Loading

    வெகு வருடங்களுக்கு பிறகு ஊரில் திருவிழா ஏற்பாடு செய்யப்பட்டு இருந்ததால், ஊரே கொண்டாட்டங்களால் நிறைந்திருந்தது.

   பாண்டியன் இல்லத்திலும் உறவினர்கள் வருகையால் வீடே நிறைந்திருந்தது. அதோடு விஷ்வா மற்றும் சிவகாமியின் வருகையை பற்றி அறிந்து, அனைவரும் மகிழ்ச்சியோடு அவனைக் காண ஆவலாக இருந்தனர்.

   ஈஸ்வர பாண்டியன் தாத்தாவின் மகள் மற்றும் மகன் குடும்பம், அதே வீட்டில் தங்கிக் கொள்ள, சம்பந்தம் பேசி இருந்த காரணத்தாலும், அதோடு திருவிழா முடிந்து நித்திலா மற்றும் சரவணனின் திருமணம் ஏற்பாடு செய்யப் பட்டிருந்ததாலும், நித்திலாவின் குடும்பம் மட்டும் அவுட் ஹவுஸ்ஸில் தங்க ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது.

    ஆனால் சிவகாமிக்கு உதவியாக இருக்கும் செவிலியர், தங்கிக் கொள்ள அவுட் ஹவுஸ் தேவைப்பட்டதால், நித்திலாவின் குடும்பம் பாண்டியன் இல்லத்தில் இருந்து, சற்று தள்ளி இருந்த ஒரு வீட்டில் தங்க வைக்கப் பட்டனர்.

     அவர்களை அங்கு கொண்டு வந்து விட்ட தேவகி,

    “தப்பா நினைச்சுக்காதப்பா, நீ என் சொந்த அண்ணன் பையனா மட்டும் இருந்திருந்தா, நம்ம வீட்டுலயே தங்கி இருக்கலாம். ஆனா நீ இப்ப இந்த வீட்டோட சம்பந்தி, அதோட கல்யாணம் ஆகறதுக்கு முன்னாடி, நித்திலா அங்க தங்கறது சரி வராது. அதனால தூங்குறதுக்கு மட்டும் நீங்க இங்க வந்தா போதும், மத்தபடி நம்ம வீட்டுல தான் சாப்பாடு சரியா?”

   “ஐயோ அத்தை இதெல்லாம் நீங்க சொல்லனுமா, நம்ம ஊர் வழக்கம் பத்தி எனக்கு தெரியாதா என்ன, பத்து நாள் தானே பார்த்துக்கலாம். நீங்க போய் வீட்ல வேலையை பாருங்க, விஷ்வா தம்பி வேற ஊர்ல இருந்து வருது, நாங்க குளிச்சிட்டு சீக்கிரமா அங்க வந்திடறோம்.”

  அவர் வீட்டு வாசலைத் தாண்டும் வரை சிரித்தபடி இருந்தவரது முகம், அடுத்த நொடியே கோபத்தில் விகாரமாக மாறியது. தனது அறையில் எந்த உடையை அணியலாம் என்று, ஆர்வமாக பார்த்துக் கொண்டிருந்த நிதிலாவின் முன்பு வந்து நின்றவர், கத்தத் தொடங்கி விட்டார்.

  “ கேட்டியாம்மா இந்த கிழவி பேசிட்டு போறதை, இத்தனை வருஷமா ஊரும் வேண்டாம், உறவும் வேண்டாமுன்னு ஊரை விட்டு ஓடிப் போனவன், அவனோட நோய் வாய்ப்பட்ட அம்மாவை கூட்டிட்டு வரப் போறான்.

   அதுக்கு சிகிச்சை பார்க்க ஒரு நர்ஸ் வருதாம் அது தங்கறதுக்கு, நமக்கு ஏற்பாடு பண்ண அவுட் ஹவுஸை குடுத்துட்டு, நம்மள இங்க கொண்டு வந்து தங்க வச்சிகிட்டு, படுக்குறதுக்கு மட்டும் இங்க வந்தா போதுமுன்னு சொல்லிட்டு போகுது… எனக்கு அப்படியே பத்திக்கிட்டு வருது, இதுக்காகவா நாம அத்தனை ப்ளான் பண்ணி, கல்யாணத்தை நிறுத்தினோம்.”

   நித்திலாவின் தந்தை வீரா ஆத்திரத்தோடு புலம்பிக் கொண்டிருக்க, அவசரமாக அறைக் கதவை சாத்தி விட்டு உள்ளே நுழைந்த அவர் மனைவி பத்மா,

    “உங்களுக்கு கொஞ்சமாச்சும் அறிவிருக்கா? இப்படி கதவை திறந்து போட்டுகிட்டு கத்தி பேசிட்டு இருக்கீங்க? ஏன் ஒரு மைக்கை பிடிச்சுக்கிட்டு அவங்க வீட்டு முன்னாடி போய் நின்னு, கத்த வேண்டியது தானே?”

     “மனசு பொறுக்க மாட்டேங்குது டி, எவ்வளவு கஷ்டப்பட்டு ப்ளான் பண்ணி அந்த கல்யாணத்தை நிறுத்தி, நம்ம பொண்ணுக்கு விஷ்வாவை கல்யாணம் பண்ணி வைக்கிற நிலைமைக்கு, அந்த குடும்பத்தை கொண்டு வந்தோம், ஆனா நாம எதிர்பார்க்காத ஒன்னு விஷ்வாவோட எதிர்ப்பு, கொஞ்ச நாள்ல எப்படியும், அவனை வழிக்கு கொண்டு வந்திடலாம்னு நினைச்சேன். ஆனா அந்த கிழவன் விஷ்வாவை வெளியே துரத்துவான்னு நான் கொஞ்சம் கூட  எதிர்பார்க்கல.

    சரி என் தங்கச்சி பையனை கட்டிக்கிட்டு, நம்ம பொண்ணு அத்தனை சொத்தையும் அனுபவிக்க போறான்னு நினைச்சா, இப்போ மறுபடியும் அந்த விஷ்வா வீட்டுக்கு வரப் போறானாம். இதுல அவங்க அம்மாவை கவனிச்சுக்க போற, நர்சுக்கு இருக்கிற முக்கியத்துவம் கூட, இந்த வீட்டுக்கு சம்பந்தியா வரப் போற நமக்கு இல்ல, ச்சை இத்தனைக்கு பிறகும் இப்படி நிற்கறதை பார்க்கும் போது, நமக்கு இது தான் விதிச்சது போலன்னு தோனுது.”

    அவ்வளவு நேரமும் பொறுமையாக தனது துணிகளை அடுக்கிக் கொண்டிருந்த நித்திலா, வேகமாக தனது தந்தையை நோக்கித் திரும்பி,

     “இல்லப்பா கண்டிப்பா கிடையாது, என்னைக்குமே அந்த வீட்டுக்கு மூத்த மருமகங்கற பேரும், அந்த வீட்டோட மரியாதையும், எனக்கு மட்டும் தான் சொந்தம். அதை யாருக்கும் என்னால விட்டுக் கொடுக்க முடியாது.

    நீங்க சொன்ன ஒரே காரணத்துக்காக தான், நான் சரவணாவை கல்யாணம் பண்ணிக்க சம்மதிச்சேன். அதுவும் பாண்டியன் வீட்டு மருமகங்கற, அந்த ஊர் மரியாதைக்காகத் தான்.

    இப்போ விஷ்வா மாமாவே இங்க வரப் போறாருங்கும் போது, இந்த ஒன்னுத்துக்கும் உதவாத சரவணன் எனக்கு எதுக்கு? அதுவும் என்னமோ வேண்டா வெறுப்பா, என்னை கட்டிக்கிற மாதிரி, முகத்தை திருப்பிக் கிட்டு சுத்தி கிட்டு இருக்கான். இந்த மூஞ்சிய நான் எதுக்காக கல்யாணம் பண்ணிக்கணும்?”

     அவளது வார்த்தையில், அவளை பெற்றவர்கள் இருவரும் திடுக்கிட்டு நின்றனர்.

     “என்னம்மா சொல்ற? சரவணன் கூட இன்னும் கொஞ்ச நாள்ல உனக்கு கல்யாணம், அப்பறம் எப்படி உன்னால விஷ்வாவை கல்யாணம் பண்ணிக்க முடியும்?

   உனக்கு விஷ்வாவை பிடிச்சிருக்கு, அதோட அவனோட பணபலமும் அதிகமா இருக்கிறது உண்மை தான். ஆனா இது எப்படி ம்மா சாத்தியம்? தம்பி கல்யாணம் பண்ணிக்க போற பொண்ணை, எப்படி அண்ணனுக்கு கல்யாணம் பண்ணி வைக்க, பாண்டியன் குடும்பம் ஒத்துக்கும்?”

       “அதைப் பத்தி நீங்க  கவலைப் படாதீங்கப்பா, எப்ப விஷ்வா மாமா இங்க வர போறாருன்னு தெரிஞ்சுச்சோ, அப்பவே என் மனசுக்குள்ள கணக்கு போட ஆரம்பிச்சு, அதுக்கான காய்களையும் நான் நகர்த்த ஆரம்பிச்சுட்டேன்.

   என்ன தான் உங்களுக்காக சரவணனை நான் கல்யாணம் பண்ணிக்கிறதா ஒத்துக்கிட்டாலும், அவனை கல்யாணம் பண்ணிக்க, இப்ப வரை எனக்கு துளி கூட இஷ்டம் இல்ல.

    ஈஸ்வர் குரூப்போட மருமகங்கறதை விட, விஷ்வா மாமாவோட பொண்டாட்டிங்கறது தான் எனக்கு மிகப் பெரிய அடையாளம்.

     நீங்களே சொல்லுங்க ப்பா, நான் உங்க தங்கச்சி மாதிரி அந்த வீட்ல செல்லாக் காசா இருக்கணுமா? இல்ல அந்த சிவகாமி அம்மா மாதிரி, அந்த குடும்பத்தையே தன் கைக்குள்ள வச்சுக்கிட்டு, அவங்களை ஆட்டிப் படைக்கனுமா?”

     “நீ சொல்லறது எல்லாம் சரி தான் நித்திம்மா, எனக்குமே நீ விஷ்வாவை கட்டிக்கிட்டா, நல்லா இருக்குமுன்னு தான் அடிக்கடி தோனும், ஆனா அவன் தான் அன்னைக்கே உன்ன வேண்டானுட்டு போயிட்டானே.

   இப்ப வர்றது கூட அவங்க அம்மாவுக்காக தான்னு கேள்விப் பட்டேன். அதோட அவனுக்கு உங்க கல்யாண விஷயம் பத்திக் கூட கண்டிப்பா தெரிஞ்சிருக்கும், அதனால நீயா அவன் கிட்டப் போனாக் கூட அவன் விலகித் தான் போவான்.”

  “கரெட்டு தான் ம்மா, ஆனா ஒருவேளை  விஷ்வா மாமாக்கு, அகல்யாவும் சரவணனும் ஒருத்தரை ஒருத்தர் மனசார காதலிக்கிற விஷயம் தெரிஞ்சா? ஒரு நல்ல அண்ணனா தன் தம்பியோட வாழ்க்கை, திசை மாறக் கூடாதுன்னு தானே நினைப்பாரு, அதோட தன் தாத்தாவோட மரியாதை, மறுபடியும் ஒரு கல்யாணத்தால கெட்டுப் போக, நிச்சயம் அவர் விரும்ப மாட்டார் இல்லையா?

    சோ அந்த டைம்ல அவருக்கு வேற ஆப்ஷனே கிடையாது. நான் இங்க வர்றதுக்கு முன்னவே, அகல்யாவும் சரவணனும் ஜோடியா எடுத்துக் கிட்ட போட்டோ எல்லாத்தையும், அவர் கைக்கு கிடைக்கிற மாதிரி ஏற்பாடு பண்ணிட்டேன்.

   சோ நீங்க எந்த கவலையும் இல்லாம, நிம்மதியா இந்த திருவிழாவை கவனிங்க, இங்க வர்ற விஷ்வா மாமாவை என் கைக்குள்ள போட்டுக் கிட்டு, அவர் கையால தாலியை வாங்கிக் கிட்டு, அடுத்த வருஷம் திருவிழா பாரிவாரத்துல, பாண்டியன் குடும்பம் சார்பா அந்த வீட்டோட மருமகளா, அம்மன் சீதனத்தை சுமக்கப் போறது நான் தான்.”

    இந்த வருடமே அந்தப் பதவியை அவளிடம் இருந்து தட்டிப் பறிக்க, ஒருத்தி அதற்க்கான உரிமையோடு வந்து கொண்டிருப்பதை அறியாமல், நித்திலா விஷ்வாவை வரவேற்க, தன்னை அழகு படுத்திக் கொள்ளத் தொடங்கி இருந்தாள்.

   தேசிய நெடுஞ்சாலையில் நிதானமாக காரை ஒட்டிக் கொண்டிருந்தான் விஷ்வா. தான் தேடித்தேடி எடுத்த சுடிதாரில், அழகாக பொருந்தி இருந்த தனது மனம் கவர்ந்தவளின் அழகு, அவளை அடிக்கடி பார்க்கத் தூண்ட, அதோடு கிளம்புவதற்கு முன் அவள் தாய் அவள் தலையில் சூட்டிய மல்லிகை வேறு, கார் ரெப்ரஷ்னரையும் தாண்டி, அவனது மூச்சுக் குழலுக்குள் இறங்கி அவனை இம்சித்தது.

   அனிச்சையாக அவளை நோக்கித் திரும்பும் தனது கண்களை, கட்டுப்படுத்த முடியாமல், அடிக்கடி வெற்றுப் பார்வையை அவள் மீது வீசிய படியே, அவன் காரை இயக்கிக் கொண்டிருக்க, தனது கைகளில் உள்ள போனை தலைகுனிந்து பார்த்தபடி இருந்தவளோ ஒரு கட்டத்தில்,

      “வேகமா போயிட்டு இருக்க உங்க கார் கதவை திறந்துக்கிட்டு, நான் குதிச்சிட எல்லாம் மாட்டேன், அதனால நீங்க அடிக்கடி இப்படித் என்னை திரும்பி பார்க்கணும்னு, எந்த அவசியம் இல்ல. என் உயிர் மேல எனக்கு ரொம்பவே அக்கறை இருக்கு. நீங்க நேரா ரோட்டை பார்த்தே வண்டியை ஓட்டலாம்.”

   என்று பல்பு கொடுத்து விட, இனி அவள் பக்கம் திரும்பவே கூடாது என்று மனதை ஒருநிலைப் படுத்திக் கொண்டு, நேராக ரோட்டை பார்த்துக் கொண்டு வண்டியை ஒட்டிக் கொண்டு இருந்தான் விஷ்வா. அதில் அவள் எப்போது தூங்கினால் என்றே அவனுக்கு தெரியவில்லை.

   வெகு நேர பயணத்தினால் ஏற்பட்ட அலுப்பை போக்கிக் கொள்ள, தேநீர் அருந்தலாம் என்று நினைத்து, ஒரு பேக்கரியின் முன்பு காரை நிறுத்தியவன், வெகு நேரம் கழித்து தற்போது தான் திரும்பி நிலாவை பார்த்தான்.

    குழந்தை போன்று ஒரு பக்கமாக சீட்டில் சாய்ந்தபடியே உறங்கிக் கொண்டிருந்தவளை கண்ட போது, காதல் கொண்ட மனது அவனது நிதானத்தை இழக்கச் செய்தது.

     கண்களில் மின்னும் காதலோடு அவளது முகத்தை நோக்கிக் குனிந்தவனை, அவளது சிவந்த தேன் அதரங்கள் தேன் குடிக்க அழைக்க, மையலுடன் அவளை நெருங்கியவனது  மூச்சுக்காற்று அவள் முகத்தின் மீது பட, அதில் சற்று அவளது நெற்றி சுருங்கியது.

    அதில் சட்டென்று மோகத்தில் இருந்து விடுபட்டவன், தனது செய்கையை உணர்ந்து, காரை விட்டு வேகமாக இறங்கி கதவை அறைந்து சாற்றினான். அந்த சத்தத்தில் பயந்து போய் கண் விழித்தவள் திருதிருவென்று விழிக்க, காருக்கு வெளியே நின்று அவளை அழைத்தவனோ,

   “மகாராணி கீழே இறங்கறீங்களா? ஒரு டீ குடிச்சிட்டு வரலாம்னு எவ்வளவு நேரமா நான் வெளியே நின்னு கூப்பிட்டுட்டு இருக்கேன்.

  கத்திக் கத்தி என் தொண்டைத் தண்ணியெல்லாம் வத்திப் போச்சு, சரியான கும்பகர்ணியா இருப்ப போலயே, உங்க அம்மா எப்படி தான் தினம் தினம் உன்ன எழுப்பி ஆபிஸ்க்கு அனுப்பறாங்களோ?”

   அவனது பேச்சில் கோபமுற்றவள்,

    “உங்களுக்கு டீ வேணுமுன்னா நீங்க நேரா போய் குடிக்க வேண்டியது தானே, நான் என்ன வேண்டான்னு உங்களை பிடிச்சா வச்சிருக்கேன்.”

   “கூட இருக்கறவங்க எப்படியோ போகட்டுமுன்னு விட்டுட்டு, எனக்கு வேண்டியதை மட்டும் பார்த்துக்கிற பழக்கம், எனக்கும் கிடையாது எங்க குடும்பத்துக்கும் கிடையாது.”

   “ஆமா எங்க வீட்டுல பத்து பேர கூட கூட்டிட்டு போயி, அவங்களை பார்க்க வெச்சு சாப்பிடணும்னு சொல்லி வளர்த்திருக்காங்க பாருங்க.”

   “ஓ அப்படியா! அப்ப நீ பத்து பேர் வர்ற  வரைக்கும் காருக்கு காவலா, இங்கயே  வெயிட் பண்ணு, நான் போய் டீ குடிச்சுட்டு வரேன்.”

   என்றபடி அவன் நகர, எங்கே தன்னை  காருக்கு தனியாக தேவுடு காக்க வைத்து விட்டுச் சென்று விடுவானோ, என்று நினைத்து அவசரமாக அவன் பின்னே, காரில் இருந்து இறங்கி ஓடினாள் நிலா.

 

Click on a star to rate it!

Rating 4.6 / 5. Vote count: 10

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
3
+1
1
+1
1

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

2 Comments

  1. வில்லன் யாருன்னு தெரிஞ்சுடுச்சு .. இனி நிலா வந்து கண்டுபிடிக்கணும் .. நிலா வுக்கு இங்க பிரச்சனைகள் ஜாஸ்தி தான் போல ..

    நல்ல வேளை இன்னும் சரவணன் கல்யாணம் நடக்கல .. விஷ்வா நிலா உங்க காமெடி சூப்பர் பா