
நித்திலாவிற்கு தலையே வெடித்து விடும் போல இருந்தது. எப்படி விஷ்வா இவளை திருமணம் செய்து கொண்டான்? அதுவும் காதல் திருமணம்? இது எப்படி சாத்தியம்?
மண்டைக்குள் கேள்விகளின் அணிவகுப்பு நிகழ, அதற்கு மேலும் அங்கு நிற்க முடியாமல் தனிமை வேண்டி, நேராக தோட்டத்தை நோக்கிச் சென்றாள்.
அவளின் பின்னேயே வெளியே வந்த பத்மா, தனது அருகில் வந்து கொண்டிருந்த கணவர் வீராவிடம்,
“ஐயோ ஐயோ என்னங்க இது? நாம நினைச்சது என்ன, இங்க நடக்கறது என்ன? அந்த கல்யாணம் நின்னதே அவளாலத் தான், ஆனா இந்த விஷ்வா என்னன்னா அவளையே இங்க கொண்டு வந்து நிறுத்தி, இவ தான் இந்த வீட்டோட மருமக தன்னோட பொண்டாட்டின்னு சொல்லிட்டு இருக்கான். அதை விட அவ பேசியதை கேட்டீங்களா? அவ்வா… எப்படி பேசி மயக்கி அந்த வாயாடி விஜயாவையே, தன் பக்கம் இழுத்துட்டா பார்த்தீங்களா?”
தனது மனைவியின் பேச்சுக்கு தலை அசைத்த படியே, தனது மகளை நோக்கி திரும்பிய வீரா,
“பாப்பா பேசாம இவ தான் நடந்த அத்தனை பிரச்சனைக்கும் காரணமுன்னு, எல்லார்கிட்டையும் போட்டு கொடுத்திடலாமா? அவள தலையில தூக்கி வைச்சு கொண்டாடிட்டு இருக்க, இந்த வீட்டாலுங்க அத்தனை பேரும், இந்த உண்மை மட்டும் தெரிஞ்சுதுன்னா, அவளை வீட்டை விட்டே அடிச்சு துரத்தி விட்டுருவாங்க.”
தனது தந்தையின் கூற்றில் அதிர்ந்து போய், அவரை பார்த்து தீயாய் முறைத்தவளோ,
“அப்படியே இது எல்லாத்துக்கும், ஸ்கெட்ச்சு போட்டு கொடுத்தது நான் தான்னு, வெளியே தெரிஞ்சிடும் பரவாயில்லையா? லூசாப்பா நீ… அவ குட்டு வெளிப்பட்டா அதுக்கு மூல காரணம், நாம தான்னு வெளியே தெரிஞ்சிடாதா?”
“நம்ம பொண்ணு சொல்லறது கரெக்டு தான், எதையாவது செய்யறேன்னு சொல்லி, ஏழரைய இழுத்து விட்டுடாதீங்க. இப்போதைக்கு நாம திருடனுக்கு தேள் கொட்டின மாதிரி, பொத்திகிட்டு தான் இருந்தாகனும்.”
“அது எப்படி தெரியும்? இந்த வேலையை செஞ்ச அவளுக்கே, இதுக்கு மூலக்காரணம் நாம தான்னு தெரியாதே? அதோட நாம நடிக்க கூட்டிட்டு வந்த அந்த பொண்ணையும் தான், காசு கொடுத்து வெளிநாட்டுக்கு அனுப்பி வைச்சிட்டோமே. நித்திலாவை பார்த்த அந்த ஆசாரியையும் வண்டில அடிச்சு தூக்கி போட்டு, கோமாவுல படுக்க வைச்சிட்டோம். இதுக்கும் மேல வேற என்ன சாட்சி இருக்கப் போகுது?”
“இல்லப்பா எனக்கு என்னவோ விஷ்வா மாமா, அவளை பத்தி தெரிஞ்சு கிட்டு தான், இங்க கூட்டிட்டு வந்து இருப்பாரோன்னு தோனுது?”
“கண்டிப்பாக இல்லம்மா, விஷ்வாவுக்கு மட்டும் உண்மை தெரிஞ்சு இருந்தா, இந்நேரம் அவளை பழி வாங்கி இருப்பானே தவிர, அவளை தன் மனைவியா இங்க கூட்டிட்டு வந்திருக்க மாட்டான்.”
உண்மை தான் ஆனால் அவன் தான் அதற்கு முன்பே, அவள் மீது காதலில் விழுந்து விட்டானே! இதைப் பற்றி சம்பந்தப்பட்டவளே அறியாத போது, இவர்களுக்கு மட்டும் எப்படி தெரியும்?
“முதல்ல அப்பாவும் பொண்ணும், இப்ப நமக்கு இருக்க முக்கியமான பிரச்சனையை கவனிக்கறீங்களா? என்ன முழிக்கறீங்க? மறந்துட்டீங்களா அகல்யாவும் சரவணனும் ஒன்னா இருக்க போட்டோவை, முதல்ல இந்த வீட்டாளுங்க பார்க்கும் முன்ன, இந்த வீட்டை விட்டு வெளியேத்தனும், இல்லாட்டி நம்ம நிலைமை அரசனை நம்பி, புருஷனை கைவிட்ட கதையா ஆகிடப் போகுது.”
பாண்டியன் இல்லத்தில் இரவு உணவுக்காக, குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் டைனிங் டேபிளின் முன்பு, ஒன்று கூடி இருந்தனர். சரவணன் வருவதற்கு முன்பே, தனக்கு படிப்பு சம்மந்தமாக வேலை இருப்பதால், கிளம்புவதாக அகல்யா கூற, விஜயாவும் அவளோடு அவர்களது வீட்டுக்கு கிளம்பி விட்டார்.
அன்று தனது தாத்தா எடுத்த அந்த கல்யாண முடிவிற்கு பிறகு, சரவணன் மற்றும் அகல்யா இருவருமே, பேசிக் கொள்ளவில்லை. இருவரின் மனம் முழுவதும் காதல் நிறைந்திருந்தாலும் அதையும் மீறி, தனது தாத்தாவின் மீதும் குடும்பத்தின் மீதும், அவர்களுக்கு அக்கறை ஒரு படி அதிகமாகவே இருந்தது.
இவ்வளவு பிரச்சனைக்கு பிறகு, தங்களால் மீண்டும் இந்த குடும்பத்தில், ஒரு குழப்பம் ஏற்பட வேண்டாம் என்று நினைத்தவர்கள், அதன் பிறகு இருவருமே சந்தித்துக் கொள்ளவும் இல்லை, அப்படியே சந்தித்தாலும் ஒருவரை ஒருவர் பார்ப்பதையே தவிர்த்து வந்தனர்.
எங்கே தங்களையும் மீறி மனதை வெளிப்படுத்தி விடுவோமோ, என்ற அந்த ஐயம் கூட, அதற்கு காரணமாக இருக்கலாம். ஆனால் இவர்களின் காதல் பற்றி தெரிந்திருந்த மேனகாவிற்குத் தான், சற்று வருத்தமாக இருந்தது.
இவர்களே இந்த விஷயத்தில் எந்த முயற்சியும் எடுக்காத போது, தான் மட்டும் என்ன செய்ய முடியும் என்று, அவளும் அத்தோடு அதை விட்டு விட்டாள்.
நிலாவோடு கீழே இறங்கி வந்த விஷ்வா, அனைவரோடு தனது தாத்தாவும் அங்கு அமர்ந்திருப்பதை கண்டுவிட்டு, அறையிலேயே சென்று சாப்பிட்டுக் கொள்ளலாம் என்று மாடிப்படியை நோக்கித் திரும்ப, அவனது சித்தி ராஜி தான், அவனது கைப்பிடித்து இழுத்து வந்து சேரில் அமர வைத்தார்.
விஷ்வா எவ்வளவோ மறுத்த போதும் கூட, புன்னகையோடு தனது பேரனுக்கு ஆசையாக செய்த பதார்த்தங்களை, தேவகிப் பாட்டி அவன் தட்டில் அடுக்கிக் கொண்டிருக்க, அதுக்கு மேல் என்ன சொல்வது என்று தெரியாமல் விழித்தவன், அதற்கு காரணமானவளை முறைக்கவும் தவறவில்லை.
நமட்டுச் சிரிப்போடு அவனுக்கு அருகே வந்து அமர்ந்து கொண்ட நிலா, அனைவரோடும் இணக்கமாக பேசிக் கொண்டு இருந்தாலும், அவளது மனது அங்கு உள்ளவர்களின் மனநிலையை கண்களாலேயே எடை போட்டுக் கொண்டிருந்தது.
பத்மாவும் நித்திலாவும் அவசரமாக தங்களது உணவை முடித்துக் கொண்டு, விஷ்வாவின் அறையில் இருந்த போட்டோக்களை எடுக்க, யாரும் அறியா வண்ணம் மாடிப்படி ஏறி மேலே சென்றனர்.
உணவை முடித்துக் கொண்டு எழுந்த விஷ்வாவை, மேலே அவனது அறைக்கு செல்ல விடாமல், வீரா பிடித்து வைத்துக் கொண்டு, தனது வியாபாரம் சம்பந்தமாக ஏதேதோ பேசி நேரத்தை போக்கிக் கொண்டிருக்க, அவனோ அவர் தனது தம்பியின் வருங்கால மாமனாராகப் போய் விட்டதால், மரியாதை காரணமாக அங்கிருந்து நகர முடியாமல், அவரது வார்த்தைகளுக்கு பதில் எதுவும் கூறாமல், தலையை மட்டும் ஆட்டிக் கொண்டு இருந்தான்.
ஈஸ்வர பாண்டியன் தாத்தா உணவை முடித்துக் கொண்டு அங்கிருந்து எழுந்து சென்றதும், அதற்காகவே காத்திருந்தது போல, வீராவோடு சரவணனும் அவனது தந்தையும் கூட விஷ்வாவிடம் வந்து பேச இணைந்து கொண்டனர்.
விஷ்வாவின் அறைக்கு வெளியே பத்மா நின்று கொண்டு, யாரேனும் வருகிறார்களா என்று கண்காணித்துக் கொண்டிருக்க, நித்திலாவோ அறைக்குள் சென்று அந்த போட்டோக்களை தேடிக் கொண்டிருந்தாள்.
பாண்டியன் இல்லத்தில் பணிபுரியும் ஒரு வேலையாளின் உதவியோடு தான், இந்த அறைக்குள் விஷ்வாவின் அவை கைக்கு கிடைக்குமாறு, கபோர்டில் அவனது ஆடைகளுக்கு இடையில், தான் கொடுத்த போட்டோக்களை வைக்கச் சொல்லி இருந்தாள் நித்திலா.
ஆனால் அந்த அறையில் எங்கு தேடியும் அவளுக்கு அது கிடைக்கவில்லை. ஒருவேளை விஷ்வா அதை பார்த்துவிட்டு பத்திரப்படுத்தி இருப்பானோ? என்ற சந்தேகமும் நித்திலாவிற்கு தோன்றியது.
ஒருவேளை விஷ்வாவிற்கு தெரிந்து விட்டால், தனக்கும் சரவணனுக்கும் நடக்க இருக்கும் இந்த திருமணத்தை நிறுத்தி விடுவானோ? அதன் பிறகு என்ன செய்வது என்று, அவளது மூளை வேகமாக அடுத்த திட்டத்தை யோசிக்க ஆரம்பித்தது. அந்த சிந்தனையிலேயே வெளியே வந்தவளை பார்த்த பத்மா, கிடைத்து விட்டதா என்று சைகையில் கேட்க, அவளோ புருவ முடிச்சோடு இல்லை என்று தலையை ஆட்டினாள்.
அடுத்த நிமிடம் தலையில் கை வைத்து கொண்டு, புலம்பத் தொடங்கி விட்டார் பத்மா.
“இப்ப என்ன தான் பண்றது? ஒருவேளை விஷ்வாக்கு மட்டும் இந்த விஷயம் தெரிஞ்சதுன்னா, உன்னால சரவணனோட பொண்டாட்டியா கூட இந்த வீட்டுக்குள்ள வர முடியாது. அப்பறம் பாண்டியன் குரூப்போட மருமகங்கற பட்டமே உனக்கு கிடைக்காது. இதுக்கு தான் ஒரு வேலையை முடிக்கிறதுக்கு முன்னாடி, நல்லா யோசிக்கணும்னு சொல்றது.
கொஞ்ச வருஷத்துக்கு முன்னாடி இதே போல தான் நடந்துச்சு, திட்டம் போட்டு காய் நகர்த்தி, அத்தனை விஷயம் செஞ்சோம். ஆனா என்னாச்சு கடைசி வரைக்கும் வந்த போதும் கூட, நம்ம ப்ளான் எல்லாம் கெட்டுப் போச்சு.
இப்போவும் அதே நிலை தான், அந்த போட்டோ மட்டும் நம்ம கைக்கு கிடைக்காட்டி, இந்த வீட்டுல சம்மந்தியா மட்டும் இல்ல, இந்த வீட்டு ஆளாவே ஆக முடியாது. எப்பவும் போல கூட்டத்தோட கோவிந்தாவா, இந்த வீட்டுக்குள்ள சொந்தக்காரனா மட்டும் தான் வந்து போக முடியும்.”
அதே நேரம் பக்கத்து அறையில் இருந்து வெளிப்பட்ட செல்லமா, கைகளில் சில துணிகளோடு விஷ்வாவின் அறை நோக்கி வந்தவர், அவனது அறை வாசலின் அருகே இவர்கள் நிற்பதை கண்டு,
“ என்னாச்சு ம்மா? ஏன் இங்க நிக்கறீங்க? எதாவது வேணுமா? ”
“அது அது சிவகாமி அண்ணியை பார்க்க வந்தோம்.”
“அவங்க தூங்கிட்டு இருக்காங்க, அதோட பக்கத்து அறை தானே அவங்களோடுது?”
“ஓ அப்படியா, அவங்க தூங்கறாங்களா? சரி சரி அப்ப நாங்க நாளைக்கு காலையில வந்து அவங்களை பார்த்துக்கறோம்.”
தலையை ஆட்டியபடி அவர்களை கடந்து உள்ளே சென்ற செல்லம்மா, தனது கையில் இருந்த ஆடைகளை பெட்டின் மீது வைத்தவர், கபோர்டை திறந்து, அதில் ஒவ்வொரு துணியாக எடுத்து வைக்கத் தொடங்கினார்.
அதே நேரத்தில் அந்த துணிகளுக்கு நடுவே, ஒரு கவர் வெளியே தெரிவதை கண்ட நித்திலா, தனது அன்னைக்கு கண் காட்டினாள். உடனே அதை புரிந்து கொண்டு இருமத் தொடங்கிய பத்மா, மயக்கம் வருது போல நடிக்கத் தொடங்கினார்.
அவரது நிலை கண்டு பக்கத்து அறையில் இருக்கும், தண்ணீர் பாட்டிலை எடுக்க ஓடினார் செல்லம்மா. அதற்காகவே காத்திருந்த நித்திலா அவசரமாக அந்த ஆடைகளுக்கு நடுவே இருந்த கவரை எடுத்து, தனது பின்னால் மறைத்து வைத்துக் கொண்டாள்.
தண்ணீரோடு வந்த செல்லம்மாவிடம்,
“வேண்டாம் எனக்கு இப்ப கொஞ்சம் பரவால்ல, சரி நாங்க வீட்டுக்கு கிளம்பறோம்.”
என்று படி அவர்கள் மாடியில் இருந்து இறங்க, ஓட்டமும் நடையுமாக வேகமாக செல்லும் அவர்களை பார்த்துக் கொண்டிருந்த செல்லம்மா, தனது புடவையில் மறைத்து வைத்திருந்த அகல்யா மற்றும் சரவணனின் புகைப்படங்களை எடுத்து பார்த்துக் கொண்டே, அவர்களையும் ஒரு வெற்றுப் பார்வை பார்த்துக் கொண்டிருந்தார்.
கீழே வேலையாட்கள் டேபிளை சுத்தம் செய்து கொண்டிருக்க, தேவகிப் பாட்டியின் கண் அசைவில், மேனகா தனது அன்னை தந்தையின் அறைக்குள், நிலாவை அழைத்துக் கொண்டு சென்றாள்.
வீராவிடம் இருந்து தப்பிக்க ஏதேனும் வழி கிடைக்குமா என்று, மனதிற்குள் நொந்து கொண்டிருந்த தனது நண்பனை நோக்கி, அடியெடுத்து வைத்தான் சூர்யா. ஆனால் அவனை அங்கே செல்ல விடாமல், சற்று ஒதுக்குப்புறமாக இழுத்துக் கொண்டு வந்தார் தேவகிப் பாட்டி.
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


நிலாவுக்கும் விஷ்வாக்கும் முதலிரவு ஏற்பாடு பண்ண போறாங்க 😜😜 அங்க விஷ்வா நிலாவை காமெடி பண்ணி ஓட விட போறானா .. இல்ல நிலா விஷ்வாவை காமெடி பண்ணி ஓட விட போறாளா தெரியல ..
🤣🤣🤣🤣🤣அதுக்கெல்லாம் இவிங்க சரிபட்டு வர மாட்டாங்க சிஸ்