Loading

யான் நீயே 8

“என்னடே… என்ன வெசனம். அதான் சரியாப்போச்சுதே! சின்னகுட்டி தான் புரிஞ்சிக்கிட்டாளே!” என்று மொட்டை மாடி இருளில் நின்றுகொண்டிருந்த லிங்கத்தின் தோளில் கை போட்டவனாக வீரன் கேட்க, அவனின் தோளில் தலை சாய்த்தான் லிங்கம்.

“என்னடே?” என்ற வீரன் தம்பியை தட்டியவனாக தோளோடு இறுக்கமாக சேர்த்து அணைத்தான்.

“சின்னகுட்டி மனசு தடம் புரலுற அளவுக்கு நான் நடந்துகிட்டேனாண்ணே? உங்க எல்லாருகிட்டையும் இருக்க மாதிரிதேன் அவகிட்டவும் பழகினேன். எந்த இடத்துல தவறிப்போனேன் தெரியலையே. சின்னப்புள்ள மனசை கலைச்சிட்டனேன்னு எம்மேலவே கோவம் கோவமா வருதுண்ணே” என்ற லிங்கத்திடம் அத்தனை வருத்தம்.

“ம்ப்ச்… என்ன லிங்கு இது?” என்ற வீரன், “இந்த வயசுல இதுலாம் சகஜம்தேன்! இதையும் கடந்து வரணுமில்லையா. எல்லாம் அனுபவம் தானே! இந்த அனுபவம் சின்னகுட்டியை பல ஈர்ப்பிலிருந்து தள்ளிவைக்குமில்லையா? அவ(ள்) சாதரணமாயிட்டா.. நீயும் இதை மறந்துட்டு உம் வேலையை பாரு” என்றான்.

“எங்கண்ணே!” என்றவன், “அவள் அழுது கெஞ்சுன காட்சி தான் படமாட்டிக்கு கண்ணு முன்னுக்கு வந்து நிக்குது” என்றான்.

“இப்போ சின்னகுட்டிதேன் உனக்கு வூட்டுல பாக்குற பொண்ணா இருந்தாக்கா என்ன செய்வ நீயி. அப்பத்தா, ஐயா, மாமான்னு எல்லாரும் ஆசைப்படுராய்ங்க… வேணான்னுடுவியோ?” எனக் கேட்டான்.

“அப்புடி ஒன்னு நடந்தாக்கா ரோசிக்கலாம்ண்ணே” என்ற லிங்கம், “அவ இன்னும் என் கண்ணுக்கு பச்ச புள்ளையாத்தேன் தெரியுறாண்ணே” என்றான்.

“எனக்கும் அப்படித்தேன் தெரிஞ்சா(ள்) உம் மீனாகுட்டி. எப்போ வளந்தா(ள்) உள்ள புகுந்தான்னு ஒண்ணும் தெரியல. ஆட்டி வைக்குறா! கிட்டக்க நெருங்கவும் முடியல, எட்ட நிக்கவும் முடியல” என்ற வீரன் “அவசரத்துல முடிவெடுத்து பொறவு வெசனப்பட்டு நிக்காதடே” என்றான்.

“அப்போ எனக்கும் ஒருநா இது நடக்கும் சொல்லுறியாண்ணே?”

“எல்லாருக்கும் ஒரே மனசுன்னு சொல்லலடே! அப்படியொரு சூழல் வந்தாக்க என்ன செய்யணுமாட்டின்னு ரோசிச்சுக்க. எல்லா நாளும் ஒன்னு போல இருக்காது” என்றான் பூடகமாக.

“சொல்லுறதே வெளங்கமாட்டேங்குது” என்ற லிங்கம், “அவகிட்ட என்னண்ணே பேசுன?” எனக் கேட்டான் மீண்டும்.

“நீயி சொல்லுறமாறி இன்னும் பெரிய வயசு வந்ததும் உன்னையவே கட்டிக்கொடுக்குதேன்னு சொன்னேன்” என்று வீரன் அடக்கப்பட்ட சிரிப்புடன் சொல்ல லிங்கம் அவனை வெட்டவா குத்தவா என்று கடுப்புடன் நோக்கினான்.

“என்னைய அவகிட்ட வாழ்க்கை முழுசும் மாட்டிவிடலாம் பாக்குதியாண்ணே?” என்றான்.

“அதெல்லம் என் சின்னகுட்டி உன்னைய கண்ணு கலங்காம பார்த்துகிடுவாடே” என்ற வீரன் சத்தமிட்டு சிரித்தான். லிங்கத்தின் முகம் போன போக்கில்.

“அண்ணே!” என்று வீரனின் கழுத்தை லிங்கம் நெறித்து ஆட்டிட…

“அடேய்… என் தங்கப்பொண்ணுக் கூட நானு நூறு வருசம் வாழனும்டே” என்று பொய்யாக அலறினான் வீரன்.

லிங்கம் வீரனின் செய்கையால் மனம் விட்டு சிரிக்க… வீரனுக்கு உள்ளம் ஆசுவாசம் கொண்டது.

“இப்படியே இருடே. எதுவாயிருந்தாலும் போற போக்குல பார்த்துக்கிடலாம்” என்ற வீரன், “நாளைக்கு கொள்ள சோலி கெடக்கு. தூங்குவோம்” என லிங்கத்தை இழுத்துக்கொண்டு சென்று அவனது அறையில் விட்டு அவன் படுத்ததும் விளக்கினை அமர்த்திவிட்ட பின்னர் தான் தனதறைக்கு வந்தான்.

கட்டிலில் விழுந்த வீரனுக்கு மனம் முழுக்க அவனது தங்கப்பொண்ணுவின் நினைவு தான். அவளின் நினைவின்றி அவனில் அணுவும் அசைந்திடாதே!

மாடியிலிருக்கும் தன்னுடைய அறை சன்னலின் அருகே எழுந்து சென்று நின்றவனின் பார்வை தூரத்தில் ஒளிரும் விளக்கு வெளிச்சத்தில் நிலைத்தது.

மீனாளின் அறையில் விளக்கு ஒளிர்ந்து கொண்டிருந்தது. வீடு மற்றும் சுற்றுப்புறம் யாவும் கருமையில் மூழ்கியிருக்க… விளக்கு ஒளிரும் பகுதி தன்னவளின் அறையென்று அறியாதவனா அவன். தினமும் இங்கிருந்து அவளின் நடவடிக்கைகளை அவதானிப்பவனுக்கு, இருளிலும் அவளது நடமாட்டம் தெரிந்தது.

மீனாள் புத்தகத்தில் மூழ்கியிருந்தாள்.

“சரியான படிப்ஸ். ஸ்டடி மண்டை. உனக்கு புஸ்தகப் பாடத்தோட சேர்த்து காதல் பாடமும் கத்துக்கொடுக்கணும். ரொம்ப தவிக்கவிடுற நீயி!” என்று மீனாள் பக்கத்தில் இருப்பதைப்போல் பேசிக்கொண்டிருந்தான்.

“எப்போ என் பக்கட்டு… இங்குட்டு இந்த அறைக்குள்ள இருப்ப? உன் கை புடிச்சிட்டு தூங்கணும். உன்னையும் தான்” என்று ஏதேதோ பிதற்றியவன், மீனாளின் அறையில் விளக்கு அணைந்ததும் உறக்கத்திற்குச் சென்றான்.

அடுத்தநாள் காலை மிகுந்த பரபரப்புடன் தொடங்கியது.

அனைத்து கால்நடைகளையும் கிணற்றுக்கு அருகிலிருக்கும் களத்து மேட்டிற்கு வீரன் ஓட்டிச்செல்ல, நாச்சியும், சுபாவும் உடன் சென்றனர்.

“லிங்கு எங்க?”

“சின்னண்ணே மாலை கட்ட வேண்டியதை கொண்டார போயிருக்கு” என்ற நாச்சி தோப்பினை கடந்ததும்…

“மீனு” என்று குரல் கொடுக்க, அவர்களிடம் அவளும் வந்து சேர்ந்தாள்.

“அங்கை வரலையா?” சுபா கேட்க,

“அவ இந்நேரத்துக்கு எங்க எழும்புவா(ள்). உச்சி மண்டையல சூரியன் சுள்ளுன்னு கொட்டுனாதேன் எழுவா” என்ற மீனாள், “எங்க கரியனை காணோம்?” எனக் கேட்டாள்.

“அவனை மொதவே பத்தி விட்டாச்சு” என்ற நாச்சி, “அங்குட்டு மொத ஆளா நிக்கியான் பாரு” என்றாள்.

தண்ணீர் தொட்டி அருகே நின்றிருந்தான் கரியன்.

மீனாளுக்கு கரியன் என்றால் அதீத பிடித்தம். அந்த பிடித்தம் வீரனுக்கு கரியன் இன்னொரு தம்பி போலென்பதால் வந்தது. ஆனால் அதன் அருகில் மட்டும் சென்றிடமாட்டாள். அதனின் உயர்ந்த பருத்த திமிளும் கூறிய கொம்புகளுமே அவனின் தோற்றத்தை அச்சப்படுத்திக் காட்டும். அங்கையே சாதாரணமாக தொட்டு தடவி விளையாட மீனாளுக்கு கரியன் மீது பிடித்தமிருந்த அளவுக்கு பயமும் உள்ளது.

“இந்தவாட்டியாவது அவன் பக்கட்டு போவியா?” சுபா சிரிப்போடு வினவினாள்.

“மாமா இருக்காய்ங்கல… அவனை இன்னைக்கு நான் குளிக்க வச்சுக் காட்டுறேன்” என்று சவலாகக் கூறி வீரனை பார்த்தாள் மீனாள்.

“மாமா இருந்தாக்கா மட்டும் என்ன பண்ணிப்புடிவ? கரியன் கண்ணை உருட்டினாலே அளமலந்து போவ நீயி” என்று நாச்சியும் சுபாவுடன் சேர்ந்து மீனாளை பகடி செய்தாள்.

“இங்கிருக்கிறதுலே கரியனத்தேன் பிடிக்குமாட்டிக்கு. ஆனாலும் அவென் பக்கட்டு போக இந்த பயம் பயப்படுறவ” என்ற நாச்சி, “நீயி கண்ணுக்குட்டிவளை கழுவு” என்றாள். அதில் சுபா சத்தமிட்டு சிரித்திட மீனாளின் முகமே சுருங்கிப்போச்சு.

கிணற்று மோட்டாரை ஆன் செய்து தொட்டி நிரம்பச் செய்த வீரன்,

ஆளுக்கொரு ஓசினை கையில் கொடுத்தான்.

கால்நடைகளின் உடம்பில் தேய்க்கும் சோப்பு பவுடரை பாத்திரத்தில் கொட்டியவன்,

“அம்சாவை மொத கழுவி விடு நாச்சியா, தங்கம் கரியனை கழுவும்” என்றான்.

விலுக்கென சிறு அதிர்வோடு மீனாள் வீரனை பார்க்க, அவன் தானிருப்பதாக கண் மூடி திறந்தான்.

“நாச்சியா கழுவிவிட, நீயி தண்ணியை அடி சுபா” என்று இருவரையும் ஒருசேர விட்ட வீரன், கரியனின் காதில் என்னவோ சொல்லிவிட்டு மற்ற மாடுகளின் பக்கம் நகர்ந்தான்.

தயங்கிய மீனாள் அப்படியே நிற்க,

“கழுவு தங்கம்” என்றான் வீரன்.

“நான்… நானா?”

“ஆமாம். நீயிதேன். அவனை புடிக்கும் தான! பொறவு என்ன? பயந்து நின்னா ஆவும்மா. கிட்டக்க நெருங்கினாத்தேன் பயம் போவுமாட்டி” என்றான்.

உள்ளர்த்தம் வைத்துக் கூறினானோ?

“இல்லை… வேணாம். பயமா இருக்கு.”

“நீயி எட்டக்க நவுர்ற வரைக்கும் அவென் அசையவே மாட்டியான்” என்ற வீரன் அழுத்தமாக அவளை பார்க்க, மெல்ல மெல்ல கரியனை நெருங்கினாள்.

மீனாள் அருகில் சென்று அவனின் முதுகில் மெல்ல கை வைக்க, அப்பவும் கல்லென அசையாது நின்றான். அவன் தலையை கூட ஆட்டாது நிற்க. மெதுவாக அவனை வருடிக் கொடுத்தாள்.

அவளின் வருடலில் சுகம் கண்ட கரியன், “ம்மா” என்று விளித்து தன் பாசத்தை உணர்த்திட முயன்றான்.

அதில் மீனாள் சிலிர்ப்பை உணர்ந்து, மெதுவாக அவனை சுத்தப்படுத்திட, கரியன் அவளுக்கு வாகாய் எல்லா பக்கமும் வளைந்து கொடுத்தான்.

“திமில் ஆட்டவே இல்லை மாமா. குழந்தையாட்டம் நிக்கிறான்.” மீனாள் உற்சாகமாக வீரனிடம் பகிர்ந்திட, அவனின் அகம் இன்பம் கொண்டது.

“மதினி இங்காருங்க… நான் கொம்பை புடிக்கிறேன். சுபாக்கா நீங்களும் பாருங்க” என்று சிறுமியாகத் துள்ளிக் குதித்தவளின் மகிழ்வில் அவர்களும் பங்கு கொண்டனர்.

அடுத்த சில மணி நேரங்களில் அனைத்து கால்நடைகளையும் சுத்தம் செய்து, ஈரம் காய்வதற்குள் உடம்பில் வண்ணப்பொடிகள் பூசிட, வீரன் ஒவ்வொன்றின் கொம்பிலும் பெயிண்ட் அடித்தான்.

கரியனின் முறை வரும்போது வீரன் மீனாளை ஏறிட, தானாகவே அவள் முன் வந்தாள்.

“ரொம்ப பசிக்குதுண்ணே! பெயிண்ட் அடிச்சதெல்லாம் ஓட்டிட்டு ரெண்டேறும் வூட்டுக்குப் போறோம்” என்று நாச்சி சொல்ல, வீரனும் சரியென்றான்.

கிட்டத்தட்ட அனைத்திற்கும் அடித்து முடித்தாயிற்று.

“முடிஞ்சுதா?”

வீரன் மீனாளிடம் வர, அவள் இப்போது தான் கரியனின் ஒரு கொம்பிற்கே அடித்து முடித்திருந்தாள்.

“கஷ்டமாயிருக்கா? கொண்டா நானே அடிச்சிக்கிறேன்.”

“இல்லை மாமா. புடிச்சிருக்கு” என்றவள் கருமமே கண்ணாக இருந்தாள்.

அங்கு வேறு வேலை எதுவும் இல்லாததால், தன்னவளை ரசித்தபடி நின்றுவிட்டான்.

தாவணி அணிந்திருந்தவள், வேலைக்கு ஏதுவாக முந்தி முனையோடு பாவாடையை ஒரு பக்கமாக கணுக்கால் தெரிய இடுப்பில் ஏற்றி சொருகியிருந்தாள். மும்முரமாக கரியனின் மற்றொரு கொம்பிற்கு வண்ணம் தீட்டிக்கொண்டிருந்தாள்.

அக்காட்சி அவனுள் ரசிப்பை உண்டாக்க, தன்னுடைய அலைப்பேசியை எடுத்து பதிந்துகொண்டான்.

வெற்று பாதம் அவனை சுண்டி இழுத்தது.

‘மொத கொலுசு வாங்கித்தரணும்’ என நினைத்துக்கொண்டான்.

புகைப்படம் சரியாக வந்திருக்கிறதா என்று பார்த்தவன், வேகமாக தன்னவளை நிமிர்ந்து நோக்கினான்.

கெண்டை காலும், மெல்லிய இடையும் பளிங்காய் தெரிய, வீரனின் மனம் தறிகெட்டு ஓடியது.

“ஆங்… முடிஞ்சுது மாமா” என்றவள் அவனருகில் வர, வேகமாக திரும்பி தலையை கோதியவனாக மனதை சமன் செய்து அவளை ஏறிட்டான்.

“தங்கப்பொண்ணு…” வீரனின் குரல் மாறுபாட்டை கவனியாது, பொருள்களை எடுத்து வைத்தபடி இருந்த மீனாள்,

“ராவுக்கு சாமி கும்புடும் போது நான்தேன் கரியனுக்கு சோறு வூட்டுவேன். அவன் முட்டுவான் நினைச்சேன். ஆனால் ஒண்ணுமே பண்ணல” என்று அவள் போக்கில் அவனிடம் சொல்லிக்கொண்டிருந்தாள்.

“ஃபோட்டோ எடுத்தல மாமா. அதை எனக்கு அனுப்பிவுடு. ஜல்லிக்கட்டுல கரியன் ஃபேமசுல. என் பிரண்ட்ஸ்ங்ககிட்ட காட்டணும். போன பொங்கலுக்கு அலங்காநல்லூரில் ஜெயிச்சது நம்ம கரியன்னு சொன்னதுக்கு ஒருத்தியும் நம்பல” என்றாள்.

வீரன் எதுவும் சொல்லாதிருக்க…

“மாமா” என உரக்க அழைத்திருந்தாள்.

“ஹான்…”

“ஃபோட்டோ அனுப்பிவிடு.”

“அது ஒழுங்கா வரல. ராவுக்கு எடுத்துக்கலாம்” என்று பொய் கூறியவன், அவளின் நம்பாத பார்வையில்…

“மணியாச்சே! உச்சி வெயிலு வருது. வெரசா பொய் உண்கு” என்றவன் கரியனை இழுத்துக்கொண்டு நகர, மீனாள் அவனை ஆராய்ந்தபடி நின்றிருந்தாள்.

“சொன்னா கேக்கமாட்டியா நீயி?” நின்று அதட்டினான்.

“ஃபோட்டோ நல்லாயில்லைன்னாலும் பரவாயில. நீயி போனை கொடு. நானே அனுப்பிக்கிறேன்” என்று கை நீட்டினாள்.

“சரியா வரலன்னு அழிச்சிட்டேன்” என்றான்.

அவனை முறைத்தவள்,

“கரியன் செவுலுல என்ன சொன்ன மாமா?” எனக் கேட்டாள்.

“நான் ஒன்னியும் சொல்லலயே” என்றவனின் தடுமாற்றமே என்னவோ இருக்கு என்பதை அவளுக்கு காட்டியது.

“என்னவோ நீயி சொன்ன… அதேன் அவென் கம்முன்னு நின்னுட்டு இருந்தியான்” என்றாள்.

“ஹேய் ஒன்னும் சொல்லல.”

“பொய் சொல்ற நீயி!”

“ம்ப்ச்…”

“நீயி மறைக்கிறதுலே அம்புடுது.”

“அவ உனக்கு மதினின்னு சொன்னேன் போதுமா?” என்றிருந்தான். அவளின் பிடிவாதத்தில்.

வீரன் சொல்லியதன் பொருள் உணர்ந்தவள் விழிகள் விரிய அதிர்ந்து நின்றாள்.

***********************

அன்றைய தினம் மதியம் போல் வசந்தியும், நல்லானும் தங்கள் மக்கள், கௌதம் மற்றும் கௌசிக் உடன் வந்திருந்தனர்.

“என்ன மாமா நேத்தே வாரமின்னு சொல்லியிருந்தீய்ங்க?” வரவேற்று அமர வைத்ததும் மருதன் கேட்டிருக்க…

“நினைச்சவுடனே வந்து சேர நானென்ன உன்னை மாதிரி சேத்துலையா வேலை பார்க்கிறேன்?” என்று குத்தலாக பதில் கூறினார் நல்லான்.

“வந்ததும் ஆரம்பிச்சிட்டாராக்கும்.” பிரேம் தன்னருகில் நின்றிருந்த மீனாளிடம் முணுமுணுக்க, “செத்த கம்மின்னு இருண்ணே! நீயி பேசுறது கேட்டு கெளம்பிடப்போறாரு. அத்தை ரொம்ப வருசம் செண்டு வந்திருக்கு. ஐயா மொவத்துல எம்புட்டு சந்தோசம் பாரு” என்றாள்.

“என்ன ரகசியம்?” என்று அவர்களுக்கு நடுவில் வந்த கௌதம், “இந்த அப்பா அப்படித்தான். கண்டுக்காதீங்க. வீரா அண்ணா தான் அவருக்கு கரெக்ட்” என்றான்.

“உங்களுக்கு எங்களையெல்லாம் அம்புடுத்தாக்கும்?” என்றாள் மீனாள்.

“நீங்கதான் என்கிட்ட பேசுறதில்லை. ஆனால், என் மச்சானும், வீராண்ணா, லிங்கமெல்லாம் அப்பப்போ போனில் பேசிக்கிட்டு தான் இருக்காங்க. நாங்கலாம் டச்சில் தான் இருக்கோம்” என்றான்.

நல்லானின் பதிலில் மருதனின் முகம் சுருங்க, வசந்தி வாடிப்போனார். இந்த வாடுதலுக்கு பின்னால் பல திட்டங்கள் இருக்குமோ?

சகோதரியின் வாட்டம் கண்ட மருதன் நொடியில் தன்னை சீர் செய்துகொண்டார்.

“வீடான வீட்டில் நாங்க பொங்க வைக்க வேண்டாமா? அதான் நேத்து வர ஆவல!” என்றார் நல்லான்.

நல்லான் சென்னையில் செட்டிலாகிவிட்டதால்… அவருக்கு ஊர், ஊர் பேச்சென்றால் எட்டிக்காய் தான். அப்படியிருந்தும் சில நேரங்களில் அவரறியாது அவரது பேச்சில் மண் வாசம் வீசும்.

“அதுக்கென்ன மாமா. இருக்கட்டும்” என்ற மருதன், அதன் பின் அவரை விழுந்து விழுந்து கவனிக்க, நல்லானைத் தவிர மற்றவர்களுக்கு கடுப்பாக இருந்தது.

“இந்த அப்பா ஏன் இப்படியிருக்காங்க கௌதம் அண்ணா?” கௌசிக் கேட்க,

“பதில் தெரிந்தா எனக்கும் சொல்லு” என்றான் கௌதம்.

“வுடு கௌசி. பழகிப்போன ஒன்னு தானே!” என்ற பிரேமிற்கு லிங்கத்திடமிருந்து அழைப்பு வர, அவன் அங்கு செல்ல கௌதம், கௌசிக்கும் உடன் சென்றனர்.

பாண்டியன் வீட்டில் இருவருக்கும் அத்தனை உபசரிப்பு. பார்த்து பார்த்து மதிய உணவை உண்ண வைத்தார் அபிராமி.

பாண்டியன் இளநீர் வெட்டி கொடுத்து தன் கவினிப்பை காட்டிட…

“ம்க்கும்… ரொம்பத்தேன் பாசம் உருகுது. இந்த பாசம் அவிங்க ஆத்தா பக்கட்டு திரும்பாம இருந்தா சரித்தேன்” என்று நொடித்தார் அபிராமி.

“அடியேய் அபி…” பாண்டியன் உரக்க அதிர்ந்தார்.

“இப்போ அபிக்கு என்ன? என்ன கொறச்சலு?” அபிராமி கேட்ட தோரணையில் அவ்விடமே சிரிப்பிற்கு பஞ்சமில்லாது நிறைந்து காணப்பட்டது.

“உனக்கு ஐயா மேலு உரிமை உணர்வு அதிகம் எம்மோ!” என்று லிங்கம் அவரை கேலி செய்ய, கௌதமும், கௌசிக்கும் அப்பேச்சினை இலகுவாகவே எடுத்துக் கொண்டனர்.

அனைவருக்குமே தெரியுமே பாண்டியன் வசந்தியை விரும்பியதும், இப்போது அவருடைய மொத்த விருப்பமும் அபிராமி மட்டுமே என்பதும். அதனால் கேலி கிண்டலாகவே அப்பேச்சுக்கள் ரசிக்கப்பட்டது.

“மாலை கட்டணும்டே. சோலியை பார்த்துக்கிட்டே வாவடிங்க” என்று வீரன் சொல்ல, ஆண் பிள்ளைகள் ஐவரும் வீட்டின் பின் பக்கம் சென்றனர்.

காலையில் பிரேமும், லிங்கமும் சென்று மாலை கட்டுவதற்கு கொண்டு வந்திருந்தவை வீரனால் அழகாக நறுக்கப்பட்டு அடுக்கி வைக்கப்பட்டிருக்க… பிரேம் மற்றும் லிங்கம், கௌதம், கௌசிக்குடன் பேசிக்கொண்டே மாலைகளை கட்டத் துவங்கியிருந்தனர்.

அவ்வவ்வபோது நாச்சி அவர்களுக்கு கொறிக்க, உண்பதற்கென்று பானங்களும், பலகாரங்களும் கொடுத்தபடி இருந்தாள்.

“ஆடுகளுக்கு ரெண்டு சுத்து கட்டுனா போதுமாட்டிக்கு லிங்கு. கண்ணுக்குட்டிவளுக்கும் அதே கணக்கு போதும்” என்ற வீரன், “கரியனுக்கு தும்பை செடி அதிகம் வச்சு கட்டு. அவனுக்கு புடிக்குமே” என்றான்.

“எத்தனை மாடுன்னே இருக்கு?” என்ற கௌசிக், விரல் நீட்டி எண்ணத் துவங்க…

“எண்ணக்கூடாதப்பு. திருஷ்டிப்பட்ட மாறி ஆகிப்போவும்” என்று வந்தார் மீனாட்சி.

“சரிங்க அப்பத்தா” என்ற கௌசிக்கின் புரிதல் நல்லானிடம் இருந்திருக்கலாம் என்றே தோன்றியது மீனாட்சிக்கு.

“அப்பு அமிழ்தா… மருதன் வூடு வரை போய் வாரேன். ராவுக்கு படையலுக்கு மருதன் வரணுமே! அவென் குடும்பமா இங்குட்டு வந்துபுட்டா, நல்லான் மொட்டு மொட்டுன்னு உட்கார்ந்திருப்பியான். மருதன் கூப்பிட்டாலும், நாம கூப்பிடாம எங்குட்டு வரதுன்னு அழிச்சாட்டியம் பண்ணுவியான். வந்ததை விசாரிச்சிப்போட்டு, ராவுக்கு வர சொல்லி அழைச்சுப்போட்டு வாரேன்” என்று சென்றார்.

இரவு ஏழு மணி அளவில் மீனாட்சியின் மொத்த குடும்பமும் பாண்டியன் வீட்டு கட்டுத்தறியில் கூடியிருந்தனர்.

மருதன் தன் குடும்பத்தோடு முன்னவே வந்திருக்க… நல்லான் வசந்தியுடன் சரியாக விளக்கு ஏற்றும் நேரம் தான் வந்தார்.

பாண்டியனும், அபிராமியும் வரவேற்க விறைப்பாக ஒரு தலையசைப்பு நல்லானிடம். அதற்கு மேல் அவரிடம் நாம் எதிர்பார்ப்பதும் அதிகமே.

வசந்தி தான் பாண்டியனிடமும், அபியிடமும் சில வார்த்தைகள் பேசினார்.

வேட்டி, மற்றும் கையில்லா பணியனுடன் வீரன் நின்றிருக்க, அவனது முறுக்கேறியிருக்கும் தேகம் கண்டு நல்லானுக்கு அச்சமே உண்டானது.

‘அன்றே தன்னை ஓடவிட்டவனாயிற்றே!’ அவர் மனம் வீரனின் அந்தநாள் விளையாட்டை எண்ணி பார்க்க…

“வாங்க சென்னைக்கார மாமோவ். இப்போதேன் பாதை அம்புடுதாக்கும்” என்று ஆர்பாட்டமாய் குரல் கொடுத்தான் வீரன்.

“அண்ணே ஆரம்பிச்சிடுச்சுடே!” லிங்கம் சத்தம் காட்டாது பிரேமின் பின்னால் ஒளிந்து சிரிக்க… வீரனின் குரலில் தன் தந்தையின் முகம் போன போக்கை கண்டு கௌசிக் வெளிப்படையாகவே சத்தமிட்டு சிரித்தான்.

“அடேய்… அப்பா வீட்டுக்கு போனதும் அட்வைஸ் ஆரம்பிச்சிடுவார்டா. அடக்கி வாசி.” நல்லானின் முறைப்பில் கௌதம் தான் தன் தம்பியை அடக்கியிருந்தான்.

மருதனுக்கு வீரனின் விளையாட்டில் சிரிப்பு வந்தபோதும் அமைதியாக நின்று கொண்டார்.

“நீ பூசையை ஆரம்பிய்யி அமிழ்தா!” பாண்டியன் சொல்லிட தலையசைத்த வீரன் மீனாளை பார்வையால் அலசினான்.

“நம்மவூட்டு இளவரசிகள் யாரையும் காங்(ண்)களையே!”

வீரன் சொல்லும்போதே நால்வரும் வந்தனர்.

“சுபா வரமாட்டேன்னு அழிச்சாட்டியம் பண்ணிபுட்டாள். அவளை இழுத்துகிட்டு வரத்தேன் இம்புட்டு நேரம்” என்றாள் நாச்சி.

நாச்சியின் குரலில் திரும்பிய கௌதம், சுபாவை நொடிக்கும் குறைவாக ஏறிட்டான். மீண்டும் திரும்பி கொண்டான்.

“உங்க அண்ணே பொண்ணு சுபா தானே அபி அது?”

“ஆமாங்கக்கா!”

வசந்தி கேட்டிட அபி பதில் வழங்கினார்.

“பொறவு பேசிக்கலாம். ஆரம்பி அப்பு.” மீனாட்சி.

மாட்டுப்பொங்கல் அன்று அவர்களது கால்நடைகளுக்கு படையல் வைத்து வெகு விமர்சையாக கொண்டாடுவர்.

கட்டுத்தறியின் மையத்தில், அன்றைய தினம் அதிகாலையிலேயே மீனாட்சியும், அபிராமியும் சுத்தம் செய்து சாணத்தால் தொட்டி கட்டி, அவை விரும்பி உண்ணும் தவிடு, புண்ணாக்கு, கஞ்சி, ஆகியவற்றை அவற்றில் நிரப்பி மூடி வைத்திருக்க… இப்போது அதன் முன்பு விளக்கேற்றி… மாடுகளுக்கு அணிவிக்க பிரேமும், லிங்கமும் சேர்ந்து கட்டிய வேப்பிலை, ஆவாரம்பூ, தும்பை, துளசி நிறைந்த மாலைகள், பச்சரிசி வெறும் பொங்கல் என வைத்து கற்பூரம் ஏற்றி வணங்கினர்.

எல்லோருக்கும் தீபாராதனை காட்டி வணங்கியதும்,

மாலைகள் அடங்கிய தட்டினை லிங்கம் தூக்கிக்கொள்ள, வீரன் அம்சாவில் தொடங்கி அனைத்திற்கும் அம்மாலைகளை அணிவித்து முடிக்க, படையலில் வைத்த பொங்கலை முன்பு போலவே லிங்கம் கையில் வைத்துக்கொள்ள வீரன் ஒவ்வொன்றிற்காக ஊட்டிக்கொண்டு வந்தான்.

“ஆடுவளுக்கு அங்கையை வச்சிக்கிட்டு ஊட்டு நாச்சியா” என்று சொல்லிய வீரன், கரியனிடம் சென்றதும் மீனாளை பார்த்தான்.

காலையில் அவள் ஊட்டுவதாக சொல்லிய நினைவில்.

நினைவிருந்த போதும், காலை வீரன் சொல்லிய வார்த்தையின் காரணமாக மீனாள் அசையாது நின்றிருந்தாள்.

“தங்கம்.” அழைத்துவிட்டான். அனைவரின் முன்பும் மறுக்க முடியாது அவனை முறைத்துக்கொண்டே அருகில் சென்றாள்.

“மீனா பயப்படுவாளே அமிழ்தா?” அபிராமி சொல்லிட,

“அதெல்லாம் காலையில அவனை கழுவியதே மீனாதேன்” என்றாள் நாச்சி.

“சாப்பாட்டை அள்ளி உருண்டையா உருட்டி அவென் வாயில வைய்யி” என்றான் வீரன்.

“பயமாயிருக்கே லிங்கு மாமா!”

“கழுவியே விட்டுட்டியாம். சோறு வூட்ட பயப்படுற?” லிங்கம் சொல்ல அவளின் விழிகள் வீரனின் விழிகளை தொட்டு மீண்டது.

‘அண்ணே ஏதோ சேட்டை பண்ணியிருக்கு.’ நினைத்தாலும் கண்டுகொள்ளாது நின்றிருந்தான் லிங்கம்.

“நேரமாவுது. வூட்டு சாமி கும்பிட்டு எப்போ நாம உண்குறது?” லிங்கம் கேட்டிட தட்டினை தன் கையில் வாங்கிக்கொண்ட வீரன்,

“உள்ள படையல போடுத்தா” என்று அபிராமியிடம் கூறினான்.

“இங்குட்டு முடிஞ்சுதே! வாங்க உள்ளார போவோம். அவென் தொட்டியை மிதிக்க வச்சிட்டு வருவான்” என்ற மீனாட்சி அனைவரையும் வீட்டிற்குள் அழைத்துச்செல்ல,

“பார்த்துண்ணே” என்று வீரனுக்கு மட்டும் கேட்குமாறு சொல்லி, அங்கு தனியாக நின்று கொண்டிருந்த சுபாவை அழைத்துக்கொண்டு, ஆடுகளுக்கு உணவு ஊட்டும் நாச்சி மற்றும் அங்கையின் அருகில் சென்றான் லிங்கம்.

“என்ன காலையிலிருந்து அமைதியாவே கெடக்குற?”

“ஒண்ணுமில்ல.”

சுபா வீட்டிற்குள் செல்லும் கௌதமை தான் லிங்கத்தின் கேள்வியில் ஏறிட்டு திரும்பிக் கொண்டாள்.

“நீ வா… கிட்டக்க கொண்டு வந்ததும் அவனே வாங்கிப்பான். சோத்தை அள்ளு” என்றான் வீரன்.

“காலையில நீங்க சொன்னது எப்பவும் நடக்காது மாமா.” அழுத்தமாகக் கூறியவள், பொங்கலை அள்ளி கரியனுக்கு ஊட்டிட,

“எது?” என்றான் வீரன்.

“ம்ப்ச்” என்றவள் நகர முற்பட…

“மொத்தமும் நீயிதேன் கொடுக்கணும். எல்லாம் சாப்பிட்டுச்சுவ. மீதியிருக்கிறது இவனுக்குத்தேன்” என்ற வீரனை ஒண்ணும் சொல்ல முடியாது மீண்டும் பொங்கலை எடுத்து கரியனுக்கு கொடுத்தாள்.

“ரொம்ப படுத்துறனா?”

வீரன் கேட்ட குரலில் ஆழ்ந்து அமிழ்ந்தவள், அவனை பரிதவிப்பாய் ஏறிட…

“பழகிக்கோடி என் தங்கப்பொண்ணு” என்று கண் சிமிட்டினான் வீரன். குறும்புப் புன்னகையுடன்.

காதலாக நெருங்கி வருபவனை தள்ளி வைத்து வருத்துகிறோமே என்று வீரனின் குரலில் வருந்தியவள் அவனது சேட்டையில் சூடாகியிருந்தாள்.

“வெத்து கனா காங்காத மாமா. கௌதமுக்கு என்னைய பேசி முடிக்கத்தேன் அவிங்கலாம் வந்திருக்கிறதே!” என்று வீரனின் இதயத்தில் ஈட்டியை இறக்கியவள், “பொங்க காலியாகிப்போச்சு” என்று அவன் அதிர்ந்து நிற்பதை பொருட்டாகக் கொள்ளாது வீட்டிற்குள் சென்றுவிட்டாள்.

லிங்கத்துடன் இருந்த மூன்று பெண்களுமே வேலையை முடித்துக்கொண்டு உள் சென்றிட, வீரனிடம் வந்த லிங்கம்…

“என்னண்ணே அப்படியே செல கணக்கா நின்னுட்டு இருக்க?” என்று தொட்டு வினவினான்.

“நானு வெசனப்படுறதுல உன் மீனாகுட்டிக்கு அம்புட்டு சந்தோஷமாட்டிக்குடே” என்ற வீரன் தட்டினை கீழே வைத்துவிட்டு, “இவனை கூட்டியா” என்று தொழுவத்திற்குள் சென்றான்.

“ஏதோ வீம்புல நிக்குறா(ள்)ண்ணே! நீங்கயில்லைன்னா உக்கியே செத்துப்போவா(ள்)” என்ற லிங்கம் “என்னவாம்?” எனக் கேட்டான்.

அம்சாவின் கயிற்றை அவிழ்த்து, தொட்டி கட்டி வைத்திருந்த இடத்திற்கு அழைத்து வந்த வீரன், அதனை அம்சாவால் மிதிக்க விட, லிங்கம் கரியனையும் மிதிக்க விட்டு கூட்டிச்சென்று கட்டிப்போட்டு வீரனருகில் வந்தான்.

“என்னண்ணே?”

“ஏதோ அந்தநா(ள்) கோவத்துல தள்ளி எட்ட நிக்குறா நெனச்சேன். ஆனால்” என்ற வீரன், தன் மார்பில் இடது பக்கம் வலது கை விரல்களால் அழுந்த தேய்த்து…

“வலிக்க வச்சிடுவாளோ?” என்றான்.

வீரனின் அந்த முகத்தில் லிங்கம் பதறிவிட்டான்.

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 26

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
30
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

6 Comments

  1. வலிக்க வச்சிடுவாளோ … டயலாக்ஸ் எல்லாம் செம்ம போங்க … உங்க லவ்வுக்கு குறுக்க இந்த கௌசிக் வந்தா 😜😜😜கூடவே இந்த கௌதமை யும் கூப்பிட்டு வந்தா 😜😜😜😜 … கௌதம் சுபா ஏதோ ட்ராக் ஓடுதே …

    பார்ரா பாண்டியன் அபிராமி செய்ற சேட்டையை … எத்தனை வயசு ஆனாலும் காதல் … பொசசிவ் எல்லாம் இருக்க தானே செய்யும் … ❤️❤️

    1. Author

      அதெல்லாம் இருந்தாதானே அது காதல் 😁😍 நன்றி சிஸ் ❤️❤️

  2. அந்த “தங்கப்பொண்ணு” ம் அவனின் வலியும் – அழகான நெகிழ்ச்சி….

    1. சின்ன பொண்ணு மனச கலச்சிட்டோமோனு நினச்சு மருகுறான். ஆனா மீனாள் கூட அவ காதலை சொல்லும் போது சின்ன பொண்ணுதானு மறந்துட்டான்.

      உன் வாழ்க்கைய அங்கை கிட்ட ஒப்படச்சுட்டான் வீரா இனி அங்கை பாப்பா உன்னை நல்லா பாத்துகிடும் லிங்கம்.

      பொங்கல் செய்முறைகள் எல்லாம் அழகா எடுத்து சொல்லி இருக்கீங்க எழுத்தாளரே. ❤️

      கிட்டக்க போனா தான் பயம் போகுமா?

      மீனாள் அவ மனசு ஒத்துக்குற வரை ஒதுங்கி அமைதியாவாவது இருக்கலாம். அதை விட்டுட்டு வீராவையும் நெருங்க கூடாது பாசம் காட்ட கூடாதுனு சொல்றது நியாயமே இல்லை.

      1. Author

        எல்லாருக்கும் எல்லாம் புரிஞ்சா சரியாகிடும் sis… நன்றி ❤️😍