
ருத்ரன் சரவணனை அழைத்துக்கொண்டு தனது மாமா அத்தை வீட்டிற்குச் சென்று இருந்தான்.
இருவரும் “என்னடா, ரெண்டு பேரும் சேர்ந்து வந்து இருக்கீங்க?” என்று கேட்க,
“ஒரு முக்கியமான விஷயம் பேச தான் மாமா” என்று ருத்ரனும், சித்தப்பா என்று சரவணனும் ஒரே போல் சொல்ல,
இருவரையும் பார்த்த செல்வம் அமைதியாக ஓரிடத்தில் உட்கார்ந்து கொண்டு, “சரிடா உட்காருங்க” என்று விட்டுத் தனத்தைப் பார்க்க,
இருவருக்கும் தனம் தண்ணீர் எடுத்துக் கொண்டு வந்து கொடுத்தார்,
“டீ சாப்பிடுறீங்களாடா?” என்று தனம் கேட்க,
“இப்போ எதுவும் வேண்டாம் அத்த, முதல்ல நீங்க இங்க வந்து உட்காருங்க” என்று சொல்ல,
ஏதோ முக்கியமான விஷயம் இருக்கப் போய் தான் இருவரும் வந்திருக்கிறார்கள் என்பதை உணர்ந்த தனமும் அமைதியாக வந்து உட்கார்ந்து கொண்டார், ருத்ரன் கண்ணை வீட்டைச் சுற்றிச் சுழல விட்டான்.
“காயு அங்க தான், காட்டுக்கு தமிழ் வரச் சொன்னானு போயிருக்கா” என்று சொல்ல,
“சரி அத்த” என்று விட்டு அகிலாவைப் பற்றித் தங்களுக்குத் தெரிந்த அனைத்தையும் சொல்ல,
முதலில் செல்வத்திற்குக் கோபமாக இருந்தாலும், தனம் தான் “ஏங்க தமிழ் எப்படியோ, அப்படித்தானே அகிலாவை நாம வளர்த்திருக்கோம். எந்த ஒரு தப்பான முடிவையும் நம்ம அகிலா எடுக்க மாட்டா. பொண்டாட்டி இப்போ உயிரோட இல்லனு தெரிஞ்சு தான் காதலிச்சு இருக்கா… அகிலாவோட விருப்பம் எனக்குத் தப்பா தெரியல. நம்ம மாமாவும், அக்காவும் அவளை அப்படி வளர்க்கவும் இல்லை” என்று சொன்னார்.
அதன் பிறகு தான் செல்வம் சிறிது அமைதி காத்தார்.
“இருந்தாலும், அண்ணனுக்கும் அண்ணிக்கும் இந்த விஷயம் தெரிய வரும்போது எவ்வளவு மனசு கஷ்டமாகும்” என்று சொல்ல,
“வருத்தம் தான் மாமா, நீங்களே இப்படிப் பேசினா எப்படி நம்பிக்கையா மாமா கிட்டயும், அத்தை கிட்டயும் பேசுறது? அவங்க கிட்ட நீங்க பேசிப் புரிய வைப்பீங்கன்னு தானே, உங்களைத் தேடி வந்தோம்.”
“என்ன ருத்ரா, இப்படிப் பேசுற? இது சரி வரும் என்று நினைக்கறியா?”.
“மாமா ப்ளீஸ், அகிலாவுக்குப் பிடிச்சிருக்கு. அந்தப் பையனைப் பற்றி நானும் இப்போ ஒரு வாரமாக விசாரிச்சிட்டேன். நல்ல பையன் தான். அகிலா சொல்லிக் கொடுக்கிற ஸ்கூல்ல தான் அந்தப் பையனும் வேலை செய்றாரு. நல்லாப் படிச்சிருக்காரு. வீட்டுல பார்த்து தான் கல்யாணம் பண்ணி வச்சிருக்காங்க.
குழந்தை பிறக்கும் போது பிரசவத்துல அவங்க பொண்டாட்டி இறந்துட்டாங்க. அதுக்கு நம்ம ஒன்னும் பண்ண முடியாது. அவர் மேலயும் தப்பு சொல்ல முடியாது. இவ்வளவு நாள் கட்டிக்கிட்ட பொண்டாட்டிக்கு உண்மையா இருக்கணும்ன்றதுக்காக தான் பிள்ளையைத் தன்னுடைய அம்மாவின் உதவியோடு வளர்த்து இருக்காரு.
அவங்க பையனுக்கு 1 வயசு ஆன பிறகு இப்போ 2 வருசத்துக்கு முன்னாடி தான் வேலையிலும் சேர்ந்திருக்காரு. வேலைக்குச் சேர்ந்த ரெண்டு மாசம் கழிச்சு தான் அகிலாவுக்கு அவரைப் புடிச்சிருக்கு. அவரப் புடிச்சிருக்குன்னு அவ அவர்கிட்ட நேரடியாகப் போய் சொல்லும்பொழுது தான் அவர் அவரைப் பத்தின உண்மை எல்லாம் சொல்லி இருக்காரு. அதுக்கு முன்னாடி அகிலா உங்களை பத்தி எனக்கு ஏற்கனவே தெரியும் என்று சொல்லி இருக்கா.”
“அவ தெரிஞ்சுகிட்டு தான், அவரை விரும்புகிறேன் என்று அவர்கிட்டயே போய் சொல்லி இருக்கா, அப்படித்தானே” என்றார் செல்வம்.
“நம்ம அகிலாவை உலகம் தெரியாம வளர்த்திடலையே மாமா, அவளும் வெளி உலகத்தைப் பார்த்து இருக்கா. இப்போ கிட்டத்தட்ட மூணு வருஷத்துக்கு மேல வேலைக்குப் போயிட்டு இருக்கா” என்று விட்டு அமைதியாகி விட்டான்.
“அப்போ எல்லா முடிவையும் நீங்களே எடுத்துடுவீங்க?”
“நான் சின்னப் புள்ள இல்லையா மாமா, நீங்க தான் மாமா முடிவு எடுக்கணும்” என்று அமைதியாகி விட,
ஒரு சில நொடி அனைத்தையும் யோசித்த செல்வமும், தனமும், “சரி பா ருத்ரா, நான் அண்ணன் கிட்டயும், அண்ணி கிட்டயும் பேசணும். ஆனா இத பொறுமையா தான் கொண்டு போக முடியும். எடுத்தோம் கவிழ்த்தோம் என்று எதுவும் செய்ய முடியாது. அவங்க வீட்டுல எப்படி முடிவெடுப்பாங்கன்னு சொல்ல முடியாது” என்று சொல்ல,
ருத்ரன் தான், “அவங்க வீட்டிலயும் அவருக்குப் பொண்ணு பார்த்துட்டு தான் இருக்காங்க மாமா. அவர் தான் வேணாம்னு சொல்லிட்டு இருக்காரு. இப்போ நாலு மாசத்துக்கு முன்னாடி தான், சரி நான் கல்யாணம் பண்ணிக்கிறேன். ஆனா, என் பையனைப் பார்த்துக்கணும்னு சொல்லி இருக்காரு.”
செல்வம், “அப்போ ஒரு முடிவோடு தான் ரெண்டு பேரும் வந்து இருக்கீங்க டா” என்று விட்டு எழுந்து இருவரது தோளிலும் தட்டிக் கொடுத்தவர்,
“நான் இன்னைக்கே பேசுறேன்” என்று விட்டு வேறு எதுவும் பேசாமல் வெளியில் சென்று விட்டார்.
ருத்ரன், சரவணன் இருவரும் தனத்தைப் பார்க்க,
“அதான் மாமா சொல்லிட்டாரு இல்லடா, நல்ல முடிவுதான் எடுப்பாரு பயப்படாதீங்க. மாமா கிட்டயும், அக்கா கிட்டயும் பேசலாம். பேசிட்டு ஒரு முடிவு எடுக்கலாம். அதுவரைக்கும் நீங்க கொஞ்சம் அமைதியா இருங்க” என்று விட,
இருவரும் சரி என்று சொல்லிக் கொண்டு கிளம்பி விட்டார்கள்.
ஒருவாரம் தனத்திடமும் இதைப்பற்றிப் பேசிய செல்வம், தன் மனதிற்குள்ளும் அசை போட்டுவிட்டு, ‘இது சரி வருமா? தங்கள் குடும்பத்துக்கும் சரி, அகிலாவின் பிற்கால வாழ்க்கைக்கும் சரி’ என்பதை யோசித்து விட்டு, ஒரு வாரத்திற்குப் பின்பு தனத்தை அழைத்துக் கொண்டு சரவணன் வீட்டிற்கு வந்திருந்தார்.
சரவணன் அப்பா முனுசாமி அப்பொழுதுதான் காலை உணவு சாப்பிட்டுக் கொண்டிருக்க,
“வாடா செல்வம், என்ன அதிசயமா இருக்கு. புருஷனும் பொண்டாட்டியும் ஒண்ணா வந்து இருக்கீங்க?” என்று சிரித்த முகமாகக் கேட்க,
உள்ளே இருந்த தன் மனைவி இளவரசியை முனுசாமி அழைக்க,
“இதோ வரேன் மாமா” என்று விட்டு இளவரசி வந்து நிற்க,
“வாங்க தம்பி, வா தனம்… என்ன ரெண்டு பேரும் ஒண்ணா சேர்ந்து வந்து இருக்கீங்க?” என்று சிரித்த முகத்துடன் கேட்டுக் கொண்டே தண்ணீர் கொடுக்க, வாங்கிக் குடித்த செல்வம்,
“ஒரு முக்கியமான விஷயம் பேச தான் அண்ணி.”
“சரி வாங்க சாப்பிடலாம், சாப்பிட்டுப் பேசலாம்” என்றார் இளவரசி.
“இல்ல அண்ணி, சாப்பிட்டு தான் வந்தோம்” என்றார் செல்வம்.
“சரி உட்காருங்க” என்றவுடன் செல்வமும் தனமும் உட்கார,
முனுசாமி சாப்பிட்டு வரும் வரை அமைதியாக உட்கார்ந்து இருந்தார்கள் செல்வமும், தனமும்.
முனுசாமி வந்து, “என்ன செல்வம் இவ்வளவு தூரம்?” என்று கேட்க,
“அண்ணா, நம்ம அகிலா கல்யாணத்தைப் பத்தி தான்” என்று நேரடியாக விஷயத்திற்கு வர,
“நல்ல இடமா நீ பார்த்து வச்சு இருந்தாலும், சரிதானே. சரவணன் கூட எங்க கிட்ட இதப்பத்திக் கேட்டு இருந்தான். அகிலாவுக்குக் கல்யாணம் பண்ணலாம்னு… நான்தான் சரி இருப்பா, உனக்கு முடிச்சுட்டுப் பண்ணலாம்னு சொன்னேன்.
எனக்கு இன்னும் கொஞ்ச நாள் போகட்டும். ஃபர்ஸ்ட் நம்ப அகிலாக்கு முடிக்கலாம் என்று சொல்லி இருந்தான்” என்று சொல்ல,
“அது தான் அண்ணா, நம்ப அகிலா…” என்று விட்டு ஒரு சில நொடி தயங்க,
செல்வத்தை உற்றுப் பார்த்த முனுசாமி தனது மனைவியை அருகில் அழைக்க,
“என்ன மாமா, தம்பி பேசுறதை நானும் கேட்டுட்டு தான் இருக்கேன்.”
“அவன் பேசுவதை நீ கேட்டுட்டு தான் இருக்க, ஆனா அவன் ஏதோ சொல்ல வந்து தயங்கி நிக்கிற மாதிரி இருக்கு” என்ற உடன்,
தனது மாமாவையும், அக்காவையும் பார்த்த தனம், “ஆமாம் மாமா” என்றார்.
“என்கிட்டச் சொல்ல உங்க ரெண்டு பேருக்கும் அப்படி என்ன தயக்கம் தனம்” என்று கேட்க,
“என்ன இருந்தாலும் நீங்க ரெண்டு பேரும் பெத்தவங்க இல்லையா?”.
“பெத்தது என்னவோ நாங்க தான். ஆனா, முழுக்க முழுக்க அகிலாவையும் சரி, சரவணனையும் சரி வளர்த்தது நீ தான தனம். மொத்தப் புள்ளைங்களையும் வளர்த்தது நீயும் செல்வமும் தானே. ஏன்? முடிவு எடுக்குற உரிமை உனக்கும் செல்வத்துக்கும் இல்லையா?” என்றார்.
“அந்த நம்பிக்கையில் தான் மாமா உங்ககிட்டப் பேச வந்து இருக்கோம்.”
“இங்க யாரு உங்க மேல நம்பிக்கை இல்லைன்னு சொன்னா? நீங்க சொன்னா அதை நாங்க பண்ணப் போறோம். இதுல என்ன இருக்கு தனம்” என்றார்.
அப்போது சரவணன் அமைதியாக வந்து நிற்க,
“உன் சித்தி பேசறதக் கேட்டியா டா” என்ற உடன் சரவணன் அமைதியாகவே இருக்க,
“அப்போ இவனுக்கும் ஏதோ தெரிஞ்சிருக்கு. சரி தனம் சொல்லு. நீ சொன்னாலும் சரிதான், செல்வம் பேசினாலும் சரிதான். யார் பேசினா என்ன?” என்றவுடன் செல்வம் அமைதியாகவே இருக்க,
தனம் அனைத்தையும் சொல்ல,
ஒரு சில நொடி இருவரையும் அமைதியாகப் பார்த்துக் கொண்டு நின்ற முனுசாமி,
“சரி, நீங்க ரெண்டு பேரும் என்ன முடிவு பண்ணி இருக்கீங்க?”
“மாமா, அது நல்ல வரன் என்று ருத்ரனும் விசாரிச்சு சொன்னான். நாங்களும் ஒரு வாரமா எங்களுக்குள்ள யோசிச்சுப் பார்த்துட்டு, அந்தப் பையனைப் பத்தியும் விசாரிச்சோம். நல்ல இடமா தான் தெரியுது. என்ன ஒன்னுனா நம்ம அகிலாவை ரெண்டாம் தாரமா கொடுக்குற மாதிரி வரும். ஆனா, அகிலாவுக்குப் பிடிச்சிருக்கு. அதுக்காக மட்டும் பார்க்க வேண்டியதா இருக்கு. இனிமே நீங்க தான் முடிவு சொல்லணும்” என்று தனம் சொல்ல,
சிரித்துக் கொண்டே தன் தம்பி செல்வம் தோளில் கையைப் போட்ட முனுசாமி, “நீ சொன்னதுக்கு அப்புறம் மறுபேச்சு உண்டா செல்வம்? உன்ன விட பிள்ளைகளுக்கு நல்லது கெட்டது யார் எடுத்து நடத்திட முடியும். உன்னிடம் ருத்ரன் வந்து பேசியே ஒரு வாரம் ஆகுதுனு தனம் சொல்லுது.
இப்பக் கூட என்கிட்ட இதைப்பத்திப் பேச உனக்கு அவ்வளவு தயக்கம். நீ அந்த பையனைப் பத்தி விசாரிச்சிட்டு தான் என்கிட்ட வந்து நிக்கிற. ருத்ரனும் விசாரிச்சு இருக்கான். உங்களை விட நம்ம அகிலாவுக்கு வேற யாரு நல்லது நினைச்சிட முடியும். நம்ம போயிட்டு அவங்க வீட்ல பேசலாம். ஆனா, அவங்க வீட்ல ஒத்துப்பாங்களா?” என்றவுடன்,
“அண்ணி?” என்று இளவரசியைச் செல்வம் பார்க்க,
இளவரசியும் சிரித்த முகமாக, “என்ன தம்பி இப்படிக் கேட்டுகிட்டு, உங்க அண்ணன் சொன்னது தான். ருத்ரனை விட, உன்னை விடவா நம்ம அகிலாவுக்கு நல்லது வேற யாரும் நினைச்சிடப் போறாங்க. அதுவும் அவன் அண்ணன் சரவணன் அவ மேல உயிரையே வச்சிருக்கான். அவனே அமைதியா இருக்கானே.
அப்போ அவனுக்கும் இதுல விருப்பம் என்று தான அர்த்தம். நாம போயிட்டுப் பேசலாம். உங்க மாமா சொன்னதுதான். அவங்க வீட்ல?” என்றார்.
“அவங்க வீட்லயும் அவருக்குப் பொண்ணு பார்த்துட்டு தான் இருக்காங்க.”
“சரிப்பா, ஒரு நல்ல நாள் பார்த்து நம்ம அவங்க வீட்ல போய் பேசலாம்.”
” நாங்களும் விசாரிச்ச வரைக்கும் நம்ம அந்தத் தம்பி வீட்ல அவங்க அம்மா கிட்டப் பேசறது சரியா வரும்னு தோணுது. அதுக்கு அப்புறம் அந்தத் தம்பி கிட்டப் பேசலாம்” என்றவுடன் சிரித்துக் கொண்டே முனுசாமி,
“நீ எந்த முடிவு எடுத்தாலும் எங்களுக்குச் சம்மதம் தான்” என்று விட்டு, “தமிழுக்குத் தெரியுமா?” என்று கேட்க,
“தமிழுக்குத் தெரியும் பா” என்று சரவணன் சொல்ல,
சரவணனைப் பார்த்த முனுசாமி, “அப்போ எல்லாம் ஒரு கூட்டா தான்டா இருந்திருக்கீங்க” என்று சிரித்தார்.
சரவணன் அமைதியாகி விட, மறுநாள் பெரியவர்கள் மட்டும் குடும்பத்தோடு சென்று மகியின் அம்மா கோதையிடம் பேச,
கோதை ஒத்துக் கொண்டவர் சந்தோஷத்துடன், “என் பையனை முழுசாப் புரிஞ்சுகிட்ட ஒரு பொண்ணு கிடைக்கிறது எனக்கு தான் வரம். உங்கள மாதிரி ஒரு குடும்பம் கிடைக்க நான் கொடுத்து வச்சிருக்கணும். ஆனா, என் பையன்கிட்ட இதப்பத்திப் பேசணும்” என்றார்.
அப்பொழுது தான் ருத்ரனுடன் வந்து இறங்கிய தமிழ், “உங்க பையன்கிட்டப் பேசிட்டு தான் ஒரு முடிவைச் சொல்லப் சொல்றோம் மா. அவர்கிட்டப் பேசாம எப்படி முடிவு பண்ண முடியும்?
சேர்ந்து வாழப் போறது அவங்க ரெண்டு பேரும் தான. அகிலாவுக்கு மட்டும் புடிச்சால் போதாது, உங்க பையன் மகிக்கும் பிடிச்சி இருக்கணும் தானே.
அவருக்கும் புடிச்சிருக்கு தான். ஆனா, அவரா விருப்பப்பட்டுக் கல்யாணம் பண்ணிக்கணும் இல்லையா?” என்றாள்.
“யாருக்கு விருப்பப்பட்டு தமிழ்?” என்று கோபத்துடன் வீட்டுக்குள் வந்து நின்றான் மகி.
அனைவரும் இப்போது திருதிருவென முழித்துக் கொண்டு நின்றார்கள்.

