Loading

மறுநாள் மாலை, பைரவி சந்துருவுடன் விளையாடிக் கொண்டிருக்க, பக்கத்திலேயே நாற்காலியில் சேகரன் அன்றைய நாளிதழை புரட்டிக் கொண்டு அமர்ந்து இருந்தார்.

“சந்துருவுக்கு எத்தனை வயசு மாமா?” என்று பைரவி கேட்க, “ஆகஸ்ட் வந்தா நாலாகுது மா” என்று அவரும் பதில் சொன்னார்.

“இந்த வருசம் ஸ்கூல்ல சேர்க்கலாம் மாமா. இவன் வயசுக்கு இருக்க வேண்டிய தெளிவெல்லாம் இவனுக்கு இல்லயோனு தோனுது.” என்று இரண்டு நாட்களாக மனதில் உறுத்தியதை, இன்று கேட்டு விட்டாள்.

“உண்மை தான். இவன் வயசு புள்ளைங்க என்ன என்னமோ பண்ணுதுங்க. இவனுக்கு ரா கூட ஒழுங்கா வர மாட்டேங்குது.” என்று கவலை பட்டார்.

“ம்ம்… சந்துரு அப்பா கிட்ட பேசி ஸ்கூல்ல சேர்க்க ஏற்பாடு பண்ணுங்க” என்று கூற, “உனக்கு தெரிஞ்ச ஸ்கூல் பத்தி சொல்லுமா. தேவா கிட்ட பேசுவோம்” என்று மருமகளையும் சேகரன் உள்ளே இழுத்து விட்டார்.

பொறுப்பே இல்லாத அந்த தகப்பனிடம் பேச பைரவிக்கு பிடிக்கவில்லை. இருந்தாலும் மாமனார் வார்த்தையை மீற முடியாது. சந்துருவும் முக்கியம் என்பதால், பைரவி மறுத்து பேசவில்லை.

தனக்கு தெரிந்த சில பள்ளிகளின் பெயரை சொன்னாள். சேகரன் கவனமாக கேட்டுக் கொண்டார்.

“தேவா போன வருசமே ப்ளே ஸ்கூல் மாதிரி சேர்த்து விடலாம்னு தான் சொன்னான். மல்லிகா தான், இப்பவே புள்ளைய கொண்டு போய் தனியா விடனுமா? முடியாதுனு சொல்லி அடம் பிடிச்சா. சரினு அவனும் விட்டுட்டான்” என்று கூற, ‘ஆக… இவன் அப்பா நல்ல அப்பா தான். பாட்டி பண்ண சதியில தான் பிள்ள இப்படி ஆகிட்டானா? இன்னும் என்னலாம் பண்ணி இருப்பாங்க?’ என்று யோசிக்க ஆரம்பித்தாள்.

அவள் பார்த்த வரை, மல்லிகாவிற்கு பேரன் மீது பாசம் ஒன்றும் கிடையாது. சேகரன் விசயத்தை சாதாரணமாக சொல்லிவிட்டார். இப்படி சாதாரண பேச்சு பேசுபவரா மல்லிகா?

பேச ஆரம்பித்தால், நிறுத்தாமல் பேசி எதிரிலிருப்பவர்களை ஒரு வழியாக்கி விட மாட்டார்? சந்துருவை பள்ளிக்கு அனுப்பாமல் இருக்க, எதோ ஒரு காரணம் இருக்க வேண்டும். என்னவாக இருக்கும்? என்று யோசித்து பார்த்தாள்.

ஒன்றும் பிடிபடாமல் போக, அப்போதைக்கு அந்த யோசனையை தள்ளி வைத்தாள். சேகரன் மருமகளின் அமைதியில் மகனை பற்றி பேச ஆரம்பித்து விட்டார்.

“சந்துரு பிறந்து ஆறு மாசம், தேவா ரொம்ப கஷ்டப்பட்டான்மா. அதுக்கப்புறம் மல்லிகா அவன பார்த்துக்கிறேன்னு சொல்லி இங்க கூட்டிட்டு வந்தா. இங்க நாங்க எல்லாம் பார்த்துக்க இருக்கோம்னு தைரியத்துல, ஆபிஸ் வேலைய பார்க்க ஆரம்பிச்சான். என்னைக்கு பிருந்தா சந்துவ அடிக்குறத பார்த்தானோ, பிரச்சனை பண்ணிட்டான்.

காலையில சந்துவ பார்த்துட்டு, பதினோரு மணிக்கு தான் கிளம்புவான். சாயந்தரம் இருக்குற வேலை எல்லாம் போட்டுட்டு, நாலு மணிக்கு வீட்டுக்கு வந்து நின்னுடுவான்.

யாரையும் அவன் கிட்ட நெருங்க விட்டது இல்ல. வேலைக்கார பொண்ண பார்த்துக்க சொல்லிடுவான். சாயந்தரம் வந்து, அவனே குளிக்க வச்சு தூங்க வச்சுட்டு, வீட்டுல இருந்தே வேலை பார்ப்பான்.

இப்ப நீ பார்த்துக்குறதால தான் தேவா லேட்டா வர்ரது. அவன சொல்லியும் தப்பு இல்ல” என்று நீளமாக பேசி முடித்து அமைதியானார்.

‘இங்க கூட்டிட்டு வந்தாங்களா? அப்ப இதுக்கு முன்னாடி எங்க இருந்தாங்க?’ என்று யோசித்தாலும், பைரவி வாய் விட்டு கேட்கவில்லை.

சந்துருவின் அத்தையும் மல்லிகாவை போன்று தான் என்று புரிய, இந்த மூன்று வருடத்தில் சந்துரு எவ்வளவு கஷ்டப்பட்டானோ? என்று பைரவிக்கு தோன்றியது.

பிறகு பேச்சு பள்ளியைப் பற்றி மாற, “சந்துரு பையா ஸ்கூல் போறீங்களா?” என்று சந்துருவிடம் கேட்டாள் பைரவி.

அவனும் நன்றாக தலையாட்டி வைக்க, உடனே தூக்கி கொஞ்சினாள்.

அதே நேரம், வெளியே வந்த மல்லிகா அதிர்ந்து போனார்.

“என்னது ஸ்கூல்க்கு அனுப்ப போறியா?” என்று அதிர்ச்சியாக கேட்க, பைரவி அவரது அதிர்ச்சியை ஆராய்ச்சியோடு பார்த்தாள்.

தேவா சொன்னதிலிருந்து, பைரவி மல்லிகாவின் பக்கம் திரும்புவது கூட கிடையாது. அவராக பேசி சண்டையிழுக்க முடியாமல் தடுமாறிக் கொண்டிருந்தார்.

பைரவிக்கு தேவாவின் பேச்சை கேட்க வேண்டும் என்ற எண்ணமெல்லாம் இல்லை. துஷ்டனை கண்டால் தூர விலகு என்று யார் சொன்னாலும், கேட்டுக் கொள்வாள். அவ்வளவே.

மல்லிகா இவ்வளவு நேரமாக சமையலறையில் வேலையில் ஈடுபட்டு இருந்ததில், கணவனும் மருமகளும் பேசுவதை ஒட்டுக் கேட்க முடியவில்லை. அவசரமாக முடித்து விட்டு ஒட்டு கேட்க வந்தால், பள்ளியை பற்றி பேசுகிறார்கள்.

பள்ளிக்கு அனுப்பினால், சந்துருவிற்கு அம்மா என்றால் யார் என்று தெரியும். அவளை பற்றி சந்துரு நிச்சயமாக கேட்பான்.‌ அது மகன் மனதை அசைத்து பார்க்கும். அதன் பின்…?

வியர்த்து கொட்டியது மல்லிகாவிற்கு. வியர்த்து வெளிறி போன முகத்தை பார்த்த பைரவிக்கு, நிச்சயமாக ஏதோ சரியில்லை என்று தோன்றியது. அவர் முகத்தை கூர்ந்து பார்த்து விட்டு, உணர்ச்சிகளை கணக்கிட‌ ஆரம்பித்தாள்.

“ஆமா மல்லிகா. மூணு வயசு முடிய போகுது. இன்னும் ஸ்கூல்ல சேர்க்கலனா அப்புறம் அவன் படிக்கவே முடியாது. அதான் ஸ்கூல்ல சேர்க்கலாம்னு பைரவி சொல்லுது. நானும் யோசிச்சுட்டு இருக்கேன்”

“ஓஹோ… உங்க மருமக சொல்லிட்டா. அதுனால நீங்க தலையாட்டிட்டீங்க. இல்ல இந்த வீட்டுல, உங்க பொண்டாட்டி, தேவாக்கு அம்மானு நான் எதுக்கு இருக்கேன்? உங்க மருமக முடிவெடுத்துட்டானா அப்ப இந்த வீட்டுல நான்‌ யாரு?” என்று எகிறிக் கொண்டு வந்தார்.

பைரவிக்கு‌ இப்போது சந்தேகம் உறுதியானது. ஏதோ இருக்கிறது. அதை கண்டுபிடித்தே ஆக வேண்டும்‌ என்ற முடிவுக்கு வந்தாள்.

“இதுல என்ன தப்பு? சந்துரு படிக்கப்போறது ஒன்னும்‌ அவ்வளவு பெரிய பிரச்சனை இல்லையே?” என்று சேகரன் கேட்க, “அவன் படிக்குறதுல எனக்கென்ன பிரச்சனை?” என்று தடுமாறினார் மல்லிகா.

“ஆனா, அதை நேத்து வந்தவ சொல்லுறது தான் பிரச்சனை. இவன் அப்பாவுக்கு, பாட்டிக்கு, தாத்தாவுக்கு இல்லாத அக்கறை, இவளுக்கு வந்துடுச்சா? இத நான் நம்பனுமா? இந்த மெத்த படிச்சவளுக்கு, பிள்ளைய பார்த்துக்க முடியல. அதுனால அவன ஸ்கூலுக்கு அனுப்பி விட்டுட்டு, ஹாயா காலாட்டிட்டு இருக்கலாம்னு முடிவு பண்ணிட்டா. நீங்களும் அதுக்கு ஜால்ரா தட்டுறீங்க”

மல்லிகா மூச்சு வாங்க பேசிக் கொண்டே இருக்க, பைரவிக்கு கோபம் வந்தது.

“ஆமா.. புள்ளைங்கள படிக்க அனுப்புற அம்மா அப்பா எல்லாம், அவங்கள சமாளிக்க முடியாமா தான் அனுப்புறாங்க பாருங்க. நீங்க பேசுறது உங்களுக்கே சரினு தோனுதா? பிள்ளைங்கள படிக்க வைக்காமா வீட்டுல வச்சுருந்தா தான் பாசம் இருக்குனு அர்த்தமா? இது எந்த வகை நியாயம்? அப்போ நீங்க உங்க மகன படிக்க வச்சது எந்த கணக்கு?” என்று கோபம் குறையாமல் கேட்டு விட்டாள் பைரவி.

‘எவ்வளவு தான் அமைதியை இழுத்து பிடித்து காப்பது? அதுவும் சந்துருவின் எதிர்காலமே இதில் அடங்கி இருக்கிறது. அதை எப்படி விட்டு விடுவாள்?’

‘சந்துரு அவர்களது பேரனாகவே இருக்கட்டும். அவளுக்கும் அவனுக்கும் இடையில் இருக்கும் உறவின் ஆழம், குறைவாகவே இருக்கட்டும். அதற்காக? கண் முன்னால் ஒன்றும் அறியா சிறுவனின் வாழ்க்கை பாலாவதை பார்த்துக் கொண்டு, அமைதியாக இருக்க அவளால் முடியவே முடியாது.

என்ன செய்து விட்டாள்? சித்தி கொடுமையா செய்து விட்டாள்? இந்த அம்மா இப்படி அலற?’

பைரவியின் கோபம் பேசிய பின்னும் அடங்க வில்லை.

“என்னது? எனக்கு என் மகன் மேல பாசம் இல்லையா?” என்று கேட்டவர், சேகரன் எவ்வளவு பேசியும் தன் பேச்சை நிறுத்தவில்லை.

இடையிடையே அழுது வடிந்து அவர் பேச, சேகரனால் அவரை சமாளிக்கவே முடியவில்லை. பைரவி, என்னவோ செய்யட்டும் என்று கண்டு கொள்ளாமல் இருந்தாள்.

சந்துரு குளித்து விளையாடிய களைப்பில் தூங்கி விட்டான். அவனோடு அறைக்குள்ளேயே இருந்து கொண்டாள். இரவு, தேவா வந்து விட, பஞ்சாயத்தை அவனிடம் எடுத்து சென்றார் மல்லிகா.

பைரவி அறையை விட்டு வெளியே வர, தேவா அவளை திரும்பி பார்த்தான்.

“என்ன சொன்ன பைரவி? ஏன் சொன்ன?” என்று கேட்டான் தேவேந்திரன்.

இதோ அவளது ஆசையை நிறைவேற்றி விட்டான். அன்னையின் முன்னால், அவளிடம் என்ன நடந்தது? என்று கேட்கவில்லை என்ற குறையை நீக்கி விட்டான். பைரவி வாயை திறக்கும் முன், மல்லிகா பேச ஆரம்பித்தார்.

“தேவா… அப்ப நான் பொய் சொல்லுறனா? உன் பொண்டாட்டி மேல தேவையில்லாத பழி போடுறனா? அவ கிட்ட என்னை நம்பாம கேட்குற. நான் உன் அம்மா. அவ நேத்து வந்தவ. அவ சொன்னா நம்புவ. ஆனா, நான் சொன்னா அத சந்தேகப்பட்டு அவ கிட்ட விசாரிப்ப. புரிஞ்சுடுச்சுடா. நல்லா புரிஞ்சுடுச்சு. உங்கப்பாவும் மருமக சொல்லுறதுக்கெல்லாம் பூம்பூம் மாடு மாதிரி தலையாட்டுறார். நீயும் அவ சொல்லுறதே வேத வாக்குனு நினைக்க ஆரம்பிச்சுட்ட. புரிஞ்சுடுச்சு. என் நிலைமை இந்த வீட்டுல என்னனு இப்போ புரிஞ்சுடுச்சு. எல்லா வீட்டுலையும், மாமியார் கொடுமை மாமியார் அதிகாரம் தான் கேள்விப்பட்டு இருக்கேன். இங்க மருமக அதிகாரம். இருக்கட்டும். மகனே இல்லனு ஆனதுக்கப்புறம், நேத்து வந்தவ என்ன? ரோட்டுல போறவ கூட என்னை நிக்க வச்சு கேள்வி கேட்கத் தான் செய்வா. நான் தான் என் மகன் மேல பாசம் வைக்கலையாமே. பேரன் மேல அக்கறை இல்லாம இருக்கனாமே. அத தான இவ சொன்னா. நான் இனி அவ என்ன பேசுனாலும், அமைதியா கேட்டுக்கிறேன். எனக்குனு பேச தான் யாரும் இல்லையே. கட்டுன புருஷனும் இல்ல.‌ பெத்த பிள்ளையும் இல்ல…” என்று அழுது கொண்டே பேசி வைத்தார்.

அவர் பேச ஆரம்பித்ததுமே, தேவா பைரவியை பார்த்தான். சாதாரணமாக பார்ப்பவர்களுக்கு அவன் அவளை முறைத்துப் பார்ப்பதாக தோன்றும். ஆனால், அவன் பார்வைக்கு அர்த்தம் பைரவிக்கு மட்டுமே விளங்கியது.

‘பார்த்தியா… இதுக்கு தான் கேட்கல’ என்ற பார்வை.

அவனுக்குத் தெரியும் அன்னையைப் பற்றி. அவர் புகார் சொன்னால், விசாரணையின்றி தண்டனை கொடுத்து விட வேண்டும். விசாரித்து வைத்தால், நான் பொய்யா சொல்கிறேன்? என்று ஆர்ப்பாட்டம் செய்ய ஆரம்பித்து விடுவார். இந்த ஆர்ப்பாட்டம் எல்லாம், தேவாவிற்கு சுத்தமாகப் பிடிக்காது. அதற்காக அன்னையை விட்டு கொடுக்க முடியாதே.

பைரவி அதிர்ச்சியின் எல்லையில் இருந்தாள்.

‘என்ன ஒரு ப்ளான்…! இந்த மாதிரி இவங்க நல்ல விசயத்துல ப்ளான் போட்டா, நாடு எங்கயோ போயிடுமே’ என்று நினைத்தவள் தேவாவை பார்த்தாள். அவன் நொந்து போய் நிற்பது புரிந்தது.

வேலை செய்து களைத்துப் போய் வந்து இருந்தவனை, நடு வீட்டில் நிறுத்தி பஞ்சாயத்து வைத்துக் கொண்டிருந்தார் மல்லிகா.

‘பாசம் இல்லனு சொன்னா மட்டும் இவ்வளவு சண்டைக்கு வருதே இந்தம்மா. சாதாரண அக்கறை கூட இல்லாம, இப்படி நடு வீட்டுல நின்னுட்டு, களைச்சு போன மகன தொல்ல பண்ணுறது தான் இந்தம்மாவோட பாசமானு கேட்ருவோமா?’ என்று பைரவி யோசித்தாள்.

தேவாவின் மீதிருந்த பார்வையை அகற்றாமல் அவள் யோசித்ததில், அவள் யோசனை போகும் போக்கை தேவா புரிந்து கொண்டான். முதல் முதலாக அவள் மனதை படிக்கிறான். சில்லென்று எதோ ஒன்று அவன் மனதை ஊடுறுவியது.

அதை முழுமையாக அனுபவிக்க விடாமல், மல்லிகாவின் பேச்சு காதில் விழுந்து தடுத்துக் கொண்டிருந்தது. சற்று எரிச்சல் எட்டி பார்க்க, அன்னையின் பக்கம் திரும்பினான்.

“என்னமா உங்க பிரச்சனை? மொட்டையா, பைரவி வந்து உங்களுக்கு உங்க மகன் மேல பாசமே இல்லனு சொன்னானு சொன்னா, எனக்கு என்ன விளங்கும்? என்ன நடந்ததுனு முழுசா கேட்குறேன். அதுக்கு நீங்க பதில் சொன்னீங்களா? நீங்க தான் சொல்லலனா, பைரவிகிட்ட கேட்டா, அதுக்கும் இப்படி பஞ்சாயத்து பண்ணுறீங்க. என்ன உங்களுக்கு பிரச்சனை? சும்மா உட்கார்ந்து இருந்த உங்கள கூப்பிட்டு, உங்களுக்கு என் மேல அக்கறையே இல்லனு பைரவி சொல்லிட்டுப் போனாளா? நீங்க தான் இப்ப சொல்லனும். என்னால வெத்தலையில மை போட்டு பார்க்க முடியாது” என்று கோபத்தில் தேவா திட்டி விட்டான்.

கண்ணீர் பொலபொலவென கொட்ட, மல்லிகா வாயை மூடிக் கொண்டு குலுங்கினார். அன்னை அழுவது எப்போதும் அவனை கரைத்து விடும். ஆனால், இந்த முறை அவன் கல்லாக நின்றான்.

“யாராவது வாய தொறந்து சொல்ல போறீங்களா இல்லையா?” என்று தேவா அதட்ட, பைரவி அவசரமாக அறைக் கதவை சாத்தினாள்.

சந்துரு சத்தம் கேட்டு பாதி தூக்கத்தில் எழுந்து விட்டால், ரொம்பவுமே அழுவான். அதனால், அவள் முதலில் கதவை மூடிவிட்டாள்.

அதை கவனித்த தேவாவிற்கு, அந்த செய்கை ரொம்பவும் பிடித்தது. இது போன்ற‌ அக்கறையை, அவனுக்கு அடுத்து பைரவி தான் சந்துருவிடம் காட்டுகிறாள். மல்லிகாவோ பிருந்தாவோ இப்படி அக்கறைப்பட்டு அவன் பார்த்ததே இல்லை.

அந்த இதத்தில் அவனது கோபம் சற்று மட்டுப்பட, “பைரவி நீ சொல்லு” என்று கேட்டான். மல்லிகா அதற்கும் வாயை திறக்க, திரும்பி அவரை‌ ஒரு பார்வை பார்த்தான். அந்த தீப்பார்வையில் மல்லிகாவின் வாய் கப்பென மூடிக் கொள்ள, பைரவி பக்கம் திரும்பினான்.

“சந்துருவ இந்த வருஷம் ஸ்கூல்ல சேர்க்கனும்னு நான் மாமா கிட்ட கேட்டேன். அவர் உங்க கிட்ட பேசலாம்னு சொன்னார். ஆனா இவங்க, ஸ்கூல்க்கு அனுப்பிட்டு நீ சும்மா இருக்கலாம்னு பார்க்குறியா‌னு கேட்டாங்க. இது என்ன நியாயம்? ஸ்கூல்க்கு அனுப்புனா பாசம் இல்லாம போகனுமா? அப்ப உங்க மகனும் தானே படிச்சு இருக்கார்? அப்படினு கேட்டேன். அதான் அவங்களுக்கு உங்க மேல பாசம் இல்லனு சொல்லிட்டதா பேசிட்டு இருக்காங்க” என்று பட்டும் படாமல் சொல்லி முடித்தாள்.

முழுவதையும் பிட்டு பிட்டு வைக்க அவளால் முடியும். அதை செய்ய தான் அவளுக்கு மனது வரவில்லை. இதில் ஏதோ இருக்கிறது அதைத்தானே கண்டு பிடிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டாள்.

பைரவி சொன்னதை கேட்டு விட்டு, பெற்றவர்கள் பக்கம் திரும்பினான். அப்படியே அன்னையிடம் கேள்வி கேட்டால், பிரச்சனை பெரிதாகும் என்று புரிய, “பைரவி சொன்னது எல்லாம் உண்மையாபா?” என்று தந்தையிடம் கேட்டு வைத்தான்.

மல்லிகாவை போல் பைரவி குதிக்கவில்லை. அவளுக்கு இது நியாயமான கேள்வி தான் என்று புரிந்தது. அதே நேரம், இன்னொன்றும் சேர்த்து புரிந்தது. அப்பாவிடம் இப்படிக் கேட்கவில்லை என்றால், அவள் பேச்சை மட்டும் அப்படியே நம்புகிறாய் என்று மல்லிகா அடுத்த பஞ்சாயத்தை இழுத்து வைப்பார்.

தேவேந்திரனின் செய்கைக்கான காரணம் பைரவிக்கு தெளிவாக விளங்கியது.

‘அதெப்புடி? அவன் பார்வைக்கு அர்த்தம் கண்டுபிடிக்குற. அவன் களைச்சு போயிருக்கான்னு முகத்தை பார்த்தே கண்டு பிடிக்குற. அவன் எது செஞ்சாலும் அர்த்தம் தெளிவா புரிஞ்சுக்குற. என்ன இதெல்லாம்?’ என்று மனசாட்சி கேட்க, பைரவி பதில் சொல்லத் தெரியாமல் திகைத்து நின்றாள்.

தொடரும்.

Click on a star to rate it!

Rating 4.8 / 5. Vote count: 4

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
6
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்