Loading

தேவேந்திரன் பைரவியை முறைத்துக் கொண்டு நின்றிருந்தான். பைரவி அவனது முறைப்பை கண்டு கொள்ளாத பாவனையில் நின்று இருந்தாள். இருவரையும் மாறி மாறி பார்த்தபடி, சந்துரு மெத்தையில் நின்று இருந்தான்.

“சந்துரு..” என்று, தேவா பைரவியை பார்த்துக் கொண்டே மகனை அழைக்க, அவன் அப்பாவியாக அப்பாவை பார்த்தான்.

“சொல் பேச்சு கேட்காதவங்க கூட டூ விடனும் தான?” என்று கேட்க, “ஆமா பா” என்றான்.

“அப்ப உன் பைரவி கூட டூ விடு” என்று கூறி விட்டான்.

சந்துரு சற்றும் யோசிக்காமல் டூ விட தயாராக, பைரவி இப்போது தேவேந்திரனை முறைத்தாள்.

“இப்ப எதுக்கு சந்துருக்கும் எனக்கும் சண்டை இழுத்து விடுறீங்க?” என்று பைரவி கேட்க, “அப்ப ஒழுங்கா சொல் பேச்சு கேட்டு கிளம்பு. எங்கப்பா சொன்னா மட்டும் மறு பேச்சு பேசாம கிளம்புவாளாம். உன் அப்பா சொன்னா மட்டும் கேட்க மாட்டாளாம். என்னனு கேளு சந்துரு” என்று மகனை துணைக்கு அழைத்தான்.

“என்ன பைய்யவி?” என்று அவன் கேட்டு வைக்க, பைரவிக்கு சிரிப்பு வந்தது.

‘அப்பாவுக்கு ஏத்த மகன்’ என்று நினைத்தாள்.

“சரி நான் உங்க கார்ல போயிட்டு வரேன் போதுமா?” என்று பைரவி சலிப்பாக சொல்ல, “அதென்ன உங்க கார்? நம்ம கார்னு சொல்லச் சொல்லு சந்துரு” என்றான் தேவா.

“முடியல… இப்படியே பேசிட்டு இருந்தா எனக்கு நேரமாகும். நான் கிளம்புறதா வேணாமா?” என்று பைரவி கேட்க, “சரி சரி உன் பைரவி பேச்ச கேட்டதால பழம் விட்டு பேசு. நானும் கிளம்புறேன்” என்று மகனிடமே பேசி விட்டு தேவேந்திரன் சென்று விட, பைரவி சிரிப்போடு அலுவலகம் கிளம்பினாள். தேவா புன்னகையுடன் வழியனுப்பி வைத்தான்.

*.*.*.*.*.*.*.*.

ஒரு வாரம், எப்படிக் கடந்ததோ தெரியாது. அத்தனை இன்பமான நாட்களை, தந்தை இருந்த போது தான் பைரவி அனுபவித்து இருக்கிறாள். இந்த ஒரு வாரமும் சந்துருவை வைத்து சண்டை போட்டுக் கொண்டாலும், தேவேந்திரன் பைரவிக்கு இடையில் நல்ல நட்பு உருவாகி இருந்தது.

மெல்லிய சங்கீதமாய் அவர்கள் உறவு சென்று கொண்டிருந்தது. அன்று பைரவிக்கு விடுமுறை. பொறுமையாக எழுந்து, கயலுடன் பேசிக் கொண்டே சமையல் வேலையை கவனித்துக் கொண்டிருந்தாள்.

அவளுக்கு சமையல் தெரியாது. கற்றுக் கொள்ள வேண்டிய அவசியமோ ஆர்வமோ அவளுக்கு வந்ததில்லை. கயலின் சமையலில் ஈர்க்கப்பட்டு, அதை கற்றுக் கொள்ள ஆரம்பித்தாள்.

சந்துருவுடன் தேவேந்திரன் காலை உணவிற்கு வந்து அமர, கயலும் பைரவியும் உணவு மேசைக்கு வந்தனர். பைரவி தான் இப்போது இருவரையும் பார்த்து பார்த்து கவனித்துக் கொள்கிறாள்.

மல்லிகா, எதை மருமகள் கையில் கொடுத்து விடக்கூடாது என்று பிரம்ம பிரயத்தனம் செய்தாரோ, அது இன்று தானாகவே அவள் கைக்கு வந்தது.

இருவருக்கும் பரிமாறி விட்டு, அவளும் அமர்ந்தாள். அந்த நேரம் அத்தனை இனிமையாக இருக்க, கயல் இங்கீதமாக ஒதுங்கிக் கொண்டார்.

சந்துருவிற்கு பைரவியும் தேவாவும் ஊட்டி விட்டு, பொதுவாக பேசிக் கொண்டே சாப்பிட்டு முடித்தனர். மனம் நிறைவாக இருக்க, பைரவி அடுத்த வேலைகளை பார்க்க போக, சந்துரு வெளியே விளையாடச் சென்றான்.

நாட்கள் இனிமையிலேயே சென்றால், இறைவனை மறந்து விடுவோமாம். முக்கியமாக, மேலே அமர்ந்து கொண்டு அவருக்கு வேடிக்கை பார்க்க வேண்டுமே…? எந்த நேரமும் சாதாரணமாக சிரித்துக் கொண்டே இருப்பவர்களை பார்த்தால், அவருக்கு எப்படிப் பொழுது போகும்?

அதற்காகவே இறக்கினார் பிருந்தாவை. அன்னையின் வீட்டு காரில், அண்ணனின் வீட்டில் வந்து இறங்கினாள்.

“ஏய் எங்கடா உன் சித்தி?” என்று வந்ததும் வராததுமாக சிறுவனை அதட்ட, அவன் அரண்டு போனான்.

உள்ளே ஓடி விடலாம் என்று அவன் திரும்பிப் பார்க்க, “கேட்டுட்டே இருக்கேன். என்ன திமிரா நிக்கிற? உன் சித்தி காரி சொல்லிக் கொடுத்தாளா?” என்று அவள் பல்லை கடித்தாள்.

பிருந்தாவை சும்மா பார்த்தாலே பயந்து போகும் சந்துரு, அவள் அதட்டவும் அழத் தயாரானான். உதட்டை பிதுக்கி அவன் அழ ஆரம்பிக்க, பிருந்தாவிற்கு கோபம் வந்தது. அவள் கையை ஓங்கி விட, “பிருந்தா” என்று தேவா கர்ஜித்தான்.

அந்த சத்தத்தில் ஓங்கிய கை காற்றிலேயே நின்று விட, சந்துரு தந்தையிடம் ஓடி வந்தான். அவனை தூக்கி முதுகில் தட்டி சமாதானம் செய்த தேவா, “போய் கயல் அத்த கூட விளையாடு” என்று கூற, சந்துரு நிற்காமல் ஓடி விட்டான்.

“ஒரு தடவ சொன்னா புரியாதா? என் மகன பார்த்து கை ஓங்குறத இதோட நிறுத்திக்க. இல்லனா நடக்குறதே வேற” என்று தேவா சீற, பிருந்தாவிற்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது.

அந்த கோபம் ஒன்றும் அதுவாக வரவில்லை. மல்லிகா வரவழைத்து இருந்தார். மகனையும் மருமகளையும் சும்மா விட்டு விட அவர் என்ன ஏமாளியா?

மகளை தனக்காக பேச வைக்க அனுப்பி வைத்தார். பிருந்தா தான், இப்போதே ஆரம்பித்தால் அண்ணன் தன்‌ மீது பாய்ந்து விடுவான். அதனால் ஆற போட்டு பேசிக் கொள்வோம் என்று இருந்து விட்டாள். ஒரு வாரம் காத்திருந்து விட்டு வந்து நிற்கிறாள்.

“ஓஹோ. நான் பண்ணுறதெல்லாம் உனக்கு குத்தமா இருக்கு. நீ பண்ணுறது மட்டும் நியாயமா? வயசான அம்மா அப்பாவ விட்டுட்டு, இவ பின்னாடி வந்துட்டியே வெட்கமா இல்ல?”

தேவா எரிச்சலாக பார்க்க, “இதுக்கு தான் தலைப்பாடா அடிச்சுக்கிட்டேன். இன்னொரு கல்யாணம் பண்ணி வைக்காதீங்கனு. இந்த அப்பா கேட்டாரா? அங்க இருந்தா, உன் மகன இவ கொடும படுத்துறத அம்மா கேட்ருவாங்கனு, உன்னை மயக்கி இங்க கூட்டிட்டு வந்துட்டா. நான் கண்டிச்சப்போ மட்டும் அம்புட்டு கத்துன..? இப்போ இவ சித்தி கொடுமை பண்ணா மட்டும் கண்டுக்க மாட்ட. அப்படித் தான?” என்று கேட்டு வைத்தாள்.

“சித்தி கொடுமை பண்ணத பார்த்தியா நீ?” என்று தேவா கேட்க, “ஆமா நான் பார்க்கல தான். ஆனா, நீ பண்ணுறத எல்லாம் பார்த்துட்டுத் தான இருக்கேன். அம்மா அவ்வளவு அழுதும், இவ தான் முக்கியம்னு அவங்கள விட்டுட்டு வந்துட்ட. அப்படி என்னத்த காட்டி உன்னை இங்க இழுத்துட்டு வந்தா?” என்று கேட்டாள்.

“பிருந்தா வார்த்தைய பார்த்து பேசு” என்று தேவா இறுகிய முகத்துடன் எச்சரிக்க, பைரவி வந்து நின்றாள்.

அவளைப் பார்த்ததும், பிருந்தாவின் கோபம் பன்மடங்கு எகிறியது.

“வாம்மா வா… என் அண்ணன மயக்கி, பெத்தவங்கள விட்டு பிரிச்சு கூட்டிட்டு வந்துட்டு, மகாராணி மாதிரி வந்து நிக்குற பார்த்தியா… இந்த தெனாவெட்டு எங்க இருந்து வந்துச்சு?” என்று கேட்க, பைரவி பதில் பேசவில்லை.

‘பேசு பேசு. முடிக்கும் போது இருக்கு கச்சேரி’ என்று நினைத்துக் கொண்டு, இறுக்கமாக நின்று விட்டாள்.

“பிருந்தா” என்று தேவா அழைக்க, “என்ன பிருந்தா…? இல்ல என்ன பிருந்தா? பெத்தவங்கள விட இந்த மேனா மினுக்கி…” என்று முடிக்கவில்லை.

“ஏய்…. வார்த்தைய அளந்து பேசு. யார பார்த்து என்ன பேசிட்டு இருக்க? போனா போகுது தங்கச்சினு பார்த்தா, ஓவரா பேசுற. அடிச்சு பல்ல கழட்டிருவேன். போ இங்க இருந்து” என்று தேவா கத்தி விட்டான்.

பிருந்தா அசரவில்லை. பைரவியின் முன்னால் அவளை திட்டி விட்டதை தான், அவளால் ஜீரணிக்க முடியவில்லை.

“போறேன். உன் வீட்டுல வந்து நிக்கனும்னு எனக்கு என்ன தலையெழுத்தா? அதுக்கு முன்னாடி கேட்க வேண்டியத கேட்டுட்டுப் போறேன். இவ கிட்ட அப்படி என்ன இருக்கு? படிக்காத தற்குறி. சொத்துக்கு ஆசைப்பட்டு இந்த வீட்ட பத்தி கேள்வி பட்டதும், உன்னை கிளப்பி விட்டு இங்க வந்து இருக்கா. இவள போய் தலையில தூக்கி வச்சு ஆடுற. அது மட்டும் இல்லாம…” என்று ஆரம்பித்தவள் என்ன சொல்லி இருப்பாளோ, “சட் அப்” என்று தேவேந்திரன் உறுமினான்.

“ஓ..! ரியலி?” என்று பைரவி வாயை திறந்தாள்.

இவ்வளவு நேரமும், அவள் முகத்தை தேவேந்திரன் பார்த்துக் கொண்டு தான் இருந்தான். ஆனானப்பட்ட மல்லிகாவையே பதிலுக்கு பேசிவிடும் பைரவி, பிருந்தாவை விட மாட்டாள்‌ என்று அவனுக்கு நன்றாகவே தெரியும்.

பிருந்தா பேசப் பேச பைரவியின் முகம் இறுகிக் கொண்டே போனது. அவளது முகத்தை பார்த்து விட்டு, தேவேந்திரனுக்கு தங்கையை நினைத்து பாவமாக இருந்தது.

‘இவள யார் வரச் சொன்னது?’ என்று பல்லை கடித்தான்.

கூடப் பிறந்து விட்ட பாவத்திற்கு, அவள் பேச்சை தேவேந்திரன் கேட்பதே அதிகம். பைரவியும் கேட்கவேண்டும் என்று தலையெழுத்தா என்ன? தங்கை வாங்கி கட்டாமல் போக வேண்டுமே என்று தோன்ற ஆரம்பித்தது.

“என்ன இங்கிலீஷா? இத வச்சு நீ பெரிய அறிவாளினு நான் நினைச்சுக்கனுமா?” என்று பிருந்தா பைரவியிடம் பாய, இனி செய்வதற்கு ஒன்றும் இல்லை என்று தேவா அமைதியானான்.

“ச்சே ச்சே.. நான் அறிவாளினு நீ ஏன் ஒத்துக்கனும்? அதெல்லாம் வேணாம். படிக்காத தற்குறியாவே இருந்துட்டு போறேன்” என்று பைரவி அமைதியாக சொன்னாள்.

“அடேங்கப்பா.. பெருந்தன்மையாக்கும்? நீ பண்ணி வச்சுருக்க வேலைக்கு, இந்த தெனாவெட்டு எல்லாம் உனக்கு வரவே கூடாது” என்று பிருந்தா கூற, “அப்படியா?” என்று அதிசயித்தாள்.

“ஏய் என்ன அப்பாவி வேசம் கட்டுற? பெத்தவங்க கிட்ட இருந்து பிள்ளையும் பேரனையும் பிரிச்சு கூட்டிட்டு வந்துருக்கியே.. நீ எல்லாம் நல்லா இருப்பியா?” என்று கேட்க, பைரவி அவளை கூர்மையாக பார்த்து வைத்தாள்.

“நான் பிரிச்சு கூட்டிட்டு வந்தது இருக்கட்டும். நீ உன் மாமியார் மாமனார் கூட தான் இருக்கியா?” என்று பைரவி கேட்டாள்.

பிருந்தாவின் குடும்ப விவரம் எதுவும் பைரவிக்கு தெரியாது. பிருந்தாவிடம் இப்போது தான் முதல் முறையாக பேசுகிறாள்.

அவளது குணத்தை வைத்து, இருட்டில் தான் பைரவி கல்லெறிந்தாள். ஆனால், அது சரியான திசையில் சென்று பிருந்தாவை பதம் பார்த்தது. அவள் முகம் போன போக்கில், அப்படித் தான் என்று பைரவிக்கு விளங்கி விட, கேலியாக பார்த்து வைத்தாள்.

“ஏய் அத பத்தி பேச உனக்கு உரிமை இல்ல”. என்று பிருந்தா சீற, “அதே தான் உனக்கும்” என்று கூறி விட்டாள் பைரவி.

பிருந்தாவின் முகம் பயங்கரமாக மாறியது. பைரவியை பற்றி மல்லிகா கூறியிருந்தார் தான். ஆனால், அவள் சந்தியாவின் நினைவில் வந்து விட்டாள்.

பைரவி வேறு வகை என்று புரிந்து விட, பிருந்தாவின் இரத்த அழுத்தம் எகிறியது.

“யாருக்கு உரிமை இல்ல? எனக்கா? அத நேத்து வந்த நீ சொல்லுறியா? நான் இங்கயே பிறந்து வளர்ந்தவ. எனக்கு உரிமையில்லனு சொல்ல நீ யாரு?” என்று பிருந்தா எகிறினாள்.

“ஏய்…” என்று தேவா இடையில் வர, பைரவி அவனை திரும்பி பார்த்தாள்.

‘பேசக் கூடாது’ என்ற கட்டளை அந்த பார்வையில் இருந்தது. தேவாவிற்கு சங்கடமாக இருந்தது. என்ன இருந்தாலும் அவள் அவனது தங்கை. அதற்காக பைரவியையும் விட்டுக் கொடுக்க முடியாது.

ஆனால் பைரவி அவனை பேச கூடாது என்று உணர்த்திய பின், வாயை திறக்க அவனுக்குப் பிடிக்கவில்லை. அவன் வாயை மூடி விட, பிருந்தா அதை கொலை வெறியோடு பார்த்து வைத்தாள்.

“என்ன சொன்ன நீ பிறந்த வீடா? தப்பான அட்ரஸ்க்கு வந்துட்ட மிஸஸ். பிருந்தா. நீ பிறந்த வீடு உன் அம்மா வீடு. இது இல்ல. இது என் வீடு” என்று கூறிய பைரவி, அவளை கர்வமாக பார்த்து வைத்தாள்.

பிருந்தா பயங்கரமாக தோற்க ஆரம்பித்தாள். அது அவளுக்கு பிடிக்காமல் போய் விட, “உன் வீடா? சொத்து பத்து இல்லாத நீ, என் அண்ணன் சம்பாதிச்சு கட்டுன வீட்ட உன் வீடுங்கிறியா…? நான் சொன்னேன்ல? இவ இந்த வீட்டுக்கு ஆசைப் பட்டு, உன்னை இழுத்துட்டு வந்துட்டானு. இது தெரியாம உன் மகன இவள நம்பி விட்ருக்க” என்று பைரவியிடமிருந்து தேவாவிடம் தாவினாள்.

பைரவி மீண்டும் தேவேந்திரனை பார்த்தாள். அதே கட்டளை. இன்னும் தீவிரமாக தெரிந்தது அவள் கண்ணில்…

“நான் தான் பேசிட்டு இருக்கேன்ல பிருந்தா. உன் அண்ணன ஏன் இழுக்குற?. ஆமா இது என் வீடு தான். அதுல உனக்கு என்ன பிரச்சனை…?”

பிருந்தா வாயை திறக்க போக, “உனக்கான நேரம் முடிஞ்சு போச்சு. இப்போ நான் பேசுறத மட்டும் கேளு. நான் இழுத்துட்டு வந்தேன்னு சொல்லுறியே… யார இழுத்துட்டு வந்தேன்? தெருவுல போறவனயா? இல்ல. எனக்கு தாலி கட்டி பொண்டாட்டியாக்குன என் ஹஸ்பண்ட்ட இழுத்துட்டு வந்தேன்.

யார மயக்குனேன்? உன் அண்ணனயா? இல்ல. அவரு எனக்கு தாலி கட்டுனதுமே அவர மயக்க எல்லா உரிமையும் எனக்கு இருக்குனு சொல்லிட்டாங்க. எனக்கு தாலி கட்டுனவர மயக்கி முந்தானையில முடிஞ்சுக்கிறேன். இல்ல சும்மா இருக்கேன். அதுல உனக்கு எந்த பிரச்சனையும் வரக் கூடாது.

சந்துரு என் மகன். இவர் எனக்கு சொந்தம்னா, இவர் பெத்த புள்ளையும் எனக்கு சொந்தம் தான். அவன் முன்னாடி சித்தி அது இதுனு பேசி வச்ச, வாய உடைச்சுடுவேன். அண்ணன் வீட்டுக்கு வர்ரியா? வா. வந்து உங்க அண்ணன் கிட்ட சீராட்டிட்டுப் போ. அத விட்டுட்டு என்னையும் என் மகன பத்தியும் பேசுன, மரியாதை கெட்டுரும்.” என்று கொட்டி தீர்த்து விட்டு, திரும்பி உள்ளே சென்று விட்டாள் பைரவி.

பிருந்தா பேயறைந்தது போல் நின்று இருக்க, தேவேந்திரன் தங்கையின் நிலமையை நினைத்து பரிதாப பட்டான்.

‘ஐயோ பாவம்…’ என்று அவளை பார்த்து வைத்தான். பிருந்தா அவன் பக்கம் திரும்ப, அவசரமாக பார்வையை கோபப் பார்வையாக மாற்றினான்.

பரிதாபத்தை காட்டி விட்டால் அவள் தலை மேல் ஏறி விடுவாளே. பிருந்தா வாயை திறக்கப் போக, கை காட்டி நிறுத்தினான்.

“பைரவி சொன்னத திரும்பச் சொல்ல வைக்காத. நான் உனக்கு அண்ணன். அந்த முறையில நீ இந்த வீட்டுக்கு வரலாம் போகலாம். ஆனா, இப்படி சண்டையிழுத்து வேடிக்க பார்க்க விருப்பம் இருந்தா, இங்க வராத. நான் ஏன் இங்க வந்தேன்னு அம்மாவுக்கு நல்லாவே தெரியும். உனக்கும் தெரிஞ்சுருக்கும். இருந்தும் நீ நிறைய பேசிட்ட. திரும்ப இது போல பேசுனா, இப்படி அமைதியா நிற்க மாட்டேன். இப்போ கிளம்பு” என்று கூறி விட்டான்.

பிருந்தா அவமானப்பட்ட உணர்வில், விறுவிறுவென சென்று விட்டாள்.

தொடரும்.

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 3

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
1
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்