Loading

  “என் புள்ள வெளியூர்ல பெரிய படிப்பு படிச்சவன், மத்தவங்ககிட்ட ஏதோ ஜாலியா பேசுவன் அவ்வளவு தான்,  அதுக்குன்னு ஒரு பொட்டச்சி நீ, ஆம்பள பையன் மேல கை வைப்பியா?”

   கேட்டுக் கொண்டிருந்த விஷ்வாவிற்கே கோபம் தலைக்கேறியது,

    “தப்பு தான் இந்த நாய் மேல எல்லாம் கையை வைக்க கூடாது, கால  வைக்கணும்.”

   என்று கூறியபடியே ஞானத்தின் வயிற்றிலேயே அவள் ஓங்கி உதைக்க, அதைக் கண்டு அருகில் இருந்த கட்டையை தூக்கிக் கொண்டு ஆத்திரத்தோடு வந்த கந்தசாமியின் கையை பற்றி முறுக்கியவள்,

    “என்ன சொன்ன என்ன சொன்ன பொட்டச்சியா? இந்த நாய் பெரிய ஆம்பளையோ? பொண்ணுங்களை மதிக்க தெரிஞ்சவன் தான்ய்யா உண்மையான ஆம்பள…

    உன் புள்ள பஸ்ல வர்ற பிள்ளைகளை டபுள் மீனிங்ல கிண்டல் பண்றான், அதை எதிர்த்து கேட்டா தப்போ?

   பிள்ளைங்க கொழுப்பெடுத்து போய் தப்பு செஞ்சா, பெத்தவங்க தான் அடிச்சு திருத்தனும், இல்லையா ஊரார் அவனை அடிக்கும் போது பொத்திகிட்டு நிற்கணும். ஆனா நீ இந்த பரதேசிக்கு  சப்போட்டா விக்கிறதோட, திமிரா வேற பேசறயா?

    நாம என்ன தப்பு செஞ்சாலும், நம்மள காப்பாத்த அப்பங்காரன் வருவாங்கற தைரியத்துல தானே, அவன் இப்படி எல்லாம் ஆடறான், முதல்ல உன்னை முட்டிக்கு முட்டி தட்டி உள்ள வச்சா,   அவனுக்கு இருக்க அந்த கொழுப்பு தன்னால கரைஞ்சு போயிடும்.”

   “ஏய் அவன் தப்பே பண்ணி இருந்தாலும், அவனை அடிச்சு தண்டனை கொடுக்க நீ யாரு?”

    “ ம்ம்ம்…இந்த ஏரியா இன்ஸ்பெக்டரோட தங்கச்சி, இப்பவே எங்க அண்ணனுக்கு போன் பண்ணி, போலீஸ் ஜீப்பை அனுப்ப சொல்லறேன்,  அப்பனும் மகனும் ஒரு ரெண்டு வருஷம் ஜெயில்ல இருந்தா தான், உங்க கொழுப்பு குறையும்.”

   நிலாவின் பேச்சிலேயே ஞானம் மற்றும் கந்தசாமியின் உடல், நடுங்க ஆரம்பித்து விட்டது. அப்போது கூட்டத்தில் இருந்து ஓடி வந்த பதிமூன்று வயதுடைய சிறு பெண், நிலாவின் கைகளை பிடித்தபடி,

   “அக்கா வேணாம் க்கா, என் அண்ணனும் அப்பாவும் ஏதாவது தப்பா பேசி இருந்தா, அவங்க சார்பா நான் மன்னிப்பு கேட்டுக்கறேன். எனக்கு ஏற்கனவே அம்மாவும் இல்லை, இந்த ஊர் பெரியவங்களான சிவகாமி அம்மா தான், எனக்கு பணம் கட்டி ஹாஸ்டல்ல தங்க வெச்சு, படிக்க வைக்கறாங்க. இந்த உலகத்தில் எனக்கு இருக்க சொந்தமே, இவங்க ரெண்டு பேரும் தான், அவங்களும் இல்லாட்டி, நான் அனாதை ஆகிடுவேன் க்கா.”

    திரும்பி மீண்டும் இருவரையும்  முறைத்த நிலா அந்த சிறுமியிடம்,

   “உன் பேர் என்னம்மா?”

    “சாந்தி க்கா. “

    “சாந்தி குட்டி இவங்களை உனக்காக விடறேன், இனிமேல் இவனுங்க உன்கிட்ட ஏதாவது பிரச்சனை பண்ணிணாளோ, இல்ல வெளியே எதுவும் வாலாட்டினாலோ,  இந்த பாட்டில்ல இருந்து ஒரே ஒரு சொட்டை மட்டும், இவங்க சாப்பாட்டுல கலந்திடு.

    இது ஒரு விஷேசமான பாய்சன், அவனுங்களை போஸ்ட்மார்ட்டம் பண்ணா கூட, யாராலயும் இது கொலைன்னு கண்டுபிடிக்க முடியாது புரிஞ்சுதா?”

    அவர்கள் இருவரும் அதிர்ந்து போய் நிற்க, நிலா தன் கையில் இருந்த குப்பியே சாந்தியின் கைகளில் கொடுத்து விட்டு, தனது லக்கேஜை பஸ்ஸிலிருந்து இறக்கி, உருட்டிக் கொண்டே ஊரை நோக்கி நடந்தாள்.  விஷ்வாவை நோக்கி திரும்பிய சூர்யா,

   “மாப்ள பார்த்தியா, இந்த சதீஷ் பய  ஒன்னா படிச்ச நம்மகிட்டயே, இப்படி ஒரு தங்கச்சி தனக்கு இருக்கான்னு, சொல்லாம மறைச்சுட்டான் பாரேன்.”

    “டேய் லூசு பயலே, நிலைமையை சமாளிக்க அந்த பொண்ணு புழுகிட்டு போகுது, அவன் கூட தானே நாம காலேஜ் படிச்சோம், எத்தனை தடவை அவங்க வீட்டுக்கு போயிருக்கோம். அவனுக்கு ரெண்டு அண்ணனுங்க தானே இருக்காங்க ஞாபகம் இல்ல?”

    “அட ஆமா ஆனாலும் இது சரியான ஆளு தான் டா, ஜாக்கிசானுக்கே இந்த புள்ள டவ் கொடுக்கும் போலயே?”

   “எனக்கு தெரிஞ்சு அந்த பொண்ணு கொடுத்திட்டு போன ட்ராப்ஸ் கூட, பாய்சனா இருக்காது. எதாவது வேற லிக்விட்டா தான் இருக்கும். “

   “ இருக்கும் இருக்கும், ப்பா என்னா அடி…பார்த்துட்டு இருந்த எனக்கே கண்ணைக் கட்டிடுச்சு, ஆமா எப்பவுமே இந்த மாதிரி அநியாயத்தை கண்டா பொங்கறது, அதோட இந்த ஆக்சன் சீக்குவன்ஸ் எல்லாமே, ஹீரோக்குதான வைப்பாங்க, ஆனா இப்போ பொண்ணுங்களே அதை எல்லாம் கையில எடுக்க ஆரம்பிச்சுட்டாங்க போலயே, அப்புறம் பசங்க நாம என்னதான்டா பண்றது.”

  “ ம்ம்ம்…பொத்திகிட்டு…வேடிக்கை பாரு?”

   “சரி தான், ஆனா ஒன்னு மாப்ள இந்த பிள்ளையை கட்டிக்க போறவனுக்கு கோவில் கட்டி கும்பாபிஷேகமே பண்ணலாம், தப்பு செய்யற  அந்நியனுக்கே இந்த அடின்னா, ஆத்துக்காரனோட நிலைமையை என்னன்னு சொல்றது… எந்த அப்பாவி மாட்டிக்கப் போறானோ பாவம்.”

      பாண்டியன் இல்லத்தில் மணப்பெண்ணுக்கு அனுப்ப வேண்டிய சீர்வரிசை தட்டுக்கள், வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டுக் கொண்டிருந்தது. ஓரத்தில் நின்றபடி தன் கண்களால் யாரையோ வெகு நேரமாக தேடிக் கொண்டிருந்தாள் அகல்யா.

   சீர்வரிசை தட்டில் மணமகளுக்கான புடவையை கொண்டு வந்து வைத்த மேனகா, இவளது விழி அலைப்புறுதலைக் கண்டு,

   “என்னாச்சு அகல்யா? யாரை தேடிட்டு இருக்க?”

    “அது…அது…அண்ணி…அம்மாவை அம்மாவை கொஞ்ச நேரமா காணோம் அதுதான் எங்கன்னு தேடிக்கிட்டு இருக்கேன்.”

   “ஓ அத்தையா, கல்யாணப் பொண்ணை சடங்கு முடிஞ்சதும் ஆத்தங்கரைக்கு அவங்க தானே கூட்டிட்டு போகணும், அது தான் அப்பவே, அவங்க தங்கி இருக்க இடத்துக்கு அத்தை போயிட்டாங்க, அகல்யா வெத்தலை பாக்கு தட்டுல, பூ வைக்க மறந்துட்டாங்க போல, உள்ள கவர்ல இருக்குது கொஞ்சம் அதை எடுத்துட்டு வாயேன்.”

   தலையை ஆட்டிய படியே மீண்டும் கண்களால் சுற்றித் துலாவி விட்டு, அவள் உள்ளே செல்ல, அதே நேரத்தில் தன்  ஹுல்ஸ் காலணிகளால் தரையை அதிரவிட்ட படி, கோப முகத்தோடு வாய் எதையோ முணுமுணுக்க, தனது ட்ராலியை தள்ளிக் கொண்டு வீட்டினுள்  நுழைந்தாள் ராஜலட்சுமியின் அண்ணன் மகளான நித்திலா.

    “என்னடி ஆச்சு எதுக்கு இப்படி தரையை பொளந்துகிட்டு வர்ற, ஆமா நீ ஏசி கார்ல தானே வந்த, அதுக்கு எதுக்கு இப்படி வேர்த்து கொட்டுது.”

    “எல்லாம் உன் தொம்பியால தான், எங்க உங்க அம்மா கூப்பிடு அவங்களை, புள்ளைய பெக்கச் சொன்னா தொல்லையை பெத்து வச்சிருக்காங்க.

    அத்தை எதுக்கு என்னை கூப்பிடறதுக்கு அவனை அனுப்பி வெச்சாங்க? வொர்க் முடிச்சுட்டு கிளம்புறதுக்கே எனக்கு ரொம்ப நேரம் ஆயிடுச்சு, இதுல ட்ரெயின் வேற லேட்.

   என் ஐப்ரோ கொஞ்சம் திருத்தனும்,   அந்த பார்லர்கிட்ட பத்து நிமிஷம் நிறுத்துங்கன்னு சொன்னா, உன் தம்பி அய்யோ அதெல்லாம் முடியாது ஏற்கனவே வீட்ல பங்க்ஷன் ஆரம்பிச்சிருப்பாங்க, வீட்ல போய் நானே அந்த முடியை கத்தரிக்கோல் வச்சு வெட்டி விடறேன்னு சொல்லி, இழுத்துட்டு வந்துட்டான். பாண்டியன் குரூப் கல்யாணம்னா சும்மாவா எத்தனை விஐபிஸ் இதுக்கு வருவாங்க, அதோட எவ்வளவு பிரமாண்டமா நடக்கும், அதுல நான் அழகா தெரிய வேணாம். ”

   மேனகா அவள் கூற்றில் தலையில் அடித்துக் கொள்ள, அதே நேரம் பூவோடு வெளியே வந்த அகல்யா நித்திலாவை கண்டு,

   “அடடே நித்திலாக்கா எப்படி இருக்கீங்க? எப்ப வந்தீங்க? அத்தை  நீங்க ட்ரைன்ல வர்றதா சொல்லி இருந்தாங்க, ட்ரெயின் வந்து ரொம்ப நேரம் ஆகியிருக்குமே, ஏன் இவ்வளவு லேட்?”

     தனக்கு பின்னால் உறவினர்களிடம் பேசிக் கொண்டிருந்த சரவணனை, ஓரக்கண்ணால் பார்த்த நித்திலா, மனதிற்குள் மாட்டுனடா பம்பரக்கட்டை மண்டையா என்று நினைத்து படி,

    “ஆமா அகல்யா வண்டி என்னமோ முன்னாடியே வந்திடுச்சு, ஆனா இந்த சரவணன் மாமா இருக்கார் பாரு, அவர் தான் இப்பவே அங்க போய் என்ன பண்ண போற, வா நான் உனக்கு குளுகுளுன்னு ஐஸ்கிரீம் வாங்கி தரேன்னு பார்லருக்கு கூட்டிட்டு போயிட்டாரு.

   அங்க போய் நான் வேணான்னு சொல்லியும் கேட்காம, ரெண்டு மூணு ஐஸ்கிரீமை ஆர்டர் பண்ணி, ஊட்டி வேற விட்டு பெரிய தொல்லை பண்ணிட்டாரு. அதெல்லாம் முடிச்சிட்டு வர்றதுக்கு தான் ரொம்ப நேரம் ஆயிடுச்சு.”

    அவள் பேசப் பேசவே அகல்யாவின் முகம் செங்கொழுந்தானது, அவள் அங்கு நின்று கொண்டிருப்பதை கண்டு, பேசிக் கொண்டிருப்பவரை சமாளித்துவிட்டு சரவணன் ஆர்வமாக அங்கு வர, இவளோ முகத்தை திருப்பிக் கொண்டு உள்ளே சென்று விட்டாள். சரவணனும் அவள் பின்னாலேயே செல்ல,  நித்திலாவை நோக்கித் திரும்பிய மேனகா,

    “என்னடி உளறிகிட்டு இருக்க? என்கிட்ட அவனை பத்தி அப்படி கரிச்சுக் கொட்டிட்டு, இப்ப அகல்யாகிட்ட ஊட்டி விட்டான்னு கதை அளந்துக்கிட்டு இருக்க?”

    “அதுவா உன் தம்பி என்னை டேமேஜ் பண்ணதுக்காக சின்னதா ஒரு பனிஷ்மென்ட்.”

   “புரியலையே?”

     “ நீ எல்லாம் என்ன தான் கல்யாணம் பண்ணி குடும்பம் நடத்துறியோ போ, நான் அப்படிச் சொன்னதும் உன் நாத்தனாரோட முகத்தை கவனிச்சியா? இன்னும் ரெண்டு மூணு நாளைக்கு உன் தம்பி தலையை தொங்க போட்டுட்டு வெக்ஸ்ஸாத் தான் சுத்துவான். ஏன்னா  நான் தான் லவ் பேட்ஸ்ஸை பிரிச்சு விட்டுட்டனே.”

    “என்னடி சொல்ற? இவங்க ரெண்டு பேரும் லவ் பண்றாங்களா?”

   “ஆமா அதோட அதை யாருக்கும் தெரியாம, நல்லாவே மெயிண்டனும் பண்றாங்க.”

   “அப்பறம் எப்படி உனக்கு தெரியும்?”

   “ நீ ஒன்னு மறந்துட்டே அண்ணி, இவங்க ரெண்டு பேரும் படிச்ச அதே காலேஜ்ல தான், நானும் படிச்சேன். உன் தம்பிக்கு அடுத்த செட்டா நான் இருந்தாலும், உன் நாத்தனாருக்கு  முன்னாடி செட்டு நான். அதனால இவங்க காதல் லீலைகள் முதற்கொண்டு, அத்தனையும் எனக்கு தெரியும்.”

    “இந்த சரவணன் பைய என்னைய பார்க்க தான் வாரா வாரம், தவறாமல் வீட்டுக்கு வந்து போறான்னு நினைச்சுகிட்டு இருந்தேன். ஆனா இவன் காதலியை பார்க்கத் தான், என் புகுந்த வீட்டுக்கு வந்து போயிருக்கான், இது கூட புரிஞ்சுக்காம இவ்வளவு அப்பாவியா இருந்திருக்கேனே நானு…”

    அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே தேவகி சடங்கு முடியும் நேரமாயிற்று, இன்னும் சற்று நேரத்தில் ஆற்றங்கரைக்கு, பெண்ணை அழைத்து வந்து விடுவார்கள் என்று கூற,  அவசரமாக மாப்பிள்ளை வீட்டில் இருந்து ஒரு உறவினர் கூட்டம் சீர்வரிசைகளோடு, ஆற்றங்கரை விநாயகர் கோயிலை நோக்கி நகரத் தொடங்கியது.

     பஸ்ஸில் இருந்து இறங்கிய நிலா, ரிதன்யா தங்கி இருக்கும் வீட்டின் உள்ளே  நுழையும் போது தான், மணப்பெண்ணுக்கான சடங்கு முடிந்திருந்தது.

    தனது தோழியை ஆசையாக கட்டிக் கொண்ட நிலாவின் காதுகளில், ரிதன்யா தனியாக பேச வேண்டும் என்று கூற, அனைவரையும் உணவருந்த அனுப்பி வைத்த நிலா, அதன் பிறகு தனது தோழியின் தற்போதைய சூழ்நிலையை பற்றி கேட்டு அறிந்து கொண்டாள்.

   “தன்யா உங்க அப்பா அவ்வளவு சீக்கிரம், அதுவும் உன் விஷயத்துல தப்பான முடிவு எடுத்திருப்பாருன்னு  எனக்கு தோணல, எனக்கு தெரிஞ்சு மாப்பிள்ளைக்கு வேண்டாத யாரோ தான், வேணும்னு உன் முன்னாடி இப்படி பேசி இருக்கணும்.”
  

 

Click on a star to rate it!

Rating 4.8 / 5. Vote count: 6

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
5
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

2 Comments

  1. கல்யாணத்தை நிறுத்த பிளான் போட போறாங்க … எல்லாம் ரிதன்யா வால வந்தது தான் போல … என்ன பெரிய சம்பவம் நடக்க போகுதோ …