Loading

ருத்ரன் பேசுவதை அமைதியாகக் கேட்டுக் கொண்டு இருந்த காயத்ரிக் அவனை குழப்பத்துடன் பார்க்க,

 

“நானும் இப்போ தனா விஷயத்தைச் சொல்லல, முதல்ல என் விஷயத்தைச் சரி பண்ணிட்டு, சீக்கிரம் என் மச்சானோட விஷயத்தையும், வாழ்க்கையையும் சரி பண்ணனும், பண்ணிடுவேன்” என்றான்.

 

“மாமா, எல்லாம் சரியாகும்” என்று அவன் கையில் தட்டிக்கொடுத்து விட்டு வண்டியில் ஏறி உட்கார்ந்தாள்.

 

அப்பொழுதுதான் சரவணன் அங்கு வந்து நின்றான்.

 

“என்னடா, ரெண்டு பேரும் இந்த நேரத்துல இங்க நின்னுட்டு இருக்கீங்க?” என்று கேட்டான்.

 

காயத்ரி தான், “எங்க மாமா ரெண்டு வண்டியா ஓட்டலாம் என்று முடிவு பண்ணி இருக்காரு” என்றவுடன் சரவணன் முதலில் அவளைப் பார்த்துச் சிரித்தவன்,

 

அவள் தலையில் கொட்டி விட்டுப் பிறகு சிரித்துக் கொண்டே “வயசுக்குத் தகுந்த பேச்சுப் பேசு… என்ன பேச்சு பேசிட்டு இருக்க?” என்றான் சரோ.

 

ருத்ரன் அவளை முறைத்துக் கொண்டு நின்றான்.

 

“சரி விடு மாமா, இதுக்கெல்லாம் போய் யாராச்சும் முறைப்பாங்களா? என்ன, நம்ம விஷயத்தை உங்க மச்சான்கிட்டச் சொல்லிட்டேன்னு கோவமா?” என்றாள்.

 

இப்பொழுது ருத்ரனும் சிரித்து விட்டான்.

 

சரவணன் சிரித்து விட்டு, “பாவம் காயு, உனக்கு வரப்போறவன்” என்றான்.

 

ருத்ரனும், “பாவம் டி உனக்கு வரப்போறவன்” என்றான்.

 

இருவரும் ஒரே போல் சொல்ல,

 

“அது வர அன்னைக்குப் பாத்துக்கலாம்” என்றாள்.

 

அவளை சில நொடிகள் இரண்டு பேருமே பார்த்துச் சிரித்து விட்டு, “யாரையாச்சும் லவ் பண்றியா என்ன?” என்று கேட்டார்கள்.

 

“அப்படி ஒரு ஐடியா என் லிஸ்ட்லயே  கிடையாது. நாம தேடிப் பிடித்து லவ் பண்ணி பின்ன… அவன் சரியில்ல, அது சரியில்ல, இது சரி இல்ல அப்படின்னு 1008  நோனாவட்டம் சொல்லுவீங்க… தேவையா இது நமக்கு?

 

சிவனேனு வீட்டுல மாப்பிள்ளை பார்த்தாங்களா, நகை நட்டு போட்டுக் கட்டிக் கொடுத்தாங்களா? வீட்ல உக்காந்து சாப்பிட்டு ஹாயா போயிட்டே இருக்கணும்… லைஃபை என்ஜாய் பண்ணனும். உங்களுக்கு தான் என்ஜாய் பண்ணத் தெரியல, நானும் அப்படியே  இருக்க முடியுமா?” என்று சொல்லி இருவரையும் பார்த்துச் சிரித்து விட்டு வண்டியை எடுத்துக் கொண்டு,

 

“எனக்குத் துணைக்கு எல்லாம் யாரும் தேவையில்லை. வேற யாரும் வந்து என்னைப் புடிச்சிட்டுப் போக மாட்டாங்க, ரெண்டு பேரும் வீட்டுப் பக்கம் போற வேலையைப் பாருங்க” என்று விட்டுச் சிட்டாகப் பறந்து விட்டாள்.

 

இருவரும் அவளைப் பார்த்துச் சிரித்து விட்டு, “ஏய் நாங்க வரோம்” என்று சொல்ல,

 

“ஒன்னும் வேண்டாம்” என்று பேசியபடி இவர்களைப் பார்த்து கொண்டே சென்று முன்னாடி வந்த பைக்கின் மீது மோதி நின்றாள்.

 

“அச்சோ!” என்று தன் தலையில் தட்டிக் கொண்டு, “சாரி சாரி…” என்று விட்டு நிமிர்ந்து பார்க்க,

 

அவளை முறைத்துக் கொண்டு நின்றான் வண்டியில் வந்தவன்.

 

“சாரிங்க சாரிங்க, என் மேல தான் மிஸ்டேக். தெரியாமல் மோதிட்டேன்” என்றாள்.

 

“ரோட்ல வரும்போது, அதுவும் இருட்டுல வரும் போது முன்னாடி பார்த்து வரணும், பின்னாடி பார்த்து வரக்கூடாது. இந்த பேசிக் மேனர்ஸ் கூட இல்லையா?” என்றவுடன் அவளுக்குக் கோபம் தான் வந்தது.

 

இருந்தாலும், தன் மேல் தவறு இருக்க “சாரி” என்றாள்.

 

ருத்ரன், சரோ இருவரும் அவளது அருகில் வந்திருக்க,

 

“சாரிப்பா, தெரியாம நடந்துடுச்சு” என்றார்கள்.

 

“நீங்க…” என்று விட்டு இருவரையும் அவன் குறுகுறுப் பார்வையோடு பார்க்க,

 

இருவருமே காயுவின் இரு பக்கக் கையையும் பிடித்தவர்கள், “எங்க வீட்டுப் பொண்ணு தான்” என்றார்கள்.

 

“வீட்டோட வச்சுக்கோங்க சார், இப்படி ரோட்ல வந்தா பேசிட்டு இருப்பாங்க. இந்த நேரத்துல அதுவும்” என்று விட்டு வேறு எதுவும் பேசாமல் வண்டியை எடுத்துக் கொண்டு கிளம்பி விட்டான்.

 

காயுதான் அமைதியாக இல்லாமல், “துரைக்கு கொழுப்புப் பார்த்திங்களா? ஏதோ வீட்ல பிரச்சனையாம், அதனால ரோட்ல நின்னு நம்ப பஞ்சாயத்துப் பண்றோம் என்று நினைச்சுப் பேசிட்டு போறது.

 

என் மேல தப்பு இருக்கேன்னு மன்னிப்புக் கேட்டா, சரி மன்னிச்சிட்டேன்னு சொல்லணும்… எப்படிப் பேசிட்டுப் போறது பாத்தியா?” என்று நக்கல் அடிக்க,

 

இருவருமே அவளது தலையில் கொட்டி விட்டு, “திமிரு வாயாடி வா…” என்று விட்டு இருவரும் அவள் முன்னாடி செல்லப் பின்னாடி சென்று அவளை வீட்டில் விட்டுவிட்டு வந்தார்கள்.

 

வீட்டிற்கு வரும் வழியெங்கும் ருத்ரன் பேச சரவணன் அமைதியாகவே இருந்தான்.

 

“என்னடா மச்சான், வீட்ல எல்லாரும் சொல்றாங்க. இப்படி அமைதியாக இருக்க?” என்று ருத்ரன் கேட்க,

 

“நீயே முடிவு பண்ணிட்டியோ? உன்னை யாருடா அவசரமா வீட்ல பேசச் சொன்னா? என்கிட்டக் கூட இதப்பத்திப் பேசாம” என்றான் சரோ கோவமாக.

 

“ஏன்? என் மச்சான் வாழ்க்கையில பேசுற உரிமை எனக்கு இல்லையா?”

 

“லூசு மாதிரிப் பேசாத ருத்ரா… நான் எப்போ அப்படிச் சொன்னேன்?”

 

“பின்ன என்னடா?”

 

“ப்ளீஸ், கொஞ்சம் புரிஞ்சுக்கோ, யோசிக்க தான் செய்வாங்க…”

 

“அவங்க யோசிக்கட்டும் சரோ… ஆனா, இந்த நிமிஷம் வரைக்கும் நீ என்கிட்டச் சொல்லவே இல்லையே டா…”

 

“என்ன டா சொல்லணும்?” என்று கத்தினான் சரோ.

 

“நான் இந்த விஷயத்தை உன் பிரண்டா இருந்து சொன்னாலும், அவ உன் தங்கச்சி என்பதை மறந்துடாத மச்சான்” என்றான்.

 

“ஏன், நீ லவ் பண்றேன்னு சொல்லும் போது அவ என் தங்கச்சியா இல்லாம, வேற ஒருத்தன் தங்கச்சியாவா இருந்தா? அப்பச் சொல்லும்போது தெரியலையா?”

 

“இல்லடா அது…”

 

“போதும் மச்சான், அப்போ நீ லவ் பண்றேன்னு சொல்லும் போது உன் சட்டையைப் புடிச்சு நான் கேள்வி கேட்கல சரியா? என் மச்சானை விட, என் தங்கச்சிக்கு வேற எவனும் நல்ல மாப்பிள்ளை கிடைச்சிட மாட்டான் என்று தான் நினைச்சேன். அதேதான் நீ அவளுக்கு மூல நட்சத்திரம் அப்படின்னு சொல்லி இருந்தா…

 

அப்ப மட்டும் உன் சட்டையைப் புடிச்சு அதுக்காக அவளை வேணாம்னு சொல்லிட்டு இருக்கியானு கேட்டிருக்க மாட்டேன். இப்பவும் அதை தான் சொல்றேன் சரியா?

 

என் மச்சான் என் தங்கச்சிக்கு மூல நட்சத்திரம், அதனால வேணாம்னு சொல்லல, அவளைப் பத்தி வீட்ல பேசறதுக்கு ஒரு தயக்கம் இருக்கு. வேற ஒன்னும் இல்ல சரியா? அவ்ளோ தான்” என்று விட்டு,

 

“சரி நீ வீட்டுக்குப் போ…” என்று அவன் தோளில் தட்டி விட்டு ருத்ரன் தன் வீட்டிற்கு வண்டியை விட்டான்.

 

சரவணன் போகும் தனது நண்பனைப் பார்த்துவிட்டு, ‘உன்னைப் போல ஒரு நண்பன் கிடைக்க நான் கொடுத்து வச்சிருக்கணும் டா… ஆனா, உன் வாழ்க்கையை இப்ப நீயே சிதற வச்சிட்டு இருக்க.

 

இதை ஃபர்ஸ்ட் சரி பண்ணனும். ஒரு உண்மையான நண்பனா உன் வாழ்க்கையை பர்ஸ்ட் நான் சரி பண்ணனும். அதுக்கு அப்புறம் தான் என் வாழ்க்கை பற்றி யோசிக்கணும்’ என்று நினைத்து விட்டுத் தன் வீட்டிற்கு வண்டியை விட்டான்  சரோ.

 

வீட்டிற்குச் சென்றவுடன், “இவ்வளவு நேரமா மாமா, அவளப் போய் விட்டுட்டு வர்றதுக்கு” என்று தமிழ் கேட்க,

 

“இல்ல வழியில சரவணனைப் பார்த்தேன். அவன்கிட்டப்  பேசிட்டு வந்தேன்” என்று விட்டு ரூமுக்குச் சென்று விட்டான்.

 

தமிழ் ஒரு சில நொடி அமைதியாக இருந்தவள் அவன் பின்னாடியே ரூமுக்குச் செல்ல,

 

“ஏன் மாமா, ஒரு மாதிரி இருக்க” என்று கேட்டாள். ஒன்றும் இல்லை என்று விட்டு அமைதியாகி விட்டான்.

 

தன்னிடம் தன் மாமா பட்டும் படாமல் பேசுவதை உணர்ந்தவள், ‘மேற்கொண்டு இவரிடம் ஏதாவது பேசலாமா? இல்லையா?’ என்று யோசித்துக் கொண்டே கீழே பாயை விரித்து அமைதியாக உட்கார்ந்தாள்.

 

“டயர்டா இருக்கு, லைட் ஆப் பண்ணிட்டுத் தூங்கு தமிழ். வேலை இருக்கா என்ன?” என்று கேட்டான்.

 

அவனைப் பார்த்தவள், “இல்லை மாமா” என்று விட்டுப் படுத்து விட்டாள்.

 

யோசனையோடு படுத்து இருந்தாள். ருத்ரன் அமைதியாகப் படுத்து விட்டான்.

 

தமிழும் ‘சரி நாளை பேசிக் கொள்ளலாம்’ என்று அமைதியாகி விட்டாள்.

 

வீட்டிற்குச் சரவணன் சென்றவுடன், முனுசாமி தான் “சரவணா…” என்று அழைத்தார்.

 

“சொல்லுங்கப்பா” என்று விட்டு வந்து அவரது அருகில் நிற்க,

 

“நீ உன் மனதில் இருக்க விருப்பத்தை இதுவரைக்கும் என்கிட்டச் சொல்லலையேப்பா நம்ம அகிலாவுக்குத் தெரியுமா?” என்று கேட்டார்.

 

சில நொடி அமைதிக்குப் பிறகு தனது அப்பா, அம்மாவைப் பார்த்தவன், “தெரியும் ப்பா… எப்பயோ சொல்லிட்டேன் பாப்பா கிட்ட” என்றான்.

 

“சரிப்பா ஆனா, உனக்கு நம்ம தனாவுக்கு…” என்று விட்டு நிறுத்தி விட்டார்.

 

“அதுவும் எனக்குத் தெரியும் பா” என்றான்.

 

“அதனால்தான் என்கிட்ட இதைப் பத்திப் பேசலையா தம்பி” என்று இளவரசி அவனது அருகில் வந்து அவனது தலையை வாஞ்சையாகக் கோதிகொண்டு கேட்டார்.

 

“அப்படியும் வச்சுக்கலாம் மா, இன்னொன்னு நம்ம தனா சின்னப் பொண்ணு இல்லையா… படிச்சிட்டு இருக்க பொண்ணு அவ மனசு கெட்டுடக் கூடாது. நான் இதுவரைக்கும் அவகிட்ட என்னோட விருப்பத்தைச் சொல்லல. என்னை  நம்புங்க” என்று விட்டு அமைதியாகத் தனது அப்பா அம்மாவைப் பார்க்க,

 

இருவரும் அவனை ஆதுரமாகப் பார்த்தார்கள்.

 

முனுசாமி தான், “சீக்கிரமாகவே ஒரு நல்ல முடிவாகச் சொல்கிறேன் சரோ” என்றார்.

 

“ஆனா இப்போ எதையும் யோசிக்கக் கொஞ்சம் கஷ்டமா இருக்கு. அம்மாவுக்கும் அடிக்கடி உடம்புக்கு முடியாமல் போகுது. உனக்குத் தெரியும், எனக்கு அது கொஞ்சம் உறுத்தலாகவே இருக்கு” என்றார்.

 

தனது அப்பாவின் வாயில் கை வைத்தவன், “வேணாம்ப்பா, எனக்கு உங்க ரெண்டு பேத்துல ஒருத்தங்களை இழந்து தான் அந்த வாழ்க்கைனா, அது எனக்கு…” என்று சொல்லும் பொழுதே அங்கு வந்து நின்ற அகிலா, “அண்ணா…” என்று வேகமாகக் கத்தினாள்.

 

இந்த நேரத்தில் அகிலாவை யாருமே அங்கு எதிர்பார்க்கவில்லை.

 

திரும்பிப் பார்த்த சரவணன், “வா அகி” என்று சொல்ல,

 

வேகமாக வந்து தனது அண்ணனின் தாடையில் ஒன்று, இரண்டு அடிகளைப் பரிசாக வழங்கியிருந்தாள்.

 

தனது தாய், தந்தை தடுத்தும் கூட அவனை அடித்து இருந்தாள்.

 

அடித்துவிட்டு அவனையே கட்டிக்கொண்டு அழச் செய்தாள்.

 

மகி தான் ஒன்றும் புரியாமல் அகிலாவைப் பார்த்துவிட்டு, “அகிலா என்ன பண்ற?” என்று கத்தினான்.

 

“நான் எங்க அண்ணாகிட்டப் பேசுறேன், உங்ககிட்ட இல்ல” என்று அகிலா சொல்ல,

 

மற்ற மூவருமே “அகிலா என்ன பேச்சு இது?” என்று கத்தினார்கள்.

 

“ஏன்? என் அண்ணனோட வாழ்க்கையில முடிவெடுக்கிற உரிமை எனக்கு இல்லையா?” என்று தனது தாய் தந்தையைப் பார்த்துச் சொல்லிவிட்டு, தனது அண்ணனை முறைத்துக் கொண்டு நின்றாள்.

 

“இன்னொரு வார்த்தை ஏதாவது பேசினேன்னு வச்சுக்கோ, என்ன பண்ணுவேன் என்று எனக்கே தெரியாது. உனக்குத் தனாவை எந்த அளவு பிடிக்கும் என்று அப்பா அம்மாவுக்கு வேணா தெரியாமல் இருக்கலாம். எனக்குத் தெரியும்…

 

உனக்கு இந்த உலகத்திலயே ரொம்பப் புடிச்சது நான் தான். எனக்கு அப்புறம் அவளை தான் உனக்குப் பிடிக்கும். இதுக்கு மேல என்னால எதுவும் பேச முடியாது. இன்னொரு வார்த்தை எந்த ஒரு காரணத்துக்காகவும் அவ உன் லைஃப்ல வேணான்னு சொல்லாத… இவ்ளோ நாளா நான் அமைதியா இருந்ததுக்குக் காரணம் கூட, நீ இருக்கும் போது நான் கல்யாணம் பண்ணிகிட்டுப் போனதுக்கும் சரி, ஒரே ஒரு காரணம் தான். அவ படிச்சிட்டு இருக்க பொண்ணு.

 

அவ கொஞ்ச நாள் அவளோட லைஃபை என்ஜாய் பண்ணனும் அப்படின்னு மட்டும் தான் யோசிச்சேன். அது மட்டும் இல்லாம, அவளை இவ்வளவு சீக்கிரமாக குடும்ப வாழ்க்கைக்குள்ள கொண்டு வர வேண்டாம் என்ற காரணத்துக்காக மட்டும் தான் இவ்ளோ நாள் அமைதியாக இருந்தேன்.

 

ஆனா, இதுதான் காரணம் என்று நீயே முடிவு பண்ணிக்கிட்டு நீ அவளை வேணான்னு சொல்லணும்னு நினைச்சேன்னு வச்சுக்கோ, நான் என்ன செய்வேன்னு தெரியாது. இப்பயும் ஒரு வார்த்தை ருத்ரா மாமாக்கு போன்  பண்ணினேன் வச்சுக்க, என்ன நடக்கும்னு எனக்கே தெரியாது” என்றாள்.

 

இறுதியாகத் தனது தங்கை சொன்ன வார்த்தையைக் கேட்ட சரவணன் தன்னை மீறிச் சிரித்து விட்டான்.

 

Click on a star to rate it!

Rating 4.9 / 5. Vote count: 12

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
13
+1
1
+1
1

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்