Loading

பிருந்தா கன்னத்தில் கை வைத்து அமர்ந்து இருக்க, மல்லிகா மகளின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தார்.

“எதாச்சும் சொல்லுறியா?” என்று மல்லிகா பொறுமையிழந்து கேட்க, “போ மா அங்குட்டு. செம்ம கோவத்துல இருக்கேன். அந்த பைரவி கிட்ட என்னை கோர்த்து விட்டதுக்கு, உன்னை உண்டு இல்லனு ஆக்கனும். போனா போகுதுனு விட்டா, நீ என்னை திட்டுற” என்று பிருந்தா சீறினாள்.

“வந்ததுல இருந்து இத தான்டி நீ சொல்லுற. அவ என்ன சொன்னானு மட்டும் சொல்ல மாட்டேங்குற” என்று மல்லிகா சலித்துக் கொண்டார்.

ஹாலில் அமர்ந்து ஆங்கில நாளிதழை புரட்டிக் கொண்டிருந்த சேகரன், எழுந்து சென்று வாசலில் அமர்ந்து கொண்டார்.

இவர்கள் பேச்சு காதில் விழாத தூரத்துக்கு சென்று அமர்ந்தவரின் மனதில், நிம்மதி தோன்றியது. தேவேந்திரன் இந்த வீட்டை வீட்டு சென்றதில், அவருக்கு வருத்தம் தான். முக்கியமாக சந்துரு இல்லாத வீடு வீடாகவே இல்லை.

ஆனால், தனக்காகப் பார்த்தால் மகனது வாழ்க்கை என்னாவது? அதனால் தான் சேகரன் தடுக்கவில்லை. காலையில் புயல் போல் கிளம்பிய மகள், பேயறைந்தது போல் திரும்பி வந்ததை பார்க்கவும், அவர் மனதில் சொல்லவொன்னா நிம்மதி எழுந்தது.

மகனை இரண்டாம் திருமணத்திற்கு சம்மதிக்க வைக்க அவர் செய்த போரட்டங்களை விட, மகளையும் மனைவியும் சரி கட்டத் தான் அவர் நிறைய போராட வேண்டியிருந்தது. அதனால் தான், மகன் சம்மதித்த மூன்றாவது நாளே திருமணத்தை முடித்து விட்டார்.

தாமதித்தால், மல்லிகா போதும், மகன் மனதை கலைத்து விட. இன்று பிருந்தா வந்த கோலம் அவருக்கு பாவமாக தோன்றுவதற்கு பதில், சந்தோசத்தை கொடுத்தது. மகன் நன்றாக வாழ்ந்து கொண்டிருக்கிறான் என்று அதிலேயே புரிந்து கொண்டவர், தன் வேலையை பார்க்க ஆரம்பித்து விட்டார்.

“இங்க பாரு… இவருக்கும் இந்த குடும்பத்துக்கும் சம்பந்தமே இல்லங்குற மாதிரி, வெளிய போய் உட்கார்ந்து பேப்பர் படிக்குறத” என்று மல்லிகா தலையில் அடித்துக் கொள்ள, “இவர சொல்லனும் மா. அந்த பைரவிய தேடிப் பிடிச்சு கட்டி வச்சது இவர் தான..? ப்ளான் பண்ணி என்னை அசிங்கப் பட வச்சுட்டார்” என்று பிருந்தா பல்லை கடித்தாள்.

“அப்படி என்ன தான் நடந்துச்சு‌னு சொல்லேன் ” என்று மல்லிகா கேட்க, “என்ன நடந்துச்சா? நான் அசிங்கப் பட்டேன். அதான் நடந்துச்சு. இப்படி பெத்தவங்க கிட்ட இருந்து பிள்ளைய ஏன் பிரிக்குறனு கேட்டா, உனக்கு அத கேட்க உரிமை இல்லனு சொல்லிட்டா” என்று கூறினாள்.

“உரிமைய பத்தி அவ கிட்ட சண்ட போட்டா இப்படி தான். நீ முழுசா சொல்லு” என்று மல்லிகா கேட்க, பிருந்தா அத்தனையும் ஒப்பித்து முடித்தாள்.

“ஆனா அதெல்லாம் விட, அவ பார்த்த உடனே உன் மகன் வாய மூடினான் பாரு…! அதான்மா என்னால தாங்கவே முடியல.  நீ பேசுறப்போ என்னைக்காவது அவன் வாய மூடி இருக்கானா?” என்று கேட்க, “இல்ல பதிலுக்குப் பேசிடுவான்” என்று மல்லிகா கூறினார்.

“ம்ம்ம்… என் கூட பிறந்தவன் தானா இதுனு இருந்துச்சு. என் மகன், என் புருஷன், என் வீடு, போ வெளியனு கழுத்த பிடிச்சு தள்ளாத குறையா சொல்லிட்டு போயிட்டா” என்று ஆதங்கமாக பேசினாள் பிருந்தா.

“எப்படி டி?” என்று மல்லிகா கேட்க, “என்ன எப்படி?” என்று பிருந்தா எரிச்சலாக கேட்டாள்.

“எப்படி அடுத்தவ பெத்த மகன, தான் புள்ளனு சொல்லுறா இவ?” என்று மல்லிகா தெளிவாக கேட்க, “அதான்மா எனக்கும் புரியல” என்று கூறினாள்.

“புருஷன் காரன் வேற பொண்ணு கூட குடும்பம் நடத்தி, புள்ளைய பெத்து, அந்த புள்ள இவ கண்ணு முன்னாடி நிக்குது. ஆனா, அவ வெறுப்ப காட்டாம, பாசத்த காட்டுறா. என்னால நம்பவே முடியல பிருந்தா” என்று மல்லிகா அதிர்ச்சியாக கூற,

“இன்னொன்னும் இருக்கு. அவ படிக்காதவ கிடையாது. எதோ பத்தாவது படிச்சுட்டு, குடும்ப கஷ்டத்துக்கு வேலைக்கு போறானு சொன்னது பொய்யோனு தோனுது” என்று பிருந்தா யோசனையாக கூறினாள்.

“எனக்கும் அப்படித் தான் தோனுது. ஆளு ரொம்ப நாசுக்கா இருக்காளே, இவ போய் கூட்டுற பெருக்குற வேலை பார்க்குறானா, யாரும் நம்ப மாட்டாங்களேனு சந்தேகமா இருந்துச்சு”

“கூட்டுற வேலையா? எம்மா உன் கிட்ட யாரு இப்படிச் சொன்னது?” என்று பிருந்தா அதிர்ச்சியாக கேட்டாள்.

“இல்லடி, படிக்காதவளுக்கு வேற என்ன வேலை குடுப்பாங்கனு நினைச்சேன்” என்று மல்லிகா இழுக்க, “நல்லா நனைச்சு காய போட்ட. சும்மா எதோ கணக்கு எழுதுற வேலை, பெருசா சம்பளம் கிடையாதுனு அந்த நளினி சொன்னா. நானும் அதான் அந்த பைரவிய பெருசா நினைக்காம விட்டேன்” என்றாள்.

“இருந்தாலும் இவ விசயத்த அலசி ஆராய்ஞ்சு இருக்கனும். விட்டுட்டேன்” என்று மல்லிகா புலம்ப, பிருந்தா தீவிரமாக எதையோ யோசித்துக் கொண்டிருந்தாள்.

“இனிமே அந்த பைரவி கிட்ட என்னைக் கோர்த்து விடாத. உன் வீட்டு பஞ்சாயத்த நான் பார்த்தா, என் வீடு என்னாகுறது? இனி நீயாச்சு அவளாச்சு. மதிய சாப்பாடு ரெடியானு பாரு. சாப்பிட்டு என் வீட்டு பக்கம் நடைய காட்டுறேன். இப்போ கொஞ்ச நேரம் தூங்குறேன். தலை வலிக்குது” என்று கூறி, அன்னையிடமிருந்து வெற்றிகரமாக கழண்டு கொண்டாள் பிருந்தா.

*.*.*.*.*.*.*.*.

மாலை பைரவி தோட்டத்தில் அமர்ந்து இருந்தாள். தங்கம் தோட்டத்தின் செடிகளுக்கு தண்ணீர் விட்டுக் கொண்டிருந்தார். பைரவிக்கு தோட்டம் பற்றி எல்லாம் நிறைய தெரியாது. அவளது வீட்டில் பூச்செடிகளை வளர்த்து இருக்கிறாள். இங்கு தான் இவ்வளவு பெரிய தோட்டத்தை பார்க்கிறாள். அதனால் வேடிக்கை பார்த்து ரசிப்பது மட்டுமே அவளது வேலை.

எப்போதும், இது என்ன? அது என்ன? என்று கேள்வி கேட்பவள், இன்று அமைதியாக அமர்ந்து இருப்பதை பார்க்க, தங்கத்திற்கு வருத்தமாக இருந்தது. காலையில் பிருந்தா பேசிவிட்டு சென்றதை, கயல் கேட்டு இருந்தார். அதை கணவரிடமும் சொல்லி இருந்தார்.

கலகலவென பேசிக் கொண்டில்லை என்றாலும், உயிர்ப்போடு நடமாடிக்க கொண்டிருந்த பைரவியை, அவருக்கு ரொம்பவே பிடிக்கும். இன்று அமைதியாக அமர்ந்து இருந்ததில், பிருந்தாவை முடிந்த மட்டும் திட்டிக் கொண்டிருந்தார்.

சந்துரு தூங்கி விட்டான் என்று கயல் அவனை தூக்கிக் கொண்டு சென்று விட்டார். தனியாக அமர்ந்து இருந்த பைரவி, பிருந்தா சொன்னதை அசை போட்டுப் பார்த்தாள்.

தன்னை படிப்பறிவில்லாதவள் என்று அவள் கூறியது மனதில் நின்றது. நளினி கூறியிருக்க வேண்டும். மூளை ஒரே நொடியில் விடையை கண்டுபிடித்து விட்டது. அடுத்ததாக சொத்துக்கள் பற்றிய பேச்சு.

எப்படியும், நளினி பைரவிக்கு என்று எதையும் செய்து விடப்போவது இல்லை. பைரவியும் அதை விரும்ப மாட்டாள். சொத்துக்கள் இல்லை என்று கூறியிருக்கிறாள். ஏன்? சீர் செய்யும் வேலையை, யாரும் அவள் தலையில் கட்டி விடக்கூடாது என்று இருக்கலாம். மூளை இப்போதும் பதிலை கண்டுபிடித்தது.

‘இது மட்டும் தானா? இல்லை இன்னும் நிறைய சொல்லி இருக்கிறாளா?’

பைரவி கண்ணை மூடி, பின்னால் இருந்த மரத்தில் சாய்ந்து கொண்டாள்.

‘இவ்வளவு பொய் சொல்லியாவது, தன்னை திருமணம் முடித்து அந்த வீட்டை விட்டு துரத்தியே ஆக வேண்டுமா?’

அவளுக்கு இதைத் தான் ஜீரணிக்க முடியவில்லை.

எல்லோரும், குறை இருந்தால் மறைத்து நல்ல வாழ்க்கை அமைய வேண்டும் என்று போராடுவார்கள். ஆனால், நளினி இல்லாத குறைகளை இருப்பதாகக் கூறி, இந்த திருமணத்தை நடத்தி இருக்கிறாள்.

இவர்கள் என்னைப் பற்றி விசாரிக்க கூட நேரம் கொடுக்காமல், மூன்றே நாட்களில் திருமணத்தை முடித்து விட்டாள். தேவேந்திரனுக்கு அவளது பெயர் கூட தெரியவில்லையே.

இந்த லட்சனத்தில், இன்னும் எத்தனை பொய்களை சொல்லி இருக்கிறாளோ? யோசித்துக் கொண்டே அமர்ந்து இருக்க, நாசியில் காபியின் மணம் நுழைந்தது.

கண்ணைத் திறந்து பார்த்தாள். கையில் இரண்டு கப்புகளோடு, தேவேந்திரன் நின்று இருந்தான். அவளிடம் ஒன்றை கொடுக்க, மறுக்காமல் வாங்கிக் கொண்டாள்.

அவள் பக்கத்தில் இடைவெளி விட்டு அமர்ந்து கொண்டான். மௌனமாக இருவரும் காபியை குடித்து முடித்தனர்.

“என்ன ஆச்சு?” என்று தேவேந்திரன் கேட்க, பைரவி பதில் சொல்லவில்லை.

சில நிமிடங்கள் மௌனத்தில் கழிய, மீண்டும் தேவேந்திரனே பேசினான்.

“பிருந்தாவ அந்த வாங்கு வாங்குன. இப்ப ஏன் இவ்வளவு சோகமா இருக்க? அவ படிக்காதவனு சொன்னதாலயா? என் கிட்டையும் அப்பா அப்படித் தான் சொன்னார். ஆனா, நான் கேட்கும் போது நீ வேற சொன்ன. அதுல அப்பா எதோ பொய் சொல்லி இருக்கார்னு நினைச்சு விட்டுட்டேன்.”

“மாமா வா?” என்று பைரவி ஆச்சரியமாக கேட்க, “ம்ம்..” என்றான்.

பைரவிக்கு ஒன்றும் புரியவில்லை.

‘நளினி பொய் சொன்னால், அதில் எதோ அர்த்தம் இருக்கிறது. மாமா ஏன் பொய் சொல்ல வேண்டும்?’

புரியாமல் அவனிடமே கேட்டாள்.

“மாமா ஏன் பொய் சொல்லனும்?” என்று கேட்க, “அதுக்கு நான் தான் காரணம்” என்று கூறிய தேவேந்திரன் எழுந்து கொண்டான்.

பைரவிக்கு இன்னும் புரியவில்லை. அவளும் எழுந்து கொண்டாள். கயல் வந்து கோப்பைகளை வாங்கிக் கொள்ள,

“சந்துரு தூங்கிட்டானா கா?” என்று பைரவி கேட்டாள்.

“ம்ம்ம்… உங்க ரூம்ல படுக்க வச்சுட்டேன்மா” என்று கூறி விட்டுச் சென்று விட்டார்.

பைரவியின் இந்த கரிசனம், தேவேந்திரனுக்கு பிடித்திருந்தது.

“ஏன் சந்துரு மேல இவ்வளவு பாசம்?” என்று பல நாளாக தோன்றிய கேள்வியை இன்று கேட்டு விட்டான்.

அவனை பார்த்து புன்னகைத்தவள், “நான் பலருக்கு வேண்டாதவளா இருக்கும் போது, வீட்டுக்குள்ள வந்ததும் என்னை பார்த்து உண்மையா சிரிச்சவன் இவன் மட்டும் தான். உங்க அம்மாவுக்கு வேண்டாத மருமகள். உங்க தங்கச்சிக்கு வேண்டாத அண்ணி. மாமாவுக்கு நான் எப்படி பட்டவளோனு பயம். அப்படி இருந்த வீட்டுல, என்னை பார்த்து உண்மையா சிரிச்சு, சந்தோசத்த வெளி காட்டுன சந்துருவ எனக்கு பிடிக்காம போகுமா?” என்று விளக்கத்தை கூறி விட்டு, அவனிடமே கேள்வி கேட்டாள்.

அவளது பதிலில் ஆமோதிப்பாக தலையாட்டினாலும், தன்னை பற்றி ஒன்றும் சொல்லவில்லையே என்ற கேள்வி அவன் மனதில் எழுந்தது. அதை கேட்க வேண்டாம் என்று ஒதுக்கி வைத்து விட்டு, அவளோடு நடந்தான்.

மாலை வெயில் இறங்க ஆரம்பித்தது. அவ்வளவு நேரம் இருந்த வெப்பம் விடை பெற்று, காற்று சில்லென மாற ஆரம்பித்தது. அதை அனுபவிக்காமல், இருவரும் தங்களது யோசனையில் மூழ்கி இருந்தனர்.

“இன்னும் நீங்க சொன்னது எனக்குப் புரியல. மாமா ஏன் பொய் சொன்னார்னு சொன்னீங்க?”

“சொன்னனே நான் தான் காரணம் னு”

“எப்படி?”

“அது… உனக்கு முழுசா சொன்னா தான் புரியும். பட் இப்போதைக்கு அது வேணாம். நீ கேட்டதுக்கு சார்ட்டா பதில் சொல்லுறேன். நான் கல்யாணம் பண்ணிக்கனும்னா பொண்ணு இப்படி இருக்கனும்னு கண்டீஷன் போட்டேன். அப்பாவும் அதே மாதிரி தான் நீ இருக்கனு சொல்லி காட்டினார். சரினு நானும் கல்யாணம் பண்ணிட்டேன்”

பைரவிக்கு கொஞ்சம் விளங்கியது. படிக்காத பெண், ஏழைப்பெண்ணாக இருந்தாலும் பரவாயில்லை என்று தேவேந்திரன் கூறியிருக்க வேண்டும். அதனால், இவளை படிக்கவில்லை ஏழை என்று பெயர் கட்டி, திருமணம் செய்து வைத்து விட்டார்கள்.

தேவேந்திரன் பட்டென பல படிகள் அவள் மனதில் உயர்ந்து விட்டான். இரண்டாம் திருமணத்தில், மணமாகாத சின்ன பெண் தான் வேண்டும் பல வயதானவர்கள் செய்யும் அட்டூழியங்களை, அவள் பார்த்து இருக்கிறாள்.

அவர்களது வயது குணமெல்லாம் அவர்கள் கண்ணுக்குத் தெரியாது. புது மாப்பிள்ளையாகி விட்டேன். புது பெண் தான் வேண்டும் என்று சட்டமாக கேட்பார்கள். அப்படி இருக்க, தேவேந்திரன் எந்த குறையிருந்தாலும் ஏற்றுக் கொள்ளத் தயாராக இருந்திருக்கிறான்.

அதில் அவளுக்குள் சிறிய அளவில் நிம்மதி ஏற்பட்டது.

“அப்படி என்னலாம் கண்டீஷன் போட்டிங்க?”

“நிறைய சொன்னனே. ஆனா, மெயினா என் மகன அவளோட சொந்த மகனா பார்த்துக்கிறவளா இருந்தா மட்டுமே கட்டிப்பேன். இல்லையா விட்ருங்கனு சொன்னேன்”

‘பார்ரா.. ‘ என்று நினைத்தவள், “சரி நீங்க போட்ட கண்டீஷனுக்கு எல்லாம் கரெக்ட்டா நான் பொருந்துறனானு பார்த்துட்டுத் தான கல்யாணம் பண்ணி இருக்கனும்?” என்று கேட்டாள்.

தேவேந்திரன் பதில் சொல்லாமல் அவளை கூர்ந்து பார்த்தான். பைரவிக்கு அந்த பார்வைக்கு அர்த்தம் விளங்கவில்லை.

‘ஏன் இப்படிப் பார்க்கிறான்?’ என்று குழம்பிப் போய் நின்றாள்.

“அதுக்கு அவசியம் ஏற்படல” என்று தேவேந்திரன் தன்மையாக கூற, “ஏன்?” என்றாள்.

‘மாமா சொன்னதால் அப்படியே நம்பி விட்டதாக கூறுவானோ? அப்பாவின் மீது நம்பிக்கை வைத்து தன்னை திருமணம் முடித்து கொண்டவன் அவன். அப்படி தான் இருக்கும்’ என்று நினைத்து கேட்க, அவன் வேறு பதில் சொன்னான்.

பதிலை கேட்டவளின் காலுக்கடியில் இருந்து பூமி நழுவியது. அன்றைய நாளின் இரண்டாவது அதிர்ச்சி. காலையில் பிருந்தா பேசியதையே தாங்க முடியாமல் அமர்ந்து இருந்தாள். இப்போது தேவேந்திரன் கூறியதை கேட்டதும் அதிர்ச்சி தாங்காமல், இதயம் வெடித்து சிதற தயாராகி விட்டது.

அவசரமாக இதயத்தை கையில் அழுத்தி காத்தவள், நிமிர்ந்து தேவேந்திரனை பார்க்காமல் வீட்டிற்குள் ஓடி ஒளிந்தாள். தேவேந்திரன் தான், ஒன்றும் புரியாமல் அங்கேயே நின்று இருந்தான்.

தொடரும்.

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 3

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
1
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்