
மாலை சோதனை முடிவுகள் வந்தது. எந்த பிரச்சனையும் இல்லை என்று கூறி விட்டார் மருத்துவர். சந்துரு தந்தையை விட்டு அகல மாட்டேன் என்று, அடம் பிடித்து அழுது கொண்டிருந்தான்.
“நான் போய் பில் கட்டுறேன். கொடுங்க” என்று தேவாவிடம் பணத்தை வாங்கிக் கொண்டு, பைரவி சென்று விட்டாள்.
பணத்தை செலுத்திக் கொண்டிருக்கும் போது, “பைரவி…” என்று வாசு அழைத்தான்.
“என்ன?”
“என்ன இது? எதுக்காக இந்த கல்யாணம்?”
வனிதா, பைரவியின் மகனைப் பற்றி வாசுவிடம் கூறியிருந்தாள். திருமணமாகி மூன்று மாதத்தில் பையன் எங்கிருந்து வந்தான்? என்று அவனுக்கு புரிந்தது. அதை தான் கேட்டு விட்டான்.
“அது உங்களுக்குத் தேவையில்லாதது” என்று பைரவி பட்டென கூற, “என்னை மறுத்துட்டு, ரெடிமேட் குடும்பத்தோட இருக்கவங்கள கல்யாணம் பண்ணி இருக்கீங்கனா…? காரணம் எனக்குத் தெரியனும்” என்று அவன் பிடிவாதமாக கேட்டான்.
“அப்படி எந்த அவசியமும் எனக்கு இல்ல. நான் உங்கள ரிஜெக்ட் பண்ணி, என் ஹஸ்பண்ட்ட செலக்ட் பண்ணுறது என்னோட பர்ஸ்னல். உங்களுக்கு ஏன் விளக்கம் கொடுக்கனும்? ஹெல்ப்னு கேட்டீங்க. பண்ணேன். அதுக்கு மேல எதுவும் பேச வேணாம்” என்று கூறி விட்டுச் சென்று விட்டாள்.
இவர்கள் இருவரும் பேசிக் கொண்டு நின்றிருந்ததை, மல்லிகா பார்த்து விட்டார். அவர் மனதில் ஓடிய எண்ணங்கள், நிச்சயமாக நல்ல எண்ணங்கள் கிடையாது.
வீட்டிற்கு வந்து சேர்ந்தனர். சந்துரு எல்லாவற்றிற்கும் அடம் பிடித்து அழுதான். அவனை சமாதானம் செய்து தூங்க வைக்கும் முன், எல்லோரும் ஒரு வழியாகி விட்டனர்.
தலை வலிக்கிறது என்று, “அக்கா காபி போட்டுக் கொடுங்க க்கா” என்று கேட்டாள் பைரவி.
“சாப்பாட்டு நேரம் காபி எதுக்கு? அஞ்சே நிமிஷத்துல சமைச்சுடுவேன். சாப்பிடுங்க” என்று கூறி விட்டு, வேகமாக சமையலறைக்குள் சென்று விட்டார் கயல்.
“பைரவி… ஹாஸ்பிடல் பில் எங்க வச்ச?” என்று தேவா கேட்க, “அது…” என்று யோசித்தாள்.
தலை வலியில், எங்கே வைத்தோம்? என்பது மறந்து போக, நெற்றியைத் தட்டி யோசித்தாள்.
“என்ன மகாராணிக்கு பில் எங்க இருக்குனு கூட ஞாபகம் வரலையா? எப்படி வரும்? பில்லு கட்ட போனா தான நினைப்பு வரும்? வேற எதுக்கோ போனவளுக்கு எப்படி நினைப்பு வரும்?” என்று மல்லிகா நடுவில் பேச, பைரவிக்கு தலை வலி அதிகரித்தது.
“ம்மா என்ன பேசிட்டு இருக்கீங்க?” – தேவா
“நான் சொல்லுறதெல்லாம் எங்கடா உனக்கு புரியுது? நேத்து வந்த இவ பேசுறது தான் புரியுது” என்று கழுத்தை நொடித்தார் மல்லிகா.
“கொஞ்சம் நிறுத்துறீங்களா? என்ன நேத்து வந்தவ? இல்ல என்ன நேத்து வந்தவனு கேட்குறேன்? நீங்களும் இந்த வீட்டுக்கு மருமகளா தான வந்தீங்க? இல்ல இந்த வீட்டுல பிறந்து வளர்ந்தீங்களா? இல்லல? என்னை மட்டும் நேத்து வந்தவங்குறீங்க? அப்ப உங்கள என்னனு சொல்லுறது? இன்னொரு தடவ இந்த வார்த்தைய என் முன்னாடி சொல்லாதீங்க. அப்புறம் நான் மனுசியா இருக்க மாட்டேன்”
பைரவி சீறி விட்டாள்.
தலை வலி ஒரு பக்கம் என்றால், மல்லிகாவின் பேச்சு ஒரு பக்கம். அத்தனை மாமியார்கள் நினைவும் இப்படித் தான். அந்த வீட்டிற்கு அவர்கள் மருமகளாக வந்தார்கள் என்பதை மறந்து போவார்கள். அவர்களின் மகனின் மனைவியை, அந்த வீட்டு மனிதியாக மதிக்கவே மாட்டார்கள்.
பிறந்த வீட்டில், இது இனி உன் தாய் வீடு. உன் வீடல்ல என்று கூறி விட்டால், புகுந்த வீட்டிலும், இது உன் வீடல்ல உன் மாமியாருக்கு சொந்தமான வீடு என்று கூறுவார்கள்.
இன்றைய தலைமுறைகளுக்கு, இத்தனையும் சகித்துக் கொண்டு வாழும் சகிப்புத்தன்மை இல்லை. அதன் விளைவு, தனக்கென்று வீடு, கணவன், குடும்பம் இருக்க வேண்டும் என்று, தனிகுடுத்தனத்தை தேர்ந்தெடுத்து விடுகின்றனர்.
அந்த வீட்டை யாரும் வந்து பங்கு போட முடியாது அல்லவா? மகன்களை பெற்ற அம்மாக்கள், மருமகளின் இந்த முடிவுக்கு மறைமுகமாக தானும் ஒரு காரணம் என்பதை மறந்து விட்டு, “குடும்பத்தை பிரித்து விட்டாள்” என்ற பழியை தூக்கி போடுகின்றனர். இளைய தலை முறைக்கு வழி விட்டு நின்றால், இப்படி நடக்க வாய்ப்பில்லை என்பதை யார் அவர்களிடம் கூறுவது?
பைரவி தன் கோபத்தை கொட்டி விட்டாள். அதில் தலை வலி அதிகமாக, “பைரவி… உட்கார்” என்று அவளை அமர வைத்து விட்டு, தேவா அன்னையின் பக்கம் திரும்பினான்.
“என்ன சொல்லனுமோ தெளிவா சொல்லுங்க?” என்று கேட்டுக் கையை கட்டிக் கொண்டான்.
“சொல்லுறேன். எனக்கென்ன பயம்? இதோ உட்கார்ந்து இருக்காளே… ஹாஸ்பிடல்ல நீ அங்குட்டு போனதும், எவன் கூடயோ போயிட்டா. நீ வந்து நின்னதும் இவளும் வந்து நிக்குறா. யார் அவன்னு உன் கிட்ட இப்போ வர சொன்னாளா?
பெரிய அம்மா அம்மாங்குறாளே… சந்துரு கையில கட்டோட படுத்துருக்கானேனு இவளுக்கு கொஞ்சமாச்சும் நினைப்பு இருந்துச்சா? இல்ல, மாமியார்னு ஒருத்தி கல்லு குண்டு போல உட்கார்ந்து இருக்கேனே, என் கிட்ட சொல்லிட்டுப் போகனும்னு தோனுச்சா?
இல்லையே… எவனோ வந்தான். அவன் கூடயே போயிட்டு வந்தா. அது மட்டுமா? பில் கட்ட நான் போறேன்னு போனவ, அத முடிச்சுட்டு நேரா பிள்ளை கிட்ட வரனும்னு வந்து நின்னாளா? இல்லையே. அப்பவும் அவன் கூட நின்னு பேசிட்டுத் தான் இருந்தா.
இதுல இவ அம்மாவாம். பெத்துவளுக்கும் மத்தவளுக்கும் வித்தியாசம் இருக்குனு சொன்னா எங்க கேட்குறீங்க? கண்டவன் கூட பேசிட்டு, ஆடி அசஞ்சு வந்து நிக்குறா. உன் மகனுக்கு கட்டுன பில்லா இவளுக்கு ஞாபகம் இருக்கும்?”
பைரவியைப் பற்றி இப்படிப் பட்டப் பேச்சை தேவா விரும்பவில்லை. அவனுக்கு பைரவியை நன்றாகத் தெரியும். அன்னையின் பேச்சை கேட்கப் பிடிக்காமல், முகத்தை சுழித்தான். ஆனாலும், மல்லிகா தான் பேச நினைத்ததை பேசி விட்டுத் தான் ஓய்ந்தார்.
“ம்மா என்ன பேச்சு இது? பைரவி என்னோட வொய்ஃப். அவள தப்பு சொல்லுறது என்னை சொல்லுறதுக்கு சமம். தெரிஞ்சவங்களா இருந்துருக்கும் பேசி இருப்பா. இது ஒரு தப்புனு பேசுறீங்க?” என்று தேவா அதட்ட, “சரி பா. அந்த தெரிஞ்சவங்க பின்னாடி போகும் போது, என் கிட்ட சொல்லி இருக்கனும்ல. சொல்லாம செய்யுறது திருட்டு தனம் தான?” என்று கேட்டு விட்டார்.
இதை விட அதிகமாக யாரும் பைரவியை அசிங்கப் படுத்த முடியாது. திருட்டுத்தனமாக வேறு ஆணுடன் உன் மனைவி பேசுகிறாள் என்றால், அது எவ்வளவு பெரிய கேவலம்? பைரவி தலையை பிடித்துக் கொண்டு அமர்ந்து விட்டாள். கண்கள் கண்ணீரை கொட்டவா? என்று கேட்டது. பழி சொல்பவர்கள் முன்னால் அழுது விடக் கூடாது என்று அதை அடக்கிக் கொண்டாள்.
தேவா அதிர்ந்து போனான். அதே நேரம் பைரவி இப்படி சொல்லாமல் சென்று இருக்க வேண்டாம் என்று தோன்றியது. சிறு கவனக்குறைவு அவளின் மீது தீரா பழியை ஏற்படுத்தி விட்டதே என்று கோபம் வந்தது.
“இனிமே இப்படி சொல்லாம போகாத பைரவி” என்று தேவேந்திரன் கூற, பைரவி விலுக்கென அவனை நிமிர்ந்து பார்த்தாள்.
‘இவ்வளவு தானா நீ?’ என்று துச்சமாக பார்த்து விட்டு, விறுவிறுவென மாடிக்கு சென்று விட்டாள்.
அவள் இப்படி பதில் சொல்லாமல் போனது தேவாவிற்கு கோபத்தை கிளப்ப, அவன் தோட்டத்து பக்கம் சென்று விட்டான்.
“திருப்தியா?” – சேகரன்.
மல்லிகா பதில் சொல்லவில்லை. மகனின் மனதில் சந்தேக விதையை விதைத்து விட்ட சந்தோசம் அவருக்கு.
“இதுக்கு ஆசைப் பட்டுத் தான இங்க வந்த…? நீ எல்லாம் ஒரு அம்மானு வெளிய சொல்லிக்காத”
“நான் அப்படி என்ன பண்ணேன்? நடந்தத சொன்னேன்” என்று மல்லிகா மழுப்ப, “இத நான் நம்பனுமா? என்னமோ பைரவி நல்ல அம்மா இல்லனு சொல்லுற. நீ நல்ல அம்மாவா இருக்கியா? எந்த அம்மாவாவது பெத்த மகன் வாழ்க்கை பாழா போகனும்னு நினைப்பாளா?” என்று சேகரன் கேட்க, மல்லிகாவிற்கு கோபம் வந்தது.
நியாயத்தில் இல்லை. தன்னை கண்டு கொண்டாரே என்ற கோபம்.
தேவா, வீட்டில் இருக்க பிடிக்காமல், காரை எடுத்து வெளியே போகலாம் என்ற முடிவுக்கு வந்து, வீட்டிற்குள் நுழைந்தான். அப்போது தான் சேகரன் கேட்ட கேள்வி காதில் விழுந்தது.
“ஆமா… நான் இப்படித் தான். எனக்கு இப்படி இருக்கத் தான் தெரியும். இந்த வீட்டுல என் உரிமை மட்டும் தான் இருக்கனும். வேற எந்த பொண்ணும் வந்து உரிமை கொண்டாட கூடாது. இது என் வீடு. என் குடும்பம். அதுல எவளுக்கும் பங்கு இல்ல.
அப்படி பங்கு போடக் கூடாத னு தான் சந்தியாவ கட்டி வச்சேன். அவ விதி.. அல்பாயிசுல போயிட்டா. அதுக்காக இன்னொருத்திய கூட்டிட்டு வருவீங்களா?
நீங்களா இருந்தாலும் சரி. தேவா சந்துருவா இருந்தாலும் சரி. எனக்கு தான் முதல் உரிமை. உங்களோட எல்லாமே எனக்கு மட்டும் தான் சொந்தமா இருக்கனும். இந்த வீட்டுல எடுக்குற எல்லா முடிவும், என் வார்த்தையா தான் இருக்கனும். வேற யாருக்கும் இந்த வீட்டுல முடிவு எடுக்குற உரிமை கிடையாது.
எவ்வளவு தூரம் தேவா மனச கலைச்சு வச்சுருந்தேன்? ரெண்டாவது கல்யாணம் பண்ணிக்கக் கூடாதுனு சொல்லி வச்சுருந்தேன். வர்ரவ உன் மகன கொடும படுத்துவானு சொல்லி வச்சுருந்தேன். சந்துரு ஸ்கூல்க்கு போய் அம்மானா யாருனு தெரிஞ்சுக்கிட்டு வந்துட கூடாதுனு நினைச்சேன்.
அப்படி தெரிஞ்சுக்கிட்டா தேவா கிட்ட கேட்பான். அவனுக்கு அம்மா வேணும்னு கூட, தேவா மனசு மாறிடக் கூடாதுனு ஸ்கூலுக்கே போகாம தடுத்தேன். தெரியாதனமா பிருந்தா அவன அடிச்சத இவன் பார்த்து தொலச்சுட்டான். என்னைக்குமே அடிச்சது தெரியாம சமாளிச்சுருவேன். அன்னைக்குனு மாட்டி தொலைச்சுட்டா.
அது அதோட நிக்கும்னு பார்த்தா, அவன் மனச கலைச்சு இவள கட்டி வச்சுட்டீங்க. இவ சந்தியா போல இருந்தாலும் பரவாயில்ல. வார்த்தைக்கு பதில் வார்த்தை பேசி தொலைக்குறா.. எனக்கு இவள பிடிக்கல. அவள வீட்ட வீட்டு தொரத்துனா தான் எனக்கு நிம்மதி.
ரொம்ப நாளா யோசிச்சேன். என்னடா இவ நல்லா மூக்கும் முழியுமா அழகா தான இருக்கா. படிச்சு கை நிறைய சம்பாதிக்குறா. இவள எப்படி பிள்ளையோட இருக்க ஒருத்தனுக்கு கட்டி குடுத்துறாங்கனு. இன்னைக்குத் தான தெரிஞ்சது. கல்யாணத்துக்கு முன்னாடி எவனோடயாவது பழகி இருக்கனும்…”
சேகரன் பளாரென அறைந்து விட்டார். இவ்வளவு நேரம், மனதில் இருந்த வன்மத்தை எல்லாம் மனைவி கொட்டட்டும் என்று அமைதி காத்தார். காரணம் தேவா நின்று இருப்பதை பார்த்து விட்டார். இதை கேட்டப் பிறகு, தேவா சரியான முடிவுக்கு வருவான் என்ற நம்பிக்கை இருந்தது.
ஆனால், கடைசியாக பைரவியை இழிவு படுத்தியதை அவரால் ஜீரணிக்க முடியவில்லை. கை நீட்டி பழக்கமே இல்லாத மனிதர் அவர். அப்பாவி பெண்ணின் மீது வீண் பழி சுமத்துவது தன் மனைவி தானா? என்ற ஆதங்கம் அவரை கை நீட்ட வைத்து விட்டது.
“நிறுத்திக்கோ. இதோட நிறுத்திக்கோ.. இது வர நீ சொன்னது உன் உரிமையைப் பத்தி. ஆனா, கடைசியா பேசுனது நம்ம வீட்டுக்கு வாழ வந்த பொண்ண பத்தி. பைரவிய பத்தி பேச உனக்கு எந்த உரிமையும் கிடையாது. கிளம்பு. காலையில நாம அந்த வீட்டுக்குஅ போறோம். உன்னை கட்டுன பாவத்துக்கு, நான் உனக்கு அடிமையா இருந்துட்டு போறேன். என் மகன் வாழ்க்கைய கெடுக்காத” என்று விரல் நீட்டி எச்சரித்து விட்டு, வாசலில் போய் நின்று விட்டார்.
வாங்கிய அறை தாங்காமல் தரையில் விழுந்த மல்லிகாவிற்கு, அதிர்ச்சி விலக வில்லை. தன்னுடைய கணவனா அடித்தது? என்று நம்ப முடியாமல் அப்படியே கிடந்தார். பிறகு, மெல்ல எழுந்து அறைக்குள் சென்று விட்டார். எல்லோரும் கவனிக்காத ஒன்று, மாடியில் நின்று பைரவியும் இதை கேட்டுக் கொண்டிருந்தாள் என்பது தான்.
அவளுக்கு மல்லிகா தன்னைப் பற்றிப் பேசியதில் ஆச்சரியம் எதுவும் இல்லை. ஆனால், சந்தியாவின் வாழ்வில் எதோ இருக்கிறது. அதை கண்டு பிடிக்க வேண்டும் என்று முடிவெடுத்துக் கொண்டாள்.
இரவு உணவு யாருக்கும் சாப்பிட மனமில்லை என்றாலும், கயல் அறைக்கு கொண்டு வந்து கொடுத்து விட்டார். தலை வலிக்கு சாப்பிடாமல் முடியாது என்பதால், ருசியறியாமலே அள்ளி வாயில் போட்டுக் கொண்டாள் பைரவி. மாத்திரையை போட்டு படுத்தவள் உடனே தூங்கி விட்டாள்.
தேவா தான் அவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான். மல்லிகா சேகரனிடம் பேசியதை பைரவி கேட்கவில்லை என்று தான் நினைத்துக் கொண்டிருக்கிறான். மனதில் குழப்பம் சூழ்ந்தது. இவளை பிடிக்காமல் போகும் அளவிற்கு என்ன நடந்தது? என்று அவனுக்குப் புரியவில்லை. பைரவி சுயமரியாதை மிக்கவள். அது தான் அவளது தவறா?
அப்படி என்றால் சந்தியாவிற்கு சுயமரியாதை இருக்காதா? அவனது கேள்விக்கு யார் பதில் சொல்வது? என்று தெரியாமல் இரவை கழித்தான்.
காலையில் சேகரன் கிளம்புவதாக கூறினார்.
“சந்துரு பிறந்தநாள் வர இருக்கலாமே பா?”
“இல்ல தேவா. பிறந்தநாளுக்கு வந்துட்டுப் போயிக்குறோம்”
அவர்கள் கிளம்பிய பின் அறைக்கு வந்தான். பைரவி எதோ வேலையாக இருக்க, “பைரவி…” என்று அழைத்தான்.
அவள் திரும்பவே இல்லை. அவன் கேட்ட கேள்வி மனதில் உறுத்திக் கொண்டிருக்க, அவளுக்குப் பேச பிடிக்கவில்லை.
“உன்னை தான் கூப்பிடுறேன் ” என்று அழுத்தி கூப்பிட்டான்.
அப்போதும் அவன் திரும்பாமல் இருக்க, “என்ன தான் உன் பிரச்சனை?” என்று கேட்டவனை நிமிர்ந்து பார்த்தாள்.
முகத்தில் எரிச்சலையும் கோபத்தையும் எதிர் பார்த்து இருக்க, அது இல்லவே இல்லை.
சில பல நாட்களாகவே அவளிடம் அவன் கோபத்தை மட்டும் தானே காட்டுகிறான். இன்றும் அதே கோபம் இருக்க வேண்டும் என்று எதிர் பார்த்தாள். இல்லை என்று பார்த்ததும் பைரவிக்கு ஆச்சரியமாக இருந்தது.
‘என்னடா இது?? மழை எதுவும் வருதோ?’ என்று சன்னலை திரும்பி பார்த்தாள்.
அதைப் பார்த்தவனுக்கு, அவள் தன்னிடம் பேச பிடிக்காமல் முகத்தைத் திருப்புவதாக தோன்றியது.
எப்போது தான் அவளை சரியாக புரிந்து இருக்கிறான்! இன்று புதிதாக புரிந்து கொள்ள?
அவளது பார்வைக்கு அர்த்தம் புரியாது. அன்று அவள் இவனை தவறாக நினைத்தது மட்டுமே பெரிதாகத் தெரிந்தது. பைரவி ஏன் அவ்வளவு வருத்த பட்டாள்? என்று கேட்கத் தோன்றவே இல்லை.
இரண்டு மாதமாக, ஏன் சோக கடலில் மூழ்கி இருந்தாள்? என்று ஆராயவில்லை. அவள் தவறாக நினைத்து விட்டாள் என்பது மட்டுமே பிரதானமாக இருக்க, கோபத்தை கொட்டி விட்டுச் சென்று விட்டான். ஆனால், இன்று கோபம் வரவில்லை. மனதில் இருந்த குழப்பங்கள், வேறு உணர்ச்சிக்கு இடம் கொடுக்க மறுத்ததோ?
நீண்ட பெரு மூச்சை வெளி விட்டவன், “இங்க பாரு பைரவி…” என்று ஆரம்பிக்க, அவனை திரும்பிப் பார்த்தாள்.
“உன் பிரச்சனை என்னனு சொல்லலனா எனக்கு எப்படித் தெரியும்? நீ நேத்து ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாம் இல்லையா?” என்று பொறுமையாக கேட்டான்.
வழக்கத்திற்கு மாறாக இன்று பைரவிக்கு கோபம் பொத்துக் கொண்டு வர, யோசிக்காமல் கேட்டாள் அந்த கேள்வியை…
“என்னனு…? நான் பத்தினி தான்னு சொல்லி இருக்கனுமா? இல்ல தீ குளிச்சு இருக்கனுமா?”
“ஏய்…” என்று தேவா அதிர்ச்சியில் அவளை அதட்ட, “அதான உங்கம்மா கேட்டாங்க. யாரு கூடவோ போயிட்டேன்னு. நான் நின்னு.. இப்படி எனக்கு தெரிஞ்ச ஒருத்தர்… அவங்க தங்கச்சிக்கு உடம்பு சரியில்ல. பார்த்துட்டு வரேன்னு சொல்லி இருந்தா, உடனே உங்கம்மா.. ‘போயிட்டு வாமா மருமகளே’னு சொல்லி இருப்பாங்களாக்கும்?
அடுத்தவங்க முன்னாடி என்னை அசிங்கப் படுத்தத் தயங்கிருக்க மாட்டாங்க. அதுவும் யார் தெரியுமா அது? வாசு… சொல்லிருக்கனே. அவரால தான் இந்த கல்யாணம் நடந்துச்சுனு. அவர் முன்னாடி உங்கம்மா பேசி வச்சா?
‘என்ன வேணாம்னு சொன்ன இல்ல . அனுபவி’ னு அவரு ஒரு பார்வை பார்க்கவா? என் வாழ்க்கை என்னோட… என் புருஷன், என் புள்ள, என் மாமியார். அடுத்தவங்க முன்னாடி, எனக்கு குடும்ப விசயத்த கடை பரப்ப பிடிக்கல. சொல்லாம போனேன். இது தப்புனா நான் சாரி கேட்க மாட்டேன்” என்று படபடவென பேசி விட்டு, சட்டென வெளியேறி விட்டாள்.
தொடரும்.

