
ருத்ரனைப் பார்த்துச் சிரித்த செல்வம், “சரிடா, போய் பேசலாம்” என்று அவனது தோளில் தட்டி விட்டுத் தனத்தைப் பார்க்க,
தனமும் சரி என்று தலையாட்டிய உடன் காலை வேளையிலே முனுசாமி, இளவரசி இருவரையும் பார்க்கச் சென்றார்கள்.
அப்பொழுதுதான் இளவரசி சமைத்துக் கொண்டு இருக்க, முனுசாமி வீட்டில் உட்கார்ந்து கணக்கு வழக்குகளைப் பார்த்துக் கொண்டிருந்தார்.
சரவணன் காட்டிற்குச் சென்று தண்ணீர் திருப்பிவிட்டு வந்து அவரது அருகில் உட்கார்ந்து, “இன்னும் ஒரு மணி நேரத்தில் சாப்பிட்டுவிட்டுச் சென்றால் சரியாக இருக்கும்.” என்று தன் அப்பாவிடம் சொல்லிக் கொண்டு இருந்தான்.
சரவணன் வயல் வெளிகளைப் பார்த்துக் கொண்டு வேலைகள் அனைத்தையும் செய்தாலும், கணக்கு வழக்கைத் தன் தந்தையிடம் தான் தினமும் வந்து ஒப்படைத்து, இவ்வளவு செலவாகி இருக்கிறது என்று சொல்லவும் செய்வான்.
அவரிடமே பணத்தையும் கொடுத்து வாங்கிக் கொள்வான். அது என்னவோ அவனுக்குப் பழக்கமாகிவிட்டது.
“நீயும் வளர்ந்துட்ட டா” என்று முனுசாமி சொல்வதற்குக் கூட,
“வளர்ந்தா வளர்ந்துட்டுப் போறேன் பா, நீங்க வளர்க்காமலா நான் வளர்ந்துட்டேன். உங்களுக்குத் தெரியாததா? எனக்கு எது நல்லது கெட்டதுன்னு எடுத்துச் சொல்றதுக்கும், செய்வதற்கும் தான் நீங்க இருக்கீங்களே” என்று சொல்லி விடுவான்.
தன் மகனை எண்ணிப் பெருமைப் பட்டுக் கொள்வார் முனுசாமி.
மூவரும் காலை வேளையில் வந்திருப்பதைப் பார்த்துவிட்டு, “வா டா செல்வம், வா தனம், வா ருத்ரா” என்று அழைத்தவர்,
இளவரசியைக் கூப்பிட சமையலறையில் இருந்து வந்தார்.
இளவரசியும் கையில் தண்ணீருடன் வந்தவர் மூவருக்கும் கொடுக்க, தனமும் செல்வமும் வாங்கிக் குடித்தார்கள்.
“எனக்கு வேணாம் அத்தை, அப்புறமா குடிக்கிறேன்” என்றான் ருத்ரன்.
“ஏண்டா ருத்ரா, முகம் வாட்டமா இருக்கு”.
“என்ன ஆச்சு, மூணு பேரும் ஒண்ணா வந்து இருக்கீங்க. ஏதாவது பிரச்சனையா?”
“பிரச்சனை என்று சொல்லிட முடியாது மாமா. முக்கியமான விஷயம் என்று வச்சுக்கலாம் மாமா” என்றான் ருத்ரன். செல்வம் தனது மருமகனைத் திரும்பி ஒரு பார்வை பார்த்துவிட்டு அமைதியாகி விட்டார்.
முனுசாமி தான், “சரி உட்காருங்க” என்றார்.
மூவரும் அமைதியாக உட்கார, “என்னமா தனம், காலையிலேயே வந்து இருக்கீங்க மூணு பேரும்?” என்று முனுசாமி கேட்க,
தனம் தன் கணவனைப் பார்க்க, “ஒரு முக்கியமான விஷயம் பேசணும்னு வந்து இருக்கோம் அண்ணா” என்றார்.
“என்னப்பா என்ன விஷயம்?”
“இல்ல அண்ணா, நம்ம தனாவுக்குக் கல்யாணம் பேசி முடிச்சிடலாம் என்று தான்” என்றார்.
சரவணன் கணக்கு வழக்கு எழுதிக் கொண்டிருந்தவன் ஒரு சில நொடி தன் கையில் இருந்த பேனாவைக் கீழே போட்டு இருந்தான்.
அவனைப் பார்த்த ருத்ரன் சிரித்து விட்டு அமைதியாகி விட,
செல்வம் அவனைப் பார்த்து விட்டு அமைதியாக இருந்து விட்டார். இங்கு அதே போல் இளவரசியும் தன் கையில் இருந்த சொம்பைக் கீழே விட்டிருந்தார்.
தனது மனைவியையும், மகனையும் முனுசாமி சில நொடிகள் உற்றுப் பார்த்துவிட்டு, “சரி செல்வம் நீ மேற்கொண்டு சொல்லு. என்ன வயசு ஆயிடுச்சு பிள்ளைக்கு? அதுக்குள்ள வரன் பாக்குற. மேற்கொண்டு இப்ப தான படிக்க ஆரம்பிச்சிருக்கு. நம்ப காயத்திரிக்கும், தனாவுக்கும் ஒரே வயசு தானே.
இந்த வருஷம் படிச்சி முடிக்கட்டுமே. முடிச்சுட்டு அதுங்க விருப்பப்படுற வேலைக்குப் போகட்டுமே. அதுக்கப்புறம் நம்ம வரன் பார்க்கலாமே” என்றார்.
“அப்படித்தான் அண்ணா, நானும் ஃபர்ஸ்ட் யோசிச்சேன். ஆனா ருத்ரன் வந்து இந்த வருஷமே முடிச்சிடலாம்னு கேக்குறான்.”
“அவ்ளோ அவசரம் என்ன டா?” என்றார் ருத்ரனைப் பார்த்து முனுசாமி.
தனது பெரிய மாமாவைப் பார்த்துச் சிரித்த ருத்ரன், “எனக்கும் தங்கச்சியை மேற்கொண்டு படிக்க வைக்கணும் என்று ஆசையா தான் இருக்கு. வேலைக்கு அனுப்பவும் ஆசை தான் மாமா. ஆனா, என் தங்கச்சிக்கு நான் பார்த்திருக்கற மாப்பிள்ளைக்கு வயசு கூடிட்டே போகுது. அதனால சீக்கிரம் கட்டி வச்சிட்டா, அவன் படிக்க வச்சுப்பான் என்ற நம்பிக்கைதான்”.
“அப்படி என்ன ஊர்ல இல்லாத, சீமையில இல்லாத மாப்பிள்ளையைப் பார்த்து இருக்க”
“ஆமா மாமா சீமையில் இல்லாத மாப்பிள்ளை தான்” என்று சிரிப்புடன் சொல்லி விட்டு, நேராகத் தனது பெரிய மாமா முனுசாமி அருகில் வந்து அவரது கையைப் பிடித்துக் கொண்டவன்,
“மாமா தப்பா எடுத்துக்காதீங்க. நான் தனாவை என் நண்பன் சரவணனுக்கு தான் குடுக்கலாம் என்று மனசுல யோசிச்சு வச்சிருக்கேன். அதைப் பத்தி உங்ககிட்டக் கேட்கலாம் என்று தான் வந்திருக்கேன்”.
அவனை சில நொடிகள் பார்த்தவர், “நீ நினைச்சதெல்லாம் சரிதான் ருத்ரா. ஆனா, இது சரிப்பட்டு வருமா என்று நீ யார் கிட்டயும் கலந்து பேசலையா? அவங்களைக் கூட விட்ரு… தமிழ் ஏதும் உன்கிட்ட இதப்பத்திப் பேசலையா?” என்று கேட்க,
அப்பொழுதுதான் தனது தாய் இங்கு வந்திருப்பதாகக் கேள்விப்பட்ட தமிழ் சமைத்துக் கொண்டிருந்தவள் வேகமாக அங்கு வந்து நின்றாள். தமிழ் வீட்டில் கட்டியிருக்கும் புடவையோடு, சமைத்துக் கொண்டிருந்த கையோடு தனது கையைத் துடைத்துக் கொண்டு புடவையை இடுப்பில் சொருகிக்கொண்டு வீட்டிற்குள் நுழைந்தாள்.
“மாமா இங்கே என்ன பண்ணிட்டு இருக்க நீ?” என்று ருத்ரனைப் பார்த்துக் கேட்க, அவளை முறைத்துப் பார்த்த ருத்ரன்,
“எனது நண்பனுக்காக நான் தாண்டி பேசனும், அவன் வாழ்க்கைக்காக நான் பேசாம வேற யார் பேசுவா?” என்றான்.
“அதுக்கு இது நேரமா மாமா, யோசிச்சு முடிவு பண்ண மாட்டியா?”
“யோசிச்சு தாண்டி முடிவு பண்ணி இருக்கேன். நீ கொஞ்ச நேரம் அமைதியா இரு” என்று விட்டுத் தனது பெரிய மாமா முனுசாமியைப் பார்க்க, ருத்ரனைப் பார்த்துவிட்டு முனுசாமி தமிழைப் பார்க்க,
“பெரியப்பா என்னை மன்னிச்சிருங்க, மாமாகிட்டச் சொல்லிருந்தேன். இருந்தாலும் அவர்…” என்று ஆரம்பிக்க,
“இருக்கட்டும் தமிழ், விடு. அவன் சொன்னது தானே. அவன் நண்பனுக்காக அவன் பேச வந்து இருக்கான். ஆனா, நாம மொத்தக் குடும்பத்தையும் பார்க்கணும் இல்லையா?” என்று விட்டுத் தனது மகனைப் பார்க்க, அவனது கண்கள் கலங்கி இருப்பதிலும், அதுவும் அவன் பேனாவைப் போட்டதிலும்,
தனது மனைவி கையில் வைத்து இருந்த சொம்பைக் கீழே போட்டதுக் இருவருக்குமே தனாவை இந்த வீட்டு மருமகளாக அழைத்துக் கொண்டு வருவதில் விருப்பம் என்பதை உணர்ந்த முனுசாமி,
“யோசிக்கலாம் ருத்ரா, யோசிச்சு ஒரு நல்ல முடிவா பேசலாம். செல்வம், வேணாம்னு ஒரே வார்த்தையில முடிக்கல. யோசிக்கலாம் என்று தான் சொல்லி இருக்கேன். அதுக்காக எந்தப் பக்கமும் முடிவு எடுக்க வேணாம்” என்று விட்டு, “நான் கொஞ்சம் வெளியே போயிட்டு வரேன் அரசி” என்று தனது மனைவியைப் பார்த்துச் சொன்னவர்,
“தப்பா எடுத்துக்காத ருத்ரா, எனக்குக் கொஞ்சம் யோசிக்க நேரம் கொடு. நான் கொஞ்சம் வெளியே போயிட்டு வரேன்” என்று விட்டு எதுவும் பேசாமல் தனது மகனின் தோளில் தட்டி, “நான் இருக்கேன் டா” என்று சொல்லாமல் சொல்லிவிட்டு எழுந்து சென்றார்.
போகும் முனுசாமியை ருத்ரன் அமைதியாகப் பார்த்துக் கொண்டு இருந்தான். அவர் வெளியில் சென்றவுடன் அவனது அருகில் வந்த தமிழ், அவனைப் பார்த்து முறைத்துவிட்டு, “வீட்டுக்கு வாங்க, உங்களுக்கு இருக்கு. நைட் அவ்வளவு தூரம் சொன்னேன் தானே. இப்ப எதுக்குக் காலங்காத்தால அவங்க வீட்டுக்குப் போனது மட்டும் இல்லாம, இங்கே வந்து நின்னுட்டு இருக்கீங்க?” என்று விட்டுத் தனது அண்ணனைப் பார்க்க,
“தமிழ்…” என்றான்.
“அண்ணா, உனக்கு நான் சொல்ல வேண்டிய அவசியம் இல்லைன்னு நினைக்கிறேன்” என்றாள்.
“எனக்குத் தெரியாது தமிழ்.”
“அவளை விரும்புறனு சொல்லி இருக்க இல்ல, அது போல அவளுக்கு மூலம் நட்சத்திரம் இருக்குன்னு சொல்லி இருந்திருக்க வேண்டி தான”.
“எனக்கு அவன் வந்து இப்படி நிப்பான் என்று தெரியாது தமிழ். அவன் என்கிட்ட இதப்பத்திப் பேசி இருந்தா நானே பேசி இருக்கப் போறேன்” என்றான்.
தனது நண்பனையும், மனைவியையும் முறைத்த ருத்ரன், “அப்போ உனக்கும் தெரிஞ்சுருக்கு. அதனாலதான் இத்தனை வருஷம் அமைதியா இருந்திருக்க அப்படித்தானே.”
“டேய் இல்லடா மச்சான், அது…”
“போதும்…”
“ஏன் அவளுக்கு மூலம் நட்சத்திரமா இருந்தா என்ன? இப்போ அதனால வேணாமா உனக்கு? வேணாம்னா சொல்லு, நான் என் தங்கச்சிக்கு வேற இடத்துல மாப்பிள்ளை பார்த்துக்கிறேன்” என்று சொல்லிவிட்டு வேகமாக வெளியே சென்றான்.
“டேய் மச்சான்” என்று பின்னாடியே வந்து அவனைக் கட்டிக் கொண்ட சரவணன், “நீ எனக்காக யோசிக்கிற இருந்தாலும்…”
“மச்சான், இவங்க தான் பெரியவங்க, அந்தக் காலத்து ஆளுங்க. இப்படிப் பேசி கிட்டு இருக்காங்க. நீயுமா டா” என்றான்.
ருத்ரன் அருகில் வந்த இளவரசி, “ருத்ரா, யாரும் இங்க பழைய விஷயம் சொல்லி அதையே யோசிச்சிட்டு இல்ல. அதுக்காக அதை யோசிக்காமல் நம்ம எல்லாத்தையும் உடனே முடிவும் செஞ்சுற முடியாது. நாளைக்குப் பின்னாடி ஏதாச்சும் ஒரு சங்கடம்னா அது மொத்தமா நம்ப தனாவை தான் டா பாதிக்கும். சின்னப் புள்ளடா, அவகிட்ட இதப்பத்திப் பேசணும்”
“அவளுக்கு நம்ம சரவணனைப் புடிச்சிருக்குது.”
“சரிடா இருக்கட்டும். அவளுக்குப் புடிச்சிருக்கட்டும், தப்பு இல்ல. ஆனா, இதப்பத்திப் பேசணும். அதை தமிழ் பார்த்துப்பா, கொஞ்சம் அதுக்கான நேரத்தை மட்டும் குடு ருத்ரா” என்று விட்டு அவர் சமையலறைக்குள் சென்று விட்டார்.
செல்வமும், தனமும் கூட ருத்ரனைப் பார்த்துவிட்டு, “சரிப்பா, பொறுமையா அதைப் பத்திப் பேசலாம். ஒன்னும் அவசரம் இல்லை” என்று ருத்ரனின் தோளில் தட்டிக் கொடுத்துவிட்டு தனது மனைவியை அழைத்துக் கொண்டு, “நீ வீட்டுக்குப் போ தனம், எனக்குக் கொஞ்சம் காட்டுல வேலை இருக்கு, பார்த்துட்டு வரேன்” என்று விட்டுச் செல்வம் சென்றார்.
தனமும் சரி என்று வீட்டுக்குச் சென்று விட,
சரவணன் எதுவும் பேசாமல் வெளியில் சென்று விட்டான்.
தமிழ் தான் ருத்ரனை முறைத்துக் கொண்டு நின்றாள்.
ருத்ரன் தமிழை முறைத்துவிட்டு, “ஏன் மேடம் வச்சது தான் சட்டமா? என் தங்கச்சி யாரைக் கல்யாணம் பண்ணிக்கணும், எப்பக் கல்யாணம் பண்ணிக்கணும்? என்று எல்லாம் மேடம் தான் முடிவு பண்ணனுமோ?” என்றான்.
“உங்க தங்கச்சி, உங்க மச்சான்… நீங்களே கல்யாணம் பண்ணி வைங்க. இல்ல, உங்க தங்கச்சிக்கு உங்க மச்சான்கிட்ட சொன்ன மாதிரி வேற ஒரு நல்ல இடமா கூடப் பார்த்துக் கட்டி வைங்க, நான் ஏன் தலையிடப் போறேன்?
நான் யாரு அவ வாழ்க்கையில முடிவெடுக்க? இல்ல, உங்க குடும்ப விசயத்துல தலையிட கூட நான் யாரு?” என்று விட்டுச் சென்று விட,
“திமிருடி உனக்கு. நான் ஒரு விஷயம் கேட்டா, ஒன்னுக்கு நாளா பேசிட்டுப் போற பாத்தியா?” என்று புலம்பினான்.
“என் மனசை நோகடிக்க எந்த அளவுக்குப் பேச முடியுமோ, அந்த அளவுக்குப் பேசுடி” என்று புலம்பிக் கொண்டே அவள் பின்னாடியே தன் வீட்டிற்கு வந்தான்.
“எங்கடா போயிட்டு வர காலையிலேயே? இவ கூட வெளியே ஓடுனா. சமைக்கிறதை அடுப்புல வச்சுட்டுப் போனா… இப்ப ரெண்டு பேரும் ஒண்ணா வரீங்க. என்னடா ஏதாச்சும் வம்பு இழுத்து வச்சிட்டியா?” என்று பாக்கியம் தன் மகனைப் பார்த்துக் கேட்க,
தன் தாயைப் பார்த்து முறைத்தவன்,
“ஆமா எனக்கு என்ன வேலை? யாரையாச்சும் புடிச்சு வம்புக்கு இழுக்கிறது தான் வேலை பாரு… அதைச் சரி பண்ணி விட தான் உன் மருமக வந்து இருக்கா… ஏன், சொல்ல மாட்டீங்க?” என்று மனைவியையும், தன் தாயையும் பார்த்து முறைத்தவன் ரூமுக்குள் நுழைந்து கொண்டான்.
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


Ivanga rendu per sanda potta nalla tha iruku… Aanalum saroo paavamya