
யான் நீயே 46
ஒரு வாரம் சென்றிருக்கும்…
மீனாள் எதையோ தீவிரமாகத் தேடிக் கொண்டிருந்தாள்.
வீரன் வந்தது அவள் கருத்தில் படவில்லை.
“என்னவாம் கலெக்டர் மேடமுக்கு? எதையோ தேடிட்டு இருக்கீங்க?” சன்னல் திண்டில் சென்று அமர்ந்தான்.
“எப்போ மாமா வந்த?” எனக் கேட்டவள், கையில் சில கோப்புகளை வைத்து ஆராய்ந்தவாறு அவனருகில் வந்து முத்தம் வைத்தவள் மீண்டும் கோப்புகள் அடுக்கி வைத்திருக்கும் அலமாரியிடம் சென்றுவிட்டாள்.
“ஒரு முக்கியமான ஃபைல் மாமா! படிச்சு பார்க்க வீட்டுக்கு கொண்டு வந்திருந்தேன். எங்கன வச்சேன்னு தெரியலையாட்டுக்கு” என்றாள்.
“இங்க தானிருக்கும் பொறுமையா தேடுங்க மேடம்” என்ற வீரன், மனைவியை ஒட்டி உரசி நின்றான்.
“வீராக்கு என்ன வேணுமாட்டிக்கு?”
“தங்கப்பொண்ணு…”
“சொல்லு மாமா!”
“நைட் மாந்தோப்பில் படுத்துக்கலாமா?”
கேட்ட வீரனை நிமிர்ந்து பார்த்தவள்,
“இது என் மாமா தானா?” எனக் கேட்டாள்.
“அதிலென்னடி சந்தேகம் உனக்கு?” எனக்கேட்டவன், அவளின் காதிலே அவர்களுக்கான சங்கேதம் பேசி, “நிரூபிக்கட்டுமாடி?” என்று மீசையை முறுக்கினான்.
“அச்சோ கூசுது மாமா” என்றவள், “தப்பு தப்பா பேசுற நீயி” என்றாள்.
“இதெல்லாம் பொண்டாட்டிகிட்ட பேசலன்னாதேன் தப்பு” என்றவன், அவளின் இடை வளைத்து இழுக்க, கரடியாய் சிணுங்கியது அவனது அலைப்பேசி.
மீனாள் சத்தமிட்டு சிரிக்க, வீரன் அழைப்பை ஏற்றவனாக வெளியேறியிருந்தான். அவசரமாக ஆலைக்கு செல்ல வேண்டி வந்தது.
மீனாள் மீண்டும் தன் தேடுதலில் ஈடுபட்டாள்.
இந்த ஒரு வாரமும் மீனாள் யாரிடமும் சரியாக பேசவில்லை. அவளுக்கு மீண்டும் குழந்தையைப் பற்றி பேசிவிடுவார்களோ என்கிற பயம். தன்னால் அங்கைக்கும் குழந்தைக்கும் ஏதுமாகிவிடுமோ என்கிற பயம். ஆகவே தன்னை ஒதுக்கிக்கொண்டாள். கேட்பதற்கு மட்டும் பதில் எனும் நிலையில் நின்றுகொண்டாள். வீரனிடம் மட்டுமே அவள் அவளாக இருந்தாள்.
வீரன் வீட்டிற்கு வர பத்து மணியாகியிருந்தது.
வீடே நிசப்தமாக இருந்தது.
“எல்லாரும் தூங்கியாச்சா?” தனக்குத்தானே கேட்டபடி மேலேறி வந்தவன் விடி விளக்கின்றி அறை முழுக்க இருளில் மூழ்கியிருக்க…
“நான் வராம தூங்கியிருக்கமாட்டாளே” என்றவனாக விளக்கினை ஒளிரச் செய்திட, சிதறிக் கிடந்த பல கோப்புகளுக்கு நடுவில் அழுது ஓய்ந்து, முகமெல்லாம் கலைந்து பொலிவிழந்து சோக சித்திரமாக அமர்ந்திருந்தாள் வீரனின் மீனாள்.
“என்னாச்சு தங்கம்? ஃபைல் கிடைக்கலையா?” எனக் கேட்டவன் முன்பு தனக்கு அருகில் கிடந்த கோப்பு ஒன்றை எடுத்து முன் வைத்தாள்.
வீரனின் உலகமே நின்று சுழன்றது.
எதை அவளுக்கு தெரியக்கூடாதென மறைக்க நினைத்தானோ அதனை தெரிந்து கொண்டிருந்தாள் அவனவள்.
“தங்கம்…” காற்றாகி ஒலித்தது அவனது குரல்.
“அப்பா வீட்டுக்கு போறேன் மாமா” என்றாள்.
“எதுக்கு?”
“என் வாயால் சொல்லணுமா மாமா?” எழுந்து அறையின் வாயிலை நோக்கி அடி வைத்தாள்.
“திரும்பி வந்திடுவல?”
அவனுக்கு முகம் காட்டாது முதுகுக்காட்டி நின்றவள் இல்லையென தலையசைத்தாள். கண்ணீர் உருண்டு ஓடியது.
“நீயில்லாமல் முடியாது தங்கம்!”
பதில் சொல்லாது முன்னேறி அடி வைத்தாள்.
“போவாத தங்கம் நில்லு.”
“இங்கிருந்து உன் வாழ்க்கையை வீணாக்க விரும்புல மாமா!” சென்றுகொண்டே கூறினாள்.
“என் வாழ்க்கையே நீதான்டி. அது ஏன் புரியமாட்டேங்குது உனக்கு?” வீரன் அவளின் கை பிடித்து நிறுத்தியவனாகக் கூறினான்.
“குழந்தை மட்டும் தான் வாழ்கையா தங்கம்?”
“இந்த திருமண பந்தம் குழந்தை இல்லாம முழுமை அடையாது மாமா!”
“மொத்தமா போவ முடிவு பண்ணிட்டியா தங்கம்.”
கையால் வாய் மூடி கதறினாள்.
“உன் கையால என்னை கொன்னுப்போட்டு போடி” என்று பிடித்திருந்த கரத்தினை விட்டு கத்தினான்.
மேல் படிகளின் துவக்கத்தில் நின்றிருந்தனர். நிசப்த இரவில் வீரனின் கத்தலில் அனைவரும் என்னவோ ஏதோவென்று ஓடி வந்திருந்தனர்.
“என்ன இந்நேரம் ரெண்டேறும் இங்கன நின்னுட்டு இருக்கீய்ங்க?” லிங்கம் கேட்டிட இருவரிடமும் பதலில்லை.
“நான் சொன்னதை செஞ்சிப்புட்டு நீயி போலாம். நீயில்லாம இருக்கிறதுக்கு நான் செத்தே போவலாம்” என்று வீரன் மீனாளிடம் சொல்ல…
“ஆத்தே” என்று மீனாட்சியும், அபியும் நெஞ்சில் கை வைத்தனர்.
லிங்கமும், அங்கையும் ஒருவரையொருவர் அர்த்தமாக ஏறிட்டனர்.
வளைகாப்பு முடிந்த இரவு தாங்கள் இருவரும் பேசிக்கொண்டதை நினைத்து பார்த்தனர்.
“அக்காக்குதேன் ஏதோ…? மாமா அக்காகிட்டவும் சொல்லலை போல”
அங்கை முடிக்கும் முன்,
“இதை பேச நமக்கு உரிமையில்லை அங்கை. அண்ணே மீனாகிட்ட மறைக்கிறதாவே இருக்கட்டும். அதுக்கு சரியான காரணமிருக்கும். யாருக்கிட்டவும் எதையும் உளறிட்டு இருக்காதே!” என்று லிங்கம் கடிந்து கொண்டிருந்தான்.
“மாமாவுக்கு மட்டும் தெரிஞ்ச ஒன்னு அக்காவுக்கு தெரிஞ்சிடுச்சாட்டுக்கு மாமா!” அங்கை முணுமுணுக்க, லிங்கம் அவளை முறைத்த முறைப்பில் கப்பென்று வாயினை மூடிக்கொண்டாள்.
“அமிழ்தா என்னப்பா?” பாண்டியன் மகனின் வார்த்தையில் பதறியவராக வினவினார்.
“ஒன்னுமில்லைங்க ஐயா” என்று வீரன் சொல்ல…
“பொய் சொல்றாங்க மாமா. நான் எங்க வீட்டுக்கு போறேன்” என்றாள்.
“அப்போ இது யார் வீடுடி?” அவளின் கன்னத்தை அழுந்த பற்றி, படிகளின் பக்க சுவற்றில் அவளை சாய்த்தவனாக பற்களைக் கடித்துக் கேட்டான்.
“வுடு மாமா வலிக்குது” என்று திமிறினாள்.
“அண்ணே…”
“அமிழ்தா…”
மீனாளுக்கு சின்ன வலியென்றாலும் தனதாய் துடித்திடும் வீரனா அவளை காயப்படுத்துவது என்று அதிர்ந்தனர். அவர்களால் அவனை அதிர்வாய் விளிக்க மட்டுமே முடிந்தது. பார்வையாலே மற்றவர்களின் வாயினை மூடச் செய்திருந்தான்.
மீனாளிடம் வீரனின் முகம் மென்மை மட்டுமே. இன்று இந்த ஆக்ரோஷம் எதனாலென தெரியாது பரிதவித்தனர்.
“எதுவாயிருந்தாலும் மொத நான் வேணாங்கிறதுதேன் உன் முடிவா இருக்குல?” வீரனின் குரலில் கமறல்.
“மாமா…”
“மூச்…” மற்றை கை சுட்டுவிரலை உதட்டில் வைத்து சொல்லியவன், “ஒரு வார்த்தை பேசக்கூடாது” என்றான்.
“அமிழ்தா என்னய்யா… என்னன்னு சொன்னாதேன் தெரியுமாட்டிக்கு?” எனக் கேட்டார் பாண்டியன்.
“ஏன் மாமா இப்படி மிருகம் மாதிரி நடந்துக்கிற?”
“நீ செய்ய நினைக்கிற காரியத்துக்கு உன்னை கொஞ்சுவாங்களா? ராஸ்கெல். தொலைச்சிக்கட்டிடுவேன் பார்த்துக்கோ” என்று மிரட்டினான்.
“நீயி என்ன பண்ணாலும் எம் முடிவு இதுதேன் மாறாது. நான் என் வூட்டுக்கு போறேன்.” மீனாள் கண்ணீரோடு அடமாகக் கூறினாள்.
“நீயாவது என்னன்னு சொல்லுக்கா?”
“அது… கு..க்கு…குழ… எனக்…எனக்கு…” என மீனா தடுமாறி சொல்லிட விழைய, அவளின் முகத்தை தாங்கி பிடித்திருந்த கையினை எடுத்து மடக்கியவன், அவளின் முகத்திற்கு அருகே சுவற்றில் ஓங்கி மாற்றி மாற்றி குத்தினான்.
மீனாள் தன் வாயினை இரு கையாளும் இறுக மூடிக்கொண்டாள்.
வீரன் குத்திக்கொண்டேதான் இருந்தான். யாருக்கும் அவன் அடங்கவில்லை. லிங்கமும், பாண்டியனும் இரு பக்கம் பிடித்து இழுத்தும் முடியாதுபோனது.
“நான்… சொல்லல… சொல்லல” என்று சுவற்றில் படிந்த ரத்த துளிகளைக் கண்டு அரண்டு கூறினாள்.
அதன் பின்பே வீரன் குத்துவதை நிறுத்தியிருந்தான்.
“உள்ள போ தங்கம்!”
மீனாள் அசையாது அவனை வெறித்தபடி நின்றாள்.
“போ’ன்னு சொன்னேன்.” கர்ஜித்தான். அங்கிருந்த அனைவருக்கும் உடல் தூக்கிப்போட்டது.
“எதுவாயிருந்தாலும் கொஞ்சம் பொறுமையா பேசலாம்ண்ணே!” லிங்கம் வீரனின் தோள் தொட…
வேட்டியை மடித்துகட்டிய வீரன்,
“என்னையவிட்டு போவன்னு சொல்லுவா… பொறுமையா கெஞ்சனுமா?” எனக் கேட்டவன், “இந்த வீட்டைத்தாண்டி நான் வேணாமின்னு போனாக்கா…. என் பொணத்தை தாண்டி போவச்சொல்லு” என்ற வீரன் அறைக்குள் புகுந்து கொண்டான்.
அப்படியே சுவற்றில் சரிந்து தரையில் கால்களைக் கட்டிக்கொண்டு அமர்ந்தவள் மடியில் முகம் புதைத்து விம்மி வெடித்து அழுதாள்.
“என்னாச்சு மீனு… எதுக்கு இப்படி பன்ற?” எனக் கேட்டபடி லிங்கம் அவள் முன் குத்திட்டு அமர,
“என்னைய எதுவும் கேட்காத மாமா. மாமாவை மீறி நான் சொல்லமாட்டேன்” என்றாள் அழுகையோடு.
“இதெல்லாம் குறைச்சல் இல்லை. பொறவு என்னத்துக்கு மாமாவை வுட்டுப்போட்டு போறேன்னு குதிக்கிற?” அங்கைக்கு மீனாளின் செயல் அபத்தமாகப்பட கோபத்தைக் காட்டினாள்.
“அவளே எதையோ நினைச்சு… நம்மகிட்ட சொல்ல முடியாம உக்கித் தவிக்கிறா(ள்). நீயும் சாடுற. சும்மா இருத்தா” என்ற அபி,
“அவன் உசுருத்தா நீயி. அவனை வுட்டுப்போட்டு போறன்னு சொன்னதும் கோபப்பட்டுட்டான்” என்று சொல்லும்போதே,
“மணியாவுலையா… உறங்காம இங்கென்ன பேச்சு?” வீரனின் குரல் சிம்மமென அறைக்குள்ளிருந்து உருமலாக வெளிவர, மீனாளை அப்படியே விட்டுச்செல்ல தயங்கியவர்களாக லிங்கத்தை பார்த்துவிட்டு பெரியவர்கள் கீழே சென்றனர்.
“எந்திரித்தா… உள்ள போ.”
லிங்கம் சொல்லிட இருந்த நிலையிலேயே முடியாதென தலையசைத்தாள்.
“உங்க ரெண்டேறுக்கும் தனியா சொல்லனுமாட்டிக்கு!” அறையின் நிலைப்படியில் சாய்ந்து நின்று மார்பிற்கு குறுக்கே கைகளைக் கட்டிக்கொண்டு வீரன் கேட்டிட, லிங்கமும் அங்கையும் எழுந்து தங்கள் அறை சென்றனர்.
“நீயி எப்படி… உள்ள வரியா?” அவனது குரலில் எவ்வித உணர்வுமில்லை.
“நான் வூட்டுக்கு போறேன்.” வீரனின் முகம் பார்க்காது மீனாள் சொல்லிட…
“வேற…”
“நீயி இன்னொரு பொண்ணை…” அவள் முடிக்கவில்லை,
“லிங்கம்.” வீடே எதிரொலிக்கக் கத்தி அழைத்திருந்தான்.
லிங்கம் சாற்றிய கதவை வேகமாக திறந்துகொண்டு வெளியில் வர,
“மேடத்தை அவுங்க வூட்டுல வுட்டுப்போட்டு வந்திடு” என்றான். மீனாள் விலுக்கென அவனை நிமிர்ந்து பார்க்க,
“போடி… நான் வேணாமில்ல உனக்கு? அப்போ நீயும் எனக்கு வேணாமாட்டிக்கு” என்றவன் அறைக்குள் நுழைந்து கதவினை அடித்து சாற்றினான்.
“என்ன மீனு இது?”
என்னவென்று சொல்லாது இருவரும் மண்டை காய வைத்தனர்.
“நான் மாமாக்கு வேணாமாட்டிக்கு மாமா. அவருக்கு எப்படியாவது இன்னொரு பொண்…” என்பதற்குள்,
“அவளை எழுந்து போவச்சொல்லு லிங்கு” என்று மூடிய கதவுக்கு அந்தப்பக்கம் கர்ஜித்து ஒலித்தது வீரனின் சத்தம்.
அமைதியான இரவில் மெல்ல பேசினாலும் நன்கு கேட்டது.
“அண்ணேவை ரொம்ப கஷ்டப்படுத்துற மீனு!”
“வேற வழியில்லை மாமா” என்ற மீனாள் முகத்தை துடைத்துக்கொண்டு எழுந்து நின்றாலும், அவளின் கண்கள் கண்ணீரை வழிய விட்டுக்கொண்டே இருந்தது.
லிங்கம் மீனாளை கீழே அழைத்து வர மூத்தவர்கள் மூவரும் கூடத்தில் தான் ஆளுக்கொரு மூலையில் அமர்ந்திருந்தனர்.
“என்னப்பு…?” அபி பதறிக்கொண்டு வர,
“நான் போறேன் அத்த” என்ற மீனாள் யாரையும் மனதில் கொள்ளாது விடுவிடுவென அந்த கரிய இருளில் வீட்டின் வாயில்படி இறங்கி நடக்கத் தொடங்கியிருந்தாள்.
லிங்கம் அவளின் பின்னால் ஓடி இணைந்தான்.
அறைக்குள் கூண்டு புலியென உறுமிக்கொண்டு அங்குமிங்கும் நடந்து கொண்டிருந்த வீரனிடம் வலியை விட கோபமே மிஞ்சியிருந்தது.
அவனால் வார்த்தைகள் கோர்த்து அவனவளை திட்டிடக்கூட முடியவில்லை. சற்று முன்னர் அவளுக்கு வலியை கொடுத்துவிட்டு இவன் தான் தற்போது கலங்கி நிற்கின்றான்.
“நான் வேணாமாடி உனக்கு?”
அவனது காலில் ஏதோ தட்டுப்பட என்னவென்று பார்த்தவன், மீனாளின் மருத்துவ கோப்பு என்றதும் கைகளில் எடுத்து விசிறியடித்தான்.
‘எல்லாம் இதனால் வந்தது.’
அவனுக்கு அவள் போகிறேன் என்றதைவிட வேறு பொண்ணை மணந்துகொள் என்று சொல்ல வந்ததைத்தான் இன்னமும் ஜீரணிக்க முடியவில்லை.
‘குழந்தைக்காக இன்னொரு பொண்ணை கட்டிக்கிடும் ஆளுன்னு நினைச்சிட்டாளா அவ? அப்போ இத்தனை வருசம் நான் காட்டிய காதலெல்லாம் ஒன்றுமில்லையா?’
அவள் போகிறேன் என்ற போதுகூட தடுக்க நினைத்தவன், அவளின் இன்னொரு கூற்றை ஏற்க முடியாது அவளை அடித்தாலும் அடித்து விடுவோம் என அஞ்சியே அவள் விருப்பப்படி போ என்றிருந்தான்.
இப்போது அவளின்றி அவ்வறையில் இருக்க பிடிக்காது, வீட்டிற்கு பின்கட்டு வந்தவன் கரியனின் அருகில் கயிற்றுக் கட்டிலை போட்டு படுத்துக்கொண்டாலும் உறக்கம் வராது, மனதோடு இரவு முழுக்க குமுறிக்கொண்டிருந்தவன், காலையில் தன்னை மீட்டெடுத்தவனாக தன்னுடைய அன்றாட வேலைகளை கவனிக்கத் தொடங்கினான்.
வீட்டிலிருப்போர் அவனிடம் வாய் திறக்க முடியாது, என்ன நடக்கிறதென புரியாது குழம்பிப் போயினர்.
******************
நாற்பது நாட்களுக்கு மேலாகியிருந்தது…
மீனாள் தன்னுடைய பிறந்த வீட்டிற்கு சென்று.
அன்றைய இரவு வீரன் அவளுக்காக அழுதது, கதறியது, துடித்தது, தவித்தது, எல்லாம்… எல்லாம்… அன்றைய இரவு மட்டுமே!
அடுத்தநாள் காலை முதல் புதிய வீரனைத்தான் அவனது குடும்பத்தினர் கண்டனர்.
மென்மையாக வலம் வந்து கொண்டிருந்த வீரன் பெயருக்கு ஏற்றார் போல் முகத்தில் எப்போதும் கடுமை பரவ, கண்களில் கூர்மை காட்டி, உடல் விறைத்து முழுத் தோற்றமும் இறுகத்தான் காணப்பட்டான்.
முற்றிலும் தன் பேச்சினைக் குறைத்துக்கொண்டான்.
அவள் சொல்லியதற்காக தாடி வளர்ப்பதையே தவிர்த்திருந்தவன் மூன்று வருடங்களுக்குப் பிறகு புதிதாக முகத்தில் தாடி வளர்த்திருந்தான். அதனுள் பாதி முகத்தை மறைத்துக்கொண்டான்.
யார் கேட்டும் இருவருமே வாய் திறக்கவில்லை. எல்லோரும் மருதனை அனுப்பி வைக்க, மருதன் வீரனிடம் என்ன ஏதென்று கேட்டும் அவன் எதுவும் சொல்லவில்லை.
மகா மீனாளை காரணம் கேட்டு அடித்துக்கூட பார்த்துவிட்டார். அவள் சொல்லிடவில்லை.
குடும்பத்தாருக்கு மனம் விட்டுப்போக, இருவரின் அன்பினை பக்கமிருந்து பார்த்திருக்க, அவர்களுக்குள்ளான பிரிவு அதிகம் நீடிக்காதென மனதை தேற்றிக்கொண்டு நடமாடத் துவங்கினர்.
மீனாளின்றி வீரனுக்கு அவனது அறைக்குள் செல்லவே உயிர் துடித்தது. குளித்து உடை மாற்ற மட்டுமே அறைக்குச் செல்வான். காலை ஏழு மணிக்கெல்லாம் ஆலைகளுக்கு செல்பவன், இரவு பதினொன்றை கடந்து தான் திரும்புவான். பெயருக்கு உணவினை உண்டு, கட்டுத்தறியில் கரியனின் அருகில் கயிற்றுக் கட்டிலை போட்டு படுத்துக்கொள்வான்.
லிங்கம் எவ்வளவோ பேசியும் வீரனிடம் மௌனம் தான்.
மீனாள் உயிர் இருந்தும் வெறும் கூடாகத்தான் நடமாடினாள். வேலைக்கு செல்பவள், பகலில் வேலையில் தன்னை மூழ்கடித்துக் கொண்டாலும், இரவில் வீரனின் கையணைப்பை எதிர்பார்த்து தவித்துப்போவாள். அவனது மார்பில் தஞ்சம் புக, அவளின் உடலும் உள்ளமும் ஆர்ப்பரிக்கும், வீம்பாக இருந்துகொள்வாள்.
வீரனை தெரிந்தே வதைத்துக் கொண்டிருந்தாள்.
அன்றைய தினத்திற்கு பின்னர், பத்து நாட்களுக்குப் பின் தான் மீனாள் வீரனை நேரில் பார்த்தாள். மருதனின் வீட்டிற்கு பின்னிருக்கும் களத்து மேட்டில் நின்றிருந்தான். அவனின் தோற்றம் அவளின் இதயத்தை அறுத்தது என்று தான் சொல்ல வேண்டும். அவன் தன்னை பார்க்குமுன் சென்றிருந்தவள், அறைக்குள் புகுந்து அப்படியொரு அழுகை. வெடித்து வெம்பி மருகினாள்.
தினமும் அலுவலகத்திற்கு அவனுடன் சென்று வந்து கொண்டிருந்தவள், இப்போதெல்லாம் தன்னுடைய ஸ்கூட்டியில் செல்கிறாள். அலுவலகம் சென்ற பின்பு, வேலை சம்பந்தமாக வெளியில் சென்றால் அலுவலக வாகனத்தை பயன்படுத்திக் கொண்டாள்.
இருவரின் முகமும் சிரிப்பை மறந்தே இருந்தது.
வீரன் கடுமையிலும் கடுமையாகியிருந்தான். இரவில் கரியினிடம் மட்டுமே தன் இறுக்கம் தளர்த்தி சிறிது பேசுவான்.
களத்து மேட்டில் வீரனை பார்த்ததற்கு பின் மீனாள் அவனை பார்க்கவில்லை. அவன் அவள் முன் சென்றிடவேக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தான். ஆனால் மீனாள் அவனைத்தேடி அவன் முன் சென்றிருந்தாள்.
பதினைந்து நாட்களுக்கு முன்பு அங்கைக்கு சுகப்பிரசுவத்தில் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தன.
அவர்களை காண மீனாள் மருத்துவமனை வந்த போது, அவளால் தன் வரவை உணர்ந்து அவ்விடம் விட்டுச்செல்லும் வீரனின் முதுகை மட்டுமே பார்க்க நேர்ந்தது. பொங்கி வரத் தயாராகிய கண்ணீரை உள்ளிழுத்துக்கொண்டாள்.
“இன்னும் எம்புட்டு நாளுக்கு இந்த வேதனைத்தா?” எனக் கேட்ட லிங்கம், “புள்ளைங்க பொறந்ததைக்கூட சந்தோஷமா அனுபவிக்க முடியலத்தா” என்றிருந்தான்.
குடும்பத்தின் ஆணி வேர் வீரன். அவனின்றி ஒரு மகிழ்வா அவர்களுக்கு.
குழந்தைகளைத் தூக்கி கொஞ்சிவிட்டு யாரின் முகமும் பாராது விடுவிடுவென மருத்துவமனை விட்டு வெளியேறிவிட்டாள்.
லிங்கத்தின் வார்த்தைகள் அவளின் மண்டைக்குள் ஓடிக்கொண்டிருக்க, அடுத்த நாள் வீரனை காண சர்க்கரை ஆலைக்கு வந்திருந்தாள்.
வீரன் அவனுக்கான அறையில் அந்த வார வரவுகளை பார்வையிட்டுக் கொண்டிருக்க…
“ஐயா… அம்மா வந்திருக்காய்ங்க” என்று அங்கு வேலை செய்யும் ஒருவன் வந்து சொல்லிட…
யாரென்று தன் மேசை மீதிருக்கும் கணினி வழியாக கண்காணிப்பு காணொளியில் பார்வையிட்டான்.
அவனது தங்கப்பொண்ணு தான் நின்றிருந்தாள்.
பார்த்தது பார்த்தபடி உறைந்தான்.
‘நினைச்சேன். வீம்பா போனவளுக்கு ஒழுங்கா சாப்பிடத் தெரியாதாக்கும்’ என்று மனதில் சடைத்தவன், “யாரையும் இப்போ பார்க்க முடியாதுன்னு அனுப்பு” என்றான்.
“ஐயா…”
“போய் சொல்லுடே… யாராயிருந்தாலும் பார்க்க முடியாது” என்றான். ஆனால் அவனின் பார்வை திரையில் தெரியும் அவளின் உருவத்தை விட்டு கொஞ்சமும் நகரவில்லை.
அவன் சென்று மீனாளிடம் வீரன் சொல்லியதை வார்த்தை மாறாது கூற, காமிராவை நிமிர்ந்து ஒரு பார்வை பார்த்தவள் சென்றுவிட்டாள்.
“எதுக்கு வந்திருப்பாள்?”
‘அதான் போன்னு துரத்திட்டியே! பொறவு என்னத்துக்கு ரோசிக்கிற?’
அதட்டிய மனதை தட்டி வைத்தான்.
சில நிமிடங்களில் வேலையிலும் மூழ்கிப்போனான்.
வழமைப்போல் பதினோரு மணி கடந்து வீரன் வீட்டிற்கு கிளம்பி வர, கருப்பர் கோவிலுக்கு கீழிறங்கும் பாதை கரையில் சாலை ஓரமாக நிறுத்தியிருந்த ஸ்கூட்டியில் முன் பகுதியில் கைவைத்து தலை கவிழ்ந்து மீனாள் உட்கார்ந்திருக்க, அவளுக்கு அருகில் தன்னுடைய வண்டியில் ஒரு பக்கமாக கால்களை தொங்கப்போட்டு கையில் கன்னம் தாங்கி தேமேயென லிங்கம் அமர்ந்திருந்தான்.
சில அடிகளுக்கு முன்பாகவே வண்டியின் வெளிச்சத்தால் இருவரையும் கண்டுவிட்ட வீரன், லிங்கத்திற்கு அருகில் நிறுத்தி என்னவென விசாரித்தான்.
“இந்நேரம் இங்கன என்னடே?”
“நான் ஒன்பது மணிக்குலாம் வந்துப்புட்டேன். மீனு இங்கு நின்னுட்டு இருந்துச்சு. என்னன்னு கேட்டும் பதிலில்லை. வூட்டுக்கு போலாம் சொன்னாலும் அசையில. இப்போ இருக்க மாறியேதேன் நிலையில மாத்தமில்லாம உட்கார்ந்திருக்காள். தனியா எங்கன வுட்டுப்போறது. அதேன் நானும்” என்று விளக்கம் கொடுத்தான் லிங்கம்.
“என்ன விசயமாம் கலெக்டர் மேடத்துக்கு?” வண்டியில் அமர்ந்த நிலையில், ஆக்சிலேட்டரை உரும விட்டபடி தான் வீரன் கேட்டிருந்தான்.
மெல்ல தலையை நிமிர்த்திய மீனாள், வண்டியின் முன் பகுதியிலிருந்து உரை ஒன்றை எடுத்து லிங்கத்திடம் நீட்டினாள்.
‘ரெண்டேறுக்கும் வூடால நான் மாட்டிக்கிட்டேனா?’ மனதில் புலம்பியவனாக உரையை வாங்கி வீரனிடம் கொடுத்தான்.
“அதுல பொண்ணோட போட்டோ மத்த விவரமெல்லாம் இருக்குது. கட்டிக்கிட சொல்லு மாமா. ஒத்தையில எம்புட்டு நா நிப்பாய்ங்க. வாரிசு வேணுமில்ல!” என்றாள்.
லிங்கம் அதிர்ந்து வீரனை ஏறிட,
உரையை மடித்து சட்டி பையில் வைத்த வீரன்,
“சரிடே… பின்னாலே வந்து சேரும்” என்று தம்பியிடம் சொல்லிவிட்டு வண்டியை முடுக்க…
“அண்ணே இதென்ன விளையாட்டு” என்று வீரனின் வண்டியை பிடித்து இழுத்தவனாக லிங்கம் வினவினான்.
“நான் எங்கடே விளையாடுறேன். யாருக்கு வாய்க்கும் இந்த கொடுப்பினையெல்லாம். கட்டுன பொண்டாட்டியே புருஷனுக்கு பொண்ணு பார்த்துக் கொடுக்கும் போது கட்டிக்கிட வேண்டியதுதேன்” என்ற வீரன் மீனாளை அழுத்தமாக பார்க்க, அவளின் கண்களில் கண்ணீர் வழிந்தது.
அவளாக சொல்லும்போது வலிக்காத ஒன்று அவன் சொல்லும்போது வலித்தது.
“நீங்க எதுக்குங்க மேடம் அழுவுறீங்க? நாந்தேன் அழுவனுமாட்டிக்கு. என் காதலை புரிஞ்சிக்காத ஒருத்தியை உருகி உருகி காதலிச்சு கல்யாணமும் பண்ணிக்கிட்ட பாவத்துக்கு நாந்தேன் அழுவனும்” என்றான்.
“மாமா…” உதடு துடிக்க ஒன்றரை மாதம் கழித்து அழைத்திருந்தாள்.
வாயில் விரல் வைத்து, “மூச்” என்றவன்…
“புள்ளைக்காக இன்னொருத்தியை கட்டிப்பேன்னு எப்படிடி நினைச்ச? உன்னைத் தவிர வேறொரு பொண்ணு நிழல் கூட என் மேல படுறதை நான் அனுமதிக்கமாட்டேன்னு உனக்குத் தெரியாது?” என்று சீற்றமாகக் சீறினான்.
இப்போது தான் மீனாளின் பிரிவுக்கான காரணம் லிங்கத்திற்கு விளங்கியது.
தன்னால் குழந்தை பெற முடியாதென, அவனாவது வேறொரு பெண்ணை மணந்து மனைவி, பிள்ளையென வாழட்டுமென பிரிவை உண்டாக்கியிருக்கிறாள் என்பது.
அவனால் மீனாவை மனதிற்குள் முட்டாள் என்று திட்டிக்கொள்ள மட்டுமே முடிந்தது.
வீரனின் காதலை வெளியிலிருந்து பார்வையாளனாக பார்த்திருந்த லிங்கத்திற்கே வீரனின் வாழ்வில் மீனாளை தவிர்த்து வேறொரு பெண்ணுக்கு இடமில்லை என்பது தெரிந்திருக்கும்போது, அவனது காதலை முழுமையாக அனுபவித்து வாழ்ந்தவளுக்கு தெரியவில்லையே என்று வருந்தவும் செய்தான் லிங்கம்.
“வேணான்னு சொல்லும் உரிமை மட்டுந்தேன் உனக்கிருக்கு. நடுவுல இந்த ப்ரோக்கர் வேலை பார்க்க இல்லை” என்றான்.
“இதுக்குத்தேன் ஆலைக்கு வந்தேன்னு தெரிஞ்சிருந்தாக்கா… அப்போவே உன்னை கொன்னிருப்பேன்” என்று அவள் செயலை ஏற்க முடியாது மனதால் உடைந்தவன், “உன்னால எப்புடிடி முடியுது?” எனக் கேட்டதோடு, “என்னால சத்தியமா முடியலடி. நீயில்லாமல் அந்த ரூமுக்குள்ள போறதே நரகமா இருக்கு” என்று நொறுங்கிய குரலில் உரைத்தான்.
சடுதியில் தன்னை மீட்டும் கொண்டான்.
அவன் பேச பேச ஏற்கனவே அவனது காதலின் ஆழத்தை அறிந்திருப்பவளுக்கு, அதனின் கனம் கூடிட, அவனது பேச்சின் வலியில் இதயம் அதிவேகமாகத் துடித்திட கண்கள் இருட்டிக் கொண்டு வந்தது.
வண்டியிலிருந்து இறங்கி நின்றிருந்தவள் மெல்ல தள்ளாட, லிங்கம் அவளருகில் சென்ற நொடி அவன் மீதே மயங்கி சரிந்திருந்தாள்.
“தங்கம்…” சடுதியில் அவள் மீதான ஒட்டு மொத்த கோபத்தையும் மறந்தவனாக அவளின் அருகில் ஓடி வந்தான்.
சட்டென்று லிங்கத்தின் பிடியிலிருந்து தன் மடிக்கு அவளை மாற்றியிருந்தான்.
“தங்கம்.” கன்னத்தை தட்டினான்.
“அவள் வண்டியில தண்ணீர் பாட்டில் வச்சிருப்பாள் எடுடே.”
லிங்கம் தண்ணீரை எடுத்து மீனாளின் முகத்தில் தெளித்திட மெல்ல இமை திறந்தாள். தான் தன்னவனின் மடியில் கிடப்பதை உணர்ந்து பதறி எழுந்து தள்ளி நின்றாள்.
அச்செயல் வீரனுக்கு வலி கொடுத்த போதும்…
“என்ன பண்ணுது?” என்று கேட்டான்.
உணர்வற்ற குரல் தான். அக்கறை, அன்பையெல்லாம் வெளிக்காட்டிடக்கூடாதென இழுத்து பிடித்தான்.
“ஒண்ணுமில்லை” என்றவள்,
“நான் போறேன்” என லிங்கத்திடம் சொல்ல…
“போறதுலே இருடி. ஒருநா மொத்தமா நான் போய் சேர்ந்திடுறேன்” என்று கத்திய வீரன் லிங்கத்தின் கையிலிருந்த போத்தலை பிடுங்கி விசிறியடித்தான்.
வீரனின் கோபத்தில் பயந்து லிங்கத்தின் அருகில் ஒண்டியவள்,
“கொஞ்சநாளாவே இப்படித்தேன் இருக்கு. சரியா சாப்பிடாததால இருக்கும் மாமா. வேறொன்னுமில்லை” என்று லிங்கத்திடம் பதில் கூறினாள்.
“கொஞ்சநாளானா?” வீரன் அதட்டினான்.
“பதினைஞ்சி இருவது நாளா” என்று திக்கினாள்.
“என்னை சாவடிக்கும் முன்ன நீயி போயி சேர்ந்திடலாமின்னு திட்டமோ?” என்று பொங்கியவன், “என்னை கஷ்டப்படுத்தவாவது மேடத்துக்கு உடம்புல வலு வேணுமில்ல… ஒழுங்கா உண்க சொல்லுடே” என்று காய்ந்துவிட்டு வீரன் சென்றுவிட்டான்.
“ஏன் மீனு இப்படிலாம் பன்ற?” அத்தனை ஆதங்கம் லிங்கத்திடம்.
“சத்தியமா என்னால முடியல மாமா?” என்று அவனின் தோள் சாய்ந்தவள்,
“இந்த மாமா ஏன் என்னை இம்புட்டு நேசிக்குது?” என்று மலைத்துக் கேட்டாள்.
“ஏன் விரும்பலன்னு கேட்டாக்கா ஏதும் பதில் சொல்லலாம். இதுக்கு என்ன சொல்ல? இதெல்லாம் அநியாயம்” என்ற லிங்கம், “நீயில்லாம அண்ணே அதுவாவே இல்லடாம்மா. தூங்க மட்டுந்தேன் வூட்டுக்கு வருது. அதுவும் கொட்டாவுலதேன் படுக்குது. உன் பிடிவாதமெல்லாம் அண்ணேகிட்ட செல்லாது. ஒழுங்கா நம்ம வூட்டுக்கு வர வழியப்பாரு” என்றான்.
“இம்புட்டு விளக்கம் கொடுத்து அந்த மேடம் என்னோட வாழ வேண்டாம். நீயி மொத கெளம்பு” என்று கேட்ட வீரனின் குரலில் லிங்கம் ஏறிட…
வீரன் சில அடிக்கு முன் நின்றிருந்தான்.
“நீயி போகல?”
“என்னான்னு தெரியல வண்டி நின்னுப்போச்சுது” என்ற வீரன், வண்டியை சற்று தொலைவில் நிறுத்தியிருப்பது தெரிந்தது.
மீனாளின் வண்டியில் அமர்ந்து அதனை இயக்கினான்.
வீரன் ஏறு என்று சொல்லவில்லை. அவன் பார்த்த பார்வையில் அவனுக்கு பின்னால் அமர்ந்திருந்தாள்.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
41
+1
+1
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


Veeran appa agitaru polayae…..
Super
அவனின் கோபம் கூட அழகு….
Super super super super super super super super