Loading

தனம் தன் மகள் தமிழைத் திட்டிவிட்டு, “சரி நாளைக்கு லீவ் போட்டு விடு” என்றார்.

“என்னமா இப்போ வந்து சொல்ற?”.

“ஏன்? இப்ப வந்து சொன்னா என்ன? லீவு போட முடியாதோ? அதை விட முக்கியமான வேலை ஏதும் இருக்கா உனக்கு?” என்றார்.

‘ஆமாம், மாமியாரும் மருமகனும் ஒரே மாதிரிப் பேச வேண்டியது’ என்று வாய்க்குள் முனகிக் கொண்டு “போடுறேன்” என்றாள்.

சரி என்று விட்டு தனம் பாக்கியத்தைப் பார்க்க.

பாக்கியம் இவ்வளவு நேரம் அமைதியாக தான் இருந்தார்.

“என்ன பாக்கியம், அமைதியா இருக்க? இவளப் பேச விட்டு வேடிக்கை பார்த்துட்டு இருக்க.”

“என் மருமகள் ஏதும் தப்பா பேசலையே அண்ணி. அவ நடந்ததைச் சொல்றா.”

“நீயே அவளைப் பேச விட்டு வேடிக்கை பார்த்துட்டு இருக்க. இது நல்லதுக்கு இல்லை. ஒருத்தங்க தவறு செஞ்சா அவங்க அதிலிருந்து வெளியே வருவதற்கும் கொஞ்சம் வாய்ப்புக் கொடுக்கணும். மாமியாரும், மருமகளும் அதை மறந்துடாதீங்க” என்று விட்டு, “ருத்ரா ருத்ரா…” என்று இரண்டு முறை அழைத்தார் தனம்.

அவனும் ரூமில் இருந்து வெளியில் வந்தான்.

அவனது கண்கள் சிவந்து கலங்கி இருந்தது.

அதைப் பார்த்த தமிழுக்கு உள்ளுக்குள் வலிக்கச் செய்தாலும், தன்னைத் தேற்றிக்கொண்டு அமைதியாக நின்றாள்.

தனம் தமிழ், ருத்ரன் இருவருக்கும் புதுத் துணி எடுத்துக் கொண்டு வந்திருக்க, அதைக் கொடுத்து, “நாளைக்கு உங்க ரெண்டு பேத்துக்கும் முதல் கல்யாண நாள், குடும்பத்துடன் கோவிலுக்குப் போயிட்டு வந்துடலாம். உனக்கு லீவு சொல்லிடு பா நாளைக்கு” என்றார் ருத்ரனிடம்.

ஒரு சில நொடி தனது அத்தை, மாமாவைப் பார்த்துவிட்டு, “சரி அத்தை” என்று அந்தப் புதுத் துணியைத் தனது அம்மாவின் கையில் கொடுத்தவன்,

“தப்பா எடுத்துக்காதீங்க, எனக்குக் கொஞ்சம் வேலை இருக்கு. அம்மா கிட்டப் பேசிட்டுப் போங்க” என்று விட்டு வெளியில் சென்று விட்டான்.

அவன் வெளியில் சென்றவுடன் தனம் தான் தனது மகளை முறைக்கச் செய்தார்.

அப்பொழுது காயத்ரி தான் “விடு மா பார்த்துக் கொள்ளலாம். நம்ம மாமா தானே” என்று தன் தாயிடம் சொல்லிவிட்டு வேகமாகத் தனது மாமாவின் பின்னாடியே வெளியில் சென்றாள்.

அவன் நேராகச் சென்று நின்ற இடம் சரவணன் வீட்டிற்கு.

சரவணன் அப்பொழுதுதான் தனது அப்பாவிடம் கணக்கு வழக்குகளை ஒப்படைத்துவிட்டு வெளியில் கட்டில் எடுத்துக் கொண்டு வந்து போட்டு உட்கார்ந்தான்.

ருத்ரன் அவனது அருகில் வந்து உட்கார்ந்து அவனது தோளில் கையைப் போட,

“என்ன மச்சான், இந்த நேரத்தில் இந்தப் பக்கம் வந்திருக்க? இந்த நேரத்துல தமிழ் விடாதே” என்றான்.

“உன் தங்கச்சி விட்டா தான், நான் வரணுமோ?” என்று கேட்கும் போதே அவனது குரல் கரகரத்தது.

தனது மச்சான் சரியில்லை என்பதை அவனது ஒற்றை வார்த்தையில் உணர்ந்த சரவணன், எதுவும் பேசாமல் “சரி விடு மச்சி” என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே காயத்ரி வர,

“என்னடா பின்னாடியே உன் மச்சினிச்சி வேற வரா… அன்னைக்கு விளையாட்டுக்கு தான் சொன்னானு பார்த்தா முடிவு பண்ணிட்டியோ? ரெண்டு வண்டி ஒரே நேரத்தில ஓட்டலாம்னு” என்று அவனைச் சரி செய்யும் நோக்கில் சரோ சொல்ல,

தனது மச்சானைப் பார்த்து முறைத்த ருத்ரன் பின்னால் திரும்பி காயத்ரியையும் முறைத்தான்.

“என்னை எதுக்கு மாமா முறைக்கிற?” என்று சொல்லிக் கொண்டே அவனது தோளில் சாய்ந்து கொண்டாள்.

“உன்னை யார் இப்போ என்ன ஃபாலோ பண்ணிட்டே வரச் சொன்னா” என்று கேட்டான்.

“எங்க அண்ணனைப் பார்க்க வந்தேன் நானு” என்று கண்ணடித்துச் சிரித்தாள்.

“கேடி” என்று அவள் தலையில் கொட்டி விட்டு, “நான் நல்லா தான் இருக்கேன் காயு” என்றான்.

“அதான் உன் முகத்திலயே தெரியுதே மாமா” என்று அவனது மடியில் படுத்தாள்.

அவளது தலையைக் கோதிக் கொண்டிருக்கும் போதே அவளது தாடையில் ருத்ரனின் ஒரு சொட்டுக் கண்ணீர்த் துளி வந்து விழுந்தது.

அவனது கண்ணைத் துடைத்துவிட்டு, ஒரு சில நொடி கண்களை மூடிக்கொண்டு இருந்த காயு, “எல்லாமே மாறும் மாமா. ரெண்டு பேரும் மனசு விட்டுப் பேசாத வரை எதுவும் மாறாது.

புருஷன் பொண்டாட்டி விஷயத்துல நாங்க யாரும் தலையிட மாட்டோம். அன்னைக்கு நீ சொன்னது தான், நான் இதைப் பத்திப் பேச விரும்பல. ஆனா, மாறும். ரெண்டு பேருமே உட்கார்ந்து பேசாத வரைக்கும் எதுவும் மாறாது.

இது உங்க ரெண்டு பேர் கையில் தான் இருக்கு” என்று விட்டு, “நான் வரேன்” என்று திரும்பியும் பார்க்காமல், தனது அத்தை வீட்டை நோக்கிச் சென்று விட்டாள் காயத்ரி.

காயத்ரி சென்றவுடன் அவனது தோளில் தட்டிய சரோ “மச்சான்…” என்றான்.

சரோவைப் பார்த்துச் சிரித்த ருத்ரன் ஒன்னும் இல்லடா. நீ சாப்பிட்டுப் படு” என்று கிளம்ப, “சாப்பிட்டுப் போ டா” என்றான் சரோ.

“அங்க உன் தங்கச்சி சமைச்சு தான் வச்சிருக்கா. நான் மாட்டும் ஏதோ ஒரு வேகத்துல வந்துட்டேன். அத்தையும் மாமாவும் வேற வந்திருக்காங்க, சரி டா” என்று விட்டுத் தன் வீட்டிற்குக் கிளம்பினான்.

தன் நண்பனைப் பார்த்துக் கொண்டிருந்தான் சரோ.

ருத்ரன் தனது மச்சானைத் திரும்பிப் பார்த்துவிட்டு, வேகமாக ஓடி வந்து அவனைக் கட்டி அணைத்து அவனது தாடையில் முத்தமிட்டு, “நான் நல்லா தான்டா இருக்கேன். சரி பண்ணிடுவேன் சீக்கிரம். முடிஞ்ச அளவுக்கு இன்னைக்குள்ள சரி பண்ணப் பார்க்கிறேன்” என்று விட்டு சொல்லாமல் ஓடி விட்டான்.

தனது மச்சானைப் பார்த்துச் சிரித்த சரோ, “சரியாகும். இல்லை என்றால் நான் சரி பண்ணுவேன். என் மச்சானின் வாழ்க்கையைச் சரி பண்றதை விட எனக்கு வேற என்ன பெரிய வேலை?’ என்று தன் கண்ணில் துளிர்த்து இருக்கும் கண்ணீரைத் துடைத்த சரவணன் வீட்டுக்குள் சென்று விட்டான்.

ருத்ரன் வீட்டிற்குள் வரும் பொழுது அனைவரும் சாப்பிட்டுக் கொண்டிருக்க,

“வா, ருத்ரா சாப்பிடலாம்” என்று செல்வம் அழைக்க,

“இல்ல மாமா, நீங்க சாப்பிடுங்க. நான் தமிழ் கூடப் பொறுமையா சாப்பிடுகிறேன்” என்றான்.

தமிழ் ஒரு சில நொடி அவனைப் பார்த்துவிட்டு அமைதியாகி விட்டாள்.

பிறகு அனைவரும் சாப்பிட்டு விட்டு எழுந்து கொள்ள,

“நீங்க இரண்டு பேரும் உட்காருங்க தமிழ், நேரம் ஆகுது பாரு. நான் பரிமாறுறேன்” என்று தனம் சொல்ல,

“இல்லம்மா, நாங்களே போட்டுச் சாப்பிட்டுக்குறோம். இப்பவே என்ன?” என்றாள்.

தனம் மணி பார்க்க, அவன் அமைதியாகவே இருந்தான்.

“அத்தை, இங்கயே தங்கிக்கோங்க. காலைல இங்கிருந்து எல்லாரும் ஒன்னா கோவிலுக்குப் போலாம். இப்பவே நேரம் ஆயிடுச்சு பாருங்க” என்றான்.

“இல்ல ருத்ரா அது சரி படாது. காலைல பாக்கலாம். குளிச்சிட்டு ரெடியா இருங்க.”

“எத்தனை மணிக்கு மாமா கிளம்புறோம்?” என்றான்.

“காலைல வீட்டில் இருந்து ஒரு ஆறு மணி போல கிளம்பலாமே” என்று விட்டு, “நான் அண்ணா கிட்டயும் சொல்லிட்டேன்.

அகிலாவுக்கும் சொல்லிட்டேன்டா” என்று விட்டு, “சரி கிளம்பி இருங்க” என்று மட்டும் சொல்லிவிட்டு வேறு எதுவும் சொல்லாமல் தனது தங்கையைப் பார்க்க,

“சரி அண்ணா” என்று பாக்கியம் சொன்ன உடன் மூவரும் அவர்கள் வீடு நோக்கிச் சென்று விட்டார்கள்.

செல்வம் தனது மனைவியை அழைத்துக் கொண்டு செல்ல.

காயத்ரி அவர்கள் பின்னாடியே மெதுவாக அவர்களிடம் பேசிக் கொண்டே போனாள்.

போகும் மூவரையும் பார்த்துவிட்டு ருத்ரன் வீட்டிற்குள் வர,

“மாமா சாப்பிடலாம் வா…” என்றாள்.

“தமிழ் பசிக்கிதா உனக்கு?” என்றான்.

அவனது கண்களை ஒரு சில நொடி உற்றுப் பார்த்தவள்,

“பொறுமையா சாப்பிட்டுக்கலாம்” என்று விட்டு வீட்டிற்குள் வந்தாள்.

தனது அத்தை, தனா இருவரையும் பார்த்தவள், “நேரம் ஆகுது, போய் தூங்குங்க. காலையில கோயிலுக்குப் போகனும்” என்று சொல்ல,

“அண்ணி நீங்க ரெண்டு பேரும் முதல்ல சாப்பிடுங்க” என்றாள்.

“நான் பார்த்துக்குறேன். தனா நீ போய் தூங்கு.”

“இல்ல அண்ணி” என்று சொல்ல,

“நான் தான் பார்த்துக்கிறேன்னு சொல்றேன் இல்ல, நீ போய் தூங்கு. காலேஜுக்கு லீவு சொல்லிட்டீங்களா?” என்று கேட்க,

“அதெல்லாம் ஒன்னும் பிரச்சனை இல்ல அண்ணி, சொல்லிக்கலாம்” என்றாள் தனா.

“சரி அண்ணி” என்று விட்டு ரூமுக்குள் சென்று விட்டாள் தனா.

பாக்கியம் தனது மருமகளையும், மகனையும் பார்த்தவர் எதுவும் பேசாமல் அமைதியாக அவருடைய ரூமுக்குச் சென்று விட்டார்.

தமிழ் வேகமாக ரூமுக்குள் சென்று விட ருத்ரன் ஒரு சில நொடிகளுக்குப் பின் உள்ளே வந்தான்.

“மாமா என் மேல கோவமா?” என்று கேட்டாள்.

“இல்ல தமிழ், கோவம் எதுவும் இல்லை. ஆனால் நீ…” என்று ஏதோ சொல்ல வந்துவிட்டு, “ஒன்னும் இல்ல, பசிக்குது வா சாப்பிடலாம்” என்றான்.

“இப்போதுதான் கொஞ்ச நேரம் ஆகட்டும், என்று சொன்னீங்க?” என்று கேட்க,

“இல்ல வா, சாப்பிடலாம். நாளைக்குக் காலைலயே போகனும், உனக்கும் டயர்டா இருக்கும் இல்ல. பாத்திரம் வேற கழுவி வைக்கணும்” என்றான். எதுவும் பேசாமல் தமிழ் ஹாலுக்கு வர,

இருவருக்கும் சாப்பாடு கொண்டு வந்து வைத்துச் சாப்பிட்டுவிட்டு அனைத்துப் பாத்திரங்களையும் ருத்ரன் கொண்டு போய் சமையல் அறையில் போட,

“நான் பாத்துக்குறேன் மாமா” என்றாள்.

“ஒன்னும் பிரச்சனை இல்ல, வேற ஏதாச்சும் வேலை இருந்தா நீ போய்ப் பாரு, நான் பாத்திரம் கழுவிக்கிறேன்” என்றான்.

அவளுக்கு வீடு வாசல் காலையில் எழுந்து அவசரமாகத் துடைக்க வசதியாக இருக்காது என்று எண்ணி அந்த நேரத்தில் வீடு வாசல் துடைக்கச் செல்ல,

ருத்ரன் பாத்திரத்தைக் கழுவி விட்டு சமையல் அறை முழுவதையும் சுத்தம் செய்து வைத்திருந்தான்.

ஒரு சில நொடி அவனைப் பார்த்துவிட்டு அவன் இதற்கு முன்பும் தனது அம்மாவிற்காகவும், தங்கைக்காகவும் இந்த வேலைகளைச் செய்து இருக்கிறான். ஆகையால் அது அவளுக்கு அவ்வளவு பெரிதாகத் தெரியவில்லை.

எதுவும் பேசாமல் அனைத்து வேலைகளையும் முடித்துக் கொண்டு இருவரும் ரூமுக்குள் செல்ல,

“நீ குளிச்சிட்டு வா மாமா, வேர்த்துடுச்சு பாரு. நேரம் ஆகுது தூங்கலாம்” என்றாள்.

எதுவும் பேசாமல் தனக்கும் உடல் வேறு கசகசவென்று இருக்க குளித்துவிட்டு வெளியில் வர,

தமிழும் வீட்டில் இரவு அணியும் உடை எடுத்துக் கொண்டு சென்று குளித்துவிட்டு வந்தாள்.

அவள் கீழே பாய் விரித்துப் போட்டுப் படுக்கச் செல்ல, வேகமாக அவளது அருகில் வந்து உட்கார்ந்தான் ருத்ரன்.

“என்ன மாமா?” என்று கேட்க,

எதுவும் பேசாமல் அவளது மடியில் படுத்துக் கொண்டான்.

அவனது தலையைக் கோதிக் கொண்டே இருந்த தமிழுக்குத் தங்களுடைய வாழ்க்கை சிறுவயதில் எப்படி இருந்தது என்று எண்ணி கொண்டு இருக்க,

தன்னை மீறிக் கண்கள் கலங்க கண்ணை மூடி உட்கார்ந்து இருந்தாள்.

அவள் கண்ணை மூடிய நொடி அவளது கண்ணில் துளிர்த்து இருந்த கண்ணீரைத் துடைத்த ருத்ரன், அவளது இடுப்பைக் கட்டிக்கொண்டு, “சாரி டி எதையும் நான் வேணும்னு செய்யல. நான் உணரலைன்றது தெரிஞ்சும் நீ என்னைச் சாவடிக்காத விழி.

இதுக்கு மேல உன்கிட்ட எனக்கு என்ன பேச என்ன சொல்லனும்னு கூடத் தெரியல. ஆனா “இந்த நிமிஷம் இப்போ முழுக்க முழுக்க என் மனசுல நீ மட்டும் தான்டி இருக்க. நான் உனக்கு இதை வார்த்தையா சொல்லிப் புரிய வச்சா மட்டும் புரிஞ்சிப்பியா?

ஏன், என்னோட எந்த ஒரு நடவடிக்கையும் உனக்குக் காட்டிக் கொடுக்கலையா? என் மனசும், கண்ணும் உனக்கு ஒரு நொடி கூடக் காட்டிக் கொடுக்கலையா? இன்னும் எந்த அளவுக்கு என்னைச் சாகடிக்கலாம் என்று நினைக்கிற?

உன்னோட ஒவ்வொரு வார்த்தையும், செய்கையும், மௌனமும் என்னை உசுரோட கொல்லுதுடி. இருந்தாலும்…” என்று அவன் மேற்கொண்டு பேச வருகையில்,

அவனது வாயில் கை வைத்து அவனை மேற்கொண்டு பேசவிடாமல் தடுத்தவள்,

அவன் முகத்தையே அமைதியாகப் பார்த்துக் கொண்டிருக்க,

“என்ன இப்போ உனக்கு?” என்றாள்.

“அப்ப நான் பேசுன எதுவும் உனக்குப் புரியாது. அப்படித்தானே? என்னுடைய நடவடிக்கையும் உனக்குப் புரியாது. நான் வாய் விட்டுப் பேசுறதும் உனக்குப் புரியாது இல்ல” என்று லேசாகக் கத்தவே செய்தான்.

“முதல்ல இந்தக் கோபத்தைக் குறைக்கறியா? சட்டு சட்டுனு உனக்குக் கோவம் வருது” என்றாள்.

“உன்கிட்ட மட்டும் தான் டி வருது. எனக்கு அந்த உரிமை கூடக் கிடையாதா?” என்றான்.

அவனை வேகமாகக் கட்டி அணைத்துக் கொண்டு அவனது நெற்றியில் தன்னையும் மீறி தன்னுடைய முதல் முத்திரையைப் பதித்தாள்.

ருத்ரனின் விழியானவள்.

“இந்த நிமிஷம் உனக்குப் புரியுதா?” என்று கேட்டாள்.

அவளை வேகமாக இறுக்கி அணைத்துக் கொண்டு, “புரியாமல் தான் உன்கிட்ட வந்து இவ்வளவு நேரம் பேசிட்டு இருக்கேனாடி. புரிஞ்சு தாண்டி பேசிட்டு இருக்கேன்”.

“அப்புறம் ஏன் இவ்வளவு நாள் வெயிட் பண்ண?” என்றாள். ஆதங்கமாக வந்தது அவளது வார்த்தை.

“அப்படி இல்லடி, எப்பவே நான்…” என்று சொல்லும்போதே அவனது வாயில் ஒற்றை விரலை வைத்துத் தடுத்தாள்.

“இப்பவும் நீ என்னை அப்படி தான் நினைக்கறியா?” என்றாள்.

இல்லை என்பது போல் தலையாட்ட,

“ஏன்டி நான் சொன்னா தான் அப்போ எதுவும் சொல்வியா? உனக்கா சொல்ல என்கிட்ட எதுவுமே இல்லையா? பேசுறதுக்கும், சொல்றதுக்கும் என்று கேட்டான்.

“மாமா எனக்கு இன்னைக்கு தான் சொல்லணும்னு தோணுச்சு, அவ்வளவுதான்” என்று விட்டு எழுந்து கொள்ள முயற்சி செய்ய,

வேகமாக அவளது கையைப் பிடித்து உட்கார வைத்தான்.

 

Click on a star to rate it!

Rating 4.9 / 5. Vote count: 15

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
17
+1
1
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்