
ரிதன்யாவின் தாய் விமலாவோ பொறுமை இழந்து, தனது கணவரிடம் கத்தத் தொடங்கி விட்டார்.
“என்னங்க, எதுக்கு இன்னும் பொண்ணு கொடுக்கறதை பத்தி பேசிட்டு இருக்கீங்க? அவங்க பையன் கேரக்டர் எப்படின்னு தெரிஞ்சதுக்கு அப்பறமும், நம்ம பொண்ணை இந்த பாழுங்கிணத்துல பிடிச்சுத் தள்ள, நமக்கு என்ன தலை எழுத்தா?
நம்ம பொண்ணு அப்பவே சொன்னா, இந்த மாப்பிள்ளை சரியில்லை கல்யாணத்தை நிறுத்துங்கன்னு, நாம தான் கேட்காம அவளை கட்டாயப்படுத்தி, இந்த கல்யாணத்தை பண்ணிக்க சொன்னோம்.
இப்ப பாருங்க அவங்க அம்மா வாய் மூலமாவே, உண்மை வெட்ட வெளிச்சம் ஆகிடுச்சு இல்ல, இனியும் நமக்கு என்ன தலை எழுத்தா?
உங்க வியாபாரமும் வேண்டாம், இந்த மாப்பிள்ளையும் வேண்டாம், நாம இப்பவே ஊருக்கு கிளம்பலாம் வாங்க.”
“விமலா இது நம்ம பொண்ணோட வாழ்க்கை பிரச்சனை, மணமேடை வரை வந்து,கடைசி நேரத்துல இப்படி கல்யாணம் நின்னு போச்சுனா, அது எவ்ளோ பெரிய சங்கடம் தெரியுமா? நம்ம பொண்ணோட எதிர்கால வாழ்க்கையையே அது பாதிக்கும்.”
“அதுக்காக அந்த பையன் தப்பானவன்னு தெரிஞ்சும், ஊர் உலகத்துக்காக நம்ம ஒரே பொண்ணை, அவனுக்கு கட்டி கொடுத்து, அவ வாழ்க்கையை நாசமாக்க சொல்லறீங்களா?
அவங்க அம்மாவுக்கு தெரிஞ்சே ஒரு பொண்ணு, தெரியாம எத்தனை பொண்ணுங்களோ, இந்த குடும்பத்துல என் பொண்ணை கல்யாணம் பண்ணி கொடுக்க, எனக்கு இஷ்டம் இல்ல.”
“போதும் இதுக்கு மேல ஒரு வார்த்தை பேசினா, நான் மனுசனா இருக்க மாட்டேன், இந்தக் கல்யாணம் நடக்காது முதல்ல வெளியே போங்க.”
இவர்கள் பேச ஆரம்பிக்கும் போதே, விஷ்வேஸ்வர் பாண்டியன் இல்லத்திற்கு வந்து விட்டான். தனது அன்னைக்கு உடல்நிலை சரியில்லை என்று கேள்விப்பட்டு, மண்டபத்தில் இருந்து பறந்தோடி வந்திருந்தான்.
அதற்கு மேலும் அங்கு இருக்க விரும்பாமல், ரிதன்யாவின் தாயும் தந்தையும் வெளியே கிளம்ப, ஈஸ்வர பாண்டியன் அவர்களை சமாதானப் படுத்தியபடியே அவர்களின் பின்னே சென்றார்.
அறைக்குள் ராஜலட்சுமியும் விஷ்வாவும் தான் சிவகாமியுடன் இருந்தனர். ராஜலட்சுமி தான் முதலில் பேச்சை தொடங்கினார்.
“அக்கா என்னாச்சு உங்களுக்கு? நம்ம புள்ளய பத்தி யார் இப்படி தப்பு தப்பா உங்க கிட்ட சொன்னது? எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்குக்கா, நீங்களே இப்படி பேசலாமா? நம்ம பிள்ளையை பத்தி உங்களுக்கு தெரியாதா?”
“இல்ல ராஜி இந்த… இந்த சங்கிலியை பத்தி உனக்கே தெரியும் இல்ல, இது அந்த பொண்ணோட கழுத்துல இருந்துச்சு. அதுவும் என் பையன் அந்த பொண்ணை கல்யாணம் பண்ணிக்கிட்டு, இதை அவனே தன் கையால போட்டும் விட்டிருக்கான் போல, எனக்காக தான் இந்த கல்யாணத்துக்கு சம்மதிச்சிருக்கான் என் புள்ள, அவ கடைசியா என்ன சொன்னா தெரியுமா?
உங்க பையன் ஏமாத்துனதுல, கடைசி பொண்ணு நானாவே இருக்கட்டும், இனி அவரால் வேற எந்த பெண்ணோட வாழ்க்கையும், பாதிக்கப்படாம பாத்துக்கங்கன்னு சொன்னா. அதோட உங்க பரம்பரை சங்கிலி… இனி எனக்கு தேவையே இல்லை, ஏன் உங்க பையனும்… பையனும் எனக்கு வேணாம்னு சொல்லி, இதை கழட்டி கொடுத்துட்டு போயிட்டா, அப்படிப்பட்ட பொண்ணு தப்பாவா சொல்லி இருப்பா?”
“ஐயோ அக்கா இந்த சங்கிலி…”
என்று ராஜலட்சுமி ஏதோ பேச வர, தனது அன்னையின் கண்கள் எங்கோ நிலைத்து இருப்பதையும், அவர் தனக்குத் தானே பேசிக் கொண்டு இருப்பதையும் கண்டு, கை நீட்டி அவரைத் தடுத்த விஷ்வா,
“சித்தி வேண்டாம்… இனி இதை பத்தி எதுவுமே யாருக்கும் சொல்ல வேண்டாம் விட்டுடுங்க. இப்போதைக்கு அம்மா கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கப்படும். ”
அதற்கு மேல் அங்கு நிற்காமல் ராஜலட்சுமி வெளியேறி விட,
சிவகாமி முனுமுனுப்பதை கேட்டபடியே அவர் அருகில் வந்தான் விஷ்வா,
“என் மருமக…இந்த குடும்பத்து மருமக…இது வேண்டாம்னு கழட்டி கொடுத்துட்டு போயிட்டா…என் மருமக… அவ என் மருமக…”
அப்படியே கண்மூடி சரிந்த அவரை, கை தாங்கலாக பிடித்துக் கொண்ட விஷ்வா, அவசரமாக மருத்துவருக்கு அழைத்திருந்தான்.
மண்டபத்தில் கல்யாணம் நின்று விட்டதாக மட்டும் கூறி, மணமகள் வீட்டார் அங்கிருந்து அவசரமாக கிளம்பிக் கொண்டிருந்தனர். விமலாவின் மூலம் மாப்பிள்ளையை பற்றிய செய்தி தெரிந்து, ரிதன்யாவின் பாட்டி வாய்க்கு வந்தபடி நன்றாக அவர்கள் குடும்பத்தாரை திட்டிவிட்டுத் தான், அங்கிருந்து கிளம்பி இருந்தார்.
ஈஸ்வர பாண்டியன் அதற்கு மேல் அவர்களை சமாதானப்படுத்த முடியாமல், இல்லத்திற்கு திரும்பி வந்த போது தான், சிவகாமி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட விஷயம் தெரிந்தது, உடனே குடும்பத்தாரோடு அங்கே ஓடினார்.
மருத்துவமனையில் சிவகாமிக்கு ட்ரீட்மென்ட் நடந்து கொண்டிருக்க, வெளியே விஷ்வா பரிதவிப்போடு டாக்டர்களின் மறுமொழிக்காக காத்திருந்தான்.
குடும்பத்தார் அனைவரும் அவனுக்கு சற்று தள்ளி இருந்த, விஐபிக்களுக்கான அறையில், கவலையோடு குழுமி இருந்தனர். மருதுபாண்டி தான் பேச்சை தொடங்கினார்.
“அப்பா இந்த கல்யாணம் நின்னு போச்சுன்னா, அது நம்ம குடும்பத்துக்கு பெரிய தலைகுனிவு, வேணும்னா விஜயா பொண்ணை நம்ம பையனுக்கு கட்டி வச்சிடலாமா?”
சற்று தள்ளி தன் மகளோடு அமர்ந்திருந்த விஜயா,
“முதல்ல என் பொண்ணை கல்யாணம் பண்ணிக்கங்கன்னு, நானே வீடு தேடி வந்து கேட்ட போது, அதை இதை சொல்லி தட்டி விட்டீங்க, இப்போ ஒரு பிரச்சனை வந்ததும், குடும்ப மானம் போக கூடாதுன்னு, போனா போகுதுன்னு என் பொண்ண அவனுக்கு, கட்டி வைக்கணும்னு நினைக்கிறீங்களா?
அது தான் உங்க பேரன் சொல்லிட்டானே, தங்கச்சியா பார்த்தவளை என்னால தாரமா நினைச்சுக் கூட பார்க்க முடியாதுன்னு, அப்போ இப்ப மட்டும் எப்படி, என் பொண்ணை தன்னோட மனைவியா ஏத்துப்பான்.”
“போதும் விஜயா நிறுத்து, இது தான் உனக்கான நேரம்னு மனசுல இருந்த நஞ்சை கொட்டறயா? ஏற்கனவே எல்லாரும் மன வருத்தத்துல இருக்காங்க, நீ எதையாவது பேசி அவங்கள இன்னும் காயப்படுத்தாத.”
“என்னமோ நான் தான் எல்லாத்துக்கும் காரணங்கறது போல பேசறீங்க? எல்லா விஷயத்துலயும் என் பெரிய மருமக போல வருமான்னு பெருசா பேசுவீங்களே, உங்க மருமக தன் மகனை பத்தி சொன்னதை கேட்டு தான், இந்த கல்யாணத்தையே சம்பந்தி வீட்டுக்காரங்க நிறுத்திட்டு, குடும்பத்தையே காரி துப்பிட்டு போறாங்க.”
“விஜயா உன் மனசை தொட்டு சொல்லு நம்ம விஷ்வா அந்த மாதிரி பண்ணி இருப்பானா? எவனோ நம்ம குடும்பத்து மேல இருக்க பகையை தீர்த்துக்க, சிவகாமியை பகடைக்காய் ஆக்கி, இப்படி கழுத்தறுத்துட்டான்.
சொல்லப் போனா சிவகாமி தன்னோட சுயத்துலயே இல்ல, ஏதோ மனவேதனைல அவ அப்படி பேசிட்டு இருக்கும் போது, பொண்ணு வீட்டுக்காரங்க அதை கேட்டுட்டாங்க. கல்யாணம் நின்னது கூட தெரியாம, தன் பாட்டுல அவ பேசிட்டு இருக்கா பாவம்.
புதுசா வந்த சம்பந்தி வீட்டுக்காரங்களுக்கு தான், விஷ்வாவை பத்தி தெரியல, அவனை சின்னதுல இருந்து பார்த்துட்டு இருக்க நீயே, இப்படி பேசலாமா?”
ஏதோ வாயில் வந்ததை உடனே பேசிவிட்ட விஜயா, அதன் பிறகு தான் தனது தவறை உணர்ந்து வருந்தினார். தனது கணவரிடம் வந்த தேவகி,
“விஜயா இப்படி பேசினாலும் அவ சொல்றது கரெக்ட் தானேங்க, விஷ்வா அகல்யாவை தங்கையா பார்க்கறதா சொல்றான். அப்புறம் எப்படி அவளை கல்யாணம் பண்ணிக்க ஒத்துக்குவான்?”
அந்த நேரத்தில் ராஜலட்சுமி முன் வந்து,
“மாமா வேணும்னா என் அண்ணன் பொண்ணு நித்திலாவை கேட்டு பார்க்கலாமா? அண்ணே உங்க மேல நிறைய மரியாதை வச்சிருக்காரு கண்டிப்பா இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்குவாரு.”
வேறு வழி இல்லாததால், ஈஸ்வர பாண்டியனும் சரி என்று கூற, அடுத்த அரைமணி நேரத்திலேயே நித்திலா தான் மணமகள் என்று உறுதியானது.
வீட்டில் அனைவரும் நிச்சயத்துக்காக தயாராகிக் கொண்டிருந்தனர், ஒரு பக்கம் நித்திலாவிற்கு மணப்பெண் அலங்காரம் நடந்து கொண்டிருக்க, மறுபுறம் மாப்பிள்ளை அழைப்பிற்கு உறவினர்கள் தயாராகிக் கொண்டிருந்தனர்.
நிச்சயத்துக்கு வேண்டிய ஏற்பாடுகளை செய்து விட்டுத் தான், விஷ்வேஸ்வரனிடம் இந்த தகவல் பகிரப்பட்டது. கோபமாக வீட்டிற்கு வந்தவன், தனது தாத்தாவிடம் அந்த கோபத்தோடே விவாதிக்கத் தொடங்கினான்.
“இப்ப எதுக்காக அவசர அவசரமா இந்த கல்யாண ஏற்பாடு? அங்க அம்மா ஹாஸ்பிடல்ல படுத்திருக்கும் போது, இப்போ என் கல்யாணம் தான் ரொம்ப முக்கியமா? தயவு செஞ்சு இந்த ஏற்பாட்டை எல்லாம் நிறுத்துங்க.”
“இல்ல தம்பி நம்ம வீட்டு கல்யாணம் நின்னது வெளியே தெரிஞ்சா, அது நமக்கு தானே அவமானம். சிவகாமியை நான் சமாதானப் படுத்திக்கிறேன், நீ நம்ம நித்திலா கழுத்துல தாலிய கட்டு.”
“இல்ல தாத்தா எனக்கு இந்த கல்யாணம் வேண்டாம், நான் யாரையும் கல்யாணம் பண்ணிக்கறதா இல்ல.”
“எங்க பேச்சை எல்லாம் மீறும் அளவுக்கு வந்துட்டிங்களா? இல்ல இங்க வந்து சொல்லிட்டு போன பொண்ணு நிஜமாவே உங்க மனைவியா?
இதுக்கு முன்னாடி நடக்க இருந்த அந்த கல்யாணத்தை, நான் தான் ஏற்பாடு பண்ணேன், அதுவும் தொழில் பங்குதாரரே சம்பந்தி ஆனா, பிரச்சனை இருக்காதுன்னு நினைச்சேன். ஒருவேளை எங்களுக்காக தான் இந்த கல்யாணத்துக்கு நீங்க ஒத்துக்கிட்டீங்களா?”
“ஐயோ என்னங்க பேசிட்டு இருக்கீங்க?”
“இரு தேவகி, நீங்க சொல்லுங்க? அந்த பொண்ணு தான் உங்க மனைவியா?”
கண்களை இறுக மூடித் திறந்தவன்,
“ஆமா அது என்னோட மனைவி தான், இதுக்கு மேல இது சம்பந்தமா நான் எதுவும் பேச விரும்பல.”
அதே நேரம் மணப்பெண் அலங்காரத்தோடு, அறையை விட்டு வெளியே வந்து நின்ற, நித்திலாவை கண்ட ஈஸ்வர பாண்டியன் ஒரு முடிவோடு,
“எனக்கு பேச வேண்டி இருக்குது தம்பி, இன்னைக்கு இங்க வந்த அந்தப் பொண்ணு, உன் மனைவியா இருந்தா, அப்ப இனி நீ அந்த பொண்ணோட தான், இந்த வீட்டுக்குள்ள கால் எடுத்து வைக்கணும்.
மருதுபாண்டி இன்னைக்கு உன் புள்ள சரவணனுக்கும், இதோ இந்த பொண்ணு நித்திலாவிற்கும் தான், நிச்சயதார்த்தம் நடக்க போகுது.
இவங்க கல்யாணத்தை கொஞ்ச நாள் கழிச்சு, நல்ல நாள் பார்த்து வெச்சுக்கலாம், இதுல உனக்கு சம்மதமா? அப்பா வீரா உன் பொண்ணு நித்திலாவை என் பேரன் சரவணனுக்கு கொடுக்க உனக்கு சம்மதமா?”
“உங்க வீட்டுல வாக்கப்படறதுக்கே என் பொண்ணு கொடுத்து வச்சிருக்கணும், அது எந்த பேரனா இருந்தா என்னங்கய்யா?”
தேவகி ஏதோ பேச வர,
“இதுக்கும் மேல எதையும் கேட்கற சக்தி எனக்கு இல்ல தேவகி, என் மனசு இப்பவே சுக்கல் சுக்கலா நொறுங்கி போயிருச்சு. இதுலயும் யாருக்காவது பிரச்சனைனா என்னை நேரா சுடுகாட்டுல போய் எரிச்சிட்டு வந்துட்டு, அப்புறம் எல்லாரும் உங்க இஷ்டப்படி இருங்க.”
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


விஷ்வா பாவம் பா நீ … இப்படி மாட்டிக்கிட்ட … என்னமோ போங்க பா … எல்லாரும் விஷ்வா வை தான் கெட்ட பையன்னு சொல்றீங்க … பாவம் சிவகாமி அம்மா இப்படி ஆகிட்டாங்களே …
சரவணன் அகல்யா தான லவ் பண்ணாங்க …
அய்யோ காதல் ஜோடியை வேற பிரிக்க போறாங்களோ … இன்னும் என்னெல்லாம் நடக்க போகுதோ …
சஸ்பென்ஸ் தான் சிஸ்