாயம் கேட்ட போது, அவளுக்கு மித்ரனின் மீது இருந்த மரியாதையும் காணாமல் போனது.
அவன் சொன்ன எதையுமே மறுக்காமல், “ஆமா.. அப்படித்தான்.. நான் பணக்காரி தான்.. என் கிட்ட நீயும் பேசாத” என்று முகத்தில் அடிப்பது போல் பேசி விட்டுச் சென்றாள்.
தாத்தாவிடம் விஷாலை ஒன்றுமே செய்ய வேண்டாம் என்று சொல்லியிருந்தாள். நடந்ததை வெளியே சொல்ல அவமானமாக இருந்தது. ஆனால் இப்படி அவதூறு கிளப்பியவனை தினமும் பார்க்கக்கூட பிடிக்கவில்லை.
அவள் கல்லூரியை விட்டு போக மாட்டாள். போக வேண்டிய அவசியமும் இல்லை. அதனால் விஷாலை துரத்தச் சொல்லி கேட்டாள்.
தாத்தா சத்தமில்லாமல் அதை செய்து விட, விஷால் ஒரே மாதத்தில் வெளியேறி விட்டான்.
அதன் பிறகு வாழ்க்கை நிம்மதியாக தான் இருந்தது. மித்ரனின் தொல்லை மட்டும் தான் அடிக்கடி இருந்தது. அவனோடு சண்டை போடுவதை தவிர தன் வேலையை மட்டுமே பார்த்தாள். எல்லோருக்கும் அவள் திமிர் பிடித்தவளாக தெரிந்தாள். காதலை சொன்ன குற்றத்திற்காக ஒருவனை அடித்துக் கொல்லப் பார்த்த அரக்கியாக தெரிந்தாள். சம்பூர்ணா யாரையும் திருத்தவில்லை. யாரையும் கவனிக்கவில்லை. அதன் பிறகு யாரும் நெருங்கவே இல்லை.
மீண்டும் மித்ரனை நேருக்கு நேர் அதுவும் செந்திலின் நண்பனாக சந்தித்த போது, அவளுக்கு சிரிப்பு வந்தது.
வாழ்க்கையில் சிலரை அவளால் மறந்து வாழவே முடியாது போலும். இன்று வரை மித்ரன் விஷாலை தான் நம்பிக் கொண்டிருக்கிறான். சம்பூர்ணா திமிர் பிடித்தவள். அவளது பணத்திமிரில் ஆண்களின் காதலை காலில் போட்டு மிதிப்பவள்.
திருமணம் செய்ய தகுதியே இல்லாதவள். யாரையும் மதிக்காதவள். முக்கியமாக அவனது நண்பர்களில் வாழ்வை அழித்தவள்.
அவளுக்கு நடந்ததை அவள் வாய் விட்டுச் சொல்ல தயாராக இல்லாததால், அத்தனை பழியையும் ஏற்றுக் கொண்டாள். அவர்களுக்கு விளக்கம் தர வேண்டிய அவசியமில்லை என்று நினைத்தாள். ஆனால் மித்ரன் அவள் வாழ்வில் இத்தனை முறை குறுக்கிடுவான் என்று எதிர்பார்க்கவில்லை.
‘உன் ஃப்ரண்ட் வாழ்க்கைய அழிச்சேன்ல? ஃபைன்.. அத விட அதிகமா உன் வாழ்க்கைய அழிக்கிறேன்.. முடிஞ்சா காப்பாத்திக்க மிஸ்டர் யோகமித்ரன்’ என்ற வெறியோடு நினைத்தவள், அவனை என்ன செய்யலாம்? என்று அப்போதே யோசிக்க ஆரம்பித்தாள்.
வாசம் வீசும்.


Thoorigai Premium Membership