Loading

தமிழ் தான் இங்கு முனகிக் கொண்டு இருந்தாள்.

‘அது எங்களுக்குத் தெரியாது பாரு. அதுக்கு அமைதியாகவே எழுந்து குளிக்கப் போயிருக்க வேண்டியதுதானே? எதுக்கு என்கிட்ட வந்து என்ன யோசனை என்று கேட்கணும்?’ என்று முனகிக் கொண்டே எதைக் கட்டுவது? என்று புரியாமல் நின்றவள்,

‘அம்மாவிடம் எதுவாக இருந்தாலும் சொல்லிக் கொள்ளலாம்’ என்று விட்டுத் தனது மாமா ஆசையாக வாங்கியது என்று எண்ணி அவன் வருவதற்குள் நேர்த்தியாகப் புடவையைப் பாதி கட்டி இருந்தாள்.

கொசுவத்தை இடுப்பில் சொருகி கொண்டிருக்கும் போது வெளியில் வந்த ருத்ரன், அவளை அமைதியாகப் பார்த்துவிட்டு அவளைப் பின்பக்கம் இருந்து கட்டிக் கொண்டான்.

“மாமா…” என்று சொன்ன அவளது குரல் உள்ளே சென்று இருந்தது.

அவனது கை அவளது இடுப்பு வளைவில் இருந்தது.

“செமையா இருக்கடி. இந்தப் புடவை உனக்கு எப்படி இருக்கும் என்று ஒரு சில நொடி யோசிச்சு தான் எடுத்தேன். இருந்தாலும், இப்போ கட்டின பின்னாடி அப்படியே அள்ளுதே” என்றான்.

“என் மாமா எடுத்துக் கொடுத்தது எனக்கு மேட்ச் இல்லாமல் போயிடுமா, என்ன?” என்று தன் தலையால் அவனது நெற்றியில் முட்டி விட்டு, “லேட்டாகுது மாமா. புடவையும் கசங்குது, கோவிலுக்கு வேற போகணும்” என்றாள்.

“நான் உன்னை என்னடி பண்ணேன். அதுவும் புடவை வேற கசங்குதுன்னு சொல்ற? தப்புத் தப்பா தோணுது எனக்கு” என்றான்.

திரும்பி அவன் தலையில் கொட்டியவள், “தோணும், உனக்கு எல்லாம் தப்புத் தப்பா தோணும்” என்று விட்டு,

“புடவை நல்லா இருக்கா?” என்று கேட்டாள்.

“நல்லா இருக்குடி” என்று சொல்லி, அங்கு இருந்த குங்குமத்தை முதல்முறையாக, ஒரு வருடங்களுக்குப் பிறகு அவளது நெற்றியில் வைத்துவிட்டு, அவளது நெற்றியில் ஆழ்ந்த முத்தம் ஒன்று கொடுத்தவன்,

அவன் வாங்கிக் கொண்டு வந்திருந்த செயினையும் அவளது கழுத்தில் போட்டுவிட்டு, மோதிரத்தை எடுத்து அவள் கையில் மாட்டி விட்டு அவனுக்காக வாங்கிய மோதிரத்தையும், செயினையும் அவளது கையில் வைத்தான்.

சிரித்துக் கொண்டே அவனது கழுத்தில் செயினை மாட்டியவள், அவனது கையில் மோதிரத்தை மாட்டிவிட்டு “உண்மையாவே நேரம் ஆகுது மாமா. உன் கொழுந்தியா வந்தா ரெண்டு பேத்தையும் வச்சு செய்வா. இப்பவே வந்திருப்பா…” என்று சிரித்துவிட்டு, “சீக்கிரம் கிளம்பு மாமா” என்றாள்.

“சரி டி கிளம்பு” என்றான்.

“நீ வெளியே போனால் தான”.

“ஓவரா பண்ணாதடி”.

“நீ தான் புடவையை முழுசா கட்டிட்டியே, இடுப்புல மட்டும்தான் சொருவப் போற. இதுக்கு இவ்வளவு அக்கப்போரா?” என்று அவள் கீழே விட்டு இருந்த கொசுவத்தைப் பிடித்தவன்,

ஒழுங்காக மடிப்பு எடுத்து அவளது இடுப்பில் சொருகிவிட்டு அவளது மிரட்சியான பார்வையைப் பார்த்துச் சிரித்துவிட்டு, தனக்காக எடுத்த உடையை மாட்டிக் கொண்டு வெளியில் சென்று விட்டான்.

அவன் வெளியில் செல்லும்போது தன் தலையைக் கோதிக் கொண்டே செல்ல, காயத்ரி தான், “என்ன மாமா, படு ஃபார்ம்ல இருக்க போல” என்று சிரித்தாள்.

“பின்ன இருக்காதா என்ன? இன்னைக்கு என்னோட கல்யாண நாள் ஆச்சே, அதுவும் முதல் வருடக் கல்யாண நாள் ஆச்சே” என்று சொல்ல,

“அது சரி” என்று சிரித்தாள் காயூ.

அதிர்ச்சியில் இருந்த மீண்ட தமிழ், ‘இந்த மாமாவை வச்சுக்கிட்டு… இதெல்லாம் எங்க தான் கத்துக்கிட்டாரோ தெரியல. ஒருவேளை புடவை கட்டிவிட வேற யார் கிட்டயாவது ரிகர்சல் பார்த்திருப்பாரோ?” என்று எண்ணியவள், தன் தலையில் தட்டிக் கொண்டு ‘புத்தி எங்கெங்கெல்லாம் போது தமிழ் உனக்கு. இது மட்டும் தெரிந்தது அவருக்கு, அவ்வளவுதான்’ எண்ணிச் சிரித்தாள்.

தன்னை முழுதாக ஒரு சில நொடி பார்த்தவள் கிளம்பி வெளியில் வர,

“என்ன தலை கூட இன்னும் சீவாம இருக்க தமிழ்” என்றாள் காயத்ரி.

“நேரம் இல்லடி” என்றாள்.

“அது சரி, எங்கிருந்து உனக்கு நேரம் இருக்கும்? விடிய விடிய வேலை செஞ்சிருந்தா” என்று காயத்ரி சொல்ல,

தமிழ் ருத்ரனைப் பார்த்துவிட்டுத் தனது தங்கையின் தலையில் கொட்டியவள்,

“நான் என்ன வேலை பார்த்தேன் என்று நீ வந்து பார்த்தியா?”

“வீட்டு வேலையைச் சொன்னா, உனக்குப் புத்தி எங்கேயோ போகுது. நைட் எல்லா வேலையும் நீ தான் முடிச்சுட்டுப் படுக்கப் போனேன்னு எங்க மாமா சொல்லிட்டுப் போனாரு” என்று ருத்ரனையும் கோர்த்துவிட,

அங்கு, டீ குடித்துக் கொண்டிருந்த ருத்ரனுக்குப் புரையேறியது.

‘அக்காவுக்கும், தங்கச்சிக்கும் நடுவில் நான் தான் மாட்டிட்டு முழிக்கணும் போல… இந்த சில்லுவண்டு என்னைக் கோர்த்து விட்டு வேடிக்கை பார்க்குது’ என்று மனதிற்குள் எண்ணி அவளைப் பார்க்க,

தனது மாமாவைப் பார்த்துச் சிரித்த காயு அவனைப் பார்த்துக் கண்ணடித்துவிட்டு,

“சரி சரி விடு. திரும்பு” என்று எனது அக்காவிற்கு நேர்த்தியாகத் தலை சீவி விட்டுத் தாங்கள் எடுத்துக் கொண்டு வந்த, தன் கையால் கட்டிய பூவை அவளுக்கு வைத்து அழகு பார்த்த காயத்ரி,

தனது அக்காவை நெட்டி முறித்து விட்டு, “சூப்பரா இருக்குடி தமிழு” என்று தன்னை மீறிச் சொல்ல,

தன் தங்கையைக் கட்டிக்கொண்டு சிரித்தாள் தமிழ்.

“லூசு வா…”

“ரெண்டு பேரும் சாமி கும்பிடுங்க” என்று பூஜை அறைக்கு அழைக்க,

“அம்மா, அப்பா எங்க காயூ?” என்றாள்.

“அப்பா பெரியப்பா வீட்டுக்குப் போய் இருக்காரு. அண்ணா, பெரியப்பாவைக் கூப்பிடுவதற்கு. எல்லாருமே வெளியே உங்க ரெண்டு பேத்துக்காக தான் வெயிட் பண்ணிட்டு இருக்காங்க.

அம்மாவும், அத்தையும் சமையல் அறையில் இருக்காங்க. என்ன செய்றாங்க எல்லாம் எனக்குத் தெரியாது. நீ வா நேரம் ஆகுது, நல்ல நேரத்தில் கிளம்பனும்” என்று விட்டு இருவரையும் கையோடு பூஜை அறைக்கு அழைத்துச் சென்று சாமி கும்பிட்டு விட்டு வெளியில் வர,

தனது அத்தையும், அம்மாவும் சமையல் அறையில் இருந்து வருவதைப் பார்த்த தமிழ், “ஆசிர்வாதம் பண்ணுங்க” என்று விட்டு ருத்ரனைப் பார்க்க,

இருவரும் ஒன்றாகச் சேர்ந்து பாக்கியம் காலில் விழுந்தார்கள்.

இருவரையும் ஆசீர்வாதம் செய்த பாக்கியம், “அண்ணா, அண்ணி கிட்டயும் ஆசீர்வாதம் வாங்குங்க” என்றார்.

அப்பொழுதுதான் செல்வம் வீட்டிற்குள் வர அவர்களிடமும் ஆசிர்வாதம் வாங்கினார்கள்.

பின்னாடியே வந்த முனுசாமி, இளவரசி காலிலும் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினார்கள்.

நேரம் ஆவதை உணர்ந்து குடும்பத்துடன் அனைவரும் கோவிலுக்குச் செல்ல வெளியில் வர, அப்பொழுதுதான் அகிலா தனது கணவன், மகனுடன் வண்டியில் வந்து இறங்கினாள்.

“மேடம்க்கு, இப்பதான் விடிஞ்சிச்சோ?” என்று நக்கல் அடித்துக் கொண்டே அகிலா வர,

“உனக்கு இப்பதான் இந்தப் பக்கம் வர வழி தெரிஞ்சுச்சோ?” என்றாள் தமிழ்.

“எங்களுக்கும் குடும்பம் குட்டின்னு இருக்கு மேடம், உங்களுக்கு மட்டும் கிடையாது” என்று வாய்க்கு வாய் பேசிக் கொண்டே அகிலா தனது மகன் அமுதனைத் தனது அண்ணன் கையில் கொடுத்தவள்,

தன் கையில் இருக்கும் பூவைத் தமிழ் தலையில் வைத்துவிட்டு, “என்ன மாமா சௌக்கியமா? எதிர்காலம் பிரகாசமா இருக்கு போல” என்று சிரித்தாள்.

“அடப்பாவிங்களா, எங்கிருந்து தேடி வரீங்கடி… காலையிலேயே ஒருத்தி ஒருத்தியா வந்து எதையாச்சும் இழுத்து விட்டுப் போறீங்க” என்று லேசாக முனங்கினான்.

“மச்சினிச்சினா சும்மாவா? எங்க ரகளையைக் காட்டத் தானே செய்வோம்” என்று கண்ணடித்துவிட்டு அவனது தோளில் சாய்ந்து கொண்டாள்.

“இப்பத் தாண்டி உங்களுக்கெல்லாம் இந்த மாமா கண்ணுக்குத் தெரியுறேன்.

இவ்வளவு நாளாகத் தெரியல. இப்ப வேணும்னே இன்னைக்கு வச்சு செய்ய வந்திருக்கீங்க அக்காவும், தங்கச்சியும்” என்றான்.

“ஓவர் கொஞ்சல் தான்” என்றாள் தமிழ் முறுக்கிக் கொண்டு.

“எங்க மாமா, நாங்க கொஞ்ச செய்றோம்” என்றாள் அகி.

“கொஞ்சுங்கடி யாரு வேணான்னு சொன்னா” என்று விட்டுச் சரவணன் மடியில் உட்கார்ந்து இருக்கும் அமுதனைக் கொஞ்ச,

“சரி நேரம் ஆகுது, உங்க விளையாட்டுத் தனத்தை எல்லாம் மூட்டை கட்டி வச்சிட்டு வண்டியில் ஏறுங்க. இன்னும் சின்னக் குழந்தையாவே இருக்க வேண்டியது” என்று முனுசாமி சொல்ல,

அனைவரும் சிரித்த முகத்துடன் குடும்பத்துடன் செல்ல, டிராவல்ஸ் ஏற்பாடு செய்திருந்ததால் வண்டியில் ஏறினார்கள்.

அடுத்த இரண்டு மணி நேரம் சிரிப்பும் கும்மாளமுமாகச் சென்றது அவர்களது பயணம்.

இரண்டு மணி நேரத்துக்குப் பிறகு குலதெய்வ கோயிலைச் சென்று அடைந்தார்கள்.

பொங்கல் வைத்துச் சாமியை தரிசனம் செய்துவிட்டு அபிஷேகம் அனைத்தையும் முடித்துக் கொண்டு அனைவரும் ஒரு இடத்தில் உட்கார்ந்து இருக்க,

அப்பொழுது இருவருக்கும் அருகில் வந்த சரோ, தனது நண்பனின் கையில் ஒரு பொருளை வைக்க,

என்னடா மச்சான் இது?” என்றான்.

“பிரிச்சு தான் பாரேன்” என்றவுடன் தமிழைப் பார்த்துவிட்டு ருத்ரன் அதைப் பிரிக்க,

இருவரும் திருமணத்தன்று எடுத்த போட்டோ இருந்தது.

இதுவரை இந்த ஒரு வருடத்தில் இருவரது திருமணப் போட்டோவை இதுவரை இருவருமே பார்த்ததில்லை.

கல்யாணம் முடிந்த இரண்டு மாதத்தில் ஆல்பமும் வந்திருக்க,

ஆனால், இதுவரை இருவருமே பார்க்கவில்லை. வீட்டில் உள்ளவர்கள் மட்டுமே பார்த்து இருந்தார்கள்.

இப்பொழுது முதன்முறையாகத் திருமணக் கோலத்தில் இருக்கும் தங்களது போட்டோவைப் பார்த்தவுடன் இருவரது கண்களும் சந்தோஷத்தில் கலங்கி இருந்தது.

இருவருமே சரவணனைப் பார்க்க,

“எனக்குத் தெரியும்டா, நீங்க இதுவரைக்கும் இதைப் பார்க்கலைனு” என்று சொல்லிச் சிரித்து விட்டு, இருவரது கையிலும் இன்னொரு பாக்ஸைத் திணித்தான்.

“இது என்னடா மச்சான்?” என்று கேட்க,

“கொஸ்டின் கேட்காமல் என்னன்னு பார்த்தால் தெரிஞ்சிடப் போது” என்று சிரித்தான்.

“என்னதான் அப்படி அண்ணன் கொடுத்திருக்கிறார் என்று பார்க்க வேண்டும்” என்று ஒரே போல் காயுவும், அகிலாவும் சொல்ல,

ருத்ரன் இருவரையும் முறைத்து விட்டு அவன் கொடுத்ததைப் பிரிக்க,

அதில் சிறியதாக இருவரது பெயரின் முதல் எழுத்துப் போட்ட மோதிரம் இருந்தது.

இருவரும் தங்களுக்குள் பார்த்துச் சிரித்துக் கொண்டு தங்களது விரலை நீட்ட,

இருவரையும் பார்த்துச் சிரித்த சரவணன், “சரி மச்சான் வச்சுக்கோங்க, அப்புறமா போட்டுக்குவீங்க” என்றான்.

“இல்லடா இரு” என்று விட்டுத் தங்கள் விரலில் இருக்கும் மோதிரத்தை வேறொரு விரலுக்கு மாற்றி விட்டுச் சரவணன் கொடுத்த மோதிரத்தைத் தங்களது கைகளில் மாற்றிக் கொண்டார்கள்.

“இருக்கட்டும் டா, விடுங்க” என்று சரவணன் சொல்ல,

“என் மச்சான், எனக்காக எங்களுக்காக வாங்கினது” என்று விட்டு அமைதியாகி விட்டான்.

அகிலா “அப்ப நானும் தான்” என்று குதித்துக் கொண்டு வந்தாள்.

“உனக்கு என்னமா வேணும்?” என்றான் ருத்ரன்.

“அண்ணன் கொடுத்ததை நீங்களே வச்சுக்கோங்க, எனக்கு ஒன்னும் அது வேண்டாம்” என்றாள்.

“வேற என்னமா வேணும் உனக்கு?”

“நான் எது கேட்டாலும் கொடுத்துடுவியா மாமா?” என்று கேட்டாள்.

“கேளு, முடிந்தால் கொடுப்போம்” என்றான்.

“அப்ப அடுத்த வருஷம் என் பையன்கூட விளையாடுறதுக்கும், என்னைச் சித்தினு வாய் நிறையக் கூப்பிடுறதுக்கும், ஒரு மகளைப் பெற்றுக் கொடுப்பியா?” என்று கண்கள் கலங்கக் கேட்க,

இங்கு ருத்ரனுக்குத் தான் தொண்டை அடைத்திருந்தது.

வேகமாக அகிலாவைத் தன் தோளோடு அணைத்தவன், “லூசா நீ…” என்றான்.

“நான் விளையாட்டுக்குக் கேட்கல மாமா” என்றாள்.

அவளைத் தன் நெஞ்சில் பிரித்து எடுத்தவன், “என்னோட குறும்புக்கார அகியை நான் இப்படிப் பார்க்க விரும்பல” என்றான்.

தன் கண்ணைத் துடைத்துவிட்டுச் சிரித்த அகிலா தன் கையில் இருக்கும் கவரை அவனிடம் நீட்ட,

“நீ என்ன பண்ணி வச்சிருக்க?” என்றான்.

“பிரிச்சுப் பாரு மாமா” என்று சிரித்தாள்.

சரி என்று விட்டுப் பிரிக்க தமிழ் தான், “உன் மாமாக்கு மட்டும் தானாடி, எனக்கு இல்லையா?” என்று கேட்டாள்.

“என் மாமாக்குக் கொடுத்தா என்ன? உனக்குக் கொடுத்தா என்ன? போடி அங்கிட்டு… இனி என் மாமாவுக்கு இருக்கிறது எல்லாம் உனக்கு தானே சொந்தம். உன்கிட்ட இருக்கிறது எல்லாம் எங்க மாமாவுக்குத் தானே சொந்தம்” என்று சிரித்தாள்.

“ஓ அப்படி வரீங்களோ?” என்று விட்டுத் தமிழ் ருத்ரன் கையில் இருக்கும் பொருளையே பார்த்துக் கொண்டு இருக்க, அதில் ஒரு கவர் இருந்தது.

“இது என்னடி கவர்?” என்று தமிழ் கேட்க,

அகிலா தமிழை முறைத்துவிட்டு ருத்ரனின் கண்ணைப் பார்த்துக் கொண்டு இருந்தாள். ருத்ரன் அதைப் பிரித்துப் படித்தவன், கண்கள் தன்னையும் மீறிக் கலங்கச் செய்தது.

“என்ன மாமா இருக்கு அதுல?” என்று தமிழ் கேட்க,

ருத்ரன் வேகமாக அவன் கையில் இருக்கும் கவரை தமிழிடம் நீட்டினான்.

 

Click on a star to rate it!

Rating 4.9 / 5. Vote count: 14

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
13
+1
0
+1
1

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

1 Comment