
தமிழ் அண்ணன் தங்கை இருவரிடமும் கோபித்துக் கொண்டு ஸ்கூலுக்குள் செல்ல,
“என்ன அண்ணா பண்ணி வெச்சி இருக்க? காலையில மாமாகிட்டப் போய் பேசினியா, இந்த லூசு இப்ப வந்து என் கிட்டயும் கத்திட்டுப் போகுது. அப்படி என்ன அவளுக்குத் தெரியாத விஷயம் சொல்ற?”
“வா, அகி சொல்றேன்” என்று அவளை அழைத்துக் கொண்டு ஒரு ஜூஸ் கடைக்குச் சென்று இருவரும் ஜூஸ் குடித்துக் கொண்டிருக்க,
“அகிலா அம்மாவும், அப்பாவும் உன்கிட்ட எதுவும் சொல்லலையா?”.
“அண்ணே இது என்ன? நீ யோசிச்சு யோசிச்சு ஒவ்வொரு விஷயமா கேட்டுட்டு இருக்க. என்ன விஷயம், அதைச் சொல்லு. நீ ஆளும் சரி இல்லை ஒரு மாதிரி இருக்க. அவங்க ரெண்டு பேரும் என்கிட்ட எதுவும் பேசல. உன்கிட்ட என்ன கேட்டாங்க? உன்கிட்ட என்ன பேசினாங்க? வீட்ல என்ன நடந்துச்சு, நீ சொன்னாதான் எனக்குத் தெரியும் சொல்லு” என்று படபடவென்று பொரிய,
“வீட்டில் அம்மா ஒரு வாரமா என் கல்யாணத்தைப் பத்திப் பேசிட்டு இருக்காங்க அகிலா. இப்போ உன் தங்கச்சிக்குக் கல்யாணம் ஆகியே அஞ்சு மாசம் ஆயிடுச்சு. உன் பிரண்டுக்கும் கல்யாணம் ஆயிடுச்சு, இதுக்கு மேல அமைதியா இருக்க முடியாதுடா.
உனக்குப் பொண்ணு பார்க்க ஆரம்பிக்குறோம், அப்படின்னு சொல்றாங்க. அதான், எனக்கு ஒரு மாதிரி இருக்கு.”
“சரி, உன் மனசுல இருக்கிறதை சொல்லிட்டுப் போக வேண்டியது தானே”.
தன் தங்கையை முறைத்துப் பார்க்க,
“இதுல என்ன அண்ணா இருக்கு? இன்னமும் அவ சின்னப் பிள்ளைன்னு சொல்லிட்டுத் திரியப் போறியா நீ? அவ யுஜி முடிச்சுட்டு பிஜி போயிட்டா. உன்னோட விருப்பத்தை நீ தான் சொல்லணும் சரியா? நீ வீட்ல பேசிக் கல்யாணம் பண்ணாலும் சரி, இல்ல நீ தனாகிட்ட இதப் பத்திப் பேசினாலும் சரி…”
“என்ன? நீயும் அவனை மாதிரியே பேசுற.”
“ஓ மாமா அதுதான் சொல்லுச்சா… மாமா என்ன சொல்லுச்சுன்னு எனக்குத் தெரியாது. ஒன்னு தனா கிட்டப் பேசு, இல்லையா? வீட்ல அப்பா அம்மா கிட்டப் பேசு. இதைத்தாண்டி உனக்கு வேற எந்த சான்ஸும் கிடையாது. இல்ல, அவ வேணாம்னு யோசிக்கறியா?”.
சரோ தன் தங்கையை முறைத்துப் பார்க்க,
“அவ்வளவுதான், என்னை முறைச்சு ஒன்னும் ஆகப் போறது இல்ல. உனக்குத் தேவைனா நீ தான் கேட்டு ஆகணும். நீ பேசிட்டு மேற்கொண்டு ஏதாச்சும் நான் பேசணும்னா அங்க நான் பேசுவேன். நீ இன்னும் பேசவே ஆரம்பிக்காம என்கிட்ட வந்து கேட்டா நான் என்ன பதில் சொல்வேன் என்று நினைக்கிற. அண்ணா வீட்டுல பேசு. அம்மா முடியாதுன்னு சொன்னாலோ, இல்ல இதப்பத்தி வேற ஏதாச்சும் பேச்சுப் போனாலும் நான் பேசுவேன்.
நானா இப்ப இதப்பத்தி ஆரம்பிச்சு வைக்க மாட்டேன். இதுக்கு மேல பேசறதுக்கு ஒன்னும் இல்ல” என்று சொல்ல,
“சரி நீ ஸ்கூலுக்குப் போ” என்றான்.
நேரத்தைப் பார்த்துவிட்டு, “இனிமே ஸ்கூலுக்குப் போய் என்ன பண்ணப் போறேன். வா வீட்டுக்குப் போலாம்” என்று கூப்பிட்டாள்.
“இப்போ எங்க போறது? எனக்கு வேலை இருக்கு” என்றான்.
“சரி வா, நானும் காட்டுக்கு வரேன்” என்று அவனுடன் காட்டுக்குச் சென்று விட்டு மதியம் வீட்டிற்குச் சென்றார்கள்.
“என்ன அகிலா வீட்டுக்கு வந்து இருக்க, அதும் நீ மட்டும் தனியா?” என்று இளவரசி கேட்க,
“சும்மா தான்மா. ஏன், நான் வீட்டுக்கு கூட வரக்கூடாதா?” என்று கேட்டாள்.
முனுசாமி, “என் மக வீட்டுக்கு வரதுல என்னம்மா இருக்கு?” என்று விட்டு அவளுக்குப் பிடித்ததைச் செய்து போட்டு மாலை சரவணன் கொண்டு சென்று விட்டு வந்தான்.
மாலை பள்ளி முடிந்து வந்த பிறகு தமிழ் தான் ருத்ரனிடம் மூஞ்சியைத் தூக்கி வைத்துக் கொண்டிருக்க,
“இப்போ உனக்கு என்ன தாண்டி பிரச்சனை? நானும் பாக்குறேன், கல்யாணம் பண்ண இத்தனை மாதமா எந்த நேரமும் சிடுசிடுன்னு சுத்திட்டு இருக்க. கலகலன்னு இருந்த என் பழைய விழி எங்கடி? அவ எப்படி இருப்பா?” என்றான்.
“நான் எப்படி இருந்தா உங்களுக்கு என்ன? அத விடுங்க, விழினு கூப்பிடாதீங்கன்னு சொல்லி இருக்கேன். எல்லாரும் எப்படிக் கூப்பிடறாங்களோ, அப்படிக் கூப்பிடுங்கனு சொல்லி இருக்கேன்.
“நான் ஏண்டி எல்லாரும் கூப்பிடுற மாதிரி கூப்பிடனும், என் பொண்டாட்டியை”.
“எது பொண்டாட்டியா? தாலி கட்டிட்டா பொண்டாட்டி என்ற உரிமை வருமோ?” என்றாள்.
“ஒரு தாலி கட்டுனா மட்டும் வராது தான். ஆனாலும், நீ என் பொண்டாட்டி தானே”.
“இங்க இருந்து சொல்லுங்க” என்று அவனது நெஞ்சைச் சுட்டிக் காண்பித்து விட்டு வெளியே சென்று விட்டாள்.
‘இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை’ என்று முனகிக் கொண்டே வெளியில் வந்தான்.
பிறகு ஒன்றாக உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டு இருக்க,
இளவரசி வந்தார்.
“வாங்க பெரியம்மா” என்று தமிழ் அழைத்துச் சாப்பிட உட்கார வைக்க.
“தமிழ், சாப்பாடு இறங்க மாட்டேங்குது, உன் அண்ணன் பண்ற வேலை” என்ற உடன் தனா தன் காதைத் தீட்டி வைத்துக்கொண்டு அவர் சொல்வதைக் கேட்க,
அதைப் பார்த்த ருத்ரனுக்குச் சிரிப்பை அடக்க முடியவில்லை.
தமிழ் ருத்ரனைப் பார்த்து முறைத்துவிட்டு, “ஏன் பெரியம்மா என்னாச்சு? அண்ணன் என்ன பண்ணுச்சு?”
“என்ன ஆச்சு ருத்ரா, நம்ம சரவணன் என்ன பண்றான்?”
“நீ வேற ஏன் அத்தை, என் வாயப் புடுங்குற.”
“அந்தப் பையனுக்கு வயசு ஏறிட்டே போகுது. அவன் தங்கச்சிக்கும் கல்யாணம் ஆயிடுச்சு, உனக்கும் கல்யாணம் ஆயிடுச்சு. உங்க வயசுப் பிள்ளைங்க எல்லாத்துக்கும் கல்யாணம் ஆயிடுச்சு. உனக்கும் வயசு ஏறிட்டே இருக்குடா, கல்யாணத்தப் பண்ணுடா… அப்படின்னு நானும் அவரும் ஒரு வாரமா பொலம்பி கிட்டே இருக்கோம். காது கொடுத்துக் கேட்கக் கூட மாட்டேங்கிறான்.
வரான், அவன் மாட்டும் போறான். எந்த நேரம் பார்த்தாலும் மூஞ்சியைத் தூக்கி வைத்துகிட்டுச் சுத்துறான். எதையோ இழந்த மாதிரியே இருக்கான். இன்னைக்கு என்னனா அகிலா வரா, அவளைக் கேட்டா அவளும் வாயைக் கூடத் திறக்கல.
என்ன தாண்டி உன் அண்ணனுக்குப் பிரச்சனை? கல்யாணம் பண்ணிக்கச் சொல்லிக் கேட்டா வாயைக் கூடத் திறக்க மாட்றான். எங்களுக்கும் அவனுக்கும் சாயங்காலம் பஞ்சாயத்து ஆயிடுச்சு” என்றார்.
“என்ன அண்ணி ஆச்சு?” என்று பாக்கியம் கேட்க,
“உங்க அண்ணன் வேற அவன் மேல கை வச்சி இருப்பாரு பாக்கியம். உனக்கு உடம்புல ஏதாச்சும் பிரச்சினையா டா என்று கேட்கிறார்” என்றார்.
ருத்ரன் தன்னை மீறிச் சிரித்து விட்டான், வேகமாகவே.
தனா கூடச் சிரிப்பை அடக்க முடியாமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.
தமிழ் அண்ணன், தங்கை இருவரையும் முறைத்துவிட்டு, “என்ன பெரியம்மா இப்படிலாம் பேசி இருக்கீங்க?” என்று கேட்க,
“நான் என்ன தமிழ் பண்றது? பொண்ணு பார்க்கணும்னு சொல்றேன். கேக்குறானா?”
“ஏன் மதனி, நான் கேட்கிறேன் என்று தப்பா எடுத்துக்காத. இந்தக் காலத்துப் பசங்க கல்யாணம் வேணாம்னு சொன்னா, நீங்க நினைக்கிற மாதிரி உடம்புல ஏதாச்சும் பிரச்சனையா தான் இருக்குமா? இப்போ இருக்கற புள்ளைங்க எல்லாம் காதலிக்கச் செய்றாங்களே?”
“நானும், உன் அண்ணனும் அதையும் கேட்டுப் பாத்துட்டோமே, யாரையாவது காதலிக்கிறாயா? சொல்லுடான்னு. பதிலே சொல்ல மாட்றான். அதுக்கு தான் இந்த அகிலா வந்தாளே, அவளைக் கேட்டுப் பார்த்தா அவளும் வாயைத் திறந்து பேசல. அண்ணனும், தங்கச்சியும் இப்படி வாய இறுக்க மூடிட்டு இருந்தா நான் என்னதான் பண்றது?
எனக்கும் இவனுக்குக் கல்யாணம் பண்ணி வைக்கணும்னு ஆசை இருக்காதா? வீட்டுக்கு ஒருத்தி வந்தா பொறுப்பைக் கொடுத்துட்டா நான் மட்டும் அக்கடான்னு இருக்கலாம்.”
“ஏன் அத்தை, வரப் போற பொண்ணு கையில தான் வீட்டுப் பொறுப்பைத் தருவியோ?” என்று தனா கேட்க,
“நீ வேற ஏன்டி? வீட்டுக் கொத்து சாவி மட்டுமா? வீட்டு மொத்தப் பொறுப்பையும் அவ கையில் தான் ஒப்படைக்கணும்” என்றார். வாயை மூடிக் கொண்டாள் தனா.
“அதான், ருத்ரனையும் தமிழையும் பார்த்துப் பேசிட்டுப் போலாம்னு வந்தேன் பாக்கியம்” என்றார்.
“என்னைப் பார்த்துப் பேசி என்ன பண்றது அத்தை, உன் மகன் கிட்ட தானே பேசணும் நீ.”
“டேய் என்னடா இப்படிச் சொல்ற? நீயும், தமிழும் பேசி அவனைக் கல்யாணத்துக்குச் சம்மதிக்க வைப்பீங்கனு தானே உங்ககிட்ட வந்து புலம்பிட்டு இருக்கேன். அகிலா கிட்டயும் சொல்லி வச்சிருக்கேன். அவ எதையும் காது கொடுத்துக் கேட்ட மாறியே தெரியல, எனக்கு என்ன என்ற மாதிரிப் போறா. அவ என்னைக்கு அண்ணன் பேச்சுக்கு மறு பேச்சுப் பேசி இருக்கா, அதான் தமிழ் கிட்டயும், உன்கிட்டயும் பேசலாம்னு வந்தேன்.”
“உங்க மகள்கிட்டப் பேச வந்தீங்களா அத்தை?”
“என்ன ருத்ரா இப்படிப் பிரிச்சுப் பேசுற? ரெண்டு பேத்தையும் தாண்டா பார்த்துப் பேசிட்டுப் போக வந்தேன். நீயும், தமிழும் பேசி அவனைக் கல்யாணத்துக்குச் சம்மதிக்க வைப்பீங்கன்னு தான்.”
“சரி பெரியம்மா, சொந்தத்துல எதும் பொண்ணு இருந்தா.”
“அது கூட உன் அண்ணா சொன்னா பரவாயில்லை தானே.”
“உனக்குப் புடிச்ச பொண்ணா இருந்தா நம்ம குடும்பத்துக்கு ஏத்த பொண்ணா இருந்தா கட்டிக்கலாம் தானே தமிழ்”
“சொத்துப் பத்து இல்லனாலும் பரவாயில்லையா, பெரியம்மா?”.
“என்ன தமிழ், இப்படி எல்லாம் கேட்டுட்டு. என்னையும், உன் பெரியப்பா பத்தியும் உனக்குத் தெரியாதா? நாங்க சொத்து பத்தைப் பாக்குறவங்களா? இல்ல நம்ம வீட்ல இல்லாததா? வர மருமகளை நான் மக மாதிரித் தாங்க மாட்டேனா?
எனக்கு கூட தான் நம்ம தனாவைக் கேக்கணும்னு ஆசை. ஆனா, உன் அண்ணன் இப்படியே பிடி கொடுக்காமல் பேசினா. எங்கிருந்து பேச, பாக்கியத்து கிட்ட இதப்பத்திப் பேசலாம்னு பார்த்தா. அவ ஒரே வார்த்தையா அண்ணன் கிட்டயும், அண்ணி கிட்டயும் பேசுனு சொல்லிடுவா. தம்பி கிட்டயும், தனத்து கிட்டயும் பேசலாம் அப்படின்னு யோசிச்சிட்டு இருந்தேன்.
இந்தப் பையன் பிடி கொடுக்காமல் இருப்பதால் பயமா இருக்கு”.
“இப்ப எதைப் பத்திப் பேசணும்?”
“அவன் மனசுல ஏதாவது ஒரு பொண்ணு இருக்கப் போய், நான் வேற இங்க வந்து கேட்டு வச்சேன் வச்சுக்கோ. இருக்க நம்ம உறவு போயிடுமே தமிழ், அதுக்கு தான் பயந்துட்டு இருக்கேன். என் மருமகள் தனா இருக்கும்போது வெளியே நான் ஏன் பொண்ணு எடுப்பேன்?” என்று தனாவின் அருகில் வந்து நெட்டி முறிக்க,
தனா தான் முட்டக் கண்ணைப் போட்டு முழித்துக் கொண்டு நின்றாள்.
அப்போதுதான் தன் தாயைத் தேடி கொண்டு வந்த சரவணன் தன் அம்மா இறுதியாகப் பேசிய வார்த்தையைக் கேட்டுவிட்டு,
“என்ன பேச்சுப் பேசிட்டு இருக்க அம்மா? என்ன பேசுறேன்னு தெரியாமல் பேசிட்டு இருக்கியா? வந்தயா அத்தைகிட்டப் பேசினமானு இரு. அத விட்டுட்டு எதையோ பேசிட்டு இருக்க?” என்றான்.
இவ்வளவு நேரம் இளவரசி பேச முழித்துக் கொண்டிருந்த தனா, சரவணன் பேசிய பேச்சில் ‘ஒருவேளை அவருக்குத் தன் மேல் விருப்பம் இல்லையோ? அத்தை சொல்வது போல் வேறு ஏதாவது பெண்ணை விரும்புகிறாரோ?’ என்று ஒரு சில நொடி சரவணனைப் பார்க்க,
சரவணனின் பார்வை முழுவதாகத் தனது தாயிடம் இருக்க,
அவளாக மனதிற்குள் ஒன்றை எண்ணிக் கொண்டு எதுவும் பேசாமல் ரூமுக்குள் சென்று விட்டாள். போகும் தனாவை மற்ற அனைவரும் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
சரவணனுக்கு தான் இங்கு வலிக்கச் செய்தது.
‘இந்த அம்மா வந்து என்னன்ன பேச்சு எல்லாம் பேசிட்டு இருக்கு’ என்று எண்ணினான்.
ரூமுக்குள் சென்ற தனா தான், ‘இந்த மாமாவுக்குக் கொஞ்சம் கூட நம்ம மேல எந்த ஒரு உணர்வும் இல்லையா? நம்ப தான் தப்புத் தப்பா யோசிக்கிறோமா? அப்போ என்னோட மாமாவோட வளர்ப்பும், அத்தையோட வளர்ப்பும் தப்பா போயிடுமோ?’ என எண்ணிப் புழுங்கி கொண்டு இருந்தாள்.
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


Interesting