Loading

 

யோகமித்ரன் பிடித்த பிடியில் நிற்க, “என்னடா பிடிக்கல?” என்று நர்மதா அதட்டினார்.

எங்கே மகனின் பேச்சில் சம்பூர்ணா காயப்படுவாளோ? என்று அவருக்கு பயம். ஆனால் அவள் என்னவோ சாதாரணமாகத் தான் அமர்ந்திருந்தாள்.

“மித்ரா.. இங்க வா” என்று அருகே அழைத்து மறுபக்கம் அமர வைத்த பாட்டி முத்தரசி, “என்ன விசயம்? ஏன் பிடிக்கலங்குற? உனக்கு சம்பூர்ணாவ முதல்லயே தெரியுமா?” என்று அமைதியாக விசாரித்தார்.

மித்ரன் தலையை மட்டும் ஆட்ட, புவனனை தவிர எல்லோருமே அதிர்ந்தனர்.

புவனன் மட்டும் அமைதியாக அமர்ந்து வேடிக்கை பார்த்தான். அதுவும் தான் கேட்ட போது மறுத்து, மித்ரனிடம் அவள் தண்ணீர் வாங்கி குடித்தது, அவனுக்குள் பல சிந்தனைகளை கிளப்பி விட்டிருந்தது. அதனால் அமைதியாக எல்லாவற்றையும் ஆராயும் பார்வையோடு பார்த்துக் கொண்டிருந்தான்.

“எப்படி தெரியும்?” என்று சாதனா ஆர்வம் தாங்காமல் வினவ, பாட்டி சம்பூர்ணாவை திரும்பிப் பார்த்தார்.

“எப்படிமா?”

“ஒன்னா படிச்சோம் பாட்டி” என்று சம்பூர்ணா கூற, அப்போது தான் இருவருக்கும் ஒரே வயது என்று சுதாராணி சொன்னது மற்றவர்களுக்கு நினைவு வந்தது.

“வாவ்!” என்று சாதனா மெல்லிய குரலில் ஆச்சரியப்பட்டு கணவனை பார்த்தாள்.

அவனுக்கு இது தெரியுமா? என்று. ஆனால் இது அவனுக்கும் புதுச்செய்தி என்பதால் மனைவியை போலவே ஆச்சரியமாக தான் பார்த்துக் கொண்டிருந்தான்.

“ஒன்னா படிச்ச புள்ளைங்களா? அப்புறம் ஏன் கல்யாணம் வேணாம்னு சொல்லுறீங்க?”

“அதுனால தான் வேணாம்னே சொல்லுறேன். செட் ஆகாதுனும் சொல்லுறேன்” என்று மித்ரன் அவசரமாக விளக்கினான்.

“ஒன்னா படிச்ச புள்ளைய கல்யாணம் பண்ணிக்க கூடாதுனு சட்டமாடா இருக்கு?”

“இல்ல பாட்டி..” என்ற சம்பூர்ணா காரணம் சொல்லப்போக, மித்ரன் அவளை அழுத்தமாக ஒரு பார்வை பார்த்தான்.

அந்த பார்வையில் சொல்ல வந்ததை விட்டு விட்டு, “இது சரி வரும்னு தோணல. அவ்வளவு தான்” என்று மாற்றி பேசி முடித்தாள்.

புவனன் முகம் ஆச்சரியத்தில் மேலும் மலர்ந்தது. மித்ரனுக்கு காரணம் சொல்ல விருப்பமில்லை. அதை ஒரே பார்வையில் அவன் உணர்த்த, உடனே சம்பூர்ணாவும் அதை புரிந்து சொல்லாமல் விடுகிறாள். இவர்களுக்கிடையே இவ்வளவு புரிதல் இருப்பது இவர்களுக்குத் தெரியுமா? தெரியாதா? என்ற அடுத்த யோசனையில் இறங்கி விட்டான்.

அதை புரிந்து கொள்ள வேண்டிய இருவரும் ஒருவரை ஒருவர் வேண்டாம் என்பதில் திடமாக இருந்தனர்.

“ஏன் செட் ஆகாது? எதாவது ஒரு காரணம் சொல்லுங்க”

“எனக்கு இவள பிடிக்கல” என்று பட்டென மித்ரன் கூற, எல்லோருமே ஒரு அதிர்ச்சியோடு சம்பூர்ணாவை பார்க்க, அவள் அதற்கெல்லாம் அசரவில்லை.

“பிடிக்கலயா? ஏன்டா பிடிக்கல?” என்று நர்மதா முறைக்க, “பிடிக்கலனா பிடிக்கல தான்மா. காரணமெல்லாம் சொல்ல முடியாது” என்றான்.

“காரணமே இல்லாம ஒருத்தர பிடிக்காம போயிடுமா? என்ன பேசுற நீ?”

“ஸ்ஸ்ஸ்… இப்ப காரணம் தான வேணும்?” என்றவன் வேகமாக சம்பூர்ணாவை பார்த்து விட்டு, “அவ ஸ்டைல் எனக்கு பிடிக்கல. மார்டனா இருக்கா. அவ போட்டுருக்க குதிரை வால் ஜடை பிடிக்கல. போதுமா?” என்று நிறுத்தாமல் பொறிந்தான்.

அவன் அடுக்கி காரணத்தில் சம்பூர்ணாவிற்கு சிரிப்பு தான் வந்து விட்டது. உதட்டை கடித்து சிரிப்பை அடக்கினாள்.

‘உளறாத மேன்’ என்று தனக்குள் சொல்லி சிரித்து கொண்டாள்.

“இதெல்லாம் ஒரு காரணமா?” என்று நர்மதா முறைத்தார்.

“இதான் காரணம். எனக்கு சேலை கட்டிட்டு ஜடை பின்னி போட்டுருக்க பொண்ண தான் பிடிக்கும். இவ ரிஜக்ட் அவ்வளவு தான்”

“பாருங்க பாட்டி. உங்க பேரனுக்கே பிடிக்கல. அப்புறமும் எதுக்கு இந்த கல்யாணம்? வேணாமே” என்றாள் சம்பூர்ணா.

“அவன் சொல்லுறது எல்லாம் ஒரு காரணமா? சரி அவனுக்கு பிடிக்குறது இருக்கட்டும். உனக்கு மித்ரன பிடிக்குமா? பிடிக்காதா?” என்று கேட்டு கிடுக்குப்பிடி போட்டார் முத்தரசி.

அவள் மித்ரனை பார்த்தாள். அவனும் அவளை தான் பார்த்தான். பதில் நன்றாக தெரியும் என்பதால், அவனது பார்வையில் மாற்றம் இல்லை.

“பிடிக்கும் பாட்டி” என்று கூறி, மித்ரனுக்கு ஒரே நொடியில் இதயத்தை வெடிக்க வைத்து விட்டாள்.

மொத்த குடும்பமும் இந்த பதிலை எதிர்பார்க்காமல் அதிர, “ஆனா கல்யாணம் பண்ணிக்க முடியாது பாட்டி” என்று கூறி, மித்ரனின் வெடித்த இதயத்திற்கு பாலை வார்த்தாள் சம்பூர்ணா.

“என்னமா?” என்று பாட்டி முகம் சுருங்க பார்க்க, “பிடிச்சவங்கள எல்லாம் கல்யாணம் பண்ணிக்க முடியுமா? எனக்கு உங்க பேரன பல வருசமா தெரியும். ஆனா நாங்க பேசுனத விட நிறைய சண்டை தான் போட்டுருக்கோம். பிடிக்காதுனு சொல்லுற அளவுக்கு உங்க பேரன் மாதிரி என் கிட்ட காரணம் இல்ல. அதுக்காக கல்யாணம் பண்ணிக்க முடியுமானு கேட்டா.. சாரி பாட்டி. என்னால முடியாது” என்று தெளிவாக விளக்கினாள்.

மித்ரனுக்கு போன உயிர் திரும்பி வந்த உணர்வு. பிடிக்கவில்லை என்று கூறி இருந்தால் அவளிடமும் காரணம் கேட்டிருப்பார்கள். அவளும் அவனை போல உளறி இருக்க வேண்டும். அதை தவிர்க்க எவ்வளவு அழகாக மாற்றிப் பேசி விட்டாள். இதை நாமும் செய்திருக்கலாமே என்று இப்போது அவனுக்கு தோன்றியது. எதைச்சொல்வது என்று தெரியாமல் எதையோ உளறி வைத்திருக்கிறானே.

“இதான் முடிவா மா?” என்று பாட்டி கேட்க, சம்பூர்ணா தலையசைத்தாள்.

“சரி உங்களுக்கு வேணாம்னா விட்டுடுவோம்” என்று பெருமூச்சோடு அவர் ஒப்புக் கொள்ள, “இத உங்க ஃப்ரண்டுக்கு இன்ஃபார்ம் பண்ணிட்டு வீட்டுக்கு வர சொல்லுங்க” என்று கேட்டுக் கொண்டாள்.

அவர் தலையசைத்ததும், “அப்ப நான் கிளம்புறேன். கொஞ்சம் வேலை இருக்கு” என்று எழுந்து கொண்டாள்.

“இப்பவே கிளம்பனுமா? சாப்பிட்டு போகலாமே? ஒரு டீ காபியாச்சும் குடிச்சுட்டு..”

“இல்ல பாட்டி. வேலை இருக்கு. இன்னொரு நாள் பார்க்கலாம்” என்று கூறி விட்டாள்.

“வர்ரேன்” என்று எல்லோரிடமும் தலையசைத்து விட்டு அவள் நடக்க, மித்ரன் அவளுடன் நடந்தான்.

அவனுக்கு பேச வேண்டும். அதனால் உடன் செல்ல மற்றவர்கள் முகம் சுருங்க அமர்ந்து இருந்தனர்.

“எவ்வளவு அழகா இருக்குல இந்த பொண்ணு? மித்ரனுக்கு தெரிஞ்சும் இருக்கு. ஆனா வேணாம்னு ஒத்த கால்ல நிக்குதுங்க” என்று சாதனா சலிக்க, “நீ வேணா பாரு.. லாஸ்ட்டா இவங்க தான் கல்யாணம் பண்ணிப்பாங்க” என்றான் புவனன்.

“உண்மையாவா?” என்று சாதானா சந்தேகமாக கேட்டாள்.

“ஆமா. அதான் நடக்கும் பாரு. ரெண்டு பேரையும் பார்க்கும் போது செம்ம பொருத்தமா இருக்கு. அண்ட்.. வெயிட் பண்ணுங்க. கண்டிப்பா இவங்க கல்யாணம் நடக்கும்”

“நீ என்ன இப்படி சொல்லுற? ரெண்டு பேரும் வேணாம்னு சொல்லிட்டு போயிட்டாங்களே” என்று நர்மதா கேட்க, “அதையும் ரெண்டு பேரும் ஒரே மாதிரி சொல்லலயா? எதோ பிரச்சனை இருக்கு. அது தீர்ந்துட்டா கண்டிப்பா சேர்ந்துடுவாங்க. அவன் வரட்டும் நான் என்னனு விசாரிக்கிறேன்.” என்றான்.

“என்னவோ.. சுதாவுக்கு ஃபோன் பண்ணி சொல்லுறேன். போட்ட ப்ளான் எல்லாம் வேஸ்ட் ஆகி போச்சு” என்று முத்தரசி பெருமூச்சு விட்டார்.

“அப்ப வீட்டை விட்டு போற ப்ளான் உங்களோடதா?” என்று புவனன் கேட்க, “அது இல்ல புவா.. நாங்க ஒன்னா ஒரே சேலையில பேரன் பேத்தி கல்யாணத்துல சுத்தனும்னு ப்ளான் போட்டோம். வீணா போச்சு” என்றார்.

“இங்க அவன் அவனுக்கு என்ன கவலை. உங்களுக்கு என்ன கவலை?”

“இது பல வருசத்துக்கு முன்னாடி போட்ட ப்ளான்.‌ நடக்கவே இல்ல”

“ஆமா.. அவங்க உங்களுக்கு ரொம்ப க்ளோஸ் ஃப்ரண்ட்டா?”

“ம்ம்.. ஒன்னா தான் படிச்சோம். நம்ம ஊருக்கு பக்கத்து ஊரு. நான் படிச்சதே எட்டாவது தான? அது வரை சுதா என் கூட தான் படிச்சா. அப்ப எல்லாம் அவளுக்கு பொண்ணு பிறக்கனும். எனக்கு பையன் பிறக்கனும். ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணி வச்சு சம்பந்தி ஆகனும்னு பேசிப்போம். அவ ஒன்பதாவது படிக்க வெளியூர் போயிட்டா. நம்ம வீட்டுல என் படிப்ப அதோட நிறுத்திட்டாங்க. ஒரு வருசத்துல உங்க தாத்தாவுக்கும் கட்டி வச்சுட்டாங்க. வரிசையா பிள்ளைங்கயும் பெத்து போட்டுட்டேன். சுதா எங்க இருக்கானு தான் இது வரை தெரியவே இல்ல. வாழ்க்கைய பாரு? பிள்ளை பெத்து சம்பந்தி ஆகலாம்னு நினைச்சா பேரன் பேத்தி கிட்ட வந்து நின்னுடுச்சு. அதையும் நடத்த விடாம இந்த புள்ளைங்க வேணாம்னு நிக்கிதுங்க” என்று குறைபட்டார்.

“நீங்க கவலையே படாதீங்க பாட்டி. அதான் இவர் சொல்லுறாரே. இவங்க கல்யாணம் கண்டிப்பா நடக்கும். நீங்களும் உங்க ஃப்ரண்ட்டும் ஒரே மாதிரி சேலை கட்டுவீங்க. அப்படியே.. அந்த அபர்ணா ஆண்டிக்கும் அத்தைக்கும் ஒரே மாதிரி சேலை வாங்கி கொடுத்துடுவோம். என்ன அத்த?”

“தாலி கட்ட பொண்ணு இல்லயாம்.. இவங்க சேலை கட்ட கிளம்பிட்டத பாரு” என்று நர்மதா சிரித்து வைத்தார்.

“இப்ப முதல்ல சுதாவுக்கு போன் பண்ணுவோம்” என்று பாட்டி கைபேசியை தூக்கினார்.

“சரி.. உட்கார்ந்து பேசிட்டே இருக்க வேண்டியது தான். நான் போய் மதிய சாப்பாட்ட செய்யுறேன். உங்களுக்கு மாத்திரை வேற போடனும். சாதனா.. ஆரஞ்சு வாங்கிட்டு வந்தோம்ல? அத ஜூஸ் போடு. எல்லாரும் கொஞ்சம் குடிப்போம். நீ மாடில காயப்போட்டத எடுத்துட்டு வாடா.” என்று நர்மதா எழுந்து கொள்ள, சாதனாவும் பையை தூக்கிக் கொண்டு எழுந்தாள்.

இருவரும் சமையலறை பக்கம் நடக்க, வீட்டுக்குள் புயல் வேகத்தில் வந்தாள் சம்பூர்ணா. அனைவரும் உடனே நின்று அவளை கேள்வியாக பார்த்தனர். புவனன் மட்டும் அவளது முகத்தில் தெரிந்த தீயை குறித்துக் கொண்டான். பின்னால் வந்த மித்ரனையும் கவனிக்கத் தவறவில்லை.

“பாட்டி.. எனக்கு இந்த கல்யாணம் ஓகே. நீங்க என் பாட்டிக்கு இன்ஃபார்ம் பண்ணிட்டு வீட்டுக்கு வர சொல்லுங்க. மிச்சத்த உங்க பேரன் கிட்ட கேளுங்க. இப்ப நான் கிளம்புறேன்.” என்று வேகமாக பேசிய சம்பூர்ணா யாருடைய பதிலுக்கும் காத்திருக்கவில்லை. உடனே திரும்பி நடந்தாள்.

அவள் பின்னால் வந்து அவளது பேச்சை கேட்டு அதிர்ந்து நின்றிருந்த மித்ரனை முறைத்து விட்டு, அவனது தோளை இடித்துக் கொண்டு இறங்கிச் சென்று விட்டாள்.

மனமும் வளர்ந்த குழந்தை தான். சில நேரம் அடம் பிடிக்கும. சில நேரம் கோபம் கொள்ளும். ஆனால் அதன் பாசம் மாறி விடாது. அதை உணர்ந்து காத்தால் காலம் முழுவதும் அதன் மென்மையை அனுபவிக்கலாம்.

வாசம் வீசும்.

Click on a star to rate it!

Rating 4.9 / 5. Vote count: 10

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
6
+1
0
+1
1

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்