
ரகசியம் – 56
“அப்பா.. நான் காலேஜ் முடிச்சு நேரா அறிவோட வீட்டுக்கு போகுறேன் பா.. அவங்க அம்மாக்கு உடம்பு சரியில்லையாம்.. நான் கொஞ்சம் ஹெல்ப்புக்கு இருந்துட்டு வரேன்” என்று அவரின் பிரச்சனையை விலக்கியவள்,
“உங்க ஆபிஸ் பக்கம் தான அவன் வீடு இருக்கு.. நீங்க வீட்டுக்கு போகும் போது அப்படியே என்னைக் கூட்டிட்டு போயிடுங்க” என்று கூற அவரும் நிலைமைப் புரிந்து..
“சரி அன்பு.. அவங்கள கவனிச்சுக்கோ.. நான் வேலை முடிஞ்சதும் உன்னைக் கூப்பிட வரேன்..” என்று அனுமதியளித்தார். அவளின் செயலில் அறிவின் கண்கள் கலங்கியது. அதைக் கவனித்த இனியா,
“டேய் திருட்டுப்பயலே.. இது என்ன பழக்கம் கண்கலங்குறது.. உனக்கும் உன் அம்மாக்கும் நான் செய்யாம வேற யார்டா செய்ய போறாங்க” என்று கேட்க அவனோ,
“உன்ன அன்புன்னு கூப்புடுறதில்ல தப்பே இல்ல அன்பு.. தேங்க்ஸ் அன்பு” என்று கூற அவளோ,
“இல்ல அமுது.. நான் தான் உனக்கு தேங்க்ஸ் சொல்லணும்.. விவரம் தெரிஞ்ச நாள்ல இருந்தே எனக்கு அம்மா பாசம் கிடைச்சது இல்ல.. முதல்முறையா உன் அம்மாகிட்ட தான் அந்த பாசத்தை நான் உணர்ந்தேன்.. என் அம்மா உயிரோட இருந்து அவங்களுக்கு இதே மாதிரி உடம்பு சரியில்லைன்னா நான் இதெல்லாம் செய்ய மாட்டேனா.. அதே மாதிரி தான் டா இதுவும்.. இது உதவியா நான் செய்யல.. என்னோட கடமையா நான் நினைக்குறேன்.. இந்த மாசம் மட்டுமில்ல இனிமே மாசாமாசம் மூணு நாள் உங்க வீட்டுக்கு நான் வருவேன் அம்மாக்கு ஒத்தாசையா இருக்க.. சரியா” என்றவள் அவனின் முடியை கோதிவிட அவளின் அன்பிலும் அக்கறையிலும் காதலிலும் கரைந்து தான் போனான் ஆணவன்.
ஒருஜோடி இவ்வாறு காதலில் லயிக்க மற்றொரு ஜோடி அவர்களின் காதலைப் பரிமாறிக் கொண்டிருந்தனர்.
“எனக்கு பயமா இருக்கு தூரா.. மாமாக்கு என்மேல வருத்தம் இருக்கு.. என் அப்பா அம்மா பத்தி அப்படி சொன்னது வேற ஒருபக்கம் மண்டைய அரிக்குது.. ஏதோ ஒன்னு தப்பா நடக்க போகுதுன்னு என் மனசு பதறுது டா” என்று சோகமாய் மதுரிகா கூற மதுரனோ,
“நீ ஏன் டி இப்படி நெகட்டிவா யோசிக்குற.. உன் அத்தை உன்னைப் புரிஞ்சுக்கிட்டாங்க தான.. அவங்க உன் மாமாக்கு புரிய வைப்பாங்க.. உன் அப்பா அம்மா பத்தின ஏதோ ஒரு பெரிய விஷயம் இருக்குதுன்னு நினைக்குறேன் மது.. உண்மை தெரியாம எங்க போயிட போகுது.. நீ தேவை இல்லாம ரொம்ப யோசிக்காத” என்று ஆறுதல் கூற மதுவோ கலக்கமாய் மதுரனை ஏறிட்டாள்,
“ஏன் டி அப்படி பாக்குற” என்று மதுரன் கேட்க,
“என்ன ஆனாலும் நீ என்னை விட்டு போகமாட்ட தான..” என்று கேட்டாள் பெண்ணவள் பின்னாளில் தான் தான் அவனின் மன உளைச்சலுக்கு ஆளாக போகிறோம் என்ற உண்மை அறியாமல்.
“லூசு.. நீ எனக்கானவ டி.. யார் என்ன சொன்னாலும்.. உன்னைவிட்டு நான் போகமாட்டேன் சரியா.. அப்படியே சூழ்நிலைக் காரணமா நான் தூரமா போனாலும் உன் நெனப்புல தான் இருப்பேன்.. பயப்படாத… என் வாழ்க்கை ஒன்னு உன்னோட.. அப்படி இல்லைனா உன் நெனைப்போட அவ்ளோ தான்.. வேற யாருக்கும் இங்க இடம் கிடையாது” என்று தன் மனதில் கைவைத்து உறுதியளித்தான் அவனது உறுதியை அவனே உடைக்கும் காலம் கூடிய விரைவில் வரப்போகிறது என்றறியாமல்..
எப்போதுமே எதிர்பாராததை எதிர்ப்பாருங்கன்னு சிலர் சொல்வாங்க.. ஆனா அப்படி எதிர்பாராததை நாம எதிர்பார்த்தலும் நாம எதிர்பார்த்தத்துக்கு நேர் எதிரா தான் எல்லாத்தையும் இந்த விதி நமக்கு கொடுக்கும்.. இப்படிப்பட்ட விதி நம்ம மதுரன் மதுரிகா மற்றும் அவங்கள சுத்தி இருக்குறவங்க வாழ்க்கைல என்ன செய்ய காத்திருக்கு.. அவங்க வாழ்க்கைல இருக்க ரகசியம் தான் என்னன்னு கூடிய சீக்கிரமே தெரிஞ்சுப்போம்..
மாறனும் மதுரிகாவும் பிரபா மற்றும் பானு இருவரின் இறப்பிற்கான காரணமென்ன என்றறிய பல வழிகளில் முயற்சி செய்து யோசித்து பார்த்தனர். ஆனால் பதில் ஏதும் கிட்டவில்லை. சரி விஜயாவிடம் கேட்கலாம் என்றால் அவருக்கு ஏதென்னும் ஆகிவிடுமோ என்ற பயம் இருந்தது. சத்யனுக்கு ஏற்கனவே மதுவின் காதல் விவகாரத்தினால் கோபமிருப்பதால் அவரிடம் கேட்கவும் அப்பொழுது தைரியம் வரவில்லை. கடைசியாக அவர்கள் சொல்லும் போது சொல்லட்டும் என்ற முடிவுக்கு வந்துவிட்டனர் மதுவும் மாறனும்.
அவ்வாறே சிலவாரம் கழிய ஒருநாள் விஜயாவும் சத்யனும் மதுவிடம் உண்மையைக் கூறிவிடலாம் என்ற முடிவுடன் மதுவைத் தங்கள் அறைக்கு பேச அழைத்தனர். வந்தவள் புன்னகை முகமாக வந்து சேர விஜியோ,
“என்ன மது சிரிச்சிட்டே வர.. என்ன விஷயம்” என்று கேட்க அவளோ,
“உங்க மகன் தான் ஜோக் சொல்றேங்குற பேருல மொக்கைப் போட்டுட்டு இருந்தான்.. அதைக் கேட்டு தான் சிரிச்சுட்டு வரேன்.. நீங்க சொல்லுங்க அத்தை என்ன விஷயம்” என்று கேட்க உண்மையைக் கூறினால் அவளின் முகத்தில் இருக்கும் புன்னகை காணாமல் போய்விடும் என்று உணர்ந்த விஜயாவிற்கு மனது வலித்தது.
நிம்மதியாக இருப்பவளின் மனதில் உண்மையைக் கூறி பெரும் காயத்தை ஏற்படுத்த வேண்டாம் என்று நினைத்தவர் அவளிடம்,
“ஒண்ணுமில்ல முருகர் கோவிலுக்கு போகணும்னு நெனச்சுருந்தேன்.. ஆனா என்னால இன்னைக்கு போக முடியல.. நீயும் மாறனும் போயிட்டு வந்துடுறீங்களா.. அதைக் கேட்க தான் வர சொன்னேன்” என்று அழைத்த காரணத்தை மாற்றி கூற சத்யன் கேள்வியாய் அவர் முகம் நோக்கினார். அவரிடம் கண்ணசைவில் விஜயா அமைதியாக இருக்க சொல்ல சத்யனும் அமைதி காத்தார்.
“இதுக்கு தான் கூப்பிட்டிங்களா.. ஓகே அத்தை நாங்க போயிட்டு வரோம்” என்று கூறிவிட்டு வெளியேறினாள் மது. அவள் சென்றுவிட்டதை உறுதிசெய்த சத்யன்,
“என்ன விஜி.. உண்மையா சொல்ல தான் வர சொன்ன.. இப்போ எதுக்கு மாத்தி சொன்ன” என்று கேட்க விஜயாவோ,
“இல்லைங்க.. மது பாவம்.. அவ கஷ்டப்படுறத என்னால பார்க்க முடியாதுங்க.. ” என்று கண்கலங்க கூறினார் விஜயா.
“என்ன விஜயா நீ.. நாம அவகிட்ட இப்போ உண்மையா சொல்லலைன்னா அவளுக்கு மதுரன் மேல இருக்குற காதல் கூடிட்டே தான போகும்.. அது இன்னும் தான அவளுக்கு காயத்தைக் கொடுக்கும்”
“நீங்க சொல்றது சரி தான்.. ஆனா இந்த காலத்து பசங்க காதலுக்கு ஆயுள் ரொம்பவே கம்மி.. ஒருவேளை நாம உண்மைய சொல்லமையே அவங்களுக்குள்ள சண்டையோ பிரச்சனையோ வந்து அவங்க பிரிஞ்சுட்டா நல்லது தான.. உண்மைய சொல்ல வேண்டிய அவசியம் நமக்கு ஏற்படாது தான” என்ற நப்பாசையில் விஜயா கேட்க,
“அவங்களே பிரிஞ்சா நல்லது தான்.. ஆனா பிரியலைனா என்ன செய்ய.. அப்படி அவங்க பிரிஞ்சாலுமே மதுக்கு அவங்க அப்பா அம்மா இறப்பு பத்தின கேள்விகள் கண்டிப்பா இருக்கும்.. நம்மகிட்ட ஒருநாள் கேட்க தான் செய்வா”
“அது அந்த நேரம் வேற ஏதாவது சொல்லி சமாளிச்சுக்கலாம்.. கொஞ்ச நாள் போகட்டுமே ப்ளீஸ்” என்று கெஞ்சலாய் விஜயா கேட்க வேறுவழியின்றி அரைமனதாய் சத்யன் சம்மதிக்க அப்போதைக்கு மதுவிடம் உண்மையைக் கூறுவதற்கு முற்றுக்கட்டைப் போட்டனர் தம்பதிகள்.
அதற்கிடையில் முதலமாண்டு படிக்கும் பொழுது சஹா பிலிம் இண்டஸ்ட்ரியின் எம்டி தான் கூறியது போலவே பாண்டவாஸ் அணியை வைத்து ஒரு குறும்படம் எடுக்க அதில் ஐவரும் நடிக்க அதுவும் குறிப்பிடத்தகுந்த அளவு மக்களிடம் வரவேற்பைப் பெற்று கொடுக்க என அடுத்த ஆறு மாதங்கள் மிக விரைவாக செல்ல இரண்டாம் ஆண்டு முடிந்து மூன்றாமாண்டில் காலடி எடுத்து வைத்தனர் ஐவரும். விழியும் இடைப்பட்ட காலத்தில் பல கதைகள் எழுதி இயக்கும் நுணுக்கங்களையும் கற்றுக்கொண்டே இரண்டாமாண்டில் கால் வைத்தாள்.
மூன்றாமாண்டின் தொடக்கத்திலேயே ஐவரும் தனி தனியாக ஒருசில குறும்படங்கள் மற்றும் ஆல்பங்களில் நடிக்கும் பணியில் இருந்தனர். அதனால் முன்புபோல் தினமும் சந்திக்க வாய்ப்புக்கிட்டவில்லை ஐவருக்கும். விழியும் அவள் பணியில் மும்முரமாக இருந்தாள்.
இப்பொழுதெல்லாம் மாறனுக்கு அவ்வப்பொழுது விழியைப் பற்றிய தேடல் எழுகின்றது. தினமும் பார்த்து நன்றாக பேசும் ஒருத்தி திடீரென சிலநாட்களாக கண்களில் தென்படாமல் போனதால் வந்த தேடலா… அல்ல காதலின் ஆரம்பமா..?
காதலின் ஆரம்பம் என்று அவன் மனம் கூறினாலும் ஒருகாலத்தில் அவளின் சகோதரியைக் காதலித்தோம்.. இப்பொழுது அவளின் தங்கை மீது எவ்வாறு காதல் வரும் என்று தனக்கு தான் கேள்வி கேட்டு இது காதல் இல்லை என்று ஆணித்தரமாக நம்பினான் மாறன். ஆனாலும் அவனின் மனம் அவள்பால் கொஞ்சம் கொஞ்சமாக சாய்வது அவனறியாத ஒன்று.
இவ்வாறு அறுவரும் தத்தம் பணிகளில் ஈடுபட்டிருந்தபோதும் வாரம் ஒரு முறையாவது ஒன்றாக கண்டிப்பாக சந்தித்துக்கொள்ளும் பழக்கத்தை வைத்திருந்தனர். காதல் மனது பிரிவுகளை ஏற்பது கடினம் தானே.. இச்சிறு பிரிவில் அவர்களின் காதல் இன்னும் இன்னும் அதிகரித்தது.
அவ்வாறு ஒரு வார இறுதியில் அறுவரும் தங்கள் கல்லூரியில் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கையில் மதுரனின் அலைபேசி அலறியது.
“ஹே காய்ஸ் அப்பா கால் பண்ணிருக்காங்க.. ஒன் செக்” என்றபடி அழைப்பை ஏற்று சற்று தூரம் தள்ளி வந்து காதில் வைத்தான்.
“ஹாய் பா.. எப்படி இருக்கீங்க”
“மதுரா…” என்றபடி வலி நிறைந்த குரலில் அவர் அழைக்க அதனை உணர்ந்தவன்,
“அப்பா என்னாச்சு பா.. ஏன் ஒருமாதிரி பேசுறீங்க” என்று பதற்றமாக கேட்க அவரிடம் இருந்து அலைபேசியை வாங்கிய அவனின் அன்னை,
“டேய் மதுரா.. திடிர்னு அப்பா என்னென்னமோ பேசுறாரு டா.. உன்னைப் பாக்கணும் போல் இருக்குன்னு சொல்றாரு.. நீ உடனே பிளைட் ஏறி வா டா” என்று கூற அவனோ,
“சரி சரி மா பயப்படாதீங்க.. நான் இன்னைக்கு நைட்டே பிளைட் ஏறுறேன்.. அப்பாவைக் கூட இருந்து பாத்துக்கோங்க.. ஏர்லி மார்னிங் நான் ரீச் ஆயிடுவேன் மா..” என்று கூறியவன் அழைப்பைத் துண்டிக்க அவனின் பதற்றத்தைக் கண்ட மது,
“என்னாச்சு தூரா.. ஏன் பதற்றமா இருக்க” என்று கேட்டாள்.
“அப்பா திடிர்னு என்னை பாக்கணும்னு சொல்றாரு.. அம்மா உடனே வர சொல்றாங்க.. எனக்கு பயமா இருக்கு” என்று கூற,
“நீ உடனே கிளம்பு தூரா.. அப்பாக்கு எதுவும் ஆகாது.. பயப்படாம போ” என்று அவனை அணைத்து ஆறுதல் கூறினாள். பிறகு அனைவரிடமும் இருந்து விடைபெற்று வீட்டிற்கு சென்றான்.
இரவு 10.20க்கு புறப்படும் விமானத்தில் தனக்கான பயணசீட்டை இணையத்தில் முன்பதிவு செய்துவிட்டு தன் உடைமைகளை எடுத்துவைக்க தயாரானான். தந்தையின் நினைவில் மனம் அல்லாட வீட்டில் இருக்கமுடியாத காரணத்தால் வீட்டிலிருந்து 7 மணிக்கே புறப்பட்டான் அறிவமுதனோடு. 7.30 மணிக்கெல்லாம் விமான நிலையம் வந்தடைந்தவன் சோகமாய் அமர்ந்திருந்தான். அறிவமுதனோ அவனுக்கு தைரியமூட்டிக் கொண்டிருந்தான்.
ரகசியம் – 57
“டேய் மச்சான் அப்பாக்கு கண்டிப்பா எதுவும் ஆகாது.. ஏதாச்சும் உன்ன நெனச்சு கெட்ட கனவு கண்டுருப்பாரு டா.. அதான் உடனே பாக்க கூப்பிடுறாரு.. நீ பயப்படுற மாதிரி எல்லாம் எதுவும் இருக்காது” என்று ஆறுதல் கூறினான்.
ஆனால் மதுரனின் மனதில் தன் தந்தையைக் குறித்த பயமும் ஒரு புறம் இருக்க மறுபுறம் வேறு ஏதோ ஒரு உணர்வு அவனை வாட்டி வதைத்தது. அதை என்னவென்று யோசிக்க முயன்று சோர்வாய் அமர்ந்திருந்தான்.
அங்கு மதுரிகா அவளது அறையில் சோகமாய் படுத்திருக்க அவள் வாட்டத்தைக் கண்ட மாறன்,
“என்னாச்சு டி.. ஏன் ஒரு மாதிரி இருக்க” என்று கேட்க அவளோ,
“தெரியல மாறா.. மனசுக்கு ஒரு மாதிரி நெருடலா இருக்கு.. மதுரனைப் பார்க்கணும் போல இருக்கு.. ”
“ஹே லூசு.. உங்க காதலுக்கு ஒரு அளவு இல்லையா டி.. காலைல தான பார்த்தீங்க.. அவன் ஊருக்கு போய்ட்டு மூணு நாள்ல வந்துருவேன்னு சொல்லிருக்கான்ல.. மூணு நாள் பார்க்காம இருக்குறது அவ்ளோ பெரிய கஷ்டமா என்ன” என அவள் சாதாரணமாக தான் கூறுகிறாள் என்று நினைத்து கேலியாக கேட்க,
“தெரியல மாறா.. மனசுக்கு வித்தியாசமா தோணுது.. என்னால வேற எதுவும் யோசிக்க முடியல” என்று கூறியவள் வேறு திசையில் கவலைத் தோய்ந்தவாறு வெறித்துக்கொண்டிருப்பதைக் கண்டவனுக்கு அவளின் கலக்கம் புரிந்தது. சிலவினாடி யோசித்தவன் பிறகு,
“சரி ஓகே கிளம்பு போலாம்” என்றிட அவனை ஏறிட்டவள்,
“எங்க டா..” என்றாள்.
“மதுரனைப் பார்க்கனும் போல இருக்குன்னு சொன்னல.. அப்புறம் என்ன கிளம்பு நீ”
“இப்போ எப்படி மாறா.. அத்தை மாமா கேட்டா என்ன சொல்லுவ”
“அதை நான் பார்த்துக்கறேன் டி.. நீ முதல்ல ரெடி ஆகு” என்று கூறியவன் அறையைவிட்டு வெளியேறி மதுரனுக்கு, ‘எங்க டா இருக்க.. கிளம்பிட்டியா’ என்று குறுஞ்செய்தி அனுப்பினான்.
‘எஸ் டா.. ஐம் இன் ஏர்போர்ட்’ என்று மதுரனிடம் இருந்து பதில் வர தன் தாய் தந்தையிடம் சினிமா இரவு நேர காட்சிக்கு தானும் மதுவும் போகிறோம். பதினோரு மணிக்குள் வந்துவிடுவோம் என்று கூறிவிட்டு அவளை அழைத்துக் கொண்டு விமான நிலையம் வந்து சேர்ந்தான்.
அங்கு மதுரனும் வெகுநேரமாக அந்த மற்றொரு உணர்வு என்னவென்று யோசிக்க அவனின் சிந்தனைக் கடைசியாக மதுரிகாவிடம் வந்து நின்றது. தன் அலைபேசியை எடுத்தவன் அவளுக்கு அழைக்க அவளின் அலைபேசி அவனின் பின்னிருந்து அலறுவது போன்று கேட்டது. சட்டென அவன் திரும்பி பார்க்க அவனின் அவள் கலங்கிய கண்களோடு நிற்க சற்றும் யோசிக்காமல் இறுக்கமாக அவளை அணைத்துக் கொண்டான். அவளுக்கும் அந்த நேரம் அவ்வணைப்பு தேவையாய் இருக்க அவளும் அணைத்துக் கொண்டாள். மதுரன் தன்னவளின் கன்னம் தாங்கியபடி பேச ஆரம்பித்தான்.
மாறனும் அறிவும் அவர்களைப் பார்த்து சிரித்துவிட்டு அவர்களுக்கு தனிமையளித்து சற்று தூரம் தள்ளி வந்து அமர்ந்தனர். அறிவமுதனோ அவர்கள் இருவரையும் தன் அலைபேசியில் புகைப்படம் எடுக்க மாறனோ,
“எதுக்கு டா அறிவு” என்று கேட்டான்.
“சும்மா தான் டா.. எவ்ளோ ரொமான்டிகா நிக்குறாங்க பாரேன்.. நம்ம க்ரூப்ல அனுப்பி கலாய்ப்போம்..” என்று கூறி சிரித்தவன் பிறகு,
“அதுமட்டுமில்ல இதெல்லாம் ஒரு கோல்டன் மெமரிஸ்..” என்றபடி புகைப்படம் எடுத்து வைத்துக்கொண்டான்.
“அதுவும் சரி தான் அறிவு.. உண்மையான காதலுக்குன்னு சில எடுத்துக்காட்டுகள் இப்போவும் இருக்க தான் செய்றீங்க” என்று இரு ஜோடிகளையும் குறிப்பிட்டு கூறியவனின் உதடு சிரித்தாலும் தனக்கு மட்டும் ஒரு இணை இல்லையே என்ற வருத்தம் மனதோரம் தோன்றியது. அங்கு மதுரனோ,
“எதுக்கு டி இப்போ அழுகுற” என்று கேட்க அவளோ,
“நீ எதுக்கு அவ்ளோ அவசரமா கட்டிபிடிச்சியாம்”
“தெரியல டி திடிர்னு உன்ன பார்த்து பேசணும்னு தோணுச்சு.. அதான் உடனே கால் பண்ணேன்.. பார்த்தா எனக்கு பின்னாடி நீ நிக்குற”
“அதே தான் எனக்கும்.. மாறன் கிட்ட சோகமா சொன்னேன்.. அவன் உடனே கூட்டிட்டு வந்துட்டான்”
“என்னவோ தெரியல.. எப்படியும் மூணு நாள்ல வர தான் போறேன்.. ஆனா ஏன் எனக்கு இனிமே உன்னைப் பார்க்கவே முடியாத மாதிரி உன்ன தேடுதுன்னு தெரியல” என்று கூற அவனின் இதழை தன் விரல்களால் மூடியவள்,
“டேய் அப்படி சொல்லாத டா.. ” என்றாள் வருத்தமாக.
“நெருப்புன்னு சொன்ன வாய் சுட்டுடுமா என்ன” என்று கேலியாக கேட்டவனுக்கு அப்பொழுது புரியவில்லை. சில சமயங்களில் நடக்க போவதை நாமறியாமல் நம்மால் யூகிக்கும் நிலை ஏற்படும் என்று.
“நம்ம லவ் பண்ண இந்த ஒன்றை வருஷத்துல ஒருநாள் கூட நாம பார்க்காம இருந்தது இல்லல.. அதனால தான் நமக்கு இப்படி தோணுது போல.. சரி அது இருக்கட்டும்.. நீ பயப்படாம போ.. அப்பாக்கு எதுவும் ஆகாது.. போய்ட்டு கால் பண்ணு.. முடிஞ்சளவு சீக்கிரமா வரப்பாரு தூரா” என்று அவனுக்கு தைரியமளித்து தன் வேண்டுகோளையும் உத்தரவாக கூற அவனோ,
“உத்தரவு மஹாராணி” என்க பிறகு இருவரும் சிரித்துக் கொண்டனர். அவ்வாறு சில மணித்துளிகள் பேசியபடி கடக்க ஒலிபெருக்கியில் பயணிகளை உள்ளே வரும்படி அறிவிப்பு விடுத்தனர். கடைசியாக ஒருமுறை மதுவை அணைத்து விட்டு அவன் விலக அப்பொழுது அவள் கழுத்தில் இருந்த துப்பட்டா அவன் கழுத்தில் இருந்த வெள்ளி செயினில் தொங்கிய மது என்று பெயர் பொறிக்கப்பட்ட டாலரில் மாட்டிக்கொண்டது. ஐந்து நிமிடங்களாக போராடி எடுக்க முயன்றனர். ஆனால் நன்றாக சிக்கிக்கொண்ட காரணத்தாலும் செல்வதற்கு தாமதமாகிக் கொண்டிருப்பதாலும் சட்டென தன் செயினைக் கழட்டி தலைவலியாக அவளுக்கு மாட்டிவிட்டு,
“நீ வச்சுக்கோ டி.. உன்கிட்ட தான் இருக்க ஆசைப்படுது போல” என்றவன் அவள் கண்ணம் தட்டிவிட்டு சிரித்தபடி செல்ல போக அவனின் கரம்பற்றிய மது தன் விரலில் இருந்த வெள்ளி மோதிரத்தைக் கழட்டி அவனின் சுண்டுவிரலில் அணிவித்து,
“அப்போ இதை நீ வச்சுக்கோ” என்று கூறி சிரித்தாள். அவளின் செயலில் சிரித்தவன் பிறகு மூவரிடம் இருந்து விடைபெற்று சென்றான். அவனும் திரும்பி திரும்பி மதுவைப் பார்த்துக்கொண்டே செல்ல மதுவும் இமைக்காமல் செல்லும் மதுரனையே ஏக்கமாக பார்த்தாள். மூன்று நாள் பிரிவிற்கு ஏன் தாங்கள் இவ்வளவு கவலைக் கொள்கிறோம் என்ற கேள்வி இருவர் மனத்திலும் ஓடியது.
சிலநேரங்களில் விதி நடக்கப்போகும் விபரீதத்தின் எச்சரிக்கையாய் மன உணர்வுகளை பிரதிபலிப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளது. அதிலாவது நாம் சுதாரித்து கொள்ளவேண்டுமென்ற எண்ணத்துடன்.. ஆனால் மனிதமனம் அதனை தாமதமாகவே புரிந்துகொள்கிறது. முன்னதாகவே புரிந்துகொண்டாலும் நடக்கப்போவதை மாற்ற இயலுமா என்ன..?
நதி போகும் வழியில் யாரும்
அணை போட்டு தடுத்திட கூடும்
மேகத்தில் அணை போட
வழி இல்லையே..
நிகழ் காலம் கண்முன் முன்னே
வருங்காலம் கனவின் பின்னே
விதி போடும் கணக்கிற்கு
விடை இல்லையே
தங்கள் பார்வையிலிருந்து மதுரன் மறைந்ததும் மற்ற மூவரும் வீட்டிற்கு கிளம்பினர்.
இவ்வாறு விமான நிலையத்தில் நடந்த அனைத்தையும் யோசனையாக பார்த்துக் கொண்டிருந்த ஒருஜோடி கண்கள் மதுவையும் மாறனையும் தெளிவாக ஒருமுறை பார்த்த உறுதி செய்துகொண்டு புறப்பட்டது.
அன்றைய நாள் முடிந்து மறுநாள் விடிந்தது. சத்யன் தன் தொழில் விஷயமாக தன் நண்பர் ஒருவரை சந்திக்க வந்திருந்தார். அப்பொழுது அவரோ,
“சத்யன்.. நான் ஒன்னு சொன்ன தப்பா நெனைக்க மாட்டீங்க தான” என்று கேட்க,
“சொல்லுங்க மாணிக்கம்.. என்ன சொல்லணும்”
“உங்க பசங்க ரெண்டு பேரையும் நேத்து நைட் ஏர்போர்ட்ல பார்த்தேன்.. அதுவும் உங்க பொண்ணு வேற ஒரு பையன் கூட ரொம்ப நெருக்கமா நின்னு பேசிட்டு இருந்தா..” என்று கூற,
“ஏர்போர்ட்லயா.. என்ன சொல்றீங்க மாணிக்கம்.. நேத்து என் பசங்க சினிமாக்கு தான் போயிருந்தாங்க அந்த நேரம்.. நீங்க வேற யாரையோ பார்த்துட்டு என் பசங்கன்னு நினைச்சுருப்பீங்க”
“இல்ல சத்யன்.. உங்க ரெண்டு பசங்களையும் தான் நான் அடிக்கடி பார்த்துருக்கேனே.. கண்டிப்பா அது உங்க பசங்க தான்.. அதுவும் அந்த பொண்ணு வேற ஒரு பையன கட்டிப்பிடிச்சு பேசிட்டு இருந்ததைப் பார்த்து மனசுக்கு சரியா படல.. அதான் நண்பன் என்ற முறைல எச்சரிச்சேன்” என்று கூறிவிட சத்யனுக்கு சற்று அவமானமாக இருந்தது.
“ஓகே மாணிக்கம்.. நான் கவனிச்சுக்குறேன்” என்றவர் ஒரு முடிவோடு வீட்டிற்கு வந்தார். கல்லூரி முடித்து இருவரும் வீட்டிற்கு வர மாறன் அவன் அறைக்கு சென்றிவிட,
“மது.. இங்க வா” என்று அழைத்தார் சத்யன்.
“சொல்லுங்க மாமா”
“நேத்து நைட் நீயும் மாறனும் எங்க போனீங்க” என்று அவர் கேட்கவும் மதுவிற்கு உள்ளே குளிர் பரவியது.
“சினிமாக்குன்னு சொல்லிட்டு தான மாமா போனோம்” என்று அவள் சமாளிக்க நினைக்க,
“இங்க பாரு மது.. என்கிட்ட பொய் சொல்லணும்னு நினைக்காத” என்று அவர் உறுதியாக கூற இதற்குமேல் மறைப்பது கடினம் என்று நினைத்தவள்,
“சாரி மாமா.. நேத்து மதுரன் அவங்க அப்பாக்கு உடம்பு சரியில்லன்னு ஃபாரின் கிளம்பி போய்ட்டான்.. அவனை சென்டாஃப் பண்ண தான் போனோம்” என்று தலைகுனிந்து கூறினாள். அவள் மதுரனோடு தான் நெருக்கமாக நின்று பேசியிருக்கிறாள் என்றறிந்த சத்யன் அவளை அனுப்பிவிட்டு அன்றிரவு விஜயாவிடம் நடந்ததைக் கூறி,
“இதுக்கு மேல இந்த விஷயத்தை அப்படியே விடுறது சரியில்ல விஜி.. நாளுக்கு நாள் அவங்க ரெண்டு பெரு நெருக்கமா தான் ஆகுறாங்க..” என்றார்.
“என்னங்க சொல்றீங்க.. அவங்க சேரவே கூடாது.. அது ரொம்ப தப்பாயிடுமே.. இப்போ என்ன தான் பண்றது”
“நான் தான் முந்தியே சொன்னேன்ல.. நீ தான் அவங்க பிரிஞ்சுடுவாங்க. கொஞ்ச நாள் போகட்டும்னு சொல்லி விட்டுவச்ச.. இப்போ பாரு இன்னும் இன்னும் அவங்க காதல் கூட தான் செஞ்சிருக்கு.. நமக்கு இப்போ வேற வழியே இல்ல விஜி.. மதுரன் யாருங்குற விஷயத்தையும் பிரபா-பானு சாவுக்கான காரணத்தயும் நாம மது கிட்ட சொல்லி தான் ஆகணும்” என்று கூற விஜயாவும் மனமில்லாமல் ஒப்புக்கொண்டார்.
“சரி அப்போ நாளைக்கு அவ காலேஜ் போயிட்டு வரட்டும்.. அவகிட்டயும் மாறன் கிட்டயும் சேர்த்தே நாம நடந்ததை சொல்லிடுவோம் விஜி” என்று முடிவு செய்தனர் இருவரும்.
மறுநாள் மதுவின் காதல் கிளையை முறித்துவிடும் நோக்கத்தோடும் மாறனின் பட்டமர மனதில் புதிய தளிர் ஒன்றை முளைக்கவிடும் நோக்கத்தோடும் விடியலை விதைத்தது விதி. அதனை அறியாமல் மது உற்சாகமாய் மாறனோடு கிளம்பி கல்லூரி சென்றாள். அறிவு, இனியா, மது மற்றும் மாறன் நால்வரும் கல்லூரியில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.
அப்பொழுது விழி கலங்கிய கண்களோடு அங்கு வர அனைவரும் பதற்றத்தோடு பார்த்தனர்.
ரகசியம் – 58
இனியாவோ, “ஹே என்னடி ஆச்சு.. எதுக்கு இப்போ அழுகுற” என்று கேட்க அவளின் அழுகை இன்னும் அதிகரித்தது. மாறனோ,
“இமை.. என்னாச்சு சொன்னா தான தெரியும்.. சொல்லு இமை.. எதுக்கு அழுகுற” என்று இனியாவை விட பதற்றமாக கேட்டான். அறிவோ,
“ஆமா விழி.. எதுவும் சொல்லாம அழுதா நாங்க என்னன்னு நெனைக்குறது” என்று அவன் பங்கிற்கு கேட்க மதுவோ,
“யாராச்சும் ஏதும் கிண்டல் பண்ணுனாங்களா விழி” என்று கேட்க அனைவரின் கேள்விக்கும் விழியிடம் இருந்து விசும்பலே பதிலாக வந்தது. பொறுமையிழந்த மாறனோ,
“இமை.. நான் கேக்குறேன்ல இப்போ சொல்ல போறியா இல்லையா” என்று சற்று கண்டிப்பாக கேட்க நடந்ததைக் கூற ஆரம்பித்தாள் இமைவிழி.
இரண்டாம் ஆண்டில் காலடி வைத்த இமைவிழியின் திரைப்பட இயக்க துறையில் மாணவர்களுக்கு சிறு போட்டி ஒன்று வைக்கப்பட்டது. அவர்களது கதைகளைப் பிரபல தயாரிப்பாளர்களின் அலுவலகத்தில் இருந்து சில நபர்கள் வந்து படித்து குறிப்பிடத்தகுந்த கதைகளைத் தேர்வு செய்து குறும்படம் தயாரிக்க முடிவு செய்திருந்தனர். இதன்மூலம் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு சுலபமாக இயக்குனர் ஆகும் வாய்ப்பு அமையும். அதற்காக நம் இமைவிழியும் அவளது கற்பனைக் கொண்டு நல்லதொரு கதையை எழுதி போட்டிக்கு சமர்பித்திருந்தாள்.
வந்திருந்த நபர்களுக்கும் இவளது கதை பிடித்திருந்தது. யாருடைய கதைகளெல்லாம் தேர்வாகியிருந்ததோ அவர்களை எல்லாம் தனி தனியாக அழைத்து வந்திருந்த குழு பேச்சு வார்த்தை நடத்தியது. விழியையும் அவர்கள் அழைத்திருக்க அவளும் உள்ளே சென்றாள்.
“வெல்.. மிஸ் இமைவிழி… ரைட்..?” என்றபடி தோரணையாக ஒருவர் கேட்ட்டபடி அவளை ஆராய அவளும்,
“எஸ் சார்..” என்றாள்.
“ஓகே.. உங்க ஸ்டோரி படிச்சோம்.. உங்கள மாதிரியே அதுவும் வெரி இம்ப்ரெஸிவ்” என்று கூறியவனின் கண்கள் அவளின் மேனியை தழுவ பெண்ணவளின் உடல் கூசியது. தன் உடை சரியாக தான் இருக்கிறதா என்று ஒரு முறை ஆராய்ந்தவள் முகத்தைக் கடுகடுவென வைத்தபடி நின்றிருந்தாள்.
“ஓகே.. எல்லாரோட ஸ்டோரிய விட உங்க ஸ்டோரி ரொம்ப இன்ட்ரெஸ்ட்டா இருந்துச்சு.. பட் இவ்ளோ சின்ன வயசுல டைரக்டர் ஆகுறதுங்குறது அவ்ளோ ஈஸியான விஷயம் கிடையாது.. தெரிஞ்சுருக்கும் நினைக்குறேன்” என்று மற்றொருவன் கூற,
“ஆமா கண்டிப்பா.. அதுவும் முதல் டைரக்ஷனே நம்மள மாதிரி பெரிய ப்ரொடக்ஷன்ல பண்ணனும்னா அதுக்கெல்லாம் எவ்ளோ பெரிய அதிர்ஷ்டம் வேணும்” என்றான் மூன்றாமவன்.
“எக்ஸ்சாக்ட்லி.. ஆயிரம் கணக்கான பேர் இந்த மாதிரி வாய்ப்பு கிடைக்காதான்னு வெளிய காத்துட்டு கிடக்கங்க.. பட் யூ ஆர் வெரி லக்கி.. அப்படிப்பட்ட அதிர்ஷ்ட வாய்ப்பு உங்களுக்கு கிடைக்கணும்னா.. நீங்க சில விஷயம் பண்ணனும்.. அதுவும் உங்களால முடிஞ்சா ஒன்னு தான்” என்று நான்காவது நபர் கூற அவளோ,
“புரியல.. நீங்க என்ன சொல்றீங்கன்னு” என்று கண்களை சுருக்கி சந்தேகமாக கேட்டாள் விழி.
“வெரி சிம்பிள்.. ஜஸ்ட் யு ஷுட் மேக் சம் அட்ஜஸ்ட்மெண்ட்ஸ் வித் அஸ்” என்று முதலாமவன் கூறியதும் தான் தாமதம்,
“ஹெலோ.. மைண்ட் யுவர் வொர்ட்ஸ்.. ஹௌ டேர் யூ டு டாக் லைக் திஸ்” என்று கர்ஜித்தாள் பெண்ணவள்.
“மிஸ் இமைவிழி.. ஜஸ்ட் சில்.. நீங்க கத்துறதுனால எந்த யூசும் இல்ல.. திங்க் ப்ராக்டிகலி.. கொஞ்சம் நீங்க புத்திசாலி தனமா யோசிச்சா போதும்.. உங்க வாழ்க்கை ரொம்ப உயரத்துக்கு போய்டும்.. சினிமா பீல்டுக்குள்ள வந்த அப்புறம் இதுக்கெல்லாம் நீ ரெடியாகி தான் ஆகணும்..” தனது கோப்புகளை அவனிடம் இருந்து வெடுக்கென பிடுங்கியவள்,
“பொறுக்கிங்க” என்று கூறியபடி வெளியில் செல்ல எத்தனிக்க,
“ஹெலோ ஒன் மினிட்” என்று ஒருவன் அழைக்க கண்களில் கோபக்கனல் கக்க அவனை ஏறிட்டாள் பெண்ணவள்.
“நாங்க உனக்கு நல்ல வாய்ப்பு கொடுத்தோம்.. உனக்கு பயப்படுத்திக்க தெரியல.. தட்ஸ் ஓகே.. அண்ட் ஒன் மோர் திங்க்.. இங்க நடந்த எதுவும் வெளிய தெரியாம இருக்குறது தான் உனக்கும் உன் குடும்பத்துக்கு நல்லது.. மீறி வெளிய தெரிஞ்சா விளைவுகளுக்கு நாங்க பொறுப்பில்ல.. எங்க பேக்கிரௌண்ட் ரொம்ப பெருசு..” என்று எச்சரிக்க அருவெறுப்பு பார்வையை அவர்கள் மீது வீசியவள் வெளியேறினாள் அறையைவிட்டு.
வந்த பெண்கள் அனைவரிடமும் அவர்கள் இதே போல் கூற குடும்பத்துக்காக பயந்து யாரும் இது குறித்து வெளியில் பேசவில்லை. என்ன தான் அந்த அயோக்கியர்களின் முன் தைரியமாக பேசிவிட்டு வெளியில் வந்தாலும் பெண்ணின் மனம் அவர்கள் கேட்ட கேள்வியில் கண்ணீர் வடித்தது. இவ்வாறாக நடந்ததை விழி கூற அனைவர்க்கும் ஆத்திரமே..
“ச்சை மனுஷங்களா இவனுங்க.. பொறுக்கிங்க” என்று கோபமாய் இனியாவும், “பணம் இருக்குற திமிருல ஆடுதுங்க நாய்ங்க” என்று அறிவும்,
“அதான்.. அவனுங்க கெட்ட கேட்டுக்கு.. ஜட்ஜா வேற கூப்பிட்டு தொலஞ்சுருக்கானுங்க நம்ம காலேஜ்ல” என்று மதுவும் கடுப்பாக கூற அப்பொழுது தான் அங்கு மாறன் இல்லாததைக் கவனித்தனர் அனைவரும். சுற்றிமுற்றி பார்க்க மாறன் வேகநடையுடன் சென்று கொண்டிருப்பதைப் பார்த்தனர்.
“இளா எங்க போறாங்க” என்று விழி கலக்கமாக கேட்க மதுவோ,
“தெரியலையே” என்றபடி அவனுக்கு அழைக்க அவன் அழைப்பை ஏற்றதும் ஸ்பீக்கரில் போட்டாள் மது. “டேய் மாறா.. எங்க டா போற” என்று கேட்க அவனோ,
“அட ச்சீ.. நிம்மதியா ரெஸ்ட் ரூம் போகி விடுறீங்களா பக்கிகளா.. வை வரேன்” என்று அவன் கூற பிறகு அழைப்பைத் துண்டித்தாள் மது “இவன் ஒருத்தன்” என்று புலம்பியபடி. ஒருகணம் தனக்காக அவர்களைத் தட்டிக் கேட்க தான் அவன் வேகமாக செல்கிறானோ என்று நினைத்த விழியன் மனம் அவன் கூறிய கூற்றில் லேசாக வருந்தியது. பிறகு மற்ற மூவரும் விழிக்கு சமாதானம் கூறியபடி அவளை ஆசுவாசப்படுத்தினர். அப்பொழுது ஆண்கள் கழிவறையின் வாசலில் திடீரென கூட்டமாக மாணவர்களும் ஆசிரியர்களும் நிற்க இவர்கள் மூவரும் என்னவென்று சென்று பார்த்தனர்.
அங்கு தயாரிப்பாளர் அலுவலகத்தில் இருந்து வந்த நால்வரும் அடிபட்டு காயங்களுடன் தரையில் “ஐயோ அம்மா” என்று புலம்பியபடி கிடக்க விழியுடன் சேர்த்து பெண்கள் சிலர் “நல்ல வேணும் இவனுங்களுக்கு” என்றபடி பார்க்க மற்றவர்கள் தங்களுக்குள் பேசியபடி சுற்றி நின்றனர். அப்பொழுது அங்கு கல்லூரி முதல்வர் வேகமாக ஓடிவந்தார்.
“அயோ சார் என்னாச்சு உங்க எல்லாருக்கும்.. ஏன் இப்படி இருக்கீங்க” என்று கேட்டபடி அவர்களுக்கு உதவி செய்ய மற்ற ஆசிரியர்களும் உதவி செய்ய நால்வரையும் எழுப்பி நாற்காலி போட்டு அமரவைத்து தண்ணீர் கொடுத்தனர். பிறகு விசாரிக்க யாரோ ஒருவன் முகத்தை மறைத்தபடி வந்து நால்வரையும் அடித்து துவைத்து விட்டு வெளியில் ஓடிவிட்டான் என்று கூற அனைவருக்குள்ளும் சலசலப்பு.
“என்ன சார் சொல்றீங்க.. உங்கள எதுக்கு அடிக்கணும்.. சரி ஏதாச்சு அடையாளம் சொல்லுங்க கண்டுபிடிப்போம்” என்று கூற அவர்களோ அவன் மஞ்சள் நிற சட்டையில் பச்சை நிற இலைகள் இருப்பது போன்ற சட்டையை அணிந்திருந்ததாக கூறினர். சுற்றி ஆட்களை விட்டு தேட சொல்ல அவர்கள் சொல்வது போன்ற அடையாளத்தில் யாரும் இல்லை.
“அதுலயும் அவன் நல்ல கராத்தே கத்து வச்சுருப்பான் போல.. ஒவ்வொரு அடியும் அப்படி இருந்துச்சு” என்று நால்வரில் ஒருவன் கூற மதுவுக்கு தெரிந்துவிட்டது அந்த நல்லகாரியத்தை செய்தவன் மாறன் தான் என்று.
ஆம் நம் மாறன் தான்.. விழி கூறியவற்றைக் கேட்டவனுக்கு நாடி நரம்பெல்லாம் கோபம் புடைத்துக் கொண்டு வந்தது. சரியாக அந்நேரம் அந்நால்வரும் கழிவறைக்குள் செல்வதைப் பார்த்த மாறன்,
‘எவ்ளோ தைரியம் இருந்தா பொண்ணுங்க கிட்ட இப்படி கேப்பானுங்க.. அதுவும் என் இமை கிட்ட’ என்று நினைத்தவன் ஒரு முடிவோடு சென்றான். ஆனால் ‘என் இமை’ என்று அவனறியாமல் அவனுள் வந்த வார்த்தையை அப்பொழுது அவன் கவனிக்கவில்லை.
அவளுக்கு இதனால் ஆபத்து ஏதும் என்று வரக்கூடாது என்று கருதி கழிவறை வாசலில் நின்று தன் முகத்தைக் கைக்குட்டைக் கொண்டு மறைத்துவிட்டு அவனது இரண்டு பக்கமும் பயன்படுத்திக் கொள்ளும் சட்டையைக் கழட்டி மறுபுறம் திருப்பி அணிந்தவன் அந்த நால்வரைத் தவிர்த்து வேறு யாரும் கழிவறைக்குள் இல்லையென்று உறுதி செய்துவிட்டு உள்ளே சென்றான்.
சென்றவன் தான் சிறு வயதிலிருந்து கற்ற கராத்தே வித்தையை பலநாள் கழித்து அவர்களிடம் இறக்கி பாடம் புகட்டி விட்டு அவர்கள் அசந்த நேரம் வெளியேறிவிட்டான். மீண்டும் தன் சட்டையைக் கழட்டி மறுபக்கம் அணிந்தவன் யாருமாறியவண்ணம் பூனைபோல் வந்து நின்றான் கூட்டத்தில்.
விழிக்கு அவர்கள் அடி வாங்கியது மகிழ்ச்சி என்றாலும் அவர்களை யார் அடித்திருப்பார்கள் என்ற யோசனை எழ அப்பொழுது மாறன் வேகமாக சென்ற நினைவு வர,
‘ஒருவேளை நாம எதிர்பார்த்த மாதிரியே நம்மாளு தான் கோபம் வந்து இவங்கள அடிச்சுருக்குமோ’ என்று யோசித்தபடி அவனது சட்டையை ஆராய அதுவோ நீல நிற சட்டை. ‘ஆனா சட்டை மேட்ச் ஆகளையே’ என்று நினைத்து திரும்பிக்கொண்டாள். பிறகு கல்லூரி முதல்வர்,
“என்ன சார் இப்படி சொல்றீங்க.. ரெஸ்ட்ரூமுக்குள்ள கேமராவும் இருக்காது அப்புறம் எப்படி கண்டுபிடிக்க.. சரி நான் வேணா போலீசுக்கு இன்பார்ம் பண்றேன் சார்..” என்று கூற தங்களுக்கு ஏதேனும் சிக்கல் ஏற்பட்டுவிடுமோ என்றஞ்சி நால்வரும்,
“வேணாம் சார்.. இருக்கட்டும்.. படிக்குற காலேஜ்குள்ள போலீஸெல்லாம் வந்தா நல்ல இருக்காது.. விடுங்க அவன் கதையை நாங்க செலெக்ட் பண்ணலங்குற ஆதங்கத்துல எவனோ இப்படி பண்ணிட்டான் போல.. மறுபடியும் வந்தா நாங்க ஆக்ஷன் எடுத்துக்குறோம்.. இப்போ கிளம்புறோம்” என்றபடி தப்பித்தோம் பிழைத்தோம் என்று கிளம்பிவிட்டனர். பிறகு கூட்டம் கலைய மது, மாறன், விழி, இனியா மற்றும் அறிவு ஐவரும் வந்து அமர அப்பொழுது மது அவர்களை அடித்தது மாறன் தான் என்று கூறினாள்.
“நல்ல காரியம் பண்ண டா மாறா..” என்று அறிவு பாராட்ட இனியாவோ, “ஆமா மாறா.. அவனுங்களுக்கு இதெல்லாம் பத்தாது இன்னும் நெறய கொடுத்திருக்கலாம்” என்று இனியாவும்,
“ஆமா.. சரி எப்படியோ அடி பலமா வாங்கிட்டானுங்க அதுவரை சந்தோஷம்.. ஐம் வெரி ப்ரௌட் ஆஃப் யு மேன்” என்றபடி மது அவனை அணைத்துக் கொண்டாள். விழியோ கண்கள் கலங்க அவனையே காதலாய் நோக்க அவனோ,
“இப்போ ஹேப்பியா” என்றபடி அவளின் கண்ணீரைத் துடைத்துவிட அவளோ அணைக்க தோன்றிய கைகளையும் காதலைக் கூற தோன்றிய உதடுகளையும் கட்டுப்படுத்தி கொண்டு நின்றாள். பிறகு,
“தேங்க்ஸ் இளா” என்று கண்களாலேயே கூற அவனுக்கும் அது புரிந்ததோ என்னவோ சிறு சிரிப்புடன் இமைகளை மூடி திறந்தான் இமையை பார்த்தபடி. அவன் இமைகளையும் அதைக் கடந்து வரும் அவன் பார்வையையும் அதில் இருக்கும் அன்பையும் பெண்ணவள் ரசித்தபடி நின்றாள்.
அள்ளவரும் கையை ரசித்தேன்
ஆளவரும் கண்ணை ரசித்தேன்
அடங்காமல் தாவும் உந்தன் அன்பை ரசித்தேன்
இவ்வாறாக ஐவரும் அமர்ந்து பேசிக்கொண்டிருக்க மதுரிகாவின் மனதில் தன்னவனின் நினைவு எழுந்தது.
‘என்ன இன்னைக்கு இவன் கால் பண்ணவே இல்ல’ என்று நினைத்துக் கொண்டிருக்க மதுரனிடம் இருந்த சரியாக அழைப்பு வந்தது. சிரித்தபடி அழைப்பை ஏற்று காதில் வைத்தவள்,
“என்ன தூரா.. அப்போவே கால் பண்ணுவன்னு நெனச்சேன்.. இப்போ தான் பண்ணிருக்க” என்று அவள் உற்சாகமாய் கேட்க அவன் கூறிய வார்த்தைகளில் அவளது புன்னகை மறைந்து கண்கள் குளமானது. இவ்வாறு பெரிய இடியை அவள் செவிகளில் இறக்கிவிட்டு மதுரன் அழைப்பைத் துண்டித்துவிட கண்களில் கண்ணீர் வழிந்தபடி பிரம்மை பிடித்தபடி அமர்ந்திருந்தாள் பெண்ணவள்.
ரகசியம் – 59
அலைபேசியில் மதுரனின் வார்த்தைகளைக் கேட்ட மதுவின் கண்களில் கண்ணீர் வழிந்தது. மனதில் பல கேள்விகள்.. ஆனால் சிறு வார்த்தைக் கூட உதிர்க்க முடியா வண்ணம் அதிர்ச்சியில் நா மேலண்ணத்தில் ஒட்டிக்கொண்டது. கூற வேண்டியவற்றைக் கூறிவிட்டு மதுரன் அழைப்பைத் துண்டித்து விட அவன் கூறிய வார்த்தைகள் அவள் செவிக்குள் எதிரொலித்துக் கொண்டே இருந்தது.
தான் கேட்டவை உண்மை தானா.. தன்னவன் அவ்வார்த்தையை தன்னிடம் கூறியது மெய் தானா.. நடப்பது நிஜம் தானா.. இது கனவாய் இருக்க கூடாதா என்ற எண்ணங்கள் மனதில் ஓட அவ்வாறே பிரம்மைப் பிடித்தது போன்று அம்மரந்திருந்தவள் வெகுநேரமாக மாறன் அவளைப் பிடித்த உலுக்கியபின் தான் நிகழுக்கு வந்தாள்.
“மது.. மது என்ன டி ஆச்சு” என்று மிகவும் சத்தமாக மாறன் அழைக்க,
“மாறா….” என்று அலறியபடி அவன் மேல் சாய்ந்து கதறி அழுதாள் பெண்ணவள். இனியா, அறிவு, விழி மூவரும் கலக்கமாய் அவளைப் பார்த்து புரியாமல் நிற்க,
“எதுக்கு டி.. இப்படி அழகுற.. என்ன ஆச்சு.. யாரு கால் பண்ணா” என்று கேட்க மதுவிடமிருந்து எந்த பதிலும் இல்லை. மற்ற மூவரும் எவ்வளவோ போராடி பார்த்தனர். அழுகை அதிமாகியதே தவிர அவளிடம் இருந்து சிறு பதில் கூட வரவில்லை. பொறுத்து பொறுத்து பொறுமையிழந்த மாறன் அவளின் அலைபேசி எடுத்து அவளின் தொடர்பு பட்டியலை (call history) ஆராய கடைசியாக மதுரன் தான் அழைத்திருக்கிறான் என்று அறிந்த மாறன்,
“ஹே மது.. மதுரன் தான கால் பண்ணிருக்கான்.. அவன் என்ன சொன்னான்.. என்ன தா நடந்துச்சுன்னு சொல்லி தொலையேன் டி” என்று கேட்டு சோர்ந்தவன் பின்பு அவளின் அலைபேசியில் பாதுகாப்பு கருதி அனைத்து அழைப்புகளும் ரெகார்ட் செய்யப்படும்படி அமைத்திருப்பது நியாபகம் வர வேகமாக அதனை ஒலிக்கவிட்டு கேட்க ஆரம்பித்தான். அதில்,
“தூரிகா.. என்னை மன்னிச்சுரு.. நம்ம காதல இதுக்கு மேல நாம தொடர முடியாது.. ஏன் எதுக்குன்னு காரணம் கேட்காத.. என் நிலைமை அப்படி.. நான் இனிமே இந்தியாக்கும் வரமாட்டேன்.. உங்கிட்ட நான் பேசுற கடைசி கால் இது தான்.. இதனால நீ ரொம்ப வருத்தப்படுவன்னு எனக்கு நல்லாவே புரியுது.. எனக்கும் அந்த வருத்தம் அதிகமாவே இருக்கு.. ஆனா எனக்கு வேற வழி தெரியல.. நீ என்மேல வச்சுருக்குற காதல் உண்மைன்னா உன் மனசுல இருந்து என்னைத் தூக்கி போட்டுறு.. குட் பாய்.. டேக் கேர்.. ” என்று உடைந்த குரலில் மதுரன் கூறியிருக்க அதனைக் கேட்டு மாறனுக்கும் அதிர்ச்சி.
அவன் செவிகளை அவனாலேயே நம்ப முடியவில்லை. அதுவும் தன் நண்பன் மதுரனின் வாயிலிருந்து இப்படிப்பட்ட வார்த்தைகளை சற்றும் எதிர்பார்க்கவில்லை அவன். அனைத்தையும் கேட்ட மாறனுக்கே கண்கள் கலங்க மதுவின் நிலையை நினைக்க நினைக்க இதயம் வலித்தது. அறிவோ,
“டேய் மாறா.. என்ன டா ஆச்சு.. நீயும் ஏன் ஷாக்கா இருக்க..” என்று கேட்க அறிவிடம் மதுவை அலைபேசியை மாறன் கொடுக்க மற்ற மூவரும் மதுரன் கூறியவற்றைக் கேட்க அவர்களுக்கும் அதிர்ச்சியே.
“இவனுக்கென்ன பைத்தியம்மா.. திடிர்னு கால் பண்ணி இப்படி சொல்லி வச்சிருக்கான்.. என்ன நடந்துச்சுன்னு தெளிவா கூட சொல்லாம் இப்படி பேசி வச்சிருக்கான்.. மது மனசு எவ்ளோ கஷ்டப்படும்னு கூட யோசிக்காம.. ச்சே” என்று அறிவு கோபமாய் மதுரனைத் திட்ட மாறனோ மதுவிடம்,
“மது இங்க பாரு டி.. அழாத டி.. ப்ளீஸ்.. நமக்கு என்ன நடந்துசுன்னு தெரியாது இப்போ வர.. நீ எதையும் போட்டு குழப்பிக்காத.. நம்ம மதுரனப் பத்தி உனக்கு தெரியும் தான.. அவன் இப்படி எல்லாம் பண்ற ஆளா.. வெயிட் பண்ணுவோம்.. நான் அவன்கிட்ட பேசுறேன்.. நீ ரிலாக்ஸ் ஆகு டா” என்று மதுவை சமாதானம் செய்தான். இனியாவோ,
“எப்படி மாறா அவ அழாம இருப்பா.. அவன் சொல்லிட்டு வச்சது அவ்ளோ சாதாரணமான விஷயமா.. ஏதோ அவ்ளோ ஈஸியா சொல்லிட்டான்.. என்னை மறந்திருன்னு.. ஒரு பொண்ணா மது அவ மனசுல எவ்ளோ கனவுகள் வச்சுருப்பா.. முறையா காரணம் சொல்லாம அவன் இப்படி சொல்றது கொஞ்ச கூட நியாயம் இல்ல டா..” என்று அவள் பங்கிற்கு கூற மாறனும் ஆமோதித்தான். ஆனால் அறிவோ,
“நீ சொல்றது சரி தான் அன்பு.. ஆனா அவன் அங்க என்ன மாதிரி மனநிலைல இருக்கான்.. எதனால இப்படி சொன்னான்னு நாம யோசிக்கணும் தான.. ரெண்டு வருஷமா நம்ம கூட இருக்கான்.. எனக்கு நாலு வருஷமா தெரியும் அவனை.. இதுவரை ஒரு விஷயமாச்சு காரணமில்லாம அவன் செஞ்சிருப்பானா.. நமக்கு கெட்டது செஞ்ச அந்த எய்ம்ஸ் க்ரூப்பையே அவன் காயப்படுத்த நினைக்கல.. அப்படி இருக்கு போது.. அவன் உயிருக்குயிரா காதலிக்குற நம்ம மதுவை எப்படி காரணமில்லாம காயப்படுத்துவான்..” என்று தன் நண்பனைப் பற்றி யோசித்து கூற விழியோ,
“ஆமா அறிவு மாமா சொல்றதையும் நாம யோசிக்கணும் தான.. கண்டிப்பா இதுக்கு பின்னாடி ஏதோ நடந்துருக்கு..” என்று கூறியவள் மதுவிடம்,
“மது அக்கா.. நீங்கி கண்ண துடைங்க.. நாம பொறுமையா கேப்போம் மதுரன் அண்ணாகிட்ட..” என்று கூற மாறனுக்கும் அதுவே சரியெனப்பட்டது.
“ஹே மது இங்க பாரு டி.. மதுரன பத்தி நாங்க உனக்கு சொல்லணும்னு அவசியமே இல்ல.. உனக்கே தெரியும் தான.. கொஞ்சம் அவன் பக்கம் இருந்தும் யோசிச்சு பாப்போம்.. எதனால இப்படி சொன்னான்னு நாம விசாரிப்போம்.. அழாத சரியா” என்று அவளின் கண்ணீரைத் துடைத்துவிட்டு கூற மதுவும் சற்று தெளிந்தாள்.
‘கடவுளே.. எதனால தூரன் இப்படி எல்லாம் பேசினான்னு எனக்கு தெரியல.. ஆனா கூடிய சீக்கிரம் பிரச்சனை எல்லாம் முடிஞ்சு இதுக்கு ஒரு விடை கிடைக்கணும்.. என் தூரன.. நான் பார்க்கணும்’ என்று மனதில் வேண்டிக்கொண்டாள். பிறகு மாறன் அவளை வீட்டிற்கு அழைத்து செல்ல அங்கு சத்யனும் விஜயாவும் மதுரிகாவிடம் உண்மையைக் கூற வேண்டி மதுவை எதிர்பார்த்து காத்திருந்தனர். விஜயாவோ,
“மது இங்க வா.. உன்கிட்ட கொஞ்சம் பேசணும்” என்று கூற அவளோ எதையும் காதில் வாங்காமல் தன் அறைக்கு சென்று அடைந்துக் கொண்டாள். அவளின் நடவடிக்கை சரியில்லாததை உணர்ந்த விஜயா மாறனிடம்,
“டேய் மாறா.. அவளுக்கு என்னாச்சு.. ஏன் ஒருமாதிரி போறா” என்று கேட்க மாறனோ நடந்த அனைத்தையும் கூறினான். சத்யனும் விஜயாவும் புரியாமல் முழித்தனர். சத்யனோ,
“என்ன மாறா சொல்ற.. திடிர்னு அவன் அப்படி சொன்னதுக்கு காரணம் என்ன”
“அதெல்லாம் தெரியல பா.. இனிமே தான் என்னன்னு கேட்கணும்..” என்றான் சோகமாக.
“இந்த காலத்து பசங்க எதுலயும் ஒரு மனசா இருக்குறதே இல்ல.. பக்குவம் இல்லாத வயசுல காதல் கீதல்னு இருந்தா இதான் நிலைமை..” என்று சத்யன் வசைப்பாட மாறனோ,
“ப்பா.. மதுரன் அந்த மாதிரி பையன் கிடையாது பா.. அவன் ரொம்ப தெளிவான பையன்”
“அதே தான் மாறா நானும் சொல்றேன்.. அவன் ரொம்ப தெளிவான பையன்.. அதான் ஏமாத்திட்டு போயிட்டான்.. இங்க பாரு.. ஒருவகைல இதுவும் நல்லது தான்.. நம்ம மது தப்பிச்சுட்டா.. அவளுக்கு ஆறுதல் கூறி அவளை சமாதானப்படுத்துற வழிய பாரு” என்க அவர் கூற்றில் எரிச்சலடைந்த மாறன் வேகமாய் தன் அறைக்கு சென்றுவிட்டான். அவன் சென்றதும் தங்கள் அறைக்கு வந்த சத்யன் மற்றும் விஜி அது குறித்து பேச ஆரம்பித்தனர்.
“ஏங்க.. ஒருவகைல நாம நெனச்ச மாதிரி அவங்களாவே பிரிஞ்சுட்டாங்க.. நமக்கு உண்மையா சொல்ல அவசியம் இல்லாம போய்டுச்சு.. ஆனா அந்த பையன் திடிர்னு எப்படி இப்படி சொன்னான்.. என்ன காரணமா இருக்கும்” என்று யோசனையாக விஜி கேட்க சத்யனோ,
“அதான் தெரியல விஜி.. ஒருவேளை அவனுக்கு எல்லா உண்மையும் இப்போ தான் தெரிஞ்சுருக்குமோ.. அதனால தான் இதுக்கு மேல இது சரிப்பட்டு வராதுன்னு வேணாம்னு சொல்லிட்டானோ..”
“இருக்கலாம்.. எது எப்படியோ நம்ம மது நமக்கு கிடச்சுட்டா.. உண்மையை சொல்லி அவ மனச காயப்படுத்த வேண்டிய அவசியம் இனிமே இல்ல.. அவளை அவன் பக்கம் போகமா பார்த்துக்குறது தான் இனிமே நம்ம வேலை” என்றபடி தம்பதிகள் ஆசுவாசமடைந்தனர்.
——————————————-
அங்கு மதுவிடம் பேசிவிட்டு அலைப்பேசியைத் துண்டித்த மதுரனோ,
‘என்னை மன்னிச்சுரு டி.. ஐயோ எவ்ளோ பெரிய துரோகத்தை உனக்கு பண்ணிருக்கேன்.. நீ என்ன சந்திச்சுருக்கவே கூடாது.. நாம காதலிச்சுருக்கவே கூடாது.. தப்பு பண்ணிட்டேன் டி பெரிய தப்பு பண்ணிட்டேன்.. உலகத்துல யாருக்கும் கண்டிப்பா என்னோட நிலைமை வந்துருக்காது.. வரவும் வேணாம்.. என் நிலைமை ரொம்ப கொடுமையானது.. உங்கிட்ட உண்மைய சொல்லிட்டு நாம பிரிஞ்சுருக்கலாம் தான்.. ஆனா உண்மைய சொன்னா.. உன்னால சுத்தமா தாங்கிக்க முடியாது டி.. மன்னிச்சுரு தூரிகா..’ என்று அறையே அதிரும்படி அலறி அழுதான்.
அப்பொழுது அவன் சுண்டுவிரலில் அவள் அணிவித்த மோதிரம் அவன் கண்களில் பட அன்றைய நிகழ்வு அவன் மனக்கண்ணில் ஓடியது.
‘நடக்க போறத முதல்லயே தெரியப்படுத்த தான் அன்னைக்கு எனக்கும் அவளுக்கும் அவ்ளோ வலிய கொடுத்தியா கடவுளே.. இதை ரெண்டு வர்ஷம் முன்னாடியே தெரிய வச்சிருந்தா.. இந்நேரம் என் தூரிகா எனக்காக அழுதுருக்க மாட்டா தான.. கடைசில எங்க உண்மையான காதல இப்படி அர்த்தமில்லாம ஆக்குனதோட சேர்த்து முறை தவறுன காதலாவும் ஆக்கிட்டியே கடவுளே.. உனக்கே இது அநியாயமா தெரியலையா’ என்று கடவுளிடம் மன்றாடினான் ஆடவன்.
‘என்ன ஆனாலும் சரி.. இனிமே தூரிகாவோட வாழ்க்கைக்குள்ள கண்டிப்பா நான் போக மாட்டேன் இந்த உண்மை இப்போ எனக்கு தெரியாம இருந்திருந்தாலும் என்னைக்காச்சு ஒருநாள் அவளுக்கு தெரியவந்தா அவ கண்டிப்பா என்னைவிட்டு பிரிய தான் நினைப்பா.. அதுக்கு முன்னாடி நானே அவ வாழ்க்கைல இருந்து விலகிடுறேன்.. மன்னிச்சுரு தூரிகா.. நம்ம காதல் சேராது.. சேரவும் கூடாது.. இப்போதைக்கு என் மனசுல இருக்குற ஆசை ஒன்னே ஒன்னு தான்.. கூடிய சீக்கிரம் நீ என்னை மறந்துட்டு உன்னோட வாழ்க்கையை வாழ ஆரம்பிக்கணும் அவ்ளோ தான்..” என்று மனதினுள் முடிவெடுத்தவன் மதுரிகா, மாறன், அறிவு, இனியா, விழி என யாரும் தன்னைத் தொடர்பு கொள்ளமுடியாதவாறு அனைவரையும் தன் அலைபேசியில் முடக்கினான்.
‘இந்த ரகசியம் ரகசியமாவே இருக்கட்டும்.. உண்மை தெரிஞ்சு நீ கஷ்டப்படுற கொடுமைக்கு இப்போ நீ என்னை நெனச்சு கொஞ்ச நாள் அழுகுறது எவ்வளவோ மேல்.. ரகசியமா உன்னை தவிர்க்குறது மட்டும் இல்லாம நானும் ரகசியமாவே தவிச்சுக்குறேன்.. என் வாழ்க்கை முழுக்க நான் உயிர்ப்போட இருக்க நம்மளோட இந்த ரெண்டு வருஷ நினைவுகளே எனக்கு போதுமானது.. அதை வச்சுட்டு என் காலத்தை நான் வாழ்ந்துருவேன்.. லவ் யு தூரிகா.. லவ் யு அ லாட்’ என்று அழுதபடியே உறங்கி போனான் மதுரன்.
காதல் காதல் காதல்
காதல் காதல்
இனித்திடும் நரகமா
காதல் காதல் வலித்திடும்
சொர்க்கமா ————- இங்கு தன் அறைக்கு வந்த மது கட்டிலில் படுத்து கண்ணீர் வடிக்க சுற்றி எங்கும் அவன் பிம்பமே தெரிந்தது. செவியில் அவன் குரலே ஒலித்தது. மீண்டும் அவனுக்கு அலைபேசியில் அழைக்க அதில் இவளது அழைப்புகள் முடக்க பட்டிருப்பது போன்று இருக்க அவளின் மனம் சுக்குநூறாக உடைந்தது.
‘என்னை பிளாக் பண்ற அளவுக்கு என்ன பிரச்சனை அவனுக்கு வந்துச்சு.. ஏன் டா இப்படி என்னை கொல்லாம கொல்லுற.. என் மனசு எவ்ளோ வலிக்குது தெரியுமா டா.. இதுக்கு நீ என்னை நாலு வர்ஷத்துக்கு முன்னாடியே காப்பாத்தாம விட்ருக்கலாமே டா.. சந்தோஷமா செத்து போயிருப்பேன்.. என்னைக் காப்பாத்தி என்னைக் காதலிச்சு.. எனக்கு அளவுக்கதிகமான காதலை கொடுத்துட்டு இப்போ திடிர்னு என்னை மறந்துரு.. நம்ம காதல் இதுக்கு மேல் வேணாம்னு சொன்னா எப்படி டா.. உயிரோட சாகுற மாதிரி இருக்கு தூரா..” என்று குனிந்து முகத்தை மூடி அழுக அவன் அணிவித்துவிட்டு சென்ற செயின் மது என்ற டாலருடன் தொங்கியது அவளது கழுத்தில். அதனைக் கண்டவளுக்கு அன்றைய நிகழ்வுகள் அனைத்தும் மனக்கண்ணில் ஓட அப்பொழுது தான் ஒரு விஷயம் புரிந்தது.
‘என் தூரன் என்னைவிட்டு நிரந்திரம பிரிய போறான்னு முன்னடிய தெரிஞ்சு எனக்கு புரியவைக்க தான் அன்னைக்கு அவ்ளோ வலிய கொடுத்தியா கடவுளே.. நாங்க சந்திக்கிற கடைசி சந்திப்பு அது தான்னு அன்னைக்கு சொல்லாம எங்களுக்கு சொன்னியா.. ஏன் எங்களுக்கு மட்டும் இப்படி ஆகுது.. நான் அவனை உண்மையா தான காதலிச்சேன்.. என் காதலுக்கு ஆயுள்காலம் அவ்ளோ தானா..’ என்று அழுது சோர்ந்தவள் பின்பு,
‘இல்ல இல்ல.. என் தூரன் காரணமில்லாம என்னை ரகசியமா தவிர்க்க மாட்டான்.. தவிக்கவும் விடமாட்டான்.. கூடிய சீக்கிரம் என்கிட்ட வருவான்.. அவனுக்காக நான் காத்திருப்பேன்.. யாருன்னே தெரியாதப்போவே அவனுக்காக காத்திருந்தேன்.. இப்போ இவ்ளோ காதலை எனக்காக கொடுத்துட்டு போன அப்புறம் காத்திருக்கமாட்டேனா.. காத்திருப்பேன்.. இந்த ரெண்டு வருஷ நினைவுகளே அவனை நெனச்சு காத்திருக்க எனக்கு போதுமானது.. எவ்ளோ நாள் ஆனாலும் எவ்ளோ வருஷமானாலும் காத்திருப்பேன்.. கடவுள் என் தூரன திருப்பி என்கிட்ட கொடுப்பாருன்னு நம்பிக்கையோட காத்திருப்பேன்’ என்று எப்பொழுதும் தன்னவன் யோசிப்பது போலவே யோசிப்பவள் இன்று அவன் எடுத்த முடிவுக்கு நேரெதிராக தனக்குள் சபதம் எடுத்து கொண்டாள் பெண்ணவள்.
பூவை காட்டி முல்லை
விற்றாய் காதலே
தெய்வம் கருணைக் கொண்டால்
வெல்லும் காதலே
ரகசியம் – 60
நாட்கள் அதன் போக்கில் நகர தொடங்கியது. அனைவரும் பலமுறை மதுரனைத் தொடர்பு கொள்ள முயற்சித்து தோழ்வியை மட்டுமே தழுவினர். வெளிநாடு என்பதால் யாராலும் சட்டென்று நேரில் போய் பார்க்கவும் முடியவில்லை. அனைத்து விஷயங்களிலும் ஒரே போல் நடந்து கொள்ளும் மதுரன் மற்றும் மதுரிகா தற்பொழுதும் ஒருவரையொருவர் நினைத்து அழுதபடியே நாட்களை களித்தனர். ஆனால் வெவ்வேறு எண்ணத்துடன். மதுரன் என்றேனும் ஓர்நாள் தன்னைத் தேடி வருவானென்று மதுரிகா நம்பியபடி இருக்க.. மதுரனோ என்றேனும் ஓர்நாள் மதுரிகா தன்னை மறந்து அவளது வாழ்க்கையை வாழ ஆரம்பிப்பாள் என்று நம்பியபடி இருந்தான்.
விதியானது அவர்களின் காதலுக்கு நிரந்தர விடுமுறை அளிக்க நினைக்கிறதா அல்ல விட்டு பிடித்து சேர்க்க நினைக்கிறதா என்பது அதற்கே வெளிச்சம். ஆனால் நாட்களை மட்டும் வேகமாக சுழற்றியது. மதுரிகா மதுரனின் நினைவில் எதிலும் கவனம் செலுத்தாமல் இருக்க அதனைக் கண்ட மாறன் அவளிடம் பேசலானான்.
“ஹே லூசு..”
“சொல்லு மாறா”
“ஏன் டி இப்படி தனியாவே உக்காந்துருக்க..”
“எதுவுமே செய்ய தோணல டா.. எனக்கே என்னை பிடிக்கலடா”
“உன் நிலைமை எனக்கு புரியுது மது.. மதுரனை காண்டாக்ட் பண்றதுக்கான எல்லா வழியும் ட்ரை பண்ணியாச்சு.. ஆனா ஏதும் வேலைக்கு ஆகல.. இதுக்கு மேல நாம என்ன செய்ய முடியும்”
“எதுமே செய்ய முடியாதுன்னு தெரிஞ்சு தான்.. சும்மா இருக்கேன்.. ஆனா ஒருவேலை மட்டும் கரெக்ட்டா நடக்குது..”
“என்ன வேலை”
“வேறென்ன.. அவனை நெனைக்குறது தான்”
“நீ அவனை நினை.. அவனுக்காக காத்திட்டு இரு.. யார் வேணாம்னு சொன்னா.. நாம நெனைக்குற விஷயம் கண்டிப்பா ஒருநாள் நடக்கும்.. சோ நீ அவனை நினைச்சுட்டு இருக்குறதுல தப்பே இல்ல.. ஆனா இப்படி அவனை மட்டுமே நெனச்சுட்டு வேற எதுலயும் கான்செண்ட்ரேட் பண்ணாம இருக்குறது தான் தப்பு” என்று மாறன் கூற மதுவோ விரக்தியாக சிரித்தாள்.
“ஏதாவது பேசு மது.. சரி இப்போ திடிர்னு மதுரன் உன்னைத் தேடி வந்துட்டான்னு வை.. நீ அவனை நெனச்சுட்டு உன் கரியர ஸ்பாயில் பண்ணிட்டன்னு அவனுக்கு தெரியவந்தா அவன் எவ்ளோ ஃபீல் பண்ணுவான் யோசி.. பொதுவாவே யாருக்காகவும் நம்ம வாழ்க்கையை நாம விட்டுக்கொடுக்க கூடாது நெனைக்குறவன் தான் நம்ம மதுரன்.. நீ இப்போ அவனை நெனசுட்டே உன் வாழ்க்கையை பாழாக்குனா அவ வாழ்க்கை இப்படி ஆனதுக்கு காரணம் நாம தானன்னு நெனச்சு இன்னும் தான வருத்தப்படுவான்.. உனக்காக வேணாம் அவனுக்காக வாச்சு நீ உன் கரியர பில்ட் பண்ணனும் மது..” என்று கூறியும் அசராமல் இருக்க மாறனோ வருத்தம் கொண்டான். அவளது நிலையை எண்ணி அவனுக்கு கண்கள் கலங்கியது.
“என் மது காணாம போயிட்டா.. இப்போ இருக்குறது மதுரனோட லவ்வர் மட்டும் தான்.. இப்போ எல்லாம் உன்னை நான் ரொம்ப மிஸ் பண்றேன்.. என்கூட சண்டை போட்டுட்டு என்னை எப்போதும் வம்பிழுத்துட்டு கொஞ்ச நேரம் கூட என்னை தனியா விடாம டார்ச்சர் பண்ற என்னோட பழைய மது எனக்கு வேணும்… என் மதுவ திருப்பி தருவியா டி” என்ற அவனது கமறிய குரல் அவளை அசைத்து பார்த்தது. சட்டென அவன் முகம் நோக்க கண்களில் இருந்து விழவா வேணாமா என்று யோசித்தபடி விழியின் விழிம்பில் நின்று கொண்டிருந்த அவனின் நீர்த்துளி அவளின்,
“மாறா..” என்ற கலங்கிய அழைப்பில் விழுந்தே விட்டது. பதறிய மது அவனது கண்ணீரைத் துடைத்துவிட்டு,
“சாரி டா.. உன்னைப் பத்தி நான் யோசிக்காம விட்டுட்டேன்.. என்னோட காதல் விஷயத்துல நான் என் மாறனைப் பத்தி நினைக்காம இருந்துட்டேன்.. நானும் சாதாரண மனுஷங்க மாதிரி நடந்துக்கிட்டேன்ல.. என்னை மன்னிச்சுரு டா..” என்றவள் அவனை அணைத்துக்கொள்ள அவனோ அவளின் தலையை வருடியபடி,
“இல்ல உன் நிலைமைல யாரா இருந்தாலும் அப்படி தான் இருந்துருப்பாங்க மது.. காதல் வலி ரொம்ப கொடுமையானது தான்.. அதை என்னால புரிஞ்சுக்க முடியுது.. மன்னிப்பு கேட்குற அளவுக்கு எல்லாம் என் மது தப்பு செய்யல.. சாரி டி.. ஏற்கனவே வருத்தத்துல இருந்தவளுக்கு கூட கொஞ்சம் இப்படி பேசி வருத்தத்தைக் கொடுக்குறேன்..” என்று கூற அவளோ,
“இல்ல மாறா.. நான் செஞ்சது தப்பு தான்.. என் காதல் வலி பெருசு தான்.. இல்லன்னு சொல்லல.. ஆனா ரெண்டு வருஷ காதலுக்கு ஃபீல் பண்ணிட்டு பொறந்ததுல இருந்து என்கூட இருக்குற என் மாறனைப் பத்தி யோசிக்காம விட்டுட்டேன்.. இனிமே இப்படி இருக்க மாட்டேன்.. நீ சொன்னியே மதுரன் திரும்ப வந்து உன் நிலைமையை பார்த்து வருத்தப்படுவான்னு.. ஆனா அவனுக்காக இல்ல… என் மாறனுக்காக நான் என் வாழ்க்கையை கவனிக்க ஆரம்பிக்குறேன்.. ஏன்னா என் சந்தோஷம் தான் என் மாறனோட சந்தோஷம்” என்றவள் அவனின் கேசத்தைக் களைத்து விட அதில் நிம்மதி பெருமூச்சிவிட்டவன் அவளைக் கலாய்க்க எண்ணி,
“சரி சரி.. ரொம்ப டயலாக் அடிக்காம சாப்பிட வா” என்க அதில் கடுப்பானவள்,
“என்ன டா சொன்ன..” என்றபடி அவனை அடிக்க துரத்த அவளின் பிடியில் சிக்காமல் ஓடினான். பல நாட்கள் கழித்து தங்கள் பிள்ளைகள் மகிழ்ச்சியாய் இருப்பதைக் கண்ட சத்யன் மற்றும் விஜயாவுக்கு மன நிறைவாக இருந்தது.
காதல் இல்லை
இது காமம் இல்லை
இந்த உறவுக்கு
உலகத்தில் பெயர் இல்லை
—————————————————–
மதுரிகா மதுரனின் நினைவுகளில் வாசம் செய்தபடியும் அறிவமுதனும் அன்பினியாவும் ஒருவருக்கொருவர் ஆதரவாய் இருந்து காதலைப் பகிர்ந்தபடியும் இளமாறன் இமைவிழியின் மீதுள்ள காதலை உள்மனம் கூறியும் உணராமலும் இமைவிழியோ இளமாறன் தன்மீது கொண்டுள்ள மற்றும் அவன்மீது தான் கொண்டுள்ள காதலை உணர்ந்தும் உணர்த்தாமலும் என அறுவரும் தங்கள் நாட்களை நகர்த்த அவ்வாண்டு படிப்பும் நிறைவானது.
வெற்றிகரமாக மதுரிகா, இனியா, அறிவு, மாறன் நால்வரும் தங்கள் மூன்று வருட டிப்ளமா இன் ஆக்டிங் படிப்பை நிறைவு செய்தனர். ஏற்கனவே தாங்கள் நடித்திருந்த குறும்படங்கள் எல்லாம் குறிப்பிடத்தகுந்த வரவேற்பை பெற்றிருக்க அதன் காரணமாய் அடுத்து அடுத்து குறும்படங்கள் நடிக்கும் வாய்ப்பு நால்வருக்கும் கிட்டியது. மதுரனின் நினைவுகளில் அவ்வபோது உழன்றாலும் தன் நடிப்பு பயணத்தை எந்த வித தங்குத்தடையுமின்றி மேற்கொண்டாள் மதுரிகா.
விழியும் தனது மூன்றாம் ஆண்டில் கால் வைத்தாள். அவளது சிறு கதை ஒன்றில் மாறன் நடிக்க வாய்ப்பு அமைந்தது. அதனை இயக்கம் வாய்ப்பும் பெண்ணவளுக்கு கிடைத்தது. தான் அவனை நினைத்து அவனுக்கென்று எழுதிய காதல் வசனங்களை தன்னுடைய வழிகாட்டுதலின் படி வேறு ஒரு பெண் தன்னவனிடம் கூறும் காட்சியைப் பார்க்க பெண்ணவளுக்கு கசக்க தான் செய்தது. இருப்பினும் அவனாகவே தன் காதலை உணர வேண்டுமென்று காத்திருந்தாள் விழி. அப்பொழுது அவளின் உதவிக்காக விழியுடன் வந்த அவளின் தோழி,
“ஹே விழி.. ஏன் டி நீ இப்படி பிடிவாதமா இருக்க.. இந்த காலத்துல எல்லாரும் எவ்ளோ ஸ்பீடா இருக்காங்க.. நீயென்னடான்னா மூணு வருஷமா சொல்லமையே லவ் பண்ணிட்டு இருக்க.. இதுல அவர் கூட இன்னொருத்தியை வேற நடிக்கவிட்டு வேடிக்கைப் பார்த்திட்டு இருக்க” என்று அறிவுரை கூற அவள் கூற்றில் சிரித்த விழி,
“ஹே லூசு.. அதுக்காக நானா நடிக்க முடியும்.. என் வேலை டைரக்ட் பண்றது அதை தான் நான் செய்ய முடியும்..”
“ஆமா ஆமா.. இப்படியே நீ சொல்லாம் இரு.. அப்புறம் உங்க ரெண்டு பேருக்கும் நடுவுல வேற யாரும் வந்துர போறாங்க.. ஏற்கனவே எனக்கு மது மேல டவுட் இருக்கு”
“ஹே அறிவில்லாம பேசாத டி.. அவங்க ரெண்டு பேரும் சின்ன வயசுல இருந்தே ஒண்ணா இருக்காங்க.. அவங்கள போய் தப்பா சொல்ற.. மது அக்கா வேற ஒருத்தங்கள லவ் பண்றங்கன்னு ஏற்கனவே சொல்லிருக்கேன் தான் உங்கிட்ட.. அப்புறம் எப்படி இப்படி சந்தேகமா பேசுற.. அதுவும் என் இளாவும் என்னை லவ் பண்றங்கன்னு எனக்கு ஒரு பக்கம் தோணுது.. அதனால இப்படி தேவை இல்லாம அவங்க ரெண்டு பேரையும் சந்தேகப்படாத” என்று சற்று கோபமாக கூற,
“இங்க பாரு விழி உன்னை கடுப்பேத்துறது என் நோக்கம் இல்ல.. நீ இளமாறன எவ்ளோ சின்சியரா லவ் பண்றன்னு எனக்கு தெரியும்.. நீ ஃபியூச்சர்ல ஃபீல் பண்ணிட கூடாதுன்னு தான் இவ்ளோ பேசுறேன்.. உன்மேல மாறனுக்கும் லவ் இருக்குன்னு உனக்கு தோண மட்டும் தான் செய்யுது.. உனக்கே உறுதியா தெரியாது..
ஏன்னா லவ் பண்றவங்க மனசுக்கு நம்ம லவ் பண்ற ஆள் என்ன செஞ்சாலும் நமக்காக தான் பண்றங்க.. நம்மள தான் பாக்குறாங்க.. நம்மள மாதிரியே அவங்களுக்கும் நம்மள புடிச்சிருக்கு.. இப்படி எல்லாம் தோணுறது சகஜம்.. அதுவும் ஒன் சைட் லவ் கண்டிப்பா நெறய அதுவே கற்பனை பண்ணிக்கும்.. ஆனா எல்லாருக்கும் அது நிஜமா இருக்காது.. பின்னாடி ஒரு நாள் உண்மை தெரியும் போது தான் சுடும்.. நமக்காகவோ நம்மள நெனச்சோ அவங்க ஏதும் செய்யலன்னு..” என்று கூற அவள் கூறிய அனைத்தும் விழிக்கு சரியெனப்பட்டது. மேலும் தொடர்ந்த அவளின் தோழி,
“அதுமட்டுமில்ல இந்த சிங்கிள் பசங்களுக்கு எப்போ யார் மேல லவ் வரும்னு தெரியாது.. ரொம்ப நாளா ஃபிரண்டா இருக்குற பொண்ணுங்க மேல திடிர்னு இந்த பசங்களுக்கு லவ் வரும்.. யார்யாரையோ தேடி போறதுக்கு இவ்ளோ நாளா நம்மள புரிஞ்சு நம்ம கூட இருக்காளே… நாம ஏன் இவளை லவ் பண்ண கூடாதுன்னு ஒரு கட்டத்துல தோணும்.. அவங்களை சொல்லி குத்தம் இல்ல.. சில பசங்களோட டிசைன் அப்படி.. நீ என்கிட்டே மது வேற ஒருத்தங்களை லவ் பண்றாங்கன்னு சொல்லிருக்க தான்.. ஆனா அவங்க லவ்வர் அவங்கள விட்டுட்டு போய்ட்டாங்கன்னும் என்கிட்ட சொல்லிருக்க அது நியாபகம் இருக்கா… இப்போ மேபி மாறனுக்கு மது மேல லவ் வராம இருக்கலாம்.. ஒருவேலை இனிமே எப்போயாச்சு வந்தா.. நீ என்ன செய்வ..” என்று கூற விழிக்கு அதில் துளி கூட நம்பிக்கை இல்லை.
“இல்லவே இல்ல டி.. இளா என்னை வேணா லவ் பண்ணாம போகலாம்.. ஆனா மது அக்காவை கண்டிப்பா லவ் பண்ண மாட்டாரு.. அவங்களோட உறவு எவ்ளோ புனிதமானது தெரியுமா… நீ என்ன வேணா சொல்லு.. இந்த விஷயத்துல நான் இளாவைத் துளி கூட சந்தேகம் பட மாட்டேன்..” என்று தன்னவனின் மனதை அவ்வளவு புரிந்து வைத்திருந்தாள்.
“எனக்கென்னமோ உனக்கும் மாறனுக்கும் நடுவுல மது தடையா இருப்பாங்கன்னு தோணுச்சு.. அதான் உங்கிட்ட சொன்னேன்.. சரி டி.. இப்போ மதுவை விடு.. ஆனா நீ உன் காதலை அவர்கிட்ட தெரியப்படுத்துறதுல உனக்கென்ன பிரச்சனை.. ஒருவேளை நீ அவர்கிட்ட உன் லவ்வ சொல்லிட்டா நீ நெனைக்குற மாதிரி அவருக்கு உன்மேல லவ் இருந்தா ஓகே சொல்ல போறாரு.. லவ் இல்லனா இல்லன்னு சொல்ல போறாரு.. இல்லன்னு சொல்லிட்டா இப்போவே உண்மை புரிஞ்சு நீயும் மூவ் ஆக ஆரம்பிச்சுடுவ.. சொல்லாம உள்ளேயே வச்சுருக்கனால எந்த பிரயோஜனமும் இல்ல.. அப்புறம் நம்ம கைய விட்டு போன அப்புறம்.. அயோ நாம தான் எந்த ஸ்டெப்பும் எடுக்காம விட்டுட்டோமோன்னு அழுது என்ன ஆக போது.. சொல்றத சொல்லிட்டேன் அதுக்கு மேல உன் இஷ்டம்” என்றவள் சென்றுவிட்டாள்.
தன் தோழி கூறியவற்றை சிந்தித்து பார்த்தவளுக்கு காதலை சொல்லிவிடுவது மேலோ என்று தோன்றியது.
‘சரி இவ்ளோ நாள் இல்லாம திடிர்னு இவ இவ்ளோ அட்வைஸ் பண்ணி லவ்வ சொல்லுன்னு சொல்லிட்டு போறா.. ஒருவேளை கடவுள் தான் நம்மள இவ மூலமா கைட் பன்றாரோ.. இருக்கும்.. சரி அப்போ நாளைக்கே நாம இளாகிட்ட லவ்வ சொல்லிடுவோம்’ என்று நினைத்தவள் எவ்வாறு தன் காதலை அவனிடம் கூறுவது என்று சிந்திக்க ஆரம்பித்தாள்.
அன்றைய நாள் கழிய பல திருப்பங்களை உள்ளடக்கியவாறு விடிந்தது மறுநாள்..
