
யான் நீயே 35
இரண்டு வருடங்களுக்கு பிறகு…
மருதனின் இல்லம் விழாக்கோலம் பூண்டிருந்தது.
வீரனின் இல்லம் அத்தனை பரபரப்பாகக் காட்சியளித்தது. இன்று சர்க்கரை ஆலை திறப்பு விழா. குரு மூர்த்தி ஆலை கட்ட முடியாதபடி பல இன்னல்களைக் கொடுத்தாலும், அதையெல்லாம் தாண்டி தன் கனவை சாத்தியமாக்கியிருந்தான் வீரன்.
இந்த இரண்டு வருடத்தில் பல நிகழ்வுகள் நடந்துவிட்டிருந்தது.
பெங்களூரிலிருந்து பிரேம் மொத்தமாக இங்கு வந்திருந்தான். லிங்கத்துடன் சேர்ந்து ஹோட்டல் மேற்பார்வை செய்கிறான். ஏழாக இருந்த ஹோட்டலின் கிளைகள் மேலும் இரண்டு உயர்ந்துள்ளது.
இப்போது நாச்சிக்கு ஒன்பது மாதம். அவள் வயிற்றில் அவ்வீட்டின் முதல் வாரிசு வளர்ந்து வருகிறது. நாளை அவளுக்கு வளைகாப்பு.
அடுத்தடுத்து வீட்டில் இரண்டு நிகழ்வுகள் என்பதாலேயே அத்தனை பரபரப்பு.
அங்கை பள்ளி படிப்பில் அதிக மதிப்பெண் எடுத்திருக்க… யாருமே அதனை எதிர்பார்க்கவில்லை. நன்றாக படிப்பாளென்று தெரியும்… ஆனால், விளையாட்டுத்தனமாக சுற்றி வருபவளிடம் படிப்பில் இத்தனை கெட்டி என்று தேர்வு முடிவுகள் வெளிவந்த போதுதான் கண்டு கொண்டனர்.
மாநில அளவில் முதல் மதிப்பெண் எடுத்த சிலரில் அவளும் ஒருத்தி.
வீரன் கொண்டாடி தீர்த்துவிட்டான்.
“சின்னக்குட்டி.” அவனின் ஒற்றை அழைப்புக்கு அவனுள் புகுந்து கொண்டவள்,
“நீயி சொன்ன மாறி செய்து காட்டிப்புட்டேன் மாமா. எனக்கும் நீயி வாக்கு கொடுத்த மாறி எம் மாமாவை கட்டி வச்சிப்புடு” என்றாள். சுற்றி அனைவரும் இருந்த போதிலும், அவள் சொல்லியது வீரனுக்கும், அவர்களுக்கு மிக அருகிலேயே நின்றிருந்த லிங்கத்திற்கு மட்டுமே கேட்டது.
“இது தான் அன்னைக்கு தென்னந்தோப்பில் உங்களுக்குள் நடந்த டீலாக்கும்?” லிங்கம் புருவத் தூக்கலுடன் கேட்டிட…
ஆமாமென்று இருவரும் ஒன்றாக தலையசைத்தனர்.
“அப்போ கேட்டப்போலாம் வேற சொல்லியிருக்கீங்க… ஹ்ம்ம்…” முறைக்க முயன்று முடியாது தோற்றான்.
“சரி உனக்கு என்ன வேணுமாட்டிக்கு?” வீரன் அங்கையிடம் கேட்டிட…
“எம் மாமா!” பட்டென்று கேட்டிருந்தாள்.
லிங்கத்திற்கு அவளின் ஆழக் காதல் எப்போதும் போல் இப்போது தித்திப்பாய் உள்ளம் நிறைந்தது.
“அவென் உனக்குத்தேன். இனிமேட்டு அவனே உன்னை வேணாமின்னு சொல்லமாட்டியான்” என்றான் வீரன்.
“நீயி கட்டுற சர்க்கரை ஆலையை எனக்கு கொடுத்துப்புடு மாமா” என்று அங்கை விளையாட்டாய் கேட்டிட…
“என் சின்னக்குட்டிக்கு இல்லாததா. உனக்குத்தேன்” என்றிருந்தான். வீரனும்.
அதிக மதிப்பெண் எடுத்திருக்கிறாய் மருத்துவம் படியென்று பெரியவர்கள் யார் சொல்வதையும் கேட்காது, அன்று லிங்கத்திடம் சொல்லியது போல் ஹோட்டல் மேலாண்மை எடுத்தாள்.
காரணம் புரிந்த வீரன் அங்கைக்கு சப்போர்ட் செய்திட பெரியவர்களின் பேச்சு அங்கையின் படிப்பில் எடுபடவில்லை.
அங்கை அந்த சிறு வயதிலேயே ஒவ்வொன்றையும் தன்மீது கொண்ட நேசத்திற்காக செய்திட… லிங்கத்திற்கு அவள் மீதான அன்பு கூடிக்கொண்டே போனது. என்ன அதனை வெளிக்காட்டிடாது தனக்குள் பொத்தி வைத்து வளர்த்து வருகிறான்.
இப்போது அங்கை மூன்றாம் வருட படிப்பில் அடி வைத்திருக்கிறாள்.
சென்னையில் விடுதியில் தங்கி படிக்கின்றாள்.
இங்கே படி என்று லிங்கம் சொல்லியே அவள் கேட்கவில்லை. கல்லூரிக்கு முதல் நாள் கிளம்பும் வரை முகத்தை தூக்கி வைத்தபடி திரிந்த லிங்கத்தின் அறைக்குள் அதிரடியாக நுழைந்தவள், உரிமையாய் அவனின் மார்பில் தலைசாய்த்து நின்றாள்.
“ப்ளீஸ்டி அங்கை. உன்மேல கோபமா சுத்திட்டு இருந்தாலும், உன்னைய ஒரு நா பார்க்கலனாலும் ஒன்னும் ஓடாது” என்றான். அவளை கட்டிக்கொண்டு.
தான் சாய்ந்ததும் விலக்கி நிறுத்துவானென்றே எதிர்பார்த்தவள், அவனின் அணைப்பையும், வார்த்தையும் எதிர்பார்க்கவில்லை.
“உன்னைய பக்கத்துல வச்சிக்கிட்டு முடியாது மாமா. நான் அம்புட்டு நல்லப்பொண்ணுலாம் இல்லை.உன்னைய மாதிரி ஸ்டெடியாலாம் என்னால இருக்க முடியாது. புரிஞ்சிக்கோயேன் மாமா” என்று அவள் கொடுத்த விளக்கத்திற்கு பின்னே…
“தினமும் போன் போடணும். வாரா வாரம் இங்கன வந்துப்புடனும்” என்ற விதியோடு அரை மனதாக சம்மதித்தான்.
இருவரின் தூர காதல் அலைப்பேசி வழியாக பெருங்காதலாக வாசம் வீசிக் கொண்டிருக்கிறது.
வீட்டின் விழாவிற்காக வந்து கொண்டிருக்கும் அங்கையை அழைப்பதற்காக லிங்கம் மதுரை சென்றுள்ளான்.
வசந்தி நல்லானின் பணி ஓய்விற்கு பிறகு… இங்கேயே வந்துவிட்டார். இரண்டு வருடத்தில் தன்னை மாற்றிக் கொண்டதைப்போல் அனைவரையும் நம்ப வைத்திட்டார். அவர் ஊருக்குள் பூர்வீக வீட்டிற்கு அருகிலேயே இருக்கும் மற்றொரு வீட்டில் வசிக்கிறார்.
தினமும் ஒருமுறையாவது அண்ணனின் வீட்டிற்கு தன்னுடைய பாசாங்கு பாசத்தை காட்டிட வந்துவிடுவார்.
கௌதம் தன்னுடன் அழைத்தும் கௌசிக் அவனுடன் செல்லவில்லை. இந்நிலையில் தானும் விட்டுவிட்டால், தாய் தந்தை இன்னும் ஒடுங்கிவிடுவர் என்று அவர்களுடனே இருந்து கொண்டான். மதுரையில் மென்பொருள் நிறுவனம் ஒன்றில் பணிபுரிகிறான்.
கௌதம், சுபாவிற்கு ஒரு வயதில் மகன் இருக்கின்றான். திருமணம் முடிந்த இரண்டாம் மாதம் சுபா கருத்தரித்திட சுந்தரேசன் விருப்ப ஓய்வு பெற்று அவர்களுடன் துபாயில் நிரந்தரமாகத் தங்கிக் கொண்டார்.
அந்த நேரத்தில் வசந்தி நல்லானுடன் துபாய் சென்று கௌதமிடம் மன்னிப்பு கேட்டு சில நாட்கள் உடனிருந்து சுபாவை கவனித்துக் கொண்டார்.
அதன் பின்னர் கௌதம் வசந்தியிடம் பேசவில்லை என்றாலும் மகனாக தன் கடமையை செய்து கொண்டிருக்கிறான். விசேடம் என்றால் தன் குடும்பத்தோடு ஊர் வந்து செல்கிறான்.
இன்றும் வந்திருக்கிறான்.
கௌதம், சுபாவின் மகன் மனிஷ் கௌசிக்குடன் சேர்ந்து வீட்டை அதகளம் செய்து கொண்டிருக்க… நல்லான் அதிசயமாக சிரித்துக் கொண்டிருக்கிறார்.
“கிளம்பலையா?” கௌதம் பொதுவாய் கேட்டிட…
“மாமா வீட்டுக்கு போகணும் கௌதம். எல்லாரோடவும் போகலாம்” என்றாள் சுபா.
அவர்கள் வீரனின் இல்லம் வர, மருதனும் தன் வீட்டாட்களுடன் அங்கு வந்தார்.
“என்ன பாண்டியா கிளம்பியாச்சா?” என மருதன் கேட்டுக்கொண்டே உள்ளே வர, வீரன் சமையலறையிலிருந்து கையில் தட்டுடன் வெளியில் வந்தான்.
“என்ன அமிழ்தா இன்னும் நீயி இங்கன இருக்க? அங்கன மினிஸ்டர் வரும்போது நீயி இருக்க வேணாமாட்டிக்கு?” என்ற மருதனிடம்…
“நீங்க எல்லாரும் போங்க மாமா. நான் பின்னாலேயே வாரேன்” என்று நடந்துகொண்டே பதில் சொல்லியவனாக மாடியேறியிருந்தான்.
“என்னடே இவன் இப்படி சொல்லிப்போட்டுப் போறான்?”
“மீனாளுக்கு பரீட்சை இருக்குல மாமா. இப்போ அவனுக்கு அதுதேன் கருத்துல நிக்கும்” என்று பதில் சொல்லிய பாண்டியன்…
“நாம போவோம் வாங்க. அமிழ்தன் சரியா வந்துப்புடுவியான்” என்றார்.
மீனாட்சி பாட்டி சாமி கும்பிட்டு வர அனைவரும் ஏற்பாடு செய்திருந்த வண்டியில் ஏறி சர்க்கரை ஆலைக்கு சென்றனர்.
மீனாள் தேர்விற்கு அனைத்தும் சரியாக இருக்கிறதா என்று சரிபார்த்து பையில் எடுத்து வைத்துக் கொண்டிருக்க…
அவளுடன் நடந்துகொண்டே உணவினை ஊட்டிவிட்டுக் கொண்டிருந்தான் வீரன்.
இந்த இரண்டு வருடங்களில் இருவருக்குமிடையேயான அமைதி அத்தனை அசாத்தியமானதாக இருந்தது.
தேவை எனும் நிலையில் மட்டும் இயல்பாய் பேசிக்கொண்டனர். அவனின் பேச்சு, கட்டப்பட்டுக்கொண்டிருந்த ஆலை பற்றியும், அவளுடைய பேச்சு படிப்பினை பற்றி மட்டுமே இருக்கும்.
மீனாள் படிக்கும் நேரம்… வெகு தாமதமானாலும் அவனும் ஏதேனும் புத்தகத்தோடு அவளோடு உட்கார்ந்திருப்பான்.
மீனாளுக்கென்று ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்பவன் தவறிக்கூட தன் கண்ணில் காதலை காட்டிட மாட்டான்.
மீனாளும் தான் எதிர்பார்த்தால் கூட அவனிடமிருந்து காதல் பார்வை கிட்டாது என்று அறிந்து, தன் கனவை அவனது கனவாக சுமக்கும் கணவனுக்காக மட்டுமே படிப்பில் இன்னும் தீவிரம் காட்டினாள்.
இரவில் மனைவியை தன் கைவளைவில் வைத்து உறங்க வைப்பவனிடத்தில் தாய்மையை மட்டுமே அவளால் உணர முடியும்.
கோகுலிற்கு பயந்து கல்லூரி செல்ல அடம் பிடித்தவளை, அவளின் தேர்வு முடிந்த அந்த ஒரு வருடமும் வீரனே அழைத்துச் சென்று கூட்டி வந்தான்.
மீனாள் அந்த வருடத்தின் இரண்டாவது பருவத்தில் இருந்த போதே பயிற்சி வகுப்பில் சேர்த்துவிட்டான். கல்லூரி செல்வதால் வார இறுதியில் பயிற்சி வகுப்பிற்கு செல்வாள். அதற்கும் வீரன் தான் டிரைவர் வேலை பார்த்தான்.
கல்லூரி முடித்த அடுத்த ஒரு வருடம் முழுக்க யூபிஎஸ்சி தேர்வு எழுத பயிற்சி வகுப்பு, நூலகம், வீடு என்று எங்கு பார்த்தாலும் புத்தகமும் கையுமாகத்தான் இருந்தாள்.
வீட்டிலிருப்பவர்களிடம் அவளது பேச்சு முற்றிலும் குறைந்து விட்டது. அதுவும் பயிற்சி வகுப்புகள் இல்லாத நாட்களில் அறையில் மட்டுமே அவளின் வாசம். நேரத்திற்கு உணவினைக்கூட வீரன் தான் எடுத்து வந்து ஊட்டி செல்வான். அதைக்கூட உணரும் நிலையில் அவள் இருந்திடமாட்டாள்.
மீனாளுக்கு வீரனுடனான இடையவெளியை முற்றும் முழுதாக நீக்கிட வேண்டும். அதற்கு அவள் முதல் முறையிலேயே பதினோரு பேப்பரிலும் தேர்ச்சி பெற்றிட வேண்டும். அதற்காகவே இரவு பகல் பாராது புத்தகத்தில் தன்னை மூழ்கடித்துக் கொண்டாள்.
“இப்படி படிச்சு அவளுக்கு எதுவும் ஆவப்போவுது அப்பு.” வீட்டில் இருப்பவர்கள் யார் சொல்வதையும் கணவன், மனைவி இருவருமே காதில் போட்டுக்கொள்ளவில்லை.
அவளுக்கு வீரனுடன் காதலாக வாழ்ந்திட வேண்டும். அவனுக்கு அவள் அவளது ஆசையை எட்டிப்பிடித்திட வேண்டும். அதற்காகவே சுற்றுப்புறத்தை மறந்தனர்.
லிங்கம் மட்டுமே அவ்வப்போது மீனாளிடம் அறைக்குள் வந்து பேசிச்செல்வான்.
அவனுக்கு வீரன் மீது தான் கோபம் வந்தது.
“உன்னாலதேன் அண்ணே மீனாக்குட்டி இம்புட்டு கஷ்டப்படுது” என்றான்.
“படிக்கிறது கஷ்டமாடே” என்று சிரித்து செல்லும் வீரனின் தலையிலே நன்கு கொட்ட வேண்டுமெனத் தோன்றும்.
உன்னை நான் கண்டு கொண்டேன் எனும் விதமாக வீரன் பார்க்கும் பார்வையில் லிங்கம் அசடு வழிய வேண்டியிருக்கும்.
“போடே… அவள் சைரன் வச்ச வண்டியில் வரும்போது இப்போ படுற கஷ்டமெல்லாம் ஒண்ணுமே இல்லைன்னு ஆகிப்போவும்” எனக்கூறிச் செல்லும் வீரனை பார்க்க அத்தனை உயர்ந்து தெரிவான்.
“போதும் மாமா!”
வீரன் உணவு அடங்கிய கையினை நீட்டிக்கொண்டே இருக்க…
எல்லாம் எடுத்து வைத்து நிமிர்ந்தவள், ஒன்றும் சொல்லாது வாங்கிக்கொண்டாள்.
“ஹாலில் போய் தூங்கத்தான் போறேன்.” அவள் மெலிதாக முணுமுணுத்திட…
வீரன் பார்த்த பார்வையில்…
“நல்லாவே எழுதுவேன்” என்று வேகமாகக் கூறினாள்.
இறுதி வாய் உணவினை அவளின் வாயில் திணித்தவன்,
“ட்ரெஸ் சேன்ஜ் பண்ணு. எக்ஸாம் ஹாலுக்கு இப்படியே போவியா? கல்யாணப்பொண்ணு மாறி” என்றான்.
அவள் குனிந்து தன்னை பார்த்தாள்.
ஆலை திறப்பு விழாவுக்கு செல்ல வேண்டுமென்பதால், பட்டு புடவை அணிந்து அதற்கு தோதாக நகைகள் அணிந்திருந்தாள்.
அபி மேலே வந்து பூக்கள் கொடுத்ததோடு “புடவை கட்டி நகை போட்டுக்கோ மீனாளு” என்று சொல்லிச் சென்றிருக்க அதனை மீற முடியவில்லை.
“தலையில எதுக்கு இம்புட்டு பூ” என்றவன், “சீக்கிரம் மாத்திக்கிட்டு வா. கீழ நிக்கிறேன்” என்று நகர,
“காலில் மருதாணி மட்டும் போட்டுகிடலாமா?” என நேற்றிரவு அவன் வைத்துவிட்ட மருதாணியை பார்த்துக்கொண்டே முனங்கினாள்.
கல்யாணம் ஆன முதல் நாளிலிருந்தே மருதாணியிட்ட அவளின் பூ பாதத்தின் மேல் வீரனுக்கு தனியான ஈர்ப்பு, ரசனை. அன்று அவன் “எப்பவும் மருதாணி வச்சிக்கோ தங்கம்” என சொல்லியதற்காகவே, அதனை அவள் மறந்ததே இல்லை.
என்ன தான் விலகி இருந்தாலும், இரவில் தான் தூங்கிய பின்னர் மென்மையாக பாதம் பிடித்து, அவன் தரும் முத்தத்திற்காகவே மருதாணியை பழகிக்கொண்டாள்.
வண்ணம் மங்கியிருக்க… நேற்று வைத்திட மறந்தவள் படித்தபடி உறங்கியிருக்க… வீரனே அந்நேரத்தில் மருதாணி பறித்து, அரைத்து எடுத்து வந்து தானே வைத்துவிட்டிருந்தான்.
அதன் சில்லிப்பை தூக்கத்தில் உணர்ந்தாலும், அவளால் உறக்கத்தை துறந்து விழிகள் திறக்க முடியவில்லை. காலையில் தான் தன் பாதம் பார்த்து தெரிந்து கொண்டாள்.
இப்போது அதனையே சொல்லி காண்பித்தாள்…
“காரணமா விலகி நின்னாலும்… ஒருத்தர் இல்லாம, இன்னொருத்தர் இல்லையே! அது மாதிரித்தேன் இதுவும்.” மீனாளின் முணுமுணுப்பு கேட்டு, நின்று பதில் சொல்லிச் சென்றான்.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
4
+1
36
+1
+1
1
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


Super super
Thank YOU
சின்னக்குட்டிக்கு லிங்கு மாமா தான் பரிசா வேண்டுமா. 😍😍
வீரன் அங்கை 🤝 இது தானா.
விருப்பத்துக்காக விருப்பப்பட்டே தீவிரமா படிச்சுருக்கா.
🤝 தேவையேயில்லாதது போல இனி அங்கை விட்டாலும் லிங்கம் அவள விட மாட்டான்.
பார்வையிலேயே இருந்தா சரியா படிக்க முடியாம போகும்னு யோசிச்சு அங்கை எடுத்த முடிவு சரியே.
இரண்டு வருட மாற்றங்கள்.
“காரணமா விலகி இருந்தாலும் ஒருத்தர் இல்லாம இன்னொருத்தர் இல்லை” 💛✨
நன்றி 😍😍
Marudhaniii vecha adhoda alage thanitha
செம