Loading

 ஈஸ்வர பாண்டியன் தாத்தாவின் பேச்சை கேட்டு, குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் பதறிக் கொண்டு, அவர் அருகே செல்ல, விஷ்வாவோ ஒரே ஒரு நிமிடம், தனது தாத்தாவின் மீது, ஒரு வெற்றுப் பார்வையை வீசியவன், அடுத்த நொடியே அந்த வீட்டை விட்டு வெளியேறி விட்டான்.

   சிவகாமி மற்றும் செல்லம்மாவோடு அந்த ஊரை விட்டே சென்ற விஷ்வா, தனது அன்னையின் கம்பெனியான ஈஸ்வர் குரூப்பை, வழி நடத்தத் தொடங்கினான்.

    பாண்டியன் குரூப்பை தற்போது மருது பாண்டியும், அவரது பிள்ளை சரவணனும் தான் கவனித்துக் கொள்கிறார்கள். திடீரென்று ஏற்பட்ட இந்த பிரச்சனை அந்த குடும்பத்தையே நொறுக்கி விட்டது.

    அதன் பிறகு மருது பாண்டி, சூர்யா என்று பலர் வந்து பேசியும் விஷ்வா அவர்களோடு செல்லத் தயாராக இல்லை. ஒவ்வொரு முறையும் அவர்களை காண்பதையே தவிர்த்து வந்தான்.

சூர்யா மட்டும் விஷ்வா அவனை தவிர்த்தாலும், எப்படியாவது மாதம் ஒருமுறை சிவகாமியையும் அவனையும் பார்க்க இங்கு வந்து விடுவான்.

சூர்யாவை தவிர தனது மற்ற குடும்பத்தினர்களிடம் இருந்து தள்ளியே இருந்தன் விஷ்வா. அவர்களது அலைபேசி அழைப்பை கூட அவன் எடுப்பது இல்லை.

    இப்போது வரை, செல்லமா மட்டுமே அவனோடு துணையாக இருந்து, சிவகாமியை கவனித்துக் கொள்கிறார்.

   திடீரென்று அடுத்தடுத்து ஏற்பட்ட அதிர்ச்சிகள், சிவகாமியின் மூளையை பாதிக்க, அவரது சித்தம் கலங்கி போனது. அதோடு ஸ்ட்ரோக் வந்ததால், எழுந்து நடக்கும் சக்தியையே அவரது கால்கள் இழந்து, படுத்தப் படுக்கையாகி விட்டார்.

   முன்பெல்லாம் ஏதாவது உளறிக் கொண்டே இருப்பார்,  சில மாதங்களாகத் தான் அவ்வாறு உளறுவது கூட குறைந்துள்ளது. இருந்தாலும் எங்கோ வெறித்த பார்வை மட்டும், இன்னும் அவரிடம் இருந்து கொண்டே இருக்கிறது.

  சில வருடங்கள் ஈஸ்வர் குரூப்பை முன்னேற்றப் பாதைக்கு கொண்டு செல்லவும், தனது அன்னையை குணப்படுத்துவதிலுமே விஷ்வாவின் நாட்கள் சென்றது.
  
     சிவகாமியை பல ஸ்பெஷலிஸ்ட் டாக்டர்களிடமும் காட்டி சிகிச்சையை தொடங்கியவன், கையோடு ஈஸ்வர் குருப்பையும் முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச் சென்றான்.

   தற்போது தொழிலில் முதல் இடத்தை அவன் பெற்று விட்டாலும், அவனது அன்னையோ இன்னும் கவலைக்கிடமான அதே நிலையில் தான் இருக்கிறார்.

   அதன் பிறகு தான், தனது இந்த நிலைக்கு காரணமானவர்களை தேடத் தொடங்கினான் விஷ்வா. முதலில் அவன் சந்தேகித்தது என்னவோ, அன்று அவனது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்திய, அவன் தொழில் எதிரிகளைத் தான்.

    அந்த வட்டாரத்தில் சல்லடையிட்டு தேட தொடங்கினான், ஆனால் எவ்வளவு அடித்தும், எத்தனை தண்டனைகள் கொடுத்தும் கூட, ஒருவரும் அதில் இல்லை என்று தெரிய வர, பிறகு யாராக இருக்கும் என்று யோசித்துக் கொண்டிருந்தவனுக்கு, திடீரென்று அந்த எண்ணம் தோன்றியது.

     அன்று ரிதன்யாவின் தாயும் தந்தையும் பேசிக் கொண்டிருந்த போது பேச்சுவாக்கில், மணமகனை பற்றி ரிதன்யா முன்பே நல்லபடியாக கேள்விப் படவில்லை என்று கூறியதோடு, திருமணத்தையும் நிறுத்த முற்ப்பட்டாள் என்று அவர்கள் கூறிய, அந்த விஷயம் அவனது சிந்தனையை தூண்டியது.

  ஒருவேளை இது ரிதன்யாவின் வேலையாக இருக்குமோ என்று, அவர்கள் குடும்பத்தை கண்காணிக்கத் தொடங்கியவன், அவளது முழு விபரங்களையும் சேமிக்கத் தொடங்கினான்.

   அப்போது தான் அவளது பள்ளிக் காதல் பற்றியும், இதுவரை வந்த வரன்களை அவள் நிராகரித்தது பற்றியும் தெரிய வர, அவனது சந்தேகம் ஊர்ஜிதமானது.

   கண்களில் கோபம் மின்ன தனது பினாமி ஆட்கள் மூலமாக, அவளது  தந்தைக்கு நெருக்கடியை ஏற்படுத்தி, ஒரு சட்ட சிக்கல் மூலம் அவரை ஜெயிலுக்கும் அனுப்பி விட்டான்.

   அவர் வாங்கிய பணத்துக்காக அவரது குடும்ப சொத்து மொத்தத்தையும் கைப்பற்றியவன், ரிதன்யாவின் தந்தைக்கு எதிராக அந்த ஆதாரங்களை வலுப்படுத்தினான்.

    தனது தந்தையை காப்பாற்ற ரிதன்யா முயற்சி எடுத்த போது தான், இவை அனைத்தும் விஸ்வேஸ்வரனின் வேலை என்று அவளுக்கு தெரிந்தது. நேராக அவன் காலில் சென்று விழுந்தவள், தன் தந்தையை காப்பாற்றுமாறு கெஞ்ச, அப்போது தான் விஷ்வா அவளுக்கு செக் வைத்தான்.

  “ உன் அப்பாவ நான் காப்பாத்தணும்னா, என்னோட ஒரு கேள்விக்கு பதில் தெரியணும். அன்னைக்கு என்னோட அம்மாகிட்ட, என்னை பத்தி பேசிட்டு போன அந்த பொண்ணு யாரு?”

   “அது…அது…யாருன்னு எனக்கு எப்படி தெரியும்? நீங்க என்ன கேட்கறீங்கன்னே  எனக்கு புரியல.”

    “அப்படியா ஆனா நீ என்னை பத்தி தப்பு தப்பா, உங்க அப்பா அம்மா கிட்ட சொல்லி இருக்க, அதோட ஏற்கனவே அந்த கல்யாணத்தை நிறுத்த முயற்சி பண்ணி இருக்க. அதுக்கு அப்புறமா தான், எங்க வீட்ல இதெல்லாம் நடந்திருக்கு, இத வச்சு பார்க்கும் போது, இதுக்கும் உனக்கும் எந்தவிதமான சம்பந்தமுமே இல்லைன்னு என்னை நம்ப சொல்றியா?

    உண்மைய சொன்னா, உன் அப்பா ஜெயில்ல இருந்து எந்த சேதாரமும் இல்லாம வெளியே வருவார், அதோட உங்க சொத்துக்களோட, உன் அம்மாவையும் பாட்டியையும் கூட நல்லபடியா, உங்க வீட்டுல கொண்டு போய் விடுவேன். இல்லாட்டி அவங்க வாழ்க்கை முழுக்க என்கிட்ட கைதியா தான் இருக்கணும், எப்படி வசதி?”

    அதே நேரம் தனது நிச்சயத்திற்காக அழைப்பு விடுக்க, உதயநிலா ரிதன்யாவின் அலைபேசி எண்ணுக்கு   அழைக்க, அவள் பெயரைக் கண்டு திடுக்கிட்டவளோ போனை அவசரமாக கட் செய்ய முயன்றாள்.

   அதற்குள் ரிதன்யாவின் முக மாற்றத்தை கண்டு, விஷ்வாவின் மூளையில் பொரி தட்ட, அதை அவளிடம் இருந்து பறித்து, அட்டென்ட் செய்தவன் மொபைலை ஸ்பீக்கரில் போட்டிருந்தான்.

மறுமுனையில் தனது தோழி தான், கேட்டு கொண்டிருக்கிறாள் என்று நினைத்து, படப்படவென்று சரளமாக உதயநிலா பேச தொடங்கி இருந்தாள்.

   “ ஓய் தன்யா, நீ எப்போ எப்பன்னு கேட்டுட்டு இருந்த, என்னோட நிச்சயதார்த்தம், கூடிய சீக்கிரமே நடக்க போகுது.”

தற்போது தான் பேசா விட்டால், விஷ்வாவிற்கு நிலாவின் மீது சந்தேகம் ஏற்படக் கூடுமே? என்று பயந்து போன ரிதன்யா, தனது பயத்தை மறைத்துக் கொண்டு, நிலாவிடம் பேசத் தொடங்கினாள்.

   “அப்படியா ரொம்ப சந்தோஷம் டி, நான் கொஞ்சம் பிஸியா இருக்கேன், அப்புறமா போன் பண்ணவா?”

    “ஆமா அப்படியே பண்ணிட்டாலும், நீ நான் பேசறதுக்கு ம்ம் மட்டும் கொட்டு, மத்ததை எல்லாம் நானே பேசிக்கிறேன். கேக்குற அளவுக்கு டைம் இருக்குல்ல? இல்லாட்டியும் நான் பேசறதை கேட்டு தான் ஆகணும் நீ.

   உனக்கு வாட்ஸ் அப்ல, நிச்சய பத்திரிக்கையை மெசேஜ் பண்ணி விடுறேன், கண்டிப்பா ரெண்டு வாரத்துக்கு முன்னாடியே நீ வந்துடனும்.

  ஏன்னா அதுக்கு அப்புறம் நான் இங்கு இருக்க மாட்டேன்,  என் கல்யாணம் நடக்க போறது ஆன் சைட்ல. உனக்கு தான் தெரியுமே அப்பாக்கு கொஞ்சம் மெடிக்கல் பிராப்ளம் இருக்கு, அதுக்கு  ஆபரேஷன் பண்ணணும்.

   அத்தான், அவர் ஒர்க் பண்ற இடத்திலேயே, ஆபரேஷன் சம்பந்தமா எல்லாமே கேட்டு விசாரிச்சு வச்சுட்டாரு, ஆனா என்னோட அம்மாவும் அப்பாவும் எங்க கல்யாணம் முடியாம, இந்த ஆபரேஷனுக்கு ஒத்துக்க மாட்டேன்னு சொல்லிட்டாங்க, அதனால இங்க இந்தியால எங்களோட நிச்சயதார்த்தத்தை முடிச்சிட்டு, அங்க ஆன்சைட்ல போய் கல்யாணம் பண்ணிக்க போறோம். அதுக்கு அப்பறம் தான் அப்பாவோட ஆபரேஷன், சோ இந்த வாய்ப்பை தவற விட்டா என்னை நீ, இனி பார்க்கவே முடியாது.

    நான் எப்படி உன் கல்யாணத்துக்கு வந்து, உன்னை சிறப்பா கவனிச்சனோ, அதே மாதிரி நீயும் என் நிச்சயத்துக்கு வரனும். ஆனா அப்ப நான் உன் கல்யாணத்தை ப்ளான் பண்ணி நிறுத்தின மாதிரி, நீ இத நிறுத்த தேவையில்ல, நீ வந்த மட்டும் போதும் சரியா?”

    விஷ்வா கால் மேல் கால் போட்டபடி, வேட்டையாடும் சிறுத்தையின் கண்களைப் போல், கூர்மையாக ரிதன்யாவைப் பார்க்க , அவளது கைகளோ தந்தியடிக்கத் தொடங்கியது.

    “என்ன தன்யா நானே பேசிக்கிட்டு இருக்கேன், நீ பேச மாட்டேங்குற? ஓ ஆபீஸ்ல இருக்க இல்ல, ஓகே வீட்டுக்கு வந்துட்டு மறக்காம எனக்கு கூப்பிடு சரியா, பாய் லவ் யூ.”

   ரிதன்யாவின் போனை அருகில் இருந்த தனது வேலையாளிடம் நீட்டிய விஷ்வா, ட்ரேஸ் ஹர் என்று கூற, அடுத்த அரைமணி நேரத்தில் உதயநிலாவை பற்றிய, அனைத்து விவரங்களும் அவனது கைக்கு வந்து விட்டது.

   அதன் பிறகு தான், ரிதன்யாவின் குடும்பத்தை பகடையாக வைத்து, அவளை தன் கை பொம்மையாக ஆட்டி வைத்தான். அதோடு உதயநிலாவை சுற்றி, அவளே அறியா வண்ணம் தனது சதிவலையை பின்ன தொடங்கினான்.

   அதே நேரத்தில் தான், அவனது தாய் சற்று குணமாகி, உளறுவதை நிறுத்தி இருந்தார்.
 
    அவர் முழுவதுமாக குணமாக வேண்டும் என்றால், அவர் மனதிற்கு நெருக்கமான இடத்திற்கு அவரை அழைத்துச் சென்று, சந்தோஷமாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்று டாக்டர் அவனுக்கு ஆலோசனை கூறி இருந்தார்.

   சிவகாமி அம்மாவின் சந்தோஷம் முழுவதுமே, பாண்டியன் இல்லம் தான் என்று அவன் அறிவானே, ஊருக்கு செல்ல வேண்டும் என்றால் நிலாவை தனது மனைவியாக்க வேண்டும், அது தான் அவனது அன்னையின் விருப்பமும் கூட,  அதனால் அடுத்தடுத்து திட்டங்கள் தீட்டி, உதயநிலாவை தனது மனைவியாக்கிக் கொண்டான்.

   நடந்தவைகள் அனைத்தையும் செல்லமா கூறி முடிக்க, எங்கேயோ வெறித்தபடி பார்த்துக் கொண்டிருந்த சிவகாமியின் கைகளை பிடித்துக் கொண்டு, கண்ணீர் வடித்தாள் உதய நிலா.

உதய நிலாவிற்கு ஒன்று மட்டும் நன்றாக புரிந்தது, விஸ்வேஸ்வரனின் திருமணத்தை நிறுத்த யாரோ ரிதன்யாவை பயன்படுத்த நினைத்ததிருக்கிறார்கள். ஆனால் எதிர்பாரா விதமாக தான் நுழைந்ததால், தன்னை பகடையாக வைத்து, தங்களுக்கு வேண்டியதை சாதித்திருக்கிறார்கள்.

ஒருவேளை இது விஷ்வாவின் அத்தை விஜயாவின் வேலையாக இருந்திருந்தால், ரிதன்யாவுடனான திருமணம் நின்ற பிறகு அந்த வாய்ப்பை பயன்படுத்தி, தனது மகளை விஷ்வாவுக்கு திருமணம் செய்து வைத்திருக்கலாமே? ஆனால் பெரியவர்கள் அதற்கு சம்மதம் தெரிவித்த போது கூட, விஜயா மகிழ்ச்சியோடு தனது மகளை அவனுக்கு திருமணம் செய்து கொடுக்கவில்லையே? அங்கு நடந்ததே வேறாக அல்லவா இருந்திருக்கிறது. அப்படி என்றால் இது யாருடைய வேலையாக இருக்கும்?

அன்று தன்னிடம் வந்து பேசியவள் கூட, உண்மையாகவே அவளது அத்தை மகள் தானா? இத்தனை பொய்களுக்கு இடையில், இது மட்டும் எப்படி மெய்யாக இருக்கக் கூடும்?

விஷ்வாவின் பரம்பரைச் சங்கிலி எப்படி அவர்கள் கைவசம் வந்திருக்கக் கூடும்? அப்படி என்றால் அந்த குடும்பத்திலேயே ஒரு கருப்பு ஆடு மறைந்துள்ளதா? குடும்பத்தில் உள்ளவர்களின் ஒத்துழைப்பு இல்லாமல், எவ்வாறு அந்த பெண், பாண்டியன் இல்லத்தினுள் நுழைந்து, தைரியமாக நடித்திருக்க முடியும்?

அடுத்தடுத்து மூளைக்குள் படையெடுக்கும் விடையில்லா கேள்விகளால், களைப்புற்றவள் தலையை பிடித்தபடியே சோபாவில் சரிந்தாள்.

Click on a star to rate it!

Rating 4.8 / 5. Vote count: 6

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
7
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

3 Comments

  1. நிலா சிறப்பு மா … நல்லா கம்பீரமா இருந்தவங்களை இப்படி படுக்க வச்சுட்ட … நீயா உன் வாயால வந்து விஷ்வா கிட்ட மாட்டிக்கிட்ட … இப்போ நீயே எல்லாத்தையும் சரி பண்ண போறியா … யார் கிட்ட விஷ்வேஷ்வரன் கிட்ட உங்க சேட்டையை காட்டியிருக்கீங்க … ரிதன்யா வுக்கு இதெல்லாம் பத்தாது …

    1. Author

      செஞ்ச தப்புக்கு அவ தானே சிஸ் சரி பண்ணி ஆகனும்