Loading

வந்த நாள் மல்லிகாவிற்கு அந்த வீட்டின் பழக்கங்கள் பிடிபடவில்லை‌. ஆனால், ஒரே நாளில் கற்றுக் கொண்டார். அதன் பலனாக, மறுநாள் காலை கீழிறங்கி வந்த தேவேந்திரனுக்கு, காபி அவர் கையில் இருந்து தான் கிடைத்தது.

தேவேந்திரன் அதைத் தவறாக எடுத்துக் கொள்ள வில்லை. ஆனால், காலை உணவையும் அவரே பரிமாற மனம் துணுக்குற்றது.

‘எங்க போனா இவ?’ என்று பார்வையால் தேடிப் பார்த்தான்.

பைரவி இருக்கும் சுவடே தெரியவில்லை. சாப்பிடப் பிடிக்காமல் அவன் எழப்போக, சந்துருவிடம் பேசிக் கொண்டே சேகரன் அறையில் இருந்து வெளியே வந்தாள் பைரவி. சந்துரு ஏதோ ஒரு மனப்பாடம் செய்த பாடலை பாடிக் காட்ட, அவனோடு பைரவியும் பாடிக் கொண்டிருந்தாள்.

இடையிடையே சந்துரு திணறும் போது எடுத்துக் கொடுத்தாள். பாடி முடித்ததும், “ஹே…” என்று கூச்சலிட்டு, சந்துரு பைரவியின் கழுத்தை கட்டி கன்னத்தில் முத்தமிட்டான். அவர்களது பாசப்பிணைப்பை ரகசியமாக ரசித்துக் கொண்டிருந்த தேவா, சாப்பிட ஆரம்பித்தான்.

பக்கத்தில் நின்று இருந்த மல்லிகா அதை குரோதத்துடன் பார்த்து வைத்தார்.  மகனது வேலைகளை கைப்பற்றியது போல், சந்துருவையும் கைப்பற்ற தான் நினைத்தார்… முடியவில்லை.

சந்துரு எதற்கெடுத்தாலும், “பைய்யவி…” என்று அழைத்து விடுகிறான். அவனது பள்ளிப்பையிலிருந்து உணவு வரை, பைரவி தான் வேண்டும் அடம்பிடித்து நின்று விட்டான். மல்லிகா பேரனையே எதிரியை பார்ப்பது போல் பார்த்து விட்டு அகன்றார்.

பேருந்து வந்து விட, சந்துருவை அனுப்பி விட்டு வந்து பைரவி தயாரானாள். அவள் தயாராகி கீழே வரும் போது, அவளுக்கான உணவு காத்துக் கொண்டிருந்தது. கயல் பைரவியிடம், சன்னமான குரலில் எதையோ பேசிக் கொண்டே அருகில் இருந்து பரிமாறிக் கொண்டிருந்தார்.

மல்லிகா எவ்வளவு ஒட்டுக் கேட்க முயன்றும், ஒன்றுமே காதில் விழவில்லை. அலுவலகம் கிளம்பியவள், “அக்கா வீட்ட பார்த்துக்கோங்க… வரேன் மாமா” என்று இருவரிடம் சொல்லி விட்டு மல்லிகாவை கவனிக்காமல் வெளியேறி விட்டாள்.

தேவேந்திரன் தன் உடமைகளோடு கீழே வரும் போது, பைரவி இல்லை. பல்லை கடித்து கோபத்தை அடக்கினான். இத்தனை நாள் அவன் பேசவில்லை என்றாலும், பைரவியாக வந்து பேசும் போது ஆறுதலாக இருக்கும். இன்று அதை கை விட்டு விட்டாள்.

அவனது வேலைகளில் எந்த குறையும் வைக்க மாட்டாள். இன்று அத்தனையும் மல்லிகா பார்க்க, அவன் கண்ணிலே படாமல் கிளம்பி விட்டாள். ‘வரட்டும் ஈவ்னிங் இருக்கு’ என்று நினைத்துக் கொண்டு அவனும் கிளம்பி விட்டான்.

வழக்கம் போல், தங்கத்திடம் வீட்டை பார்த்துக் கொள்ளச் சொல்லி விட்டுச் சென்று விட்டான். பெற்றவர்கள் இருக்கிறார்கள் என்பதே அவனுக்கு மறந்து போனது. மல்லிகா அதைப் பார்த்து விட்டு, வன்மத்தை மனதில் வளர்த்துக் கொண்டார்.

மாலை, பைரவி முதலில் வீட்டுக்கு வந்து சேர்ந்தாள். வேலை சீக்கிரம் முடிந்து விட்டது என்று கிளம்பி விட்டாள். உடை மாற்றி விட்டு கயலிடம் பேசிக் கொண்டிருக்க, சந்துரு வந்தான்.

வாசலில் இருந்த செடிகளை பார்த்துக் கொண்டிருந்தவளை நோக்கி ஓடி வந்தவன், “அம்மா…” என்று கூறி கட்டிக் கொண்டான். பைரவி ஆனந்த அதிர்ச்சியில் உறைந்து போனாள்.

‘அம்மா னா சொன்னான்?’ என்று காதுகளை நம்ப முடியாமல் குனிந்து பார்த்தாள். சந்துரு அவளை பார்த்து சிரித்து மீண்டும், “அம்மா… தூக்கு” என்று கூற, அவனை அள்ளி எடுத்துக் கொண்டாள்.

சந்தோசத்தில் பேச்சு வரவில்லை. நெஞ்சம் விம்ம அவள் நின்றிருக்க, கயல் அதை நிறைவான புன்னகையுடன் பார்த்தார்.

“யாருக்கு யாருடா அம்மா?” என்ற கர்ண கொடுரமான குரலில் மல்லிகா கேட்க, சந்துரு அரண்டு விட்டான். அவன் அவசரமாக பைரவியின் கழுத்தை கட்டிக் கொண்டு உதட்டை பிதுக்க, பைரவி மல்லிகாவை முறைத்து பார்த்தாள்.

மல்லிகாவிற்கு கோபம் உச்சந்தலைக்கு ஏறியது. இருவரின் பாச பிணைப்பை பார்த்து, முதலிலேயே அவருக்கு பற்றி எரிந்தது. சந்துரு மல்லிகாவிடம் பாசத்தை காட்டியதே இல்லை. தான் காட்டினால் தானே பதிலுக்கு கிடைக்கும்? என்பதை மல்லிகா புரிந்து கொள்ளவில்லை.

பைரவியிடம் சந்துரு காட்டும் பாசம், அவரது கண்ணை உறுத்தியது. இருவரையும் ஒட்ட விடாமல் வெட்டி விட அவர் துடிக்க, சந்துரு அம்மாவென்று அழைத்து வைக்கிறான்.

“மாமா….”என்று பைரவி சத்தமாக அழைக்க, வெளி வராண்டாவில் நின்று இருந்த சேகரன் வேகமாக வந்தார்.

“என்ன மா ஆச்சு?” என்று அவர் பைரவியிடம் கேட்க, “சந்துருவுக்கு நான் யாரு?” என்று கேட்டாள்.

பைரவியின் பார்வை மல்லிகாவை கூறு போட, கேள்வி மட்டும் சேகரனிடம் இருந்தது.

“இது என்ன மா கேள்வி. அவனுக்கு நீ பைய்யவி” என்றார் சேகரன். “இல்ல… சந்துரு நீ சொல்லு கண்ணா. நான் யாரு?” என்று சந்துருவின் முகத்தை பரிவாகத் தடவிக் கேட்டாள்.

“அம்மா” என்று சந்துரு கூற, சேகரனுக்கு சந்தோசம் பிடிபடவில்லை. அம்மா என்று ஒரு உறவு இருப்பதே சந்துருவிற்குத் தெரியாமல் தான் மல்லிகா வளர்த்தார். இன்று அவனாக பைரவியை தன் அன்னையாக அடையாளம் கண்டு கொண்டான். இது போதுமே…! இதற்கு தானே இத்தனை வருடம் காத்திருந்தார்.

“ஆமா டா கண்ணா. பைரவி உனக்கு அம்மா தான்” என்று பேரனின் தலையை தடவி கூறிய சேகரனுக்கு குரல் கரகரத்தது.

“அத இவங்க கிட்டையும் சொல்லுங்க மாமா. யாருக்கு யாரு அம்மானு சந்துருவ அதட்டுறாங்க. விட்டா அவன் அழுதுருப்பான். இனிமே இப்படி நடந்தா, என்னால பொறுமையா இருக்க முடியாது” என்று பைரவி கூற, சேகரன் மனைவியை முறைத்தார்.

மல்லிகா ஏதோ பேச வாயை திறக்க, “வா நாம போய் சாப்பிடலாம். அக்கா இவனுக்கு டிபன் எடுத்து வைங்க. நான் ட்ரஸ்ஸ மாத்தி கூட்டிட்டு வரேன்” என்று கூறிய பைரவி, விருவிருவென உள்ளே சென்று விட்டாள்.

“மல்லிகா” என்று சேகரன் அதட்டலாக அழைக்க, “என்னங்க?” என்று மல்லிகா சற்று பம்மினார்.

“இங்க வந்து, எந்த பிரச்சனையும் பண்ண கூடாது‌‌னு சொன்னனா இல்லையா?” என்று கேட்க, மல்லிகா எச்சிலை விழுங்கிக் கொண்டார்.

“இல்ல…” என்று இழுக்க, “என்ன இல்ல?” என்று அதட்டினார்.

அதில் மல்லிகாவின் கண்கள் துளிர்க்க ஆரம்பித்து விட்டது. சேகரன் அதை கண்டு கொள்ளவில்லை.

“யாரு சித்தி யாரு அம்மானு ஆராய்ச்சி பண்ண தான் இங்க வந்தியா? பேரன பார்க்க வந்தோம், பார்க்குறோம், கிளம்புறோம் . அவ்வளவு தான் புரியுதா?” என்று கடுமையாக கேட்டார்.

“அதுக்குனு சித்திய அம்மானு சொல்லுறத எப்படி அனுமதிக்க முடியும்?” என்று மல்லிகா கேட்க, சேகரன் மனைவியை தீப்பார்வை பார்த்தார்.

“யாரு சித்தி?”

“பைரவி தான்”

“அப்போ அம்மா யாரு?”

“சந்தியா”

“சந்தியா அவன பெத்தவ. அதுக்கு மேல எதுவும் கிடையாது. பைரவி தான் அவனுக்கு அம்மா. அவன் அப்படித் தான் கூப்பிடுவான்.”

சேகரன் திட்டவட்டமாக சொல்ல மல்லிகாவிற்கு எரிச்சல் வந்தது.

“அப்படி எல்லாம் முடியாது. சித்திய அம்மானு சொல்லிட்டா அவ சித்தி இல்லனு மாறிடுமா?” என்று மல்லிகா கேட்க,

“அப்படியா? சரி வா.. வந்து சந்தியா தான் அவன் அம்மானு சொல்லிட்டு என்னலாம் நடந்ததுனு சொல்லு. அதுக்கப்புறம் பைரவிய அவன் சித்தினு கூப்பிடட்டும்” என்று கூறினார்.

மல்லிகாவின் முகம் வெளுத்தது. ரத்தப்பசையில்லாமல் வெளுத்து போன முகத்துடன் அவர் நிற்க, “என்ன பேச்ச காணோம்?” என்று கேட்டார்.

மல்லிகா வாய்க்கு பசை போட்டது போல் வாய் திறக்காமல் நிற்க, “இன்னொரு பிரச்சனை வந்தா, அடுத்த நாளே இங்க இருந்து கூட்டிட்டுப் போயிடுவேன் சொல்லிட்டேன். ” என்று கூறி விட்டுச் சென்று விட்டார்.

சேகரன் சாதாரணமாக கோபப்பட மாட்டார். மனைவி மீது கோபப்பட்டால், அவர் அழுது விடுவார் என்பதாலே, கோபத்தை கட்டு படுத்தி அமைதியாகவே பேசுவார்.

ஆனால், இன்று பேரனின் வாழ்வு அவருக்கு முக்கியமாகப் பட்டது. அதனாலே சத்தம் போட்டு விட்டுச் சென்று விட்டார். மல்லிகா எதையோ யோசித்துக் கொண்டே சென்று விட்டார்.

*.*.*.*.*.*.*.*.

சந்துரு விளையாடி விட்டு படித்து முடித்தான். தேவேந்திரன் அப்போது தான் வீட்டிற்கு வந்தான். வந்தவனை கவனிக்க பைரவி வந்து விடக் கூடாது என்று, மல்லிகா மகனை விழுந்து விழுந்து கவனித்தார்.

சந்துரு படித்து முடித்து தேவேந்திரனோடு விளையாட, பைரவி அறைக்குள் வந்து விட்டாள். சந்துரு அம்மா என்று கூப்பிட்டதும், அவளது அன்னையிடம் பேச வேண்டும் போல் இருந்தது பைரவிக்கு.

கை பேசி உடைந்த பின், புதிதாக ஒன்றை வாங்கி விட்டாள். புது எண் யாருக்கும் தெரியாது. இவள் தான் மகாலட்சுமியை அழைக்க வேண்டும். ஏனோ வீண் பிடிவாதம். என்னை வேண்டாம் என்று துரத்தி விட்டவர்களிடம் ஏன் பேச வேண்டும்? என்ற வீம்பு.

இன்று பேச வேண்டும் என்று தோன்ற, அழைத்து விட்டாள்.

“ஹலோ” என்று மகாலட்சுமி பேச, “ம்மா” என்ற பைரவிக்கு குரல் அடைத்தது.

“பைரவி…” என்றவருக்கும் தொண்டையை அடைக்க, ஒரு நிமிடம் அமைதி காத்தனர்.

“எப்படி இருக்க?”

“ம்ம்.. நீங்க”

அவரும் “ம்ம்” என்றார்.

இருவரும் பதில் சொல்லாமல் சமாளித்தனர்.

“மாப்பிள்ளை நல்லா இருக்காரா?”

“நல்லா இருக்கார் மா”

“குட்டி பையன்?”

“சந்துரு நல்லா இருக்கான் மா‌ . வெளிய அவங்கப்பா கூட விளையாடிட்டு இருக்கான். பவானி?”

“பவானியும் பக்கத்து வீட்டு பையன் கூட விளையாடிட்டு இருக்கா”

“ம்ம்”

“பைரவி.. அம்மா மேல கோபமா?”

“இல்லனு பொய் சொல்ல மாட்டேன் மா”

“தெரியும் பைரவி. ஆனா, நீ இந்த நரகத்த விட்டுப் போகனும் நினைச்சேன்”

பைரவியிடம் பதில் இல்லை.

“உனக்கு தெரியும் போது தான், எனக்கும் மாப்பிள்ளையோட முதல் கல்யாணம் பத்தி தெரியும். அப்புறம் தான் ஒரு பையன் இருக்க விசயமும் தெரியும். கல்யாணத்த நிறுத்தலாம்னா கை மீறி போயிடுச்சு. ஆனா, பைரவி மாப்பிள்ளை ரொம்ப தங்கமானவரு. உன்னை நல்லா பார்த்துக்குவாரு” என்று கூற, “தெரியும் மா” என்று கடைசி வாக்கியத்துக்கு மட்டும் பதில் கூறினாள்.

பார்த்திபன், அன்னையின் குரல் கேட்டு சமையலறை பக்கம் வந்தான். இரண்டு மாதங்களுக்கு மேலாக, அவர் பேசுவதில்லையே. யாரிடம் பேசுகிறார்? என்று யோசனையோடு வந்து பார்த்தான்.

மகாலட்சுமி அவனை பார்த்ததும், அங்கிருந்து சென்று அறைக்குள் அடைந்து கொண்டார். பைரவியிடம் மட்டும் பேசுகிறார். என்னை மட்டும் ஏன் ஒதுக்க வேண்டும்? என்று அவனுக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது.

“அங்க உனக்கு எதுவும் பிரச்சனை இல்லையே?” என்று மகாலட்சுமி கேட்க பைரவி சில நிமிடங்கள் அமைதி காத்தாள். பிறகு நளினி செய்ததை எல்லாம் கூறி விட்டாள்.

“நான் அப்படி என்ன பண்ணேன்னு எனக்கு புரியல. அண்ணி இவ்வளவு வெறுப்ப கொட்டுற அளவுக்கு, நான் என்ன தப்பு பண்ணேன்னு முடிஞ்சா கேட்டு சொல்லுங்க” என்று பைரவி கூற, மகாலட்சுமியின் கண்கள் மௌனமாக கண்ணீர் வடித்தது.

அதை துடைத்து விட்டு, மகளிடம் பேசி விட்டு போனை வைத்தார். இரவு உணவை அவர் சமைத்துக் கொண்டிருக்க, பார்த்திபன் வந்து நின்றான். பவானிக்கு பாலை கொடுத்து தூங்க வைத்து விட்டு, நளினியும் வந்து நின்றாள்.

வழக்கம் போல் மகாலட்சுமி அவர்களை கண்டு கொள்ளவில்லை.

“ம்மா.. யாரு கிட்ட பேசுனீங்க? பைரவி கிட்டையா?” என்று கேட்க, பதில் வரவில்லை.

“ஏன் மா? அவ கிட்ட மட்டும் பேசுறீங்க… என் கிட்ட பேச மாட்டேங்குறீங்க?” என்று கேட்க, இப்போதும் அமைதியாக இருந்தார்.

“உங்க கிட்ட இத நான் எதிர் பார்க்கல. ஒரு கண்ணுல வெண்ணெய் இன்னொரு கண்ணுல சுண்ணாம்புனு இருக்கீங்க?”

“ஆமா பா. அப்படி தான் இருந்துட்டேன். ரெண்டு கண்ணையும் ஒன்னா பார்த்து இருக்கனும். பார்க்காம விட்டுட்டேன்” என்று மகாலட்சுமி பேச, பார்த்திபன் அதற்கு அர்த்தம் விளங்காமல் நின்றான்.

“உன் கல்யாணத்த உன் மனசுக்கு பிடிச்ச பொண்ணோட நடத்தி வைச்சேன். என் மக கல்யாணத்த, அவளுக்கு விருப்பமே இல்லாம கட்டாயப்படுத்தி பண்ணி வச்சுட்டேன். அதுவும் பிள்ளையோட இருக்க ஒருத்தருக்கு ரெண்டாந்தாரமா கட்டி வச்சுட்டேன். இதுலயே தெரியல நான் எப்படி இருக்கேன்னு” என்று மகாலட்சுமி கூற, பார்த்திபன் வாயடைத்து நின்றான்.

“அத்த அது பைரவி நல்லதுக்கு பண்ணது” என்று நளினி பேச, “யார் நீ?” என்று கேட்டார்.

“ம்மா…” என்று பார்த்திபன் அழைக்க, “சொல்லுபா” என்றார்.

“நளினிய பார்த்து ஏன் இப்படி கேட்குறீங்க?” என்று பார்த்திபன் கோபமாக வினவ, “நியாயமா தான கேட்டேன். யார் அவ?” என்று திருப்பி கேட்டார்.

“அவ என் பொண்டாட்டி” என்று பார்த்திபன் கோபமாக பேச, “இருந்துட்டு போகட்டும். நான் இல்லனா சொன்னேன். நான் என் மகன் கிட்ட பேசும் போது, இவ எதுக்கு நடுவுல வர்ரா?” என்று கேட்டார்.

“ம்மா”

“ஆமா பா. நான் தான் உன்ன பெத்த அம்மா. பெத்து மட்டும் போடல… நீ அழுதா அழுது, சிரிச்சா சிரிச்சு, உன் படிப்புல இருந்து விளையாட்டு வர எல்லாத்தையும் பார்த்து பார்த்து செஞ்சு, உன்னை வளர்த்து‌விட்டேனே அதே அம்மா நான் தான். ஆனா, உன்னை மட்டும் அப்படி வளர்க்கல. என் வயத்துல, போயும் போயும் உனக்கு தங்கச்சியா பிறந்தாளே பைரவி… அவளையும் வளர்த்தேன்.

ரெண்டு பேரையும் எனக்கு தெரிஞ்சு நல்லா தான் வளர்த்தேன். உங்கப்பா இருக்கும் போது, அவரோட மகனுக்கு பொண்ணு பிடிச்சுருக்கானு கேட்டு விசாரிச்சு தான் கட்டி வச்சார். அவர் போனதும் என் மகளுக்கு அவசர கல்யாணம் பண்ணி வச்சுட்ட. அவ கிட்ட என்னடா தப்ப கண்டீங்க ரெண்டு பேரும்?

உனக்கும் உன் பொண்டாட்டிக்கும் மட்டும் செலவு பண்ணிட்டு, இந்த அம்மா எக்கேடு கெட்டா எனக்கென்னனு இருந்தப்போ, என்னை பார்த்துகிட்டவ என் மக தான். உண்மைய சொல்லனும்னா நாலு வருசமா அவ சம்பாதிச்ச காசுல தான், நீ, உன் பொண்டாட்டி, புள்ள எல்லாரும் சாப்பகடீங்க.

ஒரு நாள் அத அவ வாய் விட்டு சொல்லி இருப்பாளா? இப்போ வீட்டுக்கு அது வேணும் இது வேணும்னு உன் பொண்டாட்டி கேட்கும் போது எரிஞ்சு விழுறியே… பைரவி இருக்கும் போது இப்படி எதாவது நாங்க கேட்டு நின்னு இருக்கோமா?

வேலைக்கு போயிட்டு களைச்சு போய் வரவளுக்கு, காபி குடுக்க ஆளு கிடையாது. கரிச்சு கொட்டாமலாவது இருக்கலாம்ல? வீட்டுக்கு எது வேணும் வேணாம்னு அவ கரெக்டா வாங்கிட்டு வந்து நிப்பா. எங்க ஒரே ஒரு மாசம் மொத்த குடும்ப செலவையும் நீங்க பார்த்துடுங்க பார்ப்போம். இன்னும் என் வீட்டுகாரோட பென்சன் பணத்துல தான், நான் வீட்டுக்கு தேவையானத வாங்கிப் போட்டுட்டு இருக்கேன்.

இவ்வளவும் பண்ணவள எதிரிய பார்க்குற மாதிரி பார்த்து, பிடிக்காத வாழ்க்கையில பிடிச்சு தள்ளிட்டீங்க. அப்பவும் அவ இந்த நரகத்த விட்டு போனா போதும்னு நினைச்சு தான், அவள சம்மதிக்க வச்சேன்.

ஆனா நீங்க? ச்சை… என் வயித்துல தான் பொறந்தியா நீ? எனக்கே சந்தேகமா இருக்கு”

அடை மழையாக மகாலட்சுமி கொட்டி தீர்த்து விட்டார். பார்த்திபன் கூனி குறுகி நின்றான். பைரவி சம்பளத்தில் தான் நீ வாழ்ந்தாய் என்ற வார்த்தை அவனை அவமானப்படுத்தியது.

இப்படி ஒரு நிலமை வரக்கூடாது என்று தான், நளினி பைரவியை துரத்தியது‌. ஆனால் ,இன்று அந்த நிலை வந்து விட்டது.

“இதெல்லாம் விடு இப்போ நான் வேற ஒன்னு கேட்குறேன். அதுக்கு மட்டும் பதில் சொல்லு.” என்று மகாலட்சுமி கேட்க, பார்த்திபன் அவரை நேராக பார்க்காமல் எங்கோ பார்த்தான்.

“பைரவிக்கு பிள்ள பிறக்காது உன் பொண்டாட்டி மாப்பிள்ளை வீட்டுல சொன்னாளா?” என்று கேட்க, பார்த்திபன் முகம் அதிர்ச்சியை காட்டியது. அடுத்த நொடி அது கன்றி சிவக்க,

“அப்போ உனக்கு தெரியும்” என்று இறுகிய குரலில் கேட்டார் மகாலட்சுமி.

“இல்ல ம்மா அது…”

“அம்மானு கூப்பிட்ட நானே உன்னை கொன்னுடுவேன்.”

பார்த்திபன் வார்த்தை வராமல் தடுமாறினான்.

“ஏன் இப்படி பண்ண? இதுனால அவ வாழ்க்கை பாதிக்கும்னு உனக்கு தோனல?”

“இல்ல… இப்போதைக்கு கல்யாணம் பண்ணிட்டு, நல்லா வாழ்ந்ததுக்கு அப்புறம் குழந்தை பிறந்தா சந்தோசம் தான படுவாங்க. அதுல பிரச்சனை எதுவும் வராதே”

“அப்படினு உன் பொண்டாட்டி சொன்னாளா?”

பார்த்திபன் முகம் கறுத்ததில் ஆமாம் என்ற விடை இருந்தது.

“உன்னை எல்லாம் பெத்ததுக்கு என்னை நானே கொளுத்திக் கிட்டா என்னனு இருக்கு. நீயும் ஒரு பொண்ண பெத்தவன் தான? பாவனிய இப்படி சொல்லி இந்த மாதிரி கல்யாணப் பண்ணி வச்சுடுவியா?” என்று நெத்தியடியாக கேட்டார் மகாலட்சுமி.

பார்த்திபனுக்கு சப்தநாடியும் அடங்கியது. பாவானியை இப்படி திருமணம் செய்து வைத்து விடுவானா? தங்கையும் மகளுக்கு சமம் அல்லவா?

அவன் ஆடிப்போய் நிற்க, ‘இப்பாவாது புரியுதா? உன் பொண்டாட்டிக்கு ஏன் அபார்ஸன் ஆச்சுனு?’ என்று மகாலட்சுமிக்கு கேட்டுவிடத் தோன்றியது.

கேட்டு விட்டால் அவரது நிலையில் இருந்து இறங்கிவிடுவார். அதனால் தொண்டை வரை வந்த வார்த்தையை விழுங்கி விட்டு,

“இனி நீயோ உன் குடும்பமோ இங்க இருக்கக் கூடாது. கிளம்பு. எங்க வேணா போ. என் கண்ணு முன்னாடி மட்டும் வந்துடாத. இந்த வீடு என் பேருல தான் என் வீட்டுக்கார் எழுதி வச்சு இருக்கார். நான் செத்து போனதுக்கு அப்புறம், இந்த வீட்ட பங்கு போட்டுக்கோங்க. அது வர இந்த வீடு எனக்கு மட்டும் போதும். கிளம்புங்க” என்று கூறியவர், நிற்காமல் அறைக்குள் சென்று கதவை அடைத்துக் கொண்டார்.

தொடரும்.

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 2

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
1
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்