Loading

முத்தரசியை மொத்த குடும்பமும் சேர்ந்து வீட்டில் வைத்து கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொண்டிருக்க, ஊரிலிருந்து திருவாசகம் ஒரு முறை வந்து பார்த்து விட்டுச் சென்றான். அப்படியே ஊர் நிலவரங்களையும் பாட்டி கேட்டுத் தெரிந்து கொண்டார். ஊருக்குச் செல்ல வேண்டும் என்ற ஆசை அவருக்கு இருந்தாலும் யாரும் அதற்கு சம்மதிக்கவில்லை. அதைத்தவிர நாட்கள் நல்ல முறையிலேயே கடக்க ஆரம்பித்தது.

மித்ரனும், வேறு வேலையை விடாமல் தேடிக் கொண்டிருக்க, புவனன் தனக்கு தெரிந்த நிறுவனங்களை பற்றிச் சொல்லி வைத்தான். எந்த வேலையும் அவனுக்கு பிடிக்கவே இல்லை. அவனது அனுபவத்திற்கான வேலை தான் அவனுக்கு வேண்டும்.

அன்று முத்தரசியும் மித்ரனும் மட்டும் வீட்டில் இருக்க, புவனன் சாதனாவோடு மாமியார் வீட்டுக்குச் சென்றிருந்தான்.

நர்மதா அருகே இருக்கும் மார்க்கெட் சென்று விட்டார். மித்ரன் பாட்டிக்கு துணையாக இருந்து கொண்டே, ஒரு பாடலை ஓட விட்டு உடன் சேர்ந்து பாடியபடி, கணினியில் வந்திருந்த மின்னஞ்சல்களை அலசி ஆராய்ந்து கொண்டிருந்தான். வேலை சம்பந்தமாக வந்ததில் எந்த நிறுவனத்திற்கு செல்வது என்ற குழப்பத்தோடு ஒவ்வொன்றையும் ஆராய்ந்தான்.

“மித்ரா…” என்று பாட்டி அழைத்ததும், உடனே கணினியை போட்டு விட்டு எழுந்து சென்றான்.

“என்ன பாட்டி? எதாவது வேணுமா?”

“இல்லபா.. உட்காரு.. வேலை கிடைச்சதா?”

“நிறைய வேலை இருக்கு.. எனக்கு பிடிச்ச மாதிரி எதாவது இருக்குதானு தான் பார்த்துட்டு இருக்கேன். ”

“இந்த காலத்துல வேலை கிடைக்குறது கஷ்டம் இல்ல?”

“ஆமா பாட்டி.. ரொம்ப கஷ்டம்”

“ஆனா பொண்ணு கிடைக்கிறது அத விட கஷ்டம் தெரியுமா?”

மித்ரன் ஆச்சரியமாக புருவம் உயர்த்தினான். திடீரென எதற்கு இந்த பேச்சு?

“அப்படியா?” என்று கேட்டயவனின் குரலில் ஆச்சரியம் மட்டுமே இருந்தது.

“ஆமா.. அதுவும் நல்லா பொண்ணா கிடைக்கிறது கஷ்டம். கிடைச்ச பொண்ணையும் நீ வேணாம்னு சொல்லிட்ட”

அவர் குறைபட, மித்ரனுக்கு சிரிப்பு தான் வந்தது.

“நீங்க எங்க சுத்தி எங்க வர்ரீங்கனு எனக்கு தெரியுது. ஆனா என்னால முடியாது.. விட்டுருங்க..”

“ஏன்? காரணமே சொல்ல மாட்டேங்குற.. அன்னைக்கு எதையோ உளறுன.. உண்மையான காரணம் அது இல்லனு எல்லாருக்கும் தெரியும். சொல்லேன்.. என்ன காரணம்? உங்களுக்குள்ள எதாவது பிரச்சனையா? இல்ல வேற எதாவதா?”

மித்ரன் ஒரு நொடி அமைதிக்குப் பிறகு பெருமூச்சு விட்டான்.

“அடுத்தவங்க பர்ஸ்னல நாம பேசக்கூடாது பாட்டி. என் காரணமும் அப்படித்தான்.. அத வெளிய சொல்ல முடியாது. அடுத்தவங்க விசயம்.”

“ஓ.. அப்ப சம்பூர்ணாவ பத்தி எதுவும் இல்லையா?”

“அதுல முக்கியமானதே அவ தான் பாட்டி. அவ ரொம்ப மோசமானவ பாட்டி.. கேரக்டர் சரியில்லனா கூட திருந்துவாங்கனு சொல்லலாம்.. அவ ஆளே சரியில்ல.. உடம்பெல்லாம் திமிரு.. சத்தியமா சொல்லுறேன்.. அவ கடைசி வரை தனியா வாழ்ந்து சாகுறது உலகத்துல இருக்க ஆம்பளைங்களுக்கு நல்லது. அவ குடும்பத்துக்கு எல்லாம் செட்டாக மாட்டா” என்று பேசிக் கொண்டே சென்றவன், எதோ தோன்ற சட்டென திரும்பிப் பார்த்தான்.

வாசலில் சம்பூர்ணா நின்றிருந்தாள். முதல் முறையாக அவளை பார்த்து அதிர்ந்தான். ஏனென்றால் அவள் முகத்தில் எப்போது இருக்கும் சிரிப்பு இல்லை. புருவ சுளிப்பு மட்டும் தான் இருந்தது. அவளும் அவனை பார்த்தாள். பார்க்க மட்டுமே செய்தாள்.

பாட்டியும் அவளை அப்போது தான் கவனித்தார்.

“அடடே வாமா” என்று அவர் வரவேற்க, மித்ரனின் பார்வை அவளை விட்டு விலகவில்லை.

பேசியதை கேட்டிருப்பாள் என்று இருவருக்குமே தோன்றினாலும், அதை காட்டிக் கொள்ளவில்லை. சதாரணமாக இருக்க முயற்சித்தனர். சம்பூர்ணாவின் பார்வை பாட்டியின் பக்கம் திரும்பியது.

“எப்படி இருக்கீங்க? இப்ப பரவாயில்லையா?” என்று சாதாரண கேள்விகளோடு அறைக்குள் வந்தாள் சம்பூர்ணா. அவள் முகத்தில் கோபமில்லை. குரலில் எதையும் கண்டு பிடிக்கவும் முடியவில்லை. மித்ரன் பேச மறந்து அமர்ந்து விட்டான்.

“நல்லா இருக்கேன்மா.. திடீர்னு வந்து நிக்கிற.. உட்காருமா..” என்று பாட்டி தான் சமாளித்தார்.

“இருக்கட்டும்.. பாட்டி பார்த்துட்டு வர சொன்னாங்க.. வந்தா வீடு திறந்து இருந்துச்சு.. கூப்பிட்டேன்.. உங்க காதுல விழல போல” என்றவள் அப்படியே நின்றாள்.

“அப்படியா? உட்காருமா.. மித்ரா.. காபி இருக்கும் எடுத்துட்டு வா” என்று அதிர்ந்து அமைதியாக இருந்த பேரனை கிளப்பி விடப்பார்த்தார்.

“வேணாம் பாட்டி.. எனக்கு ஒரு ஆம்பளை சர்வ் பண்ணுறதானு உங்க பேரனுக்கு ஈகோ வந்துடப்போகுது” என்று சம்பூர்ணா முகம் மாறாமல் சொல்லி வைத்தாள்.

சுருக்கென இருவருக்குமே அது மனதில் தைத்தது. முத்தரசி மித்ரன் இப்படி பேசுவான் என்று எதிர்பார்க்கவில்லை. இது வரை அவன் அதிகமாக பெண்களை திட்டியது இல்லை. முதல் முறையாக அப்படிப் பேசியவனை ஆச்சரியமாக பார்த்துக் கொண்டிருந்தவர் வாசலை கவனிக்காமல் போனார். அவர் பதில் சொல்லும் முன்பே அவளும் வந்து விட்டாளே. வருத்தமாக இருந்தது. சமாதானத்திற்கு அவர் வார்த்தை தேட, அதை பற்றி கவலைப்படாமல் சம்பூர்ணா தொடர்ந்தாள்.

“இதுல தைலம் இருக்காம்.. நீங்க கேட்டீங்கனு சொன்னாங்க. கொடுக்க தான் வந்தேன்” என்று விட்டு கையிலிருந்த பையை ஓரமாக வைத்தாள்.

மித்ரனுக்கு எதாவது பேச வேண்டும் என்று தோன்றியது. ஆனால் என்ன பேசுவது? என்று தெரியவில்லை. அவள் முன்னால் எதுவும் இல்லை என்று நடிக்கவா முடியும்? முடியாதே.

பாட்டியை விட்டு விட்டு பேரனின் பக்கம் திரும்பினாள். அவன் நிமிர்ந்து பார்த்தாலும் வாயை திறக்கவில்லை.

“நான் தனியா சாகுறது பத்தி நீ ஏன் அக்கறை படுற யோகமித்ரன்? உலக ஆம்பளைங்கள காக்க வந்த ரட்சகனா நீ? இல்ல எதுக்கு தேவையில்லாம என் வாழ்க்கைய பத்தி பேசுற?” என்று கேட்டவள் குரலில் உஷ்னம் கூடியது.

“தேவையில்லாமலா? நீ எவ்வளவு பெரிய ஆளுனு எனக்கு நல்லாவே தெரியும். சும்மா நல்லவ வேசம் போடாத” என்று எரிச்சலாக சொல்லி வைத்தான்.

“நான் நல்லவளே இல்ல.. எப்ப சொன்னேன் நான் நல்லவனு? ஆனா நீ நல்லவனா? என்னை ஜட்ஜ் பண்ண கிளம்பிட்ட..”

“உன்னை மாதிரி அடுத்தவங்க வாழ்க்கைய அழிச்சு விளையாடல நான். அதுனால நான் நல்லவன் தான்”

“ஒருத்தர் வாழ்க்கைய அழிக்கிலனா மட்டும் யாரும் நல்லவனாகிட மாட்டாங்க. இப்படி அடுத்தவங்கள பத்தி கேவலமான எண்ணம் இருந்தா அவங்க நல்லவங்க கிடையாது. நீ நல்லவன்னு உனக்கு நீயே சர்டிஃபிகேட் கொடுத்துக்காத.”

“இருந்துட்டு போறேன்.. நான் கெட்டவனா இருந்துட்டு போறேன். வந்த வேலை முடிஞ்சதுல? இடத்தை காலி பண்ணு”

“போகலனா?”

“என்னப்பா இது?” என்று பாட்டி அவசரமாக பேரனை அதட்டினார்.

“இதான் நாங்க பாட்டி.. இப்படித்தான் நாங்க.. இவள பார்த்துலே பத்திட்டு வருது. இவ கூடப்போய் நான் வாழ? ச்சே..” என்று வெறுப்பை உமிழ்ந்தான்.

அதே நொடியில் சம்பூர்ணா அவன் முகத்தின் முன்பு சொடக்கிட்டாள். மித்ரன் பாட்டியை விட்டு அவளை திரும்பிப் பார்த்தான்‌.

“யூ க்ராஸ்ட் யுவர் லிமிட் யோகமித்ரன்..”

“பெரிய லிமிட்” என்று நக்கலாக பார்த்தான்.

“ஃபைன்… என் கூட வாழ முடியாது அதான?” என்று கேட்டவள் அவனருகே நெருங்கினாள்.

“நீ வாழனும்.. இனி நீ எனக்கு சொந்தம்.. நீ என்னை தான் கல்யாணம் பண்ணிக்கனும். மீறி வேற யாரு கூடையாச்சும் உன் கல்யாண பேச்சு நடந்துச்சுனு வை.. சம்பூர்ணாவோட மொத்த அரக்கத்தனத்தையும் பார்ப்ப..” என்று மிரட்டியவள், “பாட்டி.. இவன் எனக்குத்தான்.. வேற பொண்ணு பார்க்காதீங்க. விட மாட்டேன்” என்றவள் பார்வை மித்ரனை விட்டு அகலவே இல்லை.

அவன் ஒரு நொடி இதைக்கேட்டு அதிர்ந்தாலும், பிறகு வாய்க்குள் திட்டி விட்டு வேறு பக்கம் பார்த்தான்.

பாட்டி இருவரையும் நம்ப முடியாமல் பார்த்திருக்க, சம்பூர்ணா மித்ரனின் நாடியை ஒற்றை விரலில் தூக்கினாள்.

மித்ரன் அவள் கையை பட்டென தட்டி விட்டான்.

“ஏய்..” என்று மித்ரன் வேகமாக எழுந்து விட்டான்.

“இதுக்கே கடுப்பானா எப்படி? இனிமே தான் ஆட்டமே இருக்கு.. மித்ரு” என்று ரகசிய சிரிப்போடு சொல்லி வைத்தாள்.

அதிர்ந்து நின்ற அவனை பார்த்து கண்ணடித்தவள்,, “வர்ரேன் பாட்டி” என்று விட்டு உடனே கிளம்பி விட்டாள்.

“என்னடா இந்த பொண்ணு இவ்வளவு தைரியமா இருக்கா?” என்று பாட்டி ஆச்சரியப்பட, மித்ரன் ஒன்றும் சொல்லவில்லை.

அதிர்ச்சியில் அவனுக்கு பேச்சே வரவில்லை. மித்ரு… மித்ரு என்று சொல்லி வைத்து விட்டாளே! தலை வலிப்பது போல் இருக்க, “நான் ரூம்ல இருக்கேன்… எதுனாலும் கூப்பிடுங்க” என்று பாட்டியை பார்க்காமலே சொல்லி விட்டுச் சென்று விட்டான்.

பாடல் இன்னும் ஓடிக் கொண்டிருந்தது. இந்த சத்தத்தில் தான் அவள் வந்ததை கேட்காமல் விட்டு விட்டான். கோபத்தோடு பாடலை நிறுத்தியவனுக்கு தலைவலி உண்மையாகவே வந்து விட்டது. மடிக்கணினியை பார்த்தான். அதில் இருந்த எதையும் கண்கொண்டு பார்க்கவே பிடிக்கவில்லை. சம்பூர்ணாவிடமே முழு மனமும் இருந்தது.

கல்லூரியில் இப்படி ஒருத்தியை அவன் சந்திக்கக்கூடும் என்று நினைத்துக் கூடப் பார்க்கவில்லை.

கல்லூரி ஆரம்பித்து இரண்டு மாதங்கள் கடந்த பின்பு தான் வந்து சேர்ந்தாள். அப்போதும் வந்ததும் யாரிடமும் பேசவோ பழகவோ இல்லை.

அவளது ஒதுக்கத்தை பார்த்து விட்டு, விஷால் தான் முதலில் அவளிடம் பேசினான். சம்பூர்ணா எல்லோரையும் விட்டு விலகி ஓடுவது விசித்திரமாக இருந்தது. அனைவருக்கும் அவள் மீது ஆர்வமும் அக்கறையும் வந்தது.

முதலில் யாருமே வேண்டாம் என்று பிடிவாதமாக இருந்தவள், மெல்ல மெல்ல தளர்ந்தாள். அதற்கு முழுக்காரணம் விஷால். மித்ரனின் நெருங்கிய நண்பன்.

பள்ளியிலிருந்து ஒன்றாக படித்தவன். அவளிடம் பேசிப்பேசி அவளை கூட்டை விட்டு வெளியே இழுத்து வந்தான். மித்ரனிடமும் அப்போது சம்பூர்ணா நன்றாக தான் பழகினாள்.

இப்போது பார்த்தாலே பற்றிக் கொள்வது போல் கோபமெல்லாம் அப்போது இருக்கவில்லை. அந்த செமஸ்டர் முடியும் வரை கூட நன்றாக தான் சென்றது.

அடுத்து தான் அனைத்தும் தலைகீழானது. முக்கியமாக விஷாலின் வாழ்வை புரட்டிப் போட்டாள். நியாயம் கேட்ட மித்ரனை அவள் பார்த்த பார்வை? ஒரு புழுவைப்பார்ப்பது போல் பார்த்து வைத்தாள்.

அன்றிலிருந்து அனைத்தும் மாறியது. இருவரும் எதிரிகளானார்கள். சம்பூர்ணா மீண்டும் தனிமையை நாடிச் சென்று விட்டாள். மித்ரன் அவளை வெறுத்தான். விஷால் கல்லூரியை விட்டே சென்று விட்டான்.

அடுத்த மூன்று வருடமும் இருவரின் வாழ்விலும் போர் தான். ஒருவரை ஒருவர் முடிந்த அளவு தவிர்த்தனர். முடியாத போது சண்டைக்கு நின்றனர். இருவருக்குள்ளும் இருக்கும் பிரச்சனை கல்லூரியில் பலருக்குத் தெரியும். ஆனால் தெளிவான காரணம் தெரியாது.

படிப்பை முடித்ததும் சம்பூர்ணா கிளம்பி விட, மித்ரனும் வேறு கல்லூரிக்கு சென்று விட்டான். அதன் பின்பு சம்பூர்ணாவை மீண்டும் சந்தித்தது செந்திலோடு தான்.

விதி எப்போது கடன் வைப்பது இல்லை. கணக்கை மிகச்சரியாக முடித்து விட்டே அடுத்த வேலை பார்க்கும்.

வாசம் வீசும்.

Click on a star to rate it!

Rating 4.8 / 5. Vote count: 6

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
3
+1
0
+1
1

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்