
பைரவி தன் கையை வேதனையோடு பார்த்துக் கொண்டிருக்க, தேவேந்திரன் அதிர்ச்சியில் ஸ்தம்பித்து நின்று விட்டான். வார்த்தை வெளியே வராமல் தொண்டைக்குள் சிக்கிக்கொள்ள, அப்படியே நின்று இருந்தான்.
பைரவி விழிகளை உயர்த்தி அவனை பார்க்க முடியாமல், குனிந்தே அமர்ந்து இருந்தாள். அவனது அமைதி அவளை வருத்த,
“இது உங்களுக்கு சாக்கா தான் இருக்கும். பட் ஐம் சாரி. என்னால உண்மைய சொல்லாம இருக்க முடியல” என்று கூறினாள்.
அவனுக்கு இன்னும் அதிர்ச்சி விலக வில்லை.
“நீங்க இதுனால தான் என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க. எனக்கு எந்த வகையிலயும் குறை இல்ல. என் அண்ணி நிறைய பொய் சொல்லி உங்கள ஏம்மாத்திட்டாங்க. அதுக்கு சாரி. நான்… நான் குழந்தை பெத்துக்க முடியும். அது உங்களுக்கு பிடிக்காதுனு தெரியும்…” என்று பைரவி முடிக்கும் முன், “வாய மூடு” என்று தேவேந்திரன் சீறினான்.
அவசரமாக நிமிர்ந்து பார்த்தாள். அதிர்ச்சி விலகி, அளவு கடந்த கோபத்தில் தேவேந்திரனின் முகம் சிவந்து போயிருந்தது.
“இல்ல… நீங்க …” என்று எதோ சொல்லிக் கொண்டே, பைரவி இருக்கையில் இருந்து எழுந்தாள்.
அவளது தோளை பற்றி நாற்காலியில் தள்ளியவன், கை வைக்கும் இடத்தில் உள்ளங்கையை ஊன்றி அவள் முகத்தை குனிந்து பார்த்தான். பைரவி தேவேந்திரனை இவ்வளவு நெருக்கமாக பார்த்ததே இல்லை.
கோபத்தில் ஜொலிக்கும் அந்த முகத்தை பார்க்கும் போது, அவளுக்குள் இருந்த உணர்வுகள் விளங்க ஆரம்பித்தது. பைரவி அவனை கணவனாக ஏற்றுக் கொள்ள ஆரம்பித்து விட்டாள். ஏன்? ஏன்? என்று பல முறை யோசித்து விடை தெரியாத கேள்விக்கு, இன்று பதில் கிடைத்தது.
“ஹவ் டேர் யூ? என்னை பார்த்தா உனக்கு எப்படித் தெரியுது? இன்னொரு வார்த்தை பேசுன… மனுசனா இருக்க மாட்டேன்” என்று வார்த்தைகளை கடித்து துப்ப, பைரவிக்கு உடல் நடுங்கியது.
அவனது கோபத்தில் அரண்டு போய் அமர்ந்து இருந்தாலும், மனம் அவன் மீதான அன்பை கொண்டாட ஆரம்பித்து விட்டது.
“நீ ஏன் என்னை கட்டிகிட்டனு சொன்னல. நானும் ஏன் உன்னை கட்டிகிட்டேன்னு சொல்லுறேன் கேளு” என்று கூறியவன் நிமிர்ந்து நிற்க, அவன் விலகிய தைரியத்தில் பைரவி பேசினாள்.
“அன்னைக்கு சொன்னீங்களே” என்று கூற, “நீ எங்க முழுசா கேட்ட?? ” என்று கூறி முறைத்தான்.
“பேசிட்டு இருக்கும் போதே பேய பார்த்த மாதிரி தெறிச்சு ஓடிட்ட. நானும் பழசெல்லாம் கிளறிட்டோமேனு விட்டுட்டேன்” என்று திட்ட, பைரவி வாயை மூடிக் கொண்டாள்.
*.*.*.*.*.*.*.*.
தேவேந்திரனிடம் சேகரன் பைரவியை பற்றிக் கூற, “ப்பா.. உங்களுக்கு ஓகேனா சொல்லுங்க வந்து தாலிய கட்டுறேன். எனக்கு இந்த டீடைல் எல்லாம் வேணாம்” என்று தேவேந்திரன் முடித்து விட்டான்.
“அப்போ உனக்கு சம்மதம் தானே?” என்று சேகரன் உறுதிபடுத்திக் கொள்ள கேட்க, “ஆமா. பட் கல்யாணம் ரொம்ப சிம்பிளா தான் இருக்கனும்” என்று கூறினான்.
“அப்படி தான் பா பொண்ணு வீட்டுலையும் சொன்னாங்க. பெருசா நடத்துற அளவுக்கு வசதி இல்ல னு சொல்லிட்டாங்க…” என்று சேகரன் கூற, “டேட் பிக்ஸ் பண்ணிட்டு சொல்லுங்க” என்றான் தேவா.
“இன்னும் மூணு நாள்ல கல்யாணம் வச்சுடலாம் பா” என்று சேகரன் கூற, “வாட்??” என்றான் தேவா.
“பொண்ணு வீட்டுல சீக்கிரம் கல்யாணம் முடிக்கனும்னு எதிர் பார்க்குறாங்க. இன்னும் மூணு நாள்ல நல்ல முகூர்த்தம் வருது. அதுலயே சிம்பிளா முடிச்சுடலாம்”
“ப்பா… எனக்கு இது சரியா படல. எதுக்கு இத்தன அவசரமா கல்யாணம் பண்ணி கொடுக்க பார்க்குறாங்க? குடும்பத்த பத்தி நல்லா விசாரிச்சீங்களா?” தேவா படபடத்தான்.
“எல்லாம் கேட்டேன் நல்ல குடும்பம் தான்”
“அந்த பொண்ணுக்கு இது ரெண்டாவது கல்யாணம் தான?”
“இல்ல…”
“இல்லையா?? நான் உங்க கிட்ட என்ன சொன்னேன்? விதவையோ டைவர்ஸ் வாங்குனவங்களோ பாருங்கனு தான? எனக்கு ஒரு புள்ள இருக்கு. ஞாபகம் இருக்கா இல்லையா?”
“இருக்கு தேவா”
“அப்புறம் எதுக்கு இவ்வளவு அவசர மேரேஜ்? அதுவும் ஒருத்தருக்கு செகண்ட் வைஃபா கட்டி வைக்கிறீங்க”
“அந்த பொண்ணால ஒரு குழந்தைய சுமந்து பெத்துக்க முடியாதாம்”
“என்னது?” தேவா அதிர்ந்து போனான்.
சந்துருவை போன்ற மழலையை அந்த பெண்ணால் பெற்றெடுக்க முடியாதா? எவ்வளவு பெரிய வலி அது…!
தேவேந்திரன், பேச்சு வராமல் அமர்ந்து இருந்தான்.
“அவங்களுக்கு உன்னை பிடிச்சு போச்சு தேவா. நம்ம வீட்டுக்கு வந்தா அந்த பொண்ணு நல்லா இருக்கும்னு நினைக்குறாங்க. எனக்கும் அதான் சரினு தோனுச்சு” என்று கூற தேவா எதுவுமே பேசவில்லை.
ஆரம்பத்திலேயே அவன் சம்மதம் சொல்லி விட்டானே. இந்த குறைக்காக அவன் வேண்டாம் என்று சொல்லி விடுவானா என்ன? அவளுக்கு கால போக்கில் சரியாகலாம். அப்படி இல்லை என்றால், சந்துருவை அவள் குழந்தையாக வளர்த்து விடப் போகிறாள்.
தேவேந்திரன் இப்படி நினைத்து தான், திருமணம் செய்து கொண்டான். பைரவி கேட்கும் போதும் சொல்லத் தான் நினைத்தான். ஆனால், அவள் தான் பாதி பேச்சில் ஓடி விட்டாள்.
அவளை பற்றி விசாரித்து இருப்பான் தான். ஆனால், தந்தை சொன்ன வார்த்தையில் ஸ்தம்பித்து விட்டவன், விசாரிக்க வேண்டும் என்பதையே மறந்து போனான். அவனுடைய மனைவியாகும் முன்பே, அவளது பிரச்சனையை நினைத்து வருந்த ஆரம்பித்து விட்டான்.
இப்படியொரு விசயத்தில் பொய் சொல்லக்கூடும் என்று அவனுக்கு சந்தேகம் தோன்றியிருந்தால், இந்த திருமணத்தை நிறுத்தி இருப்பான்.
*.*.*.*.*.*.*.*.
பைரவி, கேட்ட விசயங்களை நம்ப முடியாமல் அமர்ந்து இருக்க மீண்டும் அவள் அருகில் வந்து, உள்ளங்கையை நாற்காலியின் இரு பக்கமும் ஊன்றினான் தேவேந்திரன்.
“எவ்வளவு தைரியம் இருந்தா என்னை இவ்வளவு சீப்பா நினைப்ப? என்னை பார்த்தா அடுத்தவங்க கஷ்டத்துல ஆதாயம் தேடிக்குறவன் மாதிரியா உன் கண்ணுக்கு தெரியுது? கடவுள் நம்பிக்கை இருக்கா உனக்கு? எனக்கு இருக்கு. உன்னை பத்தி அப்பா சொன்னதுல இருந்து, இன்னைக்கு வர கடவுள் கிட்ட உன் பிரச்சனை சரியாகிடனும்னு வேண்டிட்டு இருக்கேன். ஆனா நீ…” என்றவன் அவள் முகத்துக்கு நேராக சுட்டு விரலை நீட்டினான்.
“ஹேட் யூ பைரவி… ஐ ஹேட் யூ” என்று கூறி விட்டான்.
அதை தாங்க முடியாமல் பைரவியின் கண்ணில் கண்ணீர் துளிர்க்க, தேவாவினால் அதை கண் கொண்டு பார்க்க முடியவில்லை.
அங்கிருந்து அகன்றவன், கார் சாவியை எடுத்துக் கொண்டு அறையிலிருந்து வெளியேறி விட்டான்.
“என்னங்க…” என்று அழைத்து பைரவி ஓடி வர, அவள் வாசலுக்கு வரும் முன், தேவாவின் கார் பறந்து இருந்தது.
கதவில் தலை சாய்த்து நின்றவளின் கன்னத்தை, கண்ணீர் நனைத்தது. திருமணத்தன்று அழுதது. அதன் பின் அவள் அழவே இல்லை. இன்று மீண்டும் கண்ணீரை சந்திக்கிறாள். பின்னால் கயல் வரும் சத்தம் கேட்க, அவசரமாக கண்ணை துடைத்துக் கொண்டாள்.
“ஐயா சாப்பிடாம போறாங்களே” என்று கயல் கேட்க, ‘ஆமா .. சாப்பிடலயே’ என்று பைரவிக்கு அடுத்த வருத்தம் வந்து ஒட்டிக் கொண்டது. கயல் அவளையே பார்த்துக் கொண்டு நிற்க, “அவசர வேலையாம் . வெளிய சாப்பிட்டுக்குவார்” என்று கூறி வைத்தாள்.
“சரி நீங்க சாப்ட வாங்க” என்று கயல் அழைக்க, “பசியில்ல கா. நீங்க சாப்டுங்க. நான் அப்புறம் சாப்பிடுறேன்” என்று கூறிவிட்டு, அறைக்குச் சென்று விட்டாள்.
மாலை, வெகு நேரமாகியும் தேவேந்திரன் வீட்டிற்கு வரவில்லை. சந்துருவை கவனித்து அவனுக்கு பாடம் சொல்லிக் கொடுத்த பைரவி, வாசலையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
“பைய்யவி அப்பா ஏங்க?” என்று சந்துரு கேட்க, “வருவாங்க ” என்று சொல்லி முடிக்க கார் சத்தம் கேட்டது.
“வந்துட்டாங்க” என்று கூறிய பைரவி பரபரப்புடன் எழுந்து நின்றாள். சந்துரு கையில் இருந்த புத்தகத்தை போட்டு விட்டு, வாசலுக்கு ஓடினான்.
தேவேந்திரன் எதிரில் வேகமாக வந்து, மகனை தூக்கிக் கொண்டான். தந்தையிடம் அவன் பள்ளி கதைகளை பேச ஆரம்பிக்க, “அப்பா ஃப்ரஸ்ஸாகிட்டு வந்து உன் கதை எல்லாம் கேட்குறேன். சரியா…?” என்று கூறி விட்டு அறைக்குள் சென்றான்.
பைரவியின் பக்கம் தேவேந்திரன் திரும்பவே இல்லை. அவனது ஒதுக்கம் பைரவியை பலமாக தாக்க, நிலைகுலைந்து போனாள். மனதில் வருத்தம் இருந்த போதும், பைரவி அவர்கள் இருவரையும் ஒதுக்கவில்லை.
தேவேந்திரன் பட்டவர்த்தனமாக ஒதுக்கித் தள்ளியது, அவளை காயப்படுத்தியது. அவனிடம் பேசி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று முடிவு செய்து கொண்டாள்.
கீழிறங்கி வந்தவனுக்கு காபி காத்திருக்க, அதை எடுத்துக் கொண்டவன் மகனோடு ஐக்கியமாகி விட்டான். பைரவி வேதனையோடு வேறு வேலையை பார்க்கச் சென்றாள்.
இரவு தேவா அறைக்குள் நுழைந்ததும், “என்னங்க…” என்று அழைத்தாள். தேவா அவளை கண்டு கொள்ளாமல் இருக்க, “ஐம் சாரி” என்றாள்.
பட்டென திரும்பியவன் இரண்டெட்டில் அவளை அடைய, அந்த வேகத்தில் பயந்து, பைரவி தடுமாறி மெத்தையில் அமர்ந்தாள். எதோ திட்ட வாயைத் திறந்தவன், பைரவிக்கு பின்னால் தூங்கிக் கொண்டிருந்த சந்துருவை பார்த்து விட்டு, ஒரு நொடி அமைதியானான்.
“உன் சாரி ஒன்னும் எனக்குத் தேவையில்ல. அத நீயே வச்சுக்க. என்னை பத்தின உயர்வான எண்ணத்துக்கு நான் தான் உனக்கு தாங்க்ஸ் சொல்லனும். தாங்க்ஸ்” என்று கூற, “இல்ல ப்ளீஸ்…” என்று பைரவி கெஞ்சினாள்.
“பேசாத.. பேசுன என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது” என்று கூறி விட்டு, குளியலறை பக்கம் சென்று விட்டான். பைரவி வேதனையுடன் மெத்தையில் படுத்து விட்டாள்.
தேவேந்திரனுக்கு தூக்கம் வரவில்லை. பால்கனியில் நடந்து கொண்டிருந்தான். எப்படி அவள் தன்னை இப்படி நினைத்தாள்? என்று மனம் குமுறிக் கொண்டிருந்தது.
எத்தனை நாள் கடவுளிடம் இந்த பிராத்தனையை வைத்திருப்பான். பைரவிக்கு இப்படியொரு சாபம் வேண்டாம் என்று, எத்தனை நாள் கடவுளிடம் சண்டை போட்டிருப்பான்.
அப்படி எந்த பிரச்சனையையும் அவளுக்கு இல்லை என்று தெரிந்ததும் சந்தோசப்பட முடியாமல், என்னவெல்லாம் பேசி விட்டாள்!. கோபத்தில் பதிலுக்கு பேசி விடக் கூடாது என்று தான் வீட்டை விட்டுச் சென்று விட்டான்.
மனம் பைரவி பேசிய பேச்சுக்களையே நினைத்துக் கொண்டிருக்க, சில நிமிடங்களுக்குப் பிறகு தான் அவன் எங்கு வந்திருக்கிறான் என்பதையே உணர்ந்தான்.
பழக்க தோசமாக, கை காரை அலுவலகம் கொண்டு வந்திருந்தது. வர மாட்டேன் என்று கூறிய முதலாளி வந்து நிற்கவும், எல்லோரும் பரபரப்பாக வேலை பார்க்க ஆரம்பிக்க, அதை எல்லாம் தேவேந்திரன் உணரவில்லை.
பிறகு அங்கிருக்கவும் பிடிக்காமல், தொழிற்சாலை கிளம்பி விட்டான். மாலை வரை அங்கிருந்து விட்டுத் தான் வந்திருக்கிறான்.
எவ்வளவு முயன்றாலும் பைரவி பேசிய வார்த்தைகள், காதை விட்டு செல்வேனா என்று அடம்பிடித்தது. யார் இப்படி நினைத்து இருந்தாலும் கவலை பட்டிருக்க மாட்டான் .
‘பைரவியா? பைரவியா என்னை இப்படி நினைத்தது?? அவள் என்னை இப்படி நினைத்து விட்டாளே??’
பைரவி தன்னை தவறாக நினைத்ததை தான், அவனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
முதலில் பைரவி மட்டுமே அந்த வீட்டில் உயிரற்று அலைந்தாள். இப்போது தேவேந்திரனும் சேர்ந்து கொண்டான். அவளை ரொம்பவும் அவனால் ஒதுக்க முடியவில்லை.
பைரவி பரிமாறி விட்டால், எதுவும் சொல்லாமல் சாப்பிடுவான். ஆனால், முன்பு போல் அவள் தான் பரிமாற வேண்டும் என்று எதிர்பார்ப்பதில்லை.
அவளாக எதை பேசினாலும் பதில் பேசுவதில்லை. அப்படியே பதில் சொல்லும் நிலமை வந்தால், சந்துருவிடம் சொல்லி விட்டுச் சென்று விடுவான்.
சந்துரு தான், ‘இப்ப என்ன கேட்டோம் சரினு சொல்லிட்டு போறாங்க?’ என்று புரியாமல் திருதிருவென பார்த்து வைப்பான்.
ஒரு மாதமும் இப்படியே தான் கடந்தது. தவறு தன் மீது தான் என்று பைரவிக்குத் தெரியும். அவன் பதில் பேசுகிறானோ இல்லையோ அவள் பேசினாள்.
பதிலை எதிர் பார்க்காமல் பேசி விட்டுச் சென்றாள். அவனாக மன்னிக்கும் வரை காத்திருக்க முடிவு செய்தாள். பைரவி இவ்வளவு இறங்கி வரும் போது, தேவேந்திரனால் கோபத்தை இழுத்துப் பிடிக்க முடியவில்லை.
அவன் கோபத்தோடும் அவள் பேசிய வார்த்தைகளோடும் போராடிக் கொண்டிருக்க, மல்லிகா கணவரோடு கிளம்பி வந்து விட்டார். பேரனையும் மகனையும் விட்டு இருக்க முடியவில்லை. இங்கு சில நாட்கள் தங்கிப்போகப் போவதாக அவர் கிளம்பி வர, பைரவிக்கு இது நல்லதில்லை என்று தோன்றியது.
மாமனாரை வரவேற்றவள் மாமியாரை பொதுவாக, “வாங்க” என்றதோடு சரி.
மல்லிகா அதற்கும் மேலாக, ‘உன் கிட்ட கேட்டனா?’ என்பது போல் ஒரு பார்வை பார்த்து விட்டு சென்றுவிட்டார்.
வீட்டை சுற்றி சுற்றி பார்த்தார் மல்லிகா. எதாவது குறையை கண்டு பிடித்து, பைரவியை திட்டி விட வேண்டும் என்பது தான் அவரது விருப்பம்.
என்ன தான், இங்கு வந்து பிரச்சனை செய்ய கூடாது என்று கூறி கணவர் அழைத்து வந்திருந்தாலும், மல்லிகா இங்கு வந்த காரணத்தை நிறைவேற்றாமல் போகப் போவது இல்லை.
“வீடு நல்லா சுத்தமா தான் இருக்கு. எங்க அந்த கயல்?” என்று மல்லிகா கேட்க கயல் முன்னால் வந்து நின்றார்.
என்றும் இல்லாமல் கயலின் முகம் இறுகி இருப்பதைப் பார்க்க, பைரவிக்கு ஆச்சரியமாக இருந்தது.
கயல் இப்படி இருப்பவர் இல்லை. சாந்தமாகவும் சந்தோசமாகவும் தான் அவரை பைரவி பார்த்திருக்கிறாள். பார்க்க கூடாததை பார்த்தது போல் கயல் நின்றிருந்த கோலம், ‘இந்தம்மா இவங்களையும் எதோ பண்ணி இருக்கனும்’ என்று முடிவுக்கு வந்தாள்.
“பரவாயில்ல. நல்லாவே வீட்ட கவனிச்சுருக்க. இனிமேலும் இப்படியே இருக்கனும் புரியுதா?” என்று கேட்க, கயல் பதில் பேசாமல் தலையாட்டி வைத்தார்.
“போ போய் எனக்கு காபி கொண்டு வா. இவருக்கு சீனி இல்லாம…” என்று கூற, கயல் உள்ளே சென்று விட்டார்.
தேவேந்திரன் தந்தையிடம் பேசிக் கொண்டிருக்க, மல்லிகாவை கண்டு கொள்ளாமல் பைரவி கயலை தேடிப் போனாள்.
“என்ன கா ? ஏன் இப்படி கோபமா இருக்கீங்க?” என்று கேட்க, “இந்தம்மானால தான்மா. போன தடவ வந்து, சந்துரு பையன கூட்டிட்டு போறப்ப என்னலாம் பேசுனாங்க தெரியுமா? ஒரு புள்ளைய சுமந்து பெக்க முடியாத என் கை அவன் மேல பட்டா, அவனுக்கு ஆகாதாம். இந்த கையால தான் ஆறு மாசம் அவன வளர்த்தேன். பிறந்த பச்ச மண்ண கவனிக்காம விட்டுட்டு என்னை வந்து பேசிட்டுப் போகுது. ச்சே…” என்று கயல் மனக்குமுறலை கொட்டி விட்டார்.
மல்லிகா இதை மட்டுமா செய்வார்? இதற்கு மேலேயும் செய்வாரே…! அதனால் பைரவி கயலுக்கு ஆறுதல் கூறி அனுப்பினாள்.
தொடரும்.

