Loading

புலர்ந்தும் புலராத பிரம்ம முகூர்த்தம். மேகப் போர்வையை மெல்ல விலக்கி, சூரியன் துயில் கலைந்து கொண்டிருக்க, பறவைகளின் சத்தம் இன்னிசை மீட்டியது.

முப்பது முக்கோடி தேவர்களை சாட்சியாக, திருமண பந்தத்தில் இணைய, மேடையில் காத்திருக்கும் அந்த மணமக்கள். அழகான மலர்கள் கொண்டு, அந்த மணமேடை அலங்கரிக்கப்படவில்லை‌.

கோவில் சன்னதியில், கடமைக்காக அமைக்கப் பட்ட மணமேடை தான். ஹோம குண்டத்தில் தீ வளர்த்து, புரியாத மந்திரங்களை கடமையே கண்ணாக சொல்லிக் கொண்டிருந்தார் ஐயர்.

புகையின் காரணமோ, இல்லை இயற்கையாகவே அப்படித் தானோ, சிவந்து போன முகமும், கலங்கிய கண்களுமாக அவள்… பைரவி.

வாடா மல்லி நிறத்தில் பட்டுச் சேலை. இடை தொட்டு நிற்கும் பின்னலில், நிரம்பி வழிந்த மல்லிகை சரம். மணப்பெண் என்பதற்காக, அலங்கரிப்பட்ட அலங்காரங்களாக சில நகைகள்.

முகத்தில் மலர்ச்சி இல்லை. கலங்கி இருந்த கண்களை, இமை சிமிட்டி சரி படுத்திக் கொண்டு, நிமிர்ந்து பார்த்தாள். கடனே என்று நின்றிருந்தான் அவளது அண்ணன் பார்த்திபன்.  தேவையான வேலைகள் முடிந்து விட்டது. இனி ஏன் இங்கு நிற்க வேண்டும்? என்ற முக பாவனை.

அவன் பக்கத்தில், எப்போதடா விடுவார்கள்? இங்கிருந்து ஓடுவோம் என்று எரிச்சலை மறைக்காத முகத்தோடு, அண்ணி நளினி. அவர்கள் மகளை அழைத்து வரவில்லை. தூக்கம் கெட்டு விடுமாம். நளினியின் அன்னை வீட்டில் விட்டு விட்டு, வந்திருக்கின்றனர்.

அவர்கள் பக்கத்தில், அமைதியாக உணர்ச்சியில்லாமல் நின்று இருந்தார் பைரவியின் அன்னை மகாலட்சுமி. அங்கு நடப்பதை தடுக்க அத்தனை உரிமையும் இருந்தும், அந்த உரிமைகளை தீயில் இட்டு கொளுத்தி விட்டு நின்று இருக்கிறார்.

பைரவிக்கு மீண்டும் கண்கலங்கியது. கைகுட்டையால் ஒற்றிக் கொண்டாள். தன் குடும்பத்தை விடுத்து, மற்றவர்களைப் பார்த்தாள். நேர் எதிராக நின்று, பைரவியே முறைத்துக் கொண்டு நின்றிருந்தார் மல்லிகா.

அந்த முறைப்பை பார்த்த பைரவிக்கு, பகீரென்றது. இப்படி நேரடியாக அவளை கொலை செய்து விடும் நோக்கோடு பார்க்கும் பார்வையை, அவள் இப்போது தான் பார்க்கிறாள்.

மனம் படபடக்க அவசரமாக பார்வையை திருப்பிக் கொண்டாள். மல்லிகாவின் பக்கத்தில் சேகரன் நின்று இருந்தார். இந்த திருமணத்தில், உண்மையான மகிழ்ச்சி அவருக்கு மட்டுமே.

நிறைவான புன்னகையுடன் நின்று இருந்தார். சற்று தள்ளி ஒரு பெண் . கையில் மூன்று வயது பையனை தூக்கிக் கொண்டு நிற்க, அவள் பக்கத்தில் அவளது கணவன்.

பைரவியின் பக்கத்தில் அமர்ந்து இருப்பவனின் தங்கை அவளது கணவன் போலும். இன்னும் அவனை கணவனாக மனம் ஏற்கவில்லை. அவனது தங்கை பிருந்தா, அலட்சிய பார்வையுடன் நின்று இருந்தாள்.

பக்கத்தில் நின்று இருந்தவன் முகத்தில், உணர்வுகள் எதுவும் இல்லை . இனி இந்த குடும்பத்திற்கு தான் செல்ல வேண்டும். நினைக்கவே நெஞ்சு பதறியது.

கண்ணை மூட, புன்னகை முகமாய் ஒருவன் முகம் தெரிந்தது. கடவுளே… பதறிப்போய் கண்ணை திறந்தாள். மணமேடையில் வேறு ஒருவருடன் அமர்ந்து கொண்டு, என்ன செய்கிறேன்? என்று பதறி போனாள்.

இதயம் படுவேகமாக துடிக்க, ஐயர் தாலியை எடுத்துக் கொடுத்து விட்டார். வாங்கியவனின் கை, ஒரு நொடி தாமதித்தது. அதிலேயே அவனது விருப்பமின்மை புரிய, இப்போது கண்ணீர் கரையை உடைத்தது பைரவிக்கு.

மற்றவர்கள் கண்ணில் விழும் முன், தலைகுனிந்து கொண்டாள். அவன் திரும்பி பைரவியை பார்த்தான். பைரவி நிமிர்ந்து பார்க்கும் நிலையில் இல்லை.

நீண்ட பெருமூச்சை வெளி விட்டு, அவளது கழுத்தில் கட்டி விட்டான். இரண்டாவது முறையாக…!

இவ்வளவு நேரம், கழுத்தில் கிடந்த மாலை, நகைகள் எதுவும் கனக்கவில்லை. அந்த பொன் தாலி கோர்த்த மஞ்சள் கயிறு, பாராங்கல்லை தூக்கி வைத்தது போல் கனத்தது. குனிந்து இருந்தவளின் கண்ணீர் தாலியில் பட்டுத் தெறித்தது.

குங்குமம் வைப்பதற்காக அதை எடுத்தவனின் கை, ஈரப்பதத்தை உணர்ந்தது. அப்போது அவள் முகத்தை பார்க்க ஆசைப் பட்டான். ம்ஹூம். அவள் நிமிரவே இல்லை.

போனால் போகட்டும் என்று பார்த்திபன் ஆசிர்வதிக்க, மகாலட்சுமி ஊமையாக மகளின் தலையில் கை வைத்ததோடு சரி. அவரது கண்கள் கலங்கி இருந்ததோ…?

மல்லிகா எவனுக்கு வந்த விருந்தோ என்று நிற்க, சேகரன் மனமாற வாழ்த்தினார். மல்லிகாவின் பார்வையை கண்டு பயந்து போய் நின்று இருந்த பைரவியின் தலையில், அடுத்த இடி விழுந்தது.

பிருந்தாவின் கையில் இருந்த சிறுவன், “..ப்பா” என்று கூறி பைரவியின் கணவன் பக்கம் தாவினான். பைரவியின் முகம் வெளிறிப் போக, திரும்பி அன்னையை பார்த்தாள்.

முகம் கொள்ளா வேதனையுடன், அவர் பார்வையை திருப்பிக் கொள்ள, உள்ளுக்குள் எதோ உடைந்தது. சொந்தம் பந்தம் என்று ஒரு காக்கா குருவி கூட அங்கு இல்லை. திருமணத்தை கோவிலிலேயே ரிஜிஸ்டர் செய்து விட்டு வீட்டுக்குக் கிளம்ப, பைரவியின் குடும்பம் விடை பெற்று எல்லோருக்கும் முன்னால் கிளம்பி விட்டது.

காரில் மகனை மடியில் அமர்த்திக் கொண்டு அவன் வர, பைரவி முடிந்து விட்ட தன் வாழ்க்கையை நினைத்து, வேதனையோடு வந்தாள்.

பிருந்தாவின் கணவன் அருள் காரை ஓட்ட, பிருந்தா அவனோடு அமர்ந்து இருந்தாள். காரில் அந்த சிறுவன் பேசும் மழலை பேச்சைத் தவிர, வேறு எந்த சத்தமும் இல்லை.

வீட்டிற்கு வந்ததும், “நான் கிளம்புறேன்மா. என் மாமியார் அங்க தனியா எதையும் செய்ய முடியாம உட்கார்ந்து இருப்பாங்க…” என்று பிருந்தா காலில் சுடு தண்ணீரை ஊற்றியது போல் குதித்துக் கொண்டிருந்தாள்.

“சாப்பிட்டுப் போ பிருந்தா. மாப்பிள்ளை சாப்பிடாம பசியோட இருப்பாருல” என்று மல்லிகா கொஞ்ச, “உங்க வீட்டு சாப்பாட நீங்களே வச்சுக்கோங்க. யாரு என் பேச்ச கேட்டா…? நான் என் வீட்டுல போயே சாப்பிட்டுக்கிறேன்” என்று கூறி விட்டாள்.

அருள் பிருந்தா இருவரும் விடை பெற்றுக் கொள்ள, பைரவி யாருக்கு வந்த விருந்தோ என்று அமர்ந்து இருந்தாள்.

“தேவா இங்க வா பா” என்று சேகரன் கூப்பிடும் போது தான், பைரவிக்கு கணவன் பெயரே தெரிய வந்தது.

‘தேவா. முழு பேரே தேவா தான?’ என்று யோசித்துக் கொண்டிருந்தாள்.

மல்லிகா சமையலறை என் ராஜ்ஜியம் என்று காட்ட, அதற்குள் புகுந்து கொண்டார். வாசலில் தேவாவும் சேகரனும் நின்று பேசிக் கொண்டிருக்க, பைரவி சோபாவில் யோசனையோடு அமர்ந்து இருந்தாள்.

‘என்ன வாழ்க்கை இது? பாரத்தை கழிக்க வேண்டும் என்று, அவளது அண்ணனும் அண்ணியும் பெயர் தெரியாத ஒருவன் தலையில் அவளை கட்டி விட்டனர்.

நான்கு நாட்களுக்கு முன் அவள் வாழ்க்கை இப்படியா இருந்தது? ஒரு போன். ஒரே போன். அவளது மொத்த வாழ்க்கையையும் திசை திருப்பி விட்டது.’

பைரவி நன்கு படித்த பெண். ஒரு கல்லூரியின் நிர்வாக இடத்தில் பணி புரிகிறாள். எம்.பி.ஏ முடித்தவள். படிப்பிற்கு ஏற்ற வேலை, பதவி உயர்வு, என்று அவளிடம் எந்த குறையையும் யாரும் சொல்லி விட முடியாது.

ஆனால், வெறும் ஒரு மணி நேரத்தில் அவளது மொத்த வாழ்க்கையையும் மாற்றிப் போட்டாள் நளினி. பெற்ற அன்னையையே ஓரம் கட்டி விட்டு, அடுத்த நான்கு நாட்களில் அவளை ஒருவனுக்கு இரண்டாம் தாரமாக கட்டி வைக்க வேண்டும் என்றால்? அவள் எவ்வளவு சாகசக் காரியாக இருக்க வேண்டும்‌!

நளினியின் பேச்சுத் திறமையும், செயல் திறமையும், நல்ல காரியத்திற்கு உபயோகப் படுத்தி இருக்கலாம். அழகான நாத்தனார். அதுவும் சம்பாதிக்கும் நாத்தனாரை, அவள் அறவே வெறுத்தாள்.

பனிரெண்டை நளினி வெற்றிகரமாக முடித்ததே அதிசயம் தான். அப்படி இருக்க, வீட்டிற்குள் நிறைய படித்து, சம்பாதிக்கவும் செய்யும் நாத்தனாரிடம், குடும்ப பொறுப்பு போய்விடாமல் இருக்க அவள் எவ்வளவு பாடுபட வேண்டும்?

நான்கு வருடங்களுக்கு முன்பு தான், அவர்கள் திருமணம் நடந்தது. அப்போது பைரவி படித்துக் கொண்டிருந்தாள். படிக்கும் பெண் மீது, நளினிக்கு எந்த துவேஷமும் இல்லை.

படித்து முடித்து வேலையில் சேரும் முன், பைரவியின் தந்தை மாரடைப்பால் உயிரைத் துறந்தார். துக்கத்திலிருந்து மீண்டதும், பைரவி வேலைக்கு கிளம்பி விட்டாள்.

முதலில் அதை சாதாரணமாக ஏற்றுக் கொண்ட நளினி, மாமியார் எந்த தேவையாக இருந்தாலும் மகளிடம் கேட்கவும் விழித்துக் கொண்டாள்.

காரணம்…? குறுகிய காலத்தில் பார்த்திபனை விட அதிகமாக சம்பளம் வாங்க ஆரம்பித்து விட்டாள் பைரவி. பார்த்திபனுக்கும், தன் தேவை, தன் மனைவியின் தேவை போக வீட்டிற்கு பணம் கொடுக்க முடியவில்லை.

முழு செலவும் பைரவி தான் என்று ஆகி விட்டது. மெல்ல மெல்ல குடும்ப தலைமை கை மாறுகிறதோ? என்று தோன்ற, தன் அசுர குணத்தைக் காட்ட ஆரம்பித்தாள் நளினி.

பைரவி கண்டும் காணாமல் கடந்து போகப் பழக, அது நளினிக்கு திமிராகத் தெரிந்தது. நளினி தேளாய் கொட்ட ஆரம்பிக்க, வீடு நரகமானது.

பைரவிக்கு திருமணம் முடித்து வைக்க, பலகாலமாக முயற்சி செய்து கொண்டிருந்தாள். மகாலட்சுமியும் பைரவியும் பிடி கொடுக்கவில்லை.

எப்போ? எப்போ? என்று காத்துக் கொண்டிருந்தவளுக்கு லட்டு போல் வாய்ப்பு கிடைக்க, கெட்டியாகப் பிடித்துக் கொண்டு, இதோ துரத்தி விட்டாள்.

தன் வாழ்க்கையை நினைத்து யோசனையாக பைரவி அமர்ந்து இருக்க, தளிர் கரம் ஒன்று அவளைப் பிடித்து சோபாவில் ஏறி அமர்ந்தது.

அது வரை யோசனையில் மூழ்கி இருந்தவள் பக்கத்தில் பார்க்க, குட்டி பையன் அழகாய் புன்னகைத்தான்.

பதிலுக்கு இவள் புன்னகைக்கும் முன், மல்லிகா வந்து குழந்தையை தூக்கி விட்டார். தூக்கியவர் சும்மாவும் இருக்காமல், பைரவியை முறைத்துத் தள்ளி விட்டுச் சென்றார்.

‘இது என்ன வம்பா இருக்கு? அந்த பையன் தான என் பக்கத்துல வந்து உட்கார்ந்தான்?‌’ என்று அவள் யோசித்துக் கொண்டு இருக்க, சேகரன் அவளை சாப்பிட அழைத்தார்.

காலை உணவு முடிந்ததுமே, தன் பட்டு சேலையை கலைந்து, சாதாரண உடைக்கு மாறி விட்டாள் பைரவி.

தேவாவின் வீடு பைரவியின் வீட்டை போல், இரண்டு அறை கொண்ட சிறிய வீடாக இல்லை. விருந்தினருக்கு என்றே இரண்டு அறைகளை ஒதுக்கும் அளவு, பெரிய வீடாக தான் இருந்தது.

‘பணம் இருந்தால் எதையும் செய்யலாம்.’ விரக்தியாக நினைத்துக் கொண்டாள்.

திருமணம் முடியும் முதல் நாள் வரை, பைரவிக்கு எதுவும் தெரியாது. நளினி விசயத்தை முழுமையாக மூடி மறைத்து இருந்தாள்.

எங்கே உண்மையைச் சொன்னால், நாத்தனார் கழகம் செய்து திருமணத்தை நிறுத்தி விடுவாளோ? என்ற பயம். ஆனால், மனதில் இருந்த விசம், முதல் நாள் இரவு விசயத்தை உளற வைத்தது.

பைரவியை திருமணம் செய்து கொள்பவனுக்கு, முதலிலேயே திருமணம் முடிந்து, அவள் ஒரே வருடத்தில் இறந்து போன விசயம் தெரிய, பைரவி துடித்துப் போனாள்.

‘தன் நிலமை இவ்வளவு இறங்கி போக வேண்டுமா?’

அன்னையைப் பார்த்தாள். அவர் வழக்கம் போல், கண்ணீரோடு முகத்தை திருப்பிக் கொண்டார். நான்கு நாட்களாக நடக்கும் கதை தான்.

திருமணத்தில் விருப்பம் இல்லை என்று எழுதி வைத்து விட்டு, எங்கேயாவது சென்று விடும் முடிவுக்கு வந்தாள். அதை கண்டு பிடித்து விட்டாளோ? என்னவோ நளினி அதற்கும் ஆப்பு வைத்தாள்.

அப்படி ஓடி விட்டால், முதலில் உன் அம்மா தான் தற்கொலை செய்து இறந்து போவார் என்று கூறி விட்டுச் சென்று விட்டாள். அப்போது விக்கித்து அமர்ந்தவள் தான், நடைப்பிணமாக மணமேடை ஏறும் வரை, வேறு எந்த நினைவும் தோன்றவில்லை.

விருந்தினர் அறையே கதியென கிடக்க, கணவன் என்ன செய்கிறான் என்ற எண்ணமே அவளுக்கு வரவில்லை. அவனது முழுப்பெயர் கூட தெரியாத நிலை.

‘அவனை பற்றி என்ன அக்கறை வேண்டி கிடக்கிறது? மனைவி இறந்து போன உடனே அடுத்த திருமணம் செய்து கொண்டான். இவன் மீது என்ன மரியாதை வேண்டி கிடக்கிறது? எக்கேடு கெட்டால் எனக்கென்ன?’ என்று இருந்து விட்டாள்.

மதிய உணவு உண்ணும் போது, அவன் வரவில்லை. மல்லிகா குட்டி பையனை பக்கத்தில் அமர வைத்து, தட்டில் சாப்பாட்டை போட்டுக் கொடுத்து விட, அவன் சாப்பிடாமல் வீடே அள்ளி இறைத்துக் கொண்டிருந்தான்.

பைரவிக்கு அது பிடிக்கவில்லை. வாயை திறந்து பேசினால், எதுவும் குற்றம் சொல்வார்களோ? என்று தோன்ற வாயை மூடிக் கொண்டாள்.

அறையும் குறையுமாக பைரவியை போலவே சாப்பிட்டவனை, வாயை துடைத்து வேலை செய்பவர் தூக்கி சென்று விட்டார். மல்லிகாவும் மதிய தூக்கத்திற்கு சென்று விட, சேகரன் மருமகளிடம் பேச வேண்டும் என்றார்.

“உனக்கு எது வரை தெரியும்னு தெரியல மா. இருந்தாலும் நானும் சொல்லுறேன். என் மகன் தேவா… தேவேந்திரனுக்கு கல்யாணமாகி ஒரே வருசத்துல அந்த பொண்ணு போய் சேர்ந்துட்டா.

சந்துரு கை குழந்தை. பிள்ளைய வச்சுகிட்டு ரொம்ப போராடினான்மா. அவன பார்த்துக்கவாவது இன்னொரு கல்யாணம் பண்ணிக்க சொல்லி, ரொம்ப கெஞ்சுனேன். முடியாதுனு சொல்லிட்டான். ரெண்டு வருசமா அவன் யாரு பேச்சையும் கேட்கல.

என் மக… சொல்ல கூடாது தான். நியாயம்னு ஒன்னு இருக்குல. என் மக, சந்து பையன அடிக்குறத தேவா பார்த்துட்டான். என் பையன அடிக்க நீ யாருனு கேட்டு, ஒரே வாக்குவாதம்.

அத அப்படியே பிடிச்சுட்டு, அவன கல்யாணத்துக்கு சம்மதிக்க வச்சேன். வரவ சித்தியா தான் இருப்பா வேணாம்னு அடம்பிடிச்சான். எல்லாம் பார்த்து தான் செய்வேன்னு வாக்கு கொடுத்து தான், உன்னைக் கல்யாணம் பண்ணி வச்சுருக்கேன்.

என் மகன நீ பார்க்க வேணாம்மா. அது உங்களுக்கு நடுவுல இருக்க விசயம். ஆனா, என் பேரன ஒதுக்கிடாதமா. பிறந்ததுல இருந்து அம்மானா என்னனே தெரியாம வளருறான். இது வரைக்கும் அவன் வாயில இருந்து அம்மானு ஒரு வார்த்தை வந்ததே இல்ல. நீ அவன நல்லா பார்த்துக்கனும். பார்த்துப்பியாமா?” என்று வேதனை பொங்க கேட்டவரை, பைரவி இமைக்காமல் பார்த்தாள்.

தொடரும்.

Click on a star to rate it!

Rating 4.3 / 5. Vote count: 6

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
5
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்