Loading

அத்தியாயம் 3

 

   “ நகையா… இப்ப எதுக்கும்மா தேவையில்லாத செலவு, இப்போதைக்கு எனக்கு கல்யாணம் வேணான்னு சொன்னா கேட்கவே மாட்டேங்கறீங்க. 

 

   அப்பாவோட பாடி கண்டிஷன் இருக்கிற நிலைமைக்கு, அவரோட ஆபரேஷன் தான் இப்ப ரொம்ப முக்கியம். ஆதிரன் அத்தான் இருக்கற வெளிநாட்டுல எப்படியோ நமக்கு விசா கிடைச்சிருக்கு, முதல்ல அங்க போய் அப்பாவுக்கு ட்ரீட்மென்ட் முடிச்சிட்டு வந்து, அவருக்கு முழுசா குணமான பிறகு, என் கல்யாணத்தை வெச்சுக்கலாம்னு சொன்னாலும் கேட்க மாட்டேங்கறீங்க. 

 

   இங்க நிச்சயம் பண்ணிட்டு, அங்க போய் கல்யாணத்தை முடிச்சிட்டு தான் ட்ரீட்மென்ட் எடுத்துப்பேன்னு, அப்பாவும் முடிவா சொல்லிட்டார்.

 

  எப்படியும் இந்த கல்யாணம்  வெளிநாட்டுல தானே நடக்கப் போகுது, அதோட நம்ம வீட்ல நம்மளோட இருந்த அத்தான் தானே மாப்பிள்ளை, அதுக்காக எதுக்கு தனியா நகை எடுத்து காசை வேஸ்ட் பண்ணனும்? வீட்ல இருக்கறது போதாதா? 

 

நகை எடுக்கற காசை பத்திரமா வெச்சா, அப்பாவோட ஆபரேஷனுக்கு அப்புறம், வேற ஏதாவது செலவுக்கு யூஸ் ஆகும் இல்லையா?”

 

“இல்லம்மா தன் தங்கை பெண்ணான பவானிக்கே, உங்க அப்பா அவ்வளவு நகை போட்டு, தடபுடலா கல்யாணம் செஞ்சு வைச்சார், உனக்கும் அப்படி செஞ்சு பார்க்கணும்னு அப்பாவுக்கு ரொம்ப ஆசை. 

 

ஆனா எங்க, நீயும் மாப்பிள்ளையும்  தான் அப்படி எதுவும் பண்ண வேண்டாம்னு சொல்லிட்டீங்களே, எங்க மனதிருப்திக்கு நகையாவாவது வாங்கி போட்டு, உன்னை அழகு பார்க்கலாம்னு நினைக்கிறோம்.”

 

   “இதை பத்தி அத்தான்கிட்ட பேசிடாதீங்க ஏதாவது திட்டிட போறாரு. அவ்வளவு ஆடம்பரமா செஞ்சு வச்ச பவானி அக்காவோட கல்யாண வாழ்க்கை, என்ன ஆச்சுன்னு ஞாபகம் இல்லையா என்ன?”

 

   காஞ்சனா சட்டென்று மௌனம் ஆகிவிட, அவர் மனதில் ஓடும் எண்ணங்களை புரிந்து கொண்ட நிலா, 

 

“ சரி ம்மா, ஆனா பவானி அக்காக்கு எடுத்த மாதிரி ஃபுல் செட் எல்லாம் எடுக்க வேண்டாம், உங்களுக்காக ஒரே ஒரு நகை மட்டும் எடுத்துக்கறேன். அதுக்கு  நீங்க சரின்னு சொன்னா மட்டும் தான் நான் வருவேன்.”

 

அவருக்கு இவள் வர சம்மதித்ததே பெரியது என்று தோன்றிட, சரி என்று கூறி, உடனே போனை வைத்து விட்டார். 

 

  “என்னாச்சு காஞ்சனா? பாப்பா நேரா அங்க வந்துடறேன்னு சொல்லிட்டாளா?”

 

   “வரேன்னு சொல்லி இருக்காங்க, ஆனா ஒரே ஒரு நகை மட்டும் தான் எடுத்துப்பேன்னு சொல்லறா, நீங்க வருத்தப்படாதீங்க. அது தான் அவ கல்யாணத்துக்குன்னு, நாம சேர்த்து வைச்சிருக்க நகை வீட்ல இருக்கே, அது கூட இதையும் போடறது போல எடுத்துக்கலாம்.”

 

   ஹாஸ்பிடல் வராண்டாவில் தனது கணவரின் கைகளை பிடித்தபடி ஆட்டோவிற்கு தன் மொபைலில் இருந்து அழைத்துக் கொண்டிருந்தார் காஞ்சனா.

 

  எதிரே வந்த ஒரு ஆள் அவரை இடித்து விட்டுச் செல்ல, தடுமாறி கீழே விழப் போனவர்களை ஒரு வலிமையான கை தாங்கிப் பிடித்து நிற்க வைத்தது. 

 

   “ ஐயோ பார்த்து… சார் உங்களுக்கு எதுவும் அடிபடலையே?”

 

கீழே விழ நேர்ந்ததால் சட்டென்று பதட்டமானர் சுகுமார். அதை குறைத்துக் கொள்வதற்காக அருகில் இருந்த சேரில் மெதுவாக அமர்ந்தார். 

 

காஞ்சனாவிற்கு படபடப்பு இன்னும் குறையவில்லை. இப்போது தான்  இவருக்கு உடல்நிலை தேறி வருகிறது, இந்நிலையில் கீழே விழுந்திருந்தால் என்னவாகி இருக்கும்? 

 

   இருவரையும் அமர வைத்து, அவர்களுக்கு தன்னிடம் இருந்த நீரை புகட்டினான் விஷ்வா. 

 

  “இப்போ உங்களுக்கு பரவாயில்லையா? எங்கையாவது அடிபட்டு இருந்துச்சுன்னா சொல்லுங்க டாக்டரை பார்க்கலாம்.”

 

  “அதெல்லாம் எதுவும் இல்ல தம்பி, ஆட்டோ நம்பரை போன்ல தேடிட்டு இருந்தேன், அதுக்குள்ள இப்படி ஆகிடுச்சு. நல்ல நேரத்துல எங்களை பிடிச்சீங்க, இல்லாட்டி இந்நேரம் கீழே விழுந்து உருண்டிருப்போம்.”

 

“உங்களோட துணைக்கு யாரையாவது  கூட்டிட்டு வந்திருக்கலாமே?  உங்களுக்கும் உடம்பு சரியில்லாத மாதிரி தெரியுது, இந்த நிலையில  இவரையும் பிடிச்சிட்டு தனியா வந்திருக்கீங்க?”

 

“இல்லப்பா என் பொண்ணு எப்பவுமே கூட வருவா, இது ஜெனரல் செக்கப் தான் நாங்களே பார்த்துக்கறோம்னு சொல்லிட்டு வந்தோம், அதுவும் சர்டிபிகேட் வாங்குறதுக்காக மட்டும் தான் வந்திருந்தோம். 

 

   திடீர்னு அந்த ஆள் இடிச்சிட்டு போகவும் கொஞ்சம் தடுமாறிட்டேன்.”

 

“சரி நீங்க எங்க போகணும்னு சொல்லுங்க நான் இப்ப வெளிய தான் கிளம்பறேன், உங்களை வீட்ல விட்டுட்டு அப்படியே நான் போறேன்.”

 

“இல்ல தம்பி நீ இதுவரைக்கும் பண்ண உதவியே போதும்.”

 

  “அட என்னக்கா இப்படி என்னை வார்த்தைக்கு வார்த்தை உரிமையா தம்பின்னு கூப்பிடறீங்க, என்னை நம்பி என்னோட வர மாட்டீங்களா? 

 

   ஒருவேளை என் அக்காவுக்கோ மாமாவுக்கோ, இந்த மாதிரி ஆகியிருந்தா இப்படித் தான் விட்டுட்டு போவேனா என்ன? வாங்கக்கா உங்களை வீட்ல இறக்கி விட்டுட்டு போறேன்.”

 

காரில் சென்று கொண்டிருக்கும் போதே, அந்த இளைஞனை பற்றி முழுவதுமாக பேசி தெரிந்து கொண்டார் காஞ்சனா. அவனது அன்னைக்கு  உடல்நிலை சரியில்லாத காரணத்தினால், இந்த மருத்துவமனையில் அட்மிட் செய்திருப்பதாகவும், அவரை பார்ப்பதற்காக வந்திருந்ததாகவும் கூறினான். 

 

அவருக்கு அங்கே ஏதோ ட்ரீட்மெண்ட் நடந்து கொண்டிருப்பதால், அவ்வப்போது வந்து பார்த்துவிட்டு செல்வதாகவும் கூறினான். 

 

   “வீட்டுக்குள்ள வந்து காபி சாப்பிட்டு போங்க தம்பி.”

 

“இல்லக்கா ஏற்கனவே லேட் ஆயிடுச்சு, ஆபீஸ்க்கு போகணும் ஒரு மீட்டிங் வேற இருக்கு, இன்னொரு நாள் கண்டிப்பா வரேன். ஆனா நீங்க மறுபடியும் துணைக்கு ஆள் இல்லாம, சாரை இப்படி வெளிய கூட்டிட்டு போகக் கூடாது. புரிஞ்சுதா?”

 

“சரி தம்பி,  நீயும் கண்டிப்பா இன்னொரு நாள் எங்க வீட்டுக்கு  வரணும்.”

 

  தலையை ஆட்டிவிட்டு புன்னகையோடு அங்கிருந்து நகர்ந்திருந்தான் விஷ்வா. 

 

  உதயநிலா, சுகுமார் மற்றும் காஞ்சனாவின் ஒரே செல்ல மகள். சுகுமார் இளவயதிலேயே தனது தாய் தந்தையை ஒரு விபத்தில் பறி கொடுத்தவர்,  தன் தங்கை சுஜாதாவின் மீது உயிரையே வைத்திருந்தார்.

 

   குடும்ப சூழ்நிலை உணர்ந்து, தனது படிப்பை நிறுத்திவிட்டு வேலைக்குச் சென்றவர், தன் தங்கையை நன்கு படிக்க வைத்தார்.

 

தனது தங்கைக்கு திருமணம் முடித்த பிறகு தான், தான் திருமணம் செய்து கொள்வது என்ற தீர்மானத்தில் இருந்தவர், சுஜாதாவின் கடைசி வருட கல்லூரி படிப்பின் போது, அவருக்கு மாப்பிள்ளை தேட தொடங்கி விட்டார்.

 

   ஆனால் சுஜாதாவோ தனது கல்லூரியில் படிக்கும் பாஸ்கரை காதலிப்பதாகக் கூற, தன் தங்கையின் சந்தோஷமே முக்கியம் என்று, அவனுக்கே அவளை திருமணமும் செய்து வைத்தார். 

 

  ஆனால் அதன் பிறகு தான்  சுஜாதாவிற்கு கஷ்ட காலமே ஆரம்பித்தது. கல்லூரியில் நல்லவன் போல பேசி பழகியவனின் சுயரூபம், திருமணத்திற்கு பிறகு தான் அவளுக்கு தெரிய ஆரம்பித்தது.

 

எந்நேரமும் குடி,சீட்டு, மாது என்று ஊதாரியாக  ஊரைச் சுற்றி கொண்டிருந்தவன், உருப்படியாக ஒரு வேலையில் கூட நிரந்தரமாக இருந்ததில்லை. 

 

ஒவ்வொரு முறையும் அவன் நடத்தையின் காரணமாகவே வேலையில் இருந்து நீக்கப்பட்டான். இந்நிலையில் சுஜாதா அடுத்தடுத்து பவானி மற்றும் ஆதிரனை பெற்றெடுத்தார். 

 

அப்போது தான் சுகுமாரனும் தாய் தந்தையற்ற காஞ்சனாவை கைப்பிடித்தார். தூரத்து சொந்தமான காஞ்சனா, அவருக்கு ஏற்றபடி நல்ல குணவதியாகவே இருந்தார். 

 

   சுஜாதாவின் பிள்ளை பேற்றின் போது, தாயாக இருந்து அவளை தாங்கியவரும் அவர் தான். 

 

  சுகுமாரன் தனது தங்கைக்காகத் தான் பாஸ்கரை விட்டு வைத்திருந்தார். ஏனென்றால் பாஸ்கரிடம் இவ்வாறு நடக்க வேண்டாம் என்று அறிவுரை கூறினாளோ, அல்லது கண்டித்தாலோ அதன் விளைவு, சுஜாதாவின் உடலில் அவனால் பல காயங்களை ஏற்படுத்தியது. 

 

   அதனாலேயே தன்னால் முடிந்த அளவு தன் தங்கைக்கு, ஆதரவாக இருக்கத் தொடங்கினார் சுகுமார். 

 

   குழந்தை பிறந்த பிறகாவது, அவன் திருந்துவான் என்று எதிர்பார்த்த சுஜாதாவிற்கு, ஏமாற்றம் தான் மிஞ்சியது. 

 

  முழு நேர குடிகாரனாக மாறிப் போனவன், சுஜாதாவிற்கு தெரியாமல் வேறொரு பெண்ணோடு குடும்பம் நடத்திக் கொண்டிருந்தான். 

 

  அந்த விஷயம் ஒரு நாள் சுஜாத்தாவிற்கு தெரிய வர, வீட்டில் பெரிய பிரளயமே ஏற்பட்டது. கோபத்தோடு பாஸ்கரின் சட்டையை பற்றி கதறத் தொடங்கிய சுஜாதா, குடிவெறியில் இருந்த பாஸ்கரின் கைகளால், மண்டை பிளந்து பவானி மற்றும் ஆதிரனின் கண் முன்னே துடி துடித்து இறந்தாள். 

 

அதன் பிறகு  பவானியும் ஆதிரனும் சுகுமாரின் வீட்டில் தான் வளர்ந்து வந்தனர். காஞ்சனா தன் குழந்தையான உதயநிலாவை போலவே, அவர்களையும் பாசத்தோடு வளர்த்து வந்தார். 

 

  நிலா ஆதிரனை விட ஆறு வயது இளையவள், மூவரையுமே தன்னால் இயன்ற அளவு நல்ல முறையில் படிக்க வைத்தார் சுகுமார். சுஜாதாவிற்கு நிலா என்றால் அவ்வளவு ஆசை. அவள் பிறந்த போது தன் மகனுக்கே அவளை மணமுடித்து வைத்து விடுங்கள், என் மருமகளை நான் பார்த்துக் கொள்கிறேன் என்று விளையாட்டாக அவர் கூறியிருந்தார்.

 

   ஆனால் இதை தன் தங்கையின் வேத வாக்காகவே  எடுத்துக் கொண்டார் சுகுமார்.

 

ஆதிரனுக்கும் உதயநிலாவிற்கும் தான் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று, காஞ்சனாவிடம் அப்போதே உறுதியாக கூறி விட்டார்.

 

பவானிக்கு படிப்பு முடிந்ததுமே மாப்பிள்ளை தேடத் தொடங்கினார் சுகுமார். தன் தங்கையை போல, இவள் வாழ்க்கை ஆகி விடக் கூடாது என்று பார்த்துப் பார்த்து, அக்கம் பக்கம் விசாரித்து அவளுக்கு கேசவனை திருமணம் செய்து வைத்தார். 

 

ஆனால் விதியை மாற்ற முடியாது அல்லவா, பவானிக்கு கணவனாக வாய்த்த கேசவன் ஒரு சைக்கோ. வெளியே அனைவரிடமும் சிரிக்க சிரிக்க பேசுபவன், தனியாக இருக்கும் சமயங்களில் அவளை வார்த்தைகளாலும், உடலாலும் காயங்களை ஏற்படுத்தி, சித்திரவதை செய்ய தொடங்கினான். 

 

தன்னை சொந்த மகள் போல பாசம் காட்டி வளர்த்த சுகுமார் மற்றும் காஞ்சனாவிற்காகவே, இவனது சித்திரவதைகளை பொறுத்துக் கொண்டு, வெளியே ஒருவரிடமும் சொல்லாமல், தான் நலமாக இருப்பதாகவே காட்டிக் கொண்டாள் பவானி. 

 

   ஆனால் ஒரு முறை கேசவனின்  செயல் எல்லை மீறியது. தன் நண்பர்கள் முன்னிலையில் மனைவியை காட்சிப் பொருளாக்கி, அவள் பெண்மையை அவன் சூறையாடத் துணிய, பொங்கி எழுந்தாள் பவானி. 

 

   ஒரு கட்டத்தில் தன் கற்பைக் காப்பாற்றிக் கொள்ள, தன்னைத் தானே மாய்த்துக் கொண்டு உயிரையும் விட்டு விட்டாள். 

 

   அப்போது தான் உதயநிலா கல்லூரியில் கடைசி வருடம் படித்துக் கொண்டிருந்தாள். அதோடு ஆதிரனும் ஒரு மாதத்திற்கு முன்பு தான், தனது கம்பெனியின் மூலம் கிடைத்த வாய்ப்பில்,வேலைக்காக வெளிநாட்டுக்கு சென்றிருந்தான்.

 

திடீரென்று ஏற்பட்ட பவானியின் இறப்பு அவர்கள் வாழ்க்கையையே புரட்டிப் போட்டது. இந்நிகழ்வு சுகுமாரின் உடல் நிலையை வெகுவாக பாதித்து விட்டது.

 

  ஒருநாள் திடீரென்று உடல்நிலை சரியில்லாமல், நெஞ்சைப் பிடித்துக் கொண்டு சாய்ந்தவரை மருத்துவமனையில் சேர்த்தனர். 

 

   மருத்துவர்கள் அவருக்கு மைல்ட் அட்டேக் என்று கூறி, ஆஞ்ஜியோ சிகிச்சையை மேற்கொண்டனர். ஒரு வாரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவருக்கு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

 

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 3

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
5
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

2 Comments

  1. அய்யோ இதென்ன இவ்வளவு ட்விஸ்ட் … ரெண்டு பேரும் இப்படி அநியாயமா இறந்துட்டாங்க … நல்லவர்களுக்கு எப்பவும் சோதனைகள் வரும் தான் … ஆனா இவ்வளவு சோதனைகள் வர கூடாது … 🥺

    1. Author

      இதுபோல பலர் வாழ்க்கை இருக்கத்தான் செய்து சிஸ்.