
ஒரு வாரம் சென்று இருந்தது. இந்த ஒரு வாரத்தில் தமிழ் எவ்வளவோ முறை ருத்ரனிடம் பேச முயற்சி செய்தாள். ஆனால், அவள் பேசுவதற்கான வாய்ப்புக் கூடத் தராமல் ருத்ரன் அவளிடம் இருந்து விலகிச் சென்றான்.
பிறகு ருத்ரனின் தாய்மாமா, அதாவது தமிழின் அப்பா ருத்ரனிடம் பேச வேண்டும் என்று அவனது வீட்டிற்கு வந்திருந்தார், தனது மனைவி மக்களோடு. ருத்ரனின் தாய்மாமா செல்வம், அவரது மனைவி தனம், பெரிய மகள் தமிழ்விழி, இளைய மகள் காயத்ரி அனைவரும் ருத்ரனின் வீட்டிற்கு வந்திருந்தார்கள். ருத்ரனுக்கு அப்பா இல்லை, அவனுடைய ஒன்பது வயதில் மரணம் அடைந்தார்.
தோட்டத்தில் தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருக்கும் பொழுது பாம்பு கடித்து இறந்து விட்டார். அப்போதிலிருந்து இப்போது வரை ருத்ரனையும், அவனது குடும்பத்தையும் முழுவதாகப் பார்த்துக் கொள்வது செல்வம் தான். தன்னுடைய பொறுப்பில் தனது தங்கையையும், தங்கையின் பிள்ளைகளையும் பார்த்துக் கொண்டு, தனது தங்கை கணவருடைய வயல்வெளிகளையும் பார்த்துக் கொண்டு இருக்கிறார்.
தங்கை குழந்தைகளைத் தன் பிள்ளை போல் வளர்க்கவும் செய்தார் செல்வம்.
ருத்ரனின் தாய் பாக்கியம், தங்கை கீர்த்தனா அனைவருமே ருத்ரனின் வீட்டில் கூடியிருந்தார்கள்.
“ருத்ரா, உன்கிட்டப் பேசுறதுக்கு தான்பா வந்து இருக்கேன்” என்றார் செல்வம்.
“சொல்லுங்க மாமா என்ன இவ்ளோ காலையிலேயே வந்து இருக்கீங்க?” என்று ருத்ரன் கேட்க,
“நீ வேலைக்குப் போறதுக்கு முன்னாடியே உன்கிட்டப் பேசலாம்னு தான் பா.”
“சொல்லுங்க மாமா என்ன?” என்று கேட்டான். செல்வம் தனது தங்கை பாக்கியத்தை ஒரு சில நொடி பார்த்துவிட்டு,
“இல்லப்பா, உனக்கு வயசு ஏறிட்டே போகுது. உனக்குக் கல்யாணம் பண்ணலாம்னு சொல்லிட்டு தான். உனக்குக் கல்யாணம் ஆகிடுச்சுனா மொத்தப் பொறுப்பையும் உன்னிடம் கொடுத்து விடலாம் என்று தான்” என்றார்.
“கல்யாணம் பண்றதுக்கும், பொறுப்புக் கொடுப்பதற்கும் என்ன மாமா சம்பந்தம்?”
“இல்லப்பா இவ்ளோ நாளா நீ சின்னப் பிள்ளையா இருந்தேன்னு சொல்லிட்டு, எல்லா காட்டு, கணக்கு வழக்கு எல்லாம் நான் பார்த்துட்டு வந்தேன். இப்ப நீ வளர்ந்து பெரிய ஆள் ஆகிட்ட, வேலைக்குப் போக ஆரம்பிச்சுட்ட. கல்யாண வயசு ஆயிடுச்சு. அதான் எல்லாத்தையும் உன்கிட்ட ஒப்படைத்து விடலாம் என்று தான்” என்றார்.
“மாமா, நீங்க என்ன பேசுறீங்கன்னு தெரிஞ்சு தான் பேசுறீங்களா? இதுவரை நான் எந்தக் கணக்கு வழக்கையும் கேட்டதும் இல்லை, பார்த்ததும் இல்லையே… என்னுடைய 9 வயசுல அப்பா எங்களை விட்டுப் போனார். அப்போதிலிருந்து எனக்கு அப்பாவாகவும், அம்மாவாகவும், மாமாவாகவும் நீங்க தானே எல்லாமா இருந்து பார்த்துக்குறீங்க…”
“அப்போ நீ சின்னப் பிள்ளையா இருந்த ருத்ரா, இப்ப நீ வளர்ந்துட்டியே, நாளைக்கு உனக்குன்னு ஒருத்தி வருவாளே”
“மாமா எனக்குன்னு ஒருத்தி வர்றது இருக்கட்டும். அதுக்கும், இதுக்கும் என்ன மாமா சம்பந்தம்?”
“இல்லப்பா, அது இனிமே சரி வராது. இனி எல்லாக் கணக்கு வழக்கையும், குடும்பத்தையும் நீ பாருப்பா… மாமா உனக்குத் துணையாக எப்பயுமே, பக்க பலமா இருப்பேன். நீ செய்யறது சரி தப்புன்னு சொல்லுவேன். உனக்கு என்ன தோணுதோ, அதை மாமாகிட்டக் கேட்கலாம். மாமா உனக்கு எல்லாம் செய்வேன். ஆனா எல்லாப் பொறுப்பையும் என்கிட்ட இருக்கறதை விட, உன் கையில் ஒப்படைச்சிட்டா எனக்குக் கொஞ்சம் நிம்மதி.
எனக்கும் வயசாகுது இல்ல” என்றார். சரி என்று அமைதியாக இருந்தான்.
“அதான் இப்போ உன் கல்யாணத்தைப் பத்திப் பேசலாம்னு வந்தேன்.”
“இப்ப என்ன மாமா எனக்கு அவசரம்? நீங்க சொன்ன மாதிரி கணக்கு வழக்கெல்லாம் அம்மாட்ட கூடக் கொடுத்துட்டுப் போங்க. எனக்கு, எப்பயும் துணையாக பக்கபலமா இருங்க. நீங்களே எல்லாத்தையும் பாருங்க. மாமா, என்கிட்டக் கணக்கு சொல்லணும்னு அவசியம் கிடையாது. அம்மா கிட்டச் சொல்லுங்க. நான் தப்பா நினைச்சிக்க மாட்டேன், நான் உங்க வளர்ப்பு மாமா.
அப்படித் தப்பா போக மாட்டேன். நான் என்னதான் வளர்ந்திருந்தாலும், இப்பயும் உங்க புள்ள தான் மாமா…”
“அதான்பா, உனக்குக் கல்யாணம் பண்ணலாம்னு…” என்று திரும்பவும் பேச ஆரம்பித்தார்.
“சொல்லுங்க மாமா…” என்று அமைதியாகக் கேட்கச் செய்தான்.
“இல்ல நம்ம தமிழை உனக்குக் கட்டி வைக்கிலாம்னு” என்றார்.
ருத்ரன், அமைதியாக அவர் என்னதான் சொல்ல வருகிறார் என்று கேட்கச் செய்தான். அவன் தான் பேசுவதைக் காது கொடுத்துக் கேட்கிறான் என்றவுடன், மேற்கொண்டு பேசச் செய்தார் செல்வம்.
“தமிழுக்கும் வயசாகிட்டே போகுது, உனக்கும் கல்யாண வயசு ஆயிடுச்சு. பாக்கியத்திடமும் பேசினேன், பாக்கியமும் சரின்னு சொன்னுச்சு பா… அதான், உன்கிட்டயும் பேசிட்டு நல்ல நாள் பார்த்துப் பேசி முடிக்கலாம்னு…”
“மாமா, நான் ஒன்னு சொல்றேன், தப்பா எடுத்துக்காதீங்க. அப்பா இறந்ததிலிருந்து இப்போ வரை என்னை முழுக்க முழுக்க, என்னை ஆகட்டும், அம்மா, தனா எல்லாத்தையுமே நீங்க தான் பார்த்துக்கிட்டீங்க. எங்களோட முழுப் பொறுப்பும் உங்களது தான். நீங்க உங்க ரெண்டு மகளையும் எப்படிப் பார்த்துக்கிட்டிங்களோ, அப்படித்தான் எங்க ரெண்டு பேத்தையுமே பார்த்துக்கிட்டீங்க. அது எனக்கும் தெரியும். ஆனால், என்னோட கல்யாணம்னு வரும்போது இது என்னோட தனிப்பட்ட விஷயம் இல்லையா?” என்றான்.
பாக்கியம், “டேய்! ருத்ரா என்னடா பேசுற? யாருகிட்டப் பேசுறேன்னு தெரிஞ்சு தான் பேசுறியா?” என்றார்.
அப்போது செல்வம் தான், “பாக்கியம் நீ கொஞ்சம் கம்முனு இரு, ருத்ரன் என்னதான் சொல்ல வரான்னு கேட்போம். சொன்னாலும், சொல்லாட்டியும் கல்யாணம் என்பது அவங்களோட தனிப்பட்ட விருப்பம். அதுல நம்ம தலையிடக் கூடாது” என்றார்.
“என்ன அண்ணா நீயும், அவன்தான் ஏதோ பேசுகிறான்னா நீ வேற…”
“அவன் சின்னப்புள்ள இல்ல, இப்ப தான் சொன்னேன். அதை நீயும் மனசுல வச்சுக்கோ. அவன் வளர்ந்திட்டான். என்ன தான் சொல்ல வரான் என்று நாம அதைக் காது கொடுத்துக் கேட்கணும். இவ்ளோ நேரம் நான் பேசினதை அவன் காது கொடுத்துக் கேட்டான் இல்ல, நமக்கு மரியாதை கொடுத்தான் இல்ல… நாம இப்ப அவனுக்கு மரியாதை கொடுக்கணும் பாக்கியம், அமைதியாக இரு” என்றார்.
பாக்கியம் தனது அண்ணன் பேச்சுக்குக் கட்டுப்பட்டு வாயை மூடிக்கொள்ள, “நீ சொல்லு பா” என்று செல்வம் கேட்டார்.
“இல்லை மாமா…” என்று விட்டுத் தமிழை ஒரு சில நிமிடம் திரும்பிப் பார்த்துவிட்டு, “தப்பா எடுத்துக்காதீங்க, நீங்க என் கல்யாண விஷயத்தைப் பத்திப் பேசினதுல தப்பு இல்ல… என்னோட அப்பா ஸ்தானத்துல நீங்க தான் இருக்கீங்க. இந்தப் பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்க என்று நீங்க சொல்றதிலும் தப்பு இல்ல.
ஆனா, நான் தான் ஒரு விஷயம் பண்ணி இருக்கேன். தமிழ் நல்ல பொண்ணு தான், நான் இல்லைன்னு சொல்லல. ஆனா, என் மனசுல வேற ஒரு பொண்ணு இருக்கு. நான் இரண்டு வருஷமா ஒரு பொண்ணை விரும்பிகிட்டு இருக்கேன். எனக்கு ஒரு பொண்ணப் புடிச்சிருக்கு” என்ற உடன் பாக்கியம், “டேய் ருத்ரா, என்ன பேசுற?” என்றார்.
செல்வம் அமைதியாகத் தனது தங்கையைப் பார்த்துவிட்டு, “நீ சொல்லுப்பா…” என்றார்.
“இல்ல மாமா, வீட்ல என் கல்யாணத்தைப் பத்திப் பேசும் போது இதைப் பத்திப் பேசலாம். இப்ப என்ன அவசரம் அப்படின்ற மாதிரி நான் யோசிச்சேன். ஆனா, நீங்க இப்ப என் கல்யாணத்தைப் பத்திப் பேசினது மட்டும் இல்லாம, அதுவும் நம்ப தமிழ் தான் பொண்ணுனு சொன்னதால தான் மாமா நான் இப்பயே, பேச வேண்டியதா இருக்கு.
தப்பா எடுத்துக்காதீங்க, எனக்குத் தமிழைப் பிடிக்கும். எனக்கு தனா, காயு எப்படியோ, அது மாதிரி தான் தமிழும். இதுவரைக்கும் தமிழை நான் அந்த மாதிரி யோசிச்சதில்லை. தனியாப் பார்த்தில்லை. தப்பா எடுத்துக்காதீங்க. தமிழுக்கு வேற இடம் பாருங்க, என் மனசுல ஒரு பொண்ணு இருக்கு” என்றவுடன் வேகமாக பாக்கியம் தனது மகனை அடிக்கப் போனார்.
குறுக்கே வந்த தனம் தான், “பாக்கியம் என்ன பண்ணிட்டு இருக்க நீ…”
“அண்ணி, இங்கப் பாருங்க, இவன் என்ன பேச்சுப் பேசறான், அண்ணனும் அமைதியா இருக்காங்க.”
“அவன் பேசுறது ஒன்னும் தப்பு இல்லையே பாக்கியம், அவன் மனசுல இருக்கறத அவன் சொல்றான். அவன் ஒரு பொண்ண விரும்புறது தப்பான விஷயம் கிடையாது. நம்ம பெரியவங்களா பேசினோம். அவங்க ரெண்டு பேத்துக்கும் கல்யாணம் பண்ணி வைக்கலாம்னு சொல்லிட்டு இருந்தோம்.”
“அண்ணி, அதுக்கு தான் நான் தமிழ் வந்தா இந்த வீடு நல்லா இருக்கும். அவனையும் நல்லாப் பார்த்துப்பா, என்னையும், தனாவையும் கூட நல்லாப் பார்த்துப்பானு தான் அண்ணி…”
“பாக்கியம், நான் ஒன்னு சொல்லட்டா. தமிழு இல்ல, வேற எந்தப் பொண்ணு வந்தாலும் உங்களை நல்லாப் பார்த்துக்கும். அப்படி இல்லனாலும், நான் இருக்கேன், உன் அண்ணா இருக்காரு. அப்புறம் என்ன உனக்குக் கவலை. நம்ம புள்ளையோட வாழ்க்கை பாக்கியம் இது, நம்ம வாழ்ந்து முடிச்சிட்டோம். நம்ம பிள்ளைகளோட வாழ்க்கை, அவங்க ஆசைப்பட்ட மாதிரி அவங்கள வாழ வைக்கணும்.”
“நீங்களும் இப்படிப் பேசுறீங்க அண்ணி.”
“நான் எதுவும் தப்பா பேசல, ருத்ரா இவ்ளோ தூரம் சொல்லிட்டான். அவன் மனசுல ஒரு பொண்ணு இருக்கு, விரும்புறேன்னு… தமிழுக்கு ஃபர்ஸ்ட் முடிச்சுட்டு கூட எனக்குப் பாருங்கன்னு சொல்றான். அவன் ஒன்னும் தப்பா சொல்லலையே. அவனோட விருப்பத்தை அவன் சொல்றான். மேற்கொண்டு நம்ம என்ன பண்ணனும்னு நாம தான் யோசிக்கணும்” என்றார் தனம்.
“மாமா…” என்று தனது மாமாவின் கையைப் பிடித்து நின்றான் ருத்ரன்.
“ஒன்னும் இல்லப்பா…” என்று லேசாக அவனது கையைத் தட்டி விட்டு, “என் மகள் வந்தா நல்லா இருக்கும்னு யோசிச்சேன். மத்தபடி வேற எதுவும் இல்ல, உன்னோட விருப்பத்தைச் சொல்ற உரிமை உனக்கு இருக்கு. அந்தப் பொண்ணு என்ன பண்ணுதுன்னு சொல்லு, நம்ம அவங்க வீட்ல போய் பேசலாம்” என்று கேட்டார்.
“இல்ல மாமா, கொஞ்ச நாள் போகட்டும். நீங்க தமிழுக்குப் பாருங்க” என்றான்.
“தமிழ் உன்ன விட மூணு வருஷம் சின்னவடா, உனக்கு முடிச்சுட்டு, தமிழுக்குப் பண்ணிக்கலாம், ஒன்னும் பிரச்சனை இல்ல. நீ அந்தப் பொண்ணு என்ன பண்ணுது, என்னன்னு சொல்லு” என்றவுடன்,
“என் கூடப் படித்த பொண்ணு தான் மாமா. தமிழ் வயசு இருக்கும்” என்றான்.
அந்தப் பொண்ணோட பெயர் என்ன? என்று கேட்க, “ஆனந்தி” என்றான்.
“சரிப்பா, அவங்க அப்பா அம்மா, என்ன ஊரு, என்ன பண்றாங்க?” என்று கேட்க,
“மாமா, இதப் பத்தி நாம பொறுமையா பேசலாம். நீங்க எதோ முக்கியமா பேசணும்னு சொன்னதால தான் நான் இருந்தேன். வேலைக்கு லேட்டாகுது” என்றான்.
“சரிப்பா நீ வேலைக்குப் போயிட்டு வா, நம்ம இதப்பத்தி பொறுமையா பேசலாம்” என்று விட்டு அவனை அனுப்பி வைத்தார் செல்வம்.
தனது தங்கை மகன் தான், மருமகன் தான், இருந்தாலும் அவருக்கும் சிறிது கஷ்டமாகத்தான் இருந்தது.
தன் மகளைத் தனது தங்கை மகனுக்கு மணமுடித்து வைக்கலாம் என்று எண்ணினார்.
அவர் சொத்து பத்துக்காக அவ்வாறு எண்ணவில்லை. தனக்குப் பின்பும் கூட தனது தங்கையையும், பிள்ளைகளையும் நன்றாகப் பார்த்துக் கொள்ள நம்பிக்கையான ஒரு ஆள் வேண்டும் என்று எண்ணினார்.
அதற்குத் தன் மகள் அந்த வீட்டிற்கு மருமகளாகச் சென்றால் நன்றாக இருக்கும் என எண்ணினார்.
இப்பொழுது, அதற்காகத்தான் தனது தங்கை மகன் ருத்ரனிடம் பேசச் செய்தார். ஆனால், அவன் மனதில் ஒரு பெண் இருக்கிறது என்றவுடன் இதைப் பற்றி இனிமேல் யோசிப்பது சரியல்ல என்று எண்ணி வருந்தினார்.
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


Nice flow… ✨