Loading

பைரவி சமையல் வேலையில் மும்முரமாக இருந்தாள். வெண்டைக்காயை வேகமாக நறுக்கிக் கொண்டிருந்தவளின் மனம், தேவேந்திரனிடம் சென்றது. வெண்டைக்காய் அவனுக்கு மிகவும் பிடிக்கும் என்று நினைத்துக் கொண்டாள். இப்போது, தேவேந்திரனுக்கு பிடித்தது பிடிக்காதது எல்லாம் பைரவிக்கு அத்துப்படி. ஓருயிர் ஈருடலாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

அன்று சந்தியாவின் இறப்பு பற்றி தெரிந்த பின்பு, தேவேந்திரன் நொந்து போய் விட்டான். பைரவி அவனை தேற்ற முயற்சிக்க,

“இல்ல பைரவி… உன் கிட்ட நான் நிறைய பேசனும் ” என்று கூறி, மனதில் இருப்பதை கொட்ட ஆரம்பித்தான்.

“உனக்கு என் மேல கோபம் இருக்கும்ல? சந்தியாவுக்கு நான் நல்ல கணவனா இருக்கலனு. நியாயம் தான். ஆனா, கல்யாணத்த நான் ஆசைப் பட்டு பண்ணிக்கல. இங்க இருந்து போறதுக்கு முன்னாடி, அம்மா எனக்கு கல்யாணம் பண்ணி வைக்கனும்னு முடிவு பண்ணிட்டாங்க. அதுக்கு சந்தியா ஏன்னு கேட்டேன். நான் சந்தியா கிட்ட பேசுனது கூட இல்ல. மாமா மக அவ. அவ்வளவு தான் தெரியும். அவள ஏன் கல்யாணம் பண்ணிக்கனும்னு கேட்டேன்.

என் தம்பி மக. அவ வந்தா நான் நிம்மதியா இருப்பேன். மத்தவங்க வந்தா, எனக்கு பாதுகாப்பு இல்லனு தோனும்னு நிறைய சொன்னாங்க. ஒரு மகனா அவங்க சொன்னது எல்லாம் எனக்கு சரினு தோனுச்சு. ஒரு மகனா மட்டும் யோசிச்சா, அம்மா சொல்லுற எல்லா விசயமும் சரி தான்.

அவசரத்துக்காக யாரோ ஒரு பொண்ண கட்டி வச்சுட்டா, அவ எங்கம்மா கூட சண்ட போட கூடாதே? மகனா இருந்தா உனக்கும் இது புரியும் பைரவி. அந்த‌ நேரத்துல அம்மாக்கு நல்லா தெரிஞ்ச சந்தியாவ கல்யாணம் பண்ணிக்குறதுல, எனக்கு எந்த பிரச்சனையும் இல்ல.

என் மனசுல வேற யாரும் இல்ல. அதுனால தைரியமா கல்யாணம் பண்ணிட்டேன். கல்யாணத்துக்கு அப்புறம் சந்தியா கூட கடமையேனு வாழ்ந்தேன். காதல் எல்லாம், அப்ப கூட எனக்கு அவ மேல வரல. ஆனா, அவ என் மனைவினு மனசுல இருந்துச்சு.

எனக்கு மூளை எல்லாம், வேலையில மட்டும் தான் இருந்துச்சு. சந்தியா என் கிட்ட பேசுன வார்த்தைய, விரல் விட்டு‌‌ எண்ணிடலாம். நானா பேச ட்ரை பண்ணுவேன். ஆனா, அவ பேசவே மாட்டா. அதட்டுனா‌ அரண்டு போயிருவா. என்னடா இதுனு ஆயிடும். சரி எதுவா இருந்தாலும், வேலைய முடிச்சுட்டு வந்து பார்த்துக்கலாம்னு கிளம்பிட்டேன்.

இந்த பிரிவு கூட, அவள மாத்தலாம்னு நம்பிக்கை. அவள நான் காட்டுக்குள்ள விட்டுட்டுப் போகலையே பைரவி. என் வீட்டுல, அம்மா, அப்பா, தங்கச்சினு குடும்பத்துல தான் விட்டுட்டு போனேன். அதுவும் அவளுக்கு இது யாரோ ஒருத்தர் இல்லையே. சொந்த அத்தை குடும்பம்.

அடுத்தவங்கனா அவளால இருக்க முடியாது. சொந்த அத்தை வீட்டுல தான இருக்கா? அதுனால முழு பாதுகாப்புனு நம்பி தான் விட்டுட்டு போனேன். அது தப்பா? எங்கம்மா இவ்வளவு கொடுமை பண்ணுவாங்கனு தெரிஞ்சு இருந்தா, அவள கையோட கூட்டிட்டுப் போயிருப்பேனே.

அம்மா எல்லாத்தையும் ஓவரா எடுத்துப்பாங்கனு தெரியும் தான். ஆனா, அதுக்காக யாராவது பெத்த அம்மாவ கொடுமை காரினு நினைப்பாங்களா? நான் மட்டும் எப்படி நினைப்பேன்? அதுவும் அவங்களே ஆசப்பட்டு கட்டி வச்ச தம்பி மகள, கொடுமை பண்ணுவாங்கனு கனவுல கூட எந்த மகனும் நினைக்க மாட்டான்.

வெளி நாடு போனதும், அவள நான் மறந்துடல பைரவி. போன்ல அவ கிட்ட பேசுவேன். கேட்பேன். இங்க என்ன நடக்குதுனு கேட்பேன். அவ சொல்ல மாட்டா. அம்மா அப்பா கிட்ட மட்டும் பேசிட்டு வச்சா, என் மேல தப்பு. நான் அவ கிட்ட தனியா பேசுவேன். பயப்படுறாளேனு தன்மையா பேசுவேன். அங்க நான் பார்க்குற நிறைய விசயங்கள சொல்லுவேன். என் வேலைய பத்திக் கூட சொல்லுவேன்.

ஆனா, அவ இங்க நடக்குற எதையும் வாய தொறந்து சொல்ல மாட்டா. வீட்டுக்குள்ள தான் இருக்கேன். ஒன்னுமே இல்லனு சொல்லிடுவா. நான் எப்படி தெரிஞ்சுக்குறது? வேற யாருமே எதையுமே சொல்ல மாட்டாங்க.

பிரசவத்துல அவ இறந்து போயிட்டானு சொல்லும் போது, ரொம்ப கில்டியா ஃபீல் ஆச்சு. கடமைக்குனு அவ கூட வாழலனா இப்படி செத்துருக்க மாட்டா. நான் இங்க இருந்து இருந்தா, அவ ஹெல்த்த சரியா பார்த்து இருப்பேன்னு தோனும்.

அந்த குற்ற உணர்ச்சியில் இருந்தவன் கிட்ட, அப்பா செகண்ட் மேரஜ் பத்தி பேசி வைச்சார். ஒரு பொண்டாட்டிய கட்டி ஒழுங்கா வாழ துப்பில்ல. இன்னொன்னு வேறயானு சண்டை போட்டுட்டேன்.

ஆனாலும், அப்பா விடாம பேசினார். அவர் வாய அடைக்கத் தான் சம்மதம்னு சொல்லி, ஆயிரம் கண்டீஷன் போட்டேன். நான் போட்ட கண்டீஷனுக்கு இந்த ஜென்மத்துல பொண்ணு கிடைக்காது. நிம்மதியா இருக்கலாம்னு பார்த்தா, அடுத்த நாளே உன்னை பத்தி சொல்லுறார்.

சம்மதம்னு சொன்னதுக்கு நொந்துட்டேன். அதுக்கு அப்புறமும் அவர் விடாம பேசினார். எதாச்சு ஒரு காரணத்த கண்டு பிடிச்சு, உன்ன ரிஜக்ட் பண்ணிடனும்னு துடிச்சேன். அப்ப தான் உன் அண்ணி சொன்ன பொய்ய சொல்லிட்டார். அத காரணமா காட்டி உன்னை வேணாம்னு சொல்லுற அளவு நான் தரம் இறங்கல. சம்மதம்னு சொல்லிட்டேன். நான் கேட்ட எல்லாமே உன் கிட்ட இருக்குனு அப்பா சொல்லிட்டார். இதுக்கு மேல வாதாட மனசு இல்ல.

ஆனா, அப்போ இருந்து மனசுக்குள்ள உறுத்திட்டே இருந்துச்சு. உன் முகம் தெரியாத போதே, உனக்கு இப்படி ஒரு பிரச்சனை வந்துருக்க கூடாதுனு மனசு அடிச்சுக்கும். சந்தியா மேல கூட, அவள கல்யாணம் பண்ணி என் மனைவியா வந்ததுக்கு அப்புறம் தான் அக்கறை எல்லாம்.

உன்னை பார்க்கவே இல்ல. பேரு கூட தெரியாது. ஆனாலும், உன் கஷ்டத்த நினைச்சு நொந்துட்டு இருந்தேன். முதல் கல்யாணம் அம்மாகாக பண்ணிகிட்டேன். அதுனால தான் அதுல என்னால ஜெய்க்க முடியலையோனு மனசு உறுத்திட்டே இருக்கும்.

உன்னை அப்பாகாகவோ, சந்துருவுக்காகவோ, உன் பிரச்சனைகாகவோ கல்யாணம் பண்ணல. மனசார உன்னை மனைவியா ஏத்துகிட்டு தான் கல்யாணம் பண்ணேன். சந்தியா கூடவே இருக்காதது தான் என் பிரச்சனைனு நினைச்சுப்பேன்.

யாருக்கு கிடைக்கும் செகண்ட் சான்ஸ்? எனக்கு கிடச்சது. உன் மூலமா. அத இழக்க கூடாதுனு உன்னை‌ இங்க கூட்டிட்டு வந்தேன். மனசுல நீ மனைவினு வந்ததும் சந்தியா கடவுள் இடத்துக்கு போயிட்டா. இறந்தவங்க எப்பவுமே கடவுள் இல்லையா? அப்போ சந்தியா என்னை மன்னிச்சு இருப்பா இல்ல?

ஆனா, சந்தியா அப்பா அம்மா என்னை‌ மன்னிச்சுட்டாங்க. அவங்க கிட்ட நான்‌ மன்னிப்புக் கேட்டேன். கொஞ்சம் கூட கோபமே இல்லாம, என்னை மன்னிச்சுட்டாங்க. அவங்க பொண்ணு செத்ததும், ரெண்டாவது கல்யாணம் பண்ணிட்டேன்னு கோபம் வருத்தம் எதுவுமே இல்ல. வார்த்தைக்கு வார்த்த உன்னை பத்தி தான் பேசுறாங்க. சந்துருவ நீ நல்லா பார்த்துகிட்டா போதும்னு சொல்லுறாங்க. பார்த்துப்பானு வாக்கு கொடுத்துட்டு வந்தேன்.”

மடை திறந்த வெள்ளமாய் மனதில் இருப்பதை தேவேந்திரன் கொட்டி விட்டான். பைரவி அமைதியாக அவன் பேச்சை கேட்டுக் கொண்டிருந்தாள். கணவன் முதல் மனைவியை பற்றி பேசுகிறானே என்ற வேதனை அவளுக்கு இல்லை. சந்தியா வாழாமல் விட்ட வாழ்க்கையை தான், அவள் வாழ்கிறாள் என்ற குற்ற உணர்வும் இல்லை.

வாழ்க்கை இப்படி தான் என்று வகுத்து வைத்திருக்கிறது. எல்லோருடைய நியாயமும் கேட்டாயிற்று. கணவனாக தேவாவின் மனதையும் கேட்டு அறிந்து கொண்டாள்.

“சரி இன்னையோட இந்த பேச்ச விடுங்க. ” என்று பைரவி கூற, “அப்பா இப்படி மறைப்பார் னு நினைச்சு கூட பார்க்கல பைரவி…” என்று மீண்டும் அதே பேச்சில் வந்து நின்றான்.

“மாமாவ குறை சொல்லாதீங்க. உங்கம்மா அவர சொல்ல விடல”

“அவங்க வேணாம்னு சொன்னா, இவர் சொல்ல மாட்டாரா?”

“ஆமா… உங்கம்மா அப்படியே சாதாரணமா சொல்லாதீங்கனு சொல்லிடுவாங்களாக்கும்? மகன் கிட்ட உண்மைய சொல்லிட்டீங்கனா, சிலீண்டர திறந்து விட்டு செத்து போயிடுவேன்னு சொல்லி இருப்பாங்க. அதுக்கும் உங்கப்பா மசியலனா, கண்காணாம தொலைஞ்சு போயிடுவேன்னு மிரட்டி இருப்பாங்க. அப்பவும் உங்கப்பா.. நீ போனா போய்க்க… செத்தா செத்துக்க.. நான் உண்மை விளம்பி. என் மகன் கிட்ட உண்மைய சொல்லுவேன்னு சொல்லி இருக்கனும்னு எதிர் பார்க்குறீங்களா?

ஹ.. அதெல்லாம் எந்த மனுசனாலையும் முடியாது. செத்து போன சந்தியாவுக்காக, உயிரோட இருக்க பொண்டாட்டிய ஊர விட்டு துரத்துனுமானு தான் தோனும். அதுவும் மாமா, உங்கம்மா மேல உசுரயே வச்சுருக்கார். அவங்க கண்ணீர் விட்டாலே தாங்க மாட்டார். சிலீண்டர் வெடிச்சு செத்தா தாங்குவாரா?

அதுனால உங்கம்மாவுக்கு சாதகமா யோசிச்சு இருப்பார். உங்கம்மாவும் பிருந்தாவும் வீட்டுல இருந்தாலும், படில தடுக்கி விழுறவள எப்படி தடுத்து இருக்க முடியும்? சந்தியா கத்துறத கேட்டு ஓடி வந்தாலும், மாமா என்ன பண்ணாரோ அத தான பண்ணி இருப்பாங்க? போற உசுரு போகனும்னு இருந்துச்சு. போயிடுச்சுனு மனச தேத்தி இருப்பார்”

பைரவி சேகரன் மனதை புட்டு புட்டு வைத்தாள். ஆனாலும், தேவேந்திரன் பெற்றவர்களை மன்னிக்கவில்லை. இன்று வரை, அவர்களை அவன் மதிக்கவும் இல்லை. ஐந்து வருடங்கள் யாருக்காகவும் நிற்காமல் ஓடி விட்டது.

தேவேந்திரன் மனதில் இருந்த வேதனைகள் மறைந்து, காதல் மட்டுமே நிறைந்து விட்டது. அந்த காதலுக்கு பரிசாக, குட்டி பைரவியும் வந்து விட்டாள். நிஜம்மாகவே அவள் குட்டி பைரவி தான். வாய் பேச்சில் அன்னையை தூக்கி சாப்பிட்டு விடுவாள்.

மகளை நினைத்ததும் பைரவியின் முகத்தில் புன்னகை படர்ந்தது.‌ சந்துரு அப்பாவைக் கொண்டு இருந்தால், சங்கீதா அம்மாவை கொண்டு இருந்தாள்.

“பைய்யவி…” என்று வந்து நின்றாள் குட்டி பைரவி சங்கீதா.
‘நினச்சதும் வந்துட்டா..‌ நூறு வருசம் இருப்பா’ என்று சிரித்துக் கொண்டே திரும்பினாள்.

“அம்மானு கூப்பிடுனு எத்தனை தடவ சொல்லி இருக்கேன்?” என்று பைரவி மிரட்ட, “முடியாது” என்று தலையை சிலுப்பினாள் சங்கீதா.

பைரவி முறைக்க, “அண்ணா சாக்ஸ் எங்க?” என்று கேட்டாள்.

“உங்கொண்ணன் சாக்ஸ தொலைக்குறதே வேலையா வச்சுருக்கான். உங்கப்பா கிட்ட கேளு போ” என்று துரத்தினாள்.

“உனக்கு ஒன்னுமே தெரியல.. வேஸ்ட் பைய்யவி” என்று திட்டி விட்டு செல்ல, கயல் வாயை மூடிக் கொண்டு சிரித்தார்.

பைரவி அவரை பாவமாக பார்த்தாள். தேவேந்திரனும் சந்துருவும் சேர்ந்து, சங்கீதாவிடம், சந்துரு முதலில் பைய்யவி என்று கூப்பிடும் கதையை ஒப்பித்து இருந்தனர். அதற்கு சங்கீதா, நானும் பெரிய பெண்ணாகும் வரை அப்படித் தான் கூப்பிடுவேன் என்று கூறி விட்டாள். பைரவி என்ன திட்டினாலும், காதில் வாங்குவது இல்லை.

ஒரு வழியாக இருவரும் பள்ளிக்கு கிளம்பி வர இருவருக்கும் சாப்பாட்டை வைத்தாள்.

“கயலத்த தான் ஊட்டனும்” என்று சங்கீதா சொல்லி விட்டாள்.

ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவர் அவளுக்கு ஊட்ட வேண்டும். கயல் பிள்ளைகளை கவனிக்க, பைரவி தேவேந்திரனை அழைத்தாள்.

அவன் வரும் வழியை காணோம். வேகமாக அறைக்குள் சென்றாள். காதில் கைபேசியை வைத்துக் கொண்டு சட்டையில் கை பட்டனை மாட்டிக் கொண்டிருந்தான். பைரவி அவனுக்கு உதவ வர, தேவேந்திரன் பேசி முடித்தான்.

பைரவி பட்டனை மாட்டி விட்டு, “சாப்பிட வாங்க. பிள்ளைங்க சாப்பிட்டுட்டு இருக்காங்க” என்று அழைத்தாள். அவளை அசைய விடாமல், இடையோடு அணைத்துக் கொண்டான்.

“என்ன?”

“எப்போ பாரு பிள்ளைங்க பின்னாடியே சுத்துற. என்னை பத்தி யோசிக்கவே மாட்டியா?” என்று கோபம் போல் கேட்டான்.

ஆனால் குரல் கொஞ்ச தான் செய்தது.

“நினைப்பு தான். ரெண்டு புள்ளைய பெத்தாச்சு. இன்னும் ரொமான்ஸ் கேட்குதாக்கும். தள்ளுங்க” என்று அவளும் இல்லாத கோபத்தோடு பேசினாள்.

“ரெண்டு என்ன? இன்னும் நாலு பிள்ளைய பெத்துக்கிட்டா கூட நான் இப்படி தான் இருப்பேன்” என்றவன் அவள் கன்னத்தில் முத்தமிட்டான்.

கன்னங்கள் சிவந்து போனாலும், “காலையிலயே ஆரம்பிச்சாச்சா?” என்று சலிப்பாக கேட்டாள்.

“ஆமா” என்றவன் அடுத்த கன்னத்திலும் முத்தமிட்டான்.

பைரவி அவன் கழுத்தில் கைகளை மாலையாக கோர்த்துக் கொண்டு அவளது வழக்கமான பார்வையை பார்த்து வைத்தாள்.

“இந்த பார்வை இருக்கே…” என்று கூறி கண்களில் முத்தமிட்டான்.

“இதுக்கு என்ன அர்த்தம்னு தான் தெரியல.. ஆனா ஆள சுண்டி இழுக்குது” என்று கொஞ்ச, “போதும் சாமி. பிள்ளைங்க தேடுவாங்க. வாங்க முதல்ல” என்று அவனை விலக்கி, கீழே அழைத்து வந்தாள்.

கீழே வரும் போது, “ப்ளீஸ் அத்த” என்று சங்கீதா கெஞ்சிக் கொண்டிருந்தாள். கயல் மறுத்து, “அம்மாக்கு தெரிஞ்சா அடி தான்” என்று மிரட்டினார்.

“எனக்காக ஒரு அடி வாங்கிக்கோங்க அத்த” என்று கூற, சந்துரு அடக்க‌ மாட்டாமல் சிரித்து விட்டான்.

கயல் வாயில் கை வைத்து அதிர்ந்து நிற்க, சங்கீதா அறியா பெண்ணாய் இமை கொட்டினாள்.

“அம்மா உன்னை அடிப்பாங்கனு சொன்னா, அத்தைய அடி வாங்கிக்க சொல்லுறியே.. கீது எங்கயோ போயிட்ட” என்று சந்துரு கூற, கயல் சங்கீதாவை அதிர்ச்சி விலகாமல் பார்த்தார்.

“என்ன மறுபடியும் சட்னி கேட்குறாளா?” என்று கேட்டபடி பைரவி வந்து நின்றாள்.

சங்கீதா சமத்தாக வாயை மூடிக் கொண்டாள். கயல் ஆமாம் என தலையாட்டி விட, சங்கீதாவிற்கு கொட்டு விழுந்தது.

“சேராதுனு பெரியவங்க சொன்ன கேட்குறது இல்ல. வாயாடி. இருக்கத சாப்பிட்டு கிளம்பு” அதட்டினாள்.

சங்கீதாவிற்கு மூன்று வயது. பள்ளியில் சேர்ந்து படிக்க ஆரம்பித்து விட்டாள். தேங்காய் அவளுக்கு நல்லது இல்லை என்று மருத்துவர் சொல்ல, சங்கீதாவிற்கு தேங்காய் சட்னி தான் உயிர்.

சங்கீதா.. அந்த வீட்டின் உயிர். சந்துருவின் பிரியமான தங்கை. சாதாரணமாக, குழந்தைகள் பெற்றவர்களின் கவனம் இளைய குழந்தைகளின் மேல் செல்வதை, தாங்கிக் கொள்ள மாட்டார்கள். அப்படி சந்துரு ஏங்கி விடக் கூடாது என்பதற்காக, சங்கீதாவிற்கு அவனையே எல்லாமுமாக மாற்றினாள் பைரவி. இருவரும் மாற்றாந்தாய் பிள்ளைகள் என்ற வித்தியாசம் வர விடாமல் வளர்த்தாள்.

ஆனால், உரிய வயது வந்ததுதும் சந்தியாவை பற்றி சந்துருவிடம் கூறி விட வேண்டும் என்று தீர்மானமாக இருந்தாள். தேவா ஏனென்று கேட்க, “நம்ம வாழ்க்கையில நமக்கே தெரியாம ஒரு ரகசியம் ஒளிஞ்சு இருக்கது தப்புங்க. சந்துரு வாழ்க்கையில சந்தியா ரகசியமா இருக்க வேண்டிய அவசியம் இல்ல. யாரோ சொல்லி தெரியுறத விட, நாமளே சொல்லுறது தான் சரி” என்று கூறி விட்டாள்.

சங்கீதா வயிற்றில் இருக்கும் போது, வளைகாப்பு போட மகாலட்சுமி மட்டுமே வந்தார். அண்ணனோ அண்ணியோ வர கூடாது என்று பைரவி கூறி விட, மகாலட்சுமியும் அவர்களை கண்டுகொள்ளவில்லை.

பைரவி நிறைமாதமாக இருக்கும் போது, மருத்துவமனையில் நளினியையும் பார்த்திபனையும் சந்தித்தாள். நளினிக்கு எந்த குழந்தையும் தங்காமல் போக, இனி குழந்தை பெற்றுக் கொள்ளவே கூடாது என்று மருத்துவர் கூறி விட்டார். அதைக் கேட்டு நொந்து போய் வெளியே வந்தவர்கள் தான், பானை வயிறும் கை நிறைய கண்ணாடி வளையல்களுமாக நின்றிருந்த பைரவியை பார்த்தனர்.

பைரவி அவர்களை பார்த்து விட்டு கடந்து செல்ல பார்க்க, “ஒரு நிமிஷம்” என்று நிறுத்தினர். கையில் சந்துருவை பிடித்துக் கொண்டு அவள் நின்றாள். முகம் இறுக அவள் நிற்க, “மன்னிச்சுடு” என்று பார்த்திபன் கை கூப்பி கும்பிட்டான்.

“மன்னிச்சுட்டேன்” என்று பைரவி கூறி விட, பார்த்திபனால் அந்த வார்த்தையை தாங்க முடியவில்லை. திட்டி இருந்தால் அவன் மனம் ஆறி இருக்கும். மன்னிப்பை கேட்டதும் கொடுத்து, அவர்களை மீளமுடியாத பாவத்தில் தள்ளி விட்டாள்.

“உனக்கு பண்ண பாவத்துக்கு தான், இப்ப என் கர்ப்பப்பைய எடுக்க சொல்லிட்டாங்க” என்று கூறி நளினி கண்ணீர் விட, “இத கேட்டதும் சந்தோச படுவேன்னு நினச்சீங்களா? அது உங்க குணம். என் கிட்ட வந்து இதெல்லாம் நீங்க சொல்ல தேவையே இல்ல. நீங்க எனக்கு யாரோ. மனிதாபமான அடிப்படையில உங்க கஷ்டத்துக்கு என்னோட அனுதாபங்கள்” என்று கூறி விட்டு, நிற்காமல் சென்று விட்டாள்.

அதன் பிறகு அவர்களை எங்கு பார்த்தாலும், யாரோ போல் கடந்து விடுவாள். மகாலட்சுமி அதற்கும் மேலாக, அவர்களை பார்த்தால் வேறு பக்கம் திரும்பிக் கொள்வார். இதே நிலை தான் தேவேந்திரன் குடும்பத்திற்கும். யாரையும் பார்ப்பதும் இல்லை பேசுவதும் இல்லை.

பிள்ளைகளை பள்ளி பேருந்தில் ஏற்றி விட்டு வர, தேவேந்திரன் லாப்டாப்பை எடுக்க அறைக்குள் சென்று விட்டான். பைரவியும் அறைக்குள் நுழைய, பின்னாலிருந்து அணைத்துக் கொண்டான்.

“இன்னைக்கு ஆபிஸ் போகனுமா?” என்று கேட்டான். தினமும் கேட்கும் கேள்வி. ஆனாலும் பைரவிக்கு வெட்கம் வந்தது.

“தினமும் இதே வேலையா? கிளம்புங்க” என்று கூறி வெளியே தள்ளினாள்.

அப்போதும் திரும்பி, அவளை முத்தமிட்டு விட்டே நடந்தான்.

தேவேந்திரனின் நண்பன், தொழிலில் இருந்த அவன் பங்குகளை வாங்கிக் கொண்டு வெளிநாடு சென்று விட்டான். மொத்த தொழிலும் தேவேந்திரனிடம் வந்துவிட, அதில் இரவு பகல் பாராமல் உழைத்து உட்சத்தை அடைந்து கொண்டிருக்கிறான்.

வெளியே மிகப்பெரிய உயரத்தில் இருந்தாலும், பைரவியிடம் மட்டும் குழந்தையாய் மாறிக் கொஞ்சுவது அவளுக்கு சிரிப்பை வரவழைத்தது. சங்கீதா வயிற்றில் இருக்கும் போதே, பைரவி தன் வேலையை விட்டு விட்டாள். இப்போது தேவேந்திரன் வாழ்கையில் மட்டுமல்ல, தொழிலிலும் அவள் சரி பாதி தான்.

கணவனை வேலைக்கு அனுப்பியவள், சந்தோசமாக வீட்டு வேலைகளை பார்க்க ஆரம்பித்தாள். மனம் நிறைவுடன் ஒரு பாடலை ஹம் செய்த படி வேலையில் ஆழ்ந்தாள்.

இவர்கள் வாழ்க்கை இதே போல் சந்தோசம் நிறைந்ததாக இருக்க, வாழ்த்தி விடை பெறுவோம்.

நிறைவு.

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 3

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
2
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்