
அமைதியான அந்த இடம், இப்போது இன்னும் அமைதியாக இருப்பது போல், பைரவிக்குத் தோன்றியது. எதிரில் இருப்பவர் தேவேந்திரனின் தந்தை. அவரால் மகனையோ குடும்பத்தையோ குறை சொல்ல முடியுமா?
இப்போது அவர் சொல்லிய விசயங்களில், எவ்வளவு உண்மை மறைந்து இருக்கிறது? என்று தெரியவில்லை. அதில், அவள் கேட்க நினைத்த ஒரு கேள்வியும் அடக்கம்.
‘மகனுக்கு இரண்டாம் தாரமாக மணம் முடிக்க விரும்புபவர், அவளை போன்ற பெண்ணை ஏன் தேர்ந்தெடுத்தார்? அவளுக்குத் தெரிந்து அவளிடம் எந்த குறையும் இல்லை. பிறகு?
‘ஒரு வேளை அண்ணி என்னை பற்றி இல்லாததை கூறியிருப்பாரோ?’
“இருக்கலாம்” என்றது மூளை.
அதை எப்படிக் கேட்பது என்று யோசித்துக் கொண்டிருக்கும் போதே, அவர்கள் முன் இரண்டு கால்கள் வந்து நின்றது. நிமிர்ந்து பார்க்காமலே, அது யார் என்று பைரவிக்குப் புரிந்தது. காரணம், காலையிலிருந்து காலை மட்டும் தானே பார்க்கிறாள்!
‘முகம் எப்படி இருக்கும்? ஒரு பிள்ளைக்கு தகப்பனின் முகம் இப்படித் தான் இருக்கும்’ என்று கற்பனை செய்ததோடு சரி. அதை உறுதி படுத்திக் கொள்வதற்காகக் கூட, நிமிர்ந்து பார்க்கவில்லை.
அவனை பார்த்து சேகரன் எழ, பைரவி எழவில்லை.
‘மரியாதை மனதில் இருந்தால் தானே எழ?’
கணவன் என்ற உரிமை இருந்தால், அவளும் வரவேற்க வாசலுக்கு ஓடி இருப்பாள். எதுவுமே இல்லையே. கல்லை போல் அமர்ந்து இருந்தாள்.
“வா பா.. பசியோட நிக்காத. பைரவி.. சாப்பாடு வை மா” என்று சேகரன் கூற, அவள் நிமிரும் முன், மல்லிகா அவசரமாக அறையை விட்டு வெளியே வந்தார்.
இவ்வளவு நேரமும், கணவன் மருமகளிடம் பேசியதை கேட்டுக் கொண்டு தான் இருந்தார். அதற்கு மருமகள் என்ன சொல்லப் போகிறாள்? என்று எதிர் பார்ப்போடு நின்று இருந்தார்.
அவள் வாயை திறக்கும் முன் மகன் வந்து விட்டான். மருமகளை மகனின் அருகில் விட அவருக்கு சுத்தமாக விருப்பமில்லை.
“வா தேவா. நான் சாப்பாடு வைக்கிறேன்” என்று கூறி அழைத்துச் சென்று விட்டார். தேவாவும் அவரோடு சென்று விட்டான்.
மருமகள் பதில் சொல்லாமல் இருப்பது சேகரனுக்கு வேதனை அளித்தாலும், “ரொம்ப சோர்வா இருக்க மா. போய் கொஞ்ச நேரம் தூங்கி எந்திரி. சாயந்தரம் கோவிலுக்குப் போகனும்” என்று கூறினார்.
பைரவி, பதில் பேசாமல் எழுந்து சென்று விட்டாள். அறைக்குள் சென்று கதவை அடைக்க, அதையும் மல்லிகா கவனித்துக் கொண்டு தான் இருந்தார்.
மாலை, கோவிலுக்குச் சென்று திரும்பினர். சந்துரு தூங்கி வழிய, பைரவிக்கு பாவமாக இருந்தது. இந்த வீட்டில், அவளை போன்று யாராலும் கவனிக்கப்படாத இன்னொரு உயிர் சந்துரு தான்.
அவன் விழுந்து விடாமல் இருக்க, பைரவி கையில் தூக்கிக் கொண்டாள். சிறுவனும் அவள் கழுத்தில் முகத்தை தேய்த்து, விட்ட தூக்கத்தைத் தொடர, இவ்வளவு நேரம் இருந்த வேதனைகள் எல்லாம் சென்ற இடம் தெரியவில்லை அவளுக்கு.
பைரவி அவனை நன்றாக அணைத்துக் கொள்ள, “இங்க கொடு. நீ ஏன் இவன தூக்குன?” என்று மல்லிகா வந்து நின்றார்.
‘தான் கேட்பது அபத்தமான கேள்வி என்று இவருக்குத் தெரியுமா?’ என்று பைரவி யோசிக்க,
“ம்மா.. அடுப்புல இருக்க சாம்பார இறக்கிட்டு பால வைக்கட்டுமா?” என்று கேட்டு, சமையல் செய்பவர் வந்து நின்றார்.
“நீ போய் அடுப்ப கவனி. சந்து பையன நாங்க பார்த்துக்குறோம்” என்று சேகரன் கூறி விட்டார்.
மல்லிகாவிற்கு, சந்துருவை பைரவியிடம் கொடுக்க சுத்தமாக உடன்பாடு இல்லை.
முறைத்துக் கொண்டே அங்கிருந்து செல்ல, ‘நான் என்ன இவங்க சொத்தையா பிடுங்கிக்கிட்டேன்?’ என்று பைரவி அவரை விசித்திரமாக பார்த்தாள். உண்மையும் அது தான் என்று தெரிந்தால்?
“அவன உள்ள தூங்க வை மா. இனி நைட் சாப்பிடத் தான் எந்திரிப்பான்.” என்று சேகரன் சொல்ல, பைரவி தான் இருந்த அறைக்கே தூக்கிக் கொண்டு சென்றாள்.
குழந்தை காற்றை போல இருந்தான். மூன்று வயதிற்கு உரிய துருதுருப்பை தவிர, வேறு எதுவுமே அவனிடம் இல்லை.
‘ஒரு வயது பிள்ளை கூட, இவனை விட நன்றாக இருக்கும்’ என்று தோன்றியது.
மெத்தையில் படுக்க வைத்துத் தட்டிக் கொடுத்தாள்.
‘மழலை மாறா குழந்தை. அவனை பெத்தவனுக்கும் அக்கறை இல்லை. உடன் இருப்பவர்களுக்கும் அக்கறை இல்லை. என்ன மனிதர்கள் இவர்கள்?’
பைரவிக்கு எரிச்சலாக வந்தது. மாலை கடந்து இரவும் வந்தது. சந்துரு அழுது கொண்டே எழ, அவனை சமாதானம் செய்து முகம் கழுவி வெளியே அழைத்து வந்தாள்.
தட்டில் சாப்பாடை போட்டு மல்லிகா வழக்கம் போல சந்துருவின் பக்கம் வைத்து விட, பைரவி தான் சாப்பிடுவதை விட்டு விட்டு, அவனுக்கு ஊட்ட ஆரம்பித்தாள்.
“இதென்ன ஊட்டி விடுற பழக்கம்? பையன் எப்போ தான் வேலைய தானே செஞ்சு பழகுறது? இன்னைக்கு நீ ஊட்டுவ.. நாளைக்கு? தட்ட கீழ வை” என்று மல்லிகா எகிறிக் கொண்டு வந்தார்.
பைரவி அவரை திரும்பி பார்த்தால் தானே…? நீ என்ன சொல்வது? நான் என்ன கேட்பது? என்று கண்டு கொள்ளாமல், சந்துருவிற்கு பார்த்து பார்த்து ஊட்டினாள்.
மருமகள் வாய் வார்த்தையாக வாக்கு கொடுக்கவில்லை என்றாலும், பேரனை கவனித்துக் கொள்வதைப் பார்த்து சேகரனுக்கு மனம் நிறைந்தது.
“மல்லி… ஊட்டினா தான் அவன் ரெண்டு வாய் சேர்த்து சாப்பிடுவான். உனக்கு இருக்க வேலையில, எதையும் செய்ய முடியல. பைரவி செய்யுதுல… செய்யட்டும். நீ பேசாம சாப்பிடு” என்று கூறி விட, மல்லிகாவிற்கு அப்படி ஒரு கோபம் வந்தது.
மறுத்து பேச வாயை திறக்க, சேகரன் அவரை கண்டு கொள்ளாமல், சந்துருவுடன் பேச ஆரம்பித்து விட்டார். தேவா இப்போதும் இல்லை. அவன் இல்லாததை பைரவி கணக்கில் கொள்ளவில்லை.
இந்த வீட்டிற்கு வந்து, ஒரு நாள் கூட முழுமையாக முடியவில்லை. அதற்குள் எத்தனை போராட்டம்? பைரவிக்கு ஆயாசமாக இருந்தது.
நாளையிலிருந்து அவளும் வேலைக்குச் செல்ல வேண்டும்.
‘மீண்டும் சந்துரு தனிமை படுவானே. அதை சரி செய்வது எப்படி?’ என்று யோசித்துக் கொண்டிருந்தாள்.
விருந்தினர் அறையிலிருந்து, தேவாவின் அறைக்கு வந்து விட்டாள். சேகரன் தான் அவளது உடமைகளை இங்கு வைக்கச் சொல்லி இருந்தார். இனி இந்த அறை தான் தனக்கும் என்று நினைத்து, பார்வையை சுழல விட்டாள்.
விசாலமான அறை. அவளது வீட்டில் இருக்கும் அறையை விட, மூன்று மடங்கு அதிக பரப்பு. ஒரு ஓரம் முழுவதும் அடைத்து இருந்தது நவீன வார்ட்ரோப். பார்ப்பவர்கள் கண்ணை பறிக்கும் விதமாக, அங்காங்கே மாட்டி இருந்த சில வரை படங்கள்.
குளியல் அறையுடன் இணைந்த, உடை மாற்றும் அறை. கண்ணாடி கதவுகளால் அடைக்கப்பட்ட பால்கனி. சிறிய சோஃபாக்கள் இரண்டு. பார்க்க நன்றாகவே இருந்தது.
சுற்றி பார்வையை சுழல விட்டு மனதில் பாராட்டியவள், அதன் பின் அறையை கவனிக்கவில்லை. கையை கட்டிக் கொண்டு, மெத்தையில் ஓரமாக அமர்ந்து இருந்தாள்.
பார்வை அவள் கால் விரல் நகத்தின் மேல் நிலைத்து இருக்க, மனம் வேறு எதோ சிந்தனையில் இருந்தது.
சில நிமிடங்களுக்குப் பின், கதவு திறக்கும் சப்தம் கேட்க, நிமிர்ந்து பார்த்தாள். பார்த்தவள் மலைத்து மயங்காதது ஒன்றே குறை.
‘இவனா ஒரு பிள்ளைக்கு தகப்பன்? மிஞ்சி போனால், இருபத்தெட்டு வயது இருக்குமா? சீக்கிரமே கல்யாணம் செய்து வைத்து விட்டார்களோ?’ என்று யோசிக்க தொடங்கினாள்.
பார்வை அவனது முழு உருவத்தையும் உள் வாங்கி இருக்க, மனம் அதை தனி தனியாக ஆராய்ந்தது. உயரம்… அவள் நிமிர்ந்து பார்க்கத் தான் வேண்டும். அவளையே துளைக்கும் கண்கள். சிவந்த நிறம் சென்னை வெயில் தாங்காமல், சற்று குறைந்து விட்டிருந்தது.
நீளமான கை கால்கள், அழுத்தமான பார்வை, சிரிப்பே இல்லா உதடு, அடர்ந்து கம்பீரமாக இருக்கும் மீசை. சின்னதாக கூட தாடி இல்லாமல், க்ளீன் சேவ் செய்த முகம்.
‘இவ்வளவு அழகானவன் வாழ்வா இப்படி ஆகி விட்டது? அய்யோ பாவம்…!’ என்று பைரவி வருத்தப்பட்டாள்.
முகத்தில் எந்த மாற்றத்தையும் காட்டாமல், மனம் மட்டும் பல உணர்ச்சிகளை வெளிப்படுத்திக் கொண்டிருந்தது. தேவா தான் குழம்பிப் போனான்.
பைரவியின் பார்வைக்கு அவனால் அர்த்தம் கண்டுபிடிக்க முடியவில்லை. எத்தனையோ பெண்களின் பார்வையை கண்டிருக்கிறான். அதற்கான அர்த்தம் நொடிப்பொழுதில் விளங்கி விடும். இவளது பார்வை என்ன வகை? என்று கண்டு பிடிக்க முடியவில்லை.
அவன் புருவத்தை உயர்த்த, ‘பார்ரா… இவரு புருவத்த தூக்கிட்டா? நாங்க ஓடிப்போய் உடனே பதில் சொல்லனுமாக்கும்? மாட்டேன்’ என்று வீம்பாக நினைத்தாள்.
மேலும் இரண்டு நொடி அவனை கூர்ந்து பார்த்து விட்டு, சாதாரணமாக பார்வையை திருப்பிக் கொண்டாள்.
‘அடேங்கப்பா…’ என்று தேவா நினைத்துக் கொண்டான். பார்வை கட்டிலில் பாய்ந்தது. கை காலை பரப்பிக் கொண்டு, சந்துரு உறங்கிக் கொண்டிருந்தான். உடனே அவனை நோக்கிச் சென்றான்.
பக்கத்தில் அமர்ந்து, மகனை ஒரு நொடி முகம் கனிய பார்த்துக் கொண்டு இருந்தான். பைரவி சந்துருவின் மறு பக்கம் அமர்ந்து இருந்தாள்.
தேவா அவளை பார்க்க, அவள் அவனை நிமிர்ந்து பார்க்கவில்லை. லேசாக தொண்டையை செறுமியவன், “உன் பேரென்ன?” என்று கேட்டான்.
பைரவி சட்டென அவன் பக்கம் திரும்பி பார்த்தாள்.
‘அடப்பாவி…! உனக்கும் என் பேரு தெரியாதா? என்ன கேவலமான கல்யாணம் இது?’ என்று தோன்ற, “ச்சை” என்றானது.
ஒரு பக்கம் சிரிப்பாக இருக்க, அவனை இமைக்காமல் பார்த்தாள்.
‘போச்சுடா மறுபடியும் பார்க்க ஆரம்புச்சுட்டா’ என்று சலித்தவன், “உன் பேரென்னனு கேட்டேன்?” என்று அழுத்திக் கேட்டான்.
“பைரவி” என்று கூற, “என்ன படிச்சு இருக்க?” என்று கேட்டான்.
“எம்.பி.ஏ”
“வொர்க் பண்ணுறியா?”
“ம்ம்”
“எங்க?”
இடத்தை சொல்ல, தேவாவின் முகம் யோசனையில் சுருங்கியது. அவனுக்கு சொன்ன தகவல் வேறு. இவளிடம் கேட்டாள் வேறு சொல்கிறாள்?
அவனது யோசனை முகத்தை பார்த்த பைரவி, எதுவும் கேட்கவில்லை. சந்துருவின் மறுபக்கம் படுத்து கண்ணை மூடிக் கொண்டாள்.
பைரவிக்கு அவனை போல இயல்பாக பேசவரவில்லை. தன் வாழ்க்கை இப்படியாக, அவனும் ஒரு வகை காரணம் என்று நேற்றிலிருந்து வளர்த்து வரும் விரோதம், இன்று மட்டும் குறைந்து விடுமா?
அந்த விரோதம் தான், தேவேந்திரனின் அழகை ரசிக்க விடவில்லை. கண்ணை மூடிக் கொண்டு படுத்து இருந்தாளே தவிர, தூக்கம் வரவில்லை.
புது அறை, புது இடம் என்று தூக்கம் வராமல் பைரவி போராடிக் கொண்டிருக்க, தேவேந்திரன் யோசனையோடு படுத்து இருந்தான்.
தேவேந்திரனுக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை. இப்போது மட்டும் அல்ல! முதல் திருமணத்திலுமே அவனுக்கு விருப்பம் இல்லை தான்!
வெளிநாட்டிற்கு வேலை விசயமாக கிளம்பியவனை, பிடித்து வைத்து திருமணம் செய்து வைத்தனர். அது நிலைக்காமல் போனது.
‘சந்துரு போதும் தனக்கு’ என்று கூறி அமைதியாக வாழ்ந்து முடித்து விட அவன் நினைத்தால், விதி திரும்பவும் விளையாட்டை ஆரம்பித்து விட்டது.
எதெதோ யோசனையில் படுத்து இருந்தவன், ஒரு கட்டத்தில் தூங்கி விட்டான்.
*.*.*.*.*.*.*.*.
“தேவா… தேவா…” என்று நடு வீட்டில் நின்று அலறிக் கொண்டிருந்தார் மல்லிகா.
தேவேந்திரன் அறையில் இருந்து வெளியே வந்து பார்த்தான். கீழே மல்லிகா கோபத்தில் மூச்சு வாங்க நிற்க, புருவம் சுருங்க இறங்கி வந்தான்.
“என்னமா ஆச்சு?” என்று கேட்க, “நான் யாருடா இந்த வீட்டுக்கு?” என்று கோபம் குறையாமல் கேட்டார்.
“இப்ப இந்த கேள்வி ரொம்ப முக்கியமா?” என்று எரிச்சலாக தேவேந்திரன் கேட்க, “முக்கியம் தான்டா. ரொம்ப முக்கியம். போற போக்குல நான் யாருனு எனக்கு மறந்தே போயிரும் போல” என்று மல்லிகா பொறிந்து தள்ளினார்.
“இப்ப எதுக்கு சம்பந்தமில்லாம பேசுறீங்க? என்ன நடந்துச்சுனு தான கேட்டேன்?” என்று தேவா கோபத்தை காட்ட, உடனே மல்லிகாவின் கண்ணில் கண்ணீர் கொட்ட ஆரம்பித்தது.
“ஆமாடா . உன் பங்குக்கு நீயும் சொல்லு. எனக்கு எந்த சம்பந்தமும் இல்லனு. நேத்து வந்தவ தான் இப்படினா..? நான் பெத்ததும் அப்படியே தான் இருக்கு. என்னைக்கு எங்கள முதியோர் இல்லத்துக்கு துரத்துவியோனு பயந்துட்டே வாழனும் போல. அந்த சிரமம் கூட உனக்கு வேணாம். என்னங்க… எந்திரிங்க. இப்பவே நாம போய், முதியோர் இல்லத்துல உட்கார்ந்துக்கலாம். கழுத்த பிடிச்சு தள்ளிட்டான்ங்குற பழி இவனுக்கு வேணாம். வாங்க.” என்று நிறுத்தாமல் பேச, தேவேந்திரனுக்கு கோபம் தலைக்கு ஏறியது.
“சட் அப் மா. உங்க கிட்ட என்ன பிரச்சனைனு கேட்டேன். அதுக்கு பதில் சொல்லுறீங்களா நீங்க…? காலங்காத்தல வேலைக்கு கிளம்புறவன இழுத்து வச்சு, தேவையில்லாதத எல்லாம் பேசிட்டு இருக்கிங்க. இந்த வீட்டுல இன்னும் நாலு நாள் இருந்தா, நான் தான் மெண்டல் ஹாஸ்பிடலுக்கு போகனும். விசயத்த சொல்ல முடிஞ்சா சொல்லுங்க. இல்ல என்னவோ செஞ்சு தொலைங்க” என்று தேவா பேசிய பேச்சில், மல்லிகாவின் வாய் தற்காலிகமாக மூடிக் கொண்டது.
கோபம் குறையாமல் தேவா திரும்ப, “அதில்லடா கண்ணா. இந்த பைரவி எனக்கு கேள்வி கேக்க எந்த உரிமையும் இல்லனு சொல்லிட்டா பா. இந்த வீட்டுல எனக்கு உரிமை இல்லனா நான் என்னபா செய்யட்டும்?” என்று முந்தானையை வாயில் வைத்து உடலை குலுக்கினார்.
தேவா பைரவியை பார்த்தான். அவள் நடப்பதற்கும் தனக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை என்பது போல், சந்துருவிற்கு இட்லியை ஊட்டிக் கொண்டிருந்தாள்.
“பைரவி” என்று அழைத்தான்.
அவன் குரலுக்கு திரும்பி பார்த்தாள். அவள் பார்வை அவனை எதோ செய்தது.
‘தீர்ப்பு சொல்ல போகிறாயா ? சொல்.’ என்ற பார்வை.
அதை கண்டு கொள்ளாதவன், “அம்மா கிட்ட இப்படிப் பேசாத . அவங்க தான் இங்க எல்லாம் புரியுதா?” என்று கேட்டான்.
இப்போது அவளது பார்வை மாறியது. அர்த்தம் புரிந்து கொள்ள முடியாத பார்வை.
அவனும் பார்ப்பான். எதிராளிகளின் மனதை கூறு போடும் அளவு. சாதாரணமான இமை சிமிட்டலில் கூட, அர்த்தம் கண்டு பிடிக்கும் அளவு கூர்மையாக பார்த்து வைப்பான். ஆனால், இவள் பார்வை விசித்திரமானது.
அவளது கண்களில் நுழைந்து இதயத்தை பார்க்க முயற்சி செய்ததில், மாபெரும் தோல்வி தான் கிடைத்தது. அவளையோ அவள் மனதையோ ஊடுருவ விடாமல், இரும்புக்கதவை போல் தடுத்து நின்றது அவளது பார்வை.
மல்லிகா, மகன் பேசியதில் பெருமிதமாக மருமகளை பார்த்து வைத்தார்.
“பார் என் மகனை” என்ற பார்வை. பைரவி அதை கண்டுகொள்ளவே இல்லை.
தேவேந்திரனை விசித்திரமாகப் பார்த்து விட்டு, திரும்பிக் கொண்டாள். தந்தையின் அதட்டலில் பயந்து அமர்ந்து இருந்த சந்துரு, பைரவியை நிமிர்ந்து பார்த்தான்.
அவனை பார்த்து புன்னகைத்தவள், தலையை தடவிக் கொடுக்க, சந்துருவின் முகத்தில் புன்னகை மீண்டது. மீதமிருந்ததை ஊட்ட ஆரம்பித்து விட்டாள். நடந்ததை பார்த்த தேவேந்திரன், விறுவிறுவென படியேறி அறைக்குள் மறைந்தான்.
மல்லிகா எல்லாவற்றையும் அதிகமாக எடுத்துக் கொள்வார் என்று அவனுக்கு தெரியும். அந்த குணங்கள் அவனுக்குப் பிடிக்காது. இதனால் தான் பல மாதங்கள் வீட்டிற்கே வர மாட்டான்.
சந்துரு வந்த பின் தான், ஒழுங்காக வீட்டிற்கு வருகிறான். இது போல் தினமும் பஞ்சாயத்து நடந்தால், இந்த வீட்டு பக்கம் எட்டிப் பார்க்காமல் இருந்து விடுவான்.
‘பைரவியை தனியாக ஒரு முறை கண்டிக்க வேண்டும். அப்போது தான் இது போன்ற பிரச்சனைகள் வராது’ என்று நினைத்துக் கொண்டே, அலுவலகம் கிளம்பினான்.
தொடரும்.

