Loading

செல்வம் போகும் ருத்ரனைப் பார்த்து வருந்தினார்.

 

தன் மகள் இந்த வீட்டுக்கு மருமகளாக வந்தால் தனக்குப் பின்பு இந்த வீட்டை நன்றாகப் பார்த்துக் கொள்வாள் என்று எண்ணினார்.

 

அதற்குக் காரணம் இருந்தது. தனது தங்கை கணவன் சீனிவாசன் உடன் பிறந்தவர்கள் இரண்டு பேர்.

 

ஒரு தம்பி, ஒரு தங்கை. இருவரும் திருமணம் ஆகி அருகிலே தான் இருக்கிறார்கள்.

 

தம்பி என்னவோ நல்லவன் தான். ஆனால், அவனுக்கு வாய்த்திருக்கும் மனைவி என்னவோ பணத்தாசை பிடித்தவள்.

 

எப்பொழுது, தனது தங்கையும் அவளுடைய பிள்ளைகளும் இங்கிருந்து நகருவார்கள்.

 

அவர்களுடைய சொத்தை தான் ஆட்டை போட்டுக் கொள்ளலாம் என்று கழுகு போல் காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு மத்தியில், தனது தங்கை இங்கேயே இருந்தால் தான் அவளுக்கு மதிப்பு ,மரியாதை.

 

அவளுடைய பிள்ளைகளுக்கும் பின்னாளில் வாழ்க்கை நன்றாக அமையும் என்று எண்ணியே இங்கேயே இருக்க வைத்தார்.

 

தனது தங்கைக்காகத் தனது தங்கை கணவனின் தம்பி மனைவியும், சீனிவாசனின் தங்கையும் செய்யும் அனைத்து அக்கிரமங்களையும் தாங்கிக் கொண்டு, ஒவ்வொரு வேலையாகச் செய்து கொண்டு இருக்கிறார் இத்தனை வருடங்களாக… அது ருத்ரனுக்கும் தெரியத்தான் செய்யும்.

 

இருந்தாலும், தனது மாமா சிறுவயதிலேயே அவர்கள் உன்னுடைய சித்தி, அத்தை அவர்கள் எது பேசினாலும் கண்டு கொள்ளக் கூடாது. அமைதியாகச் சென்று விடு, உன் அப்பா வேறு இல்லை. தாய்மாமன் வளர்ப்பில் வளர்கிறான் என்று எதுவும் பேசி விடக்கூடாது. பொறுமையாக இருக்க வேண்டும் என்று நல்ல சொற்களையே சொல்லிக் கொடுத்து வளர்த்து இருக்கிறார்.

 

அதன் காரணமாக, ருத்ரன் இப்பொழுது நல்ல பையனாக வளர்ந்தும் நிற்கிறான்.

 

28 வயது ஆகும், ஆண் மகன் ஆருத்ரன். அனைவராலும் ருத்ரன், ருத்ரா என்று அழைக்கப்படுபவன்.

 

தனது தாய், தந்தைக்கு மூத்த புதல்வன், அவனுக்குப் பின்பு கீர்த்தனா எனும்  தங்கை கல்லூரி படித்துக் கொண்டிருக்கிறாள்.

 

தனது தாய் மாமாவின் இரண்டாம் மகள் காயத்ரியும், தங்கை கீர்த்தனாவும் ஒரே வயதை ஒத்தவர்கள்.

 

இப்பொழுது வரை அவனையும், அவனது குடும்பத்தையும் மொத்தமாகப் பார்த்துக் கொள்வது ருத்ரனின் தாய்மாமா செல்வமும், அத்தை தனமும் தான்.

 

அவர்கள் பிள்ளைக்கு என்ன செய்வார்களோ, அதேதான் இங்கும் செய்வார்கள்.

 

இவர்கள் பணத்தில் இருந்து எதையும்  செல்வம் எடுத்ததில்லை.

 

செல்வம் முழுக்க முழுக்கத் தன்னுடைய சம்பாத்தியத்தில் தான் தனது தங்கைக்கும், தங்கை பசங்களுக்கும் வாங்கிக் கொடுப்பார்.

 

இப்பொழுது வரை அப்படித்தான் சென்று கொண்டிருக்கிறது. நாளை ருத்ரனுக்கு என்று ஒரு பெண் வந்தால் இந்த நிலை எப்படி மாறும் என்று சொல்ல முடியாது.

 

தன் தங்கை நிலையும், தங்கை மகள் கீர்த்தனாவின் நிலைமையும் எப்படி இருக்கும் என்று தெரியாததால் தான் தனது தங்கையிடம், மருமகனுக்குப் பொண்ணு பார்க்கலாமே பாக்கியம், அவனுக்கு வயசாகுதே என்று பேச வந்தார்.

 

பாக்கியம் எடுத்து எடுப்பிலே, “அண்ணா, நான் கேட்கிறேன் தப்பா எடுத்துக்காத. இத்தனை வருஷம் நீ எனக்குச் செஞ்சதை விட, இப்ப நான் கேக்குறத எனக்கு நீ செய்யறது தான் பெரிய உதவியா இருக்கும்… இத்தனை வருஷமா அவர் இல்லாமல் என்னையும், என் பிள்ளைகளையும் நீ நல்லாப் பார்த்துகிட்ட.

 

இனிமேவும், நீ பார்த்துக்குவ என்று எனக்குத் தெரியும். ஆனால், உன் மக தமிழை என் வீட்டுக்கு மருமகளா ஆக்கிக் கொடு. நான் என் மக மாதிரி பார்த்துப்பேன். அவ என்ன அம்மா மாதிரி பார்த்துப்பா. நம்ம ருத்ரனையும் நல்லாப் பார்த்துப்பா. கீர்த்தனாவுக்குத் தமிழ்னா அவ்ளோ பிரியம்னு உனக்கே தெரியும்” என்றார்.

 

செல்வம் இதைக் கேட்டு லேசாகச் சிரிக்கச் செய்தார்.

 

“என்ன அண்ணா சிரிக்கிற.”

 

“நானும் அதப்பத்தி தான் பேசலாம்னு வந்தேன். உனக்கு விருப்பமானு கேட்கலாம்னு வந்தேன்.”

 

பாக்கியம் தனது அண்ணனை முறைக்கச் செய்தார். “என்ன அண்ணா கேக்குறீங்க? எனக்கு விருப்பமான்னா கேக்குறீங்க? நம்ம தமிழை ருத்ரனுக்குப் பேசணும் மா, அப்படின்னு கேக்குறது விட்டுட்டு…” என்றவுடன், தனமும் சிரித்துக் கொண்டே,

 

“சரி விடு பாக்கியம். உங்க அண்ணன் ஏதோ ஒரு இதுல கேட்டது. நீ அதை விடு பாக்கியம்” என்று தனம் சிரித்துக் கொண்டே சொன்னார்.

 

“சரி அண்ணா, நம்ப தமிழ் கிட்டயும், ருத்ரன் கிட்டயும் பேசி ஒரு நல்ல நாள் பார்த்து முடிவு பண்ணலாம்” என்று பாக்கியம் சொல்ல,

 

“ஒரு வாரம் போகட்டும் மா பேசலாம். அவனுக்கு வேலை முடியட்டும், அவன் கொஞ்சம் ஃப்ரீ ஆனதுக்கு அப்புறம் பேசலாம்” என்று சொன்னார்.

 

சரி என்று சொன்னார்கள். அனைவருக்கும் அதுவே சரி என்று பட்டதால் அமைதியாக இருந்தார்கள்.

 

அப்போது இவர்கள் மூவரும் பேசிக் கொண்டிருந்ததை தமிழ் கேட்டுவிட்டு தான், ‘ருத்ரன் மாமாவிற்கு தானே தன்னைக் கட்டி வைக்கப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். நாம் ருத்ரன் மாமாவை விரும்புவதை அவரிடமே நேரடியாகச் சொல்லி விடலாம். திருமணத்துக்கு முன்பே நமது விருப்பத்தைச் சொல்லி விடலாம்’ என்று எண்ணி தான் அன்று அவனைப் பார்த்துத் தன் மனதில் இருக்கும் காதலைச் சொல்லச் செய்தாள்.

 

அவள் தன் காதலைச் சொன்ன பிறகு தான், அவன் தான் வேறொரு பெண்ணை விரும்புவதையும் சொன்னான்.

 

சரி என்று, அன்று இரவு வரை தன்னைத் தேற்றிக் கொண்டு அழுதவள்,

 

ருத்ரனின் ஆருயிர் தோழன் சரவணனைப் பார்க்கச் சென்று இருந்தாள். சரவணன் இருவருக்கும் பொதுவானவன். ருத்ரனுக்கு ஆருயிர் நண்பன் என்றால், தமிழ்விழிக்கு ஆருயிர் அண்ணன் ஆவான்.

 

பங்காளி வீடு என்று கூட வைத்துக் கொள்ளலாம்.

 

தமிழ் சரவணனைப் பார்த்து “அண்ணா இதுபோல் மாமா ஒரு பெண்ணை விரும்புகிறார், அதைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா ?”என்று கேட்க,

 

“அவன் ஏற்கனவே என்னிடம் சொல்லி விட்டான்” என்று விட்டு தமிழின் கண்ணை உற்றுப் பார்த்தான்.

 

“என்ன அண்ணா?” என்று கேட்டதற்கு, “நீ அவனை விரும்புறன்னு எனக்குத் தெரியும்” என்றான் .

 

“அண்ணா” என்றாள் அதிரவாக.

 

“உன்னோட பார்வை, பேச்சு அது கூடவா தமிழ் எனக்குக் காட்டிக் கொடுக்காது. அது மட்டுமில்லாமல் உன் பிரண்டு அகிலாவும் எல்லாம் சொல்லிட்டா” என்றான்.

 

“உன் ரெண்டு தங்கச்சிங்களுக்கும் வேற வேலையே இல்லை, என்னைப் போட்டு க்கொடுத்துட்டாங்க” என்று சிரித்தாள்.

 

அவளது சிரிப்பில் உயிர்ப்பில்லை, என்பதை உணர்ந்த சரவணன், “அந்தப் பொண்ணு அவ்வளவு நல்ல பொண்ணு இல்லடா, இவன் விரும்பறேன்னு சொன்னவுடனே, நானும் சரி அவனுடைய விருப்பத்தில் தலையிடக்கூடாது என்று மனதில் எண்ணிவிட்டு அந்தப் பெண்ணைப் பற்றி விசாரித்தேன். அந்தப் பொண்ணு அவ்வளவா நல்ல பொண்ணு இல்ல.

 

அவங்க பேமிலி ஆகட்டும், அந்தப் பொண்ணாகட்டும். பணத்தாசை பிடிச்சவங்க. இன்னும் சொல்லப் போனால், அந்தப் பொண்ணு நம்ம ருத்ராவ விரும்புவதற்குக் காரணம் இவன்கிட்டச் சொத்து இருக்கு. இங்க வந்தா நம்ம சொல்றபடி கேட்டு வேலை செய்வதற்கும், வீட்ல ஆள் இருக்காங்க. உட்கார்ந்து சாப்பிடலாம், அப்படின்ற மாதிரி எண்ணத்தில் வருது” என்றான்.

 

“அண்ணா, அந்தப் பொண்ணு மாமாவை நல்லாப் பார்த்துக்கிட்டால் போதுமே, அத்தையையும், தனாவையையும் நம்ம வீட்டுக்குக் கூட்டிட்டுப் போயிடலாமே” என்றாள்.

 

சரவணன் தமிழைப் பார்த்தான்.

 

“அண்ணா, நான் அவரை விரும்புவது என்னவோ உண்மைதான். இப்பவும் விரும்ப தான் செய்றேன். அதுக்காக அவர் மனசுல வேற ஒரு ஒருத்தி இருக்கான்னு தெரிஞ்சும், இவர்தான் வேணும்னு சொல்ற அளவுக்குக் கேவலமான பொண்ணு நான் இல்லை அண்ணா. அப்பா வளர்ப்பு அப்படி இல்லையே…” என்றாள்.

 

“சித்தப்பா வளர்ப்பை நான் குறை சொல்ல மாட்டேன் தமிழ். ஆனா…”

 

“விடுங்க” என்றாள்.

 

“இல்லடா, நாளைக்குக் காசு பணத்தைப் புடுங்கிட்டு அந்தப் பொண்ணு இவனை விட்டுட்டுப் போனா” என்றவுடன் அப்படி ஒரு கோணத்தில் அப்போதுதான் யோசிக்கச் செய்தாள் தமிழ்.

 

“அப்படி நடக்கும் என்று சொல்றியா அண்ணா…”

 

“எனக்கு அந்தப் பொண்ணு மேல அவ்வளவு நம்பிக்கை இல்லடா. அப்படி ஒன்னும் சரியாப்படல. அந்தப் பொண்ணு ரெண்டு, மூணு பசங்ககிட்டப் பேசுது. அந்தப் பொண்ணு இவனை உண்மையா தான் விரும்புதா, இல்ல பணம் மட்டும் தான் அந்தப் பொண்ணுக்குக் குறிக்கோளா என்று தெரியல.”

 

“சரி அண்ணா, அந்தப் பொண்ணு வீடு எங்க இருக்கு?” என்று கேட்டுக் கொண்டு அந்தப் பெண்ணையும் போய் பார்த்தாள்.

 

அவளுக்கு அந்தப் பெண்ணைப் பார்த்த ஒரு நாளிலே அந்தப் பெண் தனது மாமாவை உண்மையாக விரும்பவில்லை என்று தெரிந்தது.

 

தன் மாமா மட்டுமில்லாமல், ஒன்று இரண்டு ஆண்களிடம் அந்தப் பெண் பேசிக் கொண்டிருப்பதையும் தெரிந்து கொண்டாள்.

 

அதன் பிறகுதான் வந்து அவள் ருத்ரனிடம் அன்று பேசியது. அதற்கான பதிலடி அவன் கொடுத்தது தான் அன்று பார்த்தோமே.

 

காதலில் திளைத்திருக்கும் ருத்ரன், தான் காதலிக்கும் பெண் நல்லவள் இல்லை என்று தனது தாய்மாமன் மகள் சொல்வதைக் கேட்கவில்லை, நம்பவில்லை.

 

அவள் முதலிலேயே வந்து நீ விரும்பும் பெண் சரியில்லை என்று சொல்லியிருந்தால் கூட, அவன் யோசித்து இருப்பானோ என்னவோ?

 

ஆனால், அவள் ஆரம்பத்திலேயே நான் உன்னை விரும்புகிறேன் மாமா என்று சொல்லப் போய்,

 

அப்பொழுது, வேறு ஒரு பெண்ணை விரும்புவதாக அவன் சொல்ல,

 

அதன்பிறகு, அந்தப் பெண் சரியில்லை என்று இவள் சொல்வதால், அவள் தன்னை விரும்புவதால், தான் காதலிக்கும் பெண் மீது பழி போடுகிறாள் என்று எண்ணித் தனது தாய்மாமன் மகள் மீது கோபத்தை வளர்த்துக் கொண்டான்.

 

‘இவளது விருப்பத்திற்காக யாரை வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் குறை சொல்வாள். தனது மாமாவின் வளர்ப்பு இந்த அளவிற்கா?’ என்று யோசித்தான்.

 

ஆகையால் தான், தமிழிடம் வேறு எதுவும் பேசாமல் ஒதுங்கிச் சென்றான்.

 

ஆனால், தன்னுடைய மாமா தன்னிடமே வந்து திருமணத்தைப் பற்றிப் பேசுவார் என்று அவன் எண்ணவில்லை.

 

அவன் வேலைக்குச் செல்லும் வழி முழுவதும் தனது மாமா கேட்டதையே யோசித்துப் பார்த்தான்.

 

‘நாம் பேசியது சரியா? தன்னைத் தூக்கி வளர்த்தவரிடம் இவ்வாறு பேசலாமா? மூஞ்சில் அடித்தது போல் பேசி விட்டோமா?’ என்று யோசித்தான்.

 

‘எனக்கு வேணும் என்பதை நான் தானே கேட்டாக வேண்டும். என் மனதில் யாரும் இல்லை என்றால் கூட, தமிழைப் பற்றிக் கொஞ்சமாவது யோசிக்கலாம். ஆனால், என் மனதில் ஏற்கனவே ஆனந்தி இருக்கும் பட்சத்தில், நான் எப்படி தமிழ் பற்றி யோசிப்பது? இது சரியல்ல வளர்த்தவர் என்பதற்காக அவருடைய பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள முடியாதே’ என்று யோசித்தான்.

 

ஒரு நொடி அவனுக்கே அதிர்ச்சியாகி விட்டது. அவன் மீது அவனுக்கே கோபம் எழுந்தது.

 

‘என்ன?, தன்னை வளர்த்தற்காகவா? அவர் அவ்வளவு தான் தனக்கா? தனக்குத் தாய், தந்தை அனைத்துமே அவர் தானே, இது நன்றிக் கடனா? நன்றிக் கடனுக்காகவா அவர் தன் பெண்ணைத் தனக்குக் கட்டிக் கொடுக்கிறேன் என்று கேட்டு வந்து நின்றார். இல்லையே, தன்னுடைய நலனுக்காகவும், என்னுடைய அம்மா, தங்கையின் நலனுக்காகவும் தானே யோசித்தார். அப்படிப்பட்டவரிடம் மூஞ்சில அடித்தது போல் பேசி விட்டோமோ?’ என்று வருந்தினான்.

 

 

 

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 3

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
2
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்