
ரகசியம் – 66
அழைப்பை ஏற்றவள், “சொல்லு அமுது”
“அன்பு.. நான் நாளைக்கு ஷூட் விஷயமா பாண்டிச்சேரி போறேன்.. சரியா” என்க அன்றும் இவன் பாண்டிச்சேரி போவதாக தானே கூறினான்.. ஒருவேளை அங்கு தான் மதுரனை சந்தித்திருப்பானோ என்றபடி சிந்திக்க,
“அன்பு லைன்ல இருக்கியா..” என்று கேட்க தன் யோசனையை சரிதானா என்று சோதிக்கும் பொருட்டு,
“அமுது.. நானும் உன்கூட வரவா.. நான் பாண்டி போனதே இல்ல.. போகணும்னு ஆசை” என்க அறிவுக்கு தூக்கிவாரிபோட்டது.
‘அயோ என்ன இவ திடீர்னு இப்படி கேக்குறா… நான் இவள கூட்டிட்டு போனா.. மதுரன் கிட்ட எப்படி பேசுவேன்’ என்று நினைத்தவன்,
“இல்ல இல்ல அன்பு.. உன்னை இன்னொரு கூட்டிட்டு போறேன்.. நாளைக்கு கஷ்டம் அன்பு சாரி” என்க இனியாவுக்கு உறுதியானது. பிறகு,
“சரி டா திருட்டுப்பயலே.. நீ போய்ட்டு வா.. வீட்டுல இருந்து கிளம்பும் போது எனக்கு கால் பண்ணி சொல்லிட்டு போ சரியா..” என்று அவனின் அழைப்பைத் துண்டிதவள் மதுவிடமும் மாறனிடமும் விஷயத்தைக் கூற பிறகு மதுவும் மாறனும் நாளை வீட்டில் ஏதேனும் சாக்கு கூறி அறிவைப் பின்தொடர்ந்து பாண்டிச்சேரி செல்ல முடிவு செய்ய இனியாவோ,
“டேய் டேய் நானும் வரேன் டா ப்ளீஸ்” என்க பிறகு மூவரும் செல்ல முடிவு செய்தனர். மறுநாள் விடிய அறிவு எப்பொழுது கிளம்புவான் என்று தெரியாத மூவரும் வீட்டில் ஷூட் விஷயமாக பாண்டிச்சேரி செல்கிறோம் என்று கூறி 5 மணிக்கே கிளம்பி தயாராக இருந்தனர். இனியா கிளம்பும் போதே தானும் கிளம்பிய விழி,
“ஹே ப்ளீஸ் டி நானும் வரேன்..” என்று கெஞ்ச இனியாவும்,
“எதே நீயுமா.. சரி வந்து தொல” என்க அவளும் செல்வதாக முடிவு செய்யப்பட்டது. சரியாக ஏழு மணிக்கு இனியாவிற்கு அழைப்பு விடுத்தான் அறிவு.
“அன்பு.. நான் வீட்டுல இருந்து கிளம்ப போறேன் டா.. பாய்”
“ஓகே டா.. பார்த்து போ.. ஆமா எதுல போற..”
“ட்ரைன்ல தான் அன்பு.. நாலு மணிநேரத்தில போயிரலாம்” என்றவன் அழைப்பைத் துண்டிக்க மது மற்றும் மாறனிடம் தகவலைப் பகிர்ந்தவள் தானும் விழியை அழைத்துக்கொண்டு கிளம்பினாள். தன் தந்தையிடம்,
“அப்பா.. விழியையும் கூட்டிட்டு போறேன் பா.. எனக்கு ஹெலப்பா இருப்பா” என்க அவரும் சரியென்றுவிட்டார். இருவரும் ரயில் நிலையத்திற்கு செல்ல சரியாக மதுவும் மாறனும் வந்து சேர்ந்தனர். விழியை எதிர்பார்க்காத மாறனோ,
“ஹே இமை.. நீயும் வரியா.. சூப்பர்” என்றவனின் உள்ளம் தானாகவே உற்சாகமானது. பாவம் அவன் தான் அதனை அறியவில்லை. நால்வரும் பயணச்சீட்டு எடுத்துவிட்டு வண்டியில் ஏற மதுவோ,
“காய்ஸ்.. ஒருவேளை அறிவு இவ கிட்ட சும்மா சொல்லிருந்தா என்ன செய்ய.. அவனும் ட்ரைன்ல தான் இருக்கானான்னு எப்படி கண்டுபிடிக்க” என்று கேட்க அப்பொழுது சரியாக ரயில் நிலையத்தில் உள்ள ஒலிபெருக்கி ஒலிக்க விழிக்கு ஒரு யோசனைத் தோன்றியது.
“வெயிட் அ மினிட்” என்றவள் தன் அலைபேசியில் அறிவுக்கு அழைத்து,
“ஹாய் மாம்ஸ்.. பாண்டி போறீங்களாமே.. இனியா சொன்னா..” என்று பேச்சு கொடுக்க அவன் புறமும் ஒலிபெருக்கியின் குரல் கேட்ட்டது. தன் கட்டைவிரலை தூக்கி மற்ற மூவரிடமும் அறிவு இங்கு தான் இருப்பதாக கூறினாள்.
“ஆமா விழி.. ஏன் கேக்குற” என்று அறிவு கேட்க அப்பொழுது ஒலிப்பெருக்கியின் குரல் விழியின் அலைபேசியில் இருந்து அறிவுக்கும் கேட்க,
“விழி.. நீயும் ரயில்வே ஸ்டேஷன்லயா இருக்க” என்று கேட்க அப்பொழுது தான் விழிக்கு,
‘அட ச்சே.. மண்டமேல இருக்க கொண்டய மறந்துட்டோமே’ என்று தோன்றியது. பிறகு சட்டென யோசித்தவள்,
“ஆமா மாம்ஸ்.. ஃபிரண்ட் ஒருத்தி ஊருக்கு போறா.. அவளை ட்ராப் பண்ண வந்தேன்.. நீங்களும் ட்ரைன்ல போறீங்கன்னு இனியா சொன்னாளா.. அதான் சரி மீட் பண்ணலாமே கால் பண்ணேன்” என்று கூறி சமாளிக்க அவனும் அதை நம்பி,
“அப்படியா சரி விழி.. நான் ட்ரைன்ல எறிட்டேன்.. நீ பார்த்து வீட்டுக்கு போ” என்றவன் அழைப்பைத் துண்டித்தான். மாறனோ,
“அரலூஸா இருந்தாலும் பரவாயில்ல கொஞ்சம் அறிவு இருக்கு என்ன” என்று இமையை கலாய்க்க அவள் முறைத்தாள். அவள் முறைப்பை ரசிக்குறோம் என்று தெரியாமலே ரசித்தான் மாறன்.
மதுரனைத் தேடி அவர்களது பாண்டிச்சேரி பயணம் ஆரம்பமானது. நான்கு மணிநேர பயணத்துக்கு பிறகு பாண்டிச்சேரி வந்துவிட முகத்தில் மாஸ்க்கும் தலையில் மாறன் தொப்பியும் பெண்கள் துப்பட்டாவும் அணிந்தபடி நால்வரும் இறங்கினர் அறிவு தங்களைப் பார்த்துவிட கூடாது என்று. வண்டியில் இருந்து இறங்கிய அறிவு ஆட்டோ பிடித்து ஒரு ஹோட்டலுக்கு செல்ல அவனைப் பின் தொடர்ந்து நால்வரும் சென்றனர்.
மதுரன் அறிவை ஒரு உணவகத்திற்கு வர சொல்ல அங்கு வந்த அறிவு மதுரன் அமர்திருக்கும் மேஜையில் அவனுக்கு எதிரே அமர்ந்தான். அவனைப் பின்தொடர்ந்து வந்த மற்ற நால்வரும் அவர்கள் மேஜைக்கு பின்னே இருக்கும் மேஜையில் அமர்ந்துக் கொண்டனர். அனைவரும் முகத்தில் மாஸ்க்கும் தலையில் தொப்பி மற்றும் துப்பட்டாவை அணிந்திருக்க அறிவுக்கு எதிரே அவர்கள் இருந்தாலும் அவனால் அடையாளம் கண்டுகொள்ள இயலவில்லை.
முழுதாக ஒரு வருடம் கழித்து தன்னவனைக் கண்ட மதுவுக்கு தானாக கண்கள் கலங்க அவளின் கையை ஆதரவாக பற்றினான் மாறன்.
“என்ன மச்சான்.. இப்போ அப்பா எப்படி இருக்காங்க” என்று அறிவு கேட்க,
“அப்படியே தான் டா இருக்காங்க” என்க அறிவோ எதையோ சிந்தித்தவன்,
“ஆமா மச்சான் கேட்கணும்னு நெனச்சேன்.. அப்பாக்கு எதனால தான் இப்படி உடம்பு முடியாம போகுது.. என்ன தான் பிரச்சனை”
“அது பெரிய கதை டா.. ஆக்சுவலி அத சொல்ல தான் இன்னைக்கு வர சொன்னேன்..”
“அதை சொல்ல வர சொன்னியா.. அப்போ மதுவை விட்டு ஏன் நீ விலகி வந்தங்குற காரணத்தை சொல்ல வர சொல்லலையா” என்று தெரிந்தும் தெரியாதது போன்று குழப்பமாக கேட்க அதற்கு மதுரனோ,
“எல்லாத்துக்கும் அந்த ஒரு கதைல தான் டா பதில் இருக்கு.. யார்கிட்டயும் சொல்ல கூடாதுன்னு தான் நெனச்சுருந்தேன்.. ஆனா அன்னைக்கு நீ அவ்ளோ கேட்ட அப்றம் எனக்கு மனசு கேட்கல.. சரி எனக்கும் என் மனசுல இருக்குற பாரத்தை கொட்டுன மாதிரி இருக்குமேன்னு தான் வர சொன்னேன்..” என்க அறிவோ,
‘மதுவுக்கு விஷயம் தெரிஞ்சுட்டுன்னு இப்போவே இவன்கிட்ட சொல்லிடுவோமா’ என்று யோசித்தவன்,
“மச்சான்.. நீ சொல்ல போற விஷயம் எனக்கு தெரியும் டா ஏற்கனவே” என்று கூற அவனைப் புரியாமல் பார்த்த மதுரன்,
“என்ன அறிவு சொல்ற.. ஏற்கனவே தெரியுமா.. புரியல.. இது எப்படி உனக்கு தெரியும்”
“மது சொன்னா டா” என்று கூறவும் மதுரனின் கண்கள் அதிர்ச்சியாக நோக்கியது அறிவை.
“என்ன மச்சான் சொல்ற.. தூரிகா சொன்னாளா.. அப்போ அவளுக்கு எல்லாம் தெரிஞ்சுடுச்சா”
“ஆமா மச்சான் தெரிஞ்சுடுச்சு.. மாறன் அப்பா அம்மா அவங்க ரெண்டு பேருக்கும் நடந்த எல்லாத்தையும் சொல்லிட்டாங்க.. அவங்க ரெண்டு பேரு தான் நேத்து எனக்கு அன்புக்கு விழிக்கு மூணு பேருக்கும் சொன்னாங்க.. சொல்ல போனா நீ எனக்கு கால் பண்ணும்போது அங்க தான் இருந்தேன்.. ஜஸ்ட் மிஸ்ல நீ தப்பிச்ச.. நீ தான் பேசுனன்னு தெரிஞ்சுருக்கும்.. எப்படியோ சமாளிச்சுட்டேன்” என்று கூற மதுரன் அதனைக் கவனிக்கும் மனநிலையில் இல்லை. தலையில் கைவைத்து எதையோ யோசித்து கொண்டிருந்தான். அவனை உலுக்கிய அறிவோ,
“என்ன மச்சான்.. என்னாச்சு”
“டேய் அறிவு.. தூரிகாக்கு எல்லாமே தெரிஞ்சுடுச்சா.. என்னை வெறுத்துட்டாளா அப்போ.. அவளும் ரொம்ப துடிச்சு போயிருப்பாளே” என்று கலக்கமாய் கேட்க அறிவோ,
“உன்ன ஏன் மச்சான் அவ வெறுக்கப்போறா.. உங்க காதல் இனிமே நிறைவேறாதுன்னு நெனச்சு தான் அழுதா”
“நிஜமாவா மச்சான் சொல்ற.. அவ என்னை வெறுக்கல தான”
“டேய் லூசு.. உன் அப்பா செஞ்ச தப்புக்கு அவ ஏன் டா உன்ன வெறுக்க போறா.. உங்க அப்பா மேல தான் கொலை காண்டுல இருக்கா” என்க மதுரனின் முகம் மாறியது.
“டேய் எங்க அப்பா என்ன டா தப்பு செஞ்சாரு..”
“என்ன மச்சான் நீ உன்ன என்னமோன்னு நெனச்சுருந்தேன்.. கடைசில நீயும் சராசரி மனுஷன் மாதிரி நடந்துக்குற.. தப்பு செஞ்சது உங்க அப்பான்னு உனக்கு நல்லாவே தெரியும்.. அப்புறம் ஏன் உங்க அப்பா மேல கோபப்படாம இன்னும் வக்காலத்து வாங்குற.. தப்பு யார் செஞ்சாலும் தப்பு தான்னு வசனம் பேசுறது எல்லாம் ஊருக்கு தானா” என்று அறிவு சற்று கோபமாக கேட்க அவன் கேள்வியில் கோபமுற்ற மதுரன்,
“டேய் அறிவு.. நீ பாட்டுக்கு உண்மை தெரியாம ஏதாவது உளறாத.. எங்க அப்பா தப்பு செய்யல.. செய்யல செய்யல.. போதுமா” என்க அதற்கு மேல பொறுக்கமுடியாத மது,
“சபாஷ் மதுரன் சபாஷ்.. என்ன ஒரு பாசம் பெத்தவர் மேல” என்று கண்களில் வெறுப்பும் வார்த்தைகளில் ஏளனமும் தெறிக்க எழுந்தாள் மதுரிகா.. அவளோடு சேர்ந்து மற்ற மூவரும் எழுந்து நிற்க திடீரென அவர்களை அங்கு கண்டதும் அறிவு அதிர்ச்சியாக மதுரனோ,
“தூரிகா” என்று உச்சரித்தபடி கண்ணீர் வடித்தான்.
“இன்னொரு தடவ என்னை அப்படி கூப்பிடாத.. இங்க வரும் போது உன்மேல் வெறுப்பு இல்ல… ஆனா எப்போ உன் அப்பா தப்பு செய்யலன்னு சொன்னியோ அப்போவே வெறுத்துட்டேன் உன்னை.. அறிவு சொன்ன மாதிரி நீ நியாயஸ்தன்னு தான் நெனச்சேன்.. ஆனா நீ ஊருக்கு மட்டும் உபதேசவாதின்னு இப்போ நல்ல புரிஞ்சுக்கிட்டேன்” என்று வார்த்தைகளை கடித்து துப்ப மதுரனோ,
“உண்மை தெரியாம பேசாத டி.. இப்போவும் சொல்றேன் என் அப்பா தப்பு பண்ணல”
“என்ன உண்மை தெரியணும் மிஸ்டர் மதுரன்.. எல்லா உண்மையும் தெரிஞ்சு தான் வந்துருக்கேன்.. உங்க அப்பா செஞ்ச ஒரு கேவலமான காரியாத்தால நம்ம காதல் இப்போ கலங்கமாகிக் கிடக்கு அது உனக்கு பெருசாவே தெரியலல.. உங்க அப்பா தப்பு செஞ்சதுனால தான நீ நம்ம காதலை வேணாம்னு அன்னைக்கு சொல்லிட்டு பிரிஞ்சு போன.. உங்க அப்பா உத்தமர்னா அப்போ எதுக்கு நம்ம காதலை நீ வேணாம்னு சொன்ன..”
“தூரிகா அது..” என்று அவன் கூறுவர அவனது அழைப்பில் மது முறைக்க பிறகு,
“சரி விடு.. இங்க பாரு மது.. நான் நம்ம காதல வேணாம்னு விட்டு போனதுக்கு காரணம் வேற.. அதுக்கும் எங்க அப்பாக்கும் சம்மந்தம் இருக்கு தான்.. ஆனா நீ நெனைக்குற மாதிரி எங்க அப்பா தப்பு செய்யல”
“போதும் நிறுத்து மதுரன்.. உங்க அப்பா தப்பு பண்ணாம பின்ன எங்க அப்பாவா தப்பு பண்ணாரு”
“நீ சொன்னாலும் சொல்லலனாலும் அது தான் மது நிஜம்.. உன் அப்பா பிரபாகரன் தான் தப்பு செஞ்சாரு” என்று கூறவும் பத்திரகாளியாக மாறிவிட்டாள் மதுரிகா..
ரகசியம் – 67
“வாய மூடு மதுரன்.. இன்னொரு தடவ என் அப்பா பத்தி பேசுன அவ்ளோ தான் சொல்லிட்டேன்.. உன் அப்பன் ரத்தத்துல நான் வந்தேங்குறதுக்காக உன்ன மாதிரி உன் அப்பனுக்கு ஜால்றா போடுவேன்னு நினைக்காத” என்று கூறி முடிக்கவும்,
“என்ன வார்த்தை டி சொன்ன நீ” என்றபடி மதுரனின் விரல்கள் மதுரிகாவின் கன்னத்தைப் பதம் பார்த்தது. அதனைக் கண்டு வெகுண்டெழுந்த மாறனோ,
“யார் மேல டா கைய வச்ச” என்றபடி மதுரனின் சட்டையை பிடிக்க மதுரனோ,
“அவ என் அப்பா பத்தி தப்பா பேசுவா.. நான் கேட்டுகிட்டு இருக்கணுமா” என்றபடி மதுரனும் மாறனின் சட்டையைப் பிடிக்க இருவருக்குள்ளும் சண்டை ஏதேனும் பெரிதாகிவிட கூடாது என்று அவர்கள் நடுவில் சென்று அவர்களைப் பிரித்தாள் மது.
“மாறா விடு டா.. இவ்ளோ நாள் அவனை காதலிச்சதுக்கு தண்டனையா அந்த அறைய வாங்கிட்டு போறேன் விடு” என்றபடி மாறனைப் பிடித்து இழுத்து அமர வைத்தாள்.
“இங்க பாரு மது நான் உன்ன அடிச்சுருக்க கூடாது தான் சாரி.. ஆனா நான் சொல்ல வரத கொஞ்சம் கேளு” என்றிட அவளோ கண்டுகொள்ளாமல் நின்றாள். மாறனிடம் திரும்பியவன்,
“டேய் மாறா ப்ளீஸ் டா நீயாச்சு நான் சொல்றத கேளு.. நீங்க எல்லாரும் தப்பா புரிஞ்சுட்டு இருக்கீங்க..” என்று கூற,
“என்ன டா தப்பா புரிஞ்சுட்டு இருக்கோம்.. அன்னைக்கு உன் அப்பா மதுவோட அம்மாவை ஏமாத்துனாரு.. இன்னைக்கு நீ மதுவை ஏமாத்துற.. இவ்ளோ பேசுறவன் அன்னைக்கு இதான் விஷயம்னு உண்மையை சொல்லிட்டு போயிருந்தா என் மது இவ்ளோ அழுதுருப்பாளா.. விஷயம் வெளிய தெரிஞ்சா உன் அப்பாக்கு அசிங்கம்னு தான கமுக்கமா ஓடிட்ட” என்று மாறன் கோபத்தின் உச்சத்தில் கேட்க,
“மாறா என்னால ரொம்ப எல்லாம் பொறுமையா இருக்க முடியாது சொல்லிட்டேன்.. எல்லாம் ஒரு லிமிட் தான்.. உண்மை தெரியாம வாய்க்கு வந்தபடி பேசுனா அப்புறம் வேற மாதிரி ஆகிடும்” என்று மதுரன் எச்சரிக்கை விடுக்க மாறன் மீண்டும் சண்டையிட எத்தனிக்க அவனைத் தடுத்த மதுவோ,
“மாறா இரு.. சார் ஏதோ உண்மை உண்மைன்னு பினாத்துறாரு.. என்னன்னு தான் கேட்போமே.. அப்போ தான யார் மூக்கு உடைய போதுன்னு தெரியவரும்..” என்றவள் மதுரனிடம் திரும்பி,
“மிஸ்டர் மதுரன்.. நீங்க உண்மைன்னு நெனச்சுட்டு இருக்குற விஷயத்தை முதல்ல சொல்லுங்க.. அப்புறம் தெரியும் உங்களுக்கு எது உண்மைன்னு” என்று கேட்டபடி மது அமர மாறனும் அமர மற்ற மூவரும் பதற்றத்தோடும் கேள்வியோடும் அமர மதுரனும் அவர்கள் எதிரே அமர்ந்து கூற ஆரம்பித்தான்.
——————————————-
இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பு,
வசீகரன்.. வசதியான குடும்பத்தில் பிறந்து வளர்ந்த செல்வந்தர். வசீகரனுக்கு சிறுவயதில் இருந்தே தான் பெரிய நடிகராக வேண்டுமென்ற ஆசை ஏகமாய் இருந்தது. அதனால் தன் குடும்பத்தை விட்டு பிரிந்து கல்லூரி படிப்பிற்காக சென்னை வந்தார்.
கல்லூரியில் தான் வசீகரனுக்கு பிரபாகரனின் நட்பு கிடைத்தது. வசீகரனுக்கு பிரபாகரனை மிகவும் பிடிக்கும். தன் உற்ற நண்பனாய் கருதி தன் ஏழை நண்பன் பிரபாகரனுக்கு அனைத்து உதவிகளும் செய்தார். பிரபாகரனும் வசீகரனிடம் நட்பு பாராட்டினார். அவர்கள் நட்பு ஆழமாக ஆழமாக வசீகரன் தன் குடும்ப பின்னணி பற்றியும் தனது ஆசைப் பற்றியும் பகிர்ந்து கொண்டார். ஆனால் வசீகரன் அவற்றைக் குறித்து அடிக்கடி பேசுவதைக் கேட்ட பிரபாகரனின் மனதில் தானும் நடிகனாக வேண்டும் என்றும் நடிகனாகிவிட்டால் வசீகரனின் குடும்பத்தைப் போன்று பெரிய பணக்காரனாகி விடலாம் என்ற எண்ணமும் தோன்ற ஆரம்பித்தது.
அவ்வாறு அவர்களின் நட்போடு கல்லூரி முதலாமாண்டு சிறப்பாக முடிய இரண்டாம் ஆண்டில் கால் வைத்தனர் இருவரும். அப்பொழுது இவர்களின் கல்லூரியில் இவர்களுக்கு ஜூனியராக வசீகரனின் தங்கை விஜயாவின் உயிர் தோழி பானு வந்து சேர்ந்தார். அடிக்கடி விஜயாவின் வீட்டிற்கு சிறுவயது முதலே சென்று வந்து கொண்டிருக்கும் பானுவிற்கு வசீகரனின் மேல் ஒரு ஈர்ப்பு ஏற்பட்டது. நாளடைவில் அது ஒருதலைக் காதலாக மாற இப்பொழுது வசீகரனைப் பார்க்காமல் இருக்க முடியாமல் அவர் சேர்ந்த அதே கல்லூரியில் வந்து சேர்ந்துவிட்டார் பானு.
வசீகரன் அளவிற்கு இல்லையென்றாலும் பானுவின் குடும்பமும் ஓரளவு வசதி படைத்தது தான். தன் தங்கையின் தோழி ஆதலால் வசீகரன் பானுவிடம் நன்றாக பேசினார். இருவரும் நெருக்கமானார்கள். ஆனால் பிரபாகரனுக்கும் பானுவின் மேல் ஓர் ஆசை இருந்தது. அந்த ஆசைக்கு பானுவின் வசதி படைத்த குடும்பமும் காரணமும். வசீகரனைக் காரணமாய் வைத்து பிரபாகரனும் பானுவிடம் அடிக்கடி பேச தொடங்கினார். ஆனால் பானுவோ வசீகரனிடம் மட்டும் நன்றாக பேசிவிட்டு பிரபாகரனிடம் அளவோடு மட்டும் பேசி வந்தார். ஏனோ அது பிரபாகரனுக்கு வசீகரனின் மேல் ஓர் வெறுப்பை உண்டாக்கியது.
பின் ஒருநாள் என்ன நடந்தாலும் சரி பானுவிடம் தன் விருப்பதைக் கூறி பேசி சமாளித்து அவரை சம்மதிக்க வைக்கலாம் என்ற எண்ணத்தோடு பானுவை ஒருநாள் தனியாக சந்தித்து பேச பானுவோ தான் வசீகரனை பல வருடங்களாக காதலிப்பதாகவும் அவருக்காக தான் இக்கல்லூரியில் சேர்ந்திருப்பதாகவும் கூறிவிட பிரபாகரனுக்கு வசீகரனின் மேல் இருந்த நட்பு முற்றிலும் காணாமல் போய் வெறுப்பும் கோபமும் அதிகரிக்க தொடங்கியது. பிரபாகரன் வசீகரனின் நண்பன் என்பதால் அவர் தன்னிடம் விருப்பத்தைக் கூறியது பற்றி பானுவும் வசீகரனிடம் கூறவில்லை. தன்னால் அவர்களின் நட்புக்குள் விரிசல் விழவேண்டாம் என்று யோசித்து.
ஏற்கனவே தன்னைவிட எல்லாவற்றிலும் வசீகரன் உயர்ந்தவனாக இருக்கிறான் என்ற பொறாமை வேறு பிரபாகரனுக்கு இருந்தது. அதோடு சேர்த்து பானு தனக்கு கிடைக்காமல் போவதற்கு காரணமும் வசீகரன் தான் என்று நினைக்க நினைக்க பிரபாகரனின் மனதில் கோபக்கனல் கொளுந்துவிட்டு எரிந்தது.
வசீகரன் பணக்காரனாக இருப்பது தான் பானு அவனைக் காதலிப்பதற்கு காரணம் என்று தவறாக புரிந்துகொண்ட பிரபாகரனுக்கு எப்படியாவது ஓரிரு வருடத்தில் தான் பணக்காரன் ஆக வேண்டும் என்ற பேராசை தோன்ற கல்லூரி முடிந்து மீதம் இருக்கும் நேரங்களில் கஞ்சா போதை மருந்து போன்ற பொருட்களை பிறருக்கு கொண்டு சேர்ப்பது போன்ற தவறான வழிகள் பலவற்றில் ஈடுபட்டு வந்தார். அவரின் அதிர்ஷ்டமோ என்னவோ போலீஸிடம் சிக்காமல் நேர்த்தியாக பலமுறை தப்பித்து வந்தார்.
நாட்கள் செல்ல பானு தனது காதலை வசீகரனிடம் கூறிவிட அவரும் பானுவின் காதலை ஏற்றுக்கொள்ள பிரபாகரனைத் தனியே விட்டுவிட்டு காதல் ஜோடியாக வலம் வர தொடங்கினர். அதனைக் காண பொறுக்காத பிரபாகரன் அவர்களை சந்திப்பதைக் கைவிட்டு அடிக்கடி கல்லூரி விடுப்பும் எடுத்துக்கொண்டு முழு நேர பணியாக பணக்காரன் ஆகும் பேராசையில் பல சட்டத்திற்கு புறம்பான வேலைகளில் ஈடுபட்டார்.
ஒருபுறம் வசீகரன் மற்றும் பானுவின் காதல் படிப்படியாக வளர மறுபக்கம் தவறான வழிகள் மூலம் மிக விரைவாகவே பிரபாகரனின் பணவசதி அதிகரிக்க தொடங்கியது. வசீகரன் பிரபாகரனை ஏன் அடிக்கடி விடுப்பு எடுக்கிறாய் இப்பொழுதெல்லாம் என்னை சந்திக்க மறுக்கிறாய் என்று கேள்விகள் கேட்டாலும் அதற்கு தன் தந்தையின் தொழிலைக் கவனிப்பதால் தனக்கு நேரமில்லை என்று பொய் கூறி சமாளித்துவிடுவார். தொழில் என்று கூறியதால் வசீகரனும் பிரபாகரனைப் பெரிதாக அதன்பின் கேள்வி கேட்பதில்லை.
நாட்கள் வேகமாக செல்ல மூவரின் கல்லூரி படிப்பு முடிந்தது. அவ்வப்போது நடிப்பு பட்டறை சென்று நடிக்க வாய்ப்பு கேட்டு இறங்கிய வசீகரனுக்கு அவரின் வாட்டசாட்டமான உடலும் அழகிய கேசமும் பொலிவான முகமும் அவருக்கு அந்த வாய்ப்பை அளித்தது. அறிமுக இயக்குனர் ஒருவர் வசீகரனுக்கு வாய்ப்பளிக்க குறுகிய பட்ஜெட் கொண்ட படத்தில் நடிகராக தேர்வு செய்யப்பட்டார் வசீகரன். பிரபாகரனின் வேண்டுகோளுக்கு இணங்க அவரை இயக்குனரிடம் அறிமுகம் செய்து வைக்க இயக்குனரோ பிரபாகரனின் ஆஜானுபாகுவான உடலையும் எப்பொழுதும் விறைப்பாக இருக்கும் அவரின் முகத்தையும் பார்த்து அப்படத்திலேயே வில்லன் கதாபாத்திரத்தை நடிக்கும்படி கூற,
‘அவன் மட்டும் ஹீரோ.. நான் வில்லனா..’ என்று நினைத்த பிரபாகரன் பிறகு இதன் மூலம் முதலில் சினிமா துறையில் காலடி வைப்போம்.. பிறகு கதாநாயகனாகிக் கொள்ளலாம் என்று நினைத்து ஒப்புக்கொண்டார். படப்பிடிப்பு தொடங்கியது.
திடிரென்று படத்தில் நடிக்க இருந்த கதையின் நாயகி நடிக்க முடியாமல் போக அவ்வப்போது வசீகரனோடு அங்கு வரும் பானுவைக் பார்த்திருந்த இயக்குனருக்கு அவரை நாயகியாக நடிக்க வைக்கலாம் என்ற எண்ணம் தோன்ற அதனை வசீகரனிடம் கூறி பானுவின் சம்மதத்தையும் பெற்றுவிட படப்பிடிப்பு ஆரம்பமானது.
‘நிஜத்துலயும் சரி கதைளையும் சரி இவங்க ரெண்டு பேரும் எனக்கு எதிராவே வராங்க ச்சே’ என்று நினைத்து பொருமிக்கொண்டார் பிரபாகரன். படப்பிடிப்பு முடிந்து படமும் திரையரங்கில் ஓட மக்களிடம் பலத்த வரவேற்பைப் பெற்று தந்தது. மூவருமே அவரவர் கதாபாத்திரங்களை மிக சிறப்பாக நடித்திருந்தனர்.
அதுவும் பிரபாகரனின் வில்லத்தனம் மக்களிடையே பெரிதும் பேசப்பட்டது. அந்த படத்தின் விளைவாய் அடுத்து அடுத்து வசீகரன் மற்றும் பானு ஜோடியில் படம் உருவாக பிரபாகரனுக்கு வில்லன் கதாபாத்திரம் மட்டுமே கிட்டியது.
பிறகு ஒரு இயக்குனருக்கு பணம் கொடுத்து தன்னை நடிகராக வைத்து படம் எடுக்க வேண்டும் என்றும் தனக்கு ஜோடியாக பானுவை நடிக்கவைக்க வேண்டும் என்றும் திட்டம் தீட்ட பானுவோ வசீகரனைத் தவிர்த்து வேறு யாருடனும் நடிக்க மாட்டேன் என்று கூறிவிட்டார். ஆனால் பிரபாகரனின் மறுபக்கம் அறியாத வசீகரனோ கிடைத்த வாய்ப்பை எப்பொழுதுமே கைவிட கூடாது என்றும் பானுவும் பெரிய நடிகை ஆக வேண்டும் என்ற ஆசையிலும் அவரைப் பிரபாகரனுடன் நடிக்க கூறினார்.
பிரபாகரனும் தன்னை நல்லவன் போன்று சித்தரித்து கண்ணியமாக நடிப்பது போன்று காண்பித்து பானுவின் மனதில் தன்னைப்பற்றி ஒரு நல்ல எண்ணத்தை விதைதான். பானுவும் அவனை நம்பினார். அவர்களது ஜோடியில் ஒரு படம் உருவானது. ஆனால் அது பெரிதாக வரவேற்பை பெறவில்லை. மக்கள் அனைவரும் வசீகரன் பானு ஜோடியைப் பற்றி தான் பேசினர்.
இவ்வாறாக நாட்கள் செல்ல வசீகரன் ஒருமுறை படப்பிடிப்பிற்காக வெளிநாடு சென்றிருக்கும் சமயம் பானுவின் வீட்டில் நல்லவன் வேடம் தரித்து அவரின் பெற்றோர்களிடம் தான் பானுவை திருமணம் செய்துகொள்ள விரும்புகிறேன் என்று கூறி சம்மதம் வாங்க அப்பொழுது பிரபாகரன் பானுவை விட பணவசதியில் பெரியவனாக இருக்கவும் அவர் பெற்றோர்கள் அவரிடம் கேட்காமலேயே திருமணத்திற்கு சம்மதித்தனர். ஆனால் பானுவுக்கு தெரிந்தால் அவர் சம்மதிக்கமாட்டார் என்று அறிந்த பிரபாகரன் பல சதி திட்டம் தீட்டி பானு பிரபாகரனைத் திருமணம் செய்யாவிட்டால் தான் தன் உயிரை மாய்த்துக் கொள்வேன் என்று பானுவின் தந்தையைக் கூறும்படி அவருக்கு யோசனைக் கூறி பானுவை சம்மதிக்க வைத்தார்.
“சாரி பானு.. நீ என்னைக்கு வசீய விரும்புறேன்னு தெரிஞ்சுதோ அன்னைக்கே உன்கிட்ட இருந்து விலக நெனச்சு தான் நான் முக்காவாசி நாள் காலேஜுக்கு கூட வரதே இல்ல. விருப்பம் இல்லாத பொண்ண கட்டாயப்படுத்த கூடாதுன்னு நெனச்சு என் மனசை மாத்திக்கிட்டேன்.. நாம ஒண்ணா நடிக்கும் போதும் நீ என் நண்பனோடு காதலிங்குறதுனால கண்ணியமா தான் உன்கிட்ட நடிச்சேன்.. ஆனா இப்போ என் அப்பா அம்மா என்னைக் கட்டாயப்படுத்துறாங்க.. உன் வீட்டுல உனக்கு எப்படி ப்ரஷரோ அதே மாதிரி தான் என் வீட்டுலயும்.. அதனால என்னை மன்னிச்சுரு பானு.. வேற வழியில்லாம கல்யாணத்துக்கு சம்மதிச்சுட்டேன்” என்று கூற பானுவும் அவர் செய்த சதி தெரியாமல் வரும் தன்னைப் போன்று சூழ்நிலைக் கைதி என்று எண்ணினார்.
பலமுறை வசீகரனை தொடர்பு கொள்ள முயன்று தோழ்வியைத் தழுவ வேறுவழியின்றி பெற்றோரின் கட்டாயத்தில் பானு பிரபாகரனைத் திருமணம் செய்துகொண்டார். திருமணம் முடிந்த ஒருவாரத்தில் தான் வசீகரன் தாய்நாடு திரும்பினார். வந்தவருக்கு இது பேரதிர்ச்சியாக இருக்க தன் நண்பனின் உண்மை முகம் அறியாத வசீகரன் பிறகு இருவரது சூழலையும் புரிந்து கொண்டு தன் காதலை தியாகம் செய்துவிட்டு மணமக்களை வாழ்த்த வந்திருந்தார்.
“சாரி வசீ.. உனக்கு நான் பெரிய துரோகத்தைப் பண்ணிட்டேன்” என்று வருந்துவது போன்று நடிக்க அதனை நம்பிய வசீகரன்,
“விடு பிரபா.. நீ என்ன செய்வ.. இன்னாருக்கு இன்னாருன்னு கடவுள் போட்ட முடிச்சு.. இனிமே நான் பானுவை என் காதலியா நெனைக்க கூட மாட்டேன்.. இனிமே பானு என் நண்பன் மனைவி தான்” என்று பெருந்தன்மையாக கூறிவிட்டு சென்றார். அக்கணம் வசீகரனைத் தோற்கடித்துவிட்ட மகிழ்ச்சி பிரபாகரனின் மனதில் தாண்டவமாடியது.
ரகசியம் – 68
நாட்கள் செல்ல பானுவும் வேறு வழியின்றி பிரபாகரனுடனான தன் திருமண வாழ்க்கையை வாழ தொடங்கினார். ஒரு வருடம் கழிந்தது. வசீகரனுக்கும் கமலா என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது
வசீகரனின் திருமணம் முடிந்த ஒரு மாதத்தில் அவரின் தங்கை விஜயாவுக்கும் பானுவின் அண்ணன் சத்யனுக்கும் பெற்றோரின் விருப்பப்படி திருமணம் நிச்சயமாகியது. பானுவிற்கோ ஏக மகிழ்ச்சியைக் கொடுத்தது தன் உயிர் தோழிக்கும் தன் அண்ணனுக்கும் திருமணம் என்ற செய்தி.
திருமணமும் வெகு விமர்சையாக முடிந்தது. திருமணத்தில் விஜயாவின் அண்ணன் முறையாக வசீகரன் சத்யனை அழைத்துவர சத்யனின் தங்கை முறையாக பானு விஜயாவை அழைத்து வந்தார்.
எப்பொழுது பானுவிற்கு பிரபாகரனுடன் திருமணம் முடிந்ததோ அன்றிலிருந்தே பானுவும் வசீகரனும் தங்கள் மனதில் இருந்த காதல் என்ற அத்தியாயத்தை முற்றிலும் அழித்துவிட்டனர். உறவினர் என்ற முறையில் தான் திருமணத்தின் போது இருவரும் சகஜமாய் பேசிக்கொண்டனர்.
ஆனால் எதையுமே கெட்ட எண்ணத்தில் நினைக்கும் பிரபாகரனுக்கு அவர்கள் ஜோடியாக மற்றொரு ஜோடியை அழைத்து வருவது போன்றும் அவர்கள் இப்பொழுதும் தங்கள் காதலை மறக்காமல் தான் பேசுகின்றனரோ என்றும் தோன்றியது. அதன் விளைவாய் பிரபாகரனின் மனதில் சந்தேகம் முளைக்க ஆரம்பித்தது.
திருமண நிகழ்வின் போது வசீகரனின் மனைவி கமலா மயங்கி விழ அவளை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் கர்ப்பமாக இருக்கிறார் என்று கூற வசீகரனுக்கும் கமலாவுக்கும் விஜயாவுக்கும்.. பானுவுக்கும் கூட மகிழ்ச்சியே. ஆனால் பானு ஒருவருடம் கழிந்தும் கர்ப்பம் தரிக்கவில்லை என்று திருமணத்திற்கு வந்திருந்த உறவினர்கள் குறைபாட அது பானுவின் மனதை வேதனைக்குள்ளாக்கியது. பானுவின் நிலையைக் கேட்டு விஜயாவும் மனம் வருந்தினார். அவ்வப்பொழுது பானுவை வந்து பார்த்து கவனித்து அவருக்கு உற்ற துணையாய் விஜயா இருந்தார்.
மூன்று மாதங்கள் கழிந்தது. தான் தாயாகவில்லை என்ற எண்ணம் பானுவின் மனதை ரணமாக்கியது. அந்த நேரம் பானுவுக்கு பல நாள் கழித்து நடிக்க வாய்ப்பு கிடைக்க அதுகுறித்து பிரபாகரனிடம் கேட்க அவரோ மறுத்துவிட்டார். ஆனால் குழந்தை இல்லாத காரணத்தினால் மனம் வருந்திய பானுவுக்கு இப்பொழுது நடிப்பு தன் மனதை திசைத் திருப்பி நிம்மதியைக் கொடுக்கும் என்று தோன்றியது. அதனால் நடிப்பை என்னால் விட முடியாது என்று தீர்க்கமாக கூறி நடிக்க ஒப்புக்கொண்டார். பிறகு தான் தெரிந்தது வசீகரன் தான் கதையின் நாயகன் என்று. முதலில் வேறு ஒருவரை தான் படக்குழு கூறியிருந்தது. ஆனால் இறுதியில் வசீகரன் என்று கூறிவிட பிரபாகரனுக்கு சற்றும் பிடிக்கவில்லை.
அடுத்த மூன்று மாதத்தில் படப்பிடிப்பு முடிந்திருக்க படமும் வெளியாகி வெற்றிகரமாக ஓடியது. இரண்டு நாட்கள் கழித்து உடல் சோர்வாக இருப்பது போல் பானுவிற்கு தோன்ற தன் கணவனை அழைத்து கொண்டு மருத்துவமனை சென்றவருக்கு அவர் கர்ப்பமாக இருக்கிறார் என்ற நற்செய்தி கிட்டியது. அதே சமயம் மருத்துவமனைக்கு வந்திருந்த விஜயாவும் தான் கர்ப்பமாக இருக்கும் செய்தியை கூறினார். தோழிகள் இருவரும் ஓரே நேரத்தில் தாயாகி இருப்பது இருவருக்கும் இரட்டிப்பு மகிழ்ச்சி.
ஆனால் இவ்வளவு நாள் இல்லாமல் வசீகரனுடன் படப்பிடிப்பு முடிந்ததும் பானு கருதரித்திருப்பது பிரபாகரனுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. ஒருவேளை இது வசீகரனின் வாரிசோ என்று. ஆனால் அப்பொழுது அது குறித்து யாரிடமும் எதுவும் கூறவோ கேட்கவோ இல்லை. குழந்தை பிறந்ததும் இதற்கு ஒரு தீர்வு காண்போம் என்று நினைத்து அமைதி காத்தார்.
இதற்கிடையில் வசீகரனுக்கு தொடர்ந்து நடிக்கும் வாய்ப்பு அதிகரிக்க பிரபாகரனுக்கு கிட்டவே இல்லை. ஏனோ தான் மீண்டும் வசீகரினிடம் தோற்றுக்கொண்டே இருக்கிறோமோ என்ற எண்ணம் மேலோங்க பிறகு நடிக்கும் வாய்ப்பையே விட்டுவிட்டார் பிரபாகரன்.
நான்கு மாதங்கள் கழிந்த நிலையில் வசீகரனுக்கு அழாகான ஆண் குழந்தையாய் மதுரன் பிறந்திருக்க அடுத்த நான்கு மாதத்தில் விஜயாவிற்கு ஆண் குழந்தையாய் இளமாறனும் பானுவிற்கு பெண் குழந்தையாய் மதுரிகாவும் ஒரேநாளில் ஒரே நேரத்தில் பிறந்தனர்.
குழந்தை பிறந்து ஒரு மாதமிருக்கும் சமயத்தில் பிரபாகரன் தன் மனதில் இருக்கும் சந்தேகத்தின் காரணமாய் யாருக்கும் தெரியாமல் தனக்கும் மதுரிகாவிற்கும் மரபணு சோதனை எடுக்க ஏற்பாடு செய்தார். சோதனையின் முடிவில் மதுரிக்காவின் மரபணுவுடன் பிரபாகரனின் மரபணு பொருந்தவில்லை அதனால் மதுரிகாவின் தந்தை பிரபாகரன் இல்லை என்று தொண்ணுற்றெட்டு சதவிகிதம் வந்திருக்க பிரபாகரனுக்கு ஆத்திரம் அதிகமாகியது.
வீடு சென்றவர் பிள்ளை பெற்றவர் என்று கூட யோசிக்காமல் பானுவை,
“ஏன் டி நாயே.. என்னைக் கல்யாணம் பண்ணிட்டு அவன்கூட போய் புள்ள பெத்துட்டு வந்துருக்கியா.. நீயெல்லாம் பொண்ணா டி.. ச்சீ” என்று தகாத வார்த்தைகள் பேசி அடிக்க வர அவரின் வார்த்தையில் வெகுண்டெழுந்த பானு,
“ச்சீ.. வாய மூடு யா.. உன்னைப்போய் இத்தனை நாள் நல்லவன்னு நானும் வசீயும் நம்பியிருக்கோம்.. உன்னை கல்யாணம் பண்ணுன ஒரே காரணத்துக்காக நாங்க ரெண்டு பேரும் எங்க காதலை தியாகம் பண்ணுனோம்.. ஆனா நீ கேவலமா என்னையும் அவரையும் சேர்த்து வச்சு பேசுற.. இங்க பாரு உன்ன மாதிரி கேவலமா யோசிக்குறது நாங்க கிடையாது.. இது நம்ம பொண்ணு தான் நம்ம பொண்ணு தான்” என்று ஆணித்தரமாக கூறினார்.
“அட ச்சீ வாயமூடு… நான் ஆதாரத்தோட தான் சொல்றேன்.. உன் பொண்ணு எனக்கு பிறந்தவ இல்ல டி.. இரு இப்போவே இதை வெளிய சொல்லி அந்த வசீகரனோட பேரை நாரடிக்குறேன்” என்று கோபத்தில் ஊடகத்துறையை அழைத்து இது தனக்கு பிறந்த குழந்தை இல்லை எனவும் வசீகரனும் பானுவும் தன்னை ஏமாற்றிவிட்டதாகவும் தகவலை பரப்பிவிட அனைவரும் அதனை நம்ப தொடங்கினார். வசீகரன் சம்பாதித்த நற்பெயர் அனைத்தும் இந்த சம்பவத்தால் அவப்பெயராய் மாறிவிட்டது.
தனக்கு அவப்பெயர் உண்டாக்கிய கோபத்தில் வசீகரன் பிரபாகரனின் சட்டையைப் பிடித்து,
“ஏன் டா இப்படி செஞ்ச.. நான் உனக்கு என்ன துரோகம் செஞ்சேன்.. எனக்கு போய் இப்படி செய்ய உனக்கு எப்படி ட மனசு வந்துச்சு” என்று கேட்க அவரைத் தள்ளிவிட்ட பிரபாகரன்,
“என்ன துரோகம் செஞ்சியா.. கஷ்டப்பட்டு எல்லா சாதி வேலையும் செஞ்சு உன்ன தோற்கடிக்கணும்னு பானுவை நான் கல்யாணம் செஞ்சா.. நீ என்னைவிட கேடி வேலை பார்த்து உன் குழந்தையை அவ வயித்துல வளர வச்சுட்டல துரோகி” என்க அவர் கூற்றில் அதிர்ந்த வசீகரன்,
“என்ன சொன்ன.. சாதி செஞ்சு பானுவைக் கல்யாணம் செஞ்சியா” என்று கேட்க அதற்கு ஏளனமாக சிரித்த பிரபாகரனோ,
“ஆமா டா சதி தான்.. என்கூடையே நீ இருப்பியா ஆனா என்னைவிட எல்லா விதத்துலயும் நீ உசத்தியா இருப்பியாம்.. அதைப் பார்த்துட்டு நான் சும்மா இருக்கணுமா.. அதான் பிளான் பண்ணி பணக்காரனாகி பிளான் பண்ணி உன்கூட நடிக்க வந்து அது நடிப்பை பானுவோட அப்பா அம்மாகிட்டயும் போட்டு அவளைக் கல்யாணமும் பண்ணேன்..” என்றவர் கல்லூரி காலத்தில் இருந்து இப்பொழுதுவரை தான் செய்த அத்தனை சதி வேலைகளையும் கூற வசீகரனோ,
“ச்சீ துரோகி உன்ன போய் நம்புனேன் பாரு.. இரு இப்போவே போய் எல்லார்கிட்டயும் உண்மையை சொல்றேன்” என்றவர் வேகமாக தன் வண்டியை எடுத்துக் கொண்டு கிளம்ப,
“போடா போ.. என்ன தைரியம் இருந்தா எனக்கு பெரிய துரோகமா பண்ணிட்டு நான் செஞ்ச சின்ன துரோகத்தை வெளிய சொல்லி நல்லபெயர் வாங்கலாம்னு பார்ப்ப.. உன்ன என்ன செய்றேன்னு பாரு..” என்று நினைத்து பிரபாகரன் வசீகரனின் வாகனத்தில் விபத்து ஏற்படுத்தி அவரை மறைமுகமாய் கொல்வதற்கு ஆட்களை ஏற்பாடு செய்திருக்க அதன்படி விபத்தும் ஏற்பட்டு வசீகரன் கோமாவுக்கு சென்றார்.
மற்றவர்களுக்கு இது இயற்கையான விபத்து போன்றே நம்பவைத்தார் பிரபாகரன். இங்கிருந்தால் இன்னும் அவப்பெயர் தான் அதிகமாகும் என்றெண்ணிய கமலா யாருக்கும் தெரியப்படுத்தாமல் தன் கணவனையும் குழந்தையையும் மட்டும் அழைத்து கொண்டு வெளிநாடு சென்று அங்கு தன் கணவருக்கு மருத்துவம் மேற்கொண்டார்.
அதையும்.. தவறு செய்துவிட்டு வசீகரன் விபத்து என்று நாடகமாடி பதுங்கிவிட்டதாக தவறான தகவலை பரப்பிவிட்டார் பிரபாகரன். ஆனால் வசீகரன் குடும்பம் எங்கு சென்றது என்று யாருக்கும் தெரியவில்லை. காவல்நிலையத்தில் புகார் அளித்தால் கண்டுபிடிக்கலாம் தான். ஆனால்… தான் வசீகரனைக் கொல்ல முயற்சித்தது வெளியில் தெரிந்துவிடும் என்று அஞ்சி பிரபாகரன் அதற்கு மேல் அதை குறித்து எதுவும் பேசவில்லை.
அவரை பொறுத்தவரை வசீகரனின் செல்வாக்கு அழிய வேண்டும் தனக்கு துரோகம் செய்தவன் அவ்வூரில் இருக்க கூடாது. இது இரண்டு மட்டுமே தேவையாயிருக்க அது இரண்டும் நடந்துவிட்டதால் அதற்கு மேல் வசீகரன் குறித்து எங்கும் பேசவில்லை அவர்.
இந்நிலையில் ஒருநாள் விஜயாவோ சாலையில் வண்டி பழுதாகி நிற்க அவ்வழியே வந்த பிரபாகரனின் வாகனத்தை நிறுத்தினார் விஜயா. வசீகரனின் மேல் இருக்கும் கோபத்தில் பிரபாகரன் வண்டியை நிறுத்தாமல் போக எத்தனிக்க பிறகு வசீகரன் எங்கு சென்று தொலைந்தான் என்று தெரியும் ஆவலோடு அவரை வண்டியில் ஏற்றினான்.
ஏற்றிய ஐந்து நிமிடங்களில் அவர்கள் சென்று கொண்டிருக்கும் வாகனம் லாரியில் மோதி விபத்துக்குள்ளாக சம்பவ இடத்திலேயே பிரபாகரனின் உயிர் பிரிந்தது.
தலையில் பலத்த அடிபட்ட விஜயா தன் குறுகிய நினைவை மட்டும் இழந்தார்.
ஏற்கனவே தனக்கு ஏற்பட்ட அவப்பெயரில் மனமுடைந்திருந்த பானு தன் கணவர் இறந்த சோகமும் சேர்த்து வாட்ட துயரம் தாங்காமல் தற்கொலை செய்து இறந்துவிட்டார்.
குறுகிய கால நினைவை இழந்த விஜயாவுக்கு அவர் கண்முழித்ததும் அவரின் கணவன் சத்யன் பிரபாகரன் தரப்பு நியாயம் இருப்பது போல் அவர் கேள்விப்பட்டதைக் கூற, பிரபாகரனின் மரபணுவும் மதுரிகாவின் மரபணுவும் பொருந்தாமல் இருந்த சான்றிதழைப் பார்த்த விஜயா தன் சகோதரன் தான் தன் தோழியை ஏமாற்றி துரோகம் செய்துவிட்டான் என்று உறுதியாக நம்பினார். பிறகு தன் தோழியின் மகளை தன் மகளாய் நினைத்து வளர்க்க ஆரம்பித்தார் விஜயா.
இவ்வாறாக நடந்த அனைத்தையும் மதுரன் மற்ற நால்வரிடமும் கூறி முடிக்க மதுவைத் தவிர்த்து மற்ற நால்வரின் முகத்திலும் குழப்பம் தான். மதுவோ மதுரனை நோக்கி நடந்தவள்,
“அப்போ நிஜமாவே இது தான் நடந்துச்சா.. என் அப்பா தான் தப்பு பண்ணாரா” என்று கவலைத் தோய்ந்த முகத்தில் கேட்க மதுரனோ,
“ஆமா டி.. இது தான் உண்மை” என்று அவள் புரிந்துகொண்ட மகிழ்ச்சியில் சற்று ஆசுவாசமடைந்தான்.
“ஒஹோ.. தூரா நான் ஒன்னு சொன்னா கேப்பியா”
“சொல்லு தூரிகா..”
“நீ நடிகனாகுறதுக்கு பதில் பேசாம கதாசிரியரா ஆயிடேன்.. இந்த கதையை ரொம்ப நல்ல டெவலப் பண்ணிருக்க உன் கற்பனையில” என்றவள் விழியிடம் திரும்பி,
“விழி.. கதை எழுதும் போது ஐடியா வேணும்னா நம்ம மதுரன் கிட்ட கேளு டா.. நல்லா ஐடியா கொடுப்பான்” என்று நக்கலாக கூற மதுரனோ,
“மது திஸ் இஸ் டூ மச்” என்று கோபத்தையடைக்கிக் கொண்டு கூறினான்.
ரகசியம் – 69
“என்ன நான் டூ மச்சா பேசுறேனா.. அது எப்படி டா.. உன் அப்பா தப்பு பண்ண கதையை லேசா பட்டி டிங்கரிங் எல்லாம் பண்ணி என் அப்பா பண்ணதா கற்பனை பண்ணி சொல்ல முடியுது.. அந்த அளவுக்கு உனக்கு பெத்த பாசம் இருக்குன்னா.. எனக்கும் இருக்க தான செய்யும் என் அப்பா மேல.. உன் மேல வச்சிருந்த மரியாதை எல்லாம் போச்சு மதுரன்.. உன்ன என் மனசுல எங்க வச்சுருந்தேன் தெரியுமா.. இப்போவும் அதே இடத்துல தான் இருக்க இல்லன்னு சொல்லல.. ஏன்னா என்னை காதலிச்ச மதுரன் ரொம்ப நல்லவன்.. அவன் எப்போ வசீகரனோட புள்ளைன்னு எனக்கு தெரிய வந்துச்சோ அப்போ தான் மாறிட்டான்.. ” என்று அவள் பேசிக்கொண்டே போக,
“ஸ்டாப்பிட் மது.. விட்டா ஓவரா பேசிட்டே போற.. எப்போ என்னை பத்தி நல்ல தெரிஞ்சும் நீ இப்படி பேசுனியோ.. அப்போவே நம்ம காதல் செத்து போச்சு.. நான் கூட இது சேரமுடியாத காதல் தான்னு நெனச்சேன்.. ஆனா நீ பேசுறதுல இருந்து இது சேர முடிஞ்சாலும் சேரக் கூடாத காதல்னு நல்லாவே புரிஞ்சுக்கிட்டேன்.. காதல்ல முக்கியமானதே நம்பிக்கை தான் அதை உடைச்ச அப்புறம் என்ன காதல் அது” என்று ஆவேசமாக மதுரன் கேட்க மதுவோ,
“மிஸ்டர் மதுரன்.. காதல்ல நம்பிக்கை காதலன் மேல தான் வைக்கணும்.. காதலனோட அப்பா மேல எல்லாம் வைக்கணும்னு எந்த அவசியமும் இல்ல.. நீ வேற பொண்ண ஏமாத்துனன்னு என் மாறனே சொன்னா கூட நம்ப மாட்டேன். அது தான் காதல் மேல இருக்குற நம்பிக்கை.. உன் அப்பாவை எதுக்கு நான் நம்பனும்.. என் அப்பா அம்மா சாவுக்கு காரணம் முழுக்க முழுக்க உன் அப்பா தான்.. அது தெரிஞ்ச அப்புறம் நீ உன் அப்பா பத்தி சொல்ற வாய் வார்த்தையை என்னை எப்படி நம்ப சொல்ற..”
“சரி நீ சொல்ற மாதிரியே இருக்கட்டுமே.. அப்புறம் ஏன் மது உன் அப்பாக்கு உன் அம்மா மேல நம்பிக்கை இல்லை.. நம்பிக்கை இல்லாம தான டிஎன்ஏ டெஸ்ட் எடுத்துருக்காரு..” என்று கேட்க அதற்கு மதுவிடம் பதில் இல்லை.
“சொல்லு மது ஏன் அமைதியா இருக்க”
“எங்க அப்பா என் அம்மாவை சந்தேகட்பட்டது தப்பு தான்.. ஆனா அந்த சந்தேகம் சரியா தான இருந்துருக்கு.. சந்தேகப்பட்டு என் அம்மாகிட்ட கேட்ட அப்புறம் அவங்க இல்லன்னு சொன்னதும் நம்பிட்டாங்க தான.. எங்க அப்பாக்கு என் அம்மா மேல சந்தேகம் இல்ல.. உங்க அப்பாவோட கேடி வேலை தெரிஞ்சு உங்க அப்பா மேல தான் எங்க அப்பாக்கு சந்தேகம்..”
“பைத்தியம் மாதிரி பேசுற மது நீ.. இங்க பாரு டி.. கொஞ்சம் நான் சொல்றத நீ யோசிச்சு பாரு டி.. உன் அப்பா அம்மா சாவுக்கு என் அப்பா காரணமில்லை”
“யோசிக்க என்ன இருக்கு.. ஆதாரமே சொல்லுதே.. நான் பிரபாகரன் குழந்தை இல்லன்னு”
“நீ பிரபாகரனோட குழந்தை இல்லன்னு தான ஆதாரம் இருக்கு.. வசீகரனோட குழந்தைங்குறதுக்கு ஆதாரம் இல்ல தான” என்று மதுரன் கேட்கவும் ஆவேசமானாள் மதுரிகா.
“என்ன டா சொன்ன.. அப்போ என் அம்மா தப்பானவங்கன்னு சொல்ல வரியா” என்று கண்களில் கண்ணீர் வழிய கேட்டவளின் இதயம் அவனது வார்த்தையில் நொறுங்கியிருந்தது.
“அயோ இல்ல மது.. நான் அந்த அர்த்தத்துல சொல்ல வரல.. அவங்க என் அப்பாவோட முன்னாள் காதலி.. அவங்கள போய் நான் தப்பா பேசுவேனா..” என்று பேசுபவனை கை நீட்டி தடுத்தவள்,
“போதும் மதுரன்.. முதல்ல என் அப்பா என் அம்மா மேளா சந்தேகப்பட்டாங்கன்னு சொன்ன.. இப்போ எங்க அம்மா தப்பானவங்கன்னு சொல்ற.. இதுக்கு மேல ஒரு வார்த்தை உன் கூட பேச நான் தயாரா இல்ல.. இப்படி கீழ்தரமா பேசுற நீ என் தூரனே இல்ல.. ”
“மது ப்ளீஸ் நான் சொல்ல வரத கேளு.. சரி நீ என்னை நம்ப வேணாம் என் அப்பாவை நம்ப வேணாம்.. என் ஆசை ஒன்னு மட்டும் தான்.. நீ உனக்குன்னு நல்ல வாழ்க்கையை அமைச்சுக்கிட்டு வாழனும் அவ்ளோ தான்.. ப்ளீஸ் மது”
“இவ்ளோ நேரம் நம்பிக்கை நம்பிக்கைன்னு பேசுனா நீ.. அந்த நம்பிக்கையை கொஞ்சம் என் மேல வச்சு எனக்காக உன் அப்பாக்கும் எனக்கும் ஒரே ஒரு டிஎன்ஏ டெஸ்ட் எடுத்தாலே உண்மை உனக்கு தெரிஞ்சுடும்.. ஆனா நீ சம்மதிக்கமட்ட.. எடுத்தா தான் உன் அப்பாவோட சுயரூபம் தெரிஞ்சுடுமே.. அதான் நீயே முந்திகிட்டு அன்னைக்கு நம்ம காதல் சேர வேணாம்னு சொல்லிட்ட” என்று அடிபட்ட பார்வையோடு கூற,
“ஸ்டாப்பிட் மது.. நம்ம காதலுக்காக என் அப்பா மேல எனக்கு இருக்குற நம்பிக்கையை உடைக்க சொல்றியா.. யார் என்ன சொன்னாலும் நான் அந்த காரியத்தை செய்ய மாட்டேன்.. அப்படி செஞ்சா நானே என் அப்பாவை நம்பாத மாதிரி ஆயிடும்.. சோ முடியாது மதுரிகா..
அட் தி செம் டைம் நீ இன்னொரு விஷயத்தையும் புரிஞ்சுக்கணும்.. ஒருவேளை என் அப்பாக்கும் உனக்கும் டிஎன்ஏ டெஸ்ட் எடுத்து அதுல நான் சொல்றமாதிரி நீ என் அப்பவோட வாரிசு இல்லன்னு ப்ரூவ் ஆனா கூட நம்ம காதல் சேர நான் சம்மதிக்க மாட்டேன்..
உன்கிட்ட நம்ம காதல் சேரவேணாம்னு நான் அன்னைக்கு சொல்றதுக்கு காரணம் என்னனு கேட்டியே.. அதுக்கு காரணம் என் அப்பாவுக்கும் உன் அம்மாவுக்கும் நடுவுல ஒரு காலத்துல இருந்த புனிதமான காதல் மட்டும் தான்.. அந்த காதலுக்கு மரியாதை தர நெனச்சு தான் நம்ம காதலை வேணாம்னு சொன்னேன்.. அதுக்கு நீயா ஒரு அர்த்தத்த புரிஞ்சுட்டு பேசுனா நான் ஏதும் செய்ய முடியாது” என்று மதுரன் திட்டவட்டமாக கூற,
“முடிவா என்ன தான் சொல்ற”
“எந்த ஒரு சூழ்நிலைலயும் என் அப்பாக்கும் உனக்கும் டிஎன்ஏ டெஸ்ட் எடுக்க சம்மதிக்க மாட்டேன்..”
” ஓஹோ சரி.. அப்போ நான் சொல்றதையும் நல்ல கேட்டுக்கோ.. என் வாழ்க்கை முழுக்க நான் வாழுறதுக்கு நம்ம காதலிச்ச நினைவுகள் எனக்கு போதுமானது.. அதை தவிர்த்து வேற வாழ்க்கை எனக்கு தேவையில்லை.. நான் அமைச்சுக்கவும் மாட்டேன்.. நம்ம டிஎன்ஏ டெஸ்ட் எடுக்க சம்மதிக்க மாட்டோம்னு சொன்னதுனால தான் ஒரு பொண்ணோட வாழ்க்கை வீணாக போதோன்னு உனக்கு ஏற்படுற குற்றவுணர்ச்சி தான் நீ தப்பு செஞ்ச உங்க அப்பாவை மலை போல நம்புறதுக்கான தண்டனை.” என்றவள் விழிநீரைத் துடைத்தபடி விறுவிறுவென சென்றுவிட மாறனும் அவளின் பின் ஓடினான்.
உண்மை புரியாமல் பேசி செல்லும் மதுரிகாவையே கலக்கமாக பார்த்தவனின் கண்களில் கண்ணீர் வழிய அறிவு, இனியா மற்றும் விழிக்கு யார் புறம் பேசுவது என்று குழப்பமாக இருந்தது. அறிவோ,
“மச்சான் சாரி டா.. இவங்க எல்லாம் எப்படி வந்தாங்கன்னு எனக்கு தெரியாது.. சத்தியமா நான் யார்கிட்டயும் உன்னைப் பத்தி சொல்லல டா” என்று அறிவு மன்னிப்பு வேண்ட இனியாவோ,
“சாரி டா மது.. சாரி அமுது.. அவங்க இங்க வரதுக்கு நான் தான் ஹெல்ப் பண்ணேன்.. மது என்கிட்டே ஹெல்ப்புனு கேட்கும் போது என்னால தட்ட முடியல” என்றவள் அறிவு நேற்று மதுரனிடம் பேசும்பொழுது அவனறியாமல் கேட்டது முதல் பாண்டிச்சேரி வந்தது வரை அனைத்தையும் கூறினாள். அனைத்தையும் கேட்ட மதுரன்,
“என் வாழ்க்கைல விதி தான் ரொம்ப விளையாண்டுருச்சு.. அதுக்கு நீங்க என்ன செய்வீங்க.. விடுங்க..”
“சரி மச்சான்.. உனக்கு எப்படி இதெல்லாம் தெரிஞ்சுது..” என்று அறிவு கேட்க மதுரனோ,
“அன்னைக்கு அப்பாக்கு உடம்பு முடியலன்னு போனேன்ல.. அப்போ அப்பா அவருக்கு ஏதோ ஆகப்போதோன்னு பயந்து இந்த உண்மையெல்லாம் என்கிட்ட சொல்லி.. நான் தப்பு பண்ணல மதுரா.. என் தங்கச்சி நான் பானுவுக்கு துரோகம் பண்ணிட்டதா நெனச்சு என்னை வெறுத்துட்டா.. அவளுக்கு உண்மைய சொல்லி நான் அவ நெனைக்குற மாதிரி மோசமானவன் இல்லன்னு நிரூபிடான்னு புலம்புனாரு.. அப்போ தான் விஜயா அத்தையோட போட்டோவும் பானு அம்மாவோட போட்டோவும் பார்த்தேன்..
பார்த்ததும் தெரிஞ்சுட்டு.. என் அப்பாகிட்ட போய் எப்படி சொல்வேன் நான்.. நீங்க காதலிச்சவங்களோட பொண்ண தான் இப்போ நான் விரும்புறேன்னு.. அப்பா மனசு உடைஞ்சுருவாரு.. அதனால தான் என் தூரிகாவோட மனசையும் என் மனசையும் என் காதலையும் சேர்த்தே உடைச்சேன்.. எனக்கு வேற வழி தெரியல டா.. என் அப்பாவுக்காக பாப்பேனா இல்ல என் காதலுக்காக பாப்பேனா.. ” என்று கலங்கியவனைக் காண மூவருக்கும் பாவமாக இருந்தது.
“விடுங்க.. எங்க காதலை பத்தி பேச இனிமே ஏதுமில்லை.. யாரும் இதை பத்தி பேசிக்க வேணாம்.. ஒரு நண்பனா என்கிட்டே எப்போ பேச தோணுனாலும் நீங்க பேசலாம்.. முடிஞ்சா தூரிகாவோட மனச மாத்தி அவளை வேற ஒரு வாழ்க்கைக்குள்ள கொண்டு போங்க..” என்றவன் சென்றுவிட பின் மற்ற மூவரும் தங்கள் ஊருக்கு கிளம்பினர்.
அதன் பிறகு வந்து நாட்களில் அனைவரும் அவரவர் பணிகளில் கவனம் செலுத்தினர். ஒரு ஜோடி மட்டும் தங்கள் காதல் உலகில் சிறகடிக்க, மற்ற இரு ஜோடிகளில் ஒரு ஜோடிகள் சேர கூடாத நிலையில் தவிக்க மற்றொரு ஜோடியான விழி மற்றும் மாறனோ சேர வழி இருந்தும் சேராமல் தவித்தனர்.
இரண்டு ஜோடிகள் தவிப்பில் இருக்க ஒரு ஜோடி மட்டும் மகிழ்வாய் இருந்தால் விதிக்கு மூக்கு வியர்த்துவிடும் தானே. அதிலும் விளையாட தொடங்கியது..
அன்றொருநாள் ராமானுஜம் பக்கத்துக்கு வீட்டு குழந்தைக்கு திருக்குறள் கற்றுக்கொடுத்துக் கொண்டிருந்தார். அப்பொழுது,
அன்பறிவு ஆராய்ந்த சொல்வன்மை தூதுரைப்பார்க்கு
இன்றி யமையாத மூன்று.
எனும் குரலைக் கூறி பின்வருமாறு அர்த்தம் கூறினார்.
அதாவது முந்திக்காலத்துல டெலிபோன் வசதியெல்லாம் இல்லாம இருந்ததுனால ஒரு அரசர்கிட்ட இருந்து தகவலை தெரிஞ்சுட்டு தன்னோட அரசருக்கு வந்து தூது சொல்றதுக்குன்னு ஆட்கள் இருந்தாங்க.. அவங்களுக்கு அவங்க நாட்டு அரசன் மேல இருக்குற அன்பு, தகவலை தெரிஞ்சுக்குற அறிவு, அதை சரியா சொற்களை தேர்ந்தெடுத்து தெளிவா சொல்ற சொல்வன்மை இது மூணும் முக்கியமா இருக்கவேண்டிய குணங்கள்னு திருவள்ளுவர் சொல்றாரு.” என்று கூறிக்கொண்டிருக்க அன்பறிவு என்று கேட்டவுடனேயே இனியாவின் முகத்தில் வெட்கம் ஏற்பட விழியோ அமைதியாக அவளைக் கலாய்த்தாள். அப்பொழுது,
“அப்பா.. அன்ப பத்தியும் அறிவைப் பத்தியும் என்ன நெனைக்குறீங்க” என்று வேண்டுமென்றே இனியாவை வம்பிழுக்க தன் தந்தையிடம் விழி கேள்வியெழுப்பினாள்.
“என்னை பொறுத்தவரை அன்பும் அறிவும் புருஷன் பொண்டாட்டி மாதிரி விழி.. அவங்க ரெண்டு பேரும் ஒரு இடத்துல இருந்தா மூணாவதா சொல்லப்பட்ட சொல்வன்மை தானா வந்திரும்” என்று அவர் எதார்த்தமாக கூற அவர் கூற்றில் விழி வயிற்றைப் பிடித்து கொண்டு சிரிக்க புரியாமல் பார்த்த ராமானுஜமோ இனியாவைப் பார்க்க அவள் முகத்தில் வெட்க சிரிப்பு பரவிக் கிடந்தது.
நிறைய இலக்கியங்களைப் படித்து தேர்ந்தவருக்கு பெண்ணின் வெட்க சிரிப்புக்கு அர்த்தம் தெரியாமல் போகுமா.. இரண்டு நிமிட யோசனையிலேயே அவள் நண்பன் அறிவின் பெயர் நியாபகத்திற்கு வர நொடிநேரத்தில் அவர்கள் காதல் விஷயத்தைக் கணித்துவிட்டார்.
“அன்பு இங்க வா” என்று சற்று கண்டிப்பாக அழைக்க அதுவரை சிரித்துக் கொண்டிருந்த விழியின் முகம் அதிர்ச்சியில் விரிய இனியாவின் முகமோ வெட்கம் நீங்கி வெலவெலத்து போனது.
ரகசியம் – 70
தன் தந்தையின் அருகில் வந்தவள்,
“என்னப்பா..”
“உன்கிட்ட இருந்து இதை நான் எதிர்பார்க்கல அன்பு” என்று முறைத்தபடி கூற இனிய விழி இருவருக்கும் பயத்தில் ஆட்டம் கண்டது. பின்பு விழியிடம் திரும்பியவர்,
“இதுல நீயு சேர்ந்து கூட்டு வேற” என்க அவ்வளவு தான் இருவருக்கும் தாரைதாரையாக கண்ணீர் வழிந்தது.
“அப்பா அது வந்து..” என்று அவள் இழுக்க,
“வேணாம் எதுவும் சொல்லாத.. உங்க ரெண்டு பேர் மேலயும் ரொம்ப நம்பிக்கை வச்சுருந்தேன்.. ” என்று கூற அவர் காலடியில் அமர்ந்த இனியாவோ,
“அப்பா ப்ளீஸ்.. என்ன மன்னிச்சுடுங்க.. உங்கள் ஏமாத்த நினைக்கல.. ஆனா அவனுக்குன்னு ஒரு நல்ல நிலைமை வந்ததும் உங்க கிட்ட பர்மிஷன் கேட்கலாம்னு காத்திருந்தேன் பா.. அவன் ரொம்ப நல்லவன்” என்றவள் அறிவைப் பற்றி அனைத்தையும் கூறினாள். அதற்கு ராமானுஜமோ,
“எனக்கு யோசிக்கணும்” என்றவர் எழுந்து சென்றுவிட்டார். விழியோ,
“இனியா சாரி டி.. நான் வேணும்னு செய்யல.. விளையாட்டா செய்ய போய் இப்படி ஆயிடுச்சு.. என்னால இப்போ உனக்கு பிரச்சனை ஆயிடுச்சுல” என்று வருந்தினாள்.
தான் விளையாட்டாக செய்த செயலில் தான் தன் தமக்கையின் காதலுக்கு பிரச்சனை ஏற்பட்டுவிட்டதோ என்று வருந்தினாள் விழி.
“விடு டி.. இன்னைக்கு என் லவ் மேட்டர் அப்பாக்கு தெரியணும்னு இருக்கு.. அதுக்கு என்ன செய்ய.. அமுது கிட்ட சொன்னா என்ன சொல்லுவானோ தெரியல” என்றபடி அறிவுக்கு நடந்ததைக் கூற அவனோ,
“வாவ் அப்போ என் மச்சினிச்சிக்கு தான் நான் தேங்க்ஸ் சொல்லனுமா.. அவகிட்ட மொபைலைக் கொடு” என்றிட அதில் குழம்பிய இனியாவோ,
“டேய் திருட்டுப்பயலே.. நானே அப்பாக்கு விஷயம் தெரிஞ்சுடுச்சுன்னு பயந்துட்டு இருக்கேன்.. நீ என்ன இவ்ளோ கூலா இருக்க”
“எதுக்கு அன்பு பயப்படணும்.. என்னைக்கா இருந்தாலும் தெரிய வேண்டியது தான..”
“அது சரி டா.. ஆனா அப்பா சம்மதிக்கலைனா”
“அதெல்லாம் என் மாமனார் அவ்ளோ மோசமானவர் இல்ல.. இரு நான் வீட்டுக்கு வரேன்” என்க இனியாவின் இதயத்துடிப்போ எகிறியது.
“டேய் டேய்…” என்று அடுத்து பேசுவதற்குள் அறிவு அழைப்பைத் துண்டித்திருந்தான்.
“அடியே.. விழி.. இங்க வா டி” என்று அழைத்தவள் அவளிடம் அறிவு கூறியவற்றைக் கூற அவளோ,
“என்னக்கா சொல்ற.. மாம்ஸுக்குள்ள இவ்ளோ தைரியமா.. வாவ்.. வாட் அ மேன்” என்று அவளின் மாமனை அவள் மெச்ச,
“உன் மூஞ்சி.. நானே பயத்துல இருக்கேன்.. இதுல இவன் இப்போ வந்து என்ன ஏழரைய கூட்ட போறானோ” என்றபடி கையைப் பிசைந்து கொண்டு நிற்க சிறிது நேரத்தில் அறிவு அவர்கள் வீட்டின் வாசலில் வந்து நின்றிருந்தான். வந்தவன் அழைப்பு மணியை அழுத்த ராமானுஜம் சென்று பார்க்க அறிவமுதன் நின்று கொண்டிருந்தான். அவனைக் கண்டதும் சற்று திரும்பி இனியாவையும் அவர் பார்க்க அவளோ,
“நான் வர சொல்லல” என்றபடி இடவலமாக தலையை அசைத்தாள். அதற்குள் அறிவோ,
“அயோ அப்பா.. அவ சொல்லி நான் இங்க வரல.. உங்களுக்கு விஷயம் தெரிஞ்சுடுச்சுன்னு சொன்னா.. அதான் சரி என் சார்பா நானும் ஒரு வார்த்தை சொல்லலாம்னு வந்தேன்.. உள்ள வரலாமா பா” என்றவன் மிகவும் பணிவாய் பேச அப்பணிவும் அவனின் அப்பா என்ற அழைப்பும் ராமானுஜத்தை சற்று இளக செய்தது.
“உள்ள வாங்க தம்பி” என்று அவரும் அழைத்தார். வந்தவன் அவருக்கு எதிரில் அமர்ந்தான்.
“முதல்ல நான் எங்க சார்பா மன்னிப்பு கேட்டுக்குறேன் பா.. உங்களுக்கு தெரியாம எங்க காதல நாங்க வளர்த்தது தப்பு தான்.. ஆனா நான் ஒரு நல்ல நிலைமைக்கு வந்ததும் உங்க கிட்ட வந்து பேசலாம்னு நெனச்சுருந்தோம்.. அதுக்கு முன்னாடியே விஷயம் தெரிஞ்சனால இப்போ வந்திருக்கேன் பா..
நானும் அவளும் காதலிக்குறோம் எங்களை சேர்த்து வைங்கன்னு நான் கேட்க வரல.. எங்களுக்குள்ள காதல் நிறையவே இருக்கு தான் ஆனா அந்த காதலையும் தாண்டி.. அப்பா இல்லாத எனக்கு அவ அப்பாவான உங்க மூலமா அப்பா பாசமும் அம்மா இல்லாத என் அன்புக்கு என் அம்மா மூலமா அம்மா பாசமும் கிடைக்கனும்னு ரெண்டு பெரும் ஆசைப்படுறோம் அவ்ளோ தான்.. கிடைக்குமா பா” என்று கேட்க அவனது கூற்றில் அன்பினியா ஸ்தம்பித்து நிற்க விழியோ பேவென பார்க்க ராமானுஜமோ ஆசிரியர் கேள்விக்கு பதில் கூற முடியாமல் திணறும் சிறுவனாக காணப்பட்டார். மீண்டும் தொடர்ந்த அறிவு,
“நீங்க யோசிச்சு பொறுமையா சொல்லுங்க பா.. நான் இன்னும் எக்கனாமிக்கலா லோவா தான் இருக்கேன்.. என்னோட அந்தஸ்த்தைக் கொஞ்சம் உயர்த்திட்டு வந்து ரெண்டாவது தடவ உங்க விருப்பதைக் கேட்கிறேன்.. அதுக்கு முன்னாடியே உங்களுக்கு இதுல விருப்பம் இல்லனா என்கிட்டே ஓப்பனா சொல்லுங்க..”
“விருப்பம் இல்லன்னு ஓப்பனா சொன்னா” என்று ராமானுஜம் கேள்வி எழுப்ப அவனோ சற்றும் யோசிக்காமல்,
“உங்களுக்கு விருப்பம் ஏற்படுத்துற மாதிரி நாங்க நடந்துக்குறோம்.. அதுவரை காத்திருப்போம்.. அதுக்காக உங்க பொண்ண எல்லாம் விட்டுட்டு போய்டுறேன்னு சொல்ற அளவுக்கு எனக்கு பெருந்தனமை இல்ல பா.. என்னை மன்னிச்சுருங்க” என்று அவன் துணிவுடன் கூறிவிட அவரோ,
“உங்க அம்மா கிட்ட நான் பேசணும்.. அவங்க நம்பர் கொடுங்க” என்க இனியாவுக்கும் விழிக்கும் மனதில் லேசாக பீதி தோன்றியது. அறிவும் சற்று தயங்க பின் தன் அன்னையின் அலைபேசி எண்ணைக் கொடுத்தான். அந்த எண்ணுக்கு ராமானுஜம் அழைக்க மறுமுனையில் அவரது அழைப்பு ஏற்கப்பட்டது. ஒலிபெருக்கியில் அழைப்பைக் கேட்க செய்த ராமானுஜம் பேச தொடங்கினார்.
“வணக்கம் மா.. என் பெயர் ராமானுஜம்”
“வணக்கம் ங்க.. நீங்க யாருன்னு தெரிஞ்சுக்கலாமா”
“நான் உங்க பையன் கூட படிச்ச இனியாவோட அப்பா”
“அடடே நீங்களா.. சொல்லுங்க சொல்லுங்க.. எப்படி இருக்கீங்க.. பாப்பா எப்படி இருக்கா.. இப்போ எல்லாம் வீட்டுக்கே அவ வர்ரதில்ல”
“நான் நல்லா இருக்கேன்.. அவளும் நல்லா இருக்கா.. நீங்க எப்படி இருக்கீங்க.. உடம்புக்கு இப்போ எப்படி இருக்கு.. அடிக்கடி உடம்பு சரியில்லைன்னு அன்பு சொல்லுவா”
“பரவாயில்லைங்க இப்போ”
“நல்லது.. நான் உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும்”
“சொல்லுங்க.. என்ன விஷயம்”
“என்னங்க நீங்க.. உங்க பையன இப்படி வளர்த்து வச்சிருக்கீங்க..” என்று கேட்க அறிவின் அம்மாவுக்கு தூக்கிவாரி போட்டது.
“என்னங்க சொல்றீங்க.. என் பையன் எது தப்பு செஞ்சுட்டானா.. ஆனா கண்டிப்பா தெரிஞ்சே செஞ்சுருக்க மாட்டான் எதுவும்.. தவறுதலா வேணா நடந்துருக்கலாம்” என்று அவர் பாட்டுக்கு கூறிக்கொண்டிருக்க,
“தெரியாம எல்லாம் செய்யலைங்க தெரிஞ்சே தான் செஞ்சுருக்காப்ல.. அதுக்கு நீங்களும் உடந்தையா இருக்கீங்க” என்று கூறவும் அறிவின் அம்மாவுக்கு எதுவும் புரியவில்லை.
“மன்னிச்சுருங்க.. நீங்க என்ன சொல்றீங்க எனக்கு புரியல”
“பின்ன என்ன மா.. இவ்ளோ பணிவா நல்ல பையனா வளர்த்துருக்கீங்க.. அப்போ உங்கள தான கேட்க முடியும்” என்று அவர் கூற அனைவரின் மனத்திலும் அப்பொழுது தான் நிம்மதி பரவியது. இனியாவுக்கு அளவு கடந்த மகிழ்ச்சி. அறிவுக்கோ அவர் கூற்றில் கண்கள் கலங்கியது. அவரின் வார்த்தையைக் கேட்ட அறிவின் தாயும்,
“அயோ நான் கூட ஒருநிமிஷம் பயந்துட்டேங்க.. ரொம்ப சந்தோஷம் உங்க வார்தையைக் கேட்டு.. ஆனா திடிர்னு எதனால இப்படி சொல்றீங்க” என்று கேட்க ராமானுஜமோ அவர்களின் காதல் விவகாரத்தைக் கூற அதனை ஏற்கனவே யூகித்திருந்த அறிவின் அன்னை,
“அன்பு எனக்கு மருமகளா கிடைக்க நான் தான் கொடுத்து வச்சிருக்கணும்.. நம்ம பிள்ளைங்க மனசுல இந்த ஆசை இல்லாம இருந்திருந்தா கூட எதிர்காலத்துல இது விஷயமா பேச நானே உங்க வீடு தேடி கண்டிப்பா வந்திருப்பேன்.. ஆனா நமக்கு சிரமம் பார்க்காம பிள்ளைங்களே ஆரம்பிச்சுட்டாங்க.. எனக்கு பரிபூரண சம்மதம்.. உங்களுக்கு சம்மதமா” என்று அறிவின் தாய் ராமானுஜத்திடம் கேட்க அவர்,
“எனக்கும் இதுல சம்மதம் தான்..” என்று கூறவும் விழியோ,
“ஹே இனியா கங்கிராட்ஸ் டி..” என்றபடி மகிழ்ச்சியாக தன் தமக்கையை அணைத்துக் கொண்டாள். இனியாவும் மனம் நிறைந்த மகிழ்வுடன் தன் தந்தையை நோக்கினாள். அவரோ சிறிது நேரத்தில் அழைப்பைத் துண்டித்துவிட்டு இனியாவை அழைத்து அமர சொன்னார். அறிவும் இனியாவும் ஒருசேர,
“ரொம்ப தேங்க்ஸ் பா” என்க அவரோ,
“காதலுக்கு நான் எதிரி கிடையாது அதே சமயம் இந்த காலத்து காதல் மேல எனக்கு பெருசா நம்பிக்கை இருந்தது இல்ல.. ஆனா அறிவு தம்பி ஓட பேச்சும் பணிவும் உன்மேல அவர் காட்டுற அக்கறையும் எனக்கு நம்பிக்கை கொடுத்துருக்கு. ஆனா ஒரு கண்டிஷன்” என்று அவர் கூற இனியாவும் அறிவும் கேள்வியாய் நோக்க அவரோ,
“அடுத்த வருஷமே கல்யாணம் நடக்கணும் உங்க ரெண்டு பேருக்கும்” என்று கூறிவிட அறிவோ,
“அது இல்லைங்கப்பா.. இன்னும் நான் பொருளாதார ரீதியா மேல வரல.. அதுக்கு அப்புறம் தான் அன்ப கல்யாணம் பண்ணிக்கனும்னு நெனச்சுருந்தேன்” என்று அவன் தயங்கி தயங்கி கூற அவரோ,
“அதே தான் நானும் சொல்றேன்.. நீங்க இந்த ஒரு வருஷத்துல என் பெண்ணுக்காக எவ்ளோ மெனக்கிட்டு உங்க வேலையை கவனிக்குறீங்கன்னு எனக்கு தெரிய வேணாமா.. அதனால அடுத்த வருஷம் கல்யாணம்.. அதுக்குள்ள உங்க வளர்ச்சியை நானும் பார்க்குறேன்.. ரொம்ப எதிர்பார்க்குற அளவுக்கு நான் பணத்தாசை பிடிச்சவன் கிடையாது.. ஆனா ஓரளவு வேணும்னு நெனைக்குறவன்.. ஒரு பொண்ணோட அப்பாவா நான் இதை எதிர்பார்க்குறதுல தப்பில்லைன்னு நினைக்குறேன்..” என்று அவர் கூற இனியா கலக்கமாக அறிவைப் பார்க்க அவளுக்கு கண்களாலேயே தைரியம் கூறியவன்,
“கண்டிப்பா பா.. உங்க எதிர்பார்ப்பை நான் நிறைவேத்துவேன்” என்று வாக்கு கொடுக்க அவரும் முழுமனதோடு ஏற்றுக்கொண்டார்.
“நான் ஏன் இதை சொல்றேன்னா.. அவளுக்கு அப்புறம் விழி வேற இருக்கா.. அன்புக்கு சீக்கிரம் கல்யாணம் முடிச்சா தான் நான் அடுத்து விழிக்கு ஏற்பாடு பண்ண முடியும்.. சினிமா துறைல இருக்குறவங்களுக்கு வரன் அமையுறது கொஞ்சம் கஷ்டம் தான..” என்றவர் விழியிடம்,
“விழிமா.. நீயாச்சு மாப்பிளை பாக்குற வேலையை எனக்கு கொடுப்பன்னு நம்புறேன்” என்று கூறிவிட்டு சிரிக்க பெண்ணவளின் மனதில் மாறனின் முகம் தோன்ற மனம் ரணமாகியது.
‘அப்பா நம்மள நம்புறாங்க.. இளாவும் என்ன மனநிலைல இருக்காங்கன்னு தெரியல.. கடவுளே.. நான் என்ன தான் செய்வேன்’ என்று நினைத்தவள் அறையினுள் சென்று விட தன் தங்கையின் மனமறிந்த இனியாவோ அவளைக் கலக்கமாக பார்த்தாள்.
