Loading

     தனது அத்தான் ஆதிரனிடம் பேசி விட்டு, அலைபேசியை வைத்தவளின் கண்களில், பெற்றோரை இப்போதேப் பார்க்க வேண்டும் என்ற ஏக்கம், தெளிவாகத் தெரிந்தது.

   மொபைல் கேலரியில் இருந்த, தனது குடும்பத்தாரின் புகைப்படத்தை, தனது கண்களில் நிறைத்தபடி இருந்தவளின் மௌனத்தை, கலைத்தான் விஷ்வா.

  “என்ன மேடம் ஹோம் சிக்கா? யாரை அதிகமா…. மிஸ் பண்றீங்க? அம்மாவையா அப்பாவையா? இல்ல…உங்க எக்ஸ் லவ்வரையா? ஆனா உங்க அத்தான் தான், உங்களை ரொம்ப மிஸ் பண்ணுவார் போலயே? கொஞ்ச நேரத்துக்குள்ள எவ்வளவு  கால்ஸ், எடுக்கலைன்னா பிஸியா இருப்பாங்கன்னு கூட புரிஞ்சுக்காம, அடுத்தடுத்து மிஸ்டு கால்ஸ் வேற.”

      “உண்மை தான், என் அத்தானுக்கு என் மேல ரொம்ப பிரியம், அதனால தான் என்னோட ஆசைக்கு தடை பண்ண கூடாதுன்னு, அப்பா அம்மாவை கல்யாணத்துல அமைதியா இருக்க வச்சாரு.”

   அவள் கண்களில் மின்னும் சந்தோஷத்தை காணும் போது, இவன் கண்கள் அனலை கக்கியது.

     “ஓஹோ அப்போ மேடமுக்கு எப்படி?”

   அவனது குரலில் உள்ள வித்தியாசத்தை, உணர்ந்து கொண்டவளோ புருவத்தை உயர்த்தியபடி,

    “அதைப் பத்தி உங்களுக்கு என்ன கவலை மிஸ்டர் ஈஸ்வர், உங்க அம்மாவுக்கு நினைவு வரும் வரை உங்க மனைவியா நடிக்கப் போற, என்னை பத்தின விவரங்களை, நீங்க எதுக்காக தெரிஞ்சுக்கணும்? உங்க குடும்பத்தினர் முன்னாடி ஒரு நல்ல மனைவியா நடந்துக்க வேண்டியது, ஐ மீன் நடிக்க வேண்டியது மட்டும் தானே என் வேலை, அதை நான் சிறப்பா செஞ்சிடறேன், வேற ஏதாவது சொல்லனுமா உங்களுக்கு?”

   “இருக்கு நீ அங்க என் மனைவியா மட்டும் இல்ல, பாண்டியன் குடும்பத்தோட மூத்த மருமகளா வரப் போற. உன்னால ஊர் முன்னாடி எங்க குடும்பத்தோட மானம், மறுபடியும் போகக் கூடாது இல்லையா.”

  அந்த வார்த்தை அவளது நெஞ்சுக்குள் சுருக்கென்று முள்ளாய் குத்தியது. அடிபட்ட பார்வையை அவள் வீச,

      “சில உண்மைகள் கசக்கத் தான் செய்யும் மிஸஸ் பாண்டியன், சோ கொஞ்ச நாளைக்கு உன் லவ்வர பத்தின கவலைகளை, ஓரங்கட்டி வச்சா நல்லா இருக்கும்.”

   என்றபடி அவன் அங்கிருந்து நகர்ந்து விட, நிலாவோ கைகளில் போனை வைத்துக் கொண்டு, ரிதன்யாவிடம் இருந்து வரும் முக்கியமான செய்திக்காக காத்திருந்தாள்.

   முகமறியாத அந்த சிறு பெண்ணை, இத்தனை வருடங்களுக்குப் பிறகு எப்படி கண்டுபிடிப்பது என்ற சிந்தனையில், நிலா தோட்டத்தில் நடந்து கொண்டிருந்த போது தான், அவளுக்கு ஒரு யோசனை தோன்றியது.

   ரிதன்யாவுடைய திருமணத்தின் போது எடுக்கப்பட்ட, போட்டோ அல்லது வீடியோக்களில், ஏதேனும் ஒரு இடத்திலாவது அந்த பெண் இல்லாமலா போய் விடுவாள். ஒருவேளை அவளது புகைப்படம் மட்டும் கிடைத்து விட்டால், அதை வைத்து அடுத்த கட்ட விசாரணையை தொடங்கலாமே, என்று அவள் எண்ணிக் கொண்டிருக்கும் போது தான், ரிதன்யா அவளைத் தேடி வந்தாள்.

    கிடைத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொண்டவளோ, எப்படியாவது அதில் தேடி அவளுடைய கம்பெனி மெயிலுக்கு, அந்த புகைப்படத்தை அனுப்புமாறு ரிதன்யாவின் காதுகளில் மெல்லமாக கிசுகிசுத்து இருந்தாள்.

    என்ன தான் தனது போன் கைகளில் இருந்தாலும், எப்படியும் இது ஈஸ்வரால் ஒட்டு கேட்கப்படும் என்று அவள் அறிந்தே தான் இருந்தாள். ஒருவேளை தான் ரிதன்யாவுடன் பேசுவது பற்றி தெரிந்தால், அவள் ஈஸ்வரின் கோபத்துக்கு ஆளாக நேரிடும், அதனாலேயே தனது கம்பெனி மெயிலின் மூலம், ரிதன்யாவுடன் பேச முடிவு செய்தாள் நிலா. அங்கு ரிதன்யாவுமே தனது பழைய ஆல்பங்களில், அந்த குறிப்பிட்ட பெண்ணின் முகத்தை தீவிரமாக தேடிக் கொண்டிருந்தாள்.
   
   அடுத்த நாள் அதிகாலை நிலா குளித்துவிட்டு வெளியே வரும் போதே, அவளது அறையில் செல்லம்மா அவளுக்கான ஆடை மற்றும் ஆபரணங்களோடு நின்றிருந்தார். அதை கண்டதுமே புரிந்து விட்டது, இது அவன் வேலை தான் என்று, ஒரு பெருமூச்சோடு அதை எடுத்துக் கொண்டவள், திருமதி விஷ்வேஸ்வர பாண்டியனாக நடிக்க தயாரானாள்.

   “சின்னம்மா நானும் அம்மாவும் சூர்யா தம்பி கூட, காலைல டிபனை முடிச்சிட்டு ஊருக்கு கிளம்பிடுவோம். நீங்களும் தம்பியும் மதியம் போல கிளம்புவீங்க. அப்ப இதை போட்டுக்கங்கம்மா, உங்களுக்கான துணி எல்லாத்தையும் தம்பி ஏற்கனவே வாங்கி, பேக் பண்ணி தான் வச்சிருக்காரு. நாங்க போகும் போது அதை எடுத்துட்டு போய், நீங்க அங்க வர்றக்குள்ள, நான் உங்க ரூம்ல அடுக்கி வச்சிடறேன். உங்க வீட்ல இருந்து கொண்டு வந்த சூட்கேஸையும், கூடவே எடுத்துட்டு போய் அங்க வைச்சிடட்டுகங்களா?”

  “என்னை நீங்க பேர் சொல்லியே கூப்பிடுங்கம்மா? நானும் உங்களை போலத் தான், என்ன பொசிஷன் மட்டும் தான் வேற, மத்தபடி உங்க தம்பி மனைவியா நடிக்க கூட்டிட்டு வந்த, புது வேலையாள் தான் நான்.”

   செல்லம்மா என்ன பேசுவது என்று தெரியாமல் முழிக்க, சிறிய புன்னகையோடு அவள் அங்கிருந்து வெளியேறினாள்.
   
    காலை உணவை முடித்துக் கொண்டு சூர்யா செல்லம்மா மற்றும் சிவகாமி அம்மாவுடன் ஊருக்கு கிளம்பினான், அவர்களை அனுப்பி விட்டு ஆபீஸ் சென்ற ஈஸ்வருக்கு அங்கு பல வேலைகள் குமிந்து கிடந்தன. எப்படியும் இன்னும் இரண்டு மாதத்திற்கு அவனால் இங்கு வர முடியாது. ஊரில் இருந்தபடி தான் வேலை செய்தாக வேண்டும், ஊரில் தற்காலிகமாக தனது ஆபீஸ் ஒன்றை ஏற்கனவே அவன் உருவாக்கி இருந்தான்.

   சில பணியாளர்களையும் அங்கு அனுப்பி வைத்தவன், அங்கிருந்தே வேலை செய்ய வேண்டிய ஏற்பாடுகளைத் தான் செய்து கொண்டிருந்தான். அனைத்தையும் முடித்துக் கொண்டு அவன் வீடு திரும்ப, மதியம் இரண்டாகி விட்டது.

    அவன் வீட்டிற்குள் நுழையும் போது ஹால் சோபாவில் அமர்ந்த நிலையில், தன்னை மறந்து அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த நிலாவை கண்டான். இரவு முழுவதும் தூக்கமின்றி தவித்தவள், அவனுக்காக காத்திருந்த வேளையில், கண்கள் சொருக அப்படியே தூங்கி விட்டாள்.

   அவளுக்காக அவனே தேடிப் பிடித்து வாங்கிய சல்வாரில் அழகாக மிளிர்ந்தவளை, கண்களால் பருகியபடியே அருகே வந்தான்.
   
   பெண் பூவையை கண்டவனின் மனம் அவளில் மூழ்கத் தொடங்கியது. அவள் மீது இருந்த கோபம் துவேஷம் அத்தனையும், அந்த நேரத்தில் இருந்த இடம் தெரியாமல் விலகிச் செல்ல, கண்களில் காதல் பார்வையை தேக்கியபடியே, அவளை நெருங்கி இருந்தான். அந்த மோன நிலையில் தன்னை அறியாது அவளை நோக்கி கைகளை அவன் நீட்டிய அதே நேரம், அவன் போன் இசைத்து அவனை சுயநிலைக்கு கொண்டு வந்தது.

   வெகு அருகில் சத்தம் கேட்டு மிரண்ட நிலா, சட்டென்று திரும்ப முயன்று நிலை தடுமாறி சாய, அவளை விழாமல் பிடித்தவன் அதே வேகத்தில் திரும்பி நின்ற படி,

   “சும்மா தூங்கிட்டு இருக்காம கிளம்பு, நான் டிரஸ் சேஜ் பண்ணிட்டு வரேன், போற வழில லன்ச் முடிச்சுக்கலாம்.”

   “எதே…, நான் கிளம்பி இரண்டு மணி நேரம் ஆச்சு, இதுக்கு மேல என்ன பண்ணணும் கிரீடம் வேணா வச்சுக்கவா?”

   “கிரீடம் வேண்டாம் போற வழியில பழைய ஆர்ட் கேலரி வரும், அதுல இரண்டு கொம்பு வச்ச தொப்பி வேணா வாங்கி தரேன், அது தான் உனக்கு நல்லா மேட்ச்சா இருக்கும். அப்படியே ஆரியமாலா சூரியமாலா மாதிரியே இருப்ப.”

   என்றபடி அவன் மேலே சென்று விட, இவள் அவர்கள் யார் என்று தெரியாமல் கூகுளின் உதவியை நாட, அது கொடுத்த இந்திரலோகத்தின் நா அழகப்பன் இமேஜை பார்த்து வெறியானவள், வரிந்து கட்டிக் கொண்டு சண்டைக்கு தயாரானாள்.

   சில நிமிடங்கள் கழித்து அவன் இறங்கி வரும் ஓசைக் கேட்டு, கோபமாக பேச வாய் திறந்தவள், அவனது வசீகரிக்கும் தோற்றம் கண்டு வாய் மூடவும் மறந்து நின்றாள். அவளது சல்வாருக்கு மேட்ச்சாக அதே கலரில் உடையை அணிந்திருந்தவன், புருவத்தை உயர்த்திய படி அவளை நோக்கி புன்னகை சிந்த, சுய நிலைக்கு வந்தவள் அமைதியாக அவனோடு இணைந்து காரில் அமர்ந்த போது, அவளது மனசாட்சியே மானாவாரியாக அவளைக் காறித் துப்பியது.

   கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி இங்க ஒரு மானஸ்தி இருந்தா பார்த்தீங்களா? என்ற படி அவளது மனசாட்சி கேட்க, என்னோட சேர்ந்து நீயும் தானே அவரை சைட் அடிச்ச என்று மூளை உரைத்தது.

   வெட்கமா இல்ல அவன் உன்னை ஏமாத்தி கல்யாணம் பண்ணி இருக்கான், அதோட அவங்க அம்மா குணமாகிற வரை தான், உனக்கு அவனோட மனைவிங்கற அந்த பொசிஷன் இருக்கும்.

   பரவாயில்லை, அதோட நான் என் புருஷனைத் தானே சைட் அடிக்கிறேன்,  அதுக்கு எதுக்கு நான் வெட்கப்படணும் நீ வாயை மூடிட்டு உன் வேலையை பாரு.
 
    தனக்குள் பட்டிமன்றம் நடத்திக் கொண்டிருந்தவள், கார் நின்று விட்டதை உணர்ந்து வெளியே எட்டிப் பார்க்க, அவளது தாயும் தந்தையும் ஆதிரனோடு, அவர்கள் வீட்டு வாசலில் நின்றிருந்தனர். கலவரப் பார்வையோடு அவள் ஈஸ்வரைத் திரும்பிப் பார்க்க,

   “என்ன முழிச்சுகிட்டே உட்கார்ந்திருக்க இறங்கு, இன்னைக்கு என் மாமியார் வீட்டுல தான் மதிய விருந்தே, இங்கே ஒரு அட்டனன்ஸ்சை போட்டு தான் கிளம்பனும், இல்லாட்டி பாதில அங்கிருந்து நீ இங்க ஓடி வந்துட்டா என்ன பண்றது.”

    என்று கூறியபடி ஈஸ்வர் காரில் இருந்து இறங்கி விட, இன்று என்ன செய்ய காத்திருக்கின்றானோ என்ற பதைபதைப்போடு, காரில் இருந்து இறங்கியவளோ அவனோடு சேர்ந்து வீட்டு வாசலில் நின்றாள்.

   அவர்களது ஜோடிப் பொருத்தத்தை கண்டு, அவளது பெற்றோர்களுக்கு மனம் நிறைந்து விட்டது. ஆலம் சுற்றி அவர்களை உள்ளே அழைத்து சென்று, முதலில் அவர்களை சாப்பிடச் சொன்னவர்கள், வாழை இலை விரித்து பரிமாற,

    “அங்கிள் நீங்களும் ஆதிரனும் கூட வாங்க, அக்கா இந்த பார்மாலிட்டிஸ் எதுவும் வேண்டாம், நீங்களும் எங்க  கூடவே உட்காருங்க.”

    “இல்ல மாப்ள, நான் கொஞ்ச நேரம் கழிச்சு சாப்பிட்டுக்கறேன் இப்போ பசி இல்லை, அதோட காலையில லேட்டா தான் சாப்பிட்டோம்.”

     “அக்கா நீங்க என்னை எப்பவும் போல தம்பின்னே கூப்பிடலாம், மாப்பிள்ளை எல்லாம் வேணாம், அந்த வார்த்தை என்னை நீங்க தூர நிறுத்தறது போல இருக்கு.”

   தனது வீட்டாரோடு அவன் சகஜமாக பேச தொடங்கி விட, அங்கு நிலா தான் அந்நியமாகத் தெரிந்தாள்.
  
    தனது வீட்டுக்குள்ளேயே தனிமையை உணர்ந்தவள், உணவை முடித்துக் கொண்டு பாத்திரங்களை எடுத்து வைக்கும் வேலையில், அவளது தாயின் பின்னே சமையலறைக்குச் சென்றாள்.

 

 

Click on a star to rate it!

Rating 4.8 / 5. Vote count: 6

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
6
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

2 Comments

  1. நல்லா காமெடி பண்ற விஷ்வா .. நிலாவோட மனசாட்சி 🤣🤣🤣 .. இப்படியே மாத்தி மாத்தி பார்த்து ரசிச்சுக்கிட்டே இருங்க ..