Loading

யான் நீயே 48

திருமணமாகி ஐந்து வருடங்கள் கழித்து… மிகுந்த எதிர்பார்ப்பிற்கு பின்னர் மீனாள் தாய்மை அடைந்திருப்பது குடும்பத்தாருக்கு எத்தனை மகிழ்வை கொடுத்தது என்பதை வார்த்தையால் விவரிக்க முடியாது.

மீனாளை அனைவரும் உள்ளங்கையில் வைத்து தாங்கினர் என்றுதான் சொல்ல வேண்டும்.

சில நாட்களுக்கு தொடர்பே இல்லாது இருந்த கௌதம், சுபா கூட மீனாளிடம் தினமும் உரையாடத் துவங்கியிருந்தனர்.

எல்லோரும் மீனாளின் கண்ணசைவுக்கு நடந்து கொண்டனர் என்று தான் சொல்ல வேண்டும்.

மற்றவர்களே இப்படி கண்ணும் கருத்துமாக பார்த்துக்கொள்ளும்போது அவளின் வீரன் சும்மா இருந்திடுவானா என்ன?

தற்போது மீனாளுக்கு ஆறாம் மாதம் முடிவை எட்டியுள்ளது. கடந்து சென்ற நான்கு மாதங்களில் வீரன் மீனாளிடம் பேசிய வார்த்தைகளை விரல்விட்டு எண்ணிவிடலாம். ஆனால் அவளின் சிறு அசைவுக்கும் அவளை தன் நெஞ்சில் சுமந்தான்.

மீனாள் தான் சொல்ல சொல்ல கேட்காது தன்னை வேண்டாமென்று சொல்லிச் சென்ற ரணம் இன்னமும் பசுமையாய் அவனை அலைக்கழித்தது. மீண்டும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இதுபோல் ஒரு முடிவினை மீனாள் எடுத்துவிடக் கூடாதென்பதற்காகவே தனக்கு வலி கொடுக்கிறதென தெரிந்தும் தள்ளி நிற்கிறான். அவனுக்கு இப்படியிருப்பது பிடிக்கவில்லை. அந்நாளை கடந்துவர பலவகையில் முயற்சி செய்துவிட்டான். ஆனால் முடியவில்லை.

அதற்காகவெல்லாம் அவன் தன் தங்கத்தையும் அவளின் சிப்பியில் குடி கொண்டுள்ள தன் மகவையும் ஒதுக்கிவிடவில்லை. அவர்களுடனான ஒவ்வொரு நொடியையும் மௌனத்தாலே ஆழ்ந்து அனுபவித்தான்.

எப்போதும் வீரன் தான் மீனாள் பின்னால் சுற்றியிருக்கிறான். இப்போதெல்லாம் மீனாள் வீரனை சுற்றி வருகிறாள். அவளின் ஒவ்வொரு மணித்துளியும் அவனுடன் தான். அவன் பேசுகிறானா பேசவில்லையா அதைப்பற்றி எல்லாம் அவள் கண்டுகொள்ளவில்லை. அவனுடன் தானிருக்க வேண்டும். தன்னிருப்பை அவன் விரும்புகிறான். இதுவே தனக்கு போதுமென அவன் செய்வதையெல்லாம் காதலாக ஏற்றுக்கொள்கிறாள்.

வீரன் தான் பேச்சினை குறைத்துக்கொண்டான். ஆனால் மீனாள் அவனுக்கும் சேர்த்து பேசினாள்.

வீரனுக்கு பெண் குழந்தைகள் என்றால் பிடித்தம். நாச்சிக்கு பையன் பிறந்தபோதே பெண் குழந்தை எதிர்பார்த்தேன் என்று சொல்லியிருக்க… தனக்கு பெண்ணாகத்தான் இருக்க வேண்டுமென மதுரை மீனாட்சியிடம் நித்தம் வேண்டுபவள், தன் மகளை வைத்து வீரனுடன் உரையாடுவதை வழமையாகக் கொண்டிருந்தாள்.

ஒன்பதாம் மாதம் தொடக்கத்திலிருந்து விடுமுறை எடுத்துக்கொள்ளலாமென அலுவலகம் சென்றுகொண்டு தான் இருக்கிறாள்.

வீரன் தான் அழைத்துச்சென்று அழைத்து வருவான்.

பணி நேரத்திலும் சரியாக பழச்சாறு, உணவு என யாரையும் கருத்தில்கொள்ளாது எடுத்துச்செல்பவன் அவள் உண்ட பிறகே திரும்புவான்.

தினமும் ஒருமுறையாவது “தங்கம் கூப்பிடு மாமா” என்று கேட்டுவிடுவாள். அவனுக்குத்தான் அழைத்திட மனம் இறங்கவில்லை.

அன்று பணிகள் அனைத்தும் சீக்கிரம் முடிந்திருக்க… வீரனுக்கு அழைத்து வரக்கூறினாள்.

“நான் முக்கியமான சோலியில நிக்கேன்… லிங்குவை அனுப்புறேன்” என்று வீரன் சொல்ல…

“எனக்கு நீயி வரணுமாட்டிக்கு மாமா” என்றாள்.

“முடியாதுடி” என்று பட்டென்று வைத்திருந்தான்.

மீனாள் வீரனின் அச்செயலுக்கு வருந்தவோ, கவலைப்படவோ இல்லை. அவளுக்குத் தெரியும் தன்னிடம் மறுப்பவன், உடனடியாக செய்து முடிப்பானென்று. அது எதுவாக இருந்தாலும்.

இன்னும் பத்து நிமிடத்தில் வீரன் தன் முன்னிருப்பான் என்று அறிந்திருந்தவள், அனைத்தையும் எடுத்து வைத்துவிட்டு, தன்னுடைய பையை எடுத்துக்கொண்டு அலுவலக வாயிலை அடைய வீரன் அவ்வளாகத்தின் உள் நுழைந்திருந்தான்.

கணவனை கண்டதும் முகமெல்லாம் ஒளிர அடி வைத்தவளின் முன்னே,

வெள்ளை நிற வேட்டி, சட்டையில் மீசையை முறுக்கிக்கொண்டு ஒருவன் வந்து நின்றான்.

அவனை கண்டதும் மீனாள் கடந்து செல்ல முயல,

“எங்கப்போறீங்க மேடம். ஒரு கையெழுத்து போட்டுட்டு போறது” என்று மறித்தான்.

“உங்க பேப்பர்ஸ் எதுவும் உண்மையா இல்லைன்னு ரிஜெக்ட் பண்ணிட்டனே! திரும்ப வந்து கேட்டால் எப்படி கையெழுத்துப் போட முடியும்? நேர்மையா ஃபைல் பண்ணுங்க. கையெழுத்துப் போடுறேன்” என்ற மீனாள் அவனைத் தாண்டிக்கொண்டு வேக எட்டுக்கள் வைத்து வீரனை நோக்கிச் செல்வதற்குள் அவளிடம் வீரன் ஓடி வந்திருந்தான்.

“மெதுவா நடடி… என்னவோ போருக்கு போறவ மாறித்தேன் நடப்ப!” என்று கடிந்து கொண்டவன், அவளின் தோளைச்சுற்றி கை போட்டவனாக தனக்குள் அணைவாக வைத்து நடத்திச் சென்றான்.

“இவிங்க உங்க சம்சாரமுங்களா அண்ணே?” அவர்களின் முன் வந்து வீரனிடம் கேட்டான் அவன்.

“நீயி… ரத்னம் இல்ல?” என்ற வீரன் மீனாளை ஏறிட,

“ரோடு காண்ட்ராக்ட்… பேப்பர்ஸ் எதுவும் சரியா இல்லை மாமா” என்றாள் மீனாள்.

“இது உன் வேலை. எனக்கு என்னத்துக்குத்தா விளக்கம் கொடுக்குற? சரி எதுன்னு படுதோ அதை செய்” என்ற வீரன், “சரி ரத்னம் பொறவு பார்க்கலாம்” என்று நகர்ந்தான்.

“என்னண்ணே விசயம் தெரிஞ்சும் நீயி பாட்டுக்கு போற?” கேட்ட ரத்னம் வீரன் பார்த்த பார்வையில் வாயினை மூடிக்கொண்டான்.

“தொழில் வேற… பழக்கம் வேற ரத்னம்” என்ற வீரன், வண்டியின் கதவினை திறந்து மீனாளை அமர வைத்ததோடு, வெளியில் தொங்கிய மீனாளின் புடவை தலைப்பை குனிந்து எடுத்து அவளின் மடியில் வைத்து கதவினை சாற்றினான்.

தங்களையே பார்த்துக்கொண்டிருந்த ரத்னத்தின் அருகில் வந்தவன், அவனின் தோளில் கைபோட்டு, மீசையை முறுக்கியவாறு, தன் முக பாவனையை மீனாளுக்கு மறைத்தவன்…

“அவள் யாருன்னு தெரிஞ்சிடுச்சுல… நீயா ஒதுங்கிக்க, இல்லை” என்றவன் பார்வையிலே, வீரனைப் பற்றி அறிந்திருந்த ரத்னம், “மதினி பக்கமே திரும்ப மாட்டேங்க” என்று ஓடியிருந்தான்.

வீரன் வண்டியில் ஏறி இயக்கிட…

“அவங்களை தெரியுமா மாமா?” எனக் கேட்டாள் மீனாள்.

“ம்ம்ம்… அவென் அப்பா பழக்கம். ஹோட்டல் வச்சிருக்காய்ங்க” என்றவன் வண்டியை வளைத்து திருப்பி சாலையில் சீராக விட்டான்.

“அவங்களை மிரட்டுனியா மாமா?”

“என்னத்துக்கு?”

“அப்போ என்ன பேசுன?”

“அவென் ஐயாவை கேட்டன்னு சொல்ல சொன்னேன்.”

“நம்பிட்டேன்…”

“ம்ம்ம்…”

“ரொம்ப நாளுக்கு பொறவு நீளமா பேசியிருக்க மாமா!” மீனாளின் கண்கள் கலங்கியது. வெளிக்காட்டிக்கொள்ளவில்லை என்றாலும், வீரன் பழைய மாதிரி தன்னுடன் இல்லை என்பதில் அவளுக்கு வருத்தம் இருக்கத்தான் செய்தது. இன்று தான் அதனை வெளிக்காட்டுகிறாள். துடித்துவிட்டான் வீரன்.

தன்னையே நிந்தித்தான் மனதில்.

“என்னத்துக்கு கண்ணுல தண்ணி. சரியாப்போவும்” என்றவனுக்கே அந்நாள் எப்போவென்று தெரியவில்லை.

வீரனின் தோளில் தலை சாய்த்து கண்களை மூடிக்கொண்டாள் மீனாள்.

வீட்டிற்கு அழைத்து வந்தவன் மீனாளை அறைக்கு போக சொல்லிவிட்டு, சமையலறை சென்று பத்து நிமிடத்தில் ஒரு கையில் சுடு நீரும், மற்றொரு கையில் பழச்சாறுமாக மேலேறினான்.

பார்த்துக்கொண்டிருந்த அபிக்கு அத்தனை மகிழ்ச்சி. இது மீனாள் கருவுற்று இருப்பது தெரிந்த நாள் முதல் நடப்பது தான். அதனால் இக்காட்சியை கண்டு மகிழ்வதற்காகவே அவர்கள் வரும் நேரம் அபி அங்கு அமர்ந்திடுவார்.

“கண்ணு போடாதட்டி…” மீனாட்சி தினமும் அபியிடம் சொல்வது வாடிக்கையாயிற்று.

வீரன் வரும்போது மீனாள் தயாராக கால்களை தொங்கப்போட்டு சாய்வு நாற்காலியில் அமர்ந்திருந்தாள்.

அவளின் கையில் குவளையை அளித்தவன், குளியலறை சென்று அறை வட்ட பக்கெட் கொண்டு வந்து இதமான சூட்டில் நீரினை விளாவி, தன்னவளின் பாதத்தை நீரில் அமிழ தானே எடுத்து வைத்தான்.

மீனாளின் அலைப்பேசியை எடுத்து பத்து நிமிடத்தில் அலாரம் வைத்தவன்,

“உறங்கிடாதத்தா… அலாரம் அடிச்சதும் காலை எடுத்திடு. பொறவு கீழ போயி அப்பத்தாகிட்ட பேசிட்டு இரு. இல்லைன்னா ஓய்வெடு. பக்கெட் தூக்கி வைக்கிறேன்னு எதுவும் செய்யாத. நான் வந்து பார்த்துக்கிறேன். முக்கியமான சோலி” என்று காலி குவளையை வாங்கிக்கொண்டு வெளியேறினான்.

செல்லும் கணவனின் மீது நாளுக்கு நாள், நொடிக்கு நொடி பல்கிப்பெருகும் காதலில் அவள் தான் திண்டாடிப்போனாள். “முன்ன மாறி இருக்க முடியலடி” என்று சொல்பவன் தான் முன்பை காட்டிலும் பல மடங்கு காதலை அவளிடம் காட்டிக்கொண்டிருக்கிறான்.

“முத்தா மாமா…” அவளின் ஓசை முத்தம் அவனின் முதுகை தீண்டியது. திரும்பி பார்த்தவன் அவளின் பார்வையில் வசீகரித்து விலகினான்.

அங்கை எங்கென்று தேடிச் சென்றவன்,

“காலுக்கு தண்ணீ வச்சிருக்கேன். அப்படியே உறங்கிடுவா! நீர் புடிச்சிக்கும். நீயி போயி செத்த பாத்துக்கத்தா” என்று சொல்லிவிட்டே தன்னுடைய அலுவல் காணச் சென்றான்.

குழந்தைகள் இருவரும் அபியிடம் இருக்க, அங்கையும் மீனாளிடம் சென்று அவளின் கால் வீக்கம் குறையுமட்டும் உடனிருந்தவள் பிள்ளைகள் பசிக்கு அழ மீனாளை ஓய்வெடுக்க சொல்லிவிட்டு கீழே ஓடினாள்.

அடுத்த சில நிமிடங்களில் மீனாளுக்கு பிடித்த தங்கள் ஹோட்டல் உணவினை கொண்டு வந்த லிங்கம்,

“சாப்பிடுத்தா… சாப்பிட்டு கீழ, மேலன்னு ரெண்டு தரம் ஏறி இறங்கிப்புடு. அண்ணே வரதுக்குள்ள சரியாப்போவும்” என்றவன், அங்கிருந்த நீர் நிரம்பிய பக்கெட்டை எடுத்துச்சென்று குளியலறைக்குள் வைத்துவிட்டு வந்தான்.

அடுத்து பாண்டியன் வர, மீனாள் லிங்கம் கொடுத்த உணவினை தனக்கு பின் மறைத்தாள்.

“இந்தாத்தா வெல்லம் போட்ட தேங்காய் பூ. உனக்கு பிடிக்குமே! எனக்குன்னு அபிகிட்ட கேட்டு வாங்கினேன். ரெண்டேறும் வூட்டுல யார்கிட்டயும் சொல்லாதீங்க” என்று கிண்ணத்தை மீனாளின் கையில் கொடுத்தவர், “உண்குத்தா. வெந்நீ கொண்டாறேன். சாப்பிட்டு குடிச்சிப்புட்டாக்கா நெஞ்சு கரிக்காது” என்று சென்றார்.

“இன்னும் செத்த நேரத்துல மருதன் மாமா வருவாரு. நான் போறேன். போட்டுக்கொடுத்துடாதத்தா” என்று சிரித்தவனாக லிங்கம் வெளியேற, அவன் சொல்லியது போலவே சில நிமிடங்களில் மருதன் வந்தார்.

“அம்மா குழிப்பணியாரம் ஊத்துனாள். உனக்கு புடிக்குமே. எண்ணெய் அதிகமில்லாமா எனக்குன்னு சுட்டதை, மறைச்சு கொண்டாந்தேன்” என்று தன் மேல் துண்டில் மறைத்து கொண்டு வந்த வாழையிலை சுற்றப்பட்ட பணியாரங்களை எடுத்து மகளிடம் கொடுத்தவர், தானே ஒன்றை எடுத்து ஊட்டிவிட்டு…

“மெல்ல உண்கு மீனாள்” என்று அவளின் தலையை பரிவாக வருடிச் சென்றார்.

கீழே கூடத்தில் அமர்ந்திருந்த அபியும் மீனாட்சியும் மூன்று ஆண்களையும் கவனித்தாலும் கண்டுகொள்ளவில்லை.

“பிரேமை காண்கல?”

“வருவியான்… அவனும் என்னத்தையாவது எடுத்துக்கிட்டு.” அபி கேட்டிட மீனாட்சி பதில் கூறினார்.

“அமிழ்தன் வந்து அதட்டினால் தான் அடங்குவாய்ங்க” என்று அபி சொல்ல…

“மாமா எம்புட்டோ சொல்லி அலுத்துப்போச்சுது. இவீங்க அடங்குறமாறி தெரியல” என்று சிரித்துக்கொண்டே வந்தாள் அங்கை.

“நான் போயி கசாயம் வச்சு வைக்கிறேன். அப்புறம் பாதி ராத்திரிக்கு அமிழ்தன் வைக்கணும்” என்று எழுந்து சென்றார் அபி.

சற்று நேரத்திற்கெல்லாம் வேலை முடித்து வீரன் வர, பாண்டியனும் லிங்கமும் அவனின் முகம் கூட காணவில்லை. மும்முரமாக பேசிக் கொண்டிருப்பதைப்போல் காட்டிக்கொண்டனர்.

மருதன் வீரனுக்கு பயந்து எப்போதே சென்றிருந்தார்.

அவர்களின் பாவனையில் அங்கை சிரித்துவிட்டாள். அப்போதும் இருவரும் தங்கள் நிலையில் மாற்றமில்லை என்று அமர்ந்திருந்தனர்.

அந்நேரம் மீனாளை பார்க்கவென்று வந்த பிரேம், வீரன் பார்த்த பார்வையில்…

“சும்மா பார்த்துப்போட்டு போலான்னு வந்தேன் மாமா. மீனு உறங்கியிருக்கும்ல? காலையில வாரேன்” என்று அப்படியே திரும்பிச் சென்றிருந்தான். அவனது கையில் சிறு பையிருந்ததை கண்டு மீனாட்சி கூட சிரித்துவிட்டார்.

“சாப்பிட்டாளா அங்கை?”

“சாப்பிட்டிருக்கும் மாமா!”

“ம்ம்ம்…”

அங்கு பாயில் தவழ்ந்து கொண்டிருந்த குழந்தைகளை தூக்கி கொஞ்சிய வீரன், உணவினை முடித்துக்கொண்டே மேல் சென்றான்.

மீனாள் மெத்தையில் கால் நீட்டி அமர்ந்து புத்தகம் படித்துக் கொண்டிருந்தாள்.

“இன்னைக்கு என்னென்ன டெலிவரி ஆச்சுது” கேட்டுக்கொண்டே ஆடை மாற்றியவன் அவளருகில் வந்து அமர்ந்து, அவளின் பாதத்தை ஆராய்ந்தான். வீக்கம் வாடியிருந்தது. இருப்பினும் எண்ணெய் எடுத்து மெல்ல நீவியபடி தேய்த்துவிட்டு கை கழுவி வந்தான்.

“கேட்டதுக்கு பதிலை காண்கல?”

“அங்கன இருக்கு மாமா! எதுவும் உண்கல. நான் ஆசைக்குன்னு சாப்பிட்டால், ராவுல உனக்கு தொல்லையாகிப்போவுது” என்று முகம் சுருக்கிக் கூறியவள், மேசையை காண்பித்தாள்.

என்னென்ன என்று பார்வையிட்டவன்,

“நல்ல வேளை உனக்கு மசக்கை அம்புட்டுக்கு இல்லை. இல்லாட்டி இதெல்லாம் உள்ளப்போற வேகத்துக்கு வாவரும்” என்றவன், “கொஞ்சம் கொஞ்சம் உண்கு. இதோ வர்றேன்” என்று கீழ் சென்றான்.

அபி தயாராக வைத்திருந்த கசாயத்தை வீரனிடம் நீட்டினார்.

மெல்ல புன்னகைத்தபடி வாங்கிக்கொண்டான்.

“சொன்னா கேட்கிறதே இல்லை. உங்க அக்கறையை இப்படித்தேன் காட்டனுமாடே” என்று லிங்கத்திடம் கேட்ட வீரன், பாண்டியன் பம்மியதில் இதழ் விரித்தவனாக மேலேறியிருந்தான்.

வீரன் சொல்லியபடி மூன்று உணவிலும் கொஞ்சம் கொஞ்சம் சாப்பிட்ட மீனாள்,

“இதெல்லாம் வேஸ்ட்டா போவுமே மாமா” என்று அவனிடம் கெஞ்சி கொஞ்சி முழுவதும் உண்டு முடித்த சில நிமிடங்களில் படுக்க முடியாது அவஸ்தையாக நெளிந்து, அறைக்குள் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தவளிடம் கசாயத்தை கொடுத்து குடிக்க வைத்து அவள் உறங்கிய பின்னரே, அணைத்துக்கொண்டு தானும் உறங்கிப்போனான்.

**********************

நள்ளிரவு கடந்திருந்தது.

அதுவரை மீனாள் இல்லாத அறையில் இருக்க பிடிக்காது, அங்குமிங்குமென நடந்து கொண்டிருந்த வீரன் அப்போதுதான் உறக்கத்திற்குச் சென்றான்.

கதவு தட்டும் ஓசையில் மெல்ல எழுந்தவன் நேரத்தை பார்க்க, ஒன்றை தொட்டுக் கொள்ள சில நிமிடங்கள் இருந்தது.

“லிங்கு” என்று குரல் கொடுத்தவனாக, எழுந்து வந்து கதவினை திறக்க, மூச்சு வாங்கிட மீனாள் நின்று கொண்டிருந்தாள்.

“எம்புட்டு சொல்லியும் கேட்கல மாமா. அடமா நின்னு வந்துட்டாள்” என்று உடன் நின்றிருந்த பிரேம் குற்றம் வாசித்தான்.

“நீ பார்த்து போடே” என்ற வீரன் அப்போதுதான் கவனித்தான், வீட்டு வாயிலை திறக்க மீனாள் தட்டியதில் மற்றவர்களும் எழுந்து வந்திருந்தனர்.

வீரன் பார்த்த பார்வையில் எல்லோரும் சென்றிட…

“உன் மாமனை ஒரு நா ராவு தனியா வுடமாட்டியாத்தா?” என்று கேலி செய்த லிங்கத்தை வீரன் அடிக்க வர அறைக்குள் ஓடியிருந்தான்.

“உங்க லவ்சுக்கு எங்களை ஆட்டி வைக்கிறீய்ங்க மாமா” என்ற பிரேம், “அடிங்க…” என்று வீரன் வேட்டியை மடித்துக் கட்டியதில் ஓடியே இருந்தான்.

“எதுக்கு இம்புட்டு அவசரம்?” என்று கேட்ட போதும் அழைத்து வந்து கட்டிலில் அமர வைத்தவன் மீனாளின் முகத்தை தன் வேட்டி நுனியால் துடைத்துவிட்டான்.

“நீயில்லாம உறங்க முடியல மாமா!” என்றவள் அவனின் இடையோடு கையிட்டுக் கட்டிக்கொண்டாள்.

அன்று தான் வளைகாப்பு முடிந்து மாலைபோல் தனது இல்லம் சென்றிருந்தாள்.

ஏழாம் மாதமே வைப்பதற்கு மகா ஏற்பாடு செய்ய, வீரனின் முகம் பார்த்தே, அவனால் மட்டுமல்ல தன்னாலும் தன் மாமா இல்லாது இருக்க முடியாதென ஒன்பதாம் மாதம் வைத்துக்கொள்ளலாமென உறுதியாகக் கூறிட, ஒன்பதாம் மாதம் தொடங்கியதும் மகா அடமாக நின்று வளைகாப்பு நடத்தி மகளை வீட்டிற்கு அழைத்துச் சென்றிருக்க… சில மணி நேரங்கள் கூட வீரனின்றி இருந்திட முடியாது அந்த இரவு வேளையில் அவனைத்தேடி வந்திருந்தாள்.

“என்ன மாமா எதுவும் பேசல?”

தன்னை அணைத்திருந்தவளின் தலையை தனக்குள் அழுத்திக்கொண்டிருந்த வீரனின் மௌனம் அவளை கொன்றிடக் கேட்டிருந்தாள்.

“நீதேன் நான் வேணாமின்னு அம்புட்டு இடும்பு பண்ணவளான்னு ரோசிக்கிறேன்” என்ற வீரனை பிரிந்து தள்ளி நிறுத்தியவள்…

“அதை மறக்கவே மாட்டியா மாமா?” என்று கலங்கிப்போன குரலில் கேட்டு, “பொறவு நீயி கூப்பிட்டதும் வந்துட்டேன் தானே?” என்றாள். கண்ணீர் வழிய.

மார்பிற்கு குறுக்கே கைகளைக் கட்டிக்கொண்டு அவளையே பார்த்திருந்தவன்,

“நான் இல்லாம இருக்க முடியலன்னு நாலஞ்சு மணி நேரத்தில் என்னத்தேடி வந்தவ அப்போ நாப்பது நாளு இருந்ததானே?” எனக் கேட்டான்.

அவளின் விளக்கங்கள் யாவும் தெரிந்தே கேட்டான்.

“நான் சொல்லாமலே உனக்கு காரணம் வெளங்கும் மாமா! நானா சொல்லணுமா? அன்னைக்கு நீயி சொல்றதை காது கொடுத்து கேட்டிருக்கணுமாட்டிக்கு. தப்புதேன்… என்ன பண்ணட்டும் மாமா?”

“ஒரு முத்தம் தாடி!”

அழுது கொண்டிருந்தவளின் கண்கள் அகல விரிந்தது.

“மாமா…”

“வலி கொடுத்தது நீயா இருந்தாலும், மருந்தும் நீதேன்னு உனக்கு தெரியாதா தங்கம்?”

அவனது வார்த்தைகளின் பொருள் உணர்ந்தவள் மாமா என்று இழுத்து அணைத்திருந்தாள். அவனது முகமெங்கும் முடிவிலா முத்தத்தை வழங்கிக்கொண்டிருந்தாள்.

பல மாதங்களுக்கு பின்னரான அவனது தங்கம் என்ற விளிப்பில் மீண்டும் பிறந்திருந்தாள்.

அவளது முத்தங்களின் எண்ணிக்கைக் கூடிக்கொண்டே செல்ல… முழுதாய் அவளிடம் தன்னை ஒப்புவித்து நின்றிருந்தான். அவனது கரங்கள் அவளின் வயிற்றை அணைவாக பிடித்திருக்க, அவர்களின் மகவின் அசைவில் இருவரும் பெரும் மகிழ்வின் ஆர்பரிப்பில் நிகழ் மீண்டனர்.

“இப்போவே உங்க பொண்ணு நம்மளை ஒண்ணா வுடமாட்டேங்கிறாள்” என்று சிணுங்கிய மனைவியை சன்னல் திண்டிற்கு அழைத்துச்சென்று தன் மடியில் அமர்த்திக்கொண்டான்.

“உன்னையும் என்னையும் சேர்க்கவே பிறந்தவடி எம் பொண்ணு” என்ற வீரன் அவளின் வயிற்றில் குனிந்து முத்தமிட்டான்.

வீரன் சொல்வதும் உண்மை தானே!

கரு உண்டாகாமல் போயிருந்தால், மீனாள் தன் பிடியில் நின்றிருந்திருப்பாளோ!

“சாரி மாமா” என்றவள் அவனின் மீசையில் இதழொற்றி மீண்டாள்.

“காப்பு முடிஞ்சு வூட்டுக்குப் போவ கிளம்பியதும் உன் கண்ணு என்னத்தேடி அலைஞ்சுது பாரு… அந்த நொடி இருந்த கோவம், வருத்தமெல்லாம் எங்கோ ஓடிப்போச்சுது தங்கம். அந்த தவிப்பு எனக்காகனு அம்புட்டு சந்தோஷம். எப்பவும் நாந்தேன் உன்னைய தேடியிருக்கேன். நீயில்லையோன்னு அன்னைக்குத் தோணுச்சு. உன் கண்ணுல எனக்கான தேடலை தேடித்தேன் எம் மனசு காத்துக்கிடந்துச்சோ என்னவோ? ஒத்த பார்வையில மொத்தமா கரைச்சிட்டடி” என்று அவளின் நெற்றி முட்டினான்.

“லவ் யூ மாமா!”

“நானும் திருப்பி சொல்லனுமாக்கும்?”

“வேணாமாட்டிக்கு” என்றவள், “எனக்கு உன்னை புரியும் மாமா” என்றிருந்தாள்.

குழந்தைக்கு நோகாது தன் அணைப்பைக் கூட்டியிருந்தான் வீரன்.

அதன் பின்னர் அந்த இருளில் மீனாளின் மாமா என்கிற விளிப்பும், வீரனின் தங்கம் என்கிற அழைப்பும் பஞ்சமின்றி ஒலித்து அவ்வறையை நிறைத்தது.

அடுத்த பத்து நாளில்…

வீட்டிலிருந்த மீனாள் தனக்கு வலியெடுக்க, காற்றினை ஊதி பொறுத்துக்கொண்டவள், வீட்டில் அத்தனை பேர் இருந்தும் யாருக்கும் சொல்லாது, வீரனுக்கு அழைத்தாள்.

“மாமா…”

அவளின் குரலிலே கண்டு கொண்டவன்,

“வந்துட்டேன் தங்கம்” என்று அப்போதுதான் ஆலையிலிருந்து புறப்பட்டிருந்தவன் புயல் போல் வந்திருந்தான்.

அவன் வந்த வேகம் கண்டு அனைவரும் பதற…

“தங்கத்துக்கு வலி வந்துட்டு” என்று படிகளில் தாவி ஏறியவன், மீனாளை கைகளில் ஏந்தியபடி கீழே வந்தான்.

மீனாளின் உதடுகள் மாமா என்று உச்சரித்துக்கொண்டிருக்க, அவளின் கைகள் அவனது மார்புச் சட்டையை இறுகப்பற்றியிருந்தது. அதிலே அவளது வலியை உள்வாங்கியவனின் கண்கள் கண்ணீரை சொறிந்தது.

லிங்கம் ஹோட்டலிற்கு சென்றிருக்க…

அங்கை காரினை எடுத்து இயக்கியிருந்தாள்.

அவர்களுடன் மீனாட்சி ஏறிக்கொள்ள,

“எடுக்க வேண்டியதை எடுத்துக்கிட்டு வெரசா வாங்க” என்று அபி மற்றும் பாண்டியனிடம் சொல்லி மருத்துவமனைக்கு புறப்பட்டிருந்தனர்.

அரை மணியில் அனைவரும் மருத்துவமனையில் கூடிவிட்டனர்.

பிரசவ பகுதிக்கு வெளியில் தன் உள்ளத்து தவிப்பையெல்லாம் உள்ளுக்குள் மறைத்தவனாக வீரன் நின்றிருக்க… சில மணி நேரத்தில்,

“வீரா” என்ற அவனின் தங்கப்பொண்ணுவின் அலறலில் அவனது தேகம் சிலிர்த்து அடங்கியதென்றால், குடும்பத்தினர் அனைவருக்கும் இருவரின் நேசத்தின் ஆழம் புரிந்தது.

சில நிமிடங்களில் செவிலி குழந்தையை வெளியில் கொண்டுவர, மீனாட்சியை வாங்கிட சொல்லிய வீரன் மனைவியைத்தேடி அறைக்குள் சென்றான்.

“அத்தைதேன் முதலில் வாங்குவேன்” என்று நாச்சி தான் குழந்தையை கையில் வாங்கி முதலில் சீராட்டினாள்.

“தங்கம்…” ஓய்ந்து கலைந்த நிலையிலும் மனைவியை காதலாக ரசித்தான் வீரன்.

அவளிடம் சோபையான புன்னகை.

அவளின் வறண்ட இதழில் முத்தம் பதித்தவன்,

“என் உசுரை உறுவரதே உன் சோலியாப் போச்சுத்தா” என்று செல்லமாக வைதான்.

சிறு சிறு வார்த்தையிலும் காதலை காட்டிடுபவனின் நேசம் இப்போதும் அவளை மலைக்கச் செய்தது.

“குழந்தை எங்க மாமா?”

மீனாள் கேட்டுக்கொண்டிருக்க, எல்லோரும் தூக்கி கொஞ்சி முடித்திருக்க, லிங்கம் தன் மகளை ஏந்தி வந்து வீரனின் கைகளில் கொடுத்தான்.

“புள்ளைய கூட பார்க்காம ஓடி வந்தாச்சு” என்ற அங்கை, “அப்படியே மாமாவை உரிச்சு வச்சிருக்கா(ள்)க்கா” என்றாள்.

“புருஷனை வுட்டுப்போட்டு ஒரு நா கூட
இல்லாம ஒட்டிக்கிட்டே திரிஞ்சாக்கா… புருஷன் மாறித்தேன் குழந்தை பொறக்கும்” என்று மீனாட்சி கேலி செய்ய, புன்னகையோடு கணவனின் மார்பில் முகம் மறைத்தாள் மீனாள்.

சிறிது நேரத்தில் மூவருக்கு தனிமை கொடுத்து எல்லோரும் விலகி சென்றிட…

தானே மகளுக்கு அமுதூட்டிட மனைவிக்கு உதவி செய்தான் வீரன்.

மீனாள் உண்டாகியிருக்கிறாள் என தெரிந்த கணம் முதல் அவளுக்கான ஒவ்வொன்றையும் தான் தான் செய்ய வேண்டுமென்று நினைத்தவன், அனைத்தையும் தெரிந்து கொண்டான்.

இரண்டாம் நாள் மாலைபோல் வீட்டிற்கு வர, மீனாள், குழந்தை அருகே அவர்களின் தேவைக்கென யாரையும் வீரன் அருகில் விடவில்லை. தானே அனைத்தும் செய்தான்.

“பொண்ணுங்களுக்கு… சிலது அம்மா மட்டுந்தேன் இம்மாறி நேரத்தில செய்ய முடியும் அமிழ்தா!” என்று மூத்த பெண்கள் மூவர் சொல்லியும் வீரன் கேட்காது,

“நான் செய்வேன்” என்று அவர்களின் வாயினை அடைத்திருந்தான்.

“இதெல்லாம் உனக்கெப்படித் தெரியும் மாமா?” ஒரு நாள் இரவில் மீனாள் கேட்டிட,

“உனக்காக… எம் பொண்ணுக்காக தெரிஞ்சிக்கிட்டேன். இனியும் தேவையான எல்லாம் தெரிஞ்சுப்பேன்” என்றவனை காதலாக மீனாள் அணைத்த நொடி அவர்களின் புதல்வி வீறிட்டு அழுது இருவரையும் விலக்கியிருந்தாள்.

வீரனிடம் அப்படியொரு சிரிப்பு. மீனாள் வீரனை முறைக்க… குழந்தையின் சத்தம் அதிகரித்தது.

“ரொம்ப பன்றா(ள்) மாமா” என்று புகார் வாசித்த மீனாள், குழந்தையை தாய்மையாக அள்ளி அணைத்து மார்போடு உறவாடினாள்.

நாட்கள் அவர்களுக்கு மட்டுமேயாக மிக மிக சந்தோஷமாக செல்ல…

குழந்தைக்கு ‘தங்க வெண்ணிலா’ என்று பெயர் சூட்டினான் வீரன்.

குழந்தைக்கு அப்பெயரை வைக்கக்கூடாது, “நீயி என்னைய மட்டுந்தேன் தங்கம் கூப்பிடனும்” என மீனாள் செய்த அலும்பை இப்போது நினைத்தாலும் வீரனுக்கு சிரிப்பு வரும்.

ஒரு வழியாக மகளை தங்கமென அழைக்கமாட்டேனென்று வீரன் வாக்களித்த பின்னரே மீனாள் அப்பெயர் வைத்திட ஒப்புதல் வழங்கினாள்.

இடைப்பட்ட நாட்களில் கௌசிக், சுபா, கௌதம் மற்றும் சுந்தரேசன் நால்வரும் வந்து பார்த்துச்சென்றனர்.

வசந்தி மற்றும் நல்லானை மொத்தமாகத் தங்களின் வாழ்விலிருந்து விலக்கி வைத்திருந்தனர். அவர்கள் இப்போது என்ன செய்கின்றனர் என்பதை தெரிந்துகொள்ளக்கூட யாருக்கும் விருப்பமில்லை.

கரியனிடம் வெண்ணிலாவை மூன்றாம் மாதம் தொடங்கியது முதல் பழக விட்டிருந்தான் வீரன். இப்போது அவள் உறங்க வேண்டுமென்றால் கரியனின் கழுத்து மணியின் ஓசை தாலாட்டாக ஒலிக்க வேண்டும்.

காத்திருந்து பெற்ற செல்வம் என்பதால் வெண்ணிலா அனைவருக்கும் செல்லமாகிப்போனாள்.

பிரேம் மற்றும் லிங்குவிற்கு ஆண் பிள்ளைகள் என்பதால், இருவருக்கும் வெண்ணிலா தனக்குத்தானென்று அடிக்கடி முட்டிக்கொள்ளும். அதனை தீர்த்து வைத்திடவே வீரனுக்கு பொழுது சரியாக இருக்கும்.

“வேணுமின்னாக்கா இன்னொரு பொண்ணு பெத்து தாறேன். சின்ன பிள்ளையாட்டாம் குழந்தை முன்னாடி சலம்பிக்காதீங்கடே! யாரு குழந்தைன்னே தெரியமாட்டிக்கு” என்ற வீரனின் அதட்டலில் தான் இருவரும் அமைதியாவர்.

நாட்கள் சொல்லிக்கொள்ள முடியா வரையறைக்குள் அடங்கிடாத மகிழ்வில் வேகமாக விரைந்தோடியது.

வெண்ணிலாவுக்கு இரண்டு வயது ஆகியிருந்தது.

பொங்கல் தினம்.

போகி கும்பிட அனைவரும் கிணற்று வயலில் கூடியிருந்தனர்.

வெண்ணிலா, தனது அண்ணன்களுடனும், நாச்சியின் மகனுடனும் சேர்ந்து கரியனுடன் விளையாடிக் கொண்டிருக்க, மீனாட்சி அவர்களை கவனித்தபடி இருந்தார்.

நாச்சியின் மகன் நித்ரன் மூத்தவன் என்பதால் மூவரும் அவனின் சொல்லுக்கு அன்பாய் கட்டுப்படுவர்.

வீட்டு பெண்கள் படையலுக்கு வேண்டிய உணவு வகைகளை சமைத்துக் கொண்டிருந்தனர்.

சிறிது நேரத்தில் படையலிட்டு சாமி கும்பிட்டு அனைவரும் ஒன்றாக உணவருந்திய தருணம் வருடா வருடம் இந்த ஒற்றுமை, அன்பு தொடர வேண்டுமென அனைவரின் மனமும் ஒன்றுபோல் எண்ணியது.

அனைவரும் வட்டமாக அமர்ந்து பேசிட…

“இப்படியொரு நா நாச்சியின் கல்யாண விசயத்தில் ஆரம்பிச்சது… மனசுக்கு நிறைவா வாழ்க்கை நாளுவ ஓடிட்டு இருக்கு” என்ற மருதன் சொல்லை பாண்டியன் ஆமோதித்தார்.

அடுத்து அங்கு பேச்சுக்கும் சிரிப்புக்கும் பஞ்சமில்லாது நேரம் கழிந்தது.

மீனாட்சி படையலில் வைத்த மஞ்சள் கயிற்றினை ஒவ்வொருத்தருக்கும் கையில் கட்டிக்கொள்ள கொடுத்திட… மீனாள் தன்னுடைய கயிற்றை வீரனிடம் கொடுத்து தன் கையினை அவனிடம் நீட்டினாள்.

எப்போது அந்த கயிற்றை தாலியென சொல்லி வீரன் தன்னவளின் கையில் கட்டினானோ, அது முதல் மீனாள் அக்கயிற்றை அவிழ்த்ததே இல்லை.

முதல் முறை அவன் கட்டிய கயிறு… அடுத்த பொங்கல் வருவதற்குள் அவளை அவனது மனைவியாக்கியிருந்தது.

ஒவ்வொரு வருடமும் வீரன் தான் அக்கயிற்றினை அவிழ்த்து புதிய கயிறை மாற்றிக் கட்டிவிடுவான்.

இன்றும் விழிப்பார்வையால் உள்ளத்து நேசத்தை தன்னவளுக்கு கடத்தியவனாக கட்டிவிட்டவனின் உதடுகள் ‘தங்கம்’ என்று மெல்ல அசைந்தது.

அவன் இதுவரை சொல்லியே இராத காதலின் வார்த்தை அந்த தங்கம் என்ற விளிப்பில் பொதிந்துள்ளது என்பதை அவனது நேசத்தால் கண்டு கொண்டவளுக்கு எப்போதும் போல் இப்போதும் அவனின் மீது காதல் ஊற்றெடுத்தது.

அனைவரும் வீடு திரும்பிட, வீரனும், மீனாளும் அங்கேயே தேங்கினர்.

பிள்ளைகளை பெரியவர்கள் தூக்கிச்சென்றிருந்தனர்.

“ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு மாமா!” தென்னந்தோப்பு வழியாக சென்று கொண்டிருக்க அங்கை லிங்கத்திடம் கூறினாள்.

லிங்கத்திற்கு அங்கை அவளது காதலை அடமாக அங்கு வைத்து சொல்லிய நாள் நினைவில் எழ, பட்டென்று அவளின் கன்னத்தில் இதழொற்றி விலகியிருந்தான்.

“மாமா…”

“தேன்க்ஸ்டி பொண்டாட்டி” என்ற லிங்கம், “நீயி மட்டும் அடமா லவ் பண்ணாமல் இருந்திருந்தின்னாக்கா. நான் இம்புட்டு அழகான வாழ்க்கையை இழந்திருப்பேன்” என தன் தோளோடு அணைத்து பிடித்தான் லிங்கம். அங்கை காதலாக அவனது அணைப்புக்குள் அடங்கி நின்றாள்.

“நீயி வார்த்தையால சொல்லணும் அவசியமில்லை மாமா. என்னை பாக்குற உன் கண்ணு சொல்லிப்புடும் உன்னோட எனக்கான காதலை” என்று லிங்கத்தின் தொண்டைக் குழியில் முத்தம் வைத்தாள்.

“இங்குட்டே உசுப்பேத்தாதடி… வூடு போவும் முன்ன எதுவும் பண்ணிப்போடுவேன்” என்று அவளின் கன்னத்தில் பற்கள் படாது கடித்து இதழ் ஒற்றினான்.

“நீயி புதுசா பண்றதுக்கு எதுவும் மிச்சமிருக்கா மாமா” என்றவள் எக்கி அவனின் காதில் கிசுகிசுக்க…

“உன்னைய” என்று அவளைத் தூக்கி தோளில் போட்டவன், “மொத்தமா அடக்கிக்கிறேன் எனக்குள்ள” என்று சொன்னவன் தான் முற்றும் முழுதாய் அவளில் அடங்கியிருந்தான்.

***********

மாந்தோப்பு… சிலுசிலுவென வீசிய வாடைக் காற்றில் உடல் குளிர கணவனின் கைகளில் பாந்தமாக பொருந்தியிருந்தாள் வீரனின் மீனாள்.

இருவருக்கும் அப்படியொரு இதம். வாழ்வு மிகமிக அழகாய் சென்று கொண்டிருக்க…

இருவரும் ஒருவருக்கொருவர் போட்டிபோட்டுக்கொண்டு காதலை பகிர்ந்திட…

வேறென்ன வேண்டுமாம்?

ஒவ்வொரு நொடியையும் காதலாக மட்டுமே வாழ்ந்தனர் என்று தான் சொல்ல வேண்டும்.

“உன் கைக்குள்ள இருக்கும் போது இந்த வாழ்க்கையையே முழுசா வாழ்ந்து பார்த்துட்ட மாறி இருக்கு மாமா” என்ற மீனாள் நொடியில் தாங்கள் அனுபவித்த வலி நிறைந்த பக்கங்களை மனதில் ஓட்டிப்பார்த்திருந்தாள்.

“உன்னைய நிறைய நோகடிச்சிக்கிட்டே இருந்திருக்கேன்ல மாமா?”

“அம்புட்டும் என் மேல என் தங்கப்பொண்ணுக்கு இருக்கும் நேசமாட்டிக்குடி” என்று அவளின் நெற்றி முட்டியவன்…

“நான் நீ டி (யான் நீயே)” என்றான். அணைப்பைக் கூட்டி. குரலில் நேசத்தைக் கூட்டி. விழிகளில் காதலைக் கூட்டி.

“ஆமா மொத்தமும் நீயிதேன்” என்ற மீனாள்… அவனின் மீசை நுனியை முறுக்கிவிட… அவனோ தனது இதழ்கள் உரசிய அவளின் விரலில் உதட்டினை குவித்திருந்தான்.

“காலக் முச்சூடும் தங்கத்துக்குள்ள தங்கமா கரைஞ்சி போவனும்” என்ற வீரன், “ரொம்ப குளிரா இருக்குல?” என்றான்.

அவனின் நோக்கமறிந்து நமட்டுச் சிரிப்புடன்…

“ஆமா… ரொம்ப குளிரடிக்குது மாமா” என மேலும் அவனில் ஒண்டினாள்.

“மனசுக்குள்ளையும்” என்ற வீரன், மீனாளை அதீதமாய் தனக்குள் கட்டி சுருட்டிக் கொண்டவனாக சாய்ந்தாடினான்.

“மாமா” என்றவளை தூக்கி தனது மடியில் அமர்த்திக்கொண்டவன், அவளின் இதழை ஸ்பரிசித்து விலகி…

“இப்போ பேச்சு அவசியமாடி” என்று அவளின் கழுத்தில் முகம் புதைத்து அவளை சிலிர்க்க வைத்தான்.

“அச்சோவ் மாமா” என்றவள் அவனின் அசைவுகளில் நெகிழத் துவங்க… அவன் அவளின் தஞ்சம் கொண்டான்.

அவனுள் அவள் மட்டுமே முழுதாய் நிறைந்திருக்க… அவள் அவனுள் தானே அடக்கம்.

இருவருள் அவர்களின் காதல் அடக்கம்.

‘யான் (வீரன்) நீயே (மீனாள்).’

வீரனின் மொத்தம் அவனது தங்கம்.

முற்றும்…

விருப்பம் தெரிவித்து கருத்துகள் அளித்து கதையோடு பயணித்த வாசகர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள் ❤️

நட்புடன் 💕

பிரியதர்ஷினி S 🫶🏻

Click on a star to rate it!

Rating 4.9 / 5. Vote count: 59

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
4
+1
60
+1
2
+1
1

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

2 Comments

  1. Awesome story sis
    Unga overu story um super superb sis…
    Going to miss veeran and meenu….
    🫶🫶🫶🫶🫶🫶🫶💕

  2. Super super super super super indha story la characters pesara slang rombha nalla irundhathu apdiye oru gramathukku poiettu vandha feeel veeran and meenal love super lingam and angai enakku rombha pudicha jodies rombha nalla irundhathu indha story