
நளினி கையை பிசைந்து கொண்டு அமர்ந்து இருக்க, பார்த்திபன் அவளது தோளை ஆறுதலாக தட்டிக் கொடுத்தான்.
“மிஸஸ் . நளினி” என்று நர்ஸ் அழைக்க, “நான் தான்” என்று எழுந்து நின்றாள்.
“உள்ள போங்க” என்று கூற, பார்த்திபனை அழைத்துக் கொண்டு உள்ளே சென்றாள்.
அவர்களை அமரச்சொன்ன மருத்துவர், “நீங்க சந்தேகப்பட்டது சரி தான். குழந்தை தான்” என்று கூறியதும், நளினிக்கு அதிர்ச்சியில் பேச்சு வரவில்லை.
பார்த்திபனும் அதிர்ச்சியில் உறைந்து போனான்.
“ஏன் இப்படி ஆச்சு?” என்று நளினி குரல் கம்ம கேட்க, “தெரியலனு தான் இப்போதைக்கு சொல்ல முடியும். உங்க உடல் நிலை, இல்ல மனநிலை காரணமா இருக்கலாம். இது தான்னு கரெக்ட்டா சொல்ல முடியாது.” என்று கூறினார் மருத்துவர்.
கலைந்து போன உருவமில்லாத அந்த சிசுவிற்காக, நளினியின் மனம் வெந்து நொந்தது.
“எங்க முதல் பொண்ணு நார்மல் டெலிவரி தான் டாக்டர்” என்று பார்த்திபன் வேதனையை மறைத்துக் கொண்டு கூற, “இருக்கலாம் மிஸ்டர் பார்த்திபன். ஆனா, அதே நிலம இப்பவும் இருக்கும்னு சொல்ல முடியாது இல்லையா? முதல் குழந்தைய பெத்துக்கும் போது இருந்த ஆரோக்கியம், இப்பவும் இருந்தா சரியா இருக்கும். ரீஸன் எதுனு டெஸ்ட் பண்ணி பார்க்கலாம். இப்போ இந்த மருந்த எல்லாம் கண்ட்னியூ பண்ணுங்க” என்று கூறி சில மருந்துகளை எழுதி கொடுத்தார்.
திரும்பவும் எப்போது வர வேண்டும் என்று கேட்டுக் கொண்டு, வீட்டிற்குக் கிளம்பி வந்தனர். வீட்டில் மகாலட்சுமி, தன் பேத்தி பவானிக்கு சாப்பாடு ஊட்டிக் கொண்டிருந்தார். உள்ளே வந்த இருவரையும், அவர் திரும்பியும் பார்க்கவில்லை.
பைரவிக்கு திருமணம் முடிந்து, இந்த இரண்டு மாதத்தில் அவர் ஒரு வார்த்தை கூட மகனிடமோ மருமகளிடமோ பேச வில்லை. பவானியை கவனித்து கொள்வார். அதுவும் நளினி பக்கத்தில் இருந்தால், எட்டவே நின்று விடுவார்.
இருப்பதை வைத்து சமைப்பார். நளினி சமைக்க வந்து விட்டால், அந்த இடத்திலிருந்து சென்று விடுவார். நளினிக்கு நாத்தனாரை தான் பிடிக்காது. மாமியாரை அவள் வெறுத்தது இல்லை. இரண்டு முறை ஏன் இப்படி? என்று கேட்டு விட்டாள். பதில் கிடைக்கவே இல்லை.
இன்றும் அவர் கண்டு கொள்ளாமல் இருக்க, பார்த்திபனால் தாங்க முடியவில்லை. இரண்டு மாதமாக குழந்தை தான் என்று நம்பி இருந்து, அது திடீரென கலைந்து போகவும், மருத்துவமனைக்கு ஓடி இருந்தனர்.
அவர்கள் சந்தேகம் உறுதியானதோடு, குழந்தையை இழந்தது அவர்களை வாட்டியது. அன்னையிடம் பேச வேண்டும் என்று பார்த்திபன் துடித்தான். பவானி சாப்பிட்டு முடித்து அவள் அன்னையிடம் வந்து விட, பார்த்திபன் தன் அன்னையிடம் சென்றான்.
மகாலட்சுமி கண்டு கொள்ளாமல் மதிய உணவிற்கு காய்களை நறுக்க ஆரம்பித்தார்.
“ம்மா.. நானும் நளினியும் ஹாஸ்பிடல் போனோம்” என்று கூறினான்.
மகாலட்சுமியும் எதுவும் பேசவில்லை. பார்த்திபன் விடாமல் பேசினான்.
“குழந்தைமா. நளினிக்கு அபார்ட் ஆயிடுச்சு” என்று சொல்ல, ஒரு நொடி மகாலட்சுமியின் கை வேலை செய்வதை நிறுத்தியது. அடுத்த நொடியே எழுந்து சென்று விட்டார்.
பார்த்திபனுக்கு இந்த பாராமுகம் வலிக்க தான் செய்தது. மனைவி மட்டுமே போதும் என்ற வாழ்க்கை வாழ்ந்தவனுக்கு, அன்னையின் அருமையும் புரிய ஆரம்பித்தது.
*.*.*.*.*.*.
“பைய்யவி சாக்ஸ் எங்க?” என்று சந்துரு கேட்க, அவசரமாக அதை எடுத்துக் கொண்டு பைரவி ஓடி வந்தாள்.
இரண்டு கால்களிலும் மாட்டி விட்டு, அவனை கிளப்பி முடிக்க, வீட்டு வாசலில் பள்ளி பேருந்து வந்து விட்டது. அவனுக்கு கையாட்டி அனுப்பி வைத்து விட்டு, உள்ளே வந்தவள் முகத்தில் அளவு கடந்த சோர்வு.
பிருந்தா வந்து சென்ற நாளில் இருந்து, இந்த நாள் வரை இப்படித் தான் இருக்கிறாள். அறையில் நுழைந்து, சந்துரு கலைத்து போட்டதை எல்லாம் சுத்தப் படுத்தினாள்.
தேவேந்திரன் உடற்பயிற்சி முடிந்து அவள் முன்னால் வந்து நிற்க, “காபி கொண்டு வரவா?” என்று கேட்டாள்.
கடமை… கடமையை அவள் தவற விட்டது இல்லை. அதை மட்டுமே பற்றுகோலாக பற்றிக் கொண்டு, வாழ்ந்து கொண்டிருக்கிறாள்.
அவளது வேலைகளில் அவள் தவறவில்லை. சந்துருவையும் தேவேந்திரனையும் நன்றாகவே கவனித்துக் கொள்கிறாள். அவர்களுக்கு வேண்டியதை பார்த்துப் பார்த்து செய்கிறாள். ஆனால், முன்பு இருந்த உயிர்ப்பு இல்லை.
தேவேந்திரன் கேட்ட போது, பதில் வரவில்லை. அவளாக சொல்லட்டும் என்று காத்திருந்தான். இன்று வரை பதில் கிடைக்கவில்லை. இன்று பதிலை வாங்காமல் விடக்கூடாது என்று முடிவு செய்தவன், “ம்ம்” என்றான்.
பைரவி கீழிறங்கி சென்றதும், அலுவலகத்தில் யாரையோ அழைத்து, தன் வேலைகளை பொறுப்பானவர்களிடம் ஒப்படைத்து விட்டான். பைரவி காபி எடுத்து வரும் போது, குளித்து முடித்து விட்டான். பைரவி காபியை கொடுத்து விட்டு திரும்ப, “பைரவி” என்றான்.
“என்ன?” என்று கேட்க, “இங்க வா” என்று பால்கனிக்கு அழைத்துச் சென்றான்.
அவளை அமர வைத்தவன், காபி கோப்பையை கவனித்தான். எதுவும் பேசாமல் அவன் குடித்து முடிக்க, பைரவி தன் கை விரல்களை பார்த்துக் கொண்டு அமர்ந்து இருந்தாள்.
“நீ ஏன் இப்படி இருக்கனு எனக்கு தெரிஞ்சாகனும் பைரவி” என்று கேட்க, பைரவி நிமிரவில்லை.
அவளருகில் நெருங்கி அமர்ந்தவன், கையை பிடித்துக் கொண்டான்.
“என் கிட்ட சொல்ல மாட்டியா?” என்று கெஞ்சும் குரலில் தேவா கேட்க, வேதனையுடன் கண்ணை மூடிக் கொண்டாள்.
‘எப்படிச் சொல்வேன்? சொன்னால் இவன் பிடித்திருக்கும் இந்த கையை தொடர்ந்து பிடித்திருப்பானா? போ என்று துரத்தி விட்டால்? என்ன செய்வேன்?’ என்று கேள்விகள் அடுக்கடுக்காக படையெடுக்க, அதற்கு பதில் கிடைக்காமல் பைரவி தவித்தாள்.
அவள் முகத்தில் வந்து போன வேதனைகளை கொண்டு, தேவேந்திரன் சில விசயங்களை ஊகித்தான். ஆனால், அதற்கு நேர்மாறாக பைரவி சொல்லப் போவது தெரிந்து இருந்தால்?
“ரொம்ப கஷ்டம்னா விடு கேட்கல” என்று அவள் கைகளில் ஆதரவாக தட்டி தேவா கூற, பைரவி உள்ளுக்குள் உடைந்தாள்.
அவனை பிரிய கூடாது என்று மனம் கூப்பாடு போட்டது. அது ஏன்? என்று தான் அவளுக்குப் புரியவில்லை. அவனது வெறுப்பை சம்பாதித்து விடுவோமோ என்ற பயம் அவளை ஆட்டிப் படைத்தது.
ஆனால், ஒரு நாள் உண்மை வெளி வந்து தானே தீரும். என்றோ ஒரு நாள் யாரோ சொல்லி, இவன் அறிந்து கொள்வதை விட, தானே சொல்லி விடலாம் என்ற முடிவுக்கு வந்தாள். கண்ணை திறந்து அவனை பார்த்தாள். அவன் அவள் முகத்தையே பார்த்துக் கொண்டு இருக்க, மீண்டும் கண்ணை மூடிக் கொண்டாள்.
அவன் முகத்தை பார்த்தால், உண்மையை சொல்லும் தைரியம் வராது என்று தோன்றியது. கண்ணை இறுக்கமாக மூடிக்கொண்டு பேச ஆரம்பித்தாள்.
“நான் நீங்க நினைச்ச மாதிரி படிக்காத ஏழைப்பொண்ணு எல்லாம் கிடையாது” என்று பைரவி கூற, “அது தெரியுமே” என்றான்.
“உங்களுக்கு தெரியாத விசயங்களும் இருக்கு” என்று கூறியவள், நிதானமாக இவனுடன் திருமணம் நடந்த காரணத்தை கூற ஆரம்பித்தாள்.
*.*.*.*.*.*.
படித்து முடித்து, ஒரு கல்லூரியில் நிர்வாகம் நடக்கும் இடத்தில், பைரவிக்கு வேலை கிடைத்தது. அதை அவள் நல்லவிதமாக செய்து, பதவி உயர்வை குறுகிய காலத்திலேயே அடைந்தாள்.
அப்போது அறிமுகமானவன் தான் வாசு. பைரவியை விட உயர் பதவியில் இருப்பவன். அந்த நிறுவனத்தின் முதலாளியின் நல்ல நண்பன். அப்படி பட்டவனுக்கு, பைரவியை ரொம்பப் பிடித்துப் போனது தான் அவளது துரதிர்ஷ்டம்.
உயர் பதவியில் இருப்பவன் என்று, பைரவி நல்ல முறையில் தான் பழகினாள். அவனுக்கு தான் பைரவியின் மீது காதல் வந்து தொலைத்து விட்டது.
தன் காதலை அவன் கூறியதும், முதலில் பயந்து விட்டாள்.
“என்ன இது?” என்று பதறி, பதில் சொல்லாமல் விலக ஆரம்பித்தாள்.
அதை புரிந்து கொள்ளாமல், வாசு அவளை தொடர, பயம் விலகி கோபம் வந்தது.
“இங்க பாருங்க சார். எனக்கு காதல் மேல எந்த நல்ல அபிப்பிராயமும் கிடையாது. உங்க மேல மதிப்பும் மரியாதையும் தான் இருக்கு. நீங்க இப்படி என் பின்னாடி அலைஞ்சா, அது கெட்டுப் போக வாய்ப்பு இருக்கு. புரிஞ்சுக்கிட்டு நீங்களா விலகிடுங்க” என்று பட்டென கூறி விட்டு, பைரவி ஒதுங்கிக் கொண்டாள்.
வேலை சம்பந்தமாக, அவனிடம் பேச வேண்டிய நேரங்கள் ஏற்படத் தான் செய்யும். அதை கடமையாக கழித்து விட்டு சென்று விடுவாள். பார்வதி கூட பைரவியை கேட்டு இருக்கிறாள்.
“ஏன்டி வாசுக்கு என்ன குறச்சல்? நல்ல வேலை. நல்ல மனுசர். பார்க்கவும் அழகா தான் இருக்கார்” என்று கேட்க, “அதுனால எல்லாம் ஒருத்தர விரும்பிட முடியாது பாரு. எனக்கு இப்போ அந்த மாதிரி எண்ணம் எதுவும் இல்ல. வேலை பார்க்க வரேன். அத பார்த்துட்டுப் போறேன். அவ்வளவு தான்” என்று கூறி விட்டாள்.
வாசு பைரவியின் பேச்சில் அமைதியாக இருந்தாலும், அவ்வப்போது தன் காதலை காட்ட தவற வில்லை. அன்று, வீட்டில் சமையல் வேலையில் பைரவி, அன்னைக்கு உதவிக் கொண்டிருக்க, ஹாலில் அவளது கை பேசி இசைத்தது.
அதை எடுத்துப் பேசியவள் நளினி தான். என்ன பேசினார்கள் என்று, இது வரை பைரவிக்குத் தெரியாது. கைபேசி உடைந்து சிதறும் சத்தம் கேட்டுத் தான், அவசரமாக வெளியே வந்தாள்.
“என் போன ஏன் உடச்சீங்க ?” என்று பைரவி கோபமாக கேட்க, “ஆகா.! அதுல தான உன் காதலனோட கொஞ்ச முடியும். அத உடச்சுட்டா உனக்கு கோபம் வரத்தான் செய்யும்” என்றாள் நளினி .
“அண்ணி…” என்று பைரவி அதிர்ச்சியாக, “என்ன குட்டு உடஞ்சு போச்சா?” என்று எகத்தாளமாக கேட்டாள்.
“யார சொல்லுற நீ?” என்று மகாலட்சுமி கேட்க, “உங்க அருமை மக கிட்டையே கேளுங்க. காலாகாலத்துல கல்யாணம் பண்ணி அனுப்பி இருந்தா, இப்படி சந்தி சிரிச்சுருக்குமா…? எவனோ ஒருத்தன் போன போட்டு, நீ உம்னு ஒரு வார்த்தை சொல்லு, உன் வீட்டுக்கு வந்து பொண்ணு கேட்குறேங்குறான். யாரு கொடுத்த இடம் இது? உங்க மக கொடுத்தது தான?” என்று கேட்ட நளினி, யாரையும் பேச விடாமல் வாய்க்கு வந்தபடி பேசிக் கொண்டே போனாள்.
பதிலுக்கு பைரவி ஒரு வார்த்தை சொன்னால், அதை பிடித்துக் கொண்டு ஆயிரம் வார்த்தை பேசித் தீர்த்தாள். பார்த்திபன் வந்து விட, பேச்சு வலுத்தது. தாங்க முடியா வேதனையில், தலையை பிடித்துக் கொண்டு அமர்ந்து விட்டாள்.
“அது யாரு பைரவி?” என்று மகாலட்சுமி கேட்க, “நீங்களுமா?” என்று பார்த்தாள்.
மகாலட்சுமி அசரவில்லை. அவர் தைரியமானவர் தான். ஆனால், அந்த தைரியம் எல்லாம் கணவனோடு சேர்ந்து போய் விட்டது. இப்போது மகள் மீது விழுந்த அவச்சொல்லை தாங்க முடியாமல், அவரே கேள்வி கேட்டார்.
“சொல்லு . யார் அது?” என்று கேட்க, “வாசு” என்றாள்.
“எப்படி தெரியும்?” என்று கேட்க, “நான் வேலை பார்க்குற இடத்துல தான், அவரும் வேலை பார்க்குறார்” என்று கூற, நளினி வாயில் அடித்துக் கொண்டாள்.
“அடிப்பாவி..! பார்த்தீங்களா உங்க தங்கச்சிய? என்னமோ உங்க தங்கச்சி ஆபிஸ் விட்டா வீடு… வீடு விட்டா ஆபிஸ்னு இருப்பானு சொன்னீங்க?. ஆபிஸ்லயே இப்படி ஆள் பிடிச்சுட்டுத் தான், வேலைய விடவே மாட்டேன்னு அடம்பிடிக்குறானு கண்டோமா?” என்று நளினி பேச, “அண்ணி மைண்ட் யுவர் வேர்ட்ஸ்” என்று பைரவி சீறினாள்.
“அண்ணி கிட்ட ஏன் சண்டைக்குப் போற? கூட வேலை பார்க்குறவன் கிட்ட உன் செல் போன் நம்பர் ஏன் போகுது?” என்று பார்த்திபன் கேட்டான்.
பைரவி உடன் பிறந்தவனை வெறுப்போடு பார்த்தாள்.
மனைவிக்காக எதையும் செய்யலாம். உடன் பிறந்தவளின் மீது சேற்றை வாரி இறைக்கும் போது, அதை கண்டு கொள்ளாமல் நிற்பது தான் பதி தர்மமா? அவனை அறியா பார்வை பார்த்தவள், அவன் கேட்டதுக்கு பதில் சொல்லவில்லை.
“பதில் சொல்ல சொல்லுங்க மா. இவ நம்பர் அவன் கிட்ட ஏன் இருக்கு? கால் பண்ணி நீ சரினு சொல்லுனு கேட்குறான். ஏன்? அவனுக்கு இவ மேல விருப்பம் இருக்குதா? அது இவளுக்குத் தெரியுமா தெரியாதா?” என்று பார்த்திபன் கேள்விகளை அடுக்கினான்.
“பதில் சொல்லு பைரவி” என்று மகாலட்சுமி கேட்க, தலையை பிடித்துக் கொண்டு பதில் சொன்னாள்.
“வேலை விசயமா பேச தான் நம்பர் கொடுத்தேன். இப்ப என்ன பேசி வச்சார்னு எனக்குத் தெரியல. ஆமா. அவருக்கு என் மேல விருப்பம் இருக்கு. அது எனக்கு தெரியும். ஆனா ம்மா.. எனக்கு விருப்பம் இல்லனு சொல்லிட்டேன் மா. என்னை நம்புங்க” என்று கெஞ்சினாள்.
“அடேங்கப்பா…! போன் போட்டு பேசுவானாம். பொண்ணு கேட்டு வரேன்னு சொல்லுவானாம். ஆனா, இந்தம்மாவுக்கு விருப்பம் இல்லனு சொல்லிடுச்சாம். விருப்பம் இல்லங்குறத தான் தினமும் போன்ல பேசுறீங்களோ?” என்று நளினி கேட்க, “சட் அப் அண்ணி. உங்களுக்கு என்ன கேள்வி கேட்க உரிமை இல்ல” என்று பைரவி கத்தி விட்டாள்.
“பைரவி…” என்று பார்த்திபன் அதட்ட, “நீயும் தான். வாய மூடு. நீ யாரு என்னை கேள்வி கேட்க? கூட பிறந்துட்டா நீ பேசுறத எல்லாம் பொறுத்து போகனுமா? எல்லாத்துக்கும் எல்லை இருக்கு. நீ அத தாண்டிட்ட” என்று பார்த்திபனையும் விடாமல் விலாசி விட்டாள்.
அப்படியும் அடங்காமல் நளினி பேசி, இறுதியில் பைரவிக்கு திருமணம் முடிப்பதில் பேச்சு வந்து நின்றது. அதற்கு ஒப்புக் கொண்டால், அவளை விட்டு விடுவர். இல்லை என்றால், நளினியே ஊர் முழுக்க பைரவியின் பெயரை நாசம் செய்து விடுவதாக, மறைமுகமாக எச்சரிக்கை விடுத்தாள்.
போராடி தோற்ற பைரவி, அன்னையின் காலுக்கடியில் அமர்ந்து கொண்டாள். நிமிர்ந்து அவர் முகம் பார்த்து, “நான் இந்த கல்யாணத்துக்கு சம்மதிச்சா நீங்க நிம்மதியா இருப்பீங்களாமா?” என்று கேட்டாள்.
மகள் இங்கே நரக வாழ்க்கை வாழ்வதை விட, திருமணம் முடித்து செல்வதே மேல் என்று தோன்றிவிட்டது அவருக்கு. அவரும் மகள் படும் பாட்டை பார்த்துக் கொண்டு தானே இருக்கிறார். அதனால், “ஆமாம்” என்று கூறி விட, பைரவி சம்மதித்தாள்.
அடுத்த நாளே வந்து, “இன்னும் மூன்று நாட்களில் உனக்கு திருமணம் ” என்று பார்த்திபன் கூற, அதிர்ச்சியாக பார்த்தாளை தவிர வாயைத் திறக்கவில்லை.
அலுவலகத்தில் விடுமுறை சொல்லி விட்டு, வீட்டில் தான் இருந்தாள். திருமணத்திற்கு முதல் நாள் தான், இரண்டாவது மனைவியாக மணம் முடிக்கப் போகிறோம் என்று தெரிந்தது.
அந்த நொடி, பைரவி வீட்டை விட்டே சென்று விட்டால் என்ன? என்று யோசிக்க, அதற்கும் நளினி விடவில்லை. இவள் ஓடி விட்டால், மகாலட்சுமிக்கு தான் அவமானம். ஊரில் கல்யாணத்தை மறுத்து, காதலனோடு ஓடி விட்டதாக கதை கட்ட நளினி தயார் நிலையில் இருந்தாள்.
உங்களால் தானே இவ்வளவும்? என் வாழ்க்கையை காப்பாற்றாமல் இருக்கிறீர்களே? என்று மகாலட்சுமியை குற்றம் சாட்டும் பார்வையோடு, மணமேடை ஏறி விட்டாள்.
*.*.*.*.*.*.*.*.
அத்தனையும் கொட்டி முடிக்கும் வரை, தேவேந்திரன் அவளது கையை விடாமல் பிடித்துக் கொண்டு அமர்ந்து இருந்தான்.
“இது கட்டாய கல்யாணம். உங்கள எப்படி கட்டாய படுத்துனாங்களோ அப்படித் தான் என்னையும்” என்று பைரவி கூறஃ “புரியுது” என்றான் ஆதரவாக.
“அதுல… நீங்க.. நீங்க சொன்னது.. ஐ மீன் உங்களுக்கு சொன்னது எல்லாம் பொய்” என்று பைரவி தடுமாறினாள்.
தேவேந்திரன் புருவம் சுருங்க, அவளையே பார்த்தான். கண்ணை திறந்து பார்க்காமலே அவனது நிலையை உணர்ந்தவள், “நான் படிக்காதவ ஏழை இதெல்லாம் விட பெரிய பொய் என்னனா….” என்று கூற முடியாமல் எச்சிலை விழுங்கியவள், “எனக்கு குழந்தை பெத்துக்குற பாக்கியம் இல்லனு அண்ணி சொன்னது தான் . அது தான் பெரிய பொய்” என்று கூறி நிறுத்தினாள்.
“வாட்…????” என்று அதிர்ச்சியாக கேட்ட தேவேந்திரன், அதிர்ச்சி தாங்காமல் எழுந்து நின்று விட்டான்.
இவ்வளவு நேரம் தேவேந்திரன் கைகளுக்குள் பத்திரமாக இருந்த தன் கை, காற்றில் ஆதரவில்லாமல் அல்லாடுவதை வேதனையோடு பார்த்தாள் பைரவி.
தொடரும்.

