Loading

   தொழிலில் தன்னிடம் நேரடியாக மோதாமல், குறுக்கு வழியில் தன்னை தீர்த்து கட்ட முனைந்தவர்களின் கம்பெனியை, இருந்த இடத்தில் இருந்தே ஒரு மணி நேரத்தில் பங்குதாரர்களால் பிரச்சினையை ஏற்படுத்தி, மூடும் சூழ்நிலைக்கு அதை கொண்டு வந்தான் விஷ்வா, அதன் பிறகே சிற்றப்பாவோடு வீடு வந்து சேர்ந்தான்.

    திருமணத்திற்கு முன்பு இப்படி ஒரு அசம்பாவிதம் நடந்தது வெளியே  தெரிந்தால், குடும்பத்தார் முக்கியமாக தன் அன்னை சிவகாமி பதட்டம் அடைய கூடும் என்று அவன் யாரிடமும் எதுவும் கூறக் கூடாது என்று சொல்லி விட்டான்.

   அதோடு சீக்கிரம் சரி செய்து கொண்டு வருமாறு, சூர்யாவிடம் தனது செயினை கொடுத்தனுப்பி இருந்தான்.

     தனது தாயின் கண்களுக்கு சிக்காமல் சீக்கிரம் அறைக்குச் சென்று முதலில் உடை மாற்ற வேண்டும், என்று வேகமாக சென்றவனை, வாசலிலேயே நிற்க வைத்து ஆராத்தி சுற்றத் தொடங்கினார் அவனது அத்தை விஜயலட்சுமி.

   “என்னத்தே நீங்க? கல்யாணம் முடிஞ்சு தானே ஆரத்தி எடுப்பாங்க?”

    “ஆமாம் ப்பா, ஆனா வெளிநாடுவரை போய் சாதிச்சுட்டு வந்திருக்கயேப்பா உன் மேல கொஞ்சநஞ்ச கண்ணா இருக்கும்.

   ம்ம்ம என் பொண்ணோட சேர்த்து வச்சு  உனக்கு ஆரத்தி எடுக்கணும்னு ஆசைப்பட்டேன், ஆனா என்ன பண்றது, என் ஆசை நிராசையா இல்ல போச்சு.”

    சில நாட்களாகவே விஜயலட்சுமியின் மனக்குமுறல்கள், இப்படி தான் வார்த்தைகளாக வெளியே வந்து, மற்றவர்களை சங்கடப்படுத்திக் கொண்டிருக்கின்றது.

   அவருக்கு தனது மகள் அகல்யாவை  விஷ்வேஸ்வரனுக்கு கட்டி வைக்க வேண்டும் என்று அவ்வளவு ஆசை. ஆனால் அவனோ அகல்யாவை  தங்கையாக மட்டுமே பார்த்ததாகவும், தயவு செய்து இதில் தன்னை வற்புறுத்த வேண்டாம் எனவும் கூறிவிட்டான்.

   அதன் பிறகு தான் அசலூரில் பெண் பார்த்து, தற்போது திருமணம் நிச்சயமாகி இருக்கிறது. இன்னும் இரண்டு நாட்களில் திருமணம் என்பதால், விஜயலட்சுமியின் புலம்பல்கள் இன்னும் அதிகமாகி இருந்தது.

   “ஐயோ அம்மா, மாமா எத்தனை தடவை தான் சொல்லுவாரு, நீ திரும்பவும் ஆரம்பிச்சிட்டியா? மாமா டயர்டா இருப்பாரு. முதல்ல அவரை உள்ள விடுங்க, நீங்க வாங்க மாமா அப்பறம்  வெளிநாடு பயணம் எல்லாம் எப்படி இருந்தது? எனக்கு எவ்வளவு சாக்லேட் வாங்கிட்டு வந்திருக்கீங்க?”

   விஷ்வாவை கைபிடித்து உள்ளே அழைத்துச் செல்லும், தனது மகள் அகல்யாவை கண்டு தலையில் அடித்துக் கொண்டவர்,

  “இவளை என்ன தான் பண்றது?  நான் இவளுக்கு அவனையே வாங்கி கொடுக்கணும்னு நினைக்கிறேன், இவ என்னடான்னா சாக்லேட் கேட்டுட்டு இருக்கா.”

   விஜயாவின் புலம்பல் அதிகமாக, அவளது அன்னை தேவகி தான் அவரது பேச்சுக்கு முற்றுப் புள்ளி வைத்தார்.

    “விஜயா அது தான் விஷ்வா சொல்லிட்டான் இல்ல, அகல்யாவை  தங்கச்சியா தான் பார்க்கறேன்னுட்டு, அப்பறம் எதுக்கு திரும்ப திரும்ப அவன்கிட்ட போய் இதை பத்தியே பேசிட்டு இருக்க.

    இந்த பேச்சை இதோட விடு,  நானும் உன்கிட்ட நிறைய முறை சொல்லிட்டேன். இப்படி மத்தவங்க மனம் நோகிறப்படி, வெளிப்படையா பேசாதேன்னு எப்ப தான் திருந்துவியோ?”

    “என்ன பண்றது எனக்கு என் பிறந்த வீட்ல என் பொண்ணை கட்டிக் கொடுக்கணும்னு ஆசை, அது தான் நடக்காம போயிருச்சே.”

   பேசியபடியே அவர் ஆரத்தியை வெளியே ஊற்றச் செல்ல, உறவுகளில் ஒருவர் அவரோடு நடந்தபடியே,

   “ஏன் கவலைப்படுற விஜயா உன் அண்ணன் பையன் இல்லாட்டி என்ன? அது தான் உன் தம்பி பையன் சரவணன் மகாராஜா மாதிரி இருக்கானே? உன் பொண்ணுக்கு மூணு வயசு மூத்தவன் தானே அவன், அப்புறம் என்ன கவலை?”

  சரியாக அப்போது தான் கோவிலில் இருந்து வீடு திரும்பி இருந்த சிவகாமி உள்ளே நுழைந்தார்.

   “என்ன இருந்தாலும் எங்க அண்ணன் பையன் மாதிரி வருமா? எங்க அண்ணனை அப்படியே அவன்ல பாக்குறேன், அதனால தான் தக்க வைச்சுக்க நினைச்சேன். அவன் தான் முடியாதுன்னுட்டானே? எங்க அண்ணே மட்டும் இப்போ உயிரோட இருந்திருந்தா, எனக்கு இப்படி புலம்பற நிலை வந்திருக்குமா?”

   விஜயா ஜாடை பேசியபடியே வெளியே செல்ல, சிவகாமிக்கு தான் சற்று சங்கடமாக இருந்தது.

   இந்த கல்யாண பேச்சு ஆரம்பித்ததில் இருந்தே விஜயா இப்படி தான் பேசிக் கொண்டிருக்கிறார். அவர் பேசுவது சற்று சங்கடத்தை ஏற்படுத்தினாலும், தன் மகனின் மனதை புரிந்து கொண்டு, வெளியிடத்தில் அவனது திருமணத்தை ஏற்பாடு செய்திருந்தார்.

     தயங்கியபடியே நின்றிருந்த சிவகாமியிடம் வந்த ராஜலட்சுமியின் மூத்த மகள் மேனகா,

   “பெரியம்மா நீங்க எதுக்காக இப்படி நிக்கிறீங்க? அத்தையை பத்தி தெரிஞ்சது தானே, என்னதான் பட்டு பட்டுன்னு பேசினாலும், அவங்க மனசுல எதுவும் வச்சுக்க மாட்டாங்க. கல்யாண வேலை நிறைய இருக்கு அண்ணே இப்ப தான் வந்தார், நீங்க போய் அவரை பாருங்க முதல்ல, என் மாமியார் வாயை எப்படி நிறுத்துறதுன்னு எனக்கு தெரியும், இனி அவங்களால எந்த பிரச்சனையும் வராமல் நான் பார்த்துக்கிறேன்.”

      சூர்யாவிற்கு தான் அவளை திருமணம் செய்து கொடுத்திருக்கிறார்கள். படிப்பு முடிந்த கையோடு அவளுக்கு திருமணம் முடிந்திருந்தது.

   அதே போல விஜயலட்சுமியின் இரண்டாவது வாரிசான அகல்யாவிற்கு  விஷ்வேஷ்வர பாண்டியனை பேசி முடிக்கலாம் என்ற பேச்சு எழுந்த போது,  ஒரே வீட்டில் தன்னோடு வளர்ந்த தனது அத்தை மகளை தனது உடன்பிறப்பாகவே பார்த்தவனால் இதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை, அதை தனது அன்னையிடம் தெரிவிக்க, அவரும் இந்த திருமணம் வேண்டாம் என்று கூறிவிட்டார்.

   அப்போது இருந்தே விஜயலட்சுமிக்கு  சிவகாமியிடம் ஒரு முரண்பாடு தோன்றி விட்டது. நாத்தனார் என்ற முறையில் அவ்வப்போது அது வெளிப்பட்டுக்  கொண்டிருந்தது. அந்த சமயத்தில் அவரது வாயை அடக்கக் கூடியவர் பெரியவர் ஈஸ்வர பாண்டியன் தான்.

    சொக்கநாத பாண்டியன் இறந்த பிறகு கம்பெனியின் மொத்த பொறுப்பும் சிவகாமியின் தலையில் தான் இருந்தது. மருதுபாண்டியர் கம்பெனி விஷயத்தில் ஒருமுறை வசமாக மாட்டிக் கொள்ள, அனைத்தையும் துணிந்து எதிர்த்து சரி செய்தவர் சிவகாமி.

  அதனாலே தனது மூத்த மருமகள் மீது ஈஸ்வர பாண்டியருக்கு  ஒரு மதிப்பு உண்டு. தற்போது அந்த பொறுப்புகள் மொத்தத்தையும் விஸ்வேஸ்வரர் பாண்டியன் தனதுதாக்கிக் கொண்டாலும், அவனுக்கு வழிகாட்டியாக செயல்படுபவரும் சிவகாமி தான்.

   அதனால் தனது தாத்தாவின் உதவியுடன், அத்தையை சமாளித்து விடலாம் என்று எண்ணிய மேனகா, சிவகாமியை சமாதானப்படுத்தி உள்ளே அனுப்பி வைத்தாள்.

   தனது அன்னை வருவதற்குள் உடையை மாற்ற எண்ணிய விஷ்வா, குளித்துவிட்டு வெற்று மார்போடு தலையை துவட்டியபடியே பாத்ரூமில் இருந்து வெளியே வர, அப்போது தான் அறைக்குள் நுழைந்தார் சிவகாமி.

    பல நாட்கள் கழித்து பிள்ளையை கண்டவர் வாஞ்சையாக அவனது கண்ணத்தில் கை வைத்தார், அவனது கழுத்தை கண்டு திடுக்கிட்டவர் பதட்டமானார்.

  “விஷ்வா எங்கப்பா கழுத்துல இருந்த செயினை காணோம்?”

    “அதை நான் தான்க்கா கழட்ட சொன்னேன்.”

    என்றபடியே உள்ளே நுழைந்தார் ராஜலட்சுமி.

    “இன்னும் கொஞ்ச நேரத்துல சடங்கு ஆரம்பிக்க போறோம் இல்ல,  விஷ்வா சடங்கு முடிஞ்சதும் ஆத்துல போய் முங்கி எழுந்து வர வேண்டி இருக்கும். அப்போ அது தவறி விழுந்துட்டா என்ன பண்றதுன்னு தான், நான் அதை பத்திரமா இங்கேயே கழட்டி வைக்க சொன்னேன். அக்கா, மாமா  நிச்சியத்தப்போ பொண்ணுக்கு கொடுக்கப் போற சீர் தட்டு விஷயமா, உங்ககிட்ட பேசணும்னு காலைலயே உங்களை தேடிட்டு இருந்தாரு.”

   “ஆமா ராஜி நானும் அவர்கிட்ட இது விஷயமா பேசணும்னு தான் இருந்தேன், சரி நான் இப்பவே போய் மாமாவை பார்க்கிறேன். விஷ்வா செயின் பத்திரம் அது எவ்வளவு முக்கியமுன்னு உனக்கு  தெரியுமில்ல.”

   அவர் அறையை விட்டு வெளியேறிய பிறகு தான், நிம்மதியாக மூச்சை இழுத்து விட்டான் விஸ்வேஸ்வரன்.

   “ரொம்ப தேங்க்ஸ் சித்தி, சரியான நேரத்துல வந்து, என்னை காப்பாத்துனீங்க.”

    “இதுக்கெல்லாம் எதுக்குப்பா தேங்க்ஸ். நடந்ததை எல்லாம் சித்தப்பா சொன்னாரு, அது தான் உனக்கு ஏதாவது அடிபட்டிருக்குமோன்னு பார்க்கலாமுன்னு இங்க வந்தேன், உனக்கு எதுவும் அடி இல்லையேப்பா.”

    “எனக்கு எதுவும் இல்ல சித்தி, அந்த செயின் தான் அறுந்திடுச்சு, சூர்யாகிட்ட கொடுத்து சரி பண்ண சொல்லி இருக்கேன். என்னால சித்தப்பாக்கு தான் லைட்டா அடிப்பட்டுடுச்சு, நான் இதை முன்னாடியே யோசிச்சு இருக்கணும், கொஞ்சம் கேர்லஸ்ஸா இருந்துட்டேன்.”

    “தம்பி நீ இப்போ அதை பத்தி எல்லாம் எதுவும் யோசிக்காத, இப்போதைக்கு கல்யாணம் நல்லபடியா நடக்கறது தான் நமக்கு முக்கியம். அவங்களை பழிவாங்கறேன்னு நீ பாட்டுக்கு எதையாவது இழுத்து வைக்காத, அப்புறம் அக்கா காதுக்கு விஷயம் போச்சுன்னா அவ்வளவு தான். அவங்க நடமாடிக்கிட்டு இருக்கிறதே உனக்காக தான். கல்யாணத்தில் ஏதாவது பிரச்சனைனா பாவம் அவங்க நொடிஞ்சு போயிடுவாங்க.”

    “இல்ல சித்தி அப்படி எதுவும் நடக்காது நான் பாத்துக்குறேன்.”

     “சரிப்பா சடங்குக்கு நேரமாச்சு நீ வேஷ்டி சட்டைய மாத்திட்டு வெளியே வா,  நாம வெச்சு முடிச்சதும் தான் பொண்ணு வீட்டுல சடங்கை ஆரம்பிப்பாங்க.”
 
    வெள்ளை வேஷ்டி சகிதமாக வெளியே வந்தவனை அலங்கரிக்கப்பட்ட சேரில் அமர்த்திய சூர்யா, மச்சினன் முறைக்காக அவன் அருகிலேயே துணை மாப்பிளையாக அமர்ந்து கொண்டான்.

   சுற்றியுள்ள உறவுகள் இருவருக்கும் மஞ்சள் சந்தனம் என்று பூசி சடங்கு முறையை ஆரம்பிக்க, அவனது மச்சான் முறை உள்ள மற்ற உறவுகள் காய்கறி மற்றும் கீரைகளாலான மாலையையும் கருவேப்பிலையால் செய்த பூங்கொத்தையும் அவன் கைகளில் கொடுத்தனர்.

   கோலாகலமாக சீண்டல்களோடு அரங்கேறிய நிகழ்ச்சி நிறைவு பெற்று, மாப்பிள்ளையை மச்சானுடன் ஆற்றுக்கு நீராட அனுப்பி வைத்தனர். அதன் பிறகு தான் மணப்பெண்ணான ரிதன்யாவிற்கு சடங்கு ஆரம்பித்தது.

    சடங்கிற்காக அமைக்கப்பட்ட சேரில் அமராமல் ரிதன்யா தன் குடும்பத்தாரோடு மணமகள் அறையில்,  இந்த திருமணத்தை நிறுத்துமாறு வாதாடி கொண்டிருந்தாள்.

   இந்த உலகத்தில் அனைவரின் காதலும் கைகூட வாய்பில்லை இல்லையா? அதுவும் தனது உயிர் தோழியின் கணவனாக வரப் போகின்றவனை எப்படி இன்னும் மனதில் நினைத்துக் கொண்டிருப்பது?

    பல வருடங்களாக திருமணம் செய்து கொள்ளும் படி அவளிடம் கெஞ்சிக் கொண்டிருந்த அவளது குடும்பத்தினர், இம்முறை தனது பிஸ்னஸ் பார்ட்னரை திருமண செய்து கொண்டு தான் ஆக வேண்டும் என்று, கட்டளையிட தொடங்கி விட்டனர்.

   என்ன தான் பழைய காதல் நினைவுகள் மனதை அழுத்திய போதும், தனது குடும்பத்தினரின் உணர்வுகளோடு இனியும் விளையாட விரும்பாதவள், இந்த திருமணத்திற்கு ஒத்துக் கொண்டாள்.

    நேற்று இரவு இந்த ஊர் வந்து சேரும் வரை மாப்பிள்ளை பற்றி, தன் தாய் தகப்பனார் கூறியதை வைத்து, நல்லவராகத் தான் இருக்க வேண்டும் என்று நினைத்து, ஒருமனதாக திருமணத்திற்கு தன்னை தயார் படுத்திக் கொண்டாள்.

  ஆனால் நேற்று இங்கு வந்த போது அவள் காதில் விழுந்த சில பேச்சுக்களும், நள்ளிரவில் அவளது அலைபேசிக்கு வந்த ஒரு போன் காலும் அவளை தடுமாற வைத்திருந்தது.

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 1

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்