
செல்வம் தனது மருமகனைப் பார்த்துச் சிரித்து விட்டு, “என்னயா ருத்ரா இப்படிச் சொல்ற?” என்று கேட்டார்.
“பின்ன உங்க தங்கச்சி மகளை நீங்க தான கட்டிக் கொடுக்கணும்” என்று கேட்டான் தன் தாயைப் பார்த்துச் சிரித்துக் கொண்டே.
செல்வம் சிரிப்புடன் “எப்பவும் நான் எங்க அண்ணா பக்கம் தான்” என்றார்.
காயு சிரித்துக் கொண்டே வந்தவள், “நான் எங்க மாமா” என்றாள்.
“அதான் எனக்குத் தெரியுமே சில்லுவண்டு” என்று சிரித்தான் ருத்ரன்.
தமிழ் தனது கண்ணில் வழியும் கண்ணீரைத் துடைத்துவிட்டு, “வாங்க என்று அனைவரையும் வரவேற்று ஹாலில் உட்கார வைத்துவிட்டு சமையல் அறைக்குச் சென்றவள், அனைத்தையும் ஒதுங்க வைத்துவிட்டு டீ அடுப்பில் வைத்து அனைவருக்கும் எடுத்துக் கொண்டு வந்து கொடுத்தாள்.
குடித்துவிட்டு ஒரு சில நொடி அமைதியாக இருக்க,
சரவணன் தான் பேச ஆரம்பித்தான்.
“தமிழ், உன்னோட நாத்தனாரை எனக்குக் கட்டிக் கொடுக்க உனக்குச் சம்மதமா?” என்றான்.
தமிழ் ஒரு சில நொடி தனாவைப் பார்த்துவிட்டு “எனக்குச் சம்மதம் அண்ணா”
“நிச்சயதார்த்தம்…” என்று அவன் ஆரம்பிக்கும் போதே… “உங்களுக்குப் பெருசா செய்யணும்னா செய்யலாம். இல்லனா இன்னைக்கு கூட நிச்சயதார்த்தத்தை வச்சுக்கலாம். எனக்கு ஒன்னும் அதுல பிரச்சனை இல்லை” என்றாள் தமிழ்.
தனா தான் இன்றேவா? என்று திருதிருவென முழிக்க அவளைப் பார்த்துக் காயுவும் அகியும் சிரித்தார்கள்.
“எதுக்கு தமிழ் இவ்வளவு அவசரமா?” என்று தனம் கேட்க,
“ரொம்ப அவசரமா எதையும் செய்யலை அம்மா. அண்ணனுக்கு வயசு கூடிட்டே போகுது இல்ல. இன்னும் ரெண்டு மாசம் போச்சுன்னா அண்ணனுக்கு இரட்டைப்பட வயசு ஆயிடுச்சுன்னு சொல்லுவீங்க. அதனாலதான்…” என்று விட்டு அமைதியாகி விட,
ருத்ரன் தனது மனைவியின் கையை அழுத்தப் பற்றினான்.
அதன் பிறகு, “இன்னும் ஒரு வாரம் கழித்து கிராண்டாவே நிச்சயதார்த்தத்தை வச்சுக்கலாம். விமரிசையா” என்று விட்டு,
“கல்யாணம் வீட்டில் வச்சுக்கலாமா பெரியப்பா, இல்ல மண்டபத்துலயா? கோவில்லயா?” என்று தமிழ் கேட்க,
சரவணன் தான் “வீட்டிலேயே வச்சுக்கலாம் தமிழ். அதான் நம்ம வீட்டுக்கு முன்னாடி இவ்வளவு இடம் இருக்கே” என்றான்.
இப்போது அனைவரும் தனாவைப் பார்க்க,
தனா கண்ணை மூடித் திறந்தாள்.
அதன் பிறகு, சரி என்று விட்டு சம்பிரதாயத்திற்காக இரு வீட்டரும் தாம்பூலத்தட்டு மட்டும் மாற்றிக் கொண்டு, தனாவிற்குப் பூ வைத்துவிட்டுச் சென்றார்கள்.
அதன் பிறகு, ஒரு வாரம் ருத்ரனுக்கும் தமிழுக்கும் பேசக் கூட நேரம் இல்லாமல், நிச்சயத்திற்குத் தேவையான அனைத்து வேலைகளையும் பார்க்க, ஓடினார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.
இருவருமே வேலைக்குச் செல்வதால், இரவுப்பொழுது தான் ஒன்றாக இருக்க நேரம் கிடைக்க, அந்த நேரத்திலும் நிச்சயத்திற்குத் தேவையான ஒவ்வொரு வேலையாக எடுத்துப் போட்டுச் செய்து கொண்டு இருந்தார்கள்.
நாள்கள் வேகமாகச் சென்று நிச்சயதார்த்த நாளும் வந்தது.
நிச்சயதார்த்தத்தை பெண் வீடான தனா வீட்டிலேயே வைத்துக் கொள்ள,
வெளியே பந்தல் போட்டு விமரிசையாகச் செய்யப்பட்டது.
நிச்சயம் முடிந்து காயுவும், தனாவும் காலேஜ் சென்று விட்டு மாலை வீட்டிற்கு வந்து கொண்டு இருக்க,
அப்பொழுது அந்தப் பக்கம் வந்த அதிரன், காயுவைப் பார்த்துவிட்டு, “என்னம்மா ரெண்டு நாளைக்கு முன்னாடி ரெண்டு பேத்தையும் காணோம்” என்றான்.
அவனைப் பார்த்துவிட்டு காயு முறைத்து விட்டுத் திரும்பிக் கொள்ள,
சிரித்த முகத்துடன் தனா தான், “எனக்கு நிச்சயம் ஆயிடுச்சு சார், அதனால தான் வரல.”
“உனக்கு தானே நிச்சயம், உன் பிரெண்டுக்குமா நிச்சயம்? அவங்களும் வரவில்லையே” என்றான் நக்கலாக.
“அவ தான சார் எனக்குப் பெண் தோழியே” என்று தனா சிரிக்க,
காயு முகத்தைத் தூக்கி வைத்துக்கொண்டு, “கல்யாணத்துக்குக் கூப்பிடுறோம், வந்து சாப்பிட்டுப் போங்க சார்” என்றாள்.
அவளைப் பார்த்துச் சிரித்தான் அதிரன்.
“சாரி சார், அவளுக்கு ஏதோ உங்க மேல கோபம் போல. எப்பப் பார்த்தாலும் உங்ககிட்ட இப்படியே பேசிட்டு இருக்கா. அவ கேரக்டர் இந்த மாதிரி இல்ல. ஆனா, உங்ககிட்ட மட்டும் இப்படி நடந்துக்குறா. தப்பா எடுத்துக்காதீங்க” என்றாள்.
“அவ யார்கிட்டயும் புதுசாப் பேசுறவங்க கிட்ட இப்படிப் பேச மாட்டா… பழக்கமானவங்க கிட்ட மட்டும் தான், இப்படி வாய்க்கு வாய் பேசுவா, தப்பா எடுத்துக்காதீங்க” என்றாள் தனா.
“அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல கீர்த்தனா, நான் அதைத் தப்பா எடுத்துக்கல.”
“கங்கிராட்ஸ், என்ன பண்றாரு உன்னோட உட்பி” என்று கேட்டான்.
“ஏன், இதைக் கேட்டு இவரு என்ன பண்ணப் போறாரு? கல்யாணத்துக்கு வந்து மொய் வைக்கப் போறாரா?” என்றாள் காயத்ரி.
தனா தான், “தயவுசெய்து கொஞ்சம் அமைதியா இரு. இப்படித்தான் நம்ம புரொபசர் கிட்ட மரியாதைக் குறைவா பேசுவியா?” என்றாள்.
“வெளிய வந்துட்டா சக மனிதர்கள் தான். யாரும் ஸ்டூடென்ட் புரொபசர் எல்லாம் கிடையாது. காலேஜ் கேம்பஸ்குள்ள மட்டும் தான் அவர் நமக்கு புரொபசர் சரியா? வண்டியில ஏறு கிளம்பலாம், நேரம் ஆகுது. உன்ன நேரம் கெட்ட நேரத்தில் வீட்டில் கொண்டு போய் விட்டால் என்னதான் ஏதாச்சும் சொல்லுவாங்க” என்றாள் முகத்தைத் திருப்பிக் கொண்டு.
அதிரன் எதுவும் பேசாமல் “சரி தனா நேரம் ஆகுது, நீங்க வீட்டுக்குக் கிளம்புங்க” என்று விட்டு அவர்களுக்கு முன்பாகவே தன் வண்டியை எடுத்துக் கொண்டு கிளம்பி விட்டான்.
இரண்டு நாள்களுக்குப் பிறகு சரவணனும், ருத்ரனும் ஒரு இடத்தில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்க, அங்கு வந்து வண்டியை நிறுத்தினான் அதிரன்.
அதிரன் இருவரையும் பார்த்து, “சார், நான் உங்க ரெண்டு பேத்துகிட்டயும் கொஞ்சம் பேசலாமா?” என்று கேட்க,
ருத்ரனும், சரவணனும் “நீங்க?” என்று கேட்டார்கள்.
“நான் அது…” என்று ஒரு சில நொடி தயங்கி விட்டு கீர்த்தனாவும், காயத்ரியும் படிக்கிற காலேஜ்ல கெமிஸ்ட்ரி புரொபசர், லேப் அசிஸ்டன்ட்டா ஒர்க் பண்றேன்” என்றான்.
“அவங்க ரெண்டு பேரும்” என்று ருத்ரன் சொல்லும் பொழுதே,
“அவங்க ரெண்டு பேரும் கெமிஸ்ட்ரி ஸ்டூடென்ட்ஸ் இல்ல தான். ஆனா, எனக்கு அவங்களைத் தெரியும்” என்றான்.
சரோ ருத்ரனின் கையைப் பிடித்தான்.
ருத்ரன் யோசனை வந்தவனாக “நீங்க தானே அன்னைக்கு நைட்டு” என்றான்.
“ஆமாம் சார் நான் தான், அன்னைக்கு நைட் உங்க வீட்டுப் பொண்ணு காயத்ரி உங்ககிட்டப் பேசிட்டு முன்னாடி பார்க்காம வண்டியில வரும்போது என் வண்டில மோதினாங்க.”
“சரி சார், ஆனால், என்ன விசயமா இப்போ எங்ககிட்டப் பேச வந்து இருக்கீங்க? என்ன காரணம்?”
“என்னோட வாழ்க்கையைப் பத்தி உங்ககிட்டப் பேச” என்றான் அதிரன்.
சரவணன் அவனது கண்ணை உற்றுப் பார்க்க, “சரி உட்காருங்க பாஸ்” என்றான் ருத்ரன்.
மச்சான் என்று சரவணன் ருத்ரனின் தோளில் கை வைக்க,
“கொஞ்ச நேரம் அமைதியா இரு மச்சான்” என்று விட்டு அதிரனைப் பார்த்தவன்,
“நிதானமா பேசலாம்” என்றான்.
“சரி” என்று விட்டு அதிரனும் உட்கார,
“சார், அது எனக்கு உங்க வீட்டுப் பொண்ணு காயத்ரியைப் புடிச்சிருக்கு. முறைப்படி உங்க வீட்ல வந்து பொண்ணு கேக்கலாம் என்று யோசிக்கிறேன். எங்க வீட்ல எனக்குப் பொண்ணு பார்க்க ஸ்டார்ட் பண்ணி இருக்காங்க. அதான், அதைப்பத்தி உங்ககிட்டப் பேசலாம்னு சொல்லி வந்தேன்” என்றான். சரவணனுக்குக் கோபமாக இருந்தாலும், தனது மச்சான் தன் கையில் அழுத்தம் கொடுத்துக் கொண்டிருக்க அமைதியாக இருந்தான்.
“சரி நீங்க பேசுறதுல தப்பு இல்ல. ஆனா, வீட்ல பெரியவங்ககிட்ட தானே பேசணும். எங்க கிட்ட வந்து பேசிட்டு இருக்கீங்களே”
“நீங்க கேட்கிறது சரியான விஷயம் தான். எனக்கு காயத்ரியைப் புடிச்சிருக்கு” என்ற விஷயம் காயத்ரிக்குத் தெரியும். இன்னொரு விஷயம் காயத்ரிக்கு என்னைப் புடிச்சிருக்கு. இதுவரைக்கும் அவங்க விருப்பத்தை என்கிட்டச் சொல்லல. ஆனா, இப்ப ஏதோ ஒன்னு சரியில்ல.
நானும் என்னோட விருப்பத்தை இதுவரைக்கும் அவங்ககிட்டச் சொல்லல. இப்போ ரெண்டு மூணு நாளா அவங்களோட பேச்சு வார்த்தை சரியில்ல. அந்தக் காரணத்தால் தான், உங்களைப் பார்க்க வந்திருக்கேன். நீங்க பேசிப் புரிய வைப்பீங்கன்னு…
இன்னொன்னு என்னோட காதலுக்காக உங்களைத் தூது போகவோ, இல்ல, எனக்கு வேற வழியில உதவி செய்வீங்க. அப்படி எந்த நோக்கத்திலும் நான் உங்களைப் பார்க்க வரல. ஸ்ட்ரைட்டா பொண்ணு கேக்க தான் வரலாம்னு இருக்கேன். அந்த நேரத்துல காயத்ரி எந்த ரீசனுக்காக என்னை வேணாம்னு சொல்றாங்கன்னு எனக்குத் தெரியணும் இல்லையா?”
“சரி, ஸ்டூடன்ட் எப்படி புரொபசரை விரும்புறா. நீங்களா சொல்றீங்களா? இல்ல, நீங்க எப்படி ஒரு ஸ்டூடன்டை விரும்புறீங்க?” என்று சரவணன் அடக்கப்பட்ட கோவத்துடன் கேட்க,
அவனைப் பார்த்துச் சிரித்த அதிரன், “சார் காலேஜ் கேம்பஸ்குள்ள மட்டும்தான் நான் புரொபசர், அவங்க ஸ்டுடென்ட். மத்தபடி வெளிய வந்துட்டா நானும் சக மனுஷன் தான். எனக்கும் எல்லா உணர்வுகளும் இருக்கத்தான செய்யும்?”
“ஓகே, ஆனா இப்ப நீங்க எங்களைத் தேடி வந்திருக்க விஷயம் எனக்குப் புரியல.”
“என்ன தான் நான் பேசுறத நீங்க காது கொடுத்துக் கேட்டாலும், என்ன பேச வரேன்னு பொறுமையா நிதானமா கேட்டா மட்டும் தான் உங்க தங்கச்சி கிட்ட என்னால பேச முடியும்.
எனக்கு நான் பேசுவதற்கான வாய்ப்பையும் உங்க தங்கச்சி தரல. நானும் மூணு நாளா பேச ட்ரை பண்றேன், என்னால பேச முடியல… கூட தனாவும் இருக்கிறதால என்னால சுத்தமா பேச முடியல. அந்த ஒரு காரணம் தான்.
“அப்ப இவ்வளவு நாளும் தனாவும் கூட தான இருந்தா” என்று சரோ கேட்க,
ருத்ரன் தான் “மச்சான் கொஞ்ச நேரம் அவரைப் பேச விடு. என்னடா நீ மாட்டும் பேசிட்டுப் போயிட்டு இருக்க.”
“நான் ஏற்கனவே சொல்லிட்டேன், காயத்ரி…” என்று விட்டு என்ன தான் காயத்ரியை அவர் விரும்புகிறேன் என்று சொன்னாலும், அவன் முன்பு தங்கள் வீட்டுப் பெண்ணைப் பற்றிப் பேச வேண்டாம் என்று விட்டுத் தனது மச்சானைப் பார்க்க,
“சரிடா விடு” என்றான்.
அப்பொழுது சிரித்த அதிரன், “உங்க வீட்டுப் பொண்ண என் முன்னாடி நீங்க விட்டுக் கொடுக்க வேண்டிய அவசியம் இல்ல சார், நீங்களே பேசி முடிவு பண்ணுங்க.
“ஆனா, நான் உங்க வீட்டுல வந்து பொண்ணு கேட்கலாமா? அப்படின்னு கேட்க தான் வந்தேன்.”
“அது உங்களோட விஷயம், நீங்க முடிவு பண்ணுங்க” என்ற உடன்,
“சரி தப்பா எடுத்துக்காதீங்க, நான் வீட்ல பேசிட்டு உங்க வீட்டுக்கு வரேன்” என்று விட்டு அதிரன் எழுந்து சென்று விட்டான்.
இங்கு சரவணன் தான் அவன் சென்றவுடன் குதித்துக் கொண்டிருக்க,
“மச்சான் கொஞ்ச நேரம் அமைதியா இரு. காயத்ரி ஒரு மாதிரி தான் இருக்கா. அதுவும் அவர் சொன்னது போல மூணு நாளா அவ பேச்சும், முகமும் சரியில்ல தான். எனக்குமே காயு இவர விரும்புறா என்ற டவுட் இருக்கு. ஆனா இவர் தான் என்று கன்ஃபார்ம் கிடையாது. இப்போ அது கொஞ்சம் உறுதியாயிடுச்சு, விடு பார்த்துக்கலாம்”.
“இந்தப் பையனும் நல்ல பையன் தானே…”
“டேய் மச்சான், ஏன் இத்தனை நாளா உன் தங்கச்சி எங்க போறா? என்ன பண்றா என்று கூட வா நீ பார்க்காம இருப்ப… எப்படி டா, என் முன்னாடி இப்படி நாடகம் போடற? வா…” என்று அவன் தோளில் தட்டி விட்டு இருவரும் வீட்டிற்குச் சென்றார்கள்.
மறுநாள் காலைப் பொழுது தமிழ் ஸ்கூலுக்குக் கிளம்பிக் கொண்டு இருக்க,
அப்பொழுது அவர்கள் வீட்டிற்கு முன்பு வந்து நின்றான், அதிரன் தனது பெற்றவர்களுடன்.
அவர்களைப் பார்த்த தமிழ் ஒன்றும் புரியாமல் நின்றாள்.
தமிழ் “நீங்க…” என்று அவர்களைப் பார்த்துக் கேட்க,
பெரியவர்களே பேசட்டும் என்று விட்டு அதிரன் அமைதியாக இருக்க,
“என் பெயர் கோமதிமா, இவரு என்னோட கணவன் நீலகண்டன். இது என்னோட பையன் அதிரன். உங்க வீட்டு பொண்ண என் பையனுக்குப் பொண்ணு கேட்டு வந்து இருக்கோம் மா” என்றார் கோமதி.
‘ஒரு வேளை தனாவைப் பெண் கேட்டு வந்திருக்கிறார்களோ?’ என்ற யோசனையில் அவர்களையே பார்த்துக் கொண்டு நின்றாள் தமிழ்.
அப்போதுதான் ரூமில் இருந்து வந்த தனா, அங்கு நின்ற அதிரனைப் பார்த்துவிட்டு “வாங்க சார்… என்ன சார், எங்க வீட்டுப் பக்கம்” என்று வரவேற்க,
தமிழ் தனாவைத் திரும்பிப் பார்த்துவிட்டு அதிரனைப் பார்த்தாள் .
“இது என்னோட அப்பா அம்மா, கீர்த்தனா… ஒரு முக்கியமான விஷயம் பேச வந்திருக்கேன்” என்றான்.
தனா ஒன்றும் புரியாமல் ஒரு சில நொடி நின்றாள்.
ருத்ரன் அனைவரையும் பார்த்து வரவேற்று விட்டு தனாவைப் பார்க்க,
தனா தனது மாமா, அத்தை அனைவருக்கும் போன் செய்து சொல்லி இருந்தாள்.
அடுத்த அரை மணி நேரத்தில் அனைவரும் அங்கே கூடி இருந்தார்கள்.
காயத்ரி மட்டும் கோபத்துடன் அதிரனை முறைத்துக் கொண்டு நின்றாள்.

