
ஆபீஸில் தலையை பிடித்தபடி அமர்ந்திருந்தான் விஷ்வா. காலையில் மருத்துவர் சொன்ன வார்த்தைகளே அவனது மூளைக்குள் மீண்டும் மீண்டும் எதிரொலித்துக் கொண்டிருந்தது.
கீதா சொன்னபடி சிவகாமி அம்மாவிற்கு, பாடி டெம்பரேச்சரை குறைக்கக் கூடிய மருந்து தான் கொடுக்கப் பட்டிருந்தது. அதுவும் அவரது உணவு மூலமாக என்று ஆதாரத்தோடு அவர் கூற, சற்று அதிர்ந்து தான் போனான் விஷ்வா. அவன் நிலா தான் ஸ்ப்ரே போன்று எதையாவது உபயோகித்து, தனது அன்னைக்கு ஆபத்தை ஏற்படுத்தி இருப்பாள் என்று நினைத்துக் கொண்டிருந்தான். ஆனால் டாக்டர் கூறுவதை வைத்துப் பார்க்கும் போது, தன் சொந்த வீட்டிலேயே தனது அன்னையை கொல்ல முயற்சி நடந்திருக்கிறது. அதுவும் குடும்ப உறுப்பினர்கள் மத்தியில், அப்படி என்றால்… அவன் மூளை வேகமாக யோசிக்க, தலை பாரமானது. இன்னொரு மனதோ இல்லை இது நிச்சயமாக அவள் வேலையாகத் தான் இருக்கும் என்று அடித்துச் சொன்னது.
அதே யோசனையில் தனது அன்னையை காண சென்றவன், அங்கு நிறைந்திருந்த தனது குடும்ப உறுப்பினர்களை கண்டு அப்படியே நின்று விட்டான். இவர்களில் ஊடுருவி இருக்கும் அந்த புல்லுருவி யாராக இருக்கும்? தனது அன்னையின் உயிரையே எடுக்க துணிந்து இருக்கிறார்கள் என்றால் அப்படி என்ன வன்மம் அவர்களுக்கு இருக்க போகிறது? என்று மீண்டும் அவனுக்குள் அதே போராட்டம், ஆனால் மனதோ தனது உறவுகளை சந்தேகிக்க மறுத்து, நிலாவின் மீது தான் குற்றம் சுமத்தியது.
வீட்டுப் பெண்கள் அனைவரும் சிவகாமி அம்மாவை சுற்றி நின்று கொண்டு, நடந்த விபரங்களை செல்லம்மாவிடம் இருந்து கேட்டு தெரிந்து கொண்டிருக்க, நிலா பார்வையாளராக அதை கவனித்துக் கொண்டிருந்தாள். விஷ்வாவை கண்டதும் ஈஸ்வர் தாத்தா சூர்யாவை நோக்கி,
” யப்பா சூர்யா சிவகாமிக்கு எதுவும் பெருசா பிரச்சினை இல்லையே? வேற எதுவும் பெரிய ஆஸ்பத்திரிக்கு மருமகளை கூட்டிட்டு போகலாமான்னு கேளு? கம்பீரமா இருந்த எங்க குலசாமிப்பா அவ, அழிவை நோக்கி போன குடும்பத்தை தூக்கி நிறுத்தி, குடும்ப மரியாதையை மீட்டு கொண்டு வந்தவள, இப்படி படுக்கையில அதுவும் பேச்சு மூச்சு இல்லாம பார்க்க பார்க்க நெஞ்சு பொறுக்கல.”
என்று சாதாரணமாக பேச ஆரம்பித்தவர் தழுதழுத்த குரலில் கண்ணீரோடு முடிக்க, விஷ்வாவிற்கே மனது பொறுக்கவில்லை.
“என்ன மாமா நீங்க எல்லாருக்கும் தைரியம் சொல்ல வேண்டிய நீங்களே இப்படி உடைஞ்சு போய் பேசினா எப்படி? அக்காவுக்கு ஒன்னும் ஆகாது. கவனிச்சீங்களா அக்கா சரியா திருவிழா சமயத்துல திரும்ப நம்ம வீட்டுக்கே வந்துட்டாங்க. அந்த அம்மன் அருளால சீக்கிரமாவே அவங்க உடல்நிலை சரியாகிடும். என்ன புது பொண்ணு மாப்பிள்ளையை ஆசிர்வாதம் வாங்கறதுக்காக, கோவிலுக்கு கூட்டிட்டு போகலாமுன்னு இருந்தோம், ஆனா இன்னைக்கு முடியாது போல.”
சட்டென்று விஷ்வாவின் மூளைக்குள் ஒரு கேள்வி, ஒருவேளை என்னோடு கோவிலுக்குச் செல்ல விரும்பாத நிலா தான், அவளது பெற்றோர்களை நான் வேதனை படுத்தியதற்கு பழிவாங்கும் விதமாக, இப்படி தனது அன்னைக்கு பாதிப்பை ஏற்படுத்தி விட்டாளா?
சட்டென்று நிலாவை நோக்கி திரும்பியவனின் பார்வை கூர்மையாக, அந்த பார்வையில் அவளது முதுகுத் தண்டு சில்லிட்டது.
“ஆத்தி இப்ப தான் கொஞ்ச நேரம் முன்ன என்னை எமலோக வாசல் வரைக்கும் கூட்டிட்டு போயிட்டு வந்தாரு, இந்த அம்மா பேசியே என்னை திரும்பவும் மேலோகத்துக்கு அனுப்பிடும் போலயே, இப்ப எதுக்கு என்னை இப்படி பார்க்கறாருன்னு தெரியலையே? இவரு மண்டைக்குள்ள சத்தியமா என்னை பத்தி, நல்லவிதமான எண்ணம் மட்டும் தோணவே இல்லைன்னு நிச்சயமா தெரியுது.”
என்று மனதில் நினைத்தவளோ,
“சரி தான் சின்னத்தை, அத்தைக்கு உடம்பு சரியானதும் அவங்களையும் கூட்டிகிட்டே எல்லாரும் சேர்ந்து கோவிலுக்கு போகலாம்.”
“அவசியம் இல்லை சித்தி, அம்மா நல்லா தான் இருக்காங்க. இது அவங்களுக்கு எப்பவும் வர்றது தான், இரண்டு நாள் ஹாஸ்பிட்டல்ல ரெஸ்ட் எடுத்தா எல்லாம் சரியா போயிடும், அதுக்காக எதுக்கு ப்ளானை சேஜ் பண்ணணும்? சித்தி நாங்க எத்தனை மணிக்கு கோவில் போகனும்?”
அவனது பதில் குடும்ப உறுப்பினர்களுக்கு உற்சாகத்தை கொடுக்க, செல்லம்மா மற்றும் கீதாவிற்கு நிலாவை போலவே அதிர்ச்சியாகத் தான் இருந்தது.
“ரொம்ப சந்தோஷம் தம்பி, உச்சிகால பூஜைக்கு விஷேசமா ஏற்பாடு பண்ணி இருக்கு, அதோட உங்களை ஆசிர்வாதம் பண்ண ஊர் பெரியவர்களுக்கு அழைப்பு விடுத்திருக்கோம். எங்க முடியாம போயிடுமோன்னு நினைச்சேன், எல்லாம் அந்த அம்மனோட அருள் தான்.”
“சரி சித்தி நான் ஆபீஸ் போயிட்டு மதியம் வீட்டுக்கு வந்திடறேன், அம்மாவை இரண்டு நாட்கள் டாக்டர்ஸ் அவங்க அப்ஷர்வேசன்ல, ஸ்பெஷல் வார்டுல வச்சு கவனிச்சுக்கப் போறதா சொன்னாங்க. சோ இவ்வளவு பேர் இங்க இருக்க தேவை இல்லை, செல்லம்மாவும் கீதா சிஸ்டரும் மட்டும் இங்க இருந்தா போதும்.”
அவன் இந்த அளவுக்கு தங்களிடம் இணக்கமாக பேசியதே பெரிது என்று உணர்ந்து கொண்டவர்கள் அங்கிருந்து கிளம்பி விட, தேவகி ராஜி மட்டும் நிலாவோடு சற்று நேரம் கழித்து செல்வதாகக் கூறினர்.
செல்லம்மாவிடம் சென்ற விஷ்வா, அவருக்கு மட்டும் கேட்கும் படி, அவன் அன்னையை பத்திரமாக பார்த்துக் கொள்ளுமாறு கூறிவிட்டு, நிலாவை ஒரு பார்வை பார்த்தான்.
அந்த பரிதவிக்கும் விழிகளில் மூழ்க இருந்த தன்னை மீட்டுக் கொண்டு, அங்கிருந்து வெளியேறி விட்டான்.
அங்கிருந்து செல்வதற்கு முன்பு மருத்துவரை சந்தித்து சிவகாமியின் பாதுகாப்பை உறுதி செய்ய, அவரை இரண்டு நாட்களும் ஸ்பெஷல் வார்டில் வைத்திருக்க அனுமதி வேண்டினான். அவரும் சிவகாமிக்கு இருக்கும் ஆபத்தையும் அவரது உடல் நிலையையும் கருத்தில் கொண்டு அவனுக்கு அனுமதி கொடுக்க, ஸ்பெஷல் வார்டில் தனது அன்னையை மாற்றிய பிறகு தான் அலுவலகம் வந்து சேர்ந்தான்.
செல்லம்மாவின் மூலம் நடந்ததை அறிந்து கொண்ட சூர்யா, விஷ்வாவை காண அவன் அலுவலகத்திற்கே வந்து விட்டான். அவனது அறைக்குள் நுழைந்தவன்,
” விஷ்வா நடந்த உண்மையை தாத்தாகிட்ட சொல்லி இருக்கலாமே டா? ஏன் அதை பத்தி நீ சொல்லவே இல்ல? அத்தையோட உயிருக்கே ஆபத்து வந்திருக்கு, ஆனா நீ எதுவுமே நடக்காதது போல… ஏன்டா இப்படி பண்ண?”
” என்ன சொல்ல சொல்ற டா? அம்மா எப்ப எந்திரிச்சு முன்ன மாதிரி நடப்பாங்கன்னு காத்துக்கிட்டு இருக்க குடும்பத்துகிட்ட, இல்ல நேத்து இந்த வீட்ல தான் என் அம்மாவை கொலை செய்ய, முயற்சி நடந்திருக்குன்னு சொல்ல சொல்றியா? இதைக் கேட்டா எல்லாரும் உடைஞ்சு போய்ட மாட்டாங்களா டா?”
“அதுக்காக? சிவகாமி அத்தையை கொல்ல நினைச்சவங்க இந்த வீட்டுக்குள்ள தான் டா இருக்காங்க? அது யாரு என்னன்னு கண்டுபிடிக்க வேண்டாமா? அவங்களுக்கு சரியான தண்டனையை கொடுக்க வேண்டாமா?”
“அதுதான் ஓரளவுக்கு கண்டுபிடிச்சாச்சே, அது கன்பாம் மட்டும் ஆகட்டும், இனி அவளுக்கான தண்டனையை நான் கொடுக்கிறேன்.”
கண்களில் கனலோடு விஷ்வா கூறிட,
“விஷ்வா உன்னோட ஒப்பினியன் தப்போன்னு எனக்கு தோணுது, எப்பவுமே நீ ஒரு முறைக்கு இரண்டு முறை விசாரிச்சுட்டு, நல்லா ஆராய்ந்து தான் முடிவு செய்வ. ஆனா நிலா விஷயத்துல இப்படி எடுத்த எடுப்புலயே அவ தான் குற்றவாளின்னு சொல்றதை என்னால ஏத்துக்க முடியல டா.”
“ஓ அப்போ மேடம் பத்திரமாத்து தங்கமுன்னு சொல்ல வர்றியா? பொய் புளுகு எதுவுமே அவங்க வாயில வராது இல்லையா? அவங்க நல்லது மட்டும்தான் செய்வாங்க இல்லையா?”
” விஷ்வா அது…”
“என்ன அது? நீ அப்பவே சரியா தான் டா சொன்ன, ஊர்ல இருந்து கிளம்பும்போதே சொன்னியே, எப்படி இங்க வந்து அவ எனக்கேத்த மாதிரி நடிப்பா? இங்க வந்து எதாவது பிரச்சினை பண்ணா என்ன செய்வன்னு கேட்டியே? நீ சொன்னது சரிதான் நான் தான் வெளுத்தது எல்லாம் பாலுன்னு நினைச்சுட்டேன்.
இப்போ நான் எப்படி அவங்க அப்பா அம்மாவ கஷ்டப்படுத்தினேனோ, அதே போல என் அம்மாவோட உடல்நிலை பாதிக்கப்படற மாதிரி, இப்படி ஒரு வேலையை பார்த்து வைச்சிருக்கா.
வேற யாருமே அந்த ரூமுக்குள்ள போகல அவ தான் கடைசியா அங்க போயிருக்கா. அப்போ நான் யாரு மேல சந்தேகப்படட்டும்.”
“இல்ல விஷ்வா கீதா சிஸ்டர் சொன்னாங்க, மேக்சிமம் அது ஃபுட் மூலமா போயிருக்கலாமுன்னு. நிலாவும் ஒரு தடவை என்கிட்ட சொல்லி இருக்கா, நம்ம வீட்லயே நம்ம கண்ணுக்கு தெரியாத எதிரி இருக்காங்கன்னு. ஒருவேளை அது நம்ம வீட்டிலேயே ஒருத்தரா இருந்தா?”
விஷ்வா புருவ முடிச்சோடு சூர்யாவை ஏறிட,
“அன்னைக்கு செல்போன் கொடுக்க நிலா ரூமுக்கு போனப்ப அவகிட்ட பேசினேன்டா.”
என்று அன்று அவள் தன்னோடு பகிர்ந்து கொண்ட அத்தனை தகவல் மற்றும் கேள்விகளையும் விஷ்வாவிடம் கூறி முடித்த சூர்யா,
” எனக்கு என்னவோ நம்ம வீட்ல யாரோ ஒருத்தர் தான், இந்த கல்யாணத்தை நிறுத்த ட்ரை பண்ணி இருக்காங்கன்னு தோணுது. இப்போ அவங்களே தான் நீங்க வீட்டுக்கு திரும்பி வந்ததை தாங்கிக்க முடியாம, சிவகாமி அத்தையோட உயிருக்கு பாதிப்பு வர வைச்சிருக்காங்க.”
“பைத்தியமா உனக்கு எங்கிருந்தோ வந்த ஒருத்திக்காக, நம்ம வீட்ல நம்ம குடும்பத்துல இருக்கிறவங்க மேல சந்தேகப்படுவியா நீ?”
“அந்த பொண்ணு கேட்டது எல்லாமே சரியான கேள்வி தானே டா? யாரோ ஒரு பொண்ணுக்கு நம்ம பரம்பரை ஆசாரி எப்படி? உன்னோட பரம்பரை சங்கிலியை கொடுத்திருப்பார்? அதோட உன்னோட அத்தை பொண்ணுன்னு சொல்லிட்டு வந்த ஒரு பொண்ணு தான், இத்தனை நாடகத்தை நடத்தி இருக்கு. அந்த பொண்ணு யாருன்னு மட்டும் தெரிஞ்சா, நம்ம வீட்ல இருந்து யார் இந்த காரியத்தை எல்லாம் செய்யறாங்கன்னு தெரிய வந்துரும்.”
“அவ சொல்றதெல்லாம் உண்மை தான்னு நீ நம்பறியா? அவ வாயை திறந்தாலே அடுக்கடுக்கா நம்பற மாதிரி கதை மட்டும் தான் வரும், அவ நல்லவ தான் ஆனா அவளை சேர்ந்தவங்களுக்கு மட்டும். அதுவே அவளுக்கு வேண்டியவங்களுக்கு ஏதாவது பிரச்சனைனா, கண்ண மூடிட்டு யாரையும் ஏன் எதை பத்தியும் நினைக்காம அவங்களுக்கு பேவரா என்ன வேணாலும் பண்ணவா. என்னை பொறுத்த வரைக்கும் அவ சொல்லிட்டு இருக்க, என் அத்தை பொண்ணுன்னு சொல்லிட்டு ஒருத்தி வந்ததா சொன்னதே பொய்யா தான் இருக்கும்.”
இங்கு விஷ்வா இப்படி சொல்லிக் கொண்டிருக்க, அவன் யாரை பொய் என்று சொல்லிக் கொண்டிருக்கிறானோ, அவளது புகைப்படத்தை கைகளில் பிடித்துக் கொண்டு கண்களில் அதிர்ச்சியோடு, அன்று ஆற்றங்கரையில் தனது காலில் விழுந்து கதறிய உருவத்தை விழி அகலாது பார்த்துக் கொண்டிருந்தாள் நிலா.

