
பைரவி சந்துருவை தூங்க வைத்துக் கொண்டிருக்க, “அம்மா” என்று கூப்பிட்டான்.
“என்ன டா கண்ணா?” என்று அவள் கொஞ்ச அறைக்குள் வந்த தேவேந்திரன் அப்படியே, நின்று விட்டான்.
“அம்மானா சொன்ன?” என்று கேட்க, “ஆமா பா” என்றான் சந்துரு.
“பைய்யவி எப்படி அம்மா ஆனாங்க?” என்று கேட்டவனின் முகம் முழுவதும் சந்தோசம் மிளிர்ந்தது.
“மிஸ் தான் பா சொன்னாங்க. அம்மானா நமக்கு சாப்பாடு கொடுப்பாங்க. நம்ம கூட விளாடுவாங்க. ஹோம் வொக் சொல்லி தயுவாங்க. பைய்யவி தான அது? அப்போ பைய்யவி தான அம்மா?” என்று தன் கண்டு பிடிப்பை பெருமையாக கூறினான்.
தேவேந்திரன் பைரவியை திரும்பி பார்த்தான். மனதில் இருந்த நிறைவு முகத்தில் மிளர, சந்துருவை பாசமாக பார்த்துக் கொண்டிருந்தாள்.
“அப்போ அப்பாக்கு?” என்று தேவா கேட்டான்.
“அப்பானா எனக்கே தெய்யுமே.. அப்பா அயிட்டா இயிப்பாங்க. மீசை வச்சுப்பாங்க. என் கூட விளாடுவாங்க” என்று கூறியவன் தேவேந்திரன் கழுத்தை கட்டிக் கொண்டான். அவனை கொஞ்சி விளையாடி, தேவா தூங்க வைத்தான் .
திரும்பி பார்க்கும் போது, பைரவி தூங்கி விட்டாள். பேச வேண்டும் என்று நினைத்ததை பேசாமல், அவனும் படுத்து விட்டான். மறுநாளும் மல்லிகாவே அவனுக்கு எல்லாம் செய்தார்.
சனிக்கிழமை பைரவிக்கு விடுமுறை. கயலின் உதவிக்கு இருந்த வேலைக்கார பெண், துணிகளை அயர்ன் செய்து, பைரவியின் கையில் கொடுத்தாள்.
அதை வாங்கிக் கொண்டவள், துணிகளை பார்த்தவாரே அறைக்குள் நுழைந்தாள். தேவேந்திரன் மீது மோதப் பார்த்து, சட்டென நின்று விட்டாள்.
அவள் கையில் இருந்த துணிகள் அவனை உரசிக் கொண்டு நிற்க, அவசரமாக ஒரு அடி பின்னால் வந்தாள்.
‘இவன் சாப்பிட்டுட்டு இருந்தானே?’ என்று யோசனையாக பார்க்க, அவனோ அவளை முறைத்துக் கொண்டிருந்தான்.
சாப்பிட்டுக் கொண்டு தான் இருந்தான். பைரவி பரிமாறாமல், அவளோடு அமர்ந்து சாப்பிடாமல், சாப்பாடு உள்ளே போக மறுத்தது. பெயருக்கு சாப்பிட்டு விட்டு எழுந்து கொண்டவன், அறைக்குள் வந்தான். சார்ஜரில் இருந்த கைபேசியை எடுத்துப் பார்த்துக் கொண்டிருக்க, பைரவி உள்ளே வந்தாள்.
“தப்பு பண்ணது நீ. நியாபகம் இருக்கா?” என்று கேட்க, பைரவி மௌனமாக தலையசைத்தாள்.
“இல்லையே.. என்னமோ நான் தப்பு பண்ணிட்ட மாதிரி என்னை விட்டு ஒதுங்கி போறியே?” என்று கேட்டவனின் குரலில், முழுக்க முழுக்க கோபம் மட்டுமே.
“அதெல்லாம் இல்லையே” என்று அவள் புரியாமல் பார்த்தாள்.
“அப்படியா? இன்னைக்கு எத்தனை தோசை சாப்பிட்டேன்?”
‘அவளுக்கு எங்கே தெரியும்? மகன் வந்து விட்டால், சேகரனை கூட விட்டு விட்டு, மகன் பின்னாலே மல்லிகா அலைகிறார். சாப்பாடு போட பைரவி வந்து நின்று விட முடியுமா என்ன?’
பைரவி தலைகுனிந்து, ‘தெரியாது’ என்பது போல் தலையசைத்தாள்.
“அப்புறம் ஏன் நீ பரிமாறல?” என்று கேட்க, பைரவிக்கு தன் காதுகளை நம்ப முடியவில்லை.
தேவேந்திரன் அவள் பரிமாற வேண்டும் என்று எதிர் பார்க்கிறான்.
சட்டென நிமிர்ந்து அவன் முகத்தைப் பார்த்தாள். அவளது வழக்கமான அர்த்தம் புரியாத பார்வை, அவனுக்கு இப்போதும் புரியவில்லை.
உணவுகளை காட்டாமல் பார்வைக்கு வேலியை போட்டு விட்டு, மனதில் குதூகலமாக அவள் புரிந்து கொண்ட விசயத்தை கொண்டாடிக் கொண்டிருந்தாள். இதற்காக அவள் எதையும் செய்யலாமே. ஆனால்…!
உடனே பைரவியின் முகம் மாறியது. வெற்று பார்வையை எங்கோ பதித்தாள். அவளது புரியாத பார்வையை கூட தேவேந்திரன் தாங்கிக் கொள்வான். ஆனால், இப்படி எங்கோ வெறிக்கும் பார்வையை, அவனால் ஏற்றுக் கொள்ள முடியாது.
“என்ன?” என்று கேட்டு அதட்ட, “உங்க அம்மா…” என்று மனதில் நினைத்ததை முழுதாக சொல்ல முடியாமல் தயங்கினாள்.
‘மல்லிகா விடுவாரா? அவளை மகன் அருகில் விட்டு விட்டு தான் மறுவேலை பார்ப்பார்.’
“அவங்களுக்கு என்ன?”
“நான் வரதுக்கு முன்னாடி அவங்க வந்துடுவாங்க”
“அதுக்காக நீ அப்படியே போயிடுவியா? நீங்க போய் ரெஸ்ட் எடுங்க நான் பரிமாறுறேன்னு சொல்லி வாங்கனும்”
“அப்படி வாங்குனா, எனக்கும் என் மகனுக்கும் இடையில வர்ரனு பிரச்சனை வரும்” என்று கூறி அமைதியானாள்.
பைரவிக்கு பிரச்சனைகள் பிடிக்காது. முடிந்த வரை அமைதியாக இருக்கத் தான் விரும்புவாள். பொறுமை எல்லையை கடக்கும் போது தான், பதில் பேசுவாள். மல்லிகா ஜாடையாக பேசும் போது, கண்டு கொள்ளாமல் சென்று விடுவாள். நேராக பேசும் போது தான் பதில் பேசுவாள். நளினியிடமும் அப்படித் தான். அதனால், அவள் ஒதுங்கி போவதாக கூறினாள்.
“அப்படி அவங்க கேட்டா… உங்க மகன் எனக்கு ஹஸ்பண்ட்னு சொல்லு. இத கூடவா சொல்லித் தருவாங்க” என்று கேட்க, அவளுக்கு சிரிப்பு வந்தது.
“இனிமே சொல்லுறேன்” என்று கூற, கோபம் தனிந்தவனாக சென்று விட்டான்.
*.*.*.*.*.*.
மறுநாள், பைரவி தேவேந்திரனுக்கு காபி எடுத்துக் கொண்டு வர, “இங்க கொடு. நான் கொடுக்கிறேன்” என்று மல்லிகா வந்து நின்றார்.
“வெரி சாரி அத்த. அவருக்கு நான் தான் கொடுக்கனுமாம். நான் கொடுக்கலனா இனிமே காபிய கேன்சல் பண்ணிடுவேன்னு சொல்லுறார். நீங்களே சொல்லுங்க நான் என்ன பண்ணட்டும்?” என்று அறியா பிள்ளை போல் கேட்டு வைத்தாள்.
மல்லிகாவிற்கு கோபம் வந்தது.
“அப்படிலாம் சொல்லி இருக்க மாட்டான். கொடு இங்க” என்று பிடுங்கிக் கொண்டு தேவேந்திரனிடம் சென்று நீட்டினார்.
அதைப் பார்த்த தேவா, “பைரவி” என்று சத்தமாக அழைத்தான்.
பைரவி அப்பாவியாய் வந்து நிற்க, “உன் கிட்ட தான காபி கேட்டேன்? அம்மாவ ஏன் வேலை வாங்குற? ம்மா.. அத அவ கையில கொடுங்க. கட்டிக்கிட்டவனோட வேலை எல்லாம் பார்க்காதவ என்ன பொண்டாட்டி? இனி என்னோட எல்லா வேலையும் நீ தான் பார்க்கனும் புரியுதா? அம்மா இங்க ரெஸ்ட் எடுக்கத் தான் வந்தாங்க. வேலை பார்க்க இல்ல… அத வாங்கிட்டு மேல வா” என்று கூறி விட்டு, நிற்காமல் படியேறி விட்டான்.
மல்லிகா எதோ பேச வந்ததை கவனிக்காமல் அவன் சென்று விட, பைரவி அவர் கையிலிருந்ததை வாங்கிக் கொண்டு பின்னாலே சென்று விட்டாள். படியேறியவளுக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை.
‘ஸ்மார்ட்’ என்று மனதில் தேவேந்திரனை பாராட்டிக் கொண்டே சென்றாள். மல்லிகா தான், என்ன நடக்கிறது? என்று புரியாமல் நின்று இருந்தார்.
*.*.*.*.*.*.*.*.
நான்கு நாட்கள் சென்று இருக்கும். மழைக்காலம் ஆரம்பமானது. எங்கும் மழை எதிலும் மழை. சென்னை மாநகர் மழைத்தண்ணீரில் மூழ்கி கொண்டிருந்தது. சந்துருவின் பள்ளி பேருந்து வர முடியாத நிலை.
அவர்கள் இருக்கும் பகுதிகளில் மழை தண்ணீர் தேங்கவில்லை என்றாலும், எல்லோரும் இருக்கும் இடத்திற்கு பேருந்தால் செல்ல முடியாது. பள்ளி நிர்வாகம், குழந்தைகளை பெற்றோர்களே வந்து அழைத்துக் கொள்ளுங்கள் என்று கூறி விட்டது.
விடாமல் பெய்த மழையில், சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டு இருந்தது. தேவேந்திரன் வீட்டிற்கு வர தாமதமாகும் என்பதால், பைரவி டிரைவரோடு பள்ளிக்கு சென்றாள்.
காரை வெளியே விட்டு விட்டு, அவள் மட்டும் உள்ளே சென்று சந்துருவை அழைத்து வந்தாள். பைரவியின் கையை பிடிக்காமல் காரை பார்த்ததும் சந்துரு ஓட,
“பார்த்து…” என்று கத்திக் கொண்டே பின்னால் வந்தாள்.
சந்துரு காரை சுற்றி ஏறும் முன், அதிவேகமாக வந்த பைக் ஒன்று, அவனை மோதி விட்டது. நான்கடி தள்ளி, “அம்மா…” என்று கத்திக் கொண்டு சந்துரு விழுந்ததை பார்த்ததும், பைரவிக்கு உயிர் நின்று விட்டது.
கையிலிருந்த குடையை தூக்கி எறிந்து விட்டு, “சந்துரு…” என்று அவள் ஓடி வர, காரில் இருந்த டிரைவர் இறங்கி பிள்ளையை பார்த்தான்.
பக்கத்தில் வந்தவள், தலையில் ரத்தம் சிறு துளிகளாக இருக்க, பேச்சு மூச்சற்று கிடந்தவனை தான் பார்த்தாள். அடுத்து என்ன என்று அவளுக்கே புரியவில்லை.
“சந்துரு… சந்துரு கண்ண முழுச்சு பாரு… அம்மாவ பாரு” என்று சந்துருவை மடியில் தூக்கிக் கொண்டு, கன்னத்தை தட்டி எழுப்ப முயற்சித்தாள்.
அவளின் கண்கள் நிற்காமல் கண்ணீரை கொட்டிக் கொண்டிருக்க அக்கம் பக்கம் இருந்தவர்கள், அந்த பைக்கை ஓட்டி வந்தவனை பிடித்தனர்.
அவனுமே அதை வேண்டுமென்று செய்யவில்லை. மழைத்தண்ணீரில் வண்டி அவனது கட்டுப்பாட்டை இழந்து விட்டது. கார் டிரைவர், “ஹாஸ்பிட்டல் போகலாம் வாங்க மா” என்று பைரவியை உலுப்பினான்.
அவசரமாக காரில் ஏறி அமர்ந்து கொண்டவள், “சந்துரு எந்திரி சந்துரு… அம்மாவ பாரு” என்று வேண்டிக் கொண்டே இருந்தாள்.
கார் பக்கத்தில் இருந்த மருத்துவமனைக்கு விரைந்தது. சந்துருவை மருத்துவரிடம் ஒப்படைத்தவள், நாற்காலியில் உயிரை தொலைத்து அமர்ந்து விட்டாள். மனம் மட்டும் விடாமல் சந்துருவிற்காக வேண்டிக் கொண்டிருந்தது.
சிறிது நேரத்தில் தேவேந்திரன் வந்து விட்டான். டிரைவர் அவனுக்கு விசயத்தைச் சொல்லி இருந்தான். தேவேந்திரன் வந்ததை கூட கவனிக்காமல், பைரவி சந்துரு அனுமதிக்கப்பட்டு இருந்த அறையையே பார்த்துக்கொண்டு இருந்தாள்.
“பைரவி…” என்று தேவா தோள் தொட்டு உலுக்க, திரும்பி பார்த்தாள்.
“என்னங்க.. சந்துரு… அடி பட்டுட்டான். மயங்கிட்டான்..” என்று கூறும் போதே, அவளது கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
அவளை வயிற்றோடு அணைத்துக் கொண்டவனுக்குள்ளும், மனம் நடுங்கிக் கொண்டு தான் இருந்தது. மேலும் சில நிமிடங்கள் தவிப்பில் கடக்க மருத்துவர் வந்தார்.
“என்னாச்சு டாக்டர் ?” என்று பைரவி பதற, “ரிலாக்ஸ் மிஸஸ். தேவேந்திரன். அதிர்ச்சியில தான் மயங்கி இருக்கான். கை பிசங்கி இருக்கு. அதுக்கு கட்டுப் போட்டாச்சு வேற எந்த பிரச்சனையும் இல்ல. நல்லா செக் பண்ணிட்டோம்” என்று கூறவும் தான், பைரவிக்கு உயிர் வந்தது.
“அவன பார்க்கலாமா டாக்டர்?” என்று தேவேந்திரன் கேட்க, “பாருங்க. ஆனா அவன் கண் முழிக்க ரெண்டு மணி நேரமாவது ஆகும். டிஸ்டர்ப் பண்ணாம பாருங்க” என்று கூறி விட்டுச் சென்று விட, இருவரும் உள்ளே சென்றனர்.
தலையில் சின்ன கட்டுடனும், கையில் சற்று பெரிய கட்டுடனும் படுத்து இருந்தான். பைரவிக்கு அழுகை பொங்கி வந்தது. வாயை மூடிக்கொண்டு அவன் பக்கத்தில் அமர, தேவா நாற்காலியை இழுத்து போட்டு அமர்ந்து கொண்டான்.
வீட்டிலிருப்பவர்களுக்கு விசயத்தை சொன்னாலும், அவர்களை வர வேண்டாம் என்று கூறி விட்டான். மழையில் அவர்களும் அலைய வேண்டாம் என்று விட்டு விட்டனர்.
இரண்டு மணி நேரம் கழித்து, சந்துரு கண்விழித்தான். இருவரையும் பார்த்து விட்டு பயத்தை சொல்லி அழ, அவனை சமாதானப் படுத்தினர்.
பிறகு, இரவு உணவு மருந்து எல்லாம் கொடுத்து அவனை உறங்க வைத்தனர். அன்று இரவு அங்கேயே தங்கி விட்டனர். காலையில் மல்லிகாவும் சேகரனும் வர, தேவேந்திரனுக்கு அவசர வேலை என்று கிளம்பிச் சென்றான்.
மல்லிகா அமர்ந்து இருக்க, சேகரன் மருந்தை வாங்கச் சென்று இருந்தார். சந்துரு காலை சாப்பாட்டை சாப்பிட்டு விட்டு, மருந்தின் வீரியத்தில் தூங்கி விட்டான். காலையில் தலையில் உள் காயம் எதுவும் இருக்கிறதா என்று பரிசோதித்து விட்டனர். அதன் முடிவு மாலை வந்ததும், வீட்டிற்கு கிளம்பிவிட வேண்டியது தான்.
சந்துரு தூங்கிய பின், பைரவிக்கு மகாலட்சுமியின் அழைப்பு வந்தது. அதை எடுத்துக் கொண்டு வெளியே வந்தவள் பேசி முடிக்க, “பைரவி…” என்று யாரோ அழைத்தனர்.
யாரென்று தெரியாமல் திரும்பி பார்த்தாள். வாசுவை பார்த்து விட்டு, என்ன உணர்ச்சியை காட்ட வேண்டும் என்று அவளுக்கு புரியவில்லை. அவனே பேசினான்.
“இங்க என்ன?”
“அதையே நானும் கேட்கலாம் இல்லையா?” என்று பைரவி திருப்பி கேட்டாள்.
“என் தங்கச்சிய இங்க அட்மிட் பண்ணி இருக்கேன்” என்று கூறி முடிக்கும் முன் அவனது கைபேசி இசைத்தது.
மரியாதை நிமித்தமாக பைரவி அங்கிருந்து செல்லாமல் நின்றாள். கைபேசியை அணைத்தவன், “பைரவி எனக்கு ஒரு ஹெல்ப் பண்ண முடியுமா? ப்ளீஸ்” என்று வாசு அவசரமாக கெஞ்ச, பைரவிக்கு ஒன்றும் புரியவில்லை.
சந்துரு மல்லிகாவுடன் இருப்பதால், “சொல்லுங்க” என்று கேட்டாள். வாசு அவனை ஒரு அறைக்கு அழைத்துச் சென்றான்.
காலில் கட்டோடு, ஒரு பெண் நர்ஸை துரத்திக் கொண்டிருந்தாள்.
“எனக்கு தங்கச்சி மட்டும் தான். அவளுக்கு கொஞ்சம் கூச்ச சுபாவம். நர்ஸ கூட பக்கத்துல விட மாட்டுறா” என்று வாசு மெல்லிய குரலில் கூற, பைரவி தலையாட்டி கேட்டுக் கொண்டாள்.
பைரவியும் வாசுவும் உள்ளே வர, வாசுவின் தங்கை வனிதா அவளை ஆராய்ச்சி பார்வை பார்த்தாள். பதினெட்டு வயது இருக்கும். அந்த வயதிற்குரிய பிடிவாதம் இருந்தது.
நர்ஸ் அவளுக்கு உதவ வர, அதை மறுத்துக் கொண்டிருந்தாள். அவளுடைய கூச்ச சுபாவம், யார் உதவியையும் ஏற்றுக்கொள்ள விடாமல் தடுத்தது.
பைரவி வாசுவை திரும்பி பார்த்து, “பேர்?” என்று கேட்டாள்.
“வனிதா”
“ஹாய் வனிதா”
” ஹாய்” என்றவள் பைரவியின் கண்ணை ஆராய்ந்தாள்.
இவளும் தன்னை பாவமாக பார்க்க போகிறாள் என்று நினைத்து ஆராய, பைரவி ஒரு புன்னகையுடன் நின்று இருந்தாள்.
“நீங்க?” என்று வனிதா கேட்க, “பைரவி” என்றாள்.
நர்ஸோடு வாசுவையும் வெளியே அனுப்பி விட்டாள்.
“நர்ஸ் கிட்ட ஏன் சண்டை போடுறீங்க?”
“அவங்க ஐயோ பாவம்னு பார்க்குறாங்க. எனக்கு அது பிடிக்கல” என்று தோளை குலுக்கினாள் வனிதா.
பிறகு பைரவி பொதுவாக பேச வனிதா சுவாரசியமாக பேசினாள். சற்று நேரத்தில் வனிதா நெளிய, “என்னாச்சு?” என்று கேட்டாள்.
“ரெஸ்ட் ரூம்” என்று தயங்கிக் கொண்டே சொன்னவள், இந்த முறை கண்டிப்பாக பைரவி பாவமாக பார்க்கபீ போகிறாள் என்று நினைத்தாள்.
பைரவி அதற்கு நேர் மாறாக சிரித்தாள்.
“ஹா ஹா.. என் பையன் சொல்லுற மாதிரி சொல்லுற. போலாம் வா” என்று கை நீட்டி, அவளை மெத்தையை விட்டு இறக்கினாள்.
“ரியலி…! உங்க பையன் என்ன படிக்கிறான்?”
“எல்.கே.ஜி”
“நோ… நான் ஒன்னும் அவ்வளவு குட்டி பொண்ணு இல்ல” என்று வனிதா சினுங்க, சிரித்துக் கொண்டே உள்ளே அனுப்பி வைத்தாள்.
வெளியே வந்து அமர்ந்ததும், “நீங்க என் அண்ணனுக்கு ஃப்ரண்டா?” என்று கேட்க, “இல்ல. நான் வேலை பார்க்குற இடத்துல அவங்களும் வேலை பார்க்குறாங்க” என்று கூறினாள்.
“ஓ… எங்கண்ணன் ரொம்ப நல்லவன். எனக்காக எதையும் செய்வான்” என்று கூற, பைரவிக்கு வருத்தமாக இருந்தது.
அவளுக்கும் அண்ணன் இருக்கிறான். ஆனால் இப்படி அன்பை பொழியவில்லையே. வாசு உள்ளே வர, “ஓகே. அங்க என்ன தேடுவாங்க. நான் கிளம்புறேன்” என்று வனிதாவிடம் விடை பெற்றவள், வாசுவிடம் சொல்லிக் கொள்ளாமல் சென்று விட்டாள்.
பைரவி, சந்துரு இருந்த அறைக்கு சென்ற நேரம், தேவேந்திரன் வந்து விட, அவனிடம் பேசிக் கொண்டிருந்தாள். அதை வன்மத்துடன் பார்த்த மல்லிகா, என்ன செய்ய வேண்டும் என்று முடிவெடுத்து விட்டார்.
தொடரும்.

