
ருத்ரன் ஒரு சில நொடிக்குப் பிறகு, “ஒத்துக்கிறேன் காயு, நான் பண்ணது தப்புதான். அவகிட்ட ஏன் கேட்டேன்னு எனக்கே தெரியல. உண்மையாவே அவ வந்து என்கிட்ட அவ விருப்பத்தைச் சொன்னா, அதனால நான் போய் கேட்டால் சரின்னு சொல்லிடுவா அப்படின்ற எண்ணத்துல மட்டும் நான் அவகிட்டப் போய் கேட்கல.
ஆனா, நான் ஏன் தமிழ்கிட்ட என்னைக் கட்டிக்கிறியான்னு கேட்டேன் அப்படின்றதுக்கான அர்த்தம் எனக்கே சத்தியமா இந்த நிமிஷம் வரைக்கும் புரியல. நானே அந்த ஒரு விஷயத்துல குழம்பிப் போய் தான் நிக்கிறேன்.
அதனால் தான் இந்த நிமிஷம் வரைக்கும் உன் அக்கா கிட்ட போய் நான் பேசாம ஒதுங்கி இருக்கேன். சாதாரணமா எனக்கு அவ பேசணும்னு தோணுதே தவிர, அதைத் தாண்டி மேற்கொண்டு போய் பேச எனக்குத் தடுக்கிற விஷயம் எந்த உரிமையில் நான் போய் அவகிட்டக் கேட்டேன் அப்படின்னு எனக்கே புரியாம குழம்பி தான் நிக்கிறேன். வேற ஒன்னும் இல்ல” என்று சொல்லிக் கொண்டிருக்கும் பொழுது கையைத் தட்டிக் கொண்டு சிரித்துக் கொண்டு வந்த சரவணன்,
“ஏன்னா உனக்கே தெரியாமல் தமிழ் உன் மனசுல இருக்காடா மச்சான்” என்று சொல்ல, மற்ற மூவருமே அதிர்ச்சியாக சரவணனைப் பார்க்க,
“உனக்கும் இங்க இருக்கற காயு, அகிலாக்கும் சொன்னா டவுட் சரி ஆகிடும். சரி மச்சான், உனக்கே தெரியாத விஷயம் நான் சொல்லட்டா?”
“அப்படி என்னடா எனக்கே தெரியாத விசயம்?” என்று ருத்ரன் கேட்க,
“அதுவா மச்சான், அதைத் தானே சொல்ல வந்திருக்கேன்” என்று சிரித்துக் கொண்டே ருத்ரனைப் பார்க்க,
ருத்ரன் முறைத்துக் கொண்டே சரவணனைப் பார்க்க,
“என் மச்சானுக்கு நம்ப தமிழைப் பிடிக்கும்.” காயத்ரி முறைத்துக் கொண்டு பார்க்க,
“அந்தப் பிடிக்கும் என்ற அர்த்தம் என்னன்னு உனக்குத் தெரியுமா? காயு, மாமா மகளா மட்டும் கிடையாது. தன்னுடன் வளர்ந்த ஒரு பொண்ணா மட்டும் கிடையாது. காதலுக்கும், பிடிக்கும் (விருப்பம்) இது ரெண்டுத்துக்கும் நடுவுல ஒரு விஷயம் இருக்கு இல்லையா? அப்படி வச்சுக்கலாம். உன் மாமாவும் உன் அக்காவை விரும்பினது உண்மை தான்…”
“டேய்!” என்று அடிக்கக் கை ஓங்கிக்கொண்டு ருத்ரன் வர,
“கொஞ்சம் பொறு மச்சான், சொல்லி முடிச்சிடுறேன். நீ பேசுவதைக் கேட்கணும்னு சொன்ன இல்லையா? நான் பேசறது கொஞ்சம் கேளேன். ஒன்னும் தப்பு இல்லையே…
உன் மாமனுக்கு நம்ம தமிழைப் பிடிக்கும். இது அவனுக்கே தெரியாத விஷயம்”.
“டேய் என்ன விளையாடுறியா?”
“சரி மச்சான், நான் விளையாடல. நான் கேட்பதற்கு மட்டும் பதில் சொல்லு ஆனந்தியை உண்மையா தான நீ விரும்பின?”.
“இப்ப எதுக்குடா அந்த கழிசடை பத்திப் பேசிட்டு இருக்க?”.
“பொறு மச்சான், பேசி முடிச்சிடுறேன். அவளை நீ உண்மையா விரும்பினன்னு சொல்ற சரி. ஆனா அவ சொத்த அவ பேருல எழுதிக் கேட்டா அப்படின்ற ஒரே ஒரு காரணத்துக்காக, உன்னால அவளை உடனே தூக்கி எறிந்திட முடியுமா? அந்த நிமிஷம் நீ கோவத்துல கூடத் தமிழ் கழுத்தில தாலி கட்டினனு வச்சுக்கலாம்.
ஆனா, அந்த செகண்டே அவளை மறந்துட்டியா? எனக்கு சொல்லு. இத்தனை மாசத்துல உனக்கு ஒரு நாளாச்சும் அந்த ஆனந்தியைப் பத்தின நெனப்பு இருந்துச்சா. அவள நீ உண்மையா விரும்பி இருந்தா, உன் மனசை விட்டு அவளைத் தூக்கி எறிய முடியாமல், ஒன்னு நீ கஷ்டப்பட்டு இருந்து இருக்கணும்.
இல்ல, அவளைத் திருத்தி அவ கூட வாழனும்னு முடிவு பண்ணி, அவ கழுத்துல தாலி கட்டியிருக்கணும். ஆனா இந்த நிமிஷம் வரைக்கும் இது ரெண்டையுமே நீ செய்யல. இது உண்மையா? பொய்யா? நீ உன் மனசாட்சி கிட்டக் கேட்டுக்கோ” என்று சொல்ல,
ருத்ரன் அதிர்ச்சியாகத் தனது நண்பனைப் பார்த்துக் கொண்டிருந்தான்.
அகிலாவும், காயுவும் கூட சரவணனைப் பார்க்க, இருவரையும் பார்த்துக் கண்ணை மூடித் திறந்தவன், “அப்புறம் மச்சான், இன்னொன்னு சொன்ன இல்லையா? நீ தமிழை விரும்புறேன்னு சொன்னேன் இல்ல, அதையும் எப்படின்னு சொல்லிடுறேன். நீ அதையும் கேட்டுக்கோ.
உனக்குத் தமிழைப் பிடிக்கும். உன் மாமா மகளா மட்டும் கிடையாது. அது மட்டும் இல்லாம, அவ உன்ன விரும்புறான்னு வேணா உனக்குத் தெரியாம இருந்திருக்கலாம். ஆனா, தனக்காக ஒரு பொண்ணு ஒவ்வொன்னையும் பார்த்துப் பார்த்துச் செய்யறா, இவள மாதிரி ஒரு பொண்டாட்டி கிடைச்சா அப்படின்ற உணர்வு உனக்குள்ள இருக்கு” என்றவுடன் ருத்ரன் அவனை அப்பொழுதும் முறைத்துப் பார்த்துக் கொண்டிருக்க,
அவளை மாதிரி அப்படின்னு மட்டும் யோசிக்கல மச்சான். நீ அவளோட ஒவ்வொரு சின்னச் சின்ன செயலையும், ஆனந்திகிட்ட எதிர்பார்த்து இருக்க.”
“டேய் நீ என்ன லூசா?”.
“இல்லைன்னு சொல்லிடுவியா?”.
“நான் ஒன்னு சொல்லட்டா, நீ தமிழை விரும்புறேன்னு அந்த ஆனந்திக்கும் தெரியும்”.
“டேய்…”
“அந்த ஒரே காரணத்துக்காக மட்டும் தான் உனக்குக் கல்யாணம் முடிஞ்ச மறுநாள் ஆனந்தி நம்ம வீடு தேடி வந்து நின்னா… எங்க நீ தமிழோட சந்தோஷமா வாழ்ந்து இருக்கியோன்ற பயத்துல, சரியா? அதுக்காக மட்டும் தான் உன்னை விடக்கூடாதுன்னு அவ நினைச்சா.
ஆனா, அந்த ஆனந்தி உன்னை உண்மையா விரும்பல தான், அதையும் நான் ஒத்துக்குறேன். நீ ஒவ்வொரு சின்னச் சின்ன விஷயமும் அவகிட்டப் பேசும் போதும், நம்ம மொத்தக் குடும்பத்தைப் பத்தியும் பேசி இருக்க. ஆனால், அதில் தமிழைப் பத்தின விஷயம் நிறையவே பேசி இருக்க.
தமிழ் அதைச் செய்வா, இதைச் செய்வான்னு நிறைய விஷயம் இருக்கு. அந்த ஒரு விஷயமே போதும், நீ ஆனந்தி கிட்டயே தமிழோட ஒவ்வொரு விஷயத்தையும் எதிர்பார்க்கிறதுக்கு உதாரணம். இன்னொன்னு நம்ம தமிழுக்கும் தெரியும், நீ அவளை விரும்பறேன்னு…”
இப்பொழுது அதிர்ச்சியுடன் மற்ற மூவருமே பார்க்க,
“ஆமாண்டா அந்த ஒரே காரணத்துக்காக மட்டும் தான், அவ உன் கையால தாலி வாங்கிட்டு வந்து இங்க நிக்கிறா. மொத்தக் குடும்பத்துக்கு முன்னாடியும், ஊர் முன்னாடியும் நம்ம குடும்பம் அசிங்கப்பட்டு நிக்கக் கூடாது என்பது மட்டும் காரணம் கிடையாது.
நம்ப குடும்பம் அசிங்கப்பட்டு நிக்கக் கூடாதுன்னு நினைச்சிருந்தாலுமே கூட அங்க வேற ஏதாச்சும் பேசி அதைச் சரி செய்திருப்பா. இல்லையா, ஆனந்தியோட காதல் உண்மையா இருந்திருந்தாலோ இல்ல, உன்னோட காதல் உண்மையா இருந்தா உன்கிட்டப் பேசி ஆனந்தியையே உனக்குக் கட்டி வச்சி இருப்பா.
ஆனந்தியோட காதல் உண்மையா இல்லையான்றது கூட விஷயம் கிடையாது. உன்னோட காதல் உண்மையா இருந்தா உன்னையே சரி செஞ்சு ஆனந்தி கழுத்துல தாலி கட்ட வச்சிருப்பா. அந்தச் சூழ்நிலையில உனக்கு ஆனந்தியைக் கல்யாணம் பண்ணிக்கப் பிடிக்கவே இல்லைனாலும் கூட, எப்படியாவது உன்னப் பேசி சரிகட்டி, ஆனந்தி கழுத்துல தாலி கட்ட வச்சிருப்பா…
ஆனா, அவ கழுத்தை நீட்டி இருந்திருக்க மாட்டா. தமிழுக்கு இருந்த ஒரே காரணம், நீ அவளை விரும்புற, ஆனந்தியை விரும்பலன்றதும், இது ரெண்டு மட்டும் தான் காரணம்.”
“மச்சான் விளையாடாத, நான் உண்மையா தான் அவளை (ஆனந்தியை) லவ் பண்ணேன்.”
“சரி மச்சான், ஆனந்தியை லவ் பண்ண சரி, நான் கேட்டதுக்குப் பதில் சொல்லவே இல்லையே. இப்போ உனக்கும், தமிழுக்கும் கல்யாணம் ஆகி எத்தனை மாசம் ஆகுது?
இத்தனை மாதத்தில் ஒரு நாள் ஆச்சும் உனக்கு ஆனந்தி பத்தின நினைப்பு வந்துச்சா? அப்படி யோசிக்க முடியாம என் தங்கச்சி தமிழ் செஞ்சுட்டான்னு மட்டும் சொல்லாத. இந்த நிமிஷம் வரைக்கும் ஆனந்தியைக் கல்யாணம் பண்ணிக்க முடியலையேன்னு நீ பீல் பண்ணியா? ஆனா, இத்தனை மாசத்துல இப்ப நீ தமிழைக் கல்யாணம் பண்ணின இத்தனை மாசத்தில ஒவ்வொரு நாளும், தமிழ் உன்கிட்ட வெறுப்போட பேசுறா, வெறுப்போட நடந்துக்கிறா. எல்லாரும் இருக்கும்போது நல்லாப் பேசுறான்னு என்கிட்ட பீல் பண்ணிச் சொன்னியா இல்லையா?
இது உண்மையா உன் மனசிலே இந்த நிமிஷம் வரைக்கும் அரிச்சிகிட்டு இருக்கா இல்லையா? தமிழ் என்கிட்டப் பேசல, தமிழ் என்கூட வெறுப்போட இருக்கான்னு யோசிச்சு நீ…
ஆனந்தியை நம்ம உயிருக்கு உயிராகக் காதலிச்ச பொண்ண விட்டுட்டோமே, அவளைத் திருத்தி கூட இருந்து இருக்கலாம். அப்படின்னு ஒரு நாள் ஆச்சும், ஒரு செகண்ட் ஆச்சும் யோசிச்சு இருந்து இருக்கியானு நீ இப்போ நிதானமா யோசி. இதுக்கு மேல உனக்குச் சொல்ல என்கிட்ட ஒன்னும் இல்ல மச்சான். நீயா யோசிச்சுக்கோ” என்று விட்டுத் தனது இரண்டு தங்கைகளையும் பார்க்க,
தனது நண்பன் கூப்பிடக் கூப்பிட வெளியே சென்று விட்டான் சரவணன்.
அவன் சென்ற பிறகு இருவரும் ஒரு சில நொடி நின்று ருத்ரனைப் பார்த்தார்கள். அவர்களும் வெளியே சென்றுவிட்டார்கள்.
வேகமாகச் சரவணன் பின்னாடியே வந்த இருவரும், “அண்ணா, நீ மாமாவக் குழப்பி விட்டுட்டு வந்து இருக்கனு தோணுது.”
“குழம்புற குட்டையில தான் மீன் பிடிக்க முடியும்?”
“அண்ணா, அவர் தமிழ விரும்பாதப்ப ஏன் இப்படி?” என்றார்கள்.
“நான் அங்க சொன்னது எல்லாம் உண்மை தான். ஆனந்தியை வெறுக்கறதுக்காகவும் இல்ல, அவன் இனிமே தமிழ் கூட வாழனும் என்பதற்காகவும் நான் சொல்லல. அவன் மனசுல இருக்குறதை அவன் புரிஞ்சுக்கணும், அப்படின்றதுக்காக மட்டும்தான் நான் அங்க சொல்லிட்டு வந்து இருக்கேன்.
நான் சொன்ன எதுவும் பொய் இல்லை. உன் மாமா மனசுல முழுக்க முழுக்க இருக்கறது தமிழ் மட்டும் தான். ஆனா, அது காதல்னு உணராதவன், தன் கூட வளர்ந்த பொண்ணு, தன்னுடைய மாமா பொண்ணு அப்படினு மட்டும் தான், அந்த இடத்தில் மட்டும் தான் நம்ம தமிழை வச்சிருக்கான்.
ஆனந்தி அவளா வந்து காதலைச் சொல்லவும், அவ பணத்தாசைக்கு தான் இவனை விரும்ப செஞ்சா. இருந்தாலும் அவளா வந்து சொல்லவும், வயசுக் கோளாறுல புத்தி பேதலிச்சு அவளிடம் விரும்புறேன்னு ருத்ரன் சொல்லியிருந்தாலுமே கூட…
அவனோட ஒவ்வொரு செய்கையும் தமிழை எதிர்பார்த்து மட்டும்தான் ஆனந்திகிட்டப் பேசி இருக்கான். தமிழோட ஒவ்வொரு செய்கையையும் ஆனந்திகிட்ட எதிர்பார்த்து இருக்கான்.
இதுக்கு மேல என்கிட்டச் சொல்ல எதுவும் கிடையாது. இதுக்கு மேல நீங்களும் இதப்பத்திப் பேசாதீங்க. ஆனா, தமிழுக்குத் தெரியும்னு சொன்னது உண்மைதான்.
நம்ம தமிழுக்குத் தெரியும். அந்த ஒரே காரணத்துக்காக மட்டும் தான் தமிழ் இந்த வீட்ல அவனோட பொண்டாட்டியா இருக்கா. ஆனா, இதப் போய் தமிழ் கிட்ட ரெண்டு பேரும் கேட்க மாட்டீங்கனு நினைக்கிறேன்” என்று விட்டு அவன் நகர,
“என்கிட்ட என்ன கேட்க வேண்டாம்?” என்று கேட்டுக் கொண்டே தமிழ் வந்து நிற்க,
இருவரும் திருதிருவென முழிக்க,
இருவரையும் பார்த்துவிட்டு, “உங்களைத் தானே கேட்கிறேன். என்ன ரெண்டு பேரும் திரும்ப முழிச்சிட்டு இருக்கீங்க?” என்று விட்டுச் சரவணனைப் பார்க்க,
அவனது முகம் இறுகிப் போய் இருப்பதைப் பார்த்துவிட்டு, “என்ன அண்ணா இவங்க இரண்டு பேர் கிட்டையும் சொன்ன?” என்றாள்.
“உண்மையைச் சொன்னேன். எனக்கு என்ன தெரியுமோ? உனக்கு என்ன தெரியுமோ? அந்த உண்மையைச் சொல்லி இருக்கேன்”.
“அண்ணா ஏன் இப்படி என் வாழ்க்கைல விளையாடிட்டு இருக்கீங்க? நீயும், உன் நண்பனும்”.
“அவன் விளையாடுகிறானா, இல்லையான்னு எனக்குத் தெரியாது தமிழ். ஆனா, என் தங்கச்சி வாழ்க்கையைச் சரி செய்யணும்னு மட்டும் தான் நான் நினைச்சேன்.”
“அப்போ அவர் கிட்டயும் சொல்லி வச்சிருக்கீங்க, அப்படித்தானே”.
“அவன் கிட்டயும் சொல்லனுமே தமிழு, உணராமலே இப்படியே வாழ்க்கையை ஓட்டிடலாம்னு முடிவு பண்ணி இருக்கியா? அது நீ சாவறதுக்குச் சமம்.”
“இப்பயும் அதுதான் நடக்குது” என்று கசந்த முறுவலோடு சொல்லிவிட்டுத் தமிழ் நகர்ந்து விட்டாள்.
போகும் தமிழை அதிர்ச்சியுடன் மற்ற மூவரும் பார்த்துக் கொண்டு நின்றார்கள்.
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


தமிழ் வாய்விட்டு பேசலாம், இல்ல செயல்லயாச்சும் காமிக்கலாம்… ருத்ரன் திருந்த மாட்டேன் சொல்லலையே… டைம் வேணும்ல அவனுக்குக்கும்… அக்னி சிறகு தமிழே எழுந்து வா..