
சுகுமாருக்கு பவானியின் நிகழ்வில் இருந்து வெளியே வரவே, பல மாதங்கள் ஆனது. கேசவனைப் பற்றி இன்னும் முழுதாக தான் விசாரித்து இருந்தால், அவளுக்கு இப்படி ஒரு நிலைமை ஏற்பட்டிருக்காதே என்று, அடிக்கடி தன் மனைவியிடம் புலம்பிக் கொண்டே இருப்பார்.
கல்லூரிப் படிப்பை முடித்துக் கொண்டு வேலை தேடிக் கொண்டிருந்த உதயநிலாவிற்கு, அவரது வார்த்தைகள் சிந்தனையை தூண்டியது. அந்த நேரத்தில் அவள் மூளைக்குள் உதித்த ஐடியா தான், இந்த அன்றில் மேட்ரிமோனி.
உதயநிலா, சுகந்தன் மற்றும் மாலனி மூவரும் கல்லூரி நண்பர்கள். படித்துவிட்டு வேலை கிடைக்காமல் அல்லாடிக் கொண்டிருந்த நேரத்தில் தான், உதயநிலா இந்த மேட்ரிமோனியை ஆரம்பிக்கும் ஐடியாவை கொடுத்தாள்.
சாதாரணமாக ஆரம்பித்த இந்த நிறுவனம் அவர்களின் கடின உழைப்பாலும், அவர்கள் வரன் பற்றி கூறும் தகவல்களின் நம்பகத் தன்மையினாலும், மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
ஜோடிகளை சேர்த்து வைக்கும் இதே மேட்ரிமோனி தான், இன்னொரு சேவையையும் ரகசியமாக செய்து வருகிறது.
பெற்றோர்களின் கட்டாயத்தினால் தவறான துணையை ஏற்க விரும்பாத மணமகனோ மணமகளோ, தங்களது திருமணத்தை நிறுத்த விரும்பினால், அவர்களது கோரிக்கை நியாயமாக இருப்பின், பெற்றோர்களின் மனம் நோகாதபடி அன்றில் மேட்ரிமோனி, அந்த திருமணத்தை நிறுத்தும் வேலையையும் சிறப்பாகச் செய்யும்.
இந்த உதவிகளை தெரிந்தவர்களுக்கு மட்டுமே முதலில் செய்து வந்தனர். ஆனால் மணமக்களை சேர்த்து வைத்து திருமணம் செய்வதை விட, நல்ல முறையில் திருமணத்தை நிறுத்தி வைக்க அதிக ஆபர்கள் வர, ஆன்லைனில் இதற்கென்று தனியாக ஒரு வெப்சைட்டையே உருவாக்கி விட்டனர்.
தற்போது பல பெற்றோர்கள் கூட, தங்களின் பிள்ளைகள் தவறான துணையை தேர்ந்தெடுத்திருப்பதை அறிந்து, அவர்கள் வாழ்க்கை பாழாகி விடக் கூடாது என்று எண்ணி, தன் பிள்ளைகளை அவர்களிடம் இருந்து மீட்டுக் கொடுக்கக் கூட, இவர்களின் உதவியை நாடி வரத் தொடங்கி விட்டனர்.
நிலா போன் பேசி முடித்துவிட்டு உள்ளே வரும்போது, சுகந்தன் வேறு உடைக்கு மாறி இருந்தான்.
அதோடு அடுத்தடுத்து கிளைன்ட்கள் வரத் தொடங்கி விட, மாலினியும் சுகந்தனும் அதில் பிசியாகி இருந்தனர்.
அவர்களை பார்த்தபடியே தனது கேபினுக்குள் சென்றவள், அங்கு அவளுக்காக காத்திருந்த அவளது உயிர் தோழியான ரிதன்யாவை கண்டு, ஆச்சரியத்தோடும் மகிழ்ச்சியோடும் அவளை நெருங்கினாள்.
உதயநிலாவின் பள்ளித் தோழியான ரிதன்யா, ப்ளஸ் டூ வரை அவளோடு ஒன்றாகப் படித்தவள். கல்லூரி படிப்பின் போது மட்டும், ஏனோ வெளியூரில் உள்ள கல்லூரியில், வேறு துறையில் சேர்ந்து படிக்கத் தொடங்கினாள்.
அவளது குடும்பம் பரம்பரையாக நகைப்பட்டறை வைத்து நகைக் கடை நடத்தி வருபவர்கள்.
அதோடு அவள் வீட்டிற்கு ஒரே செல்வ மகள் என்பதால், ரிதன்யா படிப்பிற்காக வெளியூர் சென்றபோது, அவளது குடும்பமும் அவளோடு வேறு ஊருக்கு குடிபெயர்ந்து, அங்கேயும் தங்களது ஸ்தாபனத்தை உருவாக்கி விட்டனர்.
இவர்களது அன்றில் மேட்ரிமோனியின் ரகசிய பிசினஸுக்கு ஆரம்பப்புள்ளியே ரிதன்யா தான்.
பவானியின் இறப்பிற்கு பிறகு சுகுமாரின் உடல்நிலை சற்று மோசமாக ஆரம்பித்தது. அந்த நேரத்தில் ஆதிரனும் அப்போது தான் வெளிநாட்டு வேலைக்கு சொற்ப சம்பளத்தில் சேர்ந்திருந்தான்.
அன்றில் மேட்ரிமோனி ஆரம்பித்து அப்போது தான் சில மாதங்கள் ஆகியிருந்தது. அந்த நேரத்தில் சுகுமாரின் உடல் நிலை மிகவும் மோசமாக, அவரை மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
திடீரென்று ஏற்பட்ட இந்த பணநெருக்கடியை சமாளிக்க முடியாமல், உதயநிலா திண்டாடி விட்டாள்.
கையில் இருந்த இருப்புகள் முற்றிலுமாக கரைந்த பிறகு, இனி அடுத்து என்ன செய்வது என்று யோசித்த நேரத்தில் தான், ரிதன்யாவிடம் இருந்து திருமண அழைப்பு வந்தது.
அவளது தந்தையினுடைய உடல்நிலை பற்றி விசாரித்தவள், தன் தோழியின் பேச்சிலேயே அவளுடைய தற்போதைய நிலைமையை நன்கு புரிந்து கொண்டாள். உடனே தனது சேமிப்பிலிருந்து அவளுக்கு உதவுவதாக கூற, வேண்டாம் என்று மறுத்து தயங்கிய உதயநிலாவிடம், இதை கடனாக வைத்துக் கொள்ளுமாறு கூறினாள்.
தற்போதைக்கு தன் தோழியிடம் வேண்டிய கடனை பெற்றுக் கொண்டு, திருப்பி செலுத்தி கொள்ளலாம் என்று முடிவுக்கு வந்தாள் உதயநிலா.
ரிதன்யாவின் திருமணத்திற்கு உற்சாகமாகவே கிளம்பினாள். அங்கு சென்றதும் வெகு நாட்கள் கழித்து சந்தித்த தன் தோழியை, சந்தோஷமாக கட்டிக் கொண்டாள் உதயநிலா.
ஆனால் அவளது காதில் ஒருவித பதட்டத்தோடு பேசிய ரிதன்யா, அவளிடம் தனியாக பேச வேண்டும் என்று கூற, தோழியின் குரலில் இருந்தே ஏதோ பிரச்சனை என்று புரிந்து கொண்ட உதயநிலா, ரிதன்யாவோடு தான் துணையாக இருப்பதாக கூறி, அனைவரையும் உணவருந்த அனுப்பி வைத்தாள்.
அவர்கள் சென்ற அடுத்த நொடியே கதவை தாழிட்டவளிடம், தன் மனதில் உள்ளதை அவசரமாக கொட்டத் தொடங்கினாள் ரிதன்யா.
மாப்பிள்ளை நல்லவர் என்று நினைத்து இந்த திருமணத்திற்கு ஒத்துக் கொண்டதாகவும், இரண்டு நாட்களுக்கு முன்பு தான் அவரது சுயரூபம், அவருடைய நெருங்கிய சொந்தம் மூலமாக, தனக்கு தெரிய வந்ததாகவும் கூறினாள்.
மாப்பிள்ளையின் நடத்தை சரியில்லை என்று எடுத்து கூறிய பிறகும், மாப்பிள்ளை வீட்டார் கிராமத்தில் கௌரவமான குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறி, தனது பெற்றோர்கள் அதை ஏற்க மறுப்பதாகவும், இந்த திருமணம் நடக்கவில்லை என்றால், தாங்கள் உயிரை மாய்த்துக் கொள்வோம் என்று மிரட்டுவதாகவும் கூறி, தன் தோழியின் தோளில் சாய்ந்து அழுதாள் ரிதன்யா.
இதை எப்படியாவது தடுத்து நிறுத்தி, இந்த இக்கட்டில் இருந்து தன்னை காப்பாற்றுமாறு கதறி அழுதவளை தேற்றி, மாப்பிள்ளையின் உறவினர்களின் உதவியோடு அவனது சுயரூபத்தை வெளிபடுத்தி, அந்த திருமணத்தையே நிறுத்தி இருந்தாள் நிலா.
அன்று ஆரம்பித்தது தான் இந்த ரகசிய தொழில். ஆனால் ஒருமுறைக்கு இருமுறை விசாரித்த பிறகு தான், திருமணமத்தை நிறுத்துவதற்கு தேவையான வேலைகளை, தொடங்குவார்கள்.
தன் அத்தையை போலவும், அத்தை பெண் பவானியை போலவும் இனி ஒருவர் கூட பாதிக்கப்பட்டு விடக் கூடாது என்று காரணத்திற்காகவே, இந்த வேலையை தன் நண்பர்களின் துணையோடு செய்ய தொடங்கினால் உதயநிலா.
ஓடிச் சென்று ரிதன்யாவை கட்டிக் கொண்டவள்,
“தன்யா வாட் எ சப்ரைஸ்?…நெக்ஸ்ட் மன்த் நடக்க போற என் நிச்சியதார்த்தத்துக்கு உன்னை இன்வெயிட் பண்ணினப்ப கூட, கம்பெனில லீவே விட மாட்டேங்கறாங்கனு புலம்புன, இப்போ இப்படி திடீர்னு வந்து நின்னு எனக்கு சப்ரைஸ் எல்லாம் கொடுக்கறயே டா?”
“என்னோட பெஸ்ட் ப்ரெண்ட் நிச்சியத்துக்கு நான் வராம போவேனா? இப்படி சப்ரைசா வந்ததால தானே, உன் முகத்துல இவ்வளவு அழகான சிரிப்பைப் பார்க்க முடிஞ்சது.”
சற்று நேர குடும்பநல விசாரிப்புகளுக்கு பிறகு, நிலாவே ஆரம்பித்தாள்.
“சரி சொல்லு என்ன விஷயம்? நீ எனக்கு சப்ரைஸ் குடுக்க மட்டும் நினைச்சிருந்தா கண்டிப்பா நீ வீட்டுக்கு தான் வந்திருப்ப, நீ ஆபீஸ்க்கு வந்ததுல இருந்தே என்னால புரிஞ்சுக்க முடியாது, என்னதான் சிரிச்சு பேசிகிட்டு இருந்தாலும், உன் முகத்துல ஏதோ ஒரு வாட்டம், அதோட ஒரு கேள்வி தொக்கி நிக்கிதே, ஏதாவது பிரச்சனையா? மறுபடியும் உங்கப்பா அதே போல ஒரு கிராமத்து மாப்பிள்ளையை பார்த்துட்டாரா என்ன?”
“இல்லடா அவங்க அன்னைக்கு நடந்த இன்சிடென்ட்க்கு அப்பறம், இனி நீ பார்த்து முடிவு பண்ற மாப்பிள்ளையையே நாங்க ஏத்துப்போம்னு சொல்லிட்டாங்க. அதனால இப்போதைக்கு நான் ப்ரீ தான்.
நான் உன்னை இங்க பார்க்க வந்ததே ஒரு முக்கியமான விஷயத்துக்காகத் தான். என்னோட ஃபேமிலி பிரண்டு ஒருத்தர் இருக்காரு, அவருக்கு உன்னோட ஹெல்ப் தேவைப்படுது.
அவரால நேரடியா இங்க வந்து உன்னை மீட் பண்ண முடியாது, ஏன்னா அவர் இங்க வர்றது தெரிஞ்சா, அதைப் பத்தி பத்திரிக்கைல ஹாட் நியூஸ்ஸா எழுத ஆரம்பிச்சுடுவாங்க.”
“அப்படியா?…அவ்ளோ பெரிய அப்பாடக்கரோட பெயர் என்னவோ?”
“ஈஸ்வர் குரூப் ஆஃப் கம்பெனிஸ்ஸோட ஒன் அண்ட் ஒன்லி வாரிசு மிஸ்டர் ஈஸ்வர்.”
“ வாட்…ஈஸ்வர் குரூப்ஸ்…”
கண்களை அகலமாக விரித்த நிலாவின் கண்களில், அதிர்ச்சி கலந்த ஒருவித ஆச்சரியம்.
“என்னப்பா சொல்ற? அவர் என்னை பார்க்கணும்னு சொன்னாரா? அவரோட முகத்தை மீடியாவும் மக்களும் எப்படியாவது பார்த்தாகணும்னு, சல்லடை போட்டு தேடிகிட்டு இருக்காங்க, அப்படிப்பட்டவர் எனக்கு தரிசனம் கொடுக்க போறாரா?”
“ஆமா உதய், ஆனா இந்த விஷயம் சீக்ரெட்டா இருக்கணும்னுங்கறது தான் அவரோட ரெக்வெஸ்ட்.
அது ஏன்னு உனக்கே தெரியும், அதோட உன் கூட வேலை பார்க்கறவங்களுக்கு கூட இது பத்தி தெரியக் கூடாது.”
“பட் தன்யா,…அவங்களுக்கு தெரியாம என்னால எதையும் பண்ண முடியாதே. ஏன்னா இதுல அவங்களும் ஒன் ஆப் த பார்ட்னர்.
அதோட இங்க ஒரு வேலை நடக்கணும்னா அவங்களோட ஒத்துழைப்பும் இதுல தேவைப்படும்,சோ…”
“உதய் ப்ளீஸ் எனக்காக…, அவரு ஒரு ரெக்வஸ்ட்டா இதை கேட்டிருக்காரு, இது சின்னதா வெளியே தெரிஞ்சா கூட, அதை பெருசு பண்ணி பக்கம் பக்கமா எழுத ஆரம்பிச்சுடுவாங்க.”
“ம்ம்ம்… ஓகே முதல்ல அவரை மீட் பண்ணி என்ன வொர்க்னு பார்க்கறேன். ஆனா அதுல என் ப்ரெண்ட்ஸ் உதவி தேவைப்பட்டா, அவங்க கிட்ட இதை பத்தி சொல்லி தான் ஆகனும். சரி எப்போ அவரை பார்க்க போகனும்?”
“நாளைக்கு மார்னிங் செவன்னோ க்ளாக், முடிஞ்ச அளவுக்கு நானும் வர ட்ரை பண்றேன், இல்லாட்டி அட்ரஸ்ஸை உனக்கு மெசேஜ் பண்ணி விடறேன்.”
“ஓகே.”
அவசரமாக கிளம்பி கொண்டிருந்த நிலாவை நிறுத்தி, சாப்பிட்டு விட்டுச் செல்லுமாறு, அவள் அன்னை திட்டிக் கொண்டிருக்க,
“முக்கியமான வேலைம்மா, நான் ஆபீஸ்ல போய் சாப்பிட்டுகிறேன்.”
“சாப்பாட்டை கூட அலட்சியப்படுத்திட்டு போற அளவுக்கு, அப்படி என்ன ம்மா முக்கியமான வேலை?”
“அது ப்பா…ஆபீஸ்ல இன்னைக்கு ஒரு முக்கியமான மீட்டிங் இருக்கு, கண்டிப்பா நான் அங்க இருந்தாகனும்.”
தனது ஸ்கூட்டியை உயிர்ப்பித்தவள், தன்யா அனுப்பிய அட்ரஸுக்கு அதை விரட்டினாள்.
அதே நேரத்தில் ஒரு கிளையண்ட் பற்றி விவரம் தேவைப்பட மாலினி, நிலா எப்படியும் வீட்டில் தான் இருப்பாள் என்று எண்ணி, அவளது வீட்டு லேண்ட் லைனுக்கு அழைத்திருந்தாள்.
போனை எடுத்த காஞ்சனா மாலினி பேசுவதை அறிந்து,
“நல்லாருக்கியா மாலினி. “
“நான் நல்லா இருக்கேன் ம்மா அப்பா நல்லா இருக்காரா? நீங்க எப்படி இருக்கீங்க?”
“இப்படி போன்லயே கேக்கறதுக்கு பதிலா நீ தான் நேர்ல வந்து கேக்கலாம்ல, அப்படியே நான் உனக்கு வாய்க்கு ருசியா சமைச்சு போட்ட மாதிரியும் இருக்கும்.
காலேஜ் படிக்கும் போது அடிக்கடி வருவீங்க, இப்போ ஒரே ஆபிஸ் தான் ஒர்க் பண்றீங்க, ஆனா வர்றதுக்கு முடிய மாட்டேங்குது இல்லையா?”
“அப்படியெல்லாம் இல்லம்மா கொஞ்சம் வொர்க் அவ்ளோ தான், கண்டிப்பா இந்த வாரம் வரோம், உங்களோட சமையலை தான் நான் ரொம்பவே மிஸ் பண்றேன்.
சரிம்மா நிலா கிட்ட போனை குடுங்களேன், எப்படியும் எழுந்துருக்க மாட்டா, தலைல தண்ணியை கொட்டி எழுப்பி விடுங்க.”
“அவ எங்க இங்கிருக்கா ஏதோ ஆபீஸ்ல முக்கியமான மீட்டிங்ன்னு சொல்லி நேரத்திலேயே கிளம்பிட்டாளே, இன்னும் அங்க வந்து சேரலையா?”
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


யாருக்கும் தெரியாம போய் யார் கிட்ட மாட்ட போறாளோ நிலா …
நம்ம ஹீரோயின் கிட்ட மாட்டற ஜீவன் தான் கவலை படனும் சிஸ். 🤣
Heroine pathi ningale ipati sollalama sis😌
ரொம்ப நல்லவன்னு ஒரு வார்த்தை சொன்ன சிஸ் அவ்வளவு தான் 🙂🙂😉