Loading

யான் நீயே 31

அன்று முழுக்க வீரன் வீட்டில் தான் இருந்தான். மீனாள் அவனை அங்கிங்கு நகர விடவில்லை என்பதே உண்மை.

“இடும்பு பண்ணுற தங்கம்” என்றவன், “போனாவது குடு. ஆலைக்கு பேசிக்கிறேன்” என்றான்.

“ஒன்னும் வேணாமாட்டிக்கு. ஆலைக்கு ஐயா போயிருக்காரு” என்றவள், “ஓட்டலுக்கு பெரிய மாமா போயாச்சு. அம்மாவும், அத்தையும் இப்போதேன் வந்தாய்ங்க. வாழைத்தோப்புக்கு இலை கட்டு அறுக்க ஆள் வந்துச்சுன்னு லிங்கு மாமா போச்சு. அப்படியே மாடுவகிட்ட போயிடுச்சாம். நான் போயி சாப்பாடு கொடுத்துப்போட்டு வரேன். அதுவரை பேசாமா தூங்குங்க” என்றவள், அணைத்து வைத்திருந்த அவனின் அலைப்பேசியையும் எடுத்துக்கொண்டே நகர்ந்தாள்.

“எம்மேல நம்பிக்கை இல்லையா?”

“இருக்குத்தேன். இருந்தாலும் போனு என்கிட்டவே இருக்கட்டும்” என்று சென்றிருந்தாள்.

படுத்தே இருப்பது ஒரு மாதிரி இருக்கவும், கீழே பின்பக்கம் வேலை நடக்கும் இடம் சென்று பார்த்தபடி கல்லில் அமர்ந்து கொண்டான்.

அங்கு கோழிகளுக்கு தீனி போட்டுக் கொண்டிருந்த அங்கை,

“என்ன அதிசயம் மாமா. உம் பொண்டாட்டியை வுட்டு வந்திருக்க?” என்று வம்புக்கு இழுத்தாள்.

“நானெங்க வுட்டுபோட்டேன் சின்னக்குட்டி. இங்கன எனக்குள்ளத்தேன் எப்பவும் இருக்காள்” என்று வீரன் தன் இதயத்தில் கை வைத்துக் காண்பிக்க…

“பின்ற மாமா” என்றவள் அவனருகில் வந்து, “உங்க தம்பிக்கு இதெல்லாம் சொல்லிக் கொடுக்கிறது” எனக் கேட்க, அவளின் காதினை பிடித்து திருகியவன்,

“என்ன பேச்சு பேசுற நீயி… ஹான்! படிப்பை பாரு மொத. மத்த ஆசையெல்லாம் பொறவுதேன்” என்றான்.

“புரியுது மாமா. மாமாவுக்கும் இப்போ என்னை புரிய ஆரம்பிச்சிடுச்சு நினைக்கிறேன். காலேஜ் வெளியூரில் தங்கி படிக்கலாமான்னு ரோசிக்கிறேன்” என்றாள் அங்கை.

அங்கை ஏன் இந்த முடிவு எடுத்திருக்கிறாள் என்று வீரனுக்கு புரிந்தது.

என்ன தான் லிங்கம் மறுத்துக்கொண்டிருந்தாலும், அவன் கண் முன்னே இருப்பது அங்கைக்கு எத்தனை அவஸ்த்தையை கொடுக்குமென்று வீரனை விட நன்கு தெரிந்தவர்கள் யார் இருந்திட முடியும்.

“லிங்கு ஒத்துக்க மாட்டியான்!” என்றான் வீரன்.

“அவிங்க என்னத்துக்கு ஒத்துக்கணுமாட்டி?” வேண்டுமென்றே கேட்டாள்.

“ஹா… ஹா… ஹா….” சத்தமிட்டு சிரித்த வீரன், “அவன் போகக்கூடாது சொன்னாலும் போயிடுவியா?” எனக் கேட்டான்.

அங்கை யோசித்தபடி உதட்டை சுளித்திட…

“என்ன மாமா உன் சின்னக்குட்டிக்கிட்ட பேசும்போது மட்டும் சிரிப்பு சத்தம் வெளி வாசல் வரை கேக்குது?” எனக் கேட்டபடி கையில் சாப்பாட்டுக் கூடையுடன் வந்தாள் மீனாள்.

கேள்வி கேட்ட மீனாளுக்கு பதில் வேண்டுமாக இல்லை.

“உட்கார்ந்து தான் இருக்கணும் மாமா. அங்கன வேலையை இப்படி செய்ங்க, அதை இப்படி வையுங்கன்னு நீயி எந்திரிச்சு நின்னு மண்ணு அள்ளி கொடுத்தேன், கலவை கலக்குனேன், செங்கல் அடுக்கினன்னு தெரிஞ்சுது” என்று விரல் நீட்டி மிரட்டியவள், “அரை மணியில மாமா சாப்பிட்டதும் வந்திடுவேன்” என்றாள்.

“என்ன மாமா… அக்கா மிரட்டுறா நீயி உம்பாட்டுக்கு சிரிச்சிக்கிட்டு இருக்க?” என்று அவனின் தோளில் இடித்து கேட்டாள் அங்கை.

“ம்ப்ச்… மாமாக்கு ஏற்கனவே உடம்பு நோவுது. அடிக்காம பேசு சின்னக்குட்டி” என்ற மீனாள், அங்கையின் கை பட்ட இடத்தை தேய்த்துவிட…

“பார்த்து பார்த்து… உருட்டு கட்டையால் அடிச்சு வீக்கம் வச்சிடுச்சு பாரு… இன்னும் நல்லா எண்ணெய் போட்டு உருவி வுடுக்கா” என்று அங்கை சிரியாது சொன்னதில் வீரன் பக்கென்று சிரிக்க… மீனாள் தன் தங்கையை முறைத்தாள்.

“சரி…சரி… முறைக்காத மீனுக்குட்டி” என்று மீனாளின் கன்னம் கிள்ளி கொஞ்சிய அங்கை, “நீயி பக்கத்துல இருந்தே மாமாவை பார்த்துக்க… நான் சாப்பாடு கொண்டுபோறேன்” என்று மீனாள் பதில் வழங்கும் முன் உணவடங்கிய பையை வாங்கிக்கொண்டு முன்னே நடந்திருந்தாள் அங்கை.

செல்லும் அங்கையையே மீனாள் பார்த்திருக்க…

“நடந்தா கால் நோவும் சொல்லுவா. இன்னைக்கு சொல்லாமலே கொண்டுபோறாள்?” என்றாள்.

“கொண்டுபோறது முக்கியமில்லை யாருக்கு கொண்டுபோறதுங்கிறதுல இருக்கு அவளுக்கான காரணம்” என்ற வீரனின் பேச்சு புரிந்ததும்,

“எப்படியும் மாமாகிட்ட வாங்கிக்கட்டிக்கிட்டு வரப்போறா” என்று மீனாள் வீட்டிற்குள் செல்ல… வீரனின் இதழ் அர்த்தமாக விரிந்தது.

லிங்குவின் மனம் தெரியாது மீனாள் பேசிவிட்டு சென்றது வீரனுக்கு புன்னகையைத்தான் கொடுத்தது.

அங்கை மாந்தோப்பிற்கு சென்று நின்று லிங்கம் எந்தப்பக்கம் இருக்கிறானென வயல்வெளியை சுற்றி பார்க்க… கிணற்றடி மர நிழலில் கால்நடைகளுக்கு தண்ணீர் காட்டிக் கொண்டிருந்தான்.

‘தொட்டிகிட்டவே சாப்பிட்டுடலாம்’ என நினைத்தவள் அங்கு செல்ல…

ஒரு பக்க வேட்டி நுனியை விரலால் பிடித்தபடி, முதுகுக்காட்டி யாருடனோ அலைப்பேசியில் உரையாடிக் கொண்டிருந்தான்.

“பிளேவர் செக் பண்ணிக்கோங்க செஃப். நீங்களே கூடயிருந்து செய்யுங்க. நேத்து மாதிரி சொதப்பிடப் போறாய்ங்க” என்றவன், “சிட்ரஸ் கசாட்டா ஐயாகிட்ட கொஞ்சம் கொடுத்தனுப்புங்க” என்று வைத்தான்.

அது யாருக்காக என்று அங்கைக்கு நன்கு தெரிந்தது.

“யாருக்கு மாமா?” வேண்டுமென்றே தெரிந்தும் கேட்டாள்.

தலையை மட்டும் திருப்பி பக்கவாட்டகா அவளை பார்த்தவன்,

“தெரிஞ்சிகிட்டே கேட்டாக்கா என்ன பதில் சொல்லட்டும்?” என்றவன், “நீயி இங்குட்டு என்ன பண்ற?” எனக் கேட்டான்.

அங்கை கையிலிருக்கும் பையை உயர்த்தி காண்பித்தாள்.

“சப்போட்டா மரத்துல மாட்டிட்டு போ நான் சாப்பிட்டுக்கிறேன்” என்றவன் நகர…

“இன்னைக்கு என்ன டிஷ் மாமா?” என்றாள்.

‘போகக்கூடாதுன்னு முடிவு பண்ணிட்டாள்.’ மனதில் நினைத்தவன்,

“ரம்புட்டான் வச்சு புது டிஷ்” என்றான்.

“ம்ம்ம்… புதுசு புதுசா ட்ரை பண்ற மாமா” என்றவள் தண்ணீர் குடித்துவிட்டு ஓடிக்கொண்டிருந்த ஆடுகளை பிடித்து நிழலில் கட்ட ஆரம்பித்தாள்.

“நான் கட்ட சொன்னனாக்கும்?”

“ஏன்? இப்போ அதுங்க ஓய்வெடுக்கிற நேரந்தானே” என்றவள், அவன் மாடுகளை பிடித்து கட்டத் துவங்கவும்…

“சுபாக்கா விசயம் என்னாச்சு?” எனக் கேட்டாள்.

“தெரிஞ்சு என்ன செய்யப்போறியாம்?” எனக் கேட்டவன், சட்டென்று வாடிவிட்ட அவளின் முகம் கண்டு, ‘கொஞ்சம் கோபமா தள்ளி வைக்கலாம் நெனச்சாக்கா முடியுதா?’ என உள்ளுக்குள் அலுத்தவனாக, “அண்ணேக்கு சுகமில்லை. சுந்தரேசன் மாமாவும் வந்துப்புடட்டும் பேசலாமின்னு அப்பத்தாகிட்ட ஐயா காலையில சொல்லிக்கிட்டு இருந்தாய்ங்க. வசந்தி பெரிம்மா ஒத்துகிட்ட மாதிரிதேன் சொன்னாரு” என்றான்.

“ம்ம்… நீயி வந்து சாப்பிடு மாமா. சாப்பிட்டா பாத்திரத்தை எடுத்துக்கிட்டு நான் கெளம்புவேன்” என்றாள்.

‘இப்போ என்ன அவசரமாட்டிக்கு?’ என தனக்குள் சடைத்துக்கொண்டான். சற்று நேரத்திற்கு முன் அவள் வந்ததும் போவென சொல்லியதை வசதியாக மறந்து போனான்.

“என்ன சாப்பாடு?” எனக் கேட்டுக்கொண்டே கை கால்களை வரப்பு நீரில் கழுவியவன் சப்போட்டா மரத்துக்கு கீழ் அமர்ந்தான்.

பதில் இல்லாமல் போக அவள் எங்கென்று பார்க்க கிணற்றின் உள்ளே படியில் இறங்கிக்கொண்டிருந்தாள்.

பையினை எடுத்து உள்ளிருந்த உணவு பாத்திரங்களை எடுத்து வெளியில் வைத்தவன், நினைவு வந்தவனாக வேகமாக எழுந்து கிணற்றுக்கு அருகில் வர, மேலே ஏறிக்கொண்டிருந்தவள் படியின் ஈரம் வழுக்கி கிணற்றுக்குள் விழுந்திருந்தாள்.

நொடியும் தாழ்த்தாது கிணற்றுக்குள் குதித்திருந்த லிங்கம் அவளின் கரம் பிடித்திருந்தான்.

நீருக்குள் அமிழ்ந்த பந்தாய் மூழ்கி வெளி வந்தவள் மூச்சுக்கு திணறியபடி மீண்டும் உள்ளே மூழ்கிட, லிங்கத்தின் பிடியிலிருந்து நழுவியிருந்தாள். நீருக்கு அடியில் தேடி தத்தளிக்கும் அங்கையின் முடியை கொத்தாக பற்றியவன் நீருக்கு வெளியே இழுத்து வந்து கிணற்று படியில் உட்கார வைத்தான்.

மொத்தமாக நனைந்து மூச்சு வாங்கியபடி இரும்பிக் கொண்டிருந்தவளின், பாதத்தை சூடு பறக்க தேய்த்துவிட்டவன்,

“அறிவிருக்காடி… நீச்சல் தெரியாம கிணத்து பக்கம் வராதன்னு எம்புட்டு தரம் சொல்றது?” என கோபத்தில் சீறினான்.

“குடிக்கத் தண்ணி எடுத்து வரலான்னு இறங்கினேன்” என்று அவள் கிணற்றுக்குள் இறங்கிய காரணம் சொல்ல…

“ஒரு நொடியில உசுரே போச்சுடி. எனக்காகவேணும் உன்னைய பத்திரமா பார்த்துக்கோ சின்னக்குட்டி” என்று தன்னைப்போல் கூறியவன், மனதிலிருந்து வெளிவந்த தன் வார்த்தைகளின் பொருளை உணரவில்லை.

“சரி மாமா” என்று நெஞ்சம் நிறைய முகம் முழுக்க புன்னகை பரவ கூறியவள்,

“என்னைய அம்புட்டு புடிக்குமா மாமா?” எனக் கேட்டாள்.

“புடிக்கும்.” அவளின் உள்ளங்கையை தேய்த்தபடி கண்களை நேராக சந்தித்து அழுத்தமாகக் கூறினான். அவனின் குரல் இதுவரை அவள் கேட்டறிந்திடாத தன்மை.

“எம்புட்டுக்கு மாமா?”

கண்களை மூடித் திறந்தான். தன் மனதை சொல்லிவிட முயன்றுவிட்டான்.

நீருக்கு அடியில் அவளைத்தேடி அலைந்த சில நிமிடங்களில் அவள் தனக்கு எத்தனை முக்கியம்… தன் இதயத்தில் அவள் பதிந்திருக்கும் ஆழம் என்னவென்று உணர்ந்து கொண்டான்.

அவளின்றி நீயில்லை. உன்னில் அணுவும் அசைந்திடாது. அவள் தான் உன்னுடைய ஆக்க சக்தி. மனதின் கூக்குரல் அவனின் இதயத்தில் இடித்துரைத்தது.

அக்கணம் அவள் தன் கைகளில் சிக்கவில்லை என்றால் தன் நிலை?

பெரும் கேள்வியுடன் அவளை மீட்டவனுக்கு, வாழும் நாள் அவளுடன் வாழ வேண்டுமென்று தோன்றியது.

“சொல்லணுமா?”

நெஞ்சம் அவளின் கேள்வியில் தடுமாற்றம் கொள்ளவில்லை. மறக்க நினைக்கவில்லை.

சொல்ல வேண்டுமென மேலும் கீழும் அவளது தலை அசைந்தது.

லிங்கத்தின் பார்வையில் புதிதாய் ஏதோ?

அவனது பார்வையில் மொத்தமாக கட்டுண்டு போனாள். இமை தாழ்த்த நினைக்கிறாள் முடியவில்லை.

அவளது கையை தேய்த்துக் கொண்டிருந்தவனின் பிடி இறுகியது. அந்நேரம் அவனுக்கு இதுநாள் வரை காரணம் காட்டிய அவளது வயது பெரிய தடையாகத் தெரியவில்லை.

நீ என்கிற உறவு நானென்றாகிட வேண்டுமென்கிற எண்ணம் மட்டுமே!

“வாழ்க்கை முச்சூடும் உன் கை என் கைக்குள்ள இருக்கணும். நீயுந்தேன்! உம் முகம் பார்க்காம இருக்க முடியாதுங்கிற அளவுக்கு புடிக்கும்.”

“மாமா!”

லிங்கத்தின் வெளிப்படையான நேச வார்த்தைகளில்… எதிர்பார்த்து காத்திருந்தவளுக்கு கண்கள் கலங்கி நீர் வழிந்தது. அதரங்கள் துடிப்பில் நடுங்கின.

“நான் புடிக்குமின்னு சொன்னதுக்கா இந்த அழுகை?” என அவன் கேட்க… இல்லையென தலையசைத்தவள், ஆமாமென்றும் சேர்த்து ஆட்டியிருந்தாள்.

“ஏதும் ஒரு பக்கட்டு ஆட்டுடே!” என்றவன், “கிணத்துல விழுந்ததை யாருக்கிட்டவும் சொல்ல வேணாமாட்டிக்கு. ஏற்கனவே கொட்டா எரிஞ்சது, சுபா விசயம், அண்ணேக்கு உடம்பு சரியலன்னு வூடு ஒரு நிலையில இல்லை” என்றதோடு, “உங்க வூட்டுக்கு போயி துணி மாத்திக்கிட்டு அங்குட்டு போ” என்றான்.

அவள் அசையாது அமர்ந்திருக்க…

“மொத பின்னலை அவிழ்த்து வுடு. வெரசா வூடு போயி ஈரத்துணியை மாத்து” என்றான்.

…..

“எந்திரி… மேலேறு! எம்புட்டு நேரம் நான் தண்ணிக்குள்ள நிக்க?”

…..

“என்னடே?”

“அம்புட்டுதேனா?”

“புரியல?”

“லவ்வெல்லாம் சொல்லியிருக்கீங்க…” என்று அவள் இழுக்க…

“அதுக்கு?” என்றவன், “நீயெங்கன வரன்னு தெரியுமாட்டிக்கு. அந்த சீனெல்லாம் இப்போ இல்லை. உன் வயசையும் மனசுல வச்சிக்கத்தா. கொஞ்சம் வளரு. பொறவு லவ்சு பண்ணிக்கலாம். இப்போ கெளம்பு” என்றதோடு,

“இனி நீயே வேணான்னு சொன்னாலும் நான் உன்னைய வுடமாட்டேன்” என்றான்.

எதிர்காலத்தில் இதுதான் நடக்கவிருக்கிறது என்பதை அறிந்து எதற்காக இப்படி கூறினானோ? உண்மையில் அதுதான் நடக்கவிருக்கிறது.

“உன்னைய சுத்தி சுத்தி வர நாயேன் உன்னைய வேணாமின்னு சொல்லப்போற(ன்) மாமா. நீயி திரும்ப சின்ன பொண்ணு, இது வயசில்லைன்னு முருங்கை மரம் ஏறாம இருந்தாக்கா சரி” என்றவளுடன் மெதுவாக கிணற்றுக்குள்ளிருந்து வெளியில் வந்திருந்தனர்.

“என்னைய வேதாளம் சொல்லுறியா நீயி?”

“புரிஞ்சிடுச்சா? நீயி அறிவாளிதேன் மாமா” என்று கேலி செய்தவள் அவனது கைகளுக்குள் சிக்காது சிட்டாக பறந்திருந்தாள்.

லிங்கத்தின் முகத்தில் புதிதாய் ஒன்று.

****************

லிங்கம் தன் மனதை வெளிப்படையாக காட்டிவிட்டதால் அன்று முழுக்க அங்கை துள்ளலோடு வலம் வந்தாள்.

மதியத்திற்கு மேல் உணவு உண்டுவிட்டு களைப்பாக இருக்கு என்று வீரன் உறங்கிவிட, மாலை தான் கீழே வந்தான்.

அவனை கண்டதும் ஓடி வந்த அங்கை அவனை கட்டிக்கொண்டு ஆர்பரித்திட…

“என்னவாம் சின்னகுட்டிக்கு?” என்று கேட்டவன், அங்கையின் காதில் மட்டும் கேட்கும்படி,

“பய சொல்லிட்டானா?” எனக் கேட்டான்.

வேகமாக ஆமாமென்று தலையாட்டியவளின் உச்சியில் கை வைத்து அவளின் ஆட்டத்தை நிறுத்தியவன்,

“நிறைய ரெஸ்ட்ரிக்ட் ரூல்ஸ் போட்டிருப்பானே?” என்க, அதற்கு அங்கையின் முகம் போன போக்கை கண்டு சத்தமிட்டு சிரித்தான் வீரன்.

அக்கணம் உள்ளே வந்த லிங்கம்,

‘சொல்லிட்டாள்!’ என்று மனதில் படபடத்தான். வீரன் அண்ணனாக இருப்பினும், லிங்கத்திற்கு அவன் தந்தைக்கு நிகர். அவனுக்கு அனைத்தும் தெரியுமென்றாலும், இந்த காதலில் ஏனோ தயக்கம்.

வீரன், அங்கையின் நெருக்கத்தை காண்கையில்… அவனுள் கொஞ்சமே கொஞ்சம் பொறாமை எட்டிப்பார்த்தது. அவனால் இப்படி அனைவரின் முன்பும் அவளை நெருங்கிக்கூட நிற்க முடியாதே! நின்றதே இல்லையென்றெல்லாம் இல்லை. அவள் தொடங்கி அவன் வரை தொட்டுவிட்ட காதல் மனதில் இருக்கும்போது, சிறு செயலில் வெளிக்காட்டிவிடுவோமோ என்கிற பயத்தில் தள்ளி நிற்கிறான்.

“என்னட்டி வேணும் உனக்கு? அப்புக்கு ஓவரா ஐஸ் வைக்கிறதாட்டம் தெரியுது?” மீனாட்சி கேட்டிட…

அவரின் அருகில் சென்றவள், அவரின் காதில் ஆடிக்கொண்டிருந்த தண்டட்டியினை பிடித்துக்கொண்டு,

“உன் காதுல ஆடிக்கிட்டு கெடக்குற தண்டட்டியை எழுதி வாங்கத்தேன்!” என்றாள்.

“இது என் புருஷன் எனக்கு ஆசையா வாங்கிப்போட்டதுடி… உனக்கு வேணுமின்னா உன்னைய கட்டிக்க வாரவன்கிட்ட கேளு” என்று அவளின் கன்னம் இடித்தார்.

“அதெல்லாம் நான் உன்கிட்ட கேட்டதே அவிங்களுக்கு கேட்டிருக்குமாட்டிக்கு” என்றவள், “என்ன மாமா கேட்டுச்சுதானே?” என்றிட, லிங்கம் திருதிருத்தான்.

லிங்கத்தின் முழிப்பில் வீரனிடம் அப்படியொரு சிரிப்பு.

அங்கை சட்டென்று தன்னிடம் கேட்பாளென்று அவன் எதிர்பார்க்கவில்லை. அத்தோடு தங்களின் விருப்பம் குடும்பத்தாருக்கு தெரியப்படுத்தும் சரியான தருணமும் இதில்லை என்பதால் அவனுக்கு சட்டென்று என்ன பதில் சொல்வதென்று தெரியாது விழி பிதுங்கினான்.

“அச்சோ மாமா… கேட்டிருக்குந்தானே?” என்று அவள் வேறு விதமாகக் கேட்டிட எல்லா பக்கமும் தலையை ஆட்டியவன் வீரனை தாண்டிக்கொண்டு ஓட பார்த்தான்.

“என்னட்டி அவனை வம்புக்கு இழுக்கமாறி தெரியுது?” மீனாட்சி கேட்டிட அவரின் கன்னத்தை பிடித்து ஆட்டிய அங்கை… “கட்டிக்கத்தேன் ஒரண்டை இழுக்குத்தோம். கட்டிக்கொடு” என்று கேட்டிட…

பக்கத்திலிருந்த தடியை எடுத்து அவளை அடிக்க பார்த்தார். லாவகமாக விலகி ஓடியவள்,

“எம்பேரனை கட்டிக்கிடு சின்னக்குட்டின்னு உன்னைய கெஞ்ச விடுதோம் பாரு” என்று உதடு சுளித்து காண்பித்தாள்.

“வாலு ஒண்ணுதேன் இல்லை” என்ற மீனாட்சிக்கு அங்கை விளையாடியதாகத்தான் தெரிந்து.

தன்னை கடந்து செல்ல முயன்ற லிங்கத்திடம்,

“அண்ணேகிட்டவே பொறாமையாடே?” என்று கண்களில் மின்னிய குறும்போடு கேட்டிருந்தான் வீரன்.

“ஆங்… லைட்டாண்ணே!” என்று இதழ் விரித்த லிங்கம், “எப்படித்தேன் என் கண்ணை வைச்சே கண்டுக்கிறியோ?” என நின்று கேட்டான்.

வீரன் புன்னகைத்தானே தவிர பதில் சொல்லவில்லை. அவனுக்கு தம்பி என்பவன் முதல் பிள்ளையாயிற்றே. அவனின் அசைவுக்கான விளக்கம் வீரனுக்கா தெரியாது.

வீரன் லிங்கத்தின் தோளில் கைபோட…

அவன் ஏதோ சொல்ல வருகிறானென்று லிங்கம் நினைத்தான்.

ஆனால் வீரன் தன் தம்பியின் கன்னத்தில் அழுந்த முத்தம் வைத்தான்.

அந்த முத்தம் லிங்குவிற்கு வீரனிடத்தில் தனக்கான இடம் எதுவென்பதை அவனுக்கு உணர்த்தியது.

வீரன் என்றும் இப்படி வெளிப்படையாகக் காட்டுபவன் கிடையாது. இன்று ஏனோ தன்னுடைய சின்னக்குட்டியின் முகத்தில் பரவி விரவியிருந்த மகிழ்ச்சிக்கு தன்னுடைய தம்பி காரணமென்றதும், அவர்கள் இணைய வேண்டுமென ஆசை கொண்டிருப்பவனுக்கு தன்னிச்சையாக அச்செயல் வெளிக்கொணர்ந்திருந்தது.

ஏனென்றால் வீரனிடம் அங்கை, லிங்கம் தன்னுடைய அன்பை புரிந்துகொள்ளவே போவதில்லையென அத்தனை வருத்தத்தை காட்டியிருந்தாளே!

என்ன தான் லிங்கமும், அங்கையும் ஒன்று சேர வேண்டுமென நினைத்தாலும், அவனாக முழு மனதோடு அங்கையை ஏற்க வேண்டுமென இருந்தவனின் எண்ணம் ஈடேறியதில் வீரனுக்கு அத்தனை மகிழ்வு.

“அண்ணே…!” லிங்கம் நெகிழ்ந்தவனாக தமையனை கட்டிக்கொள்ள… அக்காட்சியை கண்ட மீனாட்சி…

“என் கண்ணே பட்டுப்போவுமே!” என்று இருவரின் அருகிலும் வேகமாக சென்றவர், அவர்களின் முகம் சுத்தி விரல்களால் நெட்டி உடைத்து திருஷ்டி நீக்கினார்.

“அச்சோ அப்பத்தா!” அவரின் செய்கையில் அசடு வழிந்த வீரன், “நாங்க என்ன சின்ன பிள்ளையா?” என்று கேட்டான்.

“இதுக்கெல்லாமா வயசு பாப்பாங்கா. கண்ணு நெறைஞ்சிருக்கு… சுத்தி போட்டேன்” என்ற மீனாட்சி, “ஒட்டுக்கா திரியாதீங்க” என்றார்.

“ம்ம்ம்… ம்ம்ம்…” இருவரும் ஒன்று போல் தலை அசைக்க…

“நீயி அந்தப்பக்கட்டு போ. நீயி இங்கட்டு போடே!” என்று ஆளுக்கு ஒரு பக்கமாகக் கை காட்டினார்.

“இந்த அப்பத்தாவே நம்மளை பிரிச்சிபுடும் போலண்ணே” என்று லிங்கம் விளையாட்டாக சொல்ல…

“வாவடி” என்று அவனின் வாயிலே ஒன்று போட்டார் மீனாட்சி.

“அவென் கேலி செய்யுதாம் அப்பத்தா” என்ற வீரன் பார்வையை சுழல விட்டவனாக…

“எங்க வூட்டுல யாரையும் காணும்?” எனக் கேட்டான்.

“கோவிலுக்கு போயிருக்காய்ங்க” என்ற மீனாட்சி, “சுந்தரேசன் வந்திருக்கான். நீயி தூங்கவும், வூட்டுல யாருமில்லைன்னதும் ஆலைக்கு போயிருக்கியான். மருதனோட வருவியான்” என்றார்.

காய்ச்சலில் அனைத்தும் மறந்திருந்த வீரனுக்கு அப்போதுதான் நினைவு வந்தவனாக,

“உன்கிட்ட கேட்காம ஒரு முடிவெடுத்து வாக்கு கொடுத்துட்டேன் லிங்கு” என்றான்.

லிங்கம் என்னவென்று கூட தெரிந்துகொள்ள ஆர்வம் காட்டவில்லை. மௌனமாக நின்றிருந்தான்.

அப்பத்தா தான் என்னவென்று வினவினார்.

“கேட்டிருக்கணும். அந்த நேரம்…” என்று நிறுத்திய வீரன், “உனக்கு சம்மதமில்லைன்னா சொல்லிப்புடு லிங்கு. வேறெதுவும் மாத்தல் ரோசிச்சிக்கலாம்” என்றான்.

“அண்ணே… கஷ்டமா இருக்கு!” என்ற லிங்கம், “நீயி என்ன செய்தாலும் சரியாத்தேன் இருக்கும். இப்படி நாயென்ன சொல்லுவனோன்னு நீயி மருவுறதுதேன் என்னவோமாட்டிக்கு இருக்கு” என்றான்.

“உன்னைத் தெரியும்டே! இருந்தாலும் கேட்காம முடிவு பண்ணிட்டனோன்னு உள்ளே ஒரே குடைச்சலா இருந்துச்சு” என்று வீரன் சொல்லிக்கொண்டிருக்க கோவிலுக்கு சென்றிருந்த வீட்டு பெண்கள் யாவரும் வந்து சேர்ந்தனர்.

“அக்கா பிரசாதம்.” அங்கை ஓடிப்போய் மீனாளின் கையில் வாழை இலையிலிருந்த பொங்கலை வாங்கிக்கொள்ள…

“கோவிலுக்கு கூப்பிட்டதுக்கு வரல? பொங்கலை மட்டும் வெடுக்குன்னு வாங்குற. எல்லாருக்கும் குடு சின்னக்குட்டி” என்ற மீனாள்,

வீரனிடம் வந்து,

“இப்போ பரவாயில்லையா மாமா?” எனக் கேட்டதோடு, அவனின் நெற்றியில் விபூதியை பூசி, கண்ணுக்கு மேல் கையை வைத்து மறைத்தவளாக ஊதியும் விட்டாள்.

“கேட்டா பதில் சொல்லு மாமா” என்றவள், தானே அவனின் நெற்றியில் கை வைத்து பரிசோதிக்க..

லிங்கம் தொண்டையை செருமி தன்னிருப்பைக் காட்டினான்.

“தொண்டையில கிச்கிச்சுன்னா வெந்நீ குடி மாமா” என்று அவனை வாரியவளாக அவனுக்கும் விபூதி பூசி நகர்ந்தாள்.

“ராவுக்கு எதுவும் சமைக்க வேண்டாம்மா! ஓட்டலுல இருந்து வரும். ஐயா வரும்போது கொண்டாறேன் சொன்னாய்ங்க” என்று அபியிடம் கூறினான் லிங்கம்.

“சரி அப்பு” என்ற அபி,

“அண்ணே வந்திருக்கு அமிழ்தா. நீயும் இன்னும் அங்குட்டு என்ன நடந்துச்சுன்னு சொல்லல… இந்த சுபா புள்ளையும் வந்ததிலேர்ந்து வெறிச்சிட்டு உட்கார்ந்துக்கிறாள். சரின்னு கோவிலுக்கு கூட்டிட்டு போனாக்கா, அங்கையும் மனசு நிம்மதியடைஞ்ச மாறியே இல்லை” என்று புலம்பினார்.

“ஐயா, மாமாலாம் வந்திடட்டும். பேசிக்கிடலாம் ம்மா” என்ற வீரன், “கருப்பர் கோவில் படையலுக்கு சொல்லிட்டியா அப்பத்தா” என்றவனாக இருக்கையில் அமர்ந்தான்.

“ம்ம்ம் எல்லாம் தோதுபடும் ராசா. வச்சிக்கலாம். நீயி ஏற்பாட்டை கவனி” என்றார் மீனாட்சி.

“இந்தா மாமா இதை குடி” என்று தம்ளரை அவன் முன் நீட்டினாள் மீனாள்.

“என்னது தங்கம்?”

“கசாயம்.”

“காய்ச்சல் இப்போ இல்லத்தா. சுத்தமா வுட்டுப்போச்சு” என்றான்.

“இருக்கட்டும் மாமா. இந்த ஒரு நேரம் மட்டும் குடி” என்று முகம் சுருக்கினாள்.

அடுத்து மறுத்து பேசாது வாங்கி குடித்திருந்தான்.

“ரொம்ப கசக்குது தங்கம்.” வீரன் முகம் அஷ்டகோணலாக மாறியது.

அவனின் காதருகே குனிந்தவள்,

“நான் வேணுன்னாக்கா” என்று ஏதோ கிசுகிசுக்க…

“உன்னைய…” என்றவன், “ராத்திரிக்கு ரூமுக்கு வா. யாருன்னு காட்டுறேன்” என்றான்.

“பேசம் மட்டும் செய்யுறதுக்கு என்னத்துக்கு இந்த முறுக்கு மாமா?” என்று கேலி செய்தவள், வீட்டிற்குள் பாண்டியன் நுழையவும் அமைதியாகிவிட்டாள்.

“வூட்டுக்குன்னு செய்ய சொல்லி கொண்டாந்தேன்” என்று பையினை உணவுக்கூட மேசையில் வைத்தார்.

“என்னத்துக்குப்பா… வூட்டுலே ஆக்கியிருக்கலாமே?” மீனாட்சி கேட்டிட,

“நாலஞ்சு நாளா வேலை செய்யுற ஆளுவளுக்கும் சாப்பாடு செஞ்சிக்கிட்டு வூட்டு பொண்ணுங்களுக்கு ஓய்வே இல்லையேம்மா! அதேன் ஒரு நேரம் செத்த உட்காரட்டுமின்னு” என்ற பாண்டியன், யாரின் கவனமும் ஈர்க்காது அபியின் அருகில் சென்று, “கைவலி எப்படியிருக்கு அபி?” எனக் கேட்டார்.

வீரன் தன் கண்ணில் இக்காட்சி பட்டாலும் காணாதவனாக பார்வையை திருப்பிக்கொண்டான்.

இந்த வயதிலும் தன் அன்னைக்காக யோசிக்கும் தந்தையின் அன்பில் இருவருக்கும் இடையேயான குடும்ப வாழ்க்கையின் அந்நியோன்யம் தென்பட, தன்னவளுடன் வாழ்வின் நீண்ட பயணம் இதேபோல் இனிமை நிறைந்து இருக்க வேண்டுமென மனமார நினைத்தான்.

சுந்தரேசனும், மருதனும் சிறிது நேரத்தில் வந்திட, உணவு நேரம் பேச்சும் சிரிப்புமாக கழிந்தது.

அனைவரும் முற்றம் கூடத்தில் கூடியிருந்தனர்.

சுபா இங்கு வந்ததிலிருந்து கௌதமுடன் பேசிடவில்லை. ஆதலால் அவளுக்கும் அங்கு நடந்தது என்னவென்று தெரியாது.

வசந்தி ஒப்புக்கொண்டார் என்பதை நம்ப முடியாது… அதற்கான காரணம் அறிந்துகொள்ள வேண்டுமென அதீத எதிர்பார்ப்போடு அமர்ந்திருந்தாள்.

வீரனுக்கு எப்படி சொல்வதென்று தெரியவில்லை. ஆளாளுக்கு எப்படி இதனை எடுத்துக்கொள்வார்கள் என்கிற சிறு கலக்கம் அவனுள்.

“என்னப்பு இன்னும் ரோசனை. என்னன்னு சொல்லுய்யா?” மகா கேட்டிருந்தார்.

அவர்கள் சென்னைக்கு சென்று வந்ததலிருந்து அவரும் பார்த்துக்கொண்டுதானே இருக்கிறார். மருதனும் பாண்டியனும் எதனையோ கலந்து ஆலோசித்தபடியே இருப்பதை.

இப்போதும் வீரன் சொல்லுவதற்கு முன்பு குறுக்கீட்ட சுந்தரேசன்…

“இது ஒத்துவராது அமிழ்தா. சுபா கல்யாணம் ஆகாமலே இருந்தாலும் பரவாயில்லை. இது மட்டும் வேணாம். எனக்கு என்னோட தன்மானத்தை விட்டு கொடுக்கிற போலிருக்கு” என்றார்.

“மாமா!” என்ற வீரன் நெற்றியை தேய்த்தவனாக…

“சுபாவுக்கு கௌதமை கட்டிக்கொடுக்கணுமின்னா வசந்தி பெரிம்மாவுக்கு, நம்ம பூர்வீக வீடும், ஹோட்டலில் ஒன்னும் வேணுமாம்” என்றான்.

வீரன் சொல்லியதும் அங்கு ஆழ்ந்த அமைதி. இதனை எப்படி எடுத்துக்கொள்வதென்று யாருக்கும் தெரியவில்லை.

பூர்வீக வீட்டில் இரு குடும்பத்திற்கு சமபங்கு உரிமை இருப்பினும்… அதனை எப்போதும் யாரும் பிரித்து பார்த்தது இல்லை. இப்படி ஒன்றை வசந்தி கேட்டதில் அனைவரும் அதிர்ந்துதான் போயினர்.

மருதனுக்கு யாரின் முகமும் பார்த்திட முடியவில்லை. தலை கவிழ்ந்திருந்தார்.

Click on a star to rate it!

Rating 4.8 / 5. Vote count: 31

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
24
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

1 Comment

  1. நல்லான் வசந்தினால பெரிய பிரச்சனை தான் வர போகுது போல..