
மல்லிகா அந்த வீட்டிலிருந்து கிளம்பியதும், வீடு ரொம்பவுமே அமைதியாகி விட்டது. தேவா ஏதோ யோசனையுடனே சுற்றிக் கொண்டிருந்தான். பைரவிக்கு சந்துருவை பார்த்துக் கொள்வதற்கே நேரம் சரியாக இருந்தது.
ஒரு வாரம் கழித்து, சந்துருவுடன் மருத்துவமனை சென்று இருந்தனர். தலையிலிருந்த கட்டை அவிழ்த்து விட்டு, கையிலிருந்த கட்டையும் மாற்றினர்.
சந்துரு அங்கிருந்த கேண்டினை பார்த்து அடம்பிடிக்க, தேவா அவனை அழைத்துச் சென்று விட்டான். பைரவி மருத்துவரை பார்க்கச் சென்றாள். அன்று சந்துருவிற்கு வைத்தியம் பார்த்த மருத்துவர் இன்று இல்லை. அவருக்குப் பதில் வேறு ஒருவர் அமர்ந்து இருந்தார்.
சந்துருவின் ரிப்போர்ட் எல்லாம் பார்த்தவர், “நீங்க மிஸ்…?” என்று அந்த மருத்துவர் வினவினார்.
“மிஸஸ். பைரவி.” என்று கூறினாள்.
“ஓ.. இந்த பையனோட சித்தியா?” என்று கேட்க, பைரவி ஆச்சரியமாகப் பார்த்தாள்.
“உங்களுக்கு சந்துருவ முன்னாடியே தெரியுமா?”
“இங்க தான் இந்த பையன் பிறந்தான்”
“நிஜம்மாவா? அப்போ சந்தியாவுக்கு என்ன ஆச்சுனு உங்களுக்குத் தெரியுமா?” என்று பரபரத்தாள்.
அவளது பதட்டத்தை யோசனையாகப் பார்த்த மருத்துவர், “ஏன்? உங்களுக்குத் தெரியாதா?” என்று கேட்டார்.
“எனக்கு மட்டும் இல்ல டாக்டர்.. சந்துருவோட அப்பாவுக்கும் என்ன நடந்ததுனு தெரியாது. பிரசவத்துல இறந்து போயிட்டாங்கனு மட்டும் தான் சொல்லி இருக்காங்க”
“வாட்…? பிரசவத்துலயா? சந்தியா இங்க வரும் போதே இறந்துட்டாங்க” என்று மருத்துவர் கூற, பைரவி அதிர்ந்தாள்.
மேலும் மேலும் அவர் கூறியதை எல்லாம் கேட்டுக் கொண்டு, வீடு வந்து சேர்ந்தாள்.
தேவா மருத்துவர் என்ன சொன்னார்? என்று கேட்க, பைரவி பொதுவாக பதில் சொல்லி விட்டு, யோசனையுடன் அமர்ந்து இருந்தாள். சந்துரு வேறு விடாமல் கேள்வி கேட்டுக் கொண்டே இருக்க, தேவா அவனுக்கு பதில் சொல்லிக் கொண்டிருந்தான். காரை வேறு ஓட்ட வேண்டும். அதனால், பைரவியை முழுதாக தேவாவினால் கவனிக்க முடியவில்லை.
மறுநாள், சந்துருவிற்கு பிறந்தநாள். நண்பர்கள் சிலரையும், குடும்பத்தினரையும் அழைத்து, வீட்டில் பிறந்தநாள் கொண்டாடினர். நண்பர்கள் எல்லோரும் விழா முடிந்ததும் கிளம்பி விட, குடும்ப உறுப்பினர்கள் மட்டும் இருந்தனர்.
சேகரன், சந்துருவிற்கு சதுரங்கம் விளையாட சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார். பைரவியும், அவர்கள் பக்கத்தில் தான் அமர்ந்து இருந்தாள். மல்லிகா பிருந்தாவுடன் அறைக்குள் அமர்ந்து புலம்பிக் கொண்டிருந்தார்.
சேகரன் மல்லிகாவிடம் பேசுவது இல்லை. மீறி மல்லிகா பேச வந்த போது, “நீ எல்லாம் எந்த மூஞ்சிய வச்சுக் கிட்டு என் கிட்டப் பேச வர்ர? கல்யாணமாகி இத்தனை வருசம் கழிச்சு, பேரன் பேத்தினு எடுத்ததுக்கு அப்புறமும் கூட, உன் புருஷன் உன் கிட்ட பேசலனா தாங்க முடியல. இப்போ தான் வாழ ஆரம்பிச்சுருக்காங்க . அவங்கள மட்டும் பிரிக்க பார்க்குறியே. இது என்ன நியாயம்? என் கண்ணு முன்னாடி நிக்காத. போயிரு. நீ பண்ண காரியத்துக்கு உன்னை கொன்னு போட்டாக் கூட என் ஆத்திரம் அடங்காது” என்று கூறி விட்டுச் சென்று விட்டார்.
அதை தான் பிருந்தாவிடம் கூறிக் கொண்டிருந்தார் மல்லிகா.
“விடுமா. நான் அப்பவே நினைச்சேன். இந்த பைரவி கிட்ட அளவா வச்சுக்கனும்னு. அப்போ தான் அண்ணன் சொந்தம் விட்டு போகாது. சீரும் கரெக்ட்டா வந்து சேரும்னு. நீ வாய கொடுத்து வாங்கிக் கட்டிக்குற” என்று கூறி விட்டு எழுந்து சென்று விட்டாள்.
பைரவி ஆர்வமாக சதுரங்கம் விளையாடிக் கொண்டிருந்தாள். ஆனால், சேகரன் அவளை விட நன்றாக விளையாடினார். அதில் ஆச்சரிய பட்டவள், “ஏன் மாமா… உங்களுக்கு எப்படி இந்த செஸ்ல இவ்வளவு ஆர்வம் வந்துச்சு?” என்று கேட்க, “என் அண்ணன் தான்மா சொல்லி குடித்தான். அவனுக்கு நாங்க விளையாடுற விளையாட்டு எல்லாம் பிடிக்கவே பிடிக்காது. எப்போ பாரு இந்த அட்டைய தூக்கி வச்சுட்டு உட்கார்ந்துடுவான். கொஞ்ச நாள் ஆர்வம் இல்லாம கண்டுக்காம இருந்தேன். ஒரு நாள் அவனே இழுத்து வச்சு சொல்லி கொடுத்து பழக்கி விட்டான். ஹூம்ம்…. இப்ப இருக்க புள்ளைங்க எங்க இதெல்லாம் விளையாடுதுங்க? அந்த டீவி முன்னாடி உட்கார்ந்து மூளைக்கு வேலையே கொடுக்க மாட்டிதுங்க” என்று மருமகள் கேட்ட கேள்விக்கு, ஆர்வமாக ஆரம்பித்து சோகமாக பதில் சொல்லி முடித்தார்.
“அப்போ வளர்த்தவங்கள தான் மாமா குறை சொல்லனும். நாம என்ன காட்டுறமோ, அதை தான பிள்ளைங்க கத்துக்குவாங்க” என்று பைரவி பொதுவாக சொல்லிக் கொண்டு இருக்க, கேட்டுக் கொண்டே அங்கு வந்த மல்லிகா அவளை தீ பார்வை பார்த்தார்.
அதை கவனிக்காத பைரவி சதுரங்க அட்டையை ஆர்வமாக பார்த்துக் கொண்டு இருந்தாள்.
“அதுல என்ன சந்தேகம்.? பிள்ளைங்க பெத்தவங்க கிட்ட என்ன பார்க்குதோ பழகுதோ அத தான செய்யுங்க” என்றவர் குரலில், மறைமுகமாக மகனை நினைத்து பெருமை இருக்கத் தான் செய்தது.
“கரெக்ட் தான் மாமா. பட், இதுல உங்க மகன் ஆப்போஸிட்” என்று கூற சேகரன் முழித்தார்.
மல்லிகா காதை தீட்டிக் கொள்ள, அடுத்த வார்த்தை தீயாக மல்லிகாவின் தலையிலேயே வந்து விழுந்தது.
“ஏன் மா அப்படி சொல்லுற?” என்று கேட்க, “ஆமா மாமா. என்ன பண்ணாலும் நீங்க உங்க வொய்ஃப்ப விட்டு கொடுக்காம இருக்கீங்க. ஆனா, உங்க மகனுக்கு சந்துருவோட அம்மா ஏன் செத்தாங்கனு கூட தெரியல” என்று கூறி விட்டாள்.
சேகரன் அதிர்ந்து போனார். அவர் நிமிர்ந்து மல்லிகாவை பார்க்க, மல்லிகாவோ பேயறைந்தது போல் நின்று இருந்தார். வெளியே சென்று இருந்த தேவா, அதே நேரம் வீடு வந்து சேர்ந்தான்.
“என்ன மாமா பேச்சையே காணோம்? சந்துரு பிறந்த அன்னைக்கு தான், சந்தியா இறந்து போயிருக்காங்க. அவளுக்கு ஒரு தெவசமோ மரியாதையோ கூட இந்த வீட்டுல நடக்குறது இல்லையே? ஏன்?”
தேவா தந்தையும் தாயையும் கூர்ந்து பார்த்துக் கொண்டு நின்று இருந்தான். சந்துருவின் பிறந்த நாள் சந்தியாவின் இறந்த நாள் என்பதையே மல்லிகா மறக்க வைத்திருந்தார். அதை பைரவி சரியாக பிடித்து விட்டாள்.
“கேட்குறாள? பதில் சொல்லுங்க பா?” என்று தேவா கேட்க, சேகரன் குற்ற உணர்ச்சியில் பார்வையை தழைத்துக்குக் கொண்டார்.
மல்லிகாவை ஒரு பார்வை பார்த்தவன், பிருந்தாவை அழைத்தான் .
“இப்ப நீ நடந்தத எல்லாம் சொல்லுற.” என்று இறுகிப் போன குரலில் கட்டளை வைத்தான்.
நேற்று இரவு பைரவி அவனிடம் கேட்ட கேள்வி அப்படி.
சந்துரு உறங்கிய பின், “உங்க கிட்ட ஒன்னு கேட்கனுமே?” என்று கேட்டாள். தேவா மௌனமாக பார்க்க, “சந்துருவோட அம்மா எப்படி செத்தாங்க?” என்று கேட்டாள்.
“பிரசவத்துல செத்ததா சொன்னாங்க” என்று கூற, “யாரு சொன்னா?” என்று கேட்டாள்.
“அம்மா தான்” என்று கூறியதும், பைரவி சிரித்த இகழ்ச்சி சிரிப்பு, இன்னும் அவன் கண் முன் நின்று கேலி செய்தது.
“நாளைக்கு தானே சந்தியா இறந்த நாள்?” என்று கேட்டு விட்டு, பதிலை எதிர் பார்க்காமல் கண்ணை மூடிக் கொண்டு படுத்து விட்டாள்.
இவனுக்குத் தான் தூக்கம் கெட்டு, நிம்மதியும் கெட்டுப் போனது.
“அது வந்து…” என்று பிருந்தா இழுக்க, தேவா அவளை கூர்ந்து பார்த்தான். எச்சிலை கூட்டி விழுங்கியவள், நடந்ததை விவரித்தாள்.
*.*.*.*.*.*.
சந்தியா… வாய் திறந்து பேச தெரியாத அப்பாவி பெண். மல்லிகாவின் தம்பி மகள். மல்லிகாவின் அதட்டலான பேச்சைக் கேட்டால் நடுங்கி விடுவாள். அவரையே அதட்டி வைக்கும் தேவேந்திரனை கண்டால், அவளுக்கு இன்னும் பயம்.
அவளை பிடித்து தேவேந்திரனுக்கு கட்டி வைத்தார் மல்லிகா. அவருக்கு வாய் பேச தெரியாத இந்த அடிமை தான் வேண்டும்.
தேவேந்திரன், தன் வேலைகளுக்காக வெளிநாடு நோக்கி பறந்து கொண்டிருந்த நேரம் அது. எப்போதும், சென்றால் ஒன்றிரண்டு மாதங்களில் திரும்பி விடுவான். ஆனால், இம்முறை ஒரு வருடத்திற்கு மேலாக தங்க வேண்டி இருந்தது.
மல்லிகா அழுது புலம்ப ஆரம்பித்து விட்டார். மகன் வெளிநாட்டுப் பெண் எவளையாவது திருமணம் செய்து கொண்டு வந்து விடுவானோ? என்ற பயம். அதனால் அழுது ஆர்ப்பாட்டம் செய்து, தம்பி மகளை கட்டி வைத்து விட்டார்.
திருமணம் முடிந்த மறு மாதம், அவன் வெளிநாட்டில் இருக்க வேண்டும். அதற்கான வேலைகளில் அவன் மும்முரமாக இறங்கி விட்டான். திருமண வேலைகளில், அவனது அலுவலக வேலைகளை வேறு கவனிக்க முடியாமல் போனது. அதற்கும் சேர்த்து, திருமணம் முடிந்த பின், நிறைய வேலைகள் மிச்சம் இருந்தது.
வேலைகளில் தொலைந்தவன், சந்தியாவிடம் பேசிப் பழகத் தவறினான். அவளது ஆசைகள் வீணாகி விடக்கூடாது என்று, அவளோடு வாழ்ந்தவன், அவள் மனதைப் படிக்கவில்லை. அவளும் வாய் திறந்து பேசினாள் இல்லை. சிறு வயதிலிருந்தே தேவேந்திரன் மீது இருந்த பயம், அவளை தடுத்து விட்டது. கடமைக்கென்று வாழ்ந்து கொண்டிருந்தனர். ஒரு மாதத்தில் தேவேந்திரன் வெளிநாடு நோக்கி பறந்து விட்டான்.
சந்தியாவை உடன் அழைத்துச் செல்ல முடியவில்லை. தன் வீட்டில் தானே இருக்கிறாள் என்று, தைரியமாக சென்று விட்டான். அவன் சென்ற பிறகு, மல்லிகாவிடம் மாட்டிக் கொண்டு அவள் அனுபவித்த துன்பங்கள் ஏராளம். உடலளவில் அவளை துன்புறுத்தியது சொற்பமே.
மனதளவில் தான் அதிகமாக பாதிக்கப்பட்டாள். வேலையாட்கள் செய்யும் வேலை போக, மற்ற வேலைகள் சந்தியாவின் தலையில் தான் விழுந்தது. சந்தியாவும் கேள்வி கேட்காமல் செய்து முடிப்பாள்.
சந்தியா போல் இருப்பாள் என்று நினைத்து தான், பைரவியிடம் மல்லிகா அதிகாரம் செய்யப் பார்த்தது. பைரவி வேலைக்கு சென்று விட்டால், வீட்டு வேலைகளை அவள் தலையில் கட்ட முடியாதே? அதை தடுக்கப் போய், முதல் நாளே வாங்கிக் கட்டிக் கொண்டார்.
சந்தியா அப்படி இல்லை. என்ன சொன்னாலும் தட்டாமல் கேட்டுக் கொள்வாள். ஒரு நாளைக்கு ஒரு முறையாவது, “இப்படிப் பட்ட வாழ்க்கை உனக்கு கிடைக்க கொடுத்து வச்சுருக்கனும். வெளிநாட்டுல பறந்து பறந்து வேலை பார்க்குற என் மகனுக்கு, உன்னை கட்டி வச்சேன். காரணம்… நீ என் தம்பி மகளா போயிட்ட. பணத்துக்கு ஆசைப் பட்டு இருந்தா, ஒரு கோடீஸ்வரி இந்த வீட்டுக்கு மருமகளா வந்துருக்கனும். உன் அதிர்ஷ்டம் தெரிஞ்சு நடந்துக்க” என்று கூறி விடுவார்.
பைரவியாக இருந்தால், “கட்டி வச்சுருக்க வேண்டியது தானே? யாரு உங்க கைய பிடிச்சுத் தடுத்தா?” என்று கேட்டு இருப்பாள்.
ஆனால், சந்தியா வாயைத் திறக்க மாட்டாள். அமைதியாக கேட்டுக் கொள்வாள். தேவேந்திரன் வாரம் ஒரு முறை பேசுவான். அப்போது கூட சந்தியா இங்கு நடக்கும் கொடுமைகளை சொல்ல மாட்டாள். அவன் பேச்சிற்கு, “ம்” “ம்ஹும்” மட்டும் தான் பதிலாக கிடைக்கும்.
தேவேந்திரன் வெளிநாடு சென்று ஒரு மாதத்திற்குப் பிறகு சந்தியா கருவுற்று இருந்த விசயம் தெரிய வந்தது. உடனே வீடியோ கால் போட்டான். சந்தியா சோர்ந்து தெரிய, ஏனென்று விசாரித்தான். மசக்கை என்று காரணம் கூறினாள்.
அங்கிருந்து உடனே தேவேந்திரனால் கிளம்ப முடியாது. அதனால் வாரம் இரு முறை அவளிடம் பேசினான். அவளின் பயம் அவனுக்குப் புரிய, கணவன் நிலையை விடுத்து நண்பனாக பேசினான். அதில் சந்தியாவின் பயம் சற்று விலகியது.
வெளிநாட்டில் அவன் பார்த்த விசயங்களை பற்றிக் கூறுவான். நிறைய புது விசயங்களை பற்றிக் கூறுவான். சந்தியா எல்லாவற்றையும் ஆர்வமாக கேட்டுக் கொள்வாள். அவளை பற்றிக் கேட்டால், “வீட்டில் தானே இருக்கிறேன். ஒன்றுமே இல்லை” என்று முடித்து விடுவாள்.
ஆனால், அந்த வீடு ஒன்றும் அவ்வளவு நல்லவிதமாக இல்லை. நரகமாக தான் இருந்தது. மசக்கை தாங்காமல் சந்தியா வேலை செய்யாமல் படுத்து விடக் கூடாது.
“உலகத்துலேயே இவ தான் பிள்ள பெத்துக்குறாளாக்கும்? நாங்க எல்லாம் எல்லாம் கடையில வாங்கிட்டு வந்தோம் பாரு.. இவளுக்கு மட்டும் தான் மசக்க வர மாதிரி போய் போய் படுத்துக்குறா. எந்திரி. வந்து நாலு வேலைய இழுத்துப் போட்டுப் பாரு. அப்ப தான் சுகப்பிரசவமா பிள்ளைய பெத்துக்க முடியும்” என்று மல்லிகா திட்டி விட்டுப் போவார்.
சந்தியா மயக்கம் வாந்தியை விரட்டி விட்டு, வேலையை கவனிக்க ஆரம்பிப்பாள். இத்தனையும் பார்த்துக் கொண்டு, கண்டும் காணாமல் பிருந்தா சென்று விடுவாள். சேகரனுக்குத் தான் மனம் கேட்காது. அவரால் முடிந்தது, மருமகள் ஆசை படும் உணவை வீட்டில் செய்ய வைப்பது மட்டும் தான்.
வேலையாட்களிடம், சந்தியா எதை எப்போது கேட்டாலும் சமைத்து கொடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். மல்லிகா அதற்கு சண்டைக்கு வர, “உன் மருமக சண்டைய உன்னோட வச்சுக்க. சந்தியா வயித்துல இருக்கது இந்த வீட்டு முதல் வாரிசு. அத கவனிச்சு தான் ஆகனும். உன் வேலை என்னவோ அத பாரு” என்று கூறி விட்டார்.
இதனால் மட்டுமே சந்தியாவின் வயிறு வாடாமல் பாதுகாக்கப் பட்டது. இருந்தும் அவள் மெலிந்து கொண்டே தான் இருந்தாள். மருத்துவமனைக்கு, ஒரு முறை கூட மல்லிகா சந்தியாவுடன் சென்றது கிடையாது. சந்தியாவின் பெற்றவர்கள் தான் செல்வார்கள்.
அவளது உடல் நிலையை தேற்றச் சொல்லி மருத்துவர் கூறினாலும், அதை பெற்றவர்களால் நிறைவேற்ற முடியாது. சந்தியாவை பெற்றவர்கள், மௌனமாக கேட்டுக் கொண்டு வந்து விடுவார்கள். வளைகாப்பு வைத்து, தங்கள் வீட்டிற்கு மகளை அழைத்து செல்லலாம் என்று முடிவு செய்தனர்.
தேவேந்திரன் இந்தியா வரும் நேரம் தான், வளைகாப்பு வைக்க வேண்டும் என்று மல்லிகா கூறி விட்டார். ஏழு மாதத்தில் தேவேந்திரனால் கிளம்ப முடியவில்லை. இதில் வேலை பளு அதிகமாக, தேவேந்திரன் சந்தியாவிடம் பேசும் நாட்கள் குறைந்து போனது.
வளைகாப்பு ஒன்பதாவது மாதம் ஆரம்பத்தில் வைக்கலாம் என்று முடிவெடுத்தனர். மருத்துவர் சொன்ன தேதிக்கு, இரண்டு வாரத்திற்கு முன் வளைகாப்பு வைக்க நாள் குறித்தனர். தேவேந்திரன் அதற்குள் தன் வேலைகளை எல்லாம் முடித்து விட்டான்.
குழந்தை பிறந்தால், அதை முதலில் தன் கைகளில் தான் வாங்க வேண்டும் என்ற ஆசை அவனுக்கு. அதனால் வேலைகளை படு வேகமாக முடித்து விட்டுக் கிளம்பி விட்டான்.
இங்கு… மறுநாள் வளைகாப்பு என்ற நிலை.
“ம்மா… எவ்வளவு நேரம்? சீக்கிரம் வாங்களேன்” என்று பிருந்தா கத்திக் கொண்டிருக்க, “வந்துட்டேன்டி. வா போகலாம்” என்று மல்லிகா கிளம்பி வந்தார்.
நாளைய விழாவிற்கு கட்ட, பிருந்தாவிற்கு புது புடவை எடுக்கக் கிளம்பி இருந்தனர்.
வேலையாட்கள் வேலை முடிந்து சென்று விட்டனர். நிறைமாத கர்பிணியை வீட்டில் தனியாக விட்டு விட்டு செல்கிறோம் என்ற நினைவே, அவர்களுக்கு வரவில்லை. சந்தியாவிடம் சொல்லிக் கொள்ளவும் இல்லை. அவர்கள் போக்கில் கிளம்பி விட்டனர்.
அறையில் இருந்த சந்தியா வெளியே வந்து பார்த்தாள். வீடு மொத்தமும் அமைதியாக இருந்தது. யாரையும் காணோமே? என்று யோசித்துக் கொண்டே படிகளில் காலை வைத்தாள். அந்த நேரம் பார்த்து டெலி போன் மணி அலறியது. அமைதியான வீட்டில் அந்த சத்தம் பெரு சத்தமாக கேட்க, சந்தியா பயந்து விட்டாள்.
பயத்தில் கால் பிசக, படிகளில் உருண்டாள். வயிற்றை குறுக்கி குழந்தையை காத்தவளுக்கு, தன்னை காத்துக் கொள்ள தோன்றவில்லை. படியில் உருண்டு வந்தவள், இறுதி படியில் மயங்கி விழுந்தாள். பின் கழுத்து படியில் நச்சென மோதி விட, காதில் இரத்தம் சொட்டியது.
“ம்மா..” என்ற அவளது சத்தத்தை கேட்டு ஓடி வர அங்கு யாருமே இல்லை. மூச்சிற்கு திணறி, முழுதாக மயக்க நிலைக்கு சென்று விட்டாள். ஐந்து நிமிடம் முழுதாக கேட்பாரற்று கிடக்க, சேகரன் வீட்டிற்கு வந்து சேர்ந்தார்.
இரத்த வெள்ளத்தில் படிகளுக்கு கீழ் மயங்கி கிடந்த மருமகளை பார்த்ததும், அவருக்கு உயிர் போய் வந்தது. மல்லிகா பிருந்தா யாருமே வீட்டில் இல்லை என்பதை அறிந்து கொண்டவர், டிரைவர் உதவியுடன் சந்தியாவை மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்றார்.
வழியிலேயே அவள் உயிர் பிரிந்து விட்டது என்று மருத்துவர்கள் கூறி விட்டனர். சந்துருவை உடனடியாக அறுவை சிகிச்சை செய்து வெளியில் எடுத்தனர். தேவா இந்தியாவில் காலை வைத்ததும் கேட்ட முதல் செய்தி, சந்தியாவின் இறப்பு தான்.
பதினைந்து நாட்களுக்கு முன்பே சந்துருவை எடுத்து விட்டதால், இன்குபேட்டரில் வைத்துவிட்டனர். தேவா வீட்டிற்கு வந்து குளித்து கொள்ளி வைத்தான். கடைசியாக சந்தியாவின் முகத்தை அவன் பார்க்கவில்லை. பிரேத பரிசோதனை செய்து, அவளின் உடல் முழுவதும் வெள்ளை துணியால் மூடி வைத்திருந்தனர்.
பதினைந்து நாட்கள், தேவா தினமும் மருத்துவமனை சென்று கண்ணாடிக்கு வெளியே இருந்து, சந்துருவை பார்த்து விட்டு வருவான். அப்படி பார்க்கும் போது தான், அவனை அந்த மருத்துவருக்கு நன்றாக அடையாளம் தெரிந்தது.
சந்தியாவின் வயிற்றிலிருந்து குழந்தையை எடுக்கும் போது, இவரும் உடன் இருந்தார். இறந்த தாயின் உடலில் கூட, பாதுகாப்பாக இருந்த சிசுவை அவரால் மறக்கவே முடியாது. அதனால் தான் சந்துருவை அடையாளம் கண்டு கொண்டார்.
பதினைந்து நாட்களுக்கு பிறகு, சந்துருவை தேவேந்திரனிடம் ஒப்படைத்தனர். அவனை வாங்கிக் கொண்ட தேவா, நேராக தன் வீட்டிற்கு வந்து விட்டான். அந்த வீட்டில் அவன் அதிகம் இருந்தது இல்லை. வேலை செய்ய ஆட்களை நியமித்ததோடு சரி. மல்லிகா மகன் தனியாக இருக்க சம்மதிக்க மாட்டார்.
ஆனால், அவன் வெளி நாட்டிலிருந்து வந்ததிலிருந்து இங்கு தான் இருக்கிறான். சந்தியா இறந்ததற்கு காரணம் பிரசவம் என்று மல்லிகா கூறி விட்டார். சேகரனை உண்மையை கூற விடாமல் தடுத்து விட்டார். உண்மை தெரிந்தால், மகன் தன்னை வெறுத்து விடுவானே…? அதனால் உண்மையை மறைத்து விட்டார்.
பதினைந்து நாள் குழந்தையான சந்துருவுடன், தேவா வரும் போது, கயல் நன்றாக கவனித்துக் கொண்டார். எதற்காகவும் தேவாவை அவர் தொந்தரவு செய்யவில்லை. தேவா தன் தந்தை கடமையை திறம்பட செய்தான். ஆனால், அவனுக்கு புரியாத விசயங்களை, கயல் கண்ணும் கருத்துமாக கற்றுக் கொண்டு வந்து செய்தார்.
ஆறு மாதத்தில், சந்தியா இருந்த அறையை மொத்தமாக காலி செய்து, அவளது உடமைகளை எல்லாம் மல்லிகா அவளின் பெற்றோரிடம் அனுப்பி வைத்து விட்டார். சந்தியாவை மகனுக்கு ஞாபகப்படுத்தி, மகன் உண்மையை கண்டுபிடிக்கக் கூடாது என்று, மும்முரமாக செயல்பட்டு, எல்லாவற்றையும் அழித்து ஒழித்த பின்னால், மகனை தன் வீட்டிற்கு அழைத்து வந்தார்.
முதலில், தேவா தன் அன்னையிடம் சந்துரு வளர்கிறான் என்று நிம்மதியாக தான் இருந்தான். சந்துருவிற்கு இரண்டு வயது இருக்கும் போது தான், பிருந்தா அவனை அடித்ததைப் பார்த்து விட்டான்.
“என் பையன கை நீட்டி அடிக்குற அளவுக்கு உனக்கு தைரியம் வந்துடுச்சா?” என்று தேவா சீற, “அவன் பண்ண காரியம் அப்படி” என்று பிருந்தா தெனாவெட்டாக கூறினாள்.
“அப்படி என்ன பண்ணான்?” என்று கேட்க, “இங்க பாரு . என் ஷால கிழிச்சுட்டான்” என்று தூக்கி காட்டினாள்.
ஒரு ஓரமாக கிழிந்திருந்த துப்பட்டாவை கையில் வாங்கிய தேவா, இரண்டாக கிழித்து அவள் முகத்தில் தூக்கி எறிந்து விட்டான்.
பிருந்தா அதிர்ந்து போக, “இது மாதிரி ஆயிரம் ஷால, என் மகன் கிழிக்கிறதுக்காகவே வாங்கி கொடுக்க என்னால முடியும். ஆனா, நீ கை நீட்டக் கூடாது. அவன் பண்ணது தப்புனா, வாயில சொல்லி திருத்தனும். மாட்ட அடிக்குற மாதிரி அடிப்பியா? இனி என் மூஞ்சில முழிக்காத” என்று கூறி விட்டான்.
அதன் பின் அண்ணன் தங்கை உறவு கெட்டுப் போனது. சந்துருவின் பொறுப்பை வேலை செய்பவர்களிடம் ஒப்படைத்தான். அவனுடைய வேலைகளையும் ஒதுக்கி விட்டு, மகனுக்காக ஓடி வந்தான். சேகரன் இது தான் நேரம் என்று, மகனை இரண்டாம் திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தினார்.
அவர் என்ன செய்தாலும், மல்லிகா மல்லுக்கு நின்றார். இடையில் பிருந்தாவின் திருமணம் கூடி வ,ர தேவேந்திரன் கடமைக்காக மட்டுமே கலந்து கொண்டான். அவள் திருமணம் முடிந்த பின்னரும், சேகரன் இரண்டாவது திருமண விசயத்தை கைவிடவில்லை..
ஒரு வழியாக தேவேந்திரன் சம்மதித்து, ஆயிரம் கண்டீஷனை போட்டான். அத்தனையும் ஏற்றுக் கொண்டு, நான்காவது நாளே திருமணத்தை முடித்தை வைத்து விட்டுத் தான் ஓய்ந்தார்.
*.*.*.*.*.*.*.*.
சொல்லி முடித்ததும் தேவா பார்த்த பார்வையை, அவர்கள் மூவராலும் தாங்கிக் கொள்ள முடியவில்லை. மல்லிகா ஏதோ பேச வர, தேவா முகத்தை திருப்பிக் கொண்டான்.
“உங்க கிட்டையும் இத எதிர் பார்க்கல பா” என்று கூறி விட்டான்.
சேகரன் உடைந்து போனார். மல்லிகா, உண்மையை சொன்னால் செத்து விடுவேன் என்று அவரை மிரட்டி வைத்திருந்தாரே.
“இப்போ நான் சந்தியாவோட வீட்டுக்குத் தான் போயிட்டு வரேன். அவ அப்பா அம்மா இந்த நாள மறக்காம, அவளுக்கு மரியாதை பண்ணி கிட்டு இருக்காங்க. என்ன நடந்ததுனு கேட்டதுக்கு…
‘வேணா தம்பி. இப்ப தான் புது வாழ்க்கைய ஆரம்பிச்சு இருக்கீங்க. சந்தியாவ பத்தி பேசி அதைக் கெடுத்துக்காதீங்க. அவளுக்கு நாங்களே தெவசம் பண்ணிக்குறோம். இப்போ வந்த புள்ள, ரொம்ப நல்ல புள்ளையாம். எங்க பேரன சொந்த மகன் மாதிரி பார்த்துக்குதாம். கேள்விப் பட்டோம். நீங்க இதை எல்லாம் பேசி, அந்த புள்ள மனச நோகடிக்காதீங்க . போனது போனதாவே இருக்கட்டும்’னு சொல்லிட்டார்.
அவங்களுக்கு என் வாழ்க்கை, பைரவி, சந்துரு மேல இருக்க அக்கறை கூட, பெத்த உங்களுக்கு இல்லைல? இனி தயவு செஞ்சு யாரும் மகன் உரிமை கொண்டாடிட்டு வந்துராதீங்க” என்று கூறியவன், அவர்களை திரும்பி பார்க்காமல் அறைக்குள் சென்று மறைந்தான்.
அதற்கு மேல் அங்கிருக்க முடியாமல் எல்லோரும் கிளம்பி விட, “என் மகன பிரிச்சுட்டா” என்று மல்லிகா மனதில் பைரவியை திட்டிக் கொண்டே தான் சென்றார்.
சந்துரு கயலிடம் சாப்பிட சென்று விட, பைரவி தேவாவை அழைக்க மேலே சென்றாள்.
பால்கனியில் நின்று இருந்தவனிடம், “சாப்பிட வரலயா?” என்று கேட்டாள். உடனே திரும்பியவன் பைரவியை அணைத்துக் கொண்டான். அவன் அவள் கழுத்தில் முகத்தை புதைக்க பைரவி தான் அதிர்ந்து நின்றாள்.
“நினச்சு கூட பார்க்கல பைரவி. அம்மா வா இப்படி? நானே சந்தியா வாழ்க்கைய அழிச்சுட்டேன்ல! ச்சே” என்று அவன் புலம்ப, “ரிலாக்ஸ். அப்படிலாம் எதுவும் இல்ல. நடக்கனும்னு இருந்துச்சு நடந்துடுச்சு அவ்வளவு தான்” என்று சமாதானமாகப் பேசினாள்.
இதற்கு மேல் எதையாவது நினைத்து அவன் மனதை கெடுத்துக் கொள்ளும் முன், சாப்பிட அழைத்து வந்தாள். இருவருக்கும் அன்று இரவு தூக்கம் வரவில்லை. அந்த வீட்டில் நிம்மதியாக தூங்கியது சந்துரு மட்டுமே. குழந்தையாகவே இருந்திருக்கலாம் என்று பைரவிக்குத் தோன்றியது.
அடுத்த நாள் வேலைக்கு கிளம்பும் முன், சந்துரு ஒரு நல்ல காரியத்திற்கு பிள்ளையார் சுழி போட்டு வைத்தான்.
“அப்பா எனக்கு ஏன்பா தங்கச்சி இல்ல?” என்று தேவாவை பார்த்து கேட்டு வைக்க, அவன் பைரவியை திரும்பி பார்த்தான்.
பைரவி காதில் விழுந்த விசயத்தில் அதிர்ந்தாலும், ஒன்றுமே கேட்காதது போல் நின்று இருந்தாள்.
“தங்கச்சி தான? சீக்கிரம் வந்துடும்… ஆமா உனக்கு தங்கச்சிய பத்தி யாரு சொன்னது?”
“கயல் அத்த தான் சொன்னாங்க. எனக்கு தங்கச்சி வந்தா அவ கூட நிய்ய விளாடலாம்னு சொன்னாங்க.” என்று கூற, ‘அக்கா…’ என்று பைரவி பல்லை கடித்தாள்.
கோபத்திலோ வெட்கத்திலோ அவள் முகம் சிவந்து போனது.
சந்துரு கை சரியில்லாததால், அவன் பள்ளிக்கு செல்லவில்லை. அவன் சாப்பிட்டு விட்டு கயலிடம் விளையாட சென்று விட, பைரவியை தேவாவே தன் காரில் வேலைக்கு அழைத்து சென்றான்.
“என்ன முடிவு பண்ணிருக்க?” என்று தேவா கேட்க, “எத பத்தி?” என்று கேட்டாள்.
“சந்துரு கேட்டானே..? தங்கச்சிய பத்தி?”
பைரவி ஒரு நொடி திணறி விட்டு, “அதுக்கு முதல்ல உங்களுக்கு என் மேல அன்பு பாசம் எல்லாம் வரனும்” என்றாள்.
“அப்போ உனக்கு வந்துடுச்சு?”
“அது.. அது…”
அவளது திணறலை ரசித்தவன் “எனக்கு உன்னை பார்க்குறதுக்கு முன்னாடியே வந்துடுச்சு. நீ தான் புரிஞ்சுக்கல” என்று கூறி காரை நிறுத்தினான்.
பைரவி இறங்கிக் கொள்ள, தேவா அவளை கூப்பிட்டான். அவன் பக்கம் வந்து குனிந்து பார்க்க, அவள் கன்னத்தில் முத்தமிட்டான். பைரவி அதிர்ச்சியாக பார்க்க, “பை…” என்று கூறி விட்டுக் கிளம்பி விட்டான்.
தொடரும்.

