Loading

அலுவலக பிரச்சனைக்குள் மூழ்கிக் கிடந்த மித்ரனின் கைபேசி ஒளிர ஆரம்பித்தது. எட்டிப் பார்த்தவன் சாதனாவின் எண்ணை பார்த்து விட்டு புருவம் சுருங்க எடுத்து, அழைப்பை ஏற்று காதில் வைத்தான்.

“ஹலோ அண்ணி?”

சாதனா அந்த பக்கம் அழுது கொண்டே விசயத்தை சொல்ல, மித்ரனுக்கு தூக்கி வாரிப்போட்டது.

அவசரமாக எழுந்தவன், “நான் இப்பவே வர்ரேன் அழாதீங்க..” என்றவன் வேகவேகமாக வேலையை மூடி வைத்தான்.

“நான் உடனே வர்ரேன் இருங்க.. பதட்டப்படாதீங்க” என்று விட்டு அழைப்பை துண்டித்தான்.

“என்னாச்சு?” என்று அருகே இருந்தவன் கேட்க, “ஒரு எமர்ஜென்ஸி” என்று மட்டும் சொல்லி விட்டு வேகமாக மேனேஜரை பார்க்கச் சென்றான்.

மேனேஜர் சம்பூர்ணாவோடு மீட்டிங்கில் இருக்க, அவனால் சில நொடிகள் கூட நிற்க முடியவில்லை. உள்ளே செல்வதா? வேண்டாமா? என்று பதட்டத்தோடு நின்றான். ஆனால் மீட்டிங் அறையில் இருந்து சம்பூர்ணா அவனை பார்த்து விட்டு புருவம் சுருக்கினாள். அவனது பதட்டமும் அவள் கண்ணில் விழுந்தது.

மீட்டிங்கில் பேச்சு முடிந்ததும் எதுவும் சொல்லாமல் எழுந்து வந்து கதவை திறந்து, “என்ன?” என்று கேட்டு வைத்தாள்.

அவளை எதிர்பார்க்காமல் மித்ரன் அதிர்ந்தாலும், “பாட்டிக்கு ஹார்ட் அட்டாக்.. ஹாஸ்பிடல் கொண்டு போயிருக்காங்க. வீட்டுல அண்ணி பாட்டி தவிர யாரும் இல்ல” என்று அவசரமாக சுருக்கமாக விளக்கி வைத்தான்.

சம்பூர்ணா ஒரு நொடி அதிர்ந்தாலும், தலையாட்டி விட்டு மேனேஜரை திரும்பிப் பார்த்தாள். அவர் எழுந்து வந்து நின்றார். அவரிடமும் மித்ரன் விசயத்தை சொல்லி விட்டு கிளம்ப பார்க்க, “இங்க இருக்க அத்தனை வேலையும் யாரு பார்ப்பா?” என்று சம்பந்தமில்லாமல் எகிறினார் மேனேஜர்.

அன்று சம்பூர்ணா முன்பு அவரை அவமானப்படுத்தியதற்கான பழிவாங்கல் இது. மித்ரனுக்கு கோபம் வந்து விட்டது.

“சார்.. இங்க வேலை பார்க்க பத்து பேர் இருக்காங்க. எனக்கு பாட்டி தான் முக்கியம்”

“அப்படினா நீ வேலைக்கு வந்துருக்க கூடாது. பாட்டிய கவனிச்சுட்டு வீட்டுலயே இருந்துருக்கனும் மேன்”

“உங்க கிட்ட பேச எனக்கு நேரமில்ல.. நான் கிளம்புறேன்”

“அப்படி எல்லாம் போக முடியாது.. ஒரு மணி நேரம் பர்மிஷன் தர்ரேன்.. போயிட்டு உடனே திரும்பி வா.. பொறுப்பே இல்லை இப்ப இருக்க பிள்ளைங்களுக்கு ச்சே”

மித்ரனுக்கு சுள்ளென ஏறியது. அவன் வாயை திறக்கும் முன்பு சம்பூர்ணா பேசினாள்.

“இவ்வளவு நல்லா உங்க எம்ப்ளாயி பிரச்சனைய கவனிப்பீங்கனு தெரியாம போச்சு.. வெல் டன்” என்று நக்கலாக சொன்னவள், மேனேஜர் அதிர்ந்ததை கண்டு கொள்ளாமல், “பைக் இருக்கா?” என்று மித்ரனிடம் கேட்டாள்.

அவன் மறுப்பாக தலையசைத்தான். அடிக்கடி பழுதாகிறது என்று இரண்டு நாட்களாக செட்டில் கொடுத்து விட்டான்.

“சரி கிளம்பு ட்ராப் பண்ணுறேன்” என்றவள் மேனேஜரை திரும்பிப் பார்த்து, “இந்த ப்ராஜெக்ட் பத்தி நான் உங்க எம்.டி கிட்ட இனி பேசிக்கிறேன்” என்று விட்டு உள்ளே சென்றாள்.

தன் பர்சை எடுத்துக் கொண்டு வேகமாக வெளியேற, அவளுக்காக மித்ரன் காத்திருந்தான். அவளிடமிருந்து உதவி கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. ஆனால் அந்த உதவியை மறுக்கும் நிலைமையிலும் அவன் இல்லை. இருவரும் மேனேஜர் பேச வருவதை காதிலேயே வாங்காமல் கிளம்பி விட்டனர்.

லிஃப்டில் நுழைந்ததும், “புவனன் எங்க?” என்று கேட்டாள்.

“எதோ வேலை விசயமா காலையிலே சீக்கிரமே போனான். ஃபோன் ரீச் ஆகல”

சம்பூர்ணா தன் அசிஸ்டண்ட்டை பார்த்து, “புவனனுக்கு வீட்டுல எமர்ஜென்ஸினு இன்ஃபார்ம் பண்ணிடு..” என்றாள்.

அசிஸ்டண்ட் வேகமாக புவனனின் இன்றைய வேலை என்ன? என்று தேட ஆரம்பித்தான்.

கீழே வந்ததும், “இன்ஃபார்ம் பண்ணிட்டு ஆஃபிஸ் போ.. இவங்க எம்.டி கிட்ட சொல்லு.. நான் நேர்ல பார்க்க அப்பாயிண்ட்மண்ட் கேட்டேன்னு” என்று விட்டு மித்ரனை அழைத்துக் கொண்டு காரில் ஏறினாள்.

“எந்த ஹாஸ்பிடல்?” என்றதும் மித்ரன் உடனே பெயரை சொல்ல, தலையாட்டி விட்டு காரை எடுத்தாள்.

பயணம் முழுவதும் இருவரும் பேசவில்லை. மித்ரனுக்கு பாட்டியை நினைத்து உள்ளே திக் திக்கென இருந்தது. பதட்டத்தை முடிந்த வரை குறைத்துக் கொண்டு பாட்டியின் நலனுக்காக அத்தனை கடவுள்களிடமும் வேண்டிக் கொண்டே இருந்தான்.

சம்பூர்ணா விரைவாக காரை ஓட்டி மருத்துவமனையின் முன்பு சென்று நிறுத்தினாள்.

“தாங்க்ஸ்.. நான் அப்புறமா உன் கிட்ட பேசுறேன்” என்று விட்டு மித்ரன் அவசரமாக இறங்க, சம்பூர்ணா தலையாட்டி வைத்தாள்.

மித்ரன் அதற்கு மேல் நிற்காமல் உள்ளே ஓடினான். சம்பூர்ணாவுக்கு உள்ளே சென்று பார்க்கலாமா? என்று தோன்றியது. ஆனால் அந்த குடும்பத்துக்கும் அவளுக்கு என்ன சம்பந்தம்? ஒரு முறை மட்டுமே பார்த்தவர்களுக்காக போய் நிற்பது சரியில்ல. அவளுக்கு அடுத்த வேலையும் இருக்கிறது.

உடனே கைபேசியை எடுத்தவள், சுதாராணியை அழைத்தாள்.

“என்ன பூர்ணா?”

“பாட்டி.. உங்க ஃப்ரண்ட்.. யோகமித்ரனோட பாட்டி… அந்த பாட்டிக்கு உடம்பு சரியில்ல போல.. ஹாஸ்பிடல்ல இருக்காங்க..”

“அச்சோ.. என்னாச்சு?”

“சரியா தெரியல.. கூட யாரும் இல்லனு அவங்க பேரன் பதறிட்டு போறான்.”

“நீ ஹாஸ்பிடல் பேர சொல்லு.. நானும் அபர்ணாவும் கிளம்பி போறோம்” என்று கேட்டு வாங்கிக் கொண்டு வைத்தார்.

இதற்கு மேல் எதுவும் செய்ய இல்லை என்று நினைத்து சம்பூர்ணா கிளம்பி விட்டாள்.

மித்ரன் அரக்க பறக்க சாதனாவை தேடிச் சென்றான். சாதனா ஓரத்தில் ஒரு நாற்காலியில்  அமர்ந்து கதவையே பார்த்துக் கொண்டிருந்தாள். உள்ளம் முழுவதும் பாட்டியின் நலனை மட்டுமே வேண்டிக் கொண்டிருந்தது. அதோடு தனியாக இருப்பதால் பயம் அதிகரித்தது.

“அண்ணி..” என்று மித்ரன் வந்ததும் திடுக்கிட்டு திரும்பிப் பார்த்தாள்.

“என்னாச்சு? டாக்டர் என்ன சொன்னாங்க?”

அவளுக்கு மீண்டும் கண்கலங்கும் போல் இருந்தது.

“இன்னமும் எதுவும் சொல்லல.. பாட்டி உள்ள இருக்காங்க” என்று கதவை காட்டினாள்.

“என்னாச்சு?”

“நான் உள்ள சமைச்சுட்டு இருக்கும் போது பாட்டி மாடிக்கு போயிருக்காங்க மித்ரா. நான் கவனிக்கல. திடீர்னு யாரோ அம்மா அம்மானு கூப்பிடுற சத்தம் கேட்கவும் வெளிய வந்து பார்த்தேன். படியில நெஞ்ச பிடிச்சுட்டு பாதி மயங்கிப்போயி உட்கார்ந்துருந்தாங்க. ரொம்ப பயந்துட்டேன் மித்ரா.. என்னனு கேட்டா எதுவும் சொல்லல.. பக்கத்து வீட்டு அக்காவ கூப்பிட்டேன். அப்புறம் அவங்க தான் ஆம்புலன்ஸுக்கு ஃபோன் பண்ணாங்க. அதுல இங்க கூட்டிட்டு வந்துட்டேன்”

“பெருசா ஒன்னுமிருக்காது.. பயப்படாதீங்க அண்ணி” என்று அவனுக்கும் சேர்த்தே சமாதானம் சொன்னான்.

“ஆம்புலன்ஸ் டாக்டர் ஹார்ட் அட்டாக்னு சொன்னாங்க..” எனும் போதே அவளது கண்களில் கண்ணீர் சட்டென இறங்கி விட்டது.

“அழாதீங்க.. ஒன்னுமிருக்காது. புவாக்கு விசயத்த சொல்ல சொல்லிட்டேன். அம்மாக்கு சொன்னீங்களா?”

“அத்தை வந்துட்டு இருக்காங்க”

மித்ரன் தலையாட்டி விட்டு தன் பையை சாதனாவின் அருகே வைத்து விட்டு அங்கும் இங்கும் நடந்தான்.

சில நிமிடங்களில் நர்மதா பதட்டத்தோடு வந்து சேர்ந்தார். மருத்துவர் முத்தரசியின் உயிரை காப்பாற்றி விட்டு வெளியே வந்தார்.

“சீக்கிரமா ஆம்புலன்ஸ் கிடைச்சதால உயிருக்கு ஆபத்தில்லாம காப்பாத்த முடிஞ்சது. அவங்க ஹெல்த் கண்டீஷன் சரியில்ல.. அடுத்த அட்டாக் வந்தா தாங்க மாட்டாங்க. கவனமா பார்த்துக்கோங்க” என்று விட்டு மருத்துவர் மருந்துகளை எழுதிக் கொடுத்து விட்டுச் சென்று விட்டார்.

சாதனாவுக்கு பயத்தில் பேச்சே வரவில்லை. நர்மதாவுக்கோ மாமியாரை இந்த நிலையில் பார்க்கக் கூட முடியவில்லை.

அடுத்து என்னவென்று புரியாமல் நிற்கும் போதே, சுதாராணியும் அபர்ணாவும் வந்து விட்டனர். அவர்கள் தான் நர்மதாவுக்கு ஆறுதல் சொல்லி, சாதனாவையும் தைரியப்படுத்தினர்.

ஆனாலும் முத்தரசி ஓரளவு தெளிந்து எழுந்து அமர்ந்த பின்பே, எல்லோருக்கும் மூச்சு சீராக வந்தது. அன்று முழுவதும் மருத்துவமனையில் இருக்க வேண்டி வர, புவனனும் வேலையை போட்டு விட்டு வந்து விட்டான். இரவு முழுவதும் நர்மதா மட்டும் துணைக்கு இருந்தார்.

மருத்துவரின் அறிவுரைகளை எல்லாம் கவனமாக கேட்டுக் கொண்டு, மறுநாள் பாட்டியோடு வீடு திரும்பினர்.

எல்லோருக்கும் உள்ளே பயமிருந்தாலும் வெளியே ஒன்றுமில்லை என்பது போல் காட்டிக் கொண்டனர். முத்தரசியை அதிகம் பதட்டப்பட வைக்க விரும்பவில்லை. அதே நேரம் அவர்களது பயமும் அவர்களை விட்டு விலகவில்லை.

அன்று தாமதமாக வேலைக்கு கிளம்பிய மித்ரனுக்கு சம்பூர்ணாவின் நினைவு தான் அதிகமாக வந்தது. அவளிடம் நின்று சரியாக நன்றி கூற முடியவில்லையே. அவசரத்தில் அவன் ஆட்டோ பிடித்து எப்படியாவது கிளம்பி இருப்பான் தான். ஆனால் அந்த மேனேஜர் அவனை தடுத்து, பேசி உயிரை வாங்கியிருப்பார். நடுவில் சம்பூர்ணா நக்கலாக பேசவும் மேனேஜரின் முகம் போன போக்கை பார்க்க வேண்டுமே? அது மட்டுமா? சம்பூர்ணாவோடு அவன் கிளம்பும் போது பார்த்த பார்வை?

எவ்வளவோ எதிரிகளாக இருந்தாலும் அவள் உதவியது அவனுக்கு பிடித்து தான் இருந்தது. ஆனாலும் ஒரு முறை நன்றி சொல்லி விட்டால் முடிந்தது என்று நினைத்தான்.

அவனது பிரச்சனையை காரணமாக வைத்து நிறுவனத்தின் வேலையில் எதையாவது அவள் செய்யாமல் இருக்க வேண்டுமே?

அவளுடைய நிறுவனத்தை பற்றியும் ஒப்பந்தம் பற்றியும் இப்போது தான் கேட்டு அறிந்து கொண்டான். மிகவும் முக்கியமான ஒன்று தான். அதை இழந்தால் பழியில் பாதி அவன் பேரிலும் விழும்.

எல்லாம் யோசித்தபடியே கிளம்பிச் சென்றால், அங்கே போனதும் அவனை வேலையை விட்டுத் துரத்த தயாராக இருந்தார் மேனேஜர்.

விசயத்தை கேட்டு ஆச்சரியப்பட்டவன் மேனேஜரை சந்திக்க செல்ல, அதிர்ஷ்டவசமாக மேனேஜர் அறையில் எம்.டி இருந்தார்.

மித்ரன் நடந்ததை பற்றிச் சொல்லி நியாயம் கேட்க, மேனேஜருக்கு திட்டு விழுந்தது.

“ஒருத்தர் உண்மையான எமர்ஜென்ஸில இருக்காரா இல்லையானு கண்டு பிடிக்க தெரியாம.. பொய் சொல்லி தப்பிக்க பார்க்குறான்னு பேசுறீங்க? என்ன இது?” என்று எம்.டி கேள்வி கேட்க, மேனேஜருக்கு மித்ரனை எப்படியாவது துரத்தி விட வேண்டும் என்ற வெறியே வந்தது.

ஆனால் அதற்கு முன்பே மித்ரன் முந்திக் கொண்டான்.

“நான் ஆல்ரெடி ரிசைன் பண்ணுற ஐடியால தான் சார் இருந்தேன். பேப்பர் போடுறேன். இப்பவே..” என்று விட்டு சென்று விட்டான்.

இதற்கும் சேர்த்தே மேனேஜர் திட்டு வாங்கிக் கொண்டார்.

மித்ரன் அப்போதே வேறு நிறுவனத்தில் வேலை தேட ஆரம்பித்து விட்டான். இந்த இடத்தில் அவனுக்கான மரியாதை இல்லை என்றால் இனியும் அவன் இங்கே இருக்கத் தேவையில்லை.

ஹரீஷ் தான் இதைக்கேட்டு வருத்தப்பட்டான்.

“என்னடா இப்படி போற?” என்று கேட்க, சுபத்ராவோ வானுக்கும் பூமிக்கும் குதிக்காத குறையாக சண்டை போட்டாள்.

“அந்த மேனேஜர் ஒரு அரை லூசுனா நீ ஏன் வேலைய விடனும்? அவன் போகட்டும்” என்று சொல்லி அவனை தடுக்க நினைத்தாள்.

யாருடைய பேச்சுக்கும் மித்ரன் செவிசாய்க்கவில்லை. தன் வேலையை தொடர்ந்தான்.

நன்றி மறப்பது நன்றன்று.. ஆனால் அதே நன்றி கழுத்து வரை வளர்ந்தால்?

வாசம் வீசும்.

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 7

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
5
+1
2
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்